Search This Blog
23.10.08
தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பது தவிர்க்கவே முடியாது
எஸ். முத்தையா முதலியார் நினைவு வெளிச்சத்தில்...
வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் என்ற தலைப்பில் முனைவர் பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல் நேற்று சென்னையிலே வெளியிடப்பட்டது.
எஸ். முத்தையா முதலியார் அவர்களுக்குள்ள தனிச் சிறப்பு என்ன? வகுப்புரிமைக்கான ஆணையினை அவர் சென்னை மாகாண அமைச்சராக இருந்த காலத்தில் பிறப்பித்து, அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்தார் என்பதுதான்.
அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட 80 ஆம் ஆண்டில் (2008) இந்த நூல் வெளியிடப்பட்டு இருப்பதும் - அவரைப்பற்றிய அரிய தகவல்களை பார்ப்பன அல்லாதாருக்கு - குறிப்பாக இளைய தலைமுறையினருக்குத் தெரிவிக்க முயற்சி செய்திருப்பதும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமான ஒரு அரிய தொண்டு என்றே பதிவு செய்யவேண்டும்.
பார்ப்பனர்கள் பார்வையில் எஸ். முத்தையா முதலியார் அவர்கள் ராட்சதர் என்று கருதப்பட்டார் என்று தந்தை பெரியார் கூறியிருப்பதிலிருந்தே, பார்ப்பனர் அல்லாதார் இந்தத் தலைவரை - அவர்தம் எண்ணங்களை - உணர்வுகளைப் பற்றிக் கொள்ளவேண்டியது அடிப்படைக் கடமையும், நன்றி உணர்வுமாகும்.
இவ்வளவுக்கும் முத்தையா முதலியார் அவர்கள் சார்ந்த முதலியார் பிரிவினர் - இந்த ஆணையினால் பயன் பெற்றவர்களும் அல்லர். வகுப்புரிமை ஆணையை இவர் அமைச்சராக இருந்து செயல்படுத்திய தருணத்தில் அவரின் உறவினர்கள் அவரைச் சந்தித்து, இந்தச் சந்தர்ப்பத்தில் முதலியார் ஜாதியினரையும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட ஆவன செய்யுமாறு, கேட்டுக்கொண்டபோதும், அதற்கு அவர் உடன்படவில்லை என்பதிலிருந்து, அந்த மனிதர் சாதாரணமானவர் அல்லர் மாமனிதர் என்பதை தனக்குத்தானே நிரூபித்துக் கொண்டுவிட்டார். இந்தத் தகவலை நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.
இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக வகுப்புரிமைக்காக ஒரு சட்டம் தமிழ்நாட்டில்தான் நிறைவேற்றப்பட்டது என்பது தமிழ் மண்ணுக்குள்ள தனிப்பெருமையாகும்.
எஸ். முத்தையா முதலியார் அவர்கள் ஆணை பிறப்பித்தாலும், அதற்கான ஒரு சூழலை - பின்புலத்தை உருவாக்கியது தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சியும், தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கமுமே என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும்.
இன்றைக்கு இந்தியாவின் அனைத்துப் பரப்பிலும், அன்று தமிழ்நாடு 1928 இல் எடுத்துக் கொடுத்த ஆணையின் பின்னணியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகநீதி என்னும் பெயரால் அழுத்தமாக உரிமைக் குரலாக எழுப்பி வருகின்றனர். மாநில அரசுகள் மட்டுமல்ல - மத்திய அரசும் இதற்கு முதல் மரியாதை கொடுத்தே தீரவேண்டும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு என்று சொன்னாலே நாக்கு அழுகிப் போய்விடும் என்று கருதிய - எதிர்த்த பார்ப்பனர்கள் இன்றைய தினம் மாநாடு கூட்டி, தங்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்றால், பார்ப்பனர் அல்லாத திராவிட இயக்கத்துக்கும், மதிப்புறு முத்தையா முதலியார் அவர்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றிதானே!
அந்த வெளிச்சத்தில் இன்றைய நிலையில் வகுப்புரிமையின் சமூகநீதியின் அடுத்த நிலை என்னவென்பது சிந்திக்கப்படவேண்டிய, செயல்படவேண்டிய ஒரு கட்டமாகும்.
1. மத்திய அரசுத் துறைகளிலே கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது இன்னும் முழுமையாகக் கிடைக்கப் பெறாதநிலை.
மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோர், 25 விழுக்காடுக்கு மேலாக உள்ள தாழ்த்தப்பட்டோர் - பெரும்பான்மையினராக இருந்தாலும் இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காடைத் தாண்டக் கூடாது என்று இருக்கும் நிலை - உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முட்டுக்கட்டை உடைத்தெறியப்பட வேண்டும். சமூகநீதிபற்றிய சட்டங்கள் நீதி மன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டதாக சட்ட ரீதியாக ஆக்கப்படவேண்டும்.
2. அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும், கூட்டுறவுத் துறைகளும் எண்ணிக்கை அருகி, தனியார் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் விரிவடைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். இந்த வகையில் நடுவண் அரசு அவசர சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்காக அடுத்தகட்ட களத்தில் திராவிடர் கழகம் வலுவாக நின்று கொண்டு இருக்கிறது.
எடுத்துக்காட்டாக சென்னையில் கணினிப் பூங்கா என்று சொல்லப்படும் (டைடல் பார்க்) ஒரு வளாகத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை இயக்குநர்களாகவும், நிருவாகிகளாகவும் இருந்து வேலைக்கு ஆள் அமர்த்தும் நிலையில் உள்ளவர்கள் - பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருந்துவரும் நிலையில், பார்ப்பனர் அல்லாதார் உள்ளே நுழைய முடியாதபடி இரும்புக் கதவால் தாழிடப்பட்டுள்ளது. இந்த நிலை நீக்கப்பட வேண்டுமானாலும் தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகும். வகுப்புரிமைச் சிற்பி முத்தையா முதலியார் நினைவு கூரும் இந்தக் காலகட்டத்தில் இதன் வெற்றியை விரைவில் உறுதி செய்வோமாக!
----------------நன்றி - "விடுதலை" தலையங்கம் 22-10-2008
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
good post. we too welcome reservations in private establishments.
Is Dina thandhi & saravana stores's owners ready to emply scheduled caste staff?
Post a Comment