Search This Blog

1.4.13

அது என்ன கிராமக் கோயில் பூசாரிகளுக்காக மாநாடு?

சிறீரங்கம் - திராவிடர் எழுச்சி மாநாடு சீறி எழட்டும் கருஞ்சிறுத்தைப் பட்டாளம்!
தோழர்களே! வரும் ஏப்ரல் 4ஆம் தேதி சிறீரங்கத்திலே திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் எழுச்சி மாநாடு.

1989இல் டிசம்பர் 25 திருச்சியிலே திராவிடர் மாநாட்டை நடத்தினோம்.

அப்பொழுது அந்த மாநாட்டை கழகம் அப்பொழுது நடத்தியதற்குக் காரணம் - திருச்சியிலே தமிழ்நாடு பிராமணர் சங்கம் என்ற பெயரில் டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் 3ஆவது மாநில மாநாட்டை நடத்தியதுதான்.

வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நாம் திராவிடர் எழுச்சி மாநாடு நடத்துவதற்கான தேவை இம்மாதம் (3.3.2013) சிறீரங்கத்திலே பார்ப்பனர்கள் நடத்திய ஹிந்து மறுமலர்ச்சி மாநாடே!

1989இல் அவர்கள் நடத்திய மாநாடும் - பேரணியும் பொது மக்களை முகம் சுளிக்கச் செய்தது.

கழகத் தலைவரையும், குடும்பத்தோரையும் புழுத்த நாய் குறுக்கே போகாது என்கிற அளவுக்குக் கண்ணியமாக (?)க் கூச்சல் போட்டனர்.

அந்த மாநாட்டின் தீர்மானம் எல்லாம் இடஒதுக்கீட்டை குறி வைத்தே - அது கூடாது. குழி பறிக்கப்பட வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

அதே பார்ப்பனர்கள் - சென்னை அண்ணா நகரில் மாநாடு போட்டு (24, 25.12.2005) அரிவாளைத் தூக்கிக் காட்டி ஆர்ப்பரித்தாலும் எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்! - என்று விண்ணப்பம் போட்டனர்.

இடஒதுக்கீடே கூடாது - ஆழக்குழி வெட்டிப் புதைப்போம் என்று வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஆடிக் குதித்தவர்கள் - கடைசியில் பெரியார் வழியில் தான் ...... எங்களுக்கும் இடஒதுக்கீடு தேவை என்று பார்ப்பனர்களை விண்ணப்பம் போட வைத்தது திராவிடர் கழகமே!

(எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பன நடிகர் பெரியார் திடலுக்கே வந்து தமிழர் தலைவரைச் சந்தித்து எங்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்று வணக்கமாய்க் கேட்டுக் கொண்டதெல்லாம் உண்டு).

திருச்சியில் 1989 டிசம்பரில் நடைபெற்ற திராவிடர் மாநாடுக்கு ஜஸ்டிஸ் திரு பெ.வேணுகோபால் தலைமை வகித்தார். தமிழர் தலைவர் கி.வீரமணி, தில்லை வில்லாளன், எம்.கே.டி.சுப்பிரமணியம் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டு கணீர் கணீர் எனும் குரலால் கருத்து மணி ஒலித்தனர்.

இந்தக் கால கட்டத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு ஏன்?

சிறீரங்கத்திலே ஹிந்து மறுமலர்ச்சி என்ற பெயரிலே முதல் நாள் துறவிகள் மாநாடு என்றும், இரண்டாம் நாள் கிராம கோயில் பூசாரிகள் மாநாடு என்றும் நடைபெற்று இருக்கிறது. (மார்ச்சு 3, 4)

மாநாட்டின் கதாநாயகர் சு.சாமி. அவர்தான் இப்பொழுது அவாளுக்குக் கிடைத்த சூராதி சூரர் - வாய்ச்சவடால் பேர்வழி!

திராவிடர் இயக்கத் தலைவர்களையும், திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் பொறுக்கிகள் என்று சொல்லும் அளவுக்கு அது தினவெடுத்து அலைந்து கொண்டிருக்கிறது. (சென்னையில் அவர் ஆத்துக்கு நூற்றுக் கணக்காண காவல்துறையினர் காவலாம் - அடேயப்பா எவ்வளவுப் பெரிய வீரம்!).

அது என்ன கிராமக் கோயில் பூசாரிகளுக்காக மாநாடு? சூட்சுமம் புரியவில்லையா? சூத்திரர்கள் கிராமக் கோயில் பூசாரிகளாகவே கட்டுண்டு கிடக்க வேண்டும்; தப்பித் தவறிக்கூட நகரக் கோயில்களில் சிறீரங்கம் ரெங்கநாதர் கோயில், திருச்சி உச்சி பிள்ளையார் கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயில், மதுரை மீனாட்சி கோயில்களில் அர்ச்சகர்களாக வரும் ஆசை வந்து விடக் கூடாதல்லவா!

அதற்காகத்தான் கிராமக் கோயில்கள் பூசாரிகளின் மாநாடு!
இதற்குத் தலைவர் யார் என்றால் வேதாந்தம் அய்யங்காராம்.
நமது பரிதாபத்திற்குரிய பூசாரிகள் இன்னும் ஏமாளிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒன்று போதாதா? நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்துள்ளனர்.

அவாள் நடத்திய மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பற்றிய தீர்மானத்தைப் போடச் செய்வது தானே?

சட்டப்படி அமைக்கப்பட்ட இந்துக் கோயில் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்று பணிக்காக 206 தோழர்கள் காத்துக்கிடக்கிறார்களே!

சிறீரங்கத்திலே மாநாடு நடத்திய பார்ப்பனர்கள் தானே தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடைகளை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த யோக்கியதையில் இவர்கள் இந்துக்களை ஒன்று திரட்டுகிறார்களாம். 

அதே இந்துக்கள் தானே பயிற்சி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் அனைத்து இந்துக் கோயில்களிலும் அர்ச்சகர் ஆக என்ன தடை?

சிறீரங்கம் திராவிடர் எழுச்சி மாநாட்டிலே அரிமா குரல் கொடுப்போம். தோழர்களே வாரீர்! வாரீர்!!

ஆத்திகத் திராவிடர் ஆனாலும், நாத்திகத் திராவிடர் ஆனாலும், ஆளும், எதிர்க்கட்சி திராவிடர்களானாலும் கட்சி வேறுபாடு காணாமல் ஓரணியில் திரளுவோம் - வாரீர்! என்று அன்று நடைபெற்ற திராவிடர் மாநாட்டுக்கு அழைப்புக் கொடுத்தவர் நமது தமிழர் தலைவர் (விடுதலை, 14.12.1989).
இன்றறைக்கும் அதே அழைப்புதான் - மாற்றமில்லை.

சிறீரங்கம் பிராமணாள் போர்டு ஒழிக்கப்பட்ட அந்த வெற்றிப் பெருமிதத்தோடு திரளுங்கள் தோழர்களே, திரளுங்கள்!

மாநாட்டுக்குத் தமிழர் தலைவர் தலைமை தாங்கி சங்கநாதம் செய்ய இருக்கிறார். முக்கிய தீர்மானங்கள் உண்டு.

மாநாட்டு ஏற்பாடுகள் விரிவாக நடந்து கொண்டுள்ளன. கருஞ்சட்டைக் கடல் சங்கமித்து திராவிடர் இன உணர்வின் தோள்களைத் தட்டிப் புறப்படுக!

கருஞ்சிறுத்தைப் பட்டாளமே! கருத்துச் செறிவின் பெட்டகமே! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை

கடுங்கடலாய்த் தான் காட்சியளிக்க வேண்டும்

வருக! வருகவே!

--------------------------- மின்சாரம் - அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை” 31-3-2013

11 comments:

தமிழ் ஓவியா said...


கோயில் திருவிழாவா? - கோஷ்டிச்சண்டைகளின் கூடாரமா?மேலூர், மார்ச் 31- மேலூர் அருகே கோவில் திருவிழாவின் போது சோடா பாட்டில்கள், கற்களை வீசி தாக்கியதில் 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப் பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன.

மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் உள்ள தும்பைபட்டி கிராமத்தில் வீரகாளி யம்மன் கோவில் திருவிழா கடந்த 4 நாட்க ளாக நடந்து வந்தது. நேற்று திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அம்மன் சிலை ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது.

இந்தநிலையில் கக்கன் மணிமண்டபம் அருகே திடீரென ஒரு கும்பல் சோடா பாட் டில்கள் மற்றும் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டது. இதில் மற்றொரு தரப்பினர் காயமடைந்தனர். இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. அப்போது கொட்டாம் பட்டி, சிங்கம்புணரி ஆகிய ஊர்களில் இருந்து மேலூருக்கு செல்லும் 2 அரசு நகர பேருந்துகள் அங்கு வந்து நின்றன. அந்த பேருந்துகள் மீதும் கற்களை வீசி தாக்கினார்கள். இதில் அந்த பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

பேருந்து நிறுத்தம் அருகே இருந்த கடை களும் கற்கள் வீசி தாக்கப்பட்டன. கடை களில் இருந்த பொருட்கள் சூறையாடப் பட்டன. இதனால் அங்கு திடீர் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தர வின் பேரில் அதிரடிப்படை காவல்துறை யினர் வரவழைக்கப்பட்டு அங்கு குவிக்கப் பட்டனர்.

மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மணிரத்தினம், ஆய்வாளர் ஆவுடையப்பன் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் கல்வீசி தாக்கப்பட்டதில் காயமடைந்தவர்கள், தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அங்கு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 2 நாட் களுக்கு முன்பு தும்பைபட்டியில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதன் எதிரொலியாக தற்போது சோடா பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழ் ஓவியா said...


ராஜ்நாத்பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் இன்னும் அலுவலக நிர்வாகிகளின் பெயர்களை அறிவிக்கத் தயாராகவில்லை. அவ ரது ஜோதிடரின் கூற்றுப் படி, அதற்கு நேரம் இன்னும் வரவில்லை. மார்ச் 27 ஹோலிக்குப் பின்தான் கிரகங்கள் சரியான நிலைக்கு வரும் இந்த மாத ஆரம்பத்தில் சிங் பட்டியல் தயாரித்து மார்ச் 3-இல் நடந்த கட்சி யின் தேசிய செயல் மற் றும் கவுன்சில் கூட்டத் திற்குப்பின் அறிவித் திருக்க வேண்டும். ஆனால் கிரகங்கள் அப்பொழுது சரியாக இல்லையே
(இந்தியா டுடே 3.4.2012 பக்கம் 3)

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) இந்தியக் குடிமக்களின் அடிப் படைக் கடமை என்பது விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்க வேண் டும், சீர்திருத்த உணர்வு ஊட்டப்பட வேண்டும் என்பது - பாமர மக்களுக் குத் தேவை என்பதைவிட நம் நாட்டு அரசியல் தலைவர்களுக்கும், படித்த முட்டாள்களுக்கும் உடனடியாக அவசரக் கதியாகத் தேவைப்படு கிறது என்பது கல்லின் மேல் எழுத்தாகும்.

டெல்லியில் உள்ள பிஜேபி தலைமையகத் தின் வாசல்கூட சமீபத் தில் மாற்றி அமைக்கப்பட் டது - வாஸ்தின் அடிப் படையில்.

இவர்கள் கையில் ஆட்சி வந்தால் நாட்டு மக்களின் கதி என் னாவது? பிஜேபி மத்தி யில் ஆட்சியில் இருந்த போது சோதிடத்தைப் பல்கலைக் கழகங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சுற்ற றிக்கை விடவில்லையா?

தமிழ்நாட்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தை ஒரு பாடமாக வைக்க முனைந்தபோது, திரா விடர் கழகத்தின் போராட்ட நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

தேர்தல் ஆணைய ராக இருந்த டி.என். சேஷன் பதவி ஓய்வுக்குப் பின் குஜராத் காந்தி நகர் தொகுதியில் மக்கள வைத் தேர்தலில் போட்டி யிட்ட போது என்ன சொன்னார் நினைவிருக் கிறதா?

சோதிடத்தை நம்பி இந்தத் தேர்தலில் குதிக் கிறேன் என்றாரே - கட் டிய பணமாவது திரும்பி வந்ததா?
ஒவ்வொரு விஷயத்தி லும் சாஸ்திர சம்பிரதா யம், நேரம் காலம் பார்த்து நடப்பதாகக் கூறப்படும் காஞ்சி சங்கராச்சாரியா ரின் கதை என்ன? கொலைக் குற்றவாளி யாக அல்லவா நீதிமன்றத் தில் படிக்கட்டுகளை மிதித்துக் கொண்டு இருக்கிறார்.
பகுத்தறிவுதான் முதன்மையான தேவை என்பது இப்பொழுது புரிகிறதா?
- மயிலாடன் 31-3-2013

தமிழ் ஓவியா said...


தினமணிக்கு...


முட்டாள்களின் கீழ் உலகம் எனும் சிறப்புக் கட்டுரை இன்றைய தின மணியில் (1.4.2013 பக்கம் 6) வெளி வந்துள்ளது.

அதில் ஒன்று: அட முட்டாள் புருனோ! நீ சொல்வதைப் போல உலகம் உருண்டையா னது என்றால் சொர்க்கம் எங்கேயடா இருக்கும்? இது மத குருமார்கள் முன்னிலையில் ஒரு நீதிபதி கேட்ட கேள்வி. அதற்கு புருனோ சொன்ன பதில், அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?

இப்படி புருனோ கேள்வி கேட்டு கிறித்துவ மதக் குருமார்களை மடக்கியதை எல்லாம் சாங்கோ பாங்கமாக விவ ரித்து எழுதும் தினமணி அய்யர்வாள்களைக் கேட்க விரும்புவதெல் லாம் இதுதான்.

இரண்யாட்சதன் என் பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான்; பன்றி(வராக) அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு கடலில் குதித்துப் பூமியை மீட்டார் என்று தீபா வளிக்குக்கதை சொல் கிறீர்களே. அந்தத் தீபா வளிக்குச் சிறப்பு மல ரையும் வெளியிடுகிறீர் களே! தந்தை பெரியாரும், அவர் வழி வந்த கருஞ்சட் டைத் தொண்டர்களும் உங்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதுதானே!

அட முட்டாள்களே! உருண்டையான பூமியைப் பாயாக சுருட்டிக் கொண்டு போய் கடலில் எப்படி விழ முடியும்? என்று தானே அன்று முதல் இன்றுவரை கேட்டு வருகிறோம்.

இதுவரை யோக்கியமான முறையில் தினமணி தினமலர் துக்ளக், கல்கி, ஆனந்த விக டன் வகையறாக்களிட மிருந்து பதில் இல்லையே!

அதே நேரத்தில் கிறித் துவப் பாதிரியார்களை முட்டாள்கள் என்று சொல்லுவதற்கு பயன் படுமேயானால் பகுத்தறிவுவாதி போல வினா தொடுக்கத் தோள் தட்டி வருவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வைத்தியரே முதலில் உமது நோயைக் குணப் படுத்திக் கொள்க!

கருஞ்சட்டைக்காரர்களைப் பொறுத்தவரை உங்களை நோக்கியும் வினா எரிமலை வெடிக்கும்!

கிறித்தவர் உட்பட எந்த மத மூடத்தனத்தை நோக்கியும் எங்கள் வினாக்கள் முட்டி மோதிக் கிளம்பத்தான் செய்யும்.

- மயிலாடன்-1-4-2013

தமிழ் ஓவியா said...


டார்பிடோ ஏ.பி.ஜே எனும் சுயமரியாதைச் சுடரொளி

- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அமைப்புச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்

திராவிடர் மாணவர் கழகத்தை வளர்த்தவர்களில் டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனமும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. அக்கால விடுதலை ஏடுகளைப் எடுத்துப் பார்த்தால், திராவிடர் மாணவர் கழகப் பணிகளில் அவர் பொறுப் பேற்று நடத்தியது வியப்பளிக்கிறது. பிற்காலத்தில், நம் இயக்கத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த பொழுதும், அதன் பிறகு அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பொழுதும் அவர் தன் பகுத் தறிவுக் கொள்கையை - சுயமரியாதைக் கொள்கையை கை விடவே இல்லை. எந்த நிலையிலும் தானொரு பெரியார் தொண்டன் என்று வெளிப்படுத்திக் கொள்ளத் தவறவே யில்லை. ஒரு முறை நாடாளுமன்றத் தில் பேசும் பொழுது, நாங்கள் பெரியார் ஈ.வெ.ராவின் திராவிடர் இயக்கத்திலிருந்து வந்தவர்கள்- எனக் கூறினார்.

1970 - ஆம் ஆண்டு, அவர் தி.மு.க. வில் இருந்தாலும், அவரை அழைத்து அண்ணாமலை நகரில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் நடத்தினோம். அப்பொழுது அவர் பேசுகையில், மதியழகன், தமிழர் தலைவர் ஆசிரியர், புலவர் இமயவரம்பன், வி.வி. சுவாமிநாதன் போன்றோர் காலங்களில் திராவிடர் மாணவர் கழகம் செயல்பட்ட விதம் குறித்து விளக்கமாக உரையாற் றினார். அறிஞர் அண்ணா தன்னை தமிழக மேலவை உறுப்பினராக நியமனம் செய்ததைச் சொல்லிச் சொல்லி குழந்தை போல், மகிழ்வார். அது போலவே, 1977ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளு மன்ற மாநிலங்களவைக்கு தமிழக சட்ட மன்றத்தின் மூலம் சில உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கும் தேர்தலில், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமது பெயரைத் தான் முதலா வதாக எழுதினார். பிறகுதான் மற்றவர் களின் பெயரை எழுதினார் என்று குழந்தை போலச் சொல்லி மகிழ்வார்.

எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் தந்தை பெரியார் பெயரைக் குறிப்பிடாமல் பேசவே மாட்டார். தமது பெயரை முதல் பெயராக எழுதினார் எம்.ஜி.ஆர். என்ற, அதே டார்பிடோ அவரோடு கருத்து மாறுபாடு கொண்டு, முதல்வர் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும் ஆளானதுண்டு. முதல்வர் எம்.ஜி.ஆர் சிலரின் தவறான வழி காட்டுதலால், பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கு பொருளாதார அளவுகோல் (9000 ரூபாய் வருமானம் வந்தால், அவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகையைப் பெற முடியாது) என்ற தீர்மானம் கொண்டு வந்தபொழுது, டார்பிடோ ஏ.பி.ஜெ அவர்கள், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து, இந்தப் பொருளாதார அளவுகோல், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களின் கருத்துக்கு மாறானது என்று கூறி னார். அதற்கு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் நீங்க எல்லாம் தி.க.காரர்கள் இப்படித் தான் சொல்லுவீர்கள் என்று கடிந்து கொண்டார். தனக்கு நாடாளுமன்ற உறுப் பினர் பதவி கொடுத்தவரை, இன் றைக்கு யாராவது இதுபோல் எதிர்த்து பேச முடியுமா? டார்பிடோ பேசினார் என்றால், அவரைப் பேச வைத்தது தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையாகும்.

தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டராக வாழ்ந்ததால் தான், ஒரு முறை தமிழக மேலவை உறுப்பினர்; ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினர் என்று பதவி வகித்திருந்தாலும், ஒரு சொந்த வீடுகூட இல்லாமல், தன் வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார். அரசியல் பதவி பெயரால் குடும்பத் தேவைகளைக்கூட நிறை வேற்றிக் கொள்ளவில்லை. வாழ்க ஏ.பி.ஜே. புகழ்!

- (இன்று ஏ.பி.ஜே. நினைவு நாள் - 1987).

தமிழ் ஓவியா said...


உரிமையுண்டு


எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்து என்ற பெயரால் எதையும் எடுத்துச்சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது அயோக்கியத்தனம். - (விடுதலை, 2.4.1950)

தமிழ் ஓவியா said...


ஓ, முரளிதரனா!


அய்.பி.எல். கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட அனுமதியில்லை என்று முதல் அமைச்சர் அறிவித்தாலும் அறிவித்தார்; சில சர்ச்சைகளை எழுப்பியது.

இலங்கை அணியில் இடம் பெற்ற ஒரே தமிழர் முத்தையா முரளிதான். உலகளவில் சாதனைகளை நிகழ்த்திய சுழல்பந்து வீச்சாளர் அவர்.

இவ்வளவு திறமை இருந்தும். இலங்கை அணியின் துணைத் தலைவர் (கேப்டன்) பொறுப்பில்கூட நியமனம் செய்யப்பட்டதில்லை. காரணம் அவர் தமிழர்.

மாமனார் வீடு சென்னையில் இருந்தும் என்ன? உள் நாட்டிலேயே அங்கீகாரம் இல்லை - சென்னையில் மட்டும் உரிமை கொண்டாடி என்ன பயன்?

தமிழ் ஓவியா said...


மோடி முன்னிறுத்தப்படுவதன் முக்கிய நோக்கம்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சோதிடம் பார்த்து, நல்ல நாள், நல்ல நேரத்தைப் தேர்ந்தெடுத்து பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங் பிஜேபிக்கான நிருவாகிகளின் பட்டியலை வெளியிட்டு விட்டார்.

குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டு இருப்பது குறித்து கருத்துத் தானங்களை ஏடுகள் வாரி வழங்க ஆரம்பித்து விட்டன.

மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று அரசல் புரசலாகக் கருத்துக்களை பிஜேபி வெளியிட்டு வந்ததுண்டு, அதில் மாறுபட்ட கருத்துகளும்கூட பிஜேபிக்குள் இருக்கத்தான் செய்தன.

இந்த நிலையில் மோடி பிஜேபியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு நியமிக்கப்பட்டதால் கிட்டத் தட்ட அவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற இடத்துக்குக் காய் நகர்த்தப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு வீரராக தம்மை முன்னி றுத்திக் கொண்டு கடைசியில், தானே ஊழலில் சிக்கிக் கொண்ட யோகக் குரு என்ற அழைக் கப்பட்டு வரும் ராம்தேவ் சபாஷ்! மோடிதான் பிரதமருக்கான சரியான வேட்பாளர் என்று கை தட்டி வரவேற்றுள்ளார்.

இதற்கிடையில் விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான பீரவீண் தொகாடியா குஜராத்தை இந்து மாநிலமாக அறிவிப்போம்; வரும் 2015ஆம் ஆண்டுக்குள் குஜராத்தில் உள்ள 18 ஆயிரம் கிராமங்களிலும் வி.எச்.பி. கிளைகள் தொடங்கப்பட்டு, அதற்குப்பிறகு இந்து மாநிலமாக குஜராத்தை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் அயோத்தியில் ராமன் கோயிலை பிரம்மாண்ட மாக கட்ட வேண்டும்; வருங் காலத்தில் ஒட்டு மொத்த உலகமே இந்துக்களைப் பின்பற்றப் போகிறது என்று தனது நம்பிக்கைகளைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒன்று தெளிவாகி விட்டது. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மதச் சார்பின்மை என்பது ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்படும்; ஹிந்து ராஜ்ஜியம் உருவாக்கப்படும் என்பதை மறைமுகமாக பிரகடனப்படுத்தி விட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இன்னொரு பக்கத்தில் ஊழல் ஒழிப்பு வீரர் காந்திக்குல்லாய் அன்னா ஹசாரே காங்கிரசை எதிர்த்து ஊழல் ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இவற்றின்மூலம் அப்பட்டமான அடை யாளங்கள் அய்யப்பாட்டுகளுக்கு அப்பாற்பட்டு வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து விட்டன.

இதில் இன்னொரு தகவலும் முக்கியமானது - கவனிக்கத்தக்கது. பீகாரில் பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பது நிதிஷ்குமாரை முதல்வராகக் கொண்ட அய்க்கிய ஜனதா தளம்.

மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை உள்ள ஒருவர்தான் பிரதமருக்கான வேட் பாளராக வரவேண்டும் என்று நிதிஷ்குமார் தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறார்.
மோடி ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட இந்த நேரத்தில்கூட, அய்க்கிய ஜனதா தளத்தின் பீகார் மாநில செய்தித் தொடர்பாளர் நீரஜ்குமார் அழுத்தம் திருத்தமாக தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளார். மதச் சார்பற்றவரே பிரதமராக வேண்டும் என்று அழுத்திக் கூறி இருக்கிறார்.

மோடி பிரதமருக்கான வேட்பாளராக பிஜேபி யால் அறிவிக்கப்படும்பொழுது மதச் சார் பின்மையா? ஹிந்து ராஜ்யமா? என்ற கேள்வி இந்தியத் துணைக் கண்டத்தையே உலுக்கும்.

தந்தை பெரியார் அவர்களின் தத்துவத்தின் - கொள்கையின் அருமை அப்பொழுதுதான் புரியப் போகிறது - பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


சிந்திக்க முடிந்தது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
_ (விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 2: ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்


ஆட்டிசம் குழந்தைகள் பிறப்பு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரிப்பு

சென்னை, ஏப். 2- மனவளர்ச்சி... மூளை வளர்ச்சி குறைபாடுகளை போல, ஒரு விதமான வளர்ச்சி குறைபாட்டுடன் (ஆட்டிசம் பாதிப்பு) குழந்தைகள் பிறக்கின் றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தைகள் பிறப்பது அதி கரித்து கொண்டே வருகிறது.

ஆட்டிசம் பாதிப்பு குழந் தைகளுக்காக 2007ஆம் ஆண்டு அய்நா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ஆட்டிசம் பாதிப் புடன் குழந்தைகள் பிறப்பதற் கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதை தடுக்க ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் ஏப்ரல் 2ஆம் தேதியை ஆட்டிசம் விழிப் புணர்வு தினமாக அறிவித்தது.

இதுக்குறித்து ராயப்பேட்டை ஸ்கோப் மறுவாழ்வு மைய இயக்குநர் பா.சுகுமார், வி.கேன் ஆட்டிசம் பள்ளி இயக்குநர் கீதா ஆகியோர் கூறியதாவது:

ஆட்டிசம் ஒரு நோயல்ல; வளர்ச்சி குறைபாடுதான். இது பிறவியிலேயே வரக்கூடியது. குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதை, அதன் பழக்க வழக்கம், நடவடிக்கையை வைத்து ஒன்றரை வயதிலேயே கண்டுபிடிக்கலாம். உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டிசம் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் இந்தியாவிலும், தமிழகத்திலும் உள்ளது.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் மட்டும் 40, தமிழகம் முழுவதும் சுமார் 1,000 தனியார் கிளினிக்குகள் உள்ளன. இதேபோல தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆட்டி சம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளை நடத்துகின்ற னர். ஆனால், அரசு மருத்துவ மனைகளில் தனியாக ஆட்டிசம் பாதிப்பிற்கு சிகிச்சை பிரிவு என்பதே இல்லை. ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகளையும் நடத்தவில்லை.

அதனால், அரசு மருத்துவ மனைகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒரு சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். அந்த பிரிவில், ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட்டை நியமிக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு என்று சிறப்பு பள்ளிகளை அரசு நடத்த வேண்டும். ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த முடியாது. ஆனால் முறையாக பராம ரித்து மற்றும் சிகிச்சை அளித் தால், அந்த குழந்தைகள் 4 ஆண்டு களுக்குள் சாதாரண குழந்தைகள் போல மாற்றிவிடலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

ஆட்டிசம் பாதித்த குழந்தை களை மாற்றுத்திறனாளிகள் பட் டியலில் சேர்த்து சிறப்பு அந் தஸ்து கொடுக்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு அரசின் சலுகை கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருந்து, மாத் திரைகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் தேவையான மருந்து, மாத்திரை கள் சென்னையில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற மாவட்டங் களில் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

அறிகுறிகள் என்ன?

ஆட்டிசம் குழந்தைகள் துரு துருவென இருப்பார்கள். ஆனால், பேச மாட்டார்கள். காது நன்றாக கேட்கும். கூப்பிட்டால் திரும்பி பார்க்க மாட்டார்கள். மற்ற குழந்தைகளுடன் பழக மாட்டார் கள். தனியாகவே இருப்பார்கள். கோபம் அதிகமாக வரும்.

ஆட் டிசம் ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு கூர்மை அதிகம். அவர்களை முறையாக பராம ரித்து, சிகிச்சை அளித்தால் மிகப் பெரிய அளவில் சாதனை புரிவார் கள். உலக அளவில் சாதனை படைத்தவர்களில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திரளுவோம் தோழர்களே!


தமிழ் நாட்டு டெல்டா விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (23.3.2013 விடுதலை).

தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்தும் போதிய அளவு உரிய வகையில் போய்ச் சேரவில்லை என்ற உண்மையை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியும் இருந்தார். திராவிடர் கழகம், அதிமுக ஆட்சியின்மீது குறை சொல்வதற்காக இப்படி சொல்கிறது என்று குற்றம் கூறமுடியாது.

அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு)யின் சட்டப் பேரவை உறுப்பினரான தோழர் கே.பாலகிருஷ் ணன் அவர்கள் சட்டப் பேரவையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்தும் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக் கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குத்தகை விவசாயிகளின் குத்தகைப் பாக்கிகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவை யிலேயே பேசியுள்ளார் (தீக்கதிர், 26.3.2013 பக்கம் 5).

25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தில்கூட (எண் - 9) கீழ்க்கண்ட கருத்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவிரித் தண்ணீரை உரிய நேரத்தில் தேவையான அளவிற்கு ஜெயலலிதா பெற்றுத்தராத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பெருமளவிற்குப் பொய்த்துப் போய் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகும், ஜெயலலிதா அறிவித்த ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கூட இன்னும் விவசாயிகளுக்கு முழுமையாய்ப் போய்ச் சேரவில்லை என்று அந்தத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கழகத் தலைவர் அவர்கள் பயிர்களைக் கண்டு மனமுடைந்த ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவரத்தை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்; மறைக்கத் தேவையில்லை.

நீர்த் தட்டுப்பாட்டால் விவசாயம் பொய்த்து டெல்டா மக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் என்று எடுத்துக் கூறியிருந்தால் மேலும் பலன் கிடைத்திருக்கும் என்று கழகத் தலைவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

காவிரி நீர்ப் பிரச்சினையில் பெரும் வெற்றி பெற்று விட்டதாகக் கூறி முதல் அமைச்சருக்கு மிகப் பெரிய அளவில் விழா எடுக்கப்பட்டது. பாராட்டட்டும் - அதில் நமக்கொன்றும் வருத்தம் கிடையாது.

அந்த விழாவிலே விவசாயிகளுக்காக சில அறிவிப்புகளை ஏழை விவசாயிகள் எதிர்பார்த் தனரே - ஆரவாரத்தோடு விழா முடிந்ததே தவிர, விவசாயியின் வறுமைப் பாம்பு கடிக்கு மருந்து இல்லையே!

அதிமுகவின் முக்கிய தோழமைக் கட்சியான சி.பி.அய்.யின் விவசாய சங்கத் தலைவர் தோழர் முகுந்தன் விடுத்த வேண்டுகோள் விழாவுக்கு முன் ஜனசக்தியில் வெளிவந்ததே - விழா வெளிச்சத்தில் இந்தக் கோரிக்கைகள் மறைந்து போயிற்றே என்பதுதான் நமது வேதனை.

சரி - நிதிநிலை அறிக்கையிலாவது மின்னல் தெரிந்ததா? வெறும் அம்மா பாட்டு இருந்ததே தவிர டெல்டா விவசாயிகளின், அம் மாபெரும் கஷ்டத் துக்கு வடிகால் கிடைக்கவில்லையே.

நடுவர் மன்றத் தீர்ப்பு கெசட்டில் வெளியிடப்பட்டு விட்டதாம். இந்தப் பிரச்சினையில் எல்லாம் முடிந்து பட்டாபிஷேகம் சூட்டப்பட்டு விட்டதாக வாண வேடிக்கை விட்டோமானால் நாம் ஏமாந்தவர்கள் ஆவோம்.

இதற்கு முன்புகூட இப்படி நடந்ததுண்டு; நாளை என்ன என்பதுதான் முக்கியம்.

அடுத்த கட்ட நடவடிக்கை இதில் என்ன என்பதுதான் முக்கியம்.

அதனைச் செய்விக்க மத்திய அரசை வற்புறுத் திட வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் கூட குப்பைக் கூடையில் வீசி எறிந்தது கருநாடகம் என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் விவசாயம் பஞ்சமர், சூத்திரர்களுக்கான பாவப்பட்ட தொழிலாயிற்றே - (மனுதர்மம் பாவத் தொழில் என்றே கூறுகிறது). அதனால்தான இத் தனை வேதனைகள் - சோதனைகள். விழிப்புணர்வு தேவைப்படும் காலகட்டத்தில்தான் நாம் இருக் கிறோம் என்பதை நம் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி இருந்தார் (விடுதலை, 22.2.2013).

இவற்றையெல்லாம் வலியுறுத்திடவே வரும் 5ஆம் தேதி மாலை தஞ்சையிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

விவசாயப் பெருங்குடி மக்களே!

கட்சி - அரசியல் கண்ணோட்டம் கிஞ்சிற்றும் இல்லாத தமிழ்நாட்டின் உரிமை இயக்கமாம் திராவிடர் கழகம் குரல் கொடுக்கிறது.

பதவிப்பக்கம் செல்லாப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கத்தை வழி நடத்தும் தமிழர் தலைவர் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

திரண்டு வருக - திறனைக் காட்டுக!

மாநில அரசின் காதுகளையும்

மத்திய அரசின் காதுகளையும்

கேட்க வைப்போம் - வாரீர்! வாரீர்!!

- கருஞ்சட்டை -