Search This Blog

18.10.08

இதுதான் "ஹிந்து" ஏடு அண்ணாவின் படப்பிடிப்பு




சமூகநீதிக் கோரிக்கை, நாம் எதிர்பார்க்கும் அளவில் நிறைவேற்றப்படுமா, இத்திருத்தத் தின்மூலம், என்ற அய்யம், நமது இதயத்தில் எழும்பிக் கொண்டேயிருந்தாலும், நேருவின் பேச்சு, புதுத் தெம்பைத் தரும் நிலையிலேயே இருக்கிறது.

ஆனால், "இந்து" பாய்கிறது. "தனது" மக்களின் ஆதிபத்யம் நீடிக்கும் வழி அடைக்கப்படு வது கண்டதும், ஆத்திரக் கனலைக் கக்குகிறது. தங்களது ஏகபோகத் தலைவர் என்று போற்றித் துதித்த பண்டித நேருமீது பழியையும், பரிகாசத்தையும் அள்ளி வீசுகிறது.

"இந்து"வின் பாதை, நாம் அறியாததல்ல; பெயருக்கேற்றவாறே, அதன் பித்தலாட்டமும் இருந்து வருகிறது, வீழ்ந்துபட்ட சமுதாயம் உணர்ந்ததுதான். எனினும், உரிமைகளைப்பற்றி முழக்கமிடுவதும், அதேநேரத்தில் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையில் புயலை உண்டாக்குவதும், வெறியர்கள் செயலாகும். விவேகம் வேண்டப்படும் இந்த நேரத்தில், தனது சுயநல வாய்க்கால் பாதிக்கப்படும் என்றதும், போற்றியவரையே தூற்றுகிறது.

"இந்து"வின் கோலம், ஆதிக்க வெறியின், உச்சத்தைக் காட்டும் காட்சி. நேரு, நமக்கு நன்மை செய்பவர் என்று நாம் நம்புபவர்களல்ல; நம்பவும் முடியாது. ஆனாலும், ஏதோ ஒரு சூழ்நிலை, அவரை இந்த வழியைத் தவிர வேறு வழியில்லை, என்ற மனோபாவத்தை அவருக்குத் தந்திருக்கிறது.

"இந்து"வின் கூட்டம், நேருவின் அணைப்பைப் பெற்றவர்கள் மட்டுமல்ல, இந்துவின் துணையாசிரியர்களாகப் பதவி வகிக்கும், இருவருடைய தகப்பனார்கள், நேருவின் சகாக்களாக, மத்திய சர்க்காரில் வீற்றிருக்கிறார்கள்.

அவ்வளவு தொடர்பு இருக்கிறது "இந்து"வுக்கு.

இருந்தும், "இந்து" பாய்கிறது. பாய்ச்சல், ஆதிக்க வெறியின் விளைவு. ஆதிக்க வெறி நல்லதல்ல - ஆபத்தைத் தரும். இதை, இந்துக் கூட்டம் உணர்வது நல்லது; வளரும் உரிமைக் குரலின் முன் தூசுபோல் ஆகாமல் தன்னைக் காத்துக் கொள்ள.

------------------------'திராவிட நாடு', 3.6.1951

0 comments: