Search This Blog

15.10.08

பெரியார் போராட்டத்தில் பொதுச் சொத்து நாசம் உண்டா?


இந்த நாட்டிலே உள்ள மக்கள்
அறிவியலைப் படிப்பார்களே தவிர
அரசியல் சட்டத்தில் உள்ள அறிவியல்
மனப்பான்மையை தெரிந்து கொள்வதில்லை


நெல்லை மாணவரணி மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் பேச்சு


நெல்லை, அக்.10- இந்த நாட்டிலே உள்ளவர்கள் அறிவியலைப் படிப்பார்களே தவிர, அரசியல் சட்டத்தில் உள்ள அறிவியல் மனப்பான்மையைத் தெரிந்து கொள்வதில்லை; பின்பற்றுவதில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்கள்.
நெல்லையில் 4-10-2008 அன்று காலையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மாணவ உலகத்தின் நிலையோ

மாணவ உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது என்று நம்பிக்கை இழந்த பலபேர் நம்பிக்கை இழந்த காலகட்டத்தில், திராவிடர் கழகத்தின் தலைமையிலே இயங்கக் கூடிய திராவிடர் மாணவர் கழகம், மாணவர் உலகத்திற்கே ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. புதிய வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களை நன்றாகப் பக்குவப்படுத்துகிறது.

ஈரோட்டு உலைக் களத்திலே தயாரிக்கப்பட்டவர்கள்

அவர்கள் சொன்னதைப் போல, இந்த மாணவர்கள் ஈரோட்டு உலைக் களத்திலே அவர்கள் செம்மையாக தயாரிக்கப்படுகிறார்கள் (கைதட்டல்). அப்படி தயாரிக்கப்படுகின்ற அவர்கள் நாளைக்கு அறிவாயுதங்களாக வெறும் அறிவாள்களாக அல்ல - வெறும் ஆயுதங்களாக மட்டுமல்ல, அரிவாயுதங்களாக அவர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர். இங்கே சொல்லப்பட்டதே கடவுள், மதம், ஜாதி மூடநம்பிக்கைகள் இவைகளைத் தாங்குகின்ற சில ஊடகங்கள் இவைகளைப் பற்றி எல்லாம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

புதிய உலகை உருவாக்கவேண்டும்

ஒரு புதிய உலகை உருவாக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையிலே, அந்த புதிய உலகத்தின் அற்புதமான இளம் தூதுவர்கள்தான் மாணவக் கண்மணிகளாக இருக்கக் கூடிய நீங்கள் எல்லோரும் இங்கே திரண்டிருக்கிறீர்கள். இருபால் இளைஞர்களைப் பார்க்கின்றோம். இந்த அரங்கம் நிரம்பி வழிந்து, பக்கத்தில் ஏராளமான தோழர்கள் மூன்று பகுதிகளிலும் தோழர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

பல ஊர்களில் திரண்ட தோழர்கள்

பல ஊர்களில் இருந்து ஏராளமான தோழர்கள் வந்திருக்கின்றார்கள். அற்புதமான கருத்துக்களை எடுத்து வைத்து இங்கே பேசினார்கள். அருமையான தீர்மானங்கள். இவைகள் எல்லா வற்றையுமே நீங்கள் நிறைவேற்றியிருக்கின்றீர்கள். சமுதாயத்தைப் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றீர்கள். வந்தவர்களை வரவேற்கக் கூடிய உங்களுக்கு உங்களைப் பார்த்து மகிழக் கூடிய எங்களைப் போன்றவர்களுக்கு நன்றி சொல்லுவதற்கு முன்னாலே திராவிடர் கழகம் நன்றி செலுத்த இருக்கிறது. அவர்கள் யார் என்றால் - நம்முடைய மாநாட்டை உரிய காலத்தில் எதிரிகளாக இருந்து விளம்பரப்படுத்தியவர்கள் - இன்னமும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றவர்கள் (பலத்த கைதட்டல்).

பெரியார் சொல்லுவார்

தந்தை பெரியார் அவர்கள் எங்களை அழைத்துச் சொல்லுவார். நான் அவர்களிடத்திலே பயிற்சி பெற்றவன். இன்னமும் நான் பெரியாரின் மாணவன்தான்.
அந்தத் தகுதியை வைத்துத்தான் உங்கள் முன்னாலே நான் நிற்கின்றேன். அய்யா அவர்கள் சொல்லுவார்கள். இப்பொழுது டிஜிட்டல் பேனர்கள் உண்டு. அப்பொழுது அதெல்லாம் கிடையாது. ஒவ்வொரு செயலுக்கும் நாங்கள் அய்யா அவர்களிடம் கணக்குக் காட்டித்தான் அனுமதி வாங்கக் கூடியவர்கள்.

அதிக விளம்பரத்தை நீங்கள் செய்து விடாதீர்கள்

அய்யா அவர்கள் சொல்லுவார்கள். அவசரப்பட்டு அதிக விளம்பரத்தை செய்துவிடாதீர்கள் என்று சொல்லுவார்கள். நாம் மாநாடு என்று எங்கே அறிவித்தாலும் நம்முடைய கொள்கை எதிரிகளே, இன எதிரிகளே நமக்கு விளம்பரத்தைத் துவக்குவார்கள் (பலத்த கைதட்டல்). அவர்களே சிறப்பாகச் செய்வார்கள்.

எதிரிகள்தான் நம்முடைய விளம்பர ஏஜெண்டுகள்

எனவே அதிகமாக நாம் கவலைப்படத் தேவையில்லை. நம்முடைய விளம்பர ஏஜெண்டுகள் நமக்கு எப்பொழுதுமே எதிரானவர்கள்தான். ஆகவே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எனவே தனியாக விளம்பரத்திற்கென்று அதிகம் செலவழிக்காதீர்கள் என்று சொன்னார்கள். நானும் அதைத் தான் நம்முடைய தோழர்களிடத்திலே சொன்னேன்.

பேரறிஞர் அண்ணா சொன்னார்

காரணம், தந்தை பெரியாரைப்பற்றி நூற்றாண்டு விழா நாயகரான அறிஞர் அண்ணா அவர்கள் அற்புதமான ஒரு சொற்றொடரைக் கையாண்டார். தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்று சொன்னார். மாலை நேரத்தில்தான் பேராசிரியருடைய வகுப்புகள் தொடங்கும். அந்தப் போராசிரியருடைய கருத்துகள் வேகமாக இருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். அதுபோல தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய அந்த அறிவார்ந்த கருத்துக்கள் - அவருடைய பிரச்சாரத்தின் வேகம் எப்படிப்பட்ட ஒரு அற்புதமான சூழலை உருவாக்கியது என்பதை எல்லாம் இங்கே சொன்னார்கள்.

பெரியார் பிறந்திருக்காவிட்டால்

மாணவக் கண்மணிகளே, செயல் வீரர்களே! வீராங்கனைகளே, இருபால் இளைஞர்களே! உங்களைப் பார்த்து நாங்கள் அன்போடு கேட்டுக் கொள்வதெல்லாம். நீங்கள் படிப்புரிமையை கல்விச் சாலையிலே பெறுகின்றீர்கள். அதுவும் இப்பொழுது ஏராளமாகக் கல்விக் கூடங்கள் உருவாகிவிட்டன.

தந்தை பெரியார் என்ற மாமனிதர் பிறந்திருக்காவிட்டால் இந்த இயக்கம் பிறந்திருக்காவிட்டால், நம்முடைய அருமைச் சகோதரர் சுப. சீத்தாராமன் அவர்கள் இங்கே சொன்னதைப் போல, எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்ல, உங்களைப் போன்றவர்கள் மட்டுமல்ல, இனி வரக்கூடிய தலைமுறையினரும் கூட குருத்துவிடக் கூடிய வாய்ப்பு உண்டா? எண்ணிப் பார்க்க வேண்டும்

இந்த நாட்டில் ஜாதிகளைப் பற்றி, கடவுளைப் பற்றி, மதத்தைப் பற்றி எல்லாம் நம்முடைய தோழர்கள் அற்புதமாகப் பேசினார்கள். நேரம் நம்மை நெருக்கிறதே என்று நான் நினைக்கவில்லை. காரணம் என்ன வென்றால் அவர்கள் பேச ஆரம்பித்தவுடனே எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி என்னவென்றால் இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது (பலத்த கைதட்டல்). இளைஞர்கள், மாணவர்கள் பக்குவப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் (கைதட்டல்). அதன் காரணமாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்திலே சிலர் பாயாசம் சாப்பிட்டார்கள்.

காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சே

காந்தியாரை சுட்டுக் கொன்றபொழுது கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ்ஸிலே பயிற்சி பெற்ற மராத்திய பார்ப்பனர் காந்தியாரை சுட்டுக்கொன்றபொழுது மராத்திய மண்டலத் திலேயே பல இடங்களிலே இனிப்பு வழங்கினார்கள் என்ற ஆத்திரத்தினாலே மொரார்ஜி தேசாய் அவர்கள் பம்பாய் என்ற மாநிலத்திலே அப்பொழுது முதல்வராக இருந்த காலத்திலே அன்றைக்கு மராத்திய மாநிலத்திலே மிகப் பெரிய அளவுக்கு மதக்கலவரங்கள் வெடித்தன.

அக்கிரகாரத்தைத் தாக்கினார்கள்

மதக் கலவரம் மட்டுமல்ல, ஜாதிக் கலவரம், காந்தியாரைச் சுட்டது, மராட்டிய பார்ப்பனர் நாதுராம் விநாயக் கோட்சே என்று சொன்னவுடனே அக்கிரகாரத்தை தாக்கினார்கள்.
ஆனால், அந்த நேரத்திலே கூட அருமை நண்பர்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; இளையவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம்? எப்படி உங்களைப் பக்குவப்படுத்துகின்ற இயக்கம் என்று சொல்கிற நேரத்திலே தந்தை பெரியார் ரொம்பத் தெளிவாகச் சொன்னார். கோட்சே மராத்தி பார்ப்பனர்தான். ஆனால், அவர் ஒருவரை மாத்திரம் நாம் நினைத்துப் பேசக்கூடாது.

காந்தியாரைக் கொன்றது மதவாதி

ஆனால், எந்த மதவெறி காந்தியாரைக் கொல்வதற்குக் காரணமாக இருந்ததோ அந்த மதவெறியை ஒழிப்பதன் மூலமாகத்தான் நாம் மிகப்பெரிய அமைதிச் சூழல் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று அன்றைக்கு அவர்கள் சொன்னார்கள். கோட்சே பிடித்த துப்பாக்கிக்குத் தண்டனை கொடுப்பீர்களா? என்று தந்தை பெரியார் கேட்டார். துப்பாக்கி கையிலே இருக்கிறது. அதுதான் சுடுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சின் கைத்துப்பாக்கி கோட்சே
மராத்திய பார்ப்பனர் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சி.னுடைய கைத்துப்பாக்கி. மதவெறிச் சக்தியினுடைய கைத்துப்பாக்கி, ஆகையினாலே அவர்களுடைய பயிற்சியைப்பெற்று அவர் இருந்தார். இந்த இடத்திலே நீங்கள் தத்துவத்தைத்தான் பார்க்க வேண்டும். அந்த மதவெறியை மக்கள் மத்தியிலே இருந்து அகற்ற வேண்டும் என்று அய்யா அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியார் மறைந்தபொழுது அறிக்கைவிட்டார்கள்.

இன்னொரு இந்திராகாந்தியை இழக்க வேண்டியதில்லை

அன்றைக்கு அந்த மதவெறியை எதிர்த்து எல்லா மக்களும் விழிப்புணர்வு பெற்றிருந்தால் இன்னொரு இந்திராகாந்தியை இழக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இந்திராகாந்தியை இழப்பதற்கு மதவெறிதானே காரணம். இன்றைக்கும் மதவெறிப் பாம்பு படம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றது என்பதை எல்லாம் பார்க்கின்ற நேரத்திலே மாணவச் சிங்கங்களே, மாணவச் செயல்வீரர்களே நீங்கள் பாடத்தைப் படித்தால் மட்டும் போதாது. சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமை இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது அறிவியல் மனப்பான்மை உங்களுக்கு வேண்டும்.

அத்துணைப் பேருக்கும் உள்ள கடமை

பொதுச்செயலாளர் அறிவுக்கரசு பேசும் பொழுது சொன்னாரே, அரசியல் சட்டம் திருத்தப்பட்டதென்று. அரசியல் சட்டம் 51-ஏ என்பதிலே It shall be the duty of every citizen. இந்த நாட்டிலே குடியுரிமை பெற்ற அத்துணை பேருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அரசியல் சட்டப்படி to develop scientific temper.
அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.To develop spirit of inquiry ஏன், எதற்கு என்று கேட்க வேண்டும் humanism and reform என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறது.
அரசியல் சட்டப்படி மனித நேயத்தை, சீர்திருத்தத்தை, ஏன்? எதற்கு? என்று கேட்கின்ற மனப்பான்மையை அதேபோன்று அறிவியல் மனப்பான்மையை படிக்க வேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும்.

அறிவியல் படிப்பார்கள்

நம்முடைய நாட்டிலே அறிவியல் படிப்பார்கள். ஆனால், அறிவியல் மனப்பான்மையைத் தெரிந்துகொள்ள மாட்டார்கள். நாங்கள் வெறும் படிப்பறிவை மட்டும் சொல்லிக் கொடுப்ப தில்லை. பகுத்தறிவையும், அறிவியல் மனப்பான்மையையும் நாங்கள் சொல்லிக் கொடுக்கின்றோம் (பலத்த கைதட்டல்).
(தொடரும்)
------------------------ "விடுதலை" - 10-10-2008


இராமன் பெயரைச் சொல்லி சேதுக்கால்வாய்த் திட்டத்தைத் தடுப்பதா?
போர்ப்படை வீரர்களாய்ச் சென்று அந்த மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிய வேண்டாமா?
நெல்லை மாநாட்டில் தமிழர் தலைவர் ஆவேசப் பேச்சு


நெல்லை, அக். 12- சேதுக் கால்வாய்த் திட்டத்தைத் தடுக்க இராமன் பாலம் என்ற பெயரை இன எதிரிகள் பயன்படுத்தினார்கள். அந்த மூட நம்பிக்கையை நாம் போர்ப்படைத் தளத்திற்குச் செல்வதைப் போலச் சென்று அதை முறியடிக்க வேண்டாமா? தகர்க்க வேண்டாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

நெல்லையில் 4-10-2008 அன்று காலையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி வருமாறு:

மூலை முடுக்குகளில் எல்லாம் பிரச்சாரம்

பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, கல்லூரிகளில் மட்டுமல்ல, அறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொன்னபொழுது தமிழகத்தின் முதல் பேராசிரியர் என்றாரே அந்தப் பேராசிரியருடைய பாடங்களை அவருடைய மாணவர்களாக இருக்கின்ற நாங்கள் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று பரப்பி வருகின்றோம்.

எதிர்ப்புகள்தான் நல்ல உரங்கள்

எங்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், எங்கள் கொள்கை வயலுக்கு அந்த எதிர்ப்புகள்தான் நல்ல உரங்கள் என்ற அந்தத் தெளிவோடு, துணிவோடு நாங்கள் அந்தப் பயணத்தைத் தொடர்கின்றோம்.

எனவே மாணவச் செல்வங்களே, நீங்கள் ஒன்றை நினைத்துக் கொள்ளவேண்டும். இதை சமுதாயத்திற்கு நன்றியோடு தெரிவிக்கவேண்டும்.

முதலில் குடும்பத்திற்கு நன்றியோடு இருங்கள்

முதலில் உங்கள் குடும்பத்திற்கு நன்றியோடு இருங்கள். இங்கே பேராசிரியர் நம். சீனிவாசன் சொன்னார்கள். அவர் என்னைப் பற்றிச் சொன்னார். அன்பின் காரணமாக அதை அலட்சியப் படுத்திவிடலாம்.
ஆனால் அவர் சுட்டிக்காட்டியதிலே என் மனதைத் தொட்ட செய்தி ஒன்று உண்டு, நான் சொல்ல வேண்டும் என்று நினைத்த செய்தி மாணவர்கள் இன்றைக்கு நிறையப் படிக்கிறார்கள் - மகிழ்ச்சியாக இருக்கிறது.

குப்பன் மகன் சுப்பன் கம்ப்யூட்டர் எஞ்சினியர்

ஒரு குக்கிராமத்திலே இருக்கின்ற குப்பனுடைய மகன், சுப்பன் இன்றைக்கு அமெரிக்காவிலே சிகாகோவிலே கம்ப்யூட்டர் எஞ்சினியர் என்று சொல்லி பெருமிதத்தோடு சொல்லுகின்றார். லட்சக்கணக்கிலே அவர்கள் பணம் வாங்குகிறார்கள்.

இந்திய நாட்டு குடியரசுத் தலைவருக்கு அரசியல் சட்டம் நிர்ணயித்திருந்த சம்பளமே பத்தாயிரம்தான். பிறகுதான் அது மாற்றப்பட்டிருக்கின்றது. ஆனால், அந்த நிலையெல்லாம் மாறி இப்பொழுது நம் பிள்ளைகள் ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் வாங்குகிறார்கள் - மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால், தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் மாணவர்கள், வெளி ஊரிலே இருக்கின்ற மாணவர்கள்.

இந்தச் சமுதாயப் புரட்சி இயக்கம் இல்லாவிட்டால்...

கல்வி பெறுகின்ற மாணவர்கள், இந்த இயக்கம் இல்லா விட்டால், இந்தச் சமுதாயப் புரட்சி இயக்கம் இல்லாவிட்டால், உங்களுடைய பெற்றோர்கள் இல்லாவிட்டால், இந்த அரசு இல்லாவிட்டால், உங்களுக்கு இந்த வாய்ப்பு உண்டா? என்ற கேள்வியை நீங்கள் அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும்.

மனு சாஸ்திரத்திலே என்ன எழுதினார்கள்? வேறு எந்த மதத்தில் படிக்கக் கூடாது என்று எழுதினான்? அந்த மதங்கள் மூடநம்பிக்கைகளைப் பிரச்சாரம் செய்கின்றன. எல்லா மதங்களையும் கண்டிப்பதைப் போல இந்து மதங்களையும் கண்டிக்கின்றோம்.

தீவிரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும்...

தீவிரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்போம். ஆனால், நண்பர்களே, இந்து மதத்தில்தானே மனு தர்மம் இருக்கிறது. மனு தர்ம சாஸ்திரத்திலே என்ன எழுதினான்?
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் பஞ்சமர்களுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்கலாகாது. கல்வியைக் கொடுக்கலாகாது.

கல்வியைக் கொடுக்கலாகாது என்ற தத்துவம் நிலை நாட்டப்பட்டிருந்தால் எதிரே இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மாணவக் கண்மணிகளை நாம் பார்த்திருக்க முடியுமா? இன்றைக்குத் தமிழ் நாட்டிலே பாலிடெக்னிக்குகள் மட்டுமே 339.
கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில்
அதேபோல தனியார் துறையில் பொறியியல் கல்லூரிகள் 300-க்கு மேல் இருக்கின்றன. அதேபோல மருத்துவக் கல்லூரிகள். சட்டக்கல்லூரிகள், அதற்கு முன்னாலே நான்கைந்துதான் அரசு கல்லூரிகள் இருந்தன. இன்றைக்கு கலைஞர் அவர்களுடைய பொற்கால ஆட்சியிலே அரசு கல்லூரிகள் எல்லா வகையிலும் வளர்ந்து கொண்டு வருகின்றன.

மனுமுறை தவறாமல் ஆட்சி நடத்தியதா?

மனுதர்மத்திலே இருக்கின்ற கொள்கை - மனுதர்ம தத்துவம் பழைய காலத்திலே இருந்ததே. மனுமுறை தவறாமல் ஆட்சி நடக்கின்றதா? என்று கேட்பார்கள். சேரன் கோவில் கட்டினான். சோழன் கோவிலைக் கட்டினான். பாண்டியன் கோவிலைக் கட்டினான்.
ஆனால், எந்த மன்னனும் பல்கலைக்கழகங்களை, கல்லூரி களைக் கட்டவில்லை (பலத்த கைதட்டல்).
மதுரையிலே திருமலை நாயக்கர் காலத்திலே மூவாயிரம் பேர் படித்தார்கள். அத்துணைபேரும் சமஸ்கிருதம்தான் படித்தார் கள். அத்துணைபேருமே பார்ப்பனர்கள்தான் அவர்கள்.
சூத்திரர்களுக்குப் படிப்பு கிடைத்ததா? பெண்கள் என்றால் என்ன? நம்முடைய நாட்டிலே இந்துமதத் தத்துவத்தின்படி, வர்ணாசிரம தத்துவத்தின்படி பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர, பஞ்சம என்று மக்களைப் பிரித்து வைத்தார்கள்.

சூத்திரனுக்கும் கீழே ஒரு சமூகம் உண்டு

சூத்திரருக்கும் கீழே ஒரு சமூகம் உண்டு. அதுதான் ஒட்டுமொத்தமான பெண்கள். அருள்கூர்ந்து நினைத்துப் பாருங்கள். இந்த இயக்கம் இல்லாவிட்டால் இப்படிப்பட்ட சூழல் வந்திருக்குமா? எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனவேதான் மனுதர்ம சிந்தனைகள் மாற்றப்படவேண்டும். மனு ஆட்சிகள் ஒழிக்கப்பட்ட, மனித தர்ம ஆட்சியை உருவாக்கு வோம் என்று உழைத்த காரணத்தால்தால், நண்பர்களே, இன்றைக்கு இவ்வளவுதான் கல்லூரிகள். நம்முடைய பிள்ளைகள் எல்லாம் வளர்ந்திருக்கிறார்கள். பழைய காலத்திற்குப் போகவேண்டாம். நேரமில்லை - சுருக்கமாக உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

ஆச்சாரியார் 6000 பள்ளிக்கூடங்களை மூடினார்

எழுபது வயதானவர்களுக்கு மட்டும் நன்றாகத் தெரியும். 1952, 1953 - லே ராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் ஆட்சியின் மூல மாக முதலமைச்சராக வந்தார். முதல் தேர்தலில் முழு மெஜா ரிட்டி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டிலே முதலமைச்சராக கொல் லைப்புற வழியாக வந்தார். காமராஜர் அவர்களுடைய ஒத்துழைப்போடு அந்த காலகட்டத்தில் அவர் உள்ளே வந்து அமர்ந்தவுடன் என்ன திட்டம் போட்டார்?
அவர் செய்தது என்ன? கிராமங்களிலே இருக்கக்கூடிய ஆறா யிரம் பள்ளிக்கூடங்களை மூடினார். 1938-லே 2500 பள்ளிக் கூடங்களை மூடினார். கள் ஒழிப்பு என்ற பெயராலே கல்வி ஒழிப்பை அந்தக் காலத்திலே செய்தார்.

இது 1938 வரலாறு, 1952 வரலாறு என்னவென்றால் ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்னாலே இன்றைக்கு 80 வயதுள்ள பெரியவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அரை நேரம் படிப்பு அரை நேரம் அப்பன் தொழில்

கிராமப் பள்ளிக்கூடங்களிலே அரை நேரம் படிக்கவேண்டும். மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழிலை செய்யவேண் டும். சிரைப்பவன் மகன் சிரைக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். வெளுப்பவன் பிள்ளை வெளுக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். மலம் எடுப்பவன் பிள்ளை மலம் எடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி அவனவன் அப்பன் தொழிலை செய்யவேண்டும்.

பார்ப்பனன் பிள்ளை மட்டும் படிக்கவேண்டும் என்ற அந்த குலதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தாரே. அதை எதிர்த்து முழங்கிய இயக்கம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும்தான் (பலத்த கைதட்டல்). திராவிடர் இயக்கம்தான். இந்த இயக்கம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களை ஒட்டி கலைஞர் இப்படி ஒரு பாரம்பரியமான நிலை ஏற்பட்டிருக்காவிட்டால் நண்பர்களே இன்றைக்கு நம்முடைய பிள்ளைகள் படித்திருக்க முடியுமா? குப்பன் மகன் சுப்பன் கம்ப் யூட்டர் எஞ்சினியராக அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியா விற்கும் போயிருக்க முடியுமா? முடியாது.

அந்தப் பெருமை எல்லாம் திராவிடர் இயக்கத்திற்கே

அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்யவேண்டும் என்ற சூழ்நிலை ராஜகோபாலாச்சாரியார் காலத்தில் இருந்தது. ஆக, இவைகளை எல்லாம் மாற்றிய பெருமை திராவிடர் இயக்கத்திற்கு உண்டு. காலையிலே கூட என்னிடம் செய்தியாளர் நண்பர்கள் கேட்டார்கள். நான் அவர்களிடத்திலே சொன்னேன். மிகக் கொடுமையான ஒரு செய்தி என்னவென்றால், நாம் இருப்பது 60 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சார்ந்த நம்முடைய சகோதரர்கள் 25 விழுக்காடு. இருவரும் சேர்ந்தால் 85 விழுக்காடு. சிறுபான்மை சமுதாயம் - அவர்கள் ஒரு 12 சதவிகிதம்.
இதை எடுத்துச் சொல்வதற்கு இந்த இயக்கத்தைத் தவிர
இவ்வளவு சேர்ந்த பிறகு எஞ்சியிருக்கின்ற மூன்று சதவிகிதம்பேர்தான் முன்னேறியவர்கள் இன்றைக்கும் அய்.ஏ.எஸ். அதிகாரிகள், இன்றைக்கும் அய்க்கோர்ட் ஜட்ஜ்கள், இன் றைக்கும் உச்சநீதிமன்றத்திலே நீதிபதிகள் எல்லாம் பார்ப்பனர் களாகத்தான் இருக்கின்றார்கள்.
இதை எடுத்துப் பேசுவதற்கு இந்த இயக்கத்தை தவிர வேறு இயக்கம் உண்டா? என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் (கைதட்டல்).
அரசியல் சட்டத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற சமூகநீதி நமக்கு கிட்டியிருக்கின்றதா? ஓரளவாவது கிட்டியிருக்கின்றதா? கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு என்பதைப் படித்திருக்கின்றீர்கள்.
அதுபோல நண்பர்களே, சமூகநீதித் துறையிலே - ஏன் பகுத்தறிவுத்துறையிலே கூட பெற்றது கைமண் அளவு, பெறாதது உலகளவு. இன்னமும் நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கின்றது. காலையிலே கேட்ட நண்பர்களுக்குக் கூட அதைத்தான் நான் சொன்னேன். உண்மையிலே நாங்கள் செய்ய வேண்டிய பணி ஏராளம் இருக்கிறது.
இந்த இயக்கத்திற்கு நிறைய வேலைகள் உண்டு. நம்முடைய பிரச்சாரத்தை இன்னும் வேகப்படுத்த வேண்டும். காரணம் என்ன வென்று சொன்னால், கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக்கின்ற வரையிலே கடைசி கருப்புச் சட்டைக்காரனும் தேவைப்படுவான் (பலத்த கைதட்டல்). இந்த இயக்கமும் தேவைப்படும்.

முதல் அரசியல் சட்டத்திருத்தம் பெரியாரால்!

அய்.அய்.டி. என்று சொல்லக்கூடிய, அய்.அய்.எம். என்று சொல்லக்கூடிய மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலே இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக இன்றைக்குப் போராட வேண்டிய சூழ்நிலை நமக்கு இருக்கின்றது. நமக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்பதற்காக 1951-ல் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பெரும் போராட் டத்தால் அரசியல் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது.

பண்டித ஜவஹர்லால் நேரு பிரதமராக இருக்கின்றார். அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சர்; அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் என்ற பெயர் எடுத்தவர். அவருடைய காலத்திலே அந்த முதல் திருத்தம் தந்தை பெரியார் அவர்கள் வற்புறுத்திய காரணத்தால் வந்தது.

அரசியல் சட்டத்தில் அப்பொழுதுதான் 15 (4) என்று வந்தது. உத்தியோகத்தில் மட்டும், வேலை வாய்ப்பிலே மட்டும் பிற்படுத் தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற நிலையிலே படித்தால் தானே இவன் வேலை வாய்ப்புக்கே போகமுடியும்.

எனவே அதற்கு இட ஒதுக்கீடு இருந்தால் தானே இவன் வேலைக்குப் போகமுடியும் என்று சொன்னோம். அன்றைக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்ட பிற்பாடு அதில் நியாயமிருக்கிறது என்பதைக் கேட்டு காமராஜர் போன்றவர்களுடைய ஒத்துழைப்போடு மிகப் பெரிய அளவுக்கு முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் வந்தது. அதுதான் அரசியல் சட்டத்தில் 15 (4) என்பது. இது எப்பொழுது? 1951-லே. அதன்படி எல்லா கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்கள் இவர்கள் எல்லோருக்கும் சேர்ந்துதான் இட ஒதுக்கீடு. அதுதான் 15 (4) என்ற சரத்து. அரசியல் சட்டத்திலே இதில் தெளிவாக இருக்கிறது.

மத்திய அரசில் கதவு திறக்கப்படவில்லை

ஆனால், நண்பர்களே இந்த அரசியல் சட்டம் திருத்தப்பட்டும்கூட அய்.அய்.அடிகளினுடைய கதவு திறக்கப்பட வில்லை. மத்திய அரசினுடைய கதவுகள் திறக்கப்படவில்லை. நல்ல வாய்ப்பாக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சி வந்தது. மண்டல் கமிசன் வந்தது. கலைஞரைப் போன்றவர்கள் எங் களைப் போன்றவர்கள், திராவிடர் கழகத்தைப்போன்றவர்கள் வற்புறுத்திய நிலையிலே அனைத்து இந்தியாவிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கியதன் விளைவாக வேலை வாய்ப்பிலே 27 சதவிகிதம்.
எப்பொழுது? 1992-லே வேலை வாய்ப்பிலே. ஆனால், படிப்பிலே கிடையாது. எண்ணிப் பாருங்கள் - இந்த சூழ்ச்சியை. 1951-லே சட்டத்திருத்தம் வந்துவிட்டது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியால்

1951-லே இருந்து, கதவுகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கதவுகள் திறக்கப்பட வேண்டும்.

திறக்கப்படவில்லை. ஆனால், இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கலைஞர் அவர்களு டைய அரசியல் வியூகத்தாலே உருவாக்கப்பட்டு மதவெறி ஆட்சிக்கு விடைகொடுத்து அனுப்பிய பிறகு அய்க்கிய முற் போக்கு கூட்டணி ஆட்சி வந்த பிறகு - அதன் முயற்சியினாலே 2007-லே இப்படி ஒரு முயற்சி வந்தது என்று சொன்னால், எத்தனை தடை ஓட்டப் பந்தயங்களை சந்திக்க வேண்டியிருக் கிறது. எத்தனை முறை சட்டத்தின் குறுக்கீடுகள், இவ்வளவும் வந்து கடைசியாக மலையைக் கிள்ளி எலியைப் பிடித்ததுபோல 27 சதவிகிதம் கொடுக்கலாம்.

ஒரே சான்சிலே கொடுக்கக் கூடாது

ஆனால், ஒரே சான்சிலே கொடுத்துவிடக் கூடாது, ஒன்பது, ஒன்பது, ஒன்பது என்று கொடுக்கவேண்டும் என்று சொல்லு கின்றார்கள். இளைஞர்களே நீங்கள் உணருங்கள். ஈரோட் டுக்குரல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டிய அவசியம் என்ன? (கைதட்டல்).

85 விழுக்காட்டினரின் வரிப்பணம்

இட ஒதுக்கீடு ஒன்பது, ஒன்பது, ஒன்பது என்றார்களே, அந்த ஒன்பதையாவது நாணயமாக ஒழுங்காக ஒப்புக் கொண்டார் களா? இல்லை. இத்தனைக்கும் மத்திய அரசுக்கு வரி கட்டுகிறவர் கள் நாம். அந்தப் பணம் முழுக்க முழுக்க ஏழை - எளிய மக்களின் பணம். 85 விழுக்காடு உள்ள மக்களின் வரிப்பணம். இவர்களுடைய பிள்ளைகள் உள்ளே போக முடியாது. எங்கே அந்த உயர்கல்வி நிறுவனங்களிலே, இதை எதிர்த்துப் போடி, போராடி வந்தோம்.

உச்சநீதிமன்றத்திலே எல்லாம் அவாள்

அதற்கு சாமர்த்தியமாக என்ன சொன்னார்கள். உச்ச நீதிமன்றத்திலே உட்கார்ந்திருக்கின்ற நீதிபதிகள், இவர்கள் எல்லாம் உயர் ஜாதிக்காரர்களாக அங்கே போய் உட்கார்ந்தி ருக்கின்றார்கள்.

நம்மாள் அங்கே உள்ளே போக முடியவில்லை. இது மிகப் பெரிய கொடுமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 525 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தை இயற்றினாலும், ஒரு சிகப்பு கோடுபோட்டு அடிக்கின்ற அதிகாரம், உயர் ஜாதிக்கார நீதிபதிகளின் கையில் இருக்கின்றது.
அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கின்றவர்கள் எல்லாம் அவாள். இல்லையானால், 2500 கோடி ரூபாயை செலவழித்து சேதுக் கால்வாய்த் திட்டத்தை தொடங்கி - முடியக் கூடிய நிலை வந்தது.

2500 கோடி ரூபாய் சேதுக்கால்வாய்த் திட்டம்

தென் மாவட்டத்திலே கட்சி வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்கள் ஜாதிக் கலவரங்களால் பாதிக்கப்படாமல் வேலை வாய்ப்பு வரவேண்டும் என்பதற்காக நம்முடைய 150 ஆண்டுக் கால கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் இருக்கின்றதே அந்தக் கால்வாய்த் திட்டத்தை கலைஞர் அவர்களுடைய முயற்சியினாலே பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி தலைமையிலே இருக்கின்ற அரசு - மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு போன்றவர்களுடைய முயற்சி இல்லா விட்டால் 2500 கோடி ரூபாய் திட்டம் நமக்குக் கிடைத்திருக்குமா?

அரசுத் திட்டம் நிறைவேறக் கூடிய, கட்டத்தில் இன்னும் சில மாதங்களில் முடியப் போகிறது. 2008-ஆம் ஆண்டில் கப்பல் விடுவோம் என்று சொல்லி விட்டார் நம்முடைய பாலு அவர்கள்.

இராமன் மூடநம்பிக்கையை தகர்த்தெறிய வேண்டாமா?

வந்தது ஆபத்து! அதுதான் மிக முக்கியம். 2009-லே, தேர்தல் வருகிறது என்று சொன்னவுடனே அதுவரையிலே ஆடம்ஸ் பிரிட்ஜ் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இராமன் பாலம் என்று சொன்னார்கள்.

இராமன் என்ற பெயரால் மூடநம்பிக்கையை வைத்து இந்தத் திட்டத்தை அழிக்க நினைத்தால், நண்பர்களே நாம் ஒவ்வொரு வரும் போர்க் களமாகப் புறப்பட்டு இந்த மூடநம்பிக்கையைத் தகர்க்க வேண்டாமா? (பலத்த கைதட்டல்).
நீதித்துறைக்கு இதுபற்றி வழக்கு சென்றவுடனே அரசியல் தரகராக இருக்கக் கூடிய ஒரு அனாமதேயப் பார்ப்பனர் - ஆகா! இது மதநம்பிக்கை - இது புராதன நம்பிக்கை. நம்பிக்கை, நம்பிக்கை என்று சொன்னால் என்ன அர்த்தம்?

- (தொடரும்)
--------------------------- "விடுதலை" -12-10-2008


நெல்லை - திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு
மாணவர் சமுதாயம் மக்களுக்குத் தொண்டாற்ற முன் வர வேண்டும்
தமிழர் தலைவர் மாணவர் சமுதாயத்திற்கு அழைப்பு!


நெல்லை அக்.13- மாணவர் சமுதாயம் மக்களுக்குத் தொண்டாற்ற முன் வர வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

நெல்லையில் 4-10-2008 அன்று காலையில் நடைபெற்ற மாணவரணி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மூன்று தலைமுறைக்கு முன்னரே

நாளைக்கு பக்கத்து வீட்டுக்காரர் வந்து இந்த சங்கீத சபா எங்களது. எங்கள் தாத்தா கனவில் வந்து சொன்னார் மூன்று தலைமுறைக்கு முன்னாலே எங்கள் வீடுதான் அது. ஆகவே இது எங்களுடைய சொத்து நாங்கள் குடியேறுகிறோம் என்று சொன்னால் அனுமதிப்பார்களா? அதுமாதிரி நம்பிக்கை. என்ன நம்பிக்கை? சேது சமுத்திர திட்டத்திற்கு வாஜ்பேயி தலைமையிலே அரசு இருந்தபொழுது அமைக்கப்பட்டக் குழுக்கள் ஆய்வு செய்துதான் ஆறாவது வழித்தடம் என்பதே வந்தது.

மாலை நிகழ்ச்சியிலே இதைப்பற்றி நான் விரிவாகப் பேசுகின் றேன். ஆறாவது வழித்தடம் என்பதுதான் சாத்தியமானது. அதுதான் சுலபமானது. அதுதான் எளிமையானது.

அறிவியல் மனப்பான்மையைத் தூக்கி எறிந்து விட்டு

இவ்வளவையும் சொன்னபிற்பாடு நீதிமன்றத்தில் உட்கார்ந் திருக்கின்ற நீதிபதிகள் அரசியல் சட்டத்தில் உள்ள அறிவியல் மனப்பான்மையைத் தூக்கி எறிந்துவிட்டு, அதைப்பற்றி எதுவுமே கவலைப்படாமல் சொல்கிறார்கள். நீங்கள் மக்கள் நம்பிக்கையைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். வேறு வழி ஏதா வது இருந்தால் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். என்று.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து என்று அய்ந்து வழித் தடங்களையும் ஆராய்ந்து முடிவு செய்தது யார்? பா.ஜ.க. ஆட்சி - தேசிய ஜனநாயக முன்னணி ஆதாரத்தோடு சொல்கிறோம் நாம்.

கையெழுத்து போட்ட அமைச்சர்கள் யார்?

சேது சமுத்திரத் திட்டத்திற்கு கையெழுத்துப் போட்ட அமைச்சர்கள் யார்? பி.ஜே.பி. அமைச்சர்கள். இவ்வளவும் இருந்து இன்றைக்கு செயல்படுகின்ற நிலையில் - இன்றைக்கு ராமரைக் கொண்டுவந்து குறுக்கே போடுகிறார்கள் என்று சொன்னால். அதற்கு நீதிமன்றங்கள் ஆதரவு காட்டலாமா?

என்ன சொல்லவேண்டும்? அரசியல் சட்டத்தில் உள்ள அறி வியல் மனப்பான்மையை எடுத்துச்சொல்லி - இராமன் பாலம் என்பதெல்லாம் அறிவியல் சிந்தனை அல்ல. அறிவியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்று சொல்ல வேண்டும். சுற்றுச்சூழல் நிபுணர்கள் சொல்லியிருக்கின்றார்கள். எல்லோரும் சொல்லியிருக்கின்றார்கள்.

மூடநம்பிக்கையை முறியடியுங்கள்

அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீதிபதிகள் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் அதன் அடிப்படை என்ன? ஆகவே, தயவு செய்து நோய்நாடி நோய் முதல் நாட வேண்டும். திராவிட மாணவர்களே உங்களுடைய வேலை - நாடெங்கும் சுற்றி சுற்றித் தேனீக்கள் போல இந்த மூடநம்பிக்கைகளை முறியடிக்கக் கூடிய பிரச்சாரத்தை செய்யக்கூடிய அற்புதமான பணிக்கு நீங்கள் உங்களை ஒப்படையுங்கள். அந்தப் பணிக்கு நீங்கள் ஆளாக வேண்டும். நீங்கள் படித்துவிட்டு கைநிறையச் சம்பளம் வாங்குகின்றீர்கள். வேலை வாய்ப்பு உங்களுக்கு வருகிறது. 30 லட்சம் பேருக்கு அடுத்து வேலை வாய்ப்பு தயாராக இருக்கிறது.
இதற்கு முன்பு வேலை வாய்ப்பு கதவு திறக்கப்படவில்லை

இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் வேலை வாய்ப்புக் கதவே திறக்கப்படவில்லை. இவையெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும் ஒரு கேள்வியை நீங்கள் மறந்துவிடாதீர்கள். உங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிடா தீர்கள் (கைதட்டல்). அவர்கள் உங்களிடமிருந்து பணத்தை எதிர்பார்க்கவில்லை. உங்களிடமிருந்து பாசத்தை எதிர் பார்க் கிறார்கள். அன்பை எதிர் பார்க்கிறார்கள் - மரியாதையை எதிர் பார்க்கிறார்கள்.

பிள்ளைகளின் உள்ளம் முதியோர் இல்லமாக

உலக முதியோர் நாள் என்றால் எத்தனை புதிய முதியோர் இல்லம் திறப்பது என்பதா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு பள்ளிக்கூடத்தை திறந்தால் - பல சிறைச் சாலைகளை மூடுவதுபோன்றதாகும். முதியோர் இல்லங்களுக்கு வேலையில்லாத அளவிற்கு பிள்ளைகளினுடைய உள்ளங்கள் எல்லாம் முதியோருக்கு இல்லங்களாக இருக்கவேண்டுமே தவிர தனியே இல்லங்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை (பலத்த கைதட்டல்). அந்த உணர்வுகளை நீங்கள் நன்றியுணர்ச்சியோடு பெறவேண்டும். இரண்டாவது உங்களுடைய பிள்ளைகள் பெற்றோருக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயம் உங்களைப் படிக்க வைத்திருக்கிறது.

இந்த சமுதாயம் வாழ வைத்திருக்கிறது இந்த சமுதாயம் உங்களை வாழ வைத்திருக்கிறது. இந்த சமுதாயம் உங்களை கம்ப்யூட்டர் எஞ்சினியராக ஆக்கியிருக் கின்றது. இந்த சமுதாயம் உங்களை வழக்கறிஞர்களாக ஆக்கியிருக்கின்றது. இந்த சமுதாயம் உங்களை டாக்டர்களாக ஆக்கியிருக்கிறது. இந்த சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? எப்படி அந்தக் கடனை திருப்பி அடைப்பீர்கள்?

சமுதாயத்திற்கு தொண்டு செய்ய வாருங்கள்

இந்த சமுதாயத்தை ஒளியூட்டக் கூடிய வகையிலே சுயமரி யாதை வாழ்வு சுக வாழ்வு என்று ஒளியூட்டக் கூடிய வகையிலே நீங்கள் சமுதாயத்திற்கு தொண்டு செய்ய வாருங்கள். உங்களு டைய நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். தொலைக்காட்சிக்கு முன்னாலே அமர்ந்து உங்களுடைய நேரத்தைத் தொலைக் காதீர்கள். மற்ற மற்ற போதைகளுக்கு ஆளாகாதீர்கள். மற்ற போதைகளைவிட ஆபத்தான இன்னும் பல போதைகள் உண்டு.

உடல் நலம் - உள்ள நலம் முக்கியம்

ஆனால், அந்தப் போதைகளுக்கெல்லாம் மாற்றுப் பாதை ஈரோட்டுப் பாதை என்பதை நீங்கள் எல்லோரும் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒவ்வொரு இளைஞரும் என்னுடைய நேரத்தை, என்னுடைய ஓய்வை நான் தெளிவாகப் பயன்படுத் துவேன். எனக்கு உடல்நலம் மிக முக்கியம்; உள்ள நலம் அதை விட முக்கியம். உடலும், உள்ளமும் நலந்தானா? என்ற கேள்வியை நீங்கள் கேட்கின்ற நேரத்தில் அந்த உள்ளம் பகுத்தறிவு உள்ளமாக இருக்கவேண்டும். அந்த உள்ளம் பகுத்து ஆராயக் கூடிய உள்ளமாக இருக்கவேண்டும். மனித நேயம் பொங்கக் கூடிய உள்ளமாக இருக்கவேண்டும். அந்த உள்ளம் மிகச் சிறந்த புதிய உள்ளத்தை உருவாக்கக் கூடிய உள்ளமாக இருக்க வேண்டும். அந்த உள்ளம் பாலியல் அநீதிகளுக்கு இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு எல்லோரும் ஒன்று என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்பை உருவாக்குங்கள்.
நம்முடைய சகோதரிகளை நினைத்தால் பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று மாநாடு போடுவதற்கு முன்னாலே நம்முடைய சகோதரிகளுக்கு நான் சொன்னேன் - பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேசும்பொழுதுகூட, ஒரு ஒரு கேள்வியைத் தான் அவர்களுடைய சிந்தனைக்கு வைத்தேன்.

பிறக்கக்கூட உரிமையில்லை

அருமைச் சகோதரிகளே, நீங்கள் உங்களுடைய உரிமை களைக் கோருவதற்கு முன்னால் சொத்துரிமை, படிப்புரிமை என்று இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். உங்களுக்குப் பிறக்கக்கூடிய உரிமை இருக்கிறதா? இந்த நாட்டில். அதை எண்ணிப் பாருங்கள் என்று கேட்டோம். பிறக்கக்கூடிய உரிமை பெண்களுக்கு இல்லையே. அவர்கள் கருவிலே இருக்கும்பொழுது அழிக்கக் கூடிய கொடுமை இந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டில் இருக்கிறது? அருள்கூர்ந்து மனித நேய சிந்தனையோடு எண்ணிப் பாருங்கள். எனவே பெண்களுக்கு - பிறப்பதற்கே போராட்டம் . கருவறைக்குள்ளேயே போராட்டம். கருவறைக்குள் நுழைவதற்கு நாம் நடத்திக் கொண்டிருந்தோம் - போராட்டம். ஆனால், பெண்கள் இயல்பாகவே நடத்திக் கொண்டிருக்கின்ற போராட்டம். எனவே இப்படிப்பட்ட சமுதாயச் சூழல், சமுதாயச் சிக்கல்களும் இருக்கும்பொழுது, அந்தச் சிக்கல்களை எல்லாம் மாற்றக்கூடிய அற்புதமான நாற்றங்கால் பயிர்கள்தான் திராவிடர் மாணவர் கழகத்தைச் சார்ந்த நீங்கள். எனவே இந்த நாற்றங்காலில் நல்ல பயிர்கள் உருவாக்கப்படவேண்டும். நல்ல பயிர்களை அழிப்பதற்கு சில நேரங்களில் விஷக்கிருமிகள் வரும்.
ஆனால், அந்தக் கிருமிகளை அழிப்பது எப்படி? பயிர்களைப் பாதுகாப்பது எப்படி? என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆகவே மாணவ கண்மணிகளே சிறப்பான வகையிலே ஒழுக்கத்தோடு உங்களுடைய படிப்பைத் தொடருங்கள்.
ஒழுக்கமிலார் ஏதுமிருந்து மிலார்!
என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.
ஒழுக்கம் என்று சொல்லும்பொழுது - பொது ஒழுக்கம் என்பது மிக முக்கியம். சமுதாயச் சொத்து மிக முக்கியம்.

பெரியார் போராட்டத்தில் பொதுச் சொத்து நாசம் உண்டா?

இதுவரையில் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய போராட்டத்திலே எங்கேயாவது பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்பட்டதுண்டா? பொதுமக்களுக்கு இடையூறு உண்டா? அமைதிக்கு ஏதாவது பங்கம் உண்டா? காரணம் அப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாட்டை நாம் நடத்திக்காட்டுகிறோம். பல இடங்களிலே அனுமார் கோயில்களை கட்டுகிறார்கள். நேரே உள்ளேபோய் அவைகளைத் தூக்கி எறிவதற்கு எவ்வளவு நாளாகும்? எவ்வளவு நேரமாகும்? (பலத்த கைதட்டல்).
நான் சொன்னால் நம்முடைய தோழர்கள் ஒரே நாளில் அத்தனையையும் செய்து முடிக்கக் கூடிய அளவிற்கு இளைஞர்கள் தயாராக இருப்பார்கள்! (தயார் தயார் - இளைஞர்களின் ஆவேசக் குரல்). நண்பர்களே, ஆனால், இப்பொழுது அதை செய்யச் சொல்லமாட்டோம். காரணம் என்னவென்றால் இந்த இயக்கம் கட்டுப்பாடு மிகுந்த சட்டம், ஒழுங்கை மதிக்கின்ற ஓர் இயக்கம் (கைதட்டல்).

பிள்ளையாரை உடைத்தபொழுதுகூட

பிள்ளையாரை உடை என்று சொன்னநேரத்தில் கூட தந்தை பெரியார் தனது சொந்தக் காசில் களிமண் பிள்ளையாரை வாங்கி உடைத்தார்களே தவிர, முன்னாலே இருக்கின்ற ஆற்றங்கரைப் பிள்ளையாரைக் கூட நாங்கள் கை வைத்ததில்லை (பலத்த கைதட்டல்). காரணம் என்ன? பொதுச்சொத்து . அது கூட என்ன? ஒரு டெமான்ஸ்ட்ரேசன் - அவ்வளவுதான்.

இதில் ஒன்றும் சக்தி இல்லை என்று உடைத்துக் காட்டி னோம். பிள்ளையாரை உடைத்த பின்பு அய்யா, அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தாரே. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் கருத்து இடம் பெற்றிருக்கின்றது.

கடவுள் இல்லை என்பவன் ரொம்ப காலத்திற்கு வாழ்கிறான்

கடவுள் இல்லை என்று சொல்கிறவன்தான் ரொம்ப காலத்திற்கு வாழ்கிறான். கடவுள் உண்டு என்று சொல்லுகின்ற ஆத்திகன் ரொம்ப சீக்கிரம் போய் விடுகின்றான் என்று எழுதியிருக்கின்றார்கள். ஆனால் நம்மூரில் இவன் எல்லாக் கடவுள்களையும் பிரார்த்திப்பான். ஆனால், உண்மையில் கடவுள் நம்பிக்கைக்காரன் யாரும் கடவுளை நம்புவதில்லை. ஆனால், அது ஒரு பழக்க வழக்கம். பொடி போடுகிற மாதிரி - சிகரெட் பிடிக்கின்ற மாதிரி - தண்ணி போடுகின்ற மாதிரி. அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் கிடையாது. பல நேரங்களில் செத்துப்போனவர்களைப்பற்றி விளம்பரங் களில் பார்க்கின்றோம். அதுவும் செத்துப்போனவர் பெரிய மனிதராக இருந்தால் ஒரு பக்க விளம்பரம் வரும். பெரிய படத்தைப் போட்டு, இன்னார் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம் (சிரிப்பு).

இறைவனடி சேர்வது வருத்தத்திற்குரியது?

இறைவனடி சேர்வதை எவனாவது வருத்தத்தோடு தெரிவிக் கிறேன் என்று சொன்னால் அப்படியானால், தத்துவ ரீதியாக அதற்கு என்ன அர்த் தம்? சேரக்கூடாத ஒரு இடம் என்றால் அது இறைவனடி என்பதுதான். அப்படியானால், உண்மையாக கடவுளை அவன் நம்பியிருக்கின்றானா? (கைதட்டல்).

இறைவனடி சேர்வது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். அது என்ன, தேவர்களுக்கு அடியாள் வீடா? இல்லை. அது என்ன சூதாட்ட மடமா? (பலத்த கைதட்டல் - சிரிப்பு). இறைவனடி சேர்வதை ஏன் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறாய்? மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள வேண்டியது தானே. அதற்கு என்ன அர்த்தம்? கடவுளை நம்பவில்லை என்று அர்த்தம்? சும்மா ஒரு ஹேபிட் மாதிரி போடுகிறார்கள். இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடுகிறார்கள்.
மகிழ்ச்சியுடன் தெரிவிக்க வேண்டியதுதானே..!

இறைவனடி சேர்ந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றல்லவா போடவேண்டும். இப்படி போட்டால் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு ஆஸ்பத்திரி , இவ்வளவு மெடிக்கல் காலேஜ், இவ்வளவு டாக்டர்கள் இருப்பது இறைவனடி சேரக்கூடாது என்பதற்குத்தானே. நன்றாக நினைத் துப் பார்க்க வேண்டும். ஆகவே மூடநம்பிக்கை என்பதிருக்கிறதே அது பலூன் மாதிரி தோன்றும்.

திராவிடர் கழகப் பிரச்சாரம் என்பது

ஆனால், திராவிடர் கழகம் செய்கின்ற பகுத்தறிவு பிரச்சாரம் இருக்கிறதே, அது குண்டூசி மாதிரி குத்தும். பலூன் தானாகவே காணாமல் போய்விடும். ஆகவே நண்பர்களே, மாணவச் செல்வங்களே, உங்களை இந்த நேரத்திலே அன்போடு பார்க்கும் பொழுது மகிழ்ச்சி அடைகின்றோம். பெருமையடைகின்றோம்.

பெற்றோர்களுக்கு காட்ட வேண்டிய உங்கள் கடமை என்ன? மீண்டும் சொல்லுகின்றேன். சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய உங்கள் கடமை என்ன? இந்த இயக்கத்திற்கு உங்கள் கடமை என்ன? அதேபோல இருபாலரும் ஒருவருக்கொருவர் மனித நேயத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

இந்த தீர்மானங்கள் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள் என்பதற்கு அடையாளமாக பலத்த கரவொலியை மீண்டும் நீங்கள் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் (பலத்த கரவொலி) கடைசியாக ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விழைகின்றேன்.

அண்ணா சொன்ன செய்தி

அறிஞர் அண்ணா அவர்கள், கல்லூரி மாணவர்கள் பகுத் தறிவு இயக்கத்திற்கு எவ்வகையில் பணியாற்ற முடியும்? என்று ஒரு கேள்வியைப் போட்டு, பதில் எழுதினார்கள். 1947- திராவிட நாடு ஏட்டிலே. நூற்றாண்டு விழா நாயகர் அறிஞர் அண்ணா எழுதினார்கள்.
அதிலே அண்ணா அவர்கள் சொன்ன கருத்தை உங்களுக்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். கட்சி மாச்சாரியங்களை மறந்து பகுத்தறிவு மலரவேண்டும் என்ற நோக்கத்திற்காக கூடி, நமது நாட்டு மக்களின் வாழ்க்கையிலே ஊறிப்போய் பழைய பயனற்ற கேடு தரும் எண்ணங்களை அகற்றும் வகையில் பேசுவது, பாடுபடுவது, ஓவியங்கள் தீட்டுவது, பொருட்காட்சிகள் நடத்துவது, விஞ்ஞானிகள் . வீரர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்து கதை வடிவில் புகுத்துவது, உலகில் எந்தெந்த வகையான மூடநம்பிக்கைகள் இருந்துவந்தன, அவைகள் எப்படி எல்லாம் அகற்றப்பட்டன என்பனவற்றை விளக்குவது இவ்விதமான பணியாற்றலால் பலன் உண்டு. கூடுமான வரையில் நடைமுறை அரசியல் பூசல்களில் இருந்து ஒதுங்கி இருந்து நடத்துவதே நல்லது. பெரிய நகரங்களில் நடத்தப்படுவதைவிட கிராமங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெறவேண்டும். எழுச்சியூட்டும் சொற்பொழிவு விழாக் களாக மட்டுமே அமையாமல் மக்கள் மனதிலே பதியக்கூடிய விதமான உரையாடல்களாக அமைவது மிக முக்கியம் என்று அண்ணா அவர்கள் வழிகாட்டியிருக்கின்றார்கள்.

பத்து - பதினைந்து நிமிடம் சொல்லுங்கள்

அண்ணா நூற்றாண்டு விழாவிலே மாணவச் செல்வங்கள் இதுபோன்ற உரையாடல்களை நடத்தி எங்களுடைய கூட்டங் களுக்கு முன்னாலே பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு முன்னாலே இந்த உரையாடல்கள், வீதி நாடகங்களைப் போல ஒரு பத்து நிமிடம், அரை மணிநேரம், முப்பது நிமிடம் இதுபோன்ற உரையாடல்கள், பிரச்சார முறைகள் கிராமங் களிலும் நடத்தப்படும் என்பதை எடுத்துச் சொல்லி, கடைசியாக ஒரு வேண்டுகோளாக வைத்து என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

தோழர்களே அடுத்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடைபெறவிருக்கிறது. மூடநம்பிக்கை ஒழிப்பே கூடாது என்று சொன்னால், என்ன அர்த்தம்? மூடநம்பிக்கையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளக்கூடிய சக்திகள் இருக்கிறார்கள் என்பது அர்த்தம்.

அடிக்க அடிக்க எழும் பந்துபோல

அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அடிக்க அடிக்கத்தான் பந்து எழும்புமே தவிர, அடக்க அடக்கத்தான் இந்தக் கொள்கை வேகமாகப் பரவுமே தவிர, வேறு கிடையாது. தோழர்களுக்கு கட்டுப்பாடாக ஒன்றைச் சொல்ல விழைகின் றேன். ஊர்வலத்தில் செல்லுகின்ற தோழர்கள் அமைதியாகச் செல்லவேண்டும். எந்தவிதமான ஒரு சிறு சலசலப்புக்கோ, சங்கடத்திற்கோ இடம் கொடுக்காமல் இந்த மாணவர்கள் எவ்வளவு ஒழுங் கானவர்கள், ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடு மிகுந்தவர்கள் என்பதை நீங்கள் காட்டியாகவேண்டிய பொறுப்பு இந்த பேரணி மூலம் உள்ளது. இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-----------------"விடுதலை" - 13-10-2008

0 comments: