Search This Blog

23.10.08

மும்பைக் கலவரம்: போதிப்பது என்ன?

சிவசேனா என்ற கட்சியை மகாராட்டிரத்தில் பால்தாக்கரே தொடங்கினார். மகாராட்டிரம் - மகாராட்டிரருக்கே என்ற முழக்கத்தைக் கொடுத்தார். மும்பையில் வாழும், வணிகம் செய்யும், பணியாற்றும் வெளி மாநிலத்தவர்கள் வெளியேறவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர் அவர். தமிழர்கள் வெளியேற வேண்டும் என்று அவர் அடாவடித்தனத்தில் இறங்கியபோது, தமிழ்நாட்டிலிருந்து தந்தை பெரியார் எதிர்க்குரல் கொடுத்தார்; திராவிடர் கழகம் போர்க்கோலம் பூண்டது - அது பிறகு அடங்கியது.
என்றாலும், அந்த உணர்வு என்பது வெறியாக - நீறுபூத்த நெருப்பாக அங்கு இருக்கத்தான் செய்கிறது.பால்தாக்கரேயின் வாரிசு யார் என்ற சண்டையில் ராஜ்தாக்கரே தனியாகப் பிரிந்து வந்து மகாராட்டிர நவநிர்மாண் சேனை என்ற ஒரு அமைப்பை நிறுவினார்.

சிவசேனாவைவிட தங்கள் கட்சிதான் மண்ணின் மைந்தர் வெறியில் அதிக வேகம் கொண்டது என்று காட்ட வேண்டிய நெருக்கடியில் அடாவடித்தனமாக அவர் நடந்துகொண்டு வருகிறார்.
இவ்வாண்டு பிப்ரவரியில் கூட மற்ற மாநிலத்தவர்களை எதிர்த்து நடத்திய வன்முறைக்காக ராஜ்தாக்கரே கைது செய்யப்பட்டதுண்டு.

இப்பொழுது மும்பையில் இரயில்வே தேர்வு எழுத வந்த பிற மாநிலத்தவர்களை ராஜ்தாக்கரேயின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிகவும் கடுமையாகத் தாக்கினார்கள். இதன் காரணமாக கடும் எதிர்ப்பு இந்தியா முழுமையும் வெடித்தது.

நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு கடுமையாக எழுந்தது. அக்கட்சியைத் தடை செய்யவேண்டும் என்றெல்லாம்கூட பேசப்பட்டது.

இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்றவுடன், மும்பை நகரில் அவர் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்தனர்.

ராஜ்தாக்கரே பிணையில் வெளிவந்தாலும் அடுத்தடுத்து அவர்மீதுள்ள வழக்குகளின் காரணமாக அடுத்தடுத்த தீர்ப்பின்மூலம் கைது செய்யப்பட்டு, இப்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

வன்முறையை எதிர்ப்பதாக வண்டி வண்டியாக எழுதும் பல ஏடுகள் இந்தப் பிரச்சினையில் மட்டும் அடக்கித்தான் வாசிக்கின்றன.

இவ்வளவுக்கும் சிவசேனாவோ, ராஜ்தாக்கரேயின் கட்சியோ இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவைகள் அல்ல. பாரத மாதா பேசக் கூடியவர்தான். என்றாலும், வெளி மாநிலத்தவர்களுக்கு மகாராட்டிரத்தில் வேலையில்லை என்பதில் மட்டும் கறாராகவே இருந்து வருகின்றனர்.

ராஜ்தாக்கரேயின் வன்முறை நடவடிக்கைகளை சங் பரிவாரோ, பா.ஜ.க.வோ கண்டிக்க முன்வரவில்லை என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

வன்முறையைக் கண்டிக்கும் தார்மீக யோக்கியதை அவர்களுக்குக் கிடையாது என்பது மட்டுமல்ல; ஒரு வகையில் சிவசேனா அவர்களின் கூட்டாளி - கூட்டணி கட்சியாயிற்றே! இதில் அவர்கள் பால்தாக்கரேயையும், ராஜ்தாக்கரேயையும் பிரித்துப் பார்க்கத் தயாராகயில்லை.

ஏதோ ஒரு வகையில் வன்முறையைத் தூண்டி, அதன்மூலம் மக்கள் தொகையில் ஒரு பகுதியினரைத் தங்கள் பக்கம் நிறுத்திக் கொள்ளும் ஒரு தந்திரம் என்பது சங் பரிவார் வகையறாக்களின் யுக்தியும், அணுகுமுறையுமாகும். இப்பொழுது மும்பையில் நடைபெறுவதும் அந்த வகையைச் சார்ந்ததே!

குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா மாநிலங்களில் இந்துத்துவா பெயரில் சிறுபான்மையினரைத் தாக்குவது என்ற ஒன்றைக் கடைப்பிடித்து இந்துக்களின் பிரதிநிதியாக பாதுகாலர்கள் சங் பரிவார்களே என்ற ஒரு நிலையை உண்டாக்குவதுபோல் மகாராட்டிர மாநிலத்தில் மண்ணின் மைந்தர்கள் குரலை எழுப்பி, அம்மாநில மக்களிடத்தே வெறியைக் கிளப்பி, அதனைப் பத்திரமாகத் தங்கள் பக்கம் தேக்கி வைத்து, வாக்குகளாக மாற்றும் ஒரு வேலையில் இறங்கியிருக்கின்றனர். இந்தக் கும்பலோடு, மக்களவைத் தேர்தலில் ஏதோ ஒரு வகையில் பா.ஜ.க. கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கும்.

மண்ணின் மைந்தர் விவகாரத்தில் மற்றொரு பிரச்சினையும் கவனிக்கத்தக்கதாகும். மகாராட்டிரத்தில் நடத்தப்படும் வெறியாட்டங்களை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், எந்த ஒரு மாநிலத்திலும், அந்த மாநிலம் அல்லாதவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் அதீதமாக ஆக்கிரமிப்பு என்பது பிரச்சினையை உண்டாக்கக் கூடியதே!
திருச்சி திருவெறும்பூர் பெல் போன்ற நிறுவனங்களில் தமிழர் அல்லா தார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இங்கு காலியாகும் பணியிடங்களுக்கு கேரளாவின் ஏடுகளில் விளம்பரம் செய்கிறார்கள் என்றால், அதன் தன்மையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நெய்வேலி, திருவெறும்பூர் முதலிய இடங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டபோது பெரும்பாலும் மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்ததுண்டு. தந்தை பெரியார் அவர்கள்தான் பொதுக்கூட்டம் போட்டு, குரல் கொடுத்தார்கள்; அதே நேரத்தில் வன்முறைக்குக் கொஞ்சம்கூட இடம் கொடுக்கவில்லை.
என்னதான் தேசிய ஒருமைப்பாடு பேசினாலும், தொழிற்சாலைகள், ஆலைகள் எந்த மாநிலத்தில் இயங்குகின்றனவோ, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பது நியாயமான ஒன்றேயாகும். அதனை உறுதிபடுத்தும் வகையில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் இருப்பதுகூட வரவேற்கத்தக்கதே!


சில மாதங்களுக்குமுன் கருநாடக மாநிலத்திலும்கூட இரயில்வே பணிக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, பிகாரில் இருந்து ஒரு தனி இரயிலி லேயே வந்து குவிந்த நிலையில், உள்ளூர்க்காரர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். இந்த நிலை பல மாநிலங்களில் பரவுவதற்குமுன் - இதுகுறித்து திட்டவட்டமான ஒரு வரையறை மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசர அவசியமாகும்.


-----------------------நன்றி: "விடுதலை" 23-10-2008

0 comments: