Search This Blog

17.10.08

தமிழர்கள் வாழும் பகுதியில் 1000 கிலோ குண்டு வீச்சு

* சிங்கள அரசு தமிழினத்தை பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு விட்டது
* இந்தியா இலங்கைக்கு உதவுவது நாளை இந்தியாவுக்கே ஆபத்தாக மாறும்

தஞ்சை செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் விளக்கம்


தஞ்சை, அக்.17- சிங்கள அரசு தமிழினத்தைப் பூண்டோடு அழித்திட திட்டமிட்டு விட்டது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் கையில் உள்ளது. இந்திய அரசு இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கே ஆபத்தாக முடியும் என்று தஞ்சையில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

தஞ்சையில் 15-10-2008 அன்று செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

கலைஞர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்கள் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆறு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தின் செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அத்துணைக் கட்சியைச் சார்ந்த அனைவரும் ஒருமித்த குரலில் பேசினார்கள். அரசியலிலே வெவ்வேறு நிலைப்பாடு எடுக்கலாம் என்ற நிலை இருந்தால் கூட, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அத்துணைக் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே குரலில் பேசினார்கள்.

இலங்கையில் மிகப் பெரிய இனப்படுகொலை

இலங்கையில் அவ்வளவு பெரிய இனப்படுகொலை சிங்கள அரசிலே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்தினார்கள். (ஆறு தீர்மானங்களை படித்துக் காண்பித்தார் தமிழர் தலைவர்). அத்துணைப் பேரும் இந்த ஆறு தீர்மானங்களை வரவேற்றதோடு எல்லோரும் தயார் என்று சொல்லக்கூடிய நிலையிலே அத்துணைக் கட்சியினரும் இருந்தனர். இந்தக் கூட்டத்தின் முடிவை உலகமே - உலகத் தமிழர்களே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுபோலவே இலங்கை அரசிலே இருக்கக்கூடிய தமிழ் நாடாளுமன்ற தமிழர் உறுப்பினர்களும் சிறப்பாக வந்து சந்தித்து பல்வேறு செய்திகளை அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

அதிலே ஒன்றிரண்டு மிக முக்கியம். தீவிரமாக தீர்மானம் போடக்கூடிய நிலையிலே உச்சக்கட்டத்திலே அங்கு கொடுமைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விநாடியும் அழிக்கப்பட்டு வருகிறது என்று சொல்லக்கூடிய கொடுமையிலே எப்படிப்பட்ட சூழ்நிலைகள் அங்கே இருக்கின்றன

இலங்கை சிங்களவர்களின் நாடாம்!

இலங்கை நாடாளுமன்ற தமிழ் எம்.பி.க்கள் கொடுத்திருக்கின்ற ஓர் அறிக்கை. வேண்டுகோளில் ஒரு பகுதி என்னவென்றால், அண்மையில் சிங்களப் பேரினவாத அரசின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இலங்கை சிங்களவர்களின் நாடு என்று பிரகடனம் செய்தார். பவுத்த பிக்குகள் சிங்கள உஜமையக் கட்சியோ, லங்கா பவுத்த நாடு என்று பறைசாற்றுகிறது. இதுதான் ஜனாதிபதி மகிந்தராஜபக்சேவினுடைய கொள்கை கோட்பாடாகிவிட்டது.

இவர்களின் உள்ளார்ந்த எண்ணமே இலங்கையை ஒரு பவுத்த சிங்கள ஒற்றை ஆட்சி நாடாக ஆக்குவதுதான் எண்ணம் என்று சொல்லியிருக்கின்றார். ஆகவே தமிழினத்தை முற்றாக அழித்து விட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, எப்படிப்பட்ட கொடுமைகள் அங்கு நடந்துகொண்டிருக்கின்றன என்று சொன்னால், தீவிர வாதத்தைக் காரணமாக காட்டி விடுதலைப் புலிகளோடு நாங்கள் போராடுகின்றோம் என்றெல்லாம் அவர்கள் சொல்லக் கூடிய நிலை இருக்கிறதே அது மிக முக்கியம்.

இந்திராகாந்தி இனப்படுகொலை என்று சொன்னார்

1983 ஆகஸ்ட் 16-ஆம் நாள் நாடாளுமன்றத்திலே உரை யாற்றும் பொழுது இந்திராகாந்தி அவர்கள் குறிப்பிட்டி ருக்கின்றார்கள், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை (Genocide) நடைபெறுகிறது. இனப்படு கொலை என்ற வார்த்தையையே அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல, அவர்கள் கடைசியாக தஞ்சைப் பெரிய கோவிலுக்கு வந்துவிட்டு திரும்புகிற நேரத்திலே அங்கே சொல்லும்பொழுதுதான் அவர்கள் Genocide என்ற வார்த்தையையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.

அதன்பிறகு பாராளுமன்றத்திலே சொன்னார்கள். ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருக்கும்பொழுது கூட என்னிடத்திலே கூட வேறு ஒரு சந்தர்ப்பத்திலே இலங்கையிலே இனப்படுகொலைதான் நடைபெறுகின்றது என்று சொன்னார். தமிழினத்தை பூண்டோடு அழித்திட

இலங்கை அரசின் இராணுவம் தமிழினத்தைப் பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற இராணுவ உதவித் திட்டத்துடன், தீவிரமாக செயல்பட்டு வருவது பயங்கர வாதத்தை ஒடுக் குவதற்கான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று பிரச்சாரம் செய்து தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல, தமிழ் மக்களையே பூண்டோடு அழிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி வருகின்றது. எனவே அங்கு தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போர் அல்ல.

தீவிரவாதம் - பயங்கரவாதம் என்று சொல்லி

இதையெல்லாம் நம்முடைய நாட்டிலே சில ஊடகங்கள், சில கட்சிகள், சிலர் வேண்டுமென்றே திசை திருப்பக் கூடிய அளவிலே செய்து வருகின்றார்கள்.

தீவிரவாதிகளுக்கு எதிராக, பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகிறோம் என்று அவர்கள் சொல்லுகின்றார்கள். அப்படி அல்ல. தீவிரவாதம் உலகளாவிய நிலையிலே இன்றைக்குப் பல்வேறு நாடுகளில் இருக்கிறது. எல்லா நாடுகளிலும் தீவரவாதத்தினுடைய தாக்கம் இருந்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவும், அதற்கு நம்முடைய நாடும் விதி விலக்கல்ல. உதாரணமாக காஷ்மீரில் மற்ற மற்ற இடங்களிலே தீவிரவாதம் நடந்துகொண்டிருக்கின்றது.

காஷ்மீரில் குண்டுவீசி அழிக்கவில்லை

காஷ்மீரே இரண்டு பாகமாக இருக்கிறது. உங்களுக்கே தெரியும். அமர்நாத் பிரச்சினை கிளர்ச்சி எவ்வளவு பயங்கரமாக நடந்தது என்று. அப்படிப்பட்ட காஷ்மீரே பற்றி எரிந்தது. அந்தக் காலக் கட்டத்தில் கூட நம்முடைய அரசு அங்கே யார்மீதும் குண்டுவீசி அழிக்கவில்லை. முகாம்கள் இருக்கின்றன. அண்டை நாட்டு பாகிஸ்தான்கூட தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்தாலும்கூட குண்டுமழை பொழியக் கூடிய அளவுக்கு அங்கு செய்யவில்லை.

குழந்தை காப்பகங்கள்மீது விமானத் தாக்குதல்

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையிலே அவர்கள் வான் வழித்தாக்குதலை எந்த அளவுக்குத் தொடர்கிறார்கள் என்று சொன்னால், சிறு குழந்தைகள், பிஞ்சுகள், முதியோர்கள், மருத்துவமனைகள், அதுபோல செஞ்சோலை என்று சொல்லக் கூடிய இடத்திலுள்ள குழந்தைகள் காப்பகங்கள் இவைகள் மீதெல்லாம் கூட குண்டு வீசக் கூடிய அளவுக்கு அவர்கள் செய்கிறார்கள். எப்படி குண்டு வீசியிருக்கிறார்கள் என்று சொன்னால், உலகளாவிய ஒரு தகவல் - வெளிநாட்டில் இருக்கிற தமிழர்கள் ஆதாரப் பூர்வமான செய்திகளை தமிழ் அமைப்பின் சார்பாக தெரிவித்திருக்கிறார்கள். வாஷிங்டனில் இருந்து தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழர்கள் வாழும் பகுதியில் 1000 கிலோ குண்டு வீச்சு

அவர்கள் ஆதாரப்பூர்வமான ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோத ரரும் இராணுவ அமைச்சரும், ஆலோசகருமான போத்தபாய ராஜபக்சே கூற்றுப்படி வன்னிப்பகுதியில் (தமிழர்கள் வாழக் கூடிய பகுதி வன்னிப்பகுதி) ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகள் விமானங்கள்மூலம் வீசப்பட்டுத் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். எத்தனையோ குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல, தமிழர்கள் வாழக்கூடிய பகுதியிலே தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். திட்டமிட்டு 25 ஆண்டுகளாக ஜெயவர்த்தனே காலத்தில் இருந்து நடந்துகொண்டிருக்கின்றது. தமிழர்கள் அகதிகளாக வெளியேறும்பொழுது, அல்லது காடுகளுக்குச் செல்லும்பொழுது அந்தப் பகுதியில் சிங்களவர்களைக் குடியேற்றுவது என்று நடந்துகொண்டு வருகின்றது. சொந்த நாட்டிலேயே அந்த நாட்டுக் குடிமக்கள்மீது குண்டு வீசுகின்ற கொடுமை வேறு எந்த நாட்டிலும் உலக வரலாற்றில் நடைபெற்றது கிடையாது. ஆகவே அதிலிருந்து என்ன நடக்கிறது? அது தீவிரவாதத்திற்கு எதிரானதல்ல.

தமிழினத்திற்கு எதிரான போர்

தமிழ் இனத்திற்கு எதிரான ஒரு யுத்தத்தை சிங்களவர்கள் தொடங்கியிருக்கின்றார்கள். இலங்கைத் தலைநகரம் கொழும்பு. அங்குதான் அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அங்குதான் காலம் காலமாக தமிழர்கள் இருக்கிறார்கள். அங்கே பொதுவாக மூன்று வகையான தமிழர்கள் இருப்பார்கள் - இலங்கையைப் பொறுத்தவரையிலே,

1. யாழ்ப்பாணப் பகுதி வடக்கு - கிழக்கு பகுதியில் இருக்கிறவர்கள் அங்கேயே பிறந்து அங்கேயே வாழக்கூடியவர்கள் அந்த மண்ணுக்குரியவர்கள். அந்த மண்ணின் மைந்தர்கள்.

அடுத்தபடியாக இந்திய வம்சா வழித்தமிழர்கள் என்ற பெயராலே நீண்ட காலத்திற்கு முன்னாலே தேயிலைத் தோட்டங்களிலே மற்ற இடங்களிலே குடியேறுவதற்காக வேலை செய்வதற்காக கங்காணிகளாகவே அழைத்துக் கொள்ளப் பட்டவர்கள் அவர்கள் (Indian Origin) இந்திய வம்சாவழித் தமிழர்கள்.

அடுத்தது கொழும்பில் இருக்கக் கூடியவர்கள் வியாபாரத் தமிழர்கள். அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பார்கள், கிறித்தவர்களாக இருப்பார்கள், பலரும் இருப்பார்கள். இப்படி மூன்று வகையான தமிழர்கள் இருப்பார்கள். அண்மையிலே வடக்கு - கிழக்கு மாகாணத்தைப் பிரித்தார்கள்.

கொழும்பில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாம் குடியுரிமை பெற்றவர்கள். அப்படியிருப்பவர்களை பதிவு செய்ய வேண்டும் என்று திடீரென்று சொல்லுகின்றார்கள். தமிழர்களை அடையாளம் காட்டித் திட்டமிட்டு அழிக்க முடிவெடுத்துவிட்டார்கள்.

குஜராத்தில் மோடி அரசு செய்வதுபோல்

குஜராத்தில் இதுபோலத்தான் மோடி அரசாங்கம் - இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் யார்? இஸ்லாமியர்கள் யார்? என்று ஒரு பட்டியலே தயார் பண்ணி அதை வைத்துதான் அங்குள்ள சிறுபான்மையினரை அழித்தார்கள். அங்கு ஒரு இனப் படுகொலையே நடந்தது.

இந்திய அரசு இந்தப் பிரச்சினையிலே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாக்கின்றோம். இலங்கையிலே நடைபெறுகின்ற இனப் படுகொலையைத் தடுக்கிறோம் என்பதெல்லாம் ஒரு பக்கத்திலே இருந்தாலும் இந்தியாவினுடைய பாதுகாப்பு என்பது இருக்கிறதே அது மிகமிகக் கேந்திரமான ஒன்று.

இந்திராகாந்தி அவர்களுக்கு அது தெரிந்துதான் திரி கோணமலைப் பகுதியிலே அமெரிக்கத் தளம் உருவாகக் கூடாது என்பதைக் கருதித்தான் அவர்கள் முன்யோசனையோடு அதைத் தடுத்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அந்த நுணுக்கத்தை ஏனோ புரிந்துகொள்ளத் தவறி விட்டார்கள். இலங்கை - இராணுவத் தளவாடங்களை குவிக்கிறது

எப்படி இருந்தபோதிலும் இப்பொழுது பக்கத்து நாடுகளாக இருக்கக்கூடிய சீனா, பாகிஸ்தான் இவைகள் மூலம் ஏராளமான கருவிகளை, இராணுவ தளவாடங்களை வாங்கி, வாங்கி இலங்கை நாடு குவித்துக்கொண்டேயிருக்கிறது.

இந்தியாவிடமிருந்து என்னென்ன பொருளாதார உதவிகளை வாங்குகின்றார்களோ, இந்தப் பொருளாதார உதவி இலங்கையினருக்கு ஆயுதம் வாங்குவதற்காகவும், தங்களைப் பலப்படுத்திக் கொண்டு வாய்ப்பு கிடைக்கும்பொழுது தமிழர்களைக் கொல்லுவதற்காகவும் அதைப் பயன்படுத்துகின்றார்கள். அண்டை நாடுகள் இந்தியாவுக்கு எதிராகத் திரும்புகின்ற நேரத்திலே அந்த ஆயுதங்களை நமக்கு எதிராகத்தான் பயன்படக்கூடிய ஆபத்து இருக்கிறது.

இந்தியாவினுடைய பாதுகாப்புக்கே பங்கம்

இந்தியாவினுடைய பாதுகாப்பைக் கருதிகூட இந்தப் பிரச்சினையை மிக முக்கிமாகக் கையாள வேண்டியிருக்கிறது. இதை ஏனோ பிரதமர் அலுவலகம் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது. அதுமட்டுமல்ல, இலங்கையில் தமிழர்கள் வாழக்கூடிய பகுதியில் பொருட்கள் கொண்டு செல்லமுடியாமல் சாலைகள் மூடப்பட்டன. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மூடப்பட்ட ஏ9 நெடுஞ்சாலையால் வெளியுலகத் தொடர்பு அற்றுப் போய்விட்டது. அங்கு குழந்தைகளுக்கு உணவு கிடையாது. பால் கிடையாது, மின்சாரம் மற்றும் எந்தவிதமான வெளிச்சமும் கிடையாது. ஆகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. மத்திய அரசிடம் பந்து உள்ளது.

சிறுபான்மையினர்மீது தாக்குதல்


இந்த நாட்டிலே சிறுபான்மை மக்களாக இருக்கின்ற கிறித்துவர்கள் தொடர்ந்து திட்டமிட்டுத் தாக்கப்படுகின்றார்கள். தமிழ்நாடு வரையிலே அவர்கள் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இன்னமும் கூட தமிழ்நாட்டிலே குண்டர் சட்டம் பாயும் என்று சொன்ன பிற்பாடும் கூட தாக்குதல்கள் நடக்கக் கூடிய அளவிலே இருக்கிறது.

எனவே திராவிடர் கழகத்தின் சார்பாக மிகப் பெரிய கண் டனப் பேரணி இன்று (15-10-2008) மாலையில் நடைபெறவிருக்கிறது. நேற்று நடக்க வேண்டியது. அனைத்துக் கட்சிக் கூட்டத் தினை முன்னிட்டு தள்ளிவைக்கப்பட்டு இன்று மாலை நடை பெறுகிறது.

எந்த மதத்தினராக இருந்தாலும் வாழ்வுரிமை முக்கியம்

எனவே மத்திய அரசு தீவிரமாக சிறுபான்மை சமுதாயத்திற்குப் பாதுகாப்பு என்பதைவிட, இதில் விஷமம் செய்யக்கூடியது ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள்தான் கன்னியாஸ்திரிகள் கற்பழிப்பு, தேவாலயங்கள் மீது தாக்குதலை நடத்துகின்றார்கள்.

எங்களுக்கு எந்த மதத்துடனும் உடன்பாடில்லை. ஆனால் அதே நேரத்திலே எந்தக் கருத்துள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்வுரிமை இருக்கவேண்டும்.

அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது எங்களுடைய மனித நேயக் கோட்பாடு. மத்திய அரசு தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தையெல்லாம் நடத்தியிருக்கிறது. சங்பரிவார்மீது தடை என்றால் ஒரு பகுதியில் தடை என்றால் இன்னொரு பகுதியில் உள்ளே நுழைந்து வருவார்கள். ஆகவே தடை செய்யப்பட வேண்டும் என்பதெல்லாம் சரியானது அல்ல. அதற்குப் பதிலாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். தீவிரவாதிகளிலேயே இதைவிட பெரிய தீவிரவாதிகள் யார்? இன்னொரு செய்தியை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால்

பதவியில் இல்லாத நிலையிலேயே பா.ஜ.க. மற்றும் அதன் சங்பரிவார் கும்பல், பஜ்ரங்தள் போன்றவைகள், விசுவ இந்து பரிஷத் போன்றவைகள் இப்படி நடந்துகொள்கின்றன என்றால், மத்தியிலே அவர்கள் கையில் ஆட்சி சிக்குமேயானால், இந்த நாடு என்ன ஆகும்? இதையும் மக்கள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நல்ல முற்போக்கு கொள்கை உடைய மதச்சார்பின்மையிலே நம்பிக்கையுடைய ஜனநாயகத்திலே நம்பிக்கையுடைய பாசிசத்தை எதிர்க்கக் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அத் துணைக் கட்சிகளினுடைய கடமையாகும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.


--------------------நன்றி:"விடுதலை" 17-10-2008

0 comments: