Search This Blog

29.10.08

ஈழப்பிரச்சினையில் தமிழர்களும் - மும்பை பிரச்சினையில் பீகார் மக்களும் .....



தமிழா, தமிழா உன் நிலை எப்போதும் தாழ்ந்த நிலைதானா?


மகாராஷ்டிராவில், வட இந்தியர்கள் எங்கள் வேலைகளைப் பறிக் கிறார்கள் என்று கூறி சிவசேனாவிலிருந்து பிரிந்த மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சி என்ற ராஜ்தாக்கரே கட்சியினர் ரயில்வே வேலைக்குத் தேர்வு எழுதப் போனவர்களை அடித்து விரட்டி வன் முறையில் இறங்கினார்கள்.

அதன் எதிரொலியாக, துப்பாக்கி எடுத்துக்கொண்டு, மும்பைப் பேருந்தில் ஏறி, ராஜ்தாக்கரேயைச் சுடச் சென்ற ஒரு பிகார் இளைஞனை போலீசார் விரட்டி, சுட்டுக் கொன்றுவிட்டனர்.

இப்படி பிகார் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறையைக் கண்டித்து, பிரதமரிடம் சென்று முறையிட, பிகாரில் உள்ள அத் துணைக் கட்சித் தலைவர்களும் ஒன்று திரண்டு, பிரதமரைச் சந்தித்து கடுமையாக ஆட்சேபித்து, ஒரே குரலில் கண்டனம் தெரிவித்துள்ளனர் - தமது எதிர்ப்பை - உணர்வைக் காட்டுகின்றனர்.

மத்திய அமைச்சர் லாலுபிரசாத், பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மத்திய அமைச்சர் மீரா குமார் (காங்கிரஸ்) இப்படி பலரும் கட்சிக் கண்ணோட்டம், ஜாதி மதக் கண்ணோட்டமின்றி ஒன்று சேர்ந்து, தங்கள் மாநில மக்களைப் பாதுகாக்க முனைகின்றனர்.

பக்கத்து இலங்கையில், 3 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே குண்டு மழையில் சாகிறார்கள்; தப்பி, காடுகளிலும், வனாந்தரங் களிலும் பட்டினி கிடந்து வாடி வதைகிறார்கள் - மருந்துகள்கூட இல்லாத நிலை. இதைத் தடுத்திட தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டாலும், முடிவு எடுத்துள்ள நிலையில், ஒன்று சேராது, குறுக்கு சால் ஓட்டி, தமது அரசியல் லாபங்களை மட்டுமே கருதி இன்றும் விமர்சிக்கின்றனர். இதைவிட தமிழனுக்கு - தமிழ்நாட்டுக்கு அவமானம் வேறு உண்டா?


தமிழா! தமிழா! உன் நிலை இதுதானா?

நடக்கும் நல்ல முயற்சிகளைக்கூட திசை திருப்பிட தமிழர் விரோத ஏடுகளும், கட்சிகளும் முனைப்புடன் செயல்படும் அவலம் உள்ளதே!

----------- நன்ரி: "விடுதலை" 29-10-2008

0 comments: