Search This Blog

9.10.08

இன்னமும் பெரியாருடைய கருத்துகள் ஏன் தேவை?




கல்விக் கடவுள் சரசுவதி இருக்கிற நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் அதிகம் இலட்சுமி கடவுளே இல்லாத துபாய் நாட்டில் செல்வச் செழிப்போ அதிகம்




காரமடை, அக். 9- சரசுவதி கடவுள் இருக்கிற நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் அதிகம். செல்வச் செழிப்புள்ள துபாய் நாட்டில் இலட்சுமி கடவுள் இல்லையே என்று தர்க்க ரீதியாகக் கேள்வி எழுப்பி விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.


திராவிடர் கழகம் என்பதிருக்கின்றதே அது ஒரு பொது அமைப்பு. ஒரு பொது பாதுகாப்பு அமைப்பு. இந்த இனத்திற்கு என்று இருக்கக்கூடிய ஒரு சிறப்பான பாதுகாப்பு அரண்போன்ற ஒரு அமைப்பாகும். எண்ணிப் பாருங்கள் அருமைத் தோழர் களே, இன்றைக்கு எவ்வளவு வளர்ச்சி நாட்டிலே ஏற்பட்டிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் கல்லூரிகள், எங்கு பார்த்தாலும் உயர்நிலைப் பள்ளிகள், எங்கு பார்த்தாலும் மேல்நிலைப் பள்ளிகள், எங்கு பார்த்தாலும் மிகப் பெரிய அளவுக்கு தொழிற்கல்லூரிகள், எஞ்சினியரிங் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் - இவைகள் எல்லாம் ஏராளமாக இருக்கின்றன.


தந்தை பெரியார் பிறந்தநாள்

தந்தை பெரியார் பிறந்திருப்பதற்கு முன்னாலே அய்யா அவர்களுடைய 130-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவை நாம் செப். 17 ஆம் தேதியிலிருந்து நாடு தழுவிய அளவிலே உலகத்தின் பரந்துபட்ட பல்வேறு பூபாகங்களிலும், கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மக்கள் கொண்டாடுகின்றார்கள். அனைவரும் பெரியார் எங்களுக்கு உரியார் என்று கொண் டாடக்கூடிய அளவிலே இருக்கிறார்கள்.

பெரியார் கருத்துகள் உலக அளவில் அப்படிப்பட்ட நிலையிலே இன்றைக்குப் பெரியார் அவர்களுடைய கருத்துகள் உலகளாவிய நிலையிலே பரவிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்திலே இன்னமும் பெரியாருடைய கருத்துகள் ஏன் தேவை? என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். நம்முடைய தாத்தாவுக்கு ஒரு காலத்திலே படிக்கத் தெரியாது. நம்முடைய பாட்டனுக்குப் படிக்கத் தெரியாது. பாட்டிக்கு கையெழுத்துப் போடத் தெரியாது.

இன்றைக்கு கிராமத்துப் பிள்ளைகள் - அமெரிக்காவில்

இன்றைக்குப் பேத்தி எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால், ஒரு சாதாரண கிராமத்துப் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று சொன்னால், நான் அமெரிக்காவிலே கம்ப்யூட்டர் எஞ்சினியராக இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவிலே பணியாற்றுகின்றேன். சிங்கப்பூரிலே இருக்கின்றேன். லண்டனிலே பணியாற்றுகின்றேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது சரசுவதி காடாட்சத்தினாலா? அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். பக்தர்கள் சிந்திக்கவேண்டும். சரசுவதி நீண்ட நாட்களாக கல்விக் கடவுளாகவே நம்முடைய நாட்டில் காட்டப்பட்டிருக்கின்றார். சரசுவதி பூஜை கொண்டாடாத ஆண்டே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடி கொண்டிருக்கின்றார்கள். இன் னும் கேட்டால் நமது பாட்டிக்கே சரசுவதி என்றுதான் பெயர். ஆனால், சரசுவதி பாட்டிக்கு கைநாட்டுப் போடத்தான் தெரியுமே தவிர, கையெழுத்து போடக் கூடத் தெரியாது. (கைதட்டல்).

சரசுவதி - கம்ப்யூட்டர் எஞ்சினியர்

ஆனால் சரசுவதி பேத்தி இன்றைக்கும் கம்ப்யூட்டர் எஞ்சினியராக இருக்கின்றார். இன்றைக்கு டாக்டராக இருக்கின்றார். இன்றைக்கு மிகப் பெரிய அளவுக்கு வசதியாக இருக்கின்றார். சிலபேர் லட்சுமி என்று பெயர் வைத்திருப்பான். அடுத்த வேளை சோற்றுக்கு வழி இருக்காது. பல நாள் பட்டினி. லட்சுமி யார் என்றால் தென்னாட்டிற்கே கடவுள் என்பான். அதுவும் அஷ்டலட்சுமி, அய்சுவரிய லட்சுமி, லட்சுமியில் 1008 லட்சுமி வைத்திருப்பான். வெறும் இலட்சுமியைக்கூட வைத்திருக்கமாட்டான். ஆனால், நம்மாள் என்ன பண்ணுகின்றான் என்றால், துபாய்க்கு போய் சம்பாதித்துக் கொண்டு வருகின்றான்.

துபாயில் யாராவது லட்சுமி என்று பெயர் வைத்தால் முக்காடு போட்டு அனுப்பிவிடுவான். இன்றைக்கு வெளிநாட்டிற்குச் சென்று நமது கிராமத்துப் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

கலைஞரின் பொற்கால ஆட்சியில்

இப்பொழுது நடக்கின்ற கலைஞர் அவர்களுடைய ஆட்சி பொற்கால ஆட்சி (கைதட்டல்). அய்ந்தாவது முறையாக அவர் முதலமைச்சராக ஆகியிருக்கின்றார். எல்லோருக்கும் கல்வி. மாணவர்களுக்கெல்லாம் பஸ் பாஸ் இலவசம். பழைய ஆட்சி ஒரு திட்டத்தை பண்ணினால் சென்ற ஆட்சி அந்தத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டுவிடுவார்கள். ஆனால், கலைஞர் அவர் களுடைய ஆட்சியின் பெருந்தன்மை என்னவென்றால் சென்ற ஆட்சி செய்த திட்டத்தை இவர் நிறுத்தியதில்லை. தொடர்ந்து செய்திடச் செய்வார். இதற்கு முந்தைய ஆட்சியாக இருந்தாலும் அந்த அம்மையார் தொடங்கிய திட்டமாக இருந்தாலும் நல்ல திட்டம் என்று ஏதாவது இருந்தால் அதை நிறுத்தவேண்டிய அவசியமில்லை. அது தொடர்ந்து நடத்தலாம் என்று செய்வார்.

இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்திருந்தால்

சென்ற ஆட்சி மாணவச் செல்வங்களுக்கு சைக்கிள் கொடுத்தார்கள் என்பதற்காக கொடுத்த சைக்கிளை எல்லாம் அவர் திருப்பி வாங்கவில்லை. ஆனால், இந்நேரம் அந்த அம்மையார் ஆட்சிக்கு வந்திருந்தால் தி.மு.க. செய்த திட்டமா இது உடனே தூக்கி எறிந்துவிடுவார்கள். உழவர் சந்தையைப் பார்த்தீர்களேயானால், இப்பொழுதுதான் உழவர் சந்தையாக இருக்கிறது. அதற்கு முன்பு அதை மூடிவிட்டார்கள்.

அரசு என்பது ஒரு தொடர்ச்சி

அது ஏதோ தனிப்பட்ட ஒரு கலைஞருடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு செயல் என்று ஒரு குறுகிய மனப்பான்மை அவர்களுக்கு. ஆனால், அப்படி அல்ல, ஒரு அரசு என்பதிருக்கின்றதே, ஒரு அரசு திட்டம் போடுவார்கள். அவர்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இன்னொரு அரசு வரும். அந்த முதலமைச்சர் தொடங்கி வைப்பார் - வழமை. ஆனால் அதன் தொடர்ச்சி இருக்கும்.

அதுமாதிரி வரும்பொழுது, நண்பர்களே நல்ல திட்டம் என்று வரும்பொழுது, கலைஞர் அவர்கள் ஒன்றும் கைவிடுவதில்லை. இன்றைக்கு சைக்கிள் கொடுப்பது தொடர்ந்து நடக்கிறது.

தோகை மலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில்

காலையில்கூட நாங்கள் எங்களுடைய வேனில் வந்து, கொண்டிருந்தோம். தோகைமலை என்ற ஊர் வழியாக வந்தோம். திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் வந்து சேருகிற வழியில் தோகை மலை என்பது உள்பகுதி. சுற்றிலும் வயல்கள். கேள்விப்படாத ஒரு பட்டி. அங்கே பார்த்தால் ஒரு நல்ல அரசாங்கக் கட்டடம் - மேல்நிலைப்பள்ளியைப் பார்த்தோம். என்னுடைய வாழ்விணையரும் வந்து கொண்டிருக்கின்றார்கள். நான் உடனே காட்டினேன், பார்த்தாயா, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண் பிள்ளைகள் எல்லாம் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சில பிள்ளைகள் வயல் வெளிக்கு அருகில் பரிசலில் போகவேண்டும் என்பதற்காக புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நூற்றுக்கு ஏழு சதவிகிதம்தான் படித்திருந்தனர்

எங்கே ஒரு சாதாரண குக்கிராமத்திலே அந்த காலத்தில் நம்மாள் படித்தவனே கிடையாது. நூற்றுக்கு எவ்வளவு பேர் படித்திருப்பார்கள்? பெரியார் பிறப்பதற்கு முன்னாலே. பெரியார் பிறந்து நீதிக்கட்சி வந்து எல்லோரும் படிக்கவேண்டும் என்று சொல்லி பார்ப்பனர் அல்லாத நம்முடைய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று சொன்னபொழுது கூட நூற்றுக்கு ஏழு சதவிகிதம்தான் படித்திருந்தனர்.

திராவிடர் கழகம் என்ன செய்தது? என்று கேட்கின்றார்கள். பெரியார் என்ன செய்தார் என்று கேட்கின்றான். பெரியார் யார்? என்று கேட்கின்றான் இந்த திராவிட இயக்கம், பெரியாருடைய இயக்கம். இந்த காரியங்களை அறிவுப் பணிகளை எந்த அளவுக்கு செய்தது என்று சொன்னால், நூற்றுக்கு ஏழுபேர் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள். எம்.ஏ. படித்தவர்கள் அல்ல. பட்டதாரிகள் அல்ல. படித்தவர்களே நூற்றுக்கு ஏழே பேர்தான். பாவாடை என்று பெயர் இருக்கும். மணியார்டர் வரும். தட்டுத் தடுமாறி கையெழுத்துப் போடுவான். வன்னாவை விட்டு விட்டு போடுவான்.

நல்ல பெயர் என்றால் பிராமணனுக்கு

அந்த காலத்தில் இந்த மாதிரி பெயர்தான் இருக்கும். மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்திருப்பான். நல்லபெயர் பிராமணனுக்குத்தான் வைக்க வேண்டும். முகத்தில் பிறந்தவனுக்குத்தான் வைக்கவேண்டும். அந்த மனு தர்மம்தான் நம்மை ஆண்டு கொண்டிருந்தது ரொம்ப காலமாக.இந்த ஆட்சிகள் எல்லாம் வருவதற்கு முன்னாலே. அந்த நிலையிலே பாவாடை என்று பெயர் இருப்பதில் வான்னாவை விட்டுவிட்டுப் போட்டால் எப்படிப் படிப்பது? பாடை என்றுதான் படிக்கவேண்டும். நம்மாள் அந்த காலத்திலேயே பாடையில் போனான். தங்கவேல் என்று பெயர் இருந்தால் தகரவேல் என்று பெயரை எழுதுவான். இப்படி கையெழுத்தைக் கூட தட்டுத்தடுமாறி போடக்கூடிய நிலை..

இன்றைக்கு கையில் தொலைபேசி - அன்றைக்கு...

ஒரு மனிதன் இறந்துபோனால், உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். இப்பொழுது கையில் செல்பேசி வந்தாகிவிட்டது. காய்கறி விற்கிறவர்களிலிருந்து, குப்பை கூட்டுகிறவன் வரை எல்லோர் கையிலும் இப்பொழுது செல்போன் வந்தாகிவிட்டது.

தந்தை பெரியார் அவர்கள் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னது இன்றைக்கு உண்மையாகப் போய்விட்டது. அவர் இனிவரும் உலகம் என்ற நூலில் சொல்லியிருக்கின்றார். இனிமேல் வருங்காலத்தில், ஒவ்வொரு மனிதன் பையில், கையில் தொப்பியிலும் கம்பியில்லாத தொலைபேசி இருக்கும், செல்போன் இருக்கும் என்று பேசியுள்ளார்.

நான்குபேர் தனித்தனியாகப் பேசிக் கொண்டிருந்தால்


இப்பொது நான்கு பேர் ஓரிடத்தில் இருந்தால் நான்குபேர் தனித்தனியாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். இதுவே நாற்பது வருடத்திற்கு முன்னால் இருந்தால் நாம் என்ன நினைப்போம்? என்ன - ஆள் நன்றாகத்தானே இருந்தார். என்ன இப்படி ஆகிவிட்டாரே என்று நினைப்போம். அப்பேர்பட்ட நிலையில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருந்த காலம். தபால் கார்டு போடுவார்கள். ஒரு மூலையிலே இங்கோ, அல்லது கருப்பு மையோ தடவுவார்கள். அந்தக் காலத்தில் படிக்காதவர்கள் இருந்தகாலம். இது துக்ககரமான செய்தி என்பதற்காக மூலையில் இங்க் தடவி அனுப்புவது வழக்கம்.

அந்தக் காலத்தில் கிராமத்திற்கு தந்தியெல்லாம் கிடையாது. அதுமட்டுமல்ல, இவனுக்குப் படிக்கத் தெரியாது. வந்திருக்கின்ற தபாலை எடுத்துக் கொண்டு இரண்டு மூன்று மைலுக்கு அப்பால் சென்று பார்ப்பார். அங்கு ஒரு அய்யர் இருப்பார். அவர்களிடம் காட்டுவார்கள்.

மிட்டா, மிராசாக இருந்தாலும் எழுதப் படிக்கவே தெரியாது

நூறு வருடங்களுக்கு முன்னாலே, தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னாலே இருந்த நிலை - இந்த இயக்கம் தோன்றுவதற்கு முன்னாலே - இந்த தபாலை எடுத்துக்கொண்டு செல்வான். தபாலிலே இருக்கின்ற செய்தி அவனுக்குத் தெரியாது. அவன் பெரிய மிராஸ்தாரராக இருப்பான். இருந்தாலும் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் கார்டை எடுத்துக்கொண்டு போய் இன் னொரு கிராமத்தில் கொண்டு போய் கொடுத்துதான் படிக்கச் சொல்ல வேண்டும். படிக்கிற ஆளைத்தேடிக் கண்டு பிடிக்கவேண்டும்.

இரண்டு, மூன்று மைல்கள் நடந்து சென்று

இரண்டு, மூன்று மைல்கள் நடந்து படிக்கவேண்டும். தபால் கார்டு மூலையில் எதற்கு கருப்பைத் தடவினான் என்று சொன் னால், இது துக்ககரமான செய்தி, யாரோ செத்துப்போனார்கள் என்பதைக் காட்டுவதற்காகத்தான் இவன் கருப்பைத் தடவி தபால்கார்டை போடுவான். இந்த கார்டு போனவுடனே அய்யய்யோ என்று அலறி அடித்துக்கொண்டு வேகமாகப் போய் இரண்டு மைல்களுக்கு அப்பால் ஒரு அய்யர் வாத்தியாராக இருப்பார். அவரிடம் கொண்டுபோய் இதைக் கொடுத்து சாமி என்ன இருக்கிறது பாருங்கள் - கொஞ்சம் படித்துச் சொல்லுங்கள் என்று கொடுப்பான். அவர் சொல்லுவார், உமது பாட்டி செத்து போய்விட்டார் அல்லது உங்க மாமனார் செத்துப்போய் விட்டார். இந்த மாதிரி நிலைமை இருக்கிறது என்று சொல்லுவார்கள். அதனால்தான் நம்ம ஆள் என்ன செய்துவிட்டான் என்றால் நல்ல செய்தியாக இருந்தால் தபால் கார்டு மூலையில் மஞ்சளைத் தடவி அனுப்புவான். துக்ககரமான செய்தியாக இருந்தால் ஏதோ ஒரு கருப்பு சாயத்தை தபால்கார்டு மூலையில் தடவி அனுப்புவான் - நல்ல செய்தி, துக்ககரமான செய்தி என்பதை தெரிந்துகொள்வதற்காக.

படிப்புக்கு முக்கியத்துவம் தாருங்கள்

எதற்காக இதைச் சொல்லுகின்றோம் என்றால் அந்த காலத்தில் படிப்பறிவு இல்லாத காரணத்தால் எப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள் என்பதை எடுத்துச் சொல்வதற்காகத்தான் இந்த நிலை. எனவே நாம் படிப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும். நமது அறிவுவளர நாம் நிறைய படிக்கவேண்டும். அதற்காக்தான் இப்படிப்பட்ட படிப்பகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


---------------காரமடையில் செப்.29 அன்று நடைபெற்ற பெரியார் படிப்பகத் திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை யிலிருந்து -"விடுதலை" 9-10-2008

0 comments: