Search This Blog

14.10.08

இராமன் இலட்சிய அரசனாக இல்லாதது மட்டுமல்ல; ஒரு நேர்மையான கணவனாகவோ நடந்து கொள்ளவில்லை!

அறிஞர் அண்ணாவும் குமாரன் ஆசானும்



இந்திய மொழிகளில் சமற்கிருத மேலாண்மையையும் வைதிகப் பண்பாட்டையும் எதிர்த்து நிற்கும் மரபு தமிழ் மரபாகும். பாலி மொழி பௌத்த சிந்தனை மரபின் வாயிலாக வைதிகத்தை எதிர்த்து நின்றபோதும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சமற்கிருத மொழியில் கரைந்து விட்டது. அதே நிலைதான் பாகத மொழியான பிராகிருதத்திற்கும் ஏற்பட்டது. வைதிகத்தையும் சமற்கிருத மேலாண்மையையும் எதிர்த்த சைன சமயத்திற்குரிய பாகதம், ஒரு கட்டம் வரையிலும் சமற்கிருத மொழிக்கு வரிவடிவத்தைக் கொடுத்த போதும் கால ஓட்டத்தில் அம்மொழியும் சமற்கிருதத்தோடு இணைந்து விட்டது. ஆனால் தோன்றிய நாளிலிருந்து தனித்தன்மையோடு விளங்கி வரும் தமிழோ சமற்கிருதத்திற்கும் அதன் வழிவந்த வைதிகப் பண்பாட்டிற்கும் இன்று வரை பெருஞ்சவாலாகவே இருந்து வருகிறது. இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. தமிழ்வழிச் சிந்தனை மனித நேயத்தின் அடிப்படையில் அமைந்த பொருளியல் கோட்பாடுகளாகும்.

சமற்கிருத வழிச் சிந்தனை மரபோ மனித நேயத்திற்கு எதிரான சுரண்டலுக்கும் ஏற்றத் தாழ்விற்கும் இடம் கொடுக்கும் கருத்து முதலியல் ஆகும். இப்படி இரண்டு மாறுபட்ட சிந்தனைகளுக்கு இடையே நிகழும் ஒரு தொடர் போராட்டத்தின் தற்காலத்திய வடிவமே தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளாகும்.

தமிழின் தனித்தன்மையாலும், வைதிகத்தின் வழி ஒழுகாமையினாலும் இடைக்காலத்தில் தமிழ்இனம் எதிர்கொண்ட இன்னல்கள் பல. அதனால் ஏற்பட்ட விளைவுகளும் பல. இச் சூழலை, “கடவுளின் பெயரால் இதிகாச புராணப் பொய்களை நம்பியதாலும், சமயத்தின் பெயரால் சநாதன வைதிகத்திற்கு ஆட்பட்டதாலும், சாதியின் பெயரால் சூதான பிறவி உயர்வு தாழ்வை ஒப்பியதாலும், சடங்கின் பெயரால் புரோகிதப் புரட்டுக்குமுன் மண்டியிட்டதாலும், பக்தியின் பெயரால் கோயிலில் வடமொழி அர்ச்சனையை ஏற்றதாலும், தருமத்தின் பெயரால் மனுஸ்மிருதியின் கொடுமைக்கு இடமளித்ததாலும், சமுதாயத்தின் பெயரால் கண்மூடிப் பழக்கவழக்கம் காத்ததாலும், குடும்பத்தின் பெயரால் பெண்ணடிமைநிலை வளர்த்ததாலும் - பார்ப்பனன் பூதேவனாகவும், வடமொழி தேவ மொழியாகவும் ஆதிக்கம் பெற்றிட, தன்மானமும் மொழிப்பற்றும் இனமானமும் செத்துப்போய், சோதிடமும் குறிபார்த்தலும் வளர்ந்து, தன்னம்பிக்கையும் மனத்தெளிவும் மங்கிப் போய், தலைவிதி, கருமம், தலையெழுத்து ஆட்டிப் படைக்க, தமிழன் தன் நிலை இழந்தான், வாழ்விழந்தான், மதியிழந்தான்.

பழமையில் தளையுண்டு, புத்துணர்வு கொள்ளும் வகையற்று, சாதிமதச் சடங்குகளிலே புதையுண்டு, செயலற்ற அடிமைகளாய்... இருட்டறையில் உழன்ற தமிழர்களைத் தம் மனித நிலையை உணர்ந்திடச் செய்ய... சுயமரியாதைச் சூடேற்றி, பகுத்தறிவு ஒளிக்கதிர் காட்டிக் கண் திறக்கச் செய்தவர் தமிழகத்தின் விடிவெள்ளியாம் தந்தை பெரியார் அவர்களேயாவர்.” - எனப் படம் பிடிப்பார் பேராசிரியர் க. அன்பழகன். தமிழின வரலாற்றில் எத்தகு சூழலில் தந்தை பெரியாரின் தொண்டு அமைந்தது என்பதைப் பேராசிரியர் அவர்களின் கூற்று தெளிவுபடுத்தும். புதர் மண்டிக்கிடக்கும் தரிசு நிலத்தை நடவு வயலாக மாற்றவேண்டிய உழவனைப்போல் தந்தை பெரியார் இருந்தார். அதனால்தான் தன்னை ஓர் அழிவு வேலைக்காரன் எனவும் கூறிக் கொண்டார்.
இச்சூழலில்தான் அறியாமையில் உழன்ற மக்களிடம் அறிவுத் தெளிவை உண்டாக்கும் ஒரு வாயிலாகக் கலைவடிவத்தை அமைத்தனர் பெரியாரின் வழிவந்தோர். அப்படி வந்தவர்களில் தலைமையானவர் அறிஞர் அண்ணா அவர்களாவார். அவர் படைத்த ‘நீதி தேவன் மயக்கம்’ எனும் நாடகமே இங்கு ஆய்வுப் பொருளாகும்.

“கலை எனப்படுவது இனக்கொலையானால் கலையைக் கொலை செய்” என்றார் பெரியார். இந்தக் கூற்று எந்த அளவிற்குப் பொருத்தமானது என்பது இராமாயணமும் மகாபாரதமும் இயற்றப்பட்டதற்கான காரணத்தை அறிந்தால் புரியும். ஒவ்வோர் இலக்கியத்திலும் ஒரு வகுப்பு நலன் இருக்கும். அந்த வகுப்பின் நலன் ஒட்டுமொத்த மனித குலத்தையும் எந்த அளவில் பாதிக்கின்றது என்ற கருத்தின் அடிப்படையிலேயே அந்த இலக்கியங்கள் மதிப்பிடப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் இலக்கிய வடிவம் பெற்றுள்ள இராமாயணமும் மகாபாரதமும் எந்த வகுப்பின் நலனை முன்னிறுத்துகின்றன? இந்தக் கேள்விக்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விடை தந்தவர் கடலங்குடி நடேச சாஸ்திரியாவார். ஆதிசங்கரரின் பிரம்மசூத்திர உரையைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்ட நூலின் முன்னுரையில் அவர் கூறுவது வருமாறு:

“...மகாபாரத காலத்துக்கு முன்னிருந்த பிராமண, சத்திரிய, வைசியர் என்னும் மூன்று வருணத்தாரும், வைதிக மந்திரங்களையும், அதன் அனுட்டான முறைகளையும் தங்களது குடும்பச் சொத்தாகக் காத்து வருவதையும், அதனால் அவர்கள் மேன்மை பெற்று விளங்குவதையும் கண்ட சாதி சூத்திரர்கள், தாங்களும் வைதிக மந்திரங்களைக் கொண்டே அம்மேன்மையை அடைய எண்ணங் கொண்டவர்களாய் இருபிறப்பாளர்களின் சொத்தான வைதிக மந்திரங்களையும் அதன் அனுட்டான முறைகளையும் எப்பாடுபட்டேனும் இரு பிறப்பாளர்களிடமிருந்து பெற்று விட வேண்டுமென எண்ணி அவ்வழியில் இறங்கினர். இதைக் கண்ட இருபிறப்பாளர்கள் “சாதி சூத்திரன் வேதத்தைக் காதால் கேட்கவோ, நாவால் உச்சரிக்கவோ, மனத்தால் அதன் பொருளைத் தியானிக்கவோ கூடாது” என விதியிருப்பதை அவர்கட்கு எடுத்துக் கூறினர்.

அது கேட்ட அந்தச் சாதி சூத்திரர் ஆண்டவனது படைப்பில் அகப்பட்டத் தாங்களும் நல்ல கதியை அடைய வேண்டுவது அவசியமாதலால் எதைக் கொண்டு தாங்கள் கரையேறுவது எனக் கேட்குங்கால் அந்தச் சாதி சூத்திரர்களைக் கரையேற்றுவிப்பான் நோக்கி வேதோப பிரம்ஹணங்களான இதிகாசம் புராணம் இவைகளை அவர்க்குக் கற்பித்து அதன் மூலம் பல மந்திரங்களையும், ஞானமார்க்கத்தையும், கர்ம மார்க்கத்தையும், பக்தி மார்க்கத்தையும் தங்களுக்கு இருப்பதற்கு ஒப்பாகவே உபதேசித்து அவர்களுக்கும் முத்தி வருவதற்குப் போதிய சாதனங்களையும் கற்பித்துக் கொடுத்தனர்.

இவ்விதம் தங்களுக்குப் பல நல்வழிகள் இருப்பினும் தாங்களும் வேதங்களை ஏன் கற்கக் கூடாதென அவர்கள் வற்புறுத்திக் கேட்கத் தொடங்கி எவ்வழியிலேனும் அதைக் கற்றுத்தான் தீருவோம் எனப் பிடிவாதம் செய்யத் தொடங்கினர். இவ்விதம் தப்பு வழி செல்லுமிவர்க்கு என்ன சொல்லியும் அவை பயன்படாமற் போகவே வேதங்களாகியத் தங்களுடைய சொந்த சொத்தைப் பிறரிடமிருந்து ரட்சிக்க வேண்டிப் பின்வரும் விதியையேற்படுத்தினர். அதாவது பெண், சூத்திரன், இரு பிறப்பாளனாய்ப் பிறந்தும் அப்பிறப்புக்குரிய நியமமில்லாது பெயருக்கு மட்டும் இரு பிறப்பாளர்களாய் இருப்போர் ஆகிய இம்மூவருடைய காதிலும் வேதம் படக்கூடாது. அஃதாவது அவர் கேட்கும்படி எவரும் அத்யயனம் செய்யக் கூடாது என்றும் அவர்க்கு வேண்டியே ஐந்தாவது வேதமான பாரதமும் 18 புராணங்களும், இராமாயணமும் ஏற்பட்டன பற்றி அதையவர்கள் கற்க வேண்டும் என்றும் வரையறுத்தனர். இவ்வித வரையறையினால் சாதி சூத்திரரோடு மட்டும் நில்லாது பெண்கள், நியமங்களை இழந்த இருபிறப்பாளர் ஆகியோர்க்கும் வேத அதிகாரம் இல்லாமற் போய்விட்டது.

மேற்காட்டிய எடுத்துக்காட்டின்படி
1. சூத்திரர், பெண்கள், வேத வழிநில்லாத பார்ப்பனர்கள் ஆகியோர் வேதங்கற்கத் தடை விதிக்கப்பட்டமை,
2. வேதங்களைப் படிக்காவிட்டாலும் வேத நெறிகளில் அவர்களை நிலை நிறுத்தும் பொருட்டே இதிகாசங்களான இராமாயண, மகாபாரதம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டமை, எனும் கருத்துகள் நடைமுறையில் இருந்தமை தெளிவாகும்.


இந்த நடைமுறைகள் மீறப்பட்டால் அவர்கட்கு என்ன வகையான தண்டனைகள் வழங்கப்பட்டன என்பதன் அடையாளங்களே இராமாயணத்தில் சம்புக வதையும், மகாபாரதத்தில் ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டியதும் ஆகும். இப் பின்னணியில்தான் பகுத்தறிவு இயக்கங்களான திராவிடர் இயக்கங்கள் இராமாயண மகாபாரதத்தை அணுகின. அதன் அடையாளமே அண்ணா அவர்களின் ‘நீதி தேவன் மயக்கம்’ எனும் அரிய நாடகமாகும்.

1943ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரி மண்டபத்தில், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களோடும், 1948இல் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களுடனும் அறிஞர் அண்ணா அவர்கள் இராமாயணம், பெரியபுராணம் ஆகிய நூல்கள் குறித்து நடத்திய சொற்போரே இந்நாடகத்திற்கு மூல ஊற்றாகும்.

... கம்ப இராமாயணத்தில், இரக்கம் எனும் ஒரு பொருளில்லை. இராவணனிடம், அதனால்தான் அவன் அரக்கன் எனச் சொன்னதை வைத்து இரக்கம் என்றால் என்ன? இதன் இலக்கணம் என்ன? இரக்கத்தின் பொருள் காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை இதிலே மிகத் தெளிவாக அண்ணா அவர்கள் எடுத்துரைப்பார்கள். இராவணனிடம் இரக்கம் இல்லை. அதனால் அவன் அரக்கன் எனக் கம்பர் குற்றம் சாட்டியதால் நீதிதேவனும் அதை நம்பி, ஆம் அவன் அரக்கன்தான் எனத் தீர்ப்பளித்தார். ஆனால் இன்று விழித்துக் கொண்ட பூலோக மக்கள் இராவணன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்பதாகக் கற்பனை செய்து நீதிதேவன் நீதிமன்றத்தைக் கூட்டுவதாகவும், அந்த நீதிமன்றத்தில் இராவணனும் அவன்மேல் குற்றம் சாட்டிய கம்பரும், நீதிமன்ற அறவோர்களாகவும், துரோணர், பரசுராமர், கோட்புலி நாயனார், விசுவாமித்திரர் முதலானோர் நீதிமன்றத்தில் பங்கு பெறுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

‘பொய் போலும்மே பொய் போலும்மே பொய்யுடைய ஒருவன் சொல் வன்மையினால் பொய்போலும்மே’ எனும் தமிழ்ப்புலவரின் கூற்றிற்கு ஏற்ப, இந்த நாட்டில் வைதிக நெறிப்பட்ட அனைத்துப் பொய்களும் உண்மைகளாக்கப்பட்டுள்ளன. மாற்றான் மனைவியைக் கவர்ந்தான் எனும் ஒரு காரணத்தைக் காட்டியே இராவணனின் மற்ற அரும்பண்புகள் சிதைக்கப்பட்டு விட்டன. ‘பிறர்மனை நயத்தல்’ தவறான - தீங்கான - ஒழுக்கம் என்பதில் யாருக்கும் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் அப் பிறன்மனை நயத்தலே ஒருவனின் பெருமைக்குக் காரணமாவதைப் மகாபாரதத்தில் காண்கிறோம். இராதை கோபியருள் ஒருத்தி. கண்ணனைவிட வயதில் மூத்தவள். அடுத்தவன் மனைவி. ஆயினும் கண்ணனை விரும்பி அவனோடு கூடி மகிழ்கிறாள். அதன் காரணமாகவே கண்ணனாகிய கிருட்டிணன் இராதாகிருட்டிணனாகப் போற்றப்படுகிறான்.

இத்தகைய கொடுமைகள் வைதிக இலக்கியங்களில் மிகுதி. இந்நிலையில்தான், கம்பர், இராவணனை ‘இரக்கமெனும் ஒரு பொருளிலா அரக்கன்’ எனக் குற்றம் சுமத்தி - பழிக்கு உள்ளாக்கியதை இராவணன் தன் சீராய்வு மனுவில் மீண்டும் விசாரணைக்குக் கொண்டு வருகிறான். இந்நாடகத்தின் மையக் கருவே, இரக்கம் - எனக்கு இல்லை என்று கூறி அந்த ஒரு பொருள் இல்லாத நான், அரக்கன் என்று கூறி, அரக்கனான நான் அழிக்கப்பட்டது, இரக்கம் எனக்கு இல்லாததால்தான் என்று பேசுகின்றார்களே, அது வீண் அபவாதம்!


ஏனெனில் ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனவனுடைய தொழில், வாழ்க்கை முறை, இலட்சியம் என்பனவற்றைப் பொருத்திருக்கிறது... அந்த நிலையிலே, ‘கருணாகரன்’ என்று புகழப்படுபவர்களும் கூட பல சமயங்களிலே இரக்கமற்று இருந்திருக்கின்றார்கள். இரக்கம் இல்லாதோர் அரக்கர் என்றால் அனைவரும், ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்தான்... என இராவணன் நீதிமன்றத்தில் முழங்கிய முழக்கமாகும்.

"அவரவர்கள் ஏற்றிருக்கின்ற தொழில், வாழ்க்கை முறை, இலட்சியம் ஆகியவற்றால் இரக்கம் காட்டமுடியாத சந்தர்ப்பங்கள் பல நேரிடுகின்றன. இதை நினைத்தே கலக்கம் கொண்டேன்'' என நீதி தேவனே கலக்கம் கொள்ளும் நிலை உருவாகி விட்டது. இக் கலக்கமே - ‘நீதி தேவன் மயக்கம்’ என்ற நாடகத் தலைப்புக்கும் காரணமாகிறது.

காகுத்தனாக - கருணையின் வடிவமாகக் கம்பரால் படைக்கப்பட்ட இராமன், மூலப்படைப்பில் எவ்வளவு குறைபாடுடுடையவனாக, கொலைப் பழிக்கு அஞ்சாதவனாகப் படைக்கப்பட்டுள்ளான் என்பதைச் சம்புக வதையிலிருந்து எடுத்துக் காட்டுவார் அண்ணா. சம்புகன் ஒரு சூத்திரன். வைதிக நெறிப்படி சூத்திரன் தவம் செய்யலாகாது. இதனால் தவம் செய்யும் சம்புகனைத் தண்டிக்கும்படி பார்ப்பனர்கள் இராமனிடம் கோரிக்கை வைக்கின்றனர். இக் கோரிக்கையைத் தலைமேல் ஏற்றுச் செயல்படுத்துகிறான் இராமன். இராமனுக்கும் சம்புகனுக்கும் நடக்கும் உரையாடல்:

இராமன்: சம்புகா! இங்கு நான் தவம் கூடாது என்று கூறி, நடத்தப்படும் தவங்களையெல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறேன் என்றா எண்ணுகிறாய்? தவம் நடக்கிறது. நான் அதனை ஆதரிக்கின்றேன் - உதவியும் செய்கிறேன்.

சம்புகன்: இது தவமல்லவா!

இராமன்: தவந்தான்! ஆனால் நீ செய்வது தகாது. என் கோபம் தவத்தின் மீது அல்ல - அந்தக் குணம் அரக்கனுக்கு! அவரவர், தத்தம், குலத்துக்கேற்ப நடக்க வேண்டும் என்ற தர்மத்தைக் காப்பாற்றவே, நான் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது. அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்ல நான்.

சம்புகன்: யோசியாமல் பொய் பேசுகிறாய் இராமா! கூசாது பேசுகிறாய். உன் ஆட்சியிலே சிலருக்குத் தவம் செய்தால் ஆதரவும், என் போலச் சிலருக்குத் தலைபோகும் நிலையும் இருக்கிறது. இதை நீ நீதி என்கிறாய்.

இராமன்: தர்மம்! நானும் மீறமுடியாத தர்மம்.

சம்புகன்: இதற்குப் பெயர் தர்மம்! அரக்கர் செய்தது மட்டும் என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக் கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர் என்றும் கூறமுடியாதே! அவர்களில் பலர் தவம் செய்தனர். இராவணனே பெரிய தவசி! அரக்கர் தலைவர்களெல்லாம் தவம் பல செய்து வரம் பல பெற்றவர்கள். ஆகவே, அவர்களும் தவம் என்றாலே வெறுத்து அழித்தவர்களல்ல - தவம் நாங்கள் செய்யலாம் - ஆரியர் செய்யலாகாது என்றனர். அழித்தனர். நீயும் - இங்கு ஆரியர் தவம் புரியலாம் - அநாரியனான நான் புரிதல் தகாது; தலையையே வெட்டுவேன் என்கிறாய். இலங்கையான் செய்தால் பாபம்! அயோத்தியான் அதே காரியத்தைச் செய்யும்போது... வெட்கமாக இருக்கிறது - இப்படிப்பட்ட அரசிலே வாழ்கிறோமே என்று - சீக்கிரம் என் தலையை வெட்டி விடும்.

(வாதம் முடிந்தது. இராமனின் தண்டனை கிடைத்தது வரம் வேண்டித் தவம் செய்த சம்புகனுக்கு. அவன் தலை தரையில் உருண்டது)




இராமனின் இயல்பு எப்படிப்பட்டது என்பதை உணர சம்புகவதையை அண்ணாவைப் போலவே மலையாள மாகவிஞனாகிய குமாரன் ஆசானும் தம் ‘சிந்தனையில் மூழ்கிய சீதை’ எனும் குறுங்காப்பியத்தில் பதிவு செய்வார்.

அண்ணா, நீதி தேவன் மயக்கம் எழுதிய - ஏறத்தாழ அதே காலகட்டத்தில்தான் புதுமைப்பித்தன் அவர்களும் சாப விமோட்சனம் எனும் அரிய சிறுகதையைப் படைத்தார். அச் சிறுகதையின் முடிவில், சீதையும் இராமனும் பரிவாரம் இன்றி வந்தார்கள். சீதை அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள்... அகலிகை துடித்து விட்டாள். “அவர் கேட்டாரா” “நீ ஏன் செய்தாய்” என்று கேட்டாள். “அவர் கேட்டார் நான் செய்தேன்” என்றாள் சீதை, அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை என இராமனின் முரண்பாடான - மனித நேயமற்ற - பண்பை அகலிகையின் கூற்றாகச் சாடுவார் புதுமைப்பித்தன்.

அண்ணாவின் நீதிதேவன் மயக்கத்தில் வரும் பாத்திரங்கள் அக்கினி, துரோணர், விசுவாமித்திரர், பரசுராமன், இராமன், இராவணன், சீதை, அகலிகை முதலான தொன்ம (புராண) மாந்தர்களாகவும், கம்பர், வால்மீகி முதலான வரலாற்று மனிதர்களாகவும், சில சமகாலப் பாத்திரங்களாகவும் உள்ளன. துரோணர், கோட்புலி நாயனார், பரசுராமர் ஆகியோர் நடத்திய மனித நேயமற்றவன் கொடுமைகள் அனைத்தும் சமயச் சார்பான நூல்களில் ஞாயம் கற்பிக்கப்பட்டுப் பாராட்டப்படுகின்றன. அவர்கள் வன்கொடுமையை மேற்கொள்ள எந்தவிதமான காரணமும் இல்லை. சான்றாகத் துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது. தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கும் அளவிற்கு ஏகலைவன் எந்தத் தவறும் செய்யவில்லை.

கோட்புலி நாயனார் பதுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளைப் பஞ்சம் பசியால் வாடிய ஏழை மக்கள் எடுத்துச் சென்றனர். அதன் காரணமாகவே அனைவரும் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். ஒரு பச்சிளம் குழந்தைகூட துண்டு துண்டாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. இத்தகு கொடுமைகள் கடவுளின் பெயரால், சாதியின் பெயரால் ஞாயம் கற்பிக்கப்பட்டன. ஆனால் சீதையைச் சிறை யெடுக்க இராவணனுக்கு ஒரு காரணம் இருந்தது. தன் தங்கையின் உடலுறுப்புகளைச் சிதைத்த கொடுமையே அக்காரணம். ஆனால் அந்தக் காரணம் புறக்கணிக்கப்பட்டு அதுவும் பழிக்கு உள்ளானது.

அசோகம் என்பது ஒருவகை மரம். பிண்டி என்றும் செயலை என்றும் இம்மரம் அழைக்கப்படும். ஆசீவக - சைன மரபுகளின்படி, பிண்டி மரம் ஆதிநாதருக்கு உரியது. அத்துடன் அவ் அசோகமரம் கற்பின் குறியீடாகவும் கருதப்படுவது. சீதையைச் சிறையெடுத்த போதிலும் அவளின் கற்பு பாதுகாக்கப்பட்டது என்பதே அசோகவனத்தின் குறியீடு. இந்தக் குறியீட்டின் வழி, தன் தங்கையின் உறுப்புகளைச் சிதைத்து அவளை இழிவுக்கு உள்ளாக்கிய இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் ஒரு பாடம் கற்பிப்பதே இராவணின் நோக்கம் என்பது புலனாகின்றது. இப்படி, தான் சிறைப்படுத்தியவளை - அவளின் கற்பை - அவன் பாதுகாத்த நிலையிலும், அவனை இரக்கம் என்று ஒரு பொருளிலா அரக்கன் எனக் கம்பர் குறிப்பது எந்தவகையில் ஞாயம்? இதுவே அண்ணாவின் கேள்வி.

எந்தக் கலை வடிவத்தைக் கொண்டு இந்த இனம் வருணங்களால் பிரிக்கப்பட்டு, சாதிகளால் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்பட்டு இழிவுக்கு உள்ளாக்கப்பட்டதோ அதே கலைவடிவத்தைக் கொண்டே வருண நெறிகளைத் தகர்த்து, சாதி ஏற்றத் தாழ்வுகளைக் களைய மேற்கொண்ட கொள்கைப் பரப்பலுக்கான ஒரு முயற்சியே அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ ஆகும். எதிரி எய்த ஆய்தத்தைக் கொண்டே அவனை அழிப்பது போன்ற ஓர் உத்தி அதுவாகும்.

அண்ணா அவர்கள் வேறு வேறு சூழலில் எழுதிய ‘தேவலோகத்தில்’, ‘கறை போகவில்லை’ எனும் இரண்டு சிறு நாடகங்களையும் இணைத்து, பின்னாளில், நீதிதேவன் மயக்கமாகியுள்ளார். படிப்பதற்காக எழுதப்பட்ட இரு ஓரங்க நாடகங்களை, நடிப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றை இணைத்து முழுமைப்படுத்தியதன் வாயிலாக, அண்ணா அவர்கள், கொள்கைப் பரவலுக்கு எந்த அளவில் கருத்துச் செலுத்தியுள்ளார் என்பது புலனாகும்.

இராமாயணத்தை ஒரு நேர்மையான திறனாய்விற்கு உட்படுத்தியதன் வாயிலாகத் தமிழில் ஒரு நாடகம் கிடைத்தது. அஃதாவது திறனாய்வே இலக்கியமானது. இதே போன்ற ஒரு திறனாய்வுப் பின்னணியில், குமாரன் ஆசான் தீட்டிய ஒரு குறுங்காவியம் மலையாள மொழி இலக்கியங்களில் ஒரு மணிமுடியாய் ஒளிர்கிறது. ‘சிந்தாவிஷ்டாய சீதை’ என்பதே அந்தக் குறுங்காப்பியம். அவலத் திற்கு ஆளான சீதையின் நெஞ்சக் குமுறல்களை வெளிப்படுத்தும் ஓர் உணர்ச்சிக் காவியமாகும் அது. நனவோடை உத்தியின் அடிப்படையில் அக்காப்பியம் அமைந்துள்ளதால், அதன் உண்மை ஒளி சீதையின் மனச்சான்றாய் வெடித்துக் கிளம்புகின்றது. இதனை, ஆசானின் கற்பனையில் உருவாகியுள்ள சீதை, கற்பு, பெருந்தகைமை, உலகியல் அனுபவ ஞானம் ஆகியவை நிரம்பியவள்தான் என்றாலும், ஊன், உயிர், உணர்ச்சிகளின் மானுடக் கூட்டுக்குள் கட்டுண்டவளே.

வால்மீகி பத்தாண்டுக் காலம் சீதையைத் திரை மறைவில் ஒளித்து வைத்து விடுகிறார். ஆசானோ, அவளை அரங்கத்தின் நடுவில் கொண்டு வந்து நிறுத்தி, தன் மனதில் எழும் சிந்தனைகளைப் பேச வைக்கிறார், வேறு ஒருவரிடம் அவள் சொல்வதாக அமையவில்லை யாதலால் இதயத்தின் ஆழத்தில் கிடக்கும் சிந்தனையை உள்ளக் கரவின்றி அவள், ‘நெஞ்சொடு கிளத்து'கிறாள். சீதை ஒவ்வொன்றையும் எப்படி பார்த்திருக்கிறாள், அவள் அனுபவித்த விதம் என்ன என்பதை நாம் இது காறும் கண்டதில்லை. இப்போது காண்கிறோம். ஒரு பெண் என்ற நிலையில் அவள் பார்த்த பார்வையினாலும், அவள் பெற்ற அனுபவத்தினாலும், மனைவியான சீதைக்கு இராமனை ஓர் இலட்சியக் கணவனாகக் காணுவதும் கருதுவதும் இயல்பு, இலட்சிய அரசனாக அன்று. ஆனால் இந்தப் பெண், கொடுமைக்கு உள்ளானவள். உணர்ச்சி கொந்தளித்து, குற்றம் காணும் நிலையில் மட்டும் இல்லை அவள் சிந்தனை. ஆழ்ந்த அனுதாபமும், விட்டு விலகி நின்று நிகழ்வுகளைப் பார்க்கும் திறனும், நடுவுநிலைமையும், நீதி உணர்வும் நிரம்பப் பெற்றவள் அவள். இப்படிச் சித்தரித்திருப்பதில் ஒரு முரண்பாடு இருப்பதாகக் கூட வாசகர்கள் மனதில் படலாம். நெருங்கி ஆழ்ந்து நோக்குங்கால் இவையாவும் சந்தர்ப்பத்துக்கு ஒத்து இயங்கும் சிந்தனைத் தொடரின் ஏற்றமும் இறக்கமும் அன்றி வேறல்ல என்பது புலனாகும் என அக்காப்பியத்தின் தமிழ் மொழி பெயர்ப்பின் முன்னுரையில் குறிப்பார் ஜே.எம். ஜார்ஜ்.

ஆனால் உண்மை என்னவெனில் இராமன் இலட்சிய அரசனாக இல்லாதது மட்டுமல்ல; ஒரு நேர்மையான கணவனாகவோ ஏன் சராசரி மனிதனாகவோகூட நடந்து கொள்ளவில்லை என்பதுதான் இக்காப்பியத்தில் வெளிப்படும் உண்மையாகும். ஒரு மனிதனின் உள்ளார்ந்த இயல்புகளை - பண்புகளை - முற்றாக அறிவதில் அவனின் மனைவியைவிட வேறு யாருக்கும் வாய்ப்பிருக்க முடியாது. வாழ்க்கை என்பது நுகர்வுகளின் தொகுப்பாகும். சின்னச் சின்ன மலர்கள் மாலையாகத் தொகுக்கப்படுவது போலச் சின்னச் சின்ன நிகழ்வுகளில் புலப்படும் அன்பின் வெளிப்பாடுகளே வாழ்க்கை. அப்படிப்பட்ட நிகழ்வுகளையே சீதை எண்ணிப் பார்க்கின்றாள். இராமனிடம் ஓர் இளம் மனைவியாக அவள் பகிர்ந்து கொண்டவை; இராமனை ஓர் இளவரசனாக அவள் பார்த்தது; சிற்றன்னையாகிய கைகேயியின் கட்டளைக்கு ஏற்ப இராமன் காடேகத் தொடங்கியது; அப்போது அயோத்தி மக்கள் எல்லாம் திரண்டு வந்து இராமனை காட்டிற்குச் செல்ல வேண்டாம் எனத் தடுத்தது; அவர்களின் மன்றாடலைப் புறக்கணித்து விட்டு இராமன் காடேகியது; பின்னர் யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக நிறைசூலியாக இருந்த சீதையைக் காட்டிற்கு விரட்டியது என ஒவ்வொரு நிகழ்ச்சியாக எண்ணிப் பார்க்கின்றாள். சமயவாதிகள் சொல்லும் ‘இறுதிநாள் தீர்ப்பு’ போல, தன் மனச்சான்றின் முன் இராமனைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, சீதை நீதி விசாரணை செய்கின்றாள். இந்த உத்தியே காப்பியத்தின் வெற்றியாகவும் அமைந்து விடுகிறது.

அண்ணாவின் படைப்பில் விசாரணை, நீதிதேவன் முன்பாக நடைபெறுகிறது. ஆசானின் படைப்பிலோ சீதையின் நெஞ்சக்களமே தீர்ப்பு கூறும் நீதிமன்றம் ஆகிறது. வால்மீகி, சீதையின் இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு அயோத்தி நோக்கிச் சென்ற பின்னர் ஒரு நாள் மாலைப் பொழுது, அந்தகாரமாய்த் தோன்றும் கானகத்தில் தனி வீடு! தனியாக ஒருத்தி! ஆம்! அவள் அந்த ஆசிரமத்தில், வானில் இருள் சூழ்ந்து வருவதைப் போல அவள் நெஞ்சிலும் நினைவுகள் அலையலையாய் எழுந்து வருகின்றன. ஒவ்வொரு நினைவும் சுடு நெருப்பாய்.... துன்பங்கள் கூட உயிரினங்களுக்குப் பொதுதான். விலங்குகளைக் கூட துன்பங்கள் அலைக்கழிப்பது உண்டு. எனினும் பின்னர் அவை அத்துன்பங்களிலிருந்து விட்டு விடுதலையாகி அவற்றை நினைப்பதில்லை. ஆனால் மானுடத்திற்கு மட்டும் அந்த நிலை வருவதில்லையே! மான உணர்வால் மனச்சான்று அழிய, அதனால் உள்ளம் சாம்பிடும் மாளாத்துன்பத்தில் உழல்வது மனிதப் பிறவிக்கு மட்டுமே ஏன் அமைகின்றன...

ஒரு சிறு பொழுதுகூட அந்த இராமனின் பிரிவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தவித்துப் போன அந்த நாள்கள் மறைந்தன. இதோ இன்று கட்டுவிரியன் பாம்பு தலைதூக்காமல் உறங்கிக் கொண்டிருப்பது போல என் காதல் உணர்வுகளும் இப்போதும் உறங்கிக் கொண்டுள்ளன. கதிரவனின் உதயமோ மறைவோ இல்லாத என் உள்ளமாகிய வான வீதியில், குளிரொளியால் நிறைந்து என் நெஞ்சில் இன்ப மூட்டிய அந்த அழகிய வெண்ணிலாகூட என் நினைவாகிய கண்ணாடியில் ஒரு நிழலாக மாறிப் போனதே... இதோ இங்கே! இந்தக் கானகத்து வாழ்வில் நோன்புகள் இயற்றக் கற்றுக் கொண்டேன். எதற்கு! எஞ்சிய நாள்களில் துன்ப நினைவுகளால் என் நெஞ்சில் தோன்றும் வலியை மறைப்பதற்காக! அதனால் துன்பங்கள் சற்றே மறைந்தன! ஆனாலும் என்ன? பெண்ணாகிய நான் என் மானத்தை இழந்து நிற்கின்றேனே! அதனால் ஏற்பட்ட நலிவை - வலியைத் துடைக்கும் ஆற்றலை என்னால் பெற முடியவில்லையே! அந்த அறிவைப் பெறும் வழியை அடைய முடியவில்லை என்று தன்னை வாட்டும் நினைவுகளோடேயே தன் கடந்த காலத்தை அசைபோடுகிறாள். துன்பக் கேணியாகிறது அவளின் நெஞ்சம்.

நிறைவயிற்றோடு இருந்த என்னைக் காட்டிற்குத் துரத்திய அந்த நேரத்திலேயே நான் என் உயிரை மாய்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் வயிற்றில் இருந்த பிள்ளைக்காக நான் அந்த முடிவைத் தேடவில்லை. இரு பிள்ளைகளின் மழலை மொழிகள் என் துன்பத்தை மாற்றின எனும்போது இராமனால் இழைக்கப்பட்ட கொடுமை அவள் நெஞ்சை எப்படி அறுத்திருக்கும் என்பதை உணர வைக்கின்றார் கவிஞர்.

இங்கு எடுத்துக் காட்டப்பட வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. சீதையைப் பொறுத்த மட்டில் இராமன் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை; சொந்தச் சிந்தனை அற்றவன். அவனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பல. நீண்ட நாள் பழக்கத்தால் கசப்பே இனிமையாகிச் சுவையாக மாறுவதைப் போல அவள் வாழ்க்கை மாறிற்றாம். ‘உங்களைக் காட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது இராமனின் ஆணை’ என இலக்குவன் கூறியதைக் கேட்டதும் உலகமே இருண்டது போலாயிற்றாம். இப்பூவுலகம் முழுமையையும் இடிவந்து தாக்கி வீழ்த்தினாற் போல அவள் அடியற்று வீழ்ந்தாளாம் என விளக்குவார் கவிஞர்.

சீதையின் கற்பு குறித்தும், அவள் வயிற்றில் வளரும் கருவைக் குறித்தும், ஊரில் யாரோ ஏதோ பேசினார்கள் என்றும், அதனால் குடிமக்களின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டுவது மன்னனின் கடமை என்றும் கூறி இராமன் என்னைக் காட்டிற்கு அனுப்பினானே! உண்மையிலேயே இவன் குடிமக்களின் குரலுக்கு- சொல்லுக்கு மதிப்பளிப்பவன் என்றால் அன்று கைகேயி இட்ட கட்டளைக்கு ஏற்ப காட்டிற்குச் செல்லும் போது, அயோத்தி மாநகர மக்களே இராமா! நீதான் எங்கள் மன்னன். எங்களைப் பாதுகாக்க நீதான் வேண்டும். காட்டிற்குச் செல்லாதே என்று, மன்றாடியபடி பின் தொடர்ந்தார்களே! குடிமக்களின் கருத்தை இன்றைக்கு மதிப்பதாகக் கூறும் இராமன் அன்றைக்கு ஏன் புறக்கணித்தான்? என வினவுவாள். இந்தப் பகுதியின் தமிழாக்கம் கூட மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளது.

“எட்டிற்று கைக்கென எய்தும் திருவினை
இம்மிப் பொழுதில் பரதனை ஈன்றவள்
தட்டி எறிந்தபோ திந்தப் பெருந்தகை
தாங்கிய துண்டோ இந்தக் கருத்தினை?”


என்பதில் சீதையின் சீற்றம் முழுமையாக வெளிப்படக் காணலாம். சூலுற்ற பெண் தனக்குத் தோன்றும் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் பெருகிவரும் காதலோடும் கொஞ்சலோடும் உரிமையோடும் கூறி மகிழ்வாளே! அப்படிப்பட்ட சூழலில் இருந்த என்னை வஞ்சகத்தோடு காட்டிற்கு அனுப்பினானே! இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே!

தந்தையின் சொற்படி அவன் காட்டிற்குச் செல்ல நேர்ந்தபோது, நான் அவனுக்குத் துணையாகச் சென்றேன். ஆனால் இன்றோ? பெருந்தன்மை சிறிதும் இல்லாத இந்த இராமன், தீய - கயவர்களின் சொற்களைக் கேட்டு என்னைக் காட்டிற்கு அனுப்பியதால், இந்த என் இரு மைந்தர்களும் பிறந்தநாள் திருவிழாநாள் ஆகாமற் போனதே! என்றெல்லாம் ஒவ்வொன்றாக - நிகழ்ச்சிகள் - அவள் கண் முன்னே காட்சிகளாய் விரிகின்றன. அப்படி விரியும் காட்சிகளில் இனிப்பைவிட கசப்பே மிகுதி. ஒரு சராசரி கணவனாகக் கூட இராமன் அவளிடம் நடந்து கொள்ளவில்லை என்பதை மிகுந்த வேதனைகளோடு எண்ணிப் பார்க்கிறாள். மனமும் உடலும் சோர்கின்றன.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்த மாத்திரத்திலேயே மனமும் உடலும் துடிதுடிக்க, சினம் பொங்கி எரிமலையாய் வெடித்துக் கிளம்புகிறது. அந்த நிகழ்ச்சிதான் சம்புகன் வதம். அக்காட்சியைச் சீதை நேரில் காணாவிட்டாலும், அந்தக் கொடுமை அவள் நெஞ்சைக் கீறிப்போட்டு விட்டது. இராமனை ‘ஈரமற்ற நெஞ்சினன்’ எனச் சாடுகின்றாள். கவிஞர் இந்தப் பகுதியை உருக்கம் நிறைந்த வகையில் படைக்கின்றார்.

எந்தக் கம்பன் இராவணனை, இரக்கமெனும் ‘ஒரு குணமிலா அரக்கன்’ எனப் பாடினாரோ அந்தக் கம்பனுக்கு முரணாக ‘இராமனே இரக்கம் எனும் ஒரு பண்பற்றவன்’ என்கிறார் ஆசான். அதுவும் அந்த இரக்கமற்ற இராமனின் மனைவியின் வாயிலாகவே! இராமனின் செயல்களில் இரக்கமற்ற நிகழ்ச்சிகள் பல நடந்துள்ளன. சீதையின் முலைக் காம்பை, தன் அலகால் கொத்திய காக்கையின் கண்ணில் அம்பெய்திய நிகழ்ச்சியும் அவற்றில் அடங்கும். அந்நிகழ்ச்சி அவளைப் பெரிதும் பாதித்த ஒன்று. ‘ஆண்களில் சிங்கம் போன்றவன்’ எனப் போற்றப்படும் இராமனுக்கு இது அழகோ எனக் கேட்பதோடு நின்று விடுகின்றாள்.

இலங்கையில் இராவணனோடு போர் நடந்து கொண்டிருந்த போது இராமன் விரும்பியிருந்தால் சீதையைக் காண ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு அவன் முயலவில்லை. அங்கு நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் அறிந்திருக்கும் சீதை ஒன்றைமட்டும் வேதனையோடு நினைவு கூர்கின்றாள். இராவணனைக் கொன்று அவன் மக்களை அழித்து, இலங்கையை எரியூட்டிய பின் சீதையை மீட்ட இராமன், பலரும் காண, சீதையைத் தீயில் புகுந்து தன் கற்பை உறுதிப்படுத்த கட்டளை இட்டான். இதனைச் சீதை, இராமன் முதன்முதலாகத் தன் காலைச் சேற்றில் இட்டதாகக் கருதினாள். மீண்டும் சூல் வயிற்றினளாகிய தன்னை ஐயுற்று காட்டுக்கு அனுப்பிய நிகழ்ச்சியை இரண்டாவது முறையாகச் சேற்றில் மாட்டிக் கொண்டதாகக் கூறுகின்றாள்.

இதனைக் கவிஞர், என் மீது இராமனுக்கு உண்மையிலேயே பற்று இல்லை என்பதை நான் இலங்கையில் இருக்கும்போதே அறிந்துள்ளேன். என்னைப் பின்னும் காட்டிற்கு அனுப்பியதால் மீண்டும் ஒருமுறைசேற்றில் காலைவிட்டு கழுவ முயல்வதேன்? என வினவச் செய்கிறார். அத்துடன் அமையாது, சீதை பெருகிவரும் அன்போடும், காதலோடும் இராமனைப் பற்றி நினைத்திருக்க, இராமனோ அன்புக்கோ, காதலுக்கோ கிஞ்சிற்றும் இடம் தராமல் தன் மானத்தையே பெரிதாகக் கருதி இருந்தானாம்! இப்படியெல்லாம் இராமனின் ஈவிரக்கமில்லா தன்மைகளை எண்ணியபடி இருந்த அவளைத் துடிதுடிக்கச் செய்த நினைவாக அமைந்துவிட்ட நிகழ்வே சம்புக வதையாம்.

எண்ணக் கொடி(து) இந்த ஈரமில் மன்னவன்
இழிகுலம் என்றொரு யோகியைக் கொன்றதும்
பெண்ணினை, கீழ்பிறப் பாளர்க ளைப்பழி
பேசிடும் நான்மறைதந்த மயக்கிதாம்


என இராமனோடு மட்டும் நின்றுவிடாமல் வேதங்களின்பாலும் சீதையின் சினம் பாய்கின்றது.

குமாரன் ஆசான் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப் பட்டும் தீண்டாமைக்கும் காணாமைக்கும் ஆளான ஈழவர் இனத்தில் தோன்றியவர். அம் மக்களின் இழிநிலையைப் போக்க நாராயணகுரு உருவாக்கிய எஸ்.என்.டி.பி. யோகத்தில் இணைத்துக் கொண்டு தன்னையும் ஒரு சமூகப் போரொளியாக மாற்றிக் கொண்டவர். பார்ப்பன ஆதிக்கத்திற்கு உள்ளாகி அடிமைப்பட்டுக் கிடந்த ஓர் இனத்தின் அவலங்களை முற்றாக அனுபவித்து உணர்ந்த அந்தக் கவிஞனுக்கு. தன்னை - தன் இனத்தைச் சுரண்டியும் ஒடுக்கியும் வந்தவர்களின் மீதும் அவர்களின் கோட்பாடுகளின் மீதும் அடங்காச் சினம் தோன்றுவது இயற்கை. அதன் காரணமே வேதங்களின் மீதுள்ள சினமாக வெடித்துக் கிளம்புகின்றது.

அறிஞர் அண்ணாவின் பின்னணி சற்று மாறுபட்டது. சாதியால் அத்தகைய இழிநிலை அண்ணாவுக்கு இல்லை. இங்கே ஒரு சாதி மட்டும் இழிவுக்கு உள்ளாக்கப்படவில்லை. மாறாக ஓர் இனமே இழிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ் இன இழிவைப் போக்க, பகுத்தறிவு வழியை உருவாக்கினார் தந்தை பெரியார். அவரின் வழியில் தன்னை இணைத்துக் கொண்டார் அண்ணா. தனக்கு வந்த இழிவையோ - இழப்பையோ எண்ணாமல் இன இழிவை - இனத்திற்கான இழப்பைத் துடைத்தெறிய வந்தார். அதனால் எந்தக் கருத்தியல்கள் தம் இனத்தைச் சிதைத்தனவோ அந்தக் கருத்தியல்களைச் சிதைக்க நாடகம் எனும் கலைவடிவத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்நாடகம் நடிப்பதற்காக எழுதப்பட்டாலும் குமாரன் ஆசானின் காவியத்தைப் போல படிப்பதற்கும் ஏற்ற வகையில் கருத்தூற்றாய் அமைந்துள்ளது.

இராமாயணம் - மகாபாரதம் எனும் இதிகாசங்கள் இன ஒடுக்கலை - சுரண்டலை - ஞாயப்படுத்த அமைந்தவை என்பதில் ஐயமில்லை. மனுநெறியின் வஞ்சக எண்ணங்களைக் கலை வடிவில் கொடுத்த நச்சு இலக்கியங்களே அவை என்பதிலும் ஐயமில்லை. இராமாயண - மகாபாரத மீட்டுருவாக்கம் என்பது மனுநெறியின் மீட்டுருவாக்கமே. இவ் உண்மையை மறந்தால் சம்புக வதைகளைத் தடுக்க முடியாது. ஏகலைவர்களின் கட்டை விரல்களுக்கும் பாதுகாப்பில்லாமல் போய்விடும்.

இந்தச் சூழலை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிசத் ஆகிய இந்துத்துவ வன்முறையாளர்களின் நோக்கம். அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதே பாரதிய சனதா என்னும் அரசியல் கட்சியின் கடமை. அந்தக் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் கையாளும் உத்திகள் பலப்பல. அவற்றில் ஒன்றுதான் ‘ரதயாத்திரை’. மனித குலத்தின் ஒற்றுமையைக் குலைக்க - இரத்த வெள்ளத்தில் மிதக்க விட அவர்கள் கையாளும் சூழ்ச்சிகளை முறியடிக்க அண்ணாவும் ஆசானும் வழங்கிய இக்கலைப் பெட்டகங்கள் மனித நலச் சிந்தனையாளர்கட்கு வாளும் கேடயமுமாக அமையட்டும்.

------------- நன்றி: முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் "சமூகநீதித் தமிழ்தேசம்" செப்டம்பர் 2008 இதழில் எழுதிய கட்டுரை

0 comments: