Search This Blog

29.10.08

நிலவைத் துளைத்த தமிழன்!

சிறிஹரி கோட்டா சதீஸ்தவான் விண்வெளி மைய ராக்கெட் தளம், நேரம்: 22-10-2008 அதிகாலை 6.20 மணி - பரபரப்பாக இருக்கிறது. இந்திய விண்வெளி ஆராயச்சி நிறுவனமான (இஸ்ரோ!) விஞ்ஞானிகளின் இதயத் துடிப்பு ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. நேரம் 6.22 அவ்வளவுதான். பி.எஸ்.எல்.வி. சி. ஐஐ ராக்கெட் தன் முதுகில் சந்திராயன் செயற் கைக்கோளை ஏற்றிக் கொண்டு தன் வாலில் தீப்பிழம்புகளைப் பற்ற வைத்துக்கொண்டு நொடிப்பொழுதில விண்ணிற்கு கிளம்பிவிட்டது. நிலவுக்கு இந்தியா அனுப்பிய முதல் ஆளில்லாத செயற்கைக்கோள் அனுப்பப்பட்டதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டி ஆரத்தழுவிக் கொண்டு உற்சாக மிகுதியில் கத்த.. ஒட்டுமொத்த இந்தியர்களும் மிகுந்த கர்வத்துடன் தங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக் கொண்டார்கள்.

சந்திராயன் செயற்கைக்கோளில் நிலவின் வரைபடம் உருவாக்கும்கேமராவும், நிலவில் உள்ள வாயுக்களையும் தண்ணீர் பனிக்கட்டி உள்ள பகுதிகளை கண்டறிந்து நமக்குப் படம் பிடித்துத்துத் தர கருவிகளும் இருக்கின்றன. இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் சந்திராயன் திட்ட இயக்குநர் ம. அண்ணா துரையின் சொந்த ஊர் கோவை கிணத்துக்கடவு தாண்டியுள்ள கோதவாடி என்ற குக்கிராமம்.


தொடர் தொலைபேசி வாழ்த்துகளிலும் உறவினர் வருகையாலும் திக்குமுக்காடிப் போயிருக்கும் அண்ணாதுரையின் அப்பா மயில்சாமியை பீளமேடு ராதாகிருஷ்ணன் மின் குவாட்டர்சில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குங்க, என்ன சொல்றது...? நான் பட்ட கஷ்டத்திற்கான இன்பத்தை இப்போது அனுபவிக்கிறேன் என்றார். எங்க குடும்பம் நெசவு செய்யுற குடும்பம். அதைப்போல, தி.மு.க.வோட விசுவாச குடும்பம். அதனால்தான் அறிஞர் அண்ணா பேரை என் பையனுக்கு வெச்சேன். பேருக்குத் தகுந்தமாதிரியே பேச்சுப்போட்டி, நாடகப்போட்டியில் முதல் பரிசு கோல்டு மெடல்னு வாங்கிக் குவிப்பான். கோதவாடி அரசு நடுநிலைப் பள்ளியில் ஒண்ணாவது படிச்சிட்டிருந்த அண்ணா துரைக்கு நான்தான் ஆசிரியர். கண்ணும் கருத்துமாகப் படிப்பான்.

கோதவாடி பள்ளியில் இருந்து மாற்றலானபேது இருந்த வீட்டை விற்றுவிட்டு நல்லட்டிப் பாளையத்தில் குடியேறினோம். அங்கிருந்து கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப்பள்ளி அய்ந்து கிலோமீட்டர் தள்ளியிருக்கிறது. அண்ணாதுரை நடந்தேதான் போவான். அப்போது பஸ் கட்டணம் 10 காசுதான் அதைக்கூட என்னால் தரமுடியாது. என்னைக்காவது தந்தாகூட பஸ்சுல போகாம கொடுத்த காசை சிறுசேமிப்பில் சேர்த்து வத்து அவனுக்கு வேண்டிய புத்தகத்தை வாங்கிக்குவான். மழை வந்தால் கூட தலைக்கு கெங்காடை (சாக்கு பை) போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கும் போயிடுவான் அவனும் சரி, அவன்தம்பிகளும் சரி அரசினுடைய ஸ்காலர்ஷிப் வாங்கித்தான் படிச்சாங்க.

ஜி.சி.டி. காலேஜில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் முடிச்சதுமே, பி.பி.எல்.ல. வேலைகிடைச்சும் போகாம மேல படிக்கணும்னு பி.எஸ்.ஜி. கல்லூரியில் எம்.இ., படிச்சான். படிச்சு முடிஞ்சதும் இஸ்ரோவுக்கு விண்ணப்பிச்சு செலக்ட்டாயிட்டான். எப்பவுமே படிப்புன்னு இருந்த அவனுக்கு வற்புறுத்தித்தான் கல்யாணமே பண்ணி வைச்சோம். கல்யாணம் முடிந்ததும் பெங்களூரிலேயே செட்டிலாயிட்டான். சந்திராயன்கிற பேரே பிரதமராயிருந்த வாஜ்பாய் வெச்சதுதான். சந்திராயன்னா நிலவு தொடும் வாகனம்ன்னு அர்த்தமாம். அந்த சந்திராயனுடைய திட்ட இயக்குநரை தேர்ந்தெடுக்க டெஸ்ட் வெச்சப்போ எம் பையன்தான் ஃபர்ஸ்ட்டா வந்தான். அப்துல்கலாம் கூட இந்தத் திட்டம் எந்த நிலையில் இருக்குன்னு அடிக்கடி கேட்பாராம். இந்த திட்டத்தை சிறப்பா செய்யணும்னு சொல்லிகிட்டே யிருப்பாராம். அவர் சொன்னபடியே சாதிச்சுட்டான் என் மகன் என்கிறார் பெருமையோடு.

அம்மா பாலசரஸ்வதியோ, என் பையன் படிக்கும்போது ஏகப்பட்ட மெடல் வாங்கியதை பார்த்திருக்கிறேன். இப்போ தமிழக அரசாங்கத்துக்கிட்ட இருந்து விருது வாங்கணும், அந்தக் காட்சியை கடைசி காலத்துக்குள்ள கண்ணார பார்த்துரணும் என்றார் பொங்கிவரும் ஆனந்த கண்ணீரைத் துடைத்தபடியே. கற்பகம் இன்ஜினியர் காலேஜில் பிரின்ஸ்பாலாய் இருக்கும் அண்ணாதுரையின் தம்பி மோகனசுந்தரம், தங்கை மணிமேகலையும் - செயற்கைகோள்ல எந்தப் பிரச்சினையானாலும் அது என்னைத்தான் சேரும். அதனால் யாரும் போன்பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லுவாரு அண்ணன் அண்ணாதுரை. அவரது முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைச்ச வெற்றிதான் இது. அப்பா சொன்னதுபோல சிறு சேமிப்புல சிக்கனமாய் இருந்த பழக்கம் தானோ என்னவோ 386 கோடி ரூபாயில் இந்த பிராஜெக்ட் எப்படி சாத்தியப்பட்டது என்று மற்ற விஞ்ஞானிகள் அண்ணனிடம் வியப்பா கேட்டிருக்காங்க என்று உணர்ச்சி வயப்பட்டார்கள்.

திட்ட இயக்குநர் அண்ணாதுரை அவர்களின் கருத்துகள்:

சந்திராயன் கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நம்முடைய குழந்தைபோல போகிறது. அது சரியான பாதையில் நடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டோம். இந்திய மக்களிடைய வரிப்பணத்தில் அதுவும் தமிழ்மொழியில் படித்த நான் இந்தியாவுக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று நினைக்கிறேன். செய்வேன். நிலவுக்கு சந்திராயன் செயற்கைக்கோளை அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளதற்கு எல்லோரும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர் அவர்களும் வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார். இதற்கு நான் அடையும் சந்தோசத்தைவிட சுப்பிரமணியன் என்ற ஜாதகப் பெயரை நீக்கிவிட்டு அண்ணாதுரை என்று பெயர் வைத்த என்னைப் பெற்ற ஜீவன்கள்தான். அளவுக்கு அதிகமாய் சந்தோசப்பட்டிருக்கும் என்றார் - நெஞ்சுருக.

எந்தவொரு இந்தியரின் இதயத்தைப் பிளந்தாலும் உள்ளே பொறிக்கப்பட்டிருக்கும் தேசியக் கொடியை இன்னும் சில நாட்களில் சந்திராயன் கோளில் உள்ள மூன் இம்பாக்ட் புரோப் என்ற கருவி நிலைவில் மேற்பரப்பை பிளந்து நிலவின் இதயத் தினுள் பொறிக்கவிருக்கின்றதாம். இதை சாத்தியப்படுத்திய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அதை முன்னின்று சாதித்த தமிழன் அண்ணாதுரைக்கு ஒரு வணக்கம், நல்வாழ்த்துகள்.

-------------------நன்றி: "நக்கீரன்", 19.10.2008

0 comments: