Search This Blog

26.8.12

பெரியார் இல்லாவிட்டாலும் வீரமணி இருக்கிறார்

50 ஆண்டுகளாக விடுதலையைப் படிப்பவன் நான்!
விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கி!
பெரியார் விட்டுச் சென்ற கொள்கை உட்பட எல்லா உடைமைகளையும் காப்பாற்றுபவர் வீரமணியார்! வீரமணியார்!! வீரமணியார்!!!
விடுதலை ஆசிரியராக அரை நூற்றாண்டுத் தொண்டாற்றிய தமிழர் தலைவரைப் பாராட்டி கலைஞர் பெருமிதம்!



கலைஞர் அவர்களுக்குச் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளிக்கிறார் விடுதலை ஆசிரியர்.

 பெரியார் விட்டுச் சென்ற எல்லா உடைமைகளையும், கொள்கைகள் உட்பட எதையும் காப்பாற்றுகின்ற திறன் உடையோர் யார் யார் என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில் வீரமணியார்! வீரமணியார்!! வீரமணி யார்!!! என்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள் புகழாரம் சூட்டினார்.

சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை கலைஞர் அவர்கள் ஆற்றிய தலைமை உரை வருமாறு:-

தமிழ்ப் பெருங்குடி மக்களின்  -  திராவிடப் பெருங்குடி மக்களின்  தலைவர்களில் ஒருவராக  -  என்னுடைய  அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வராக  -  இன்றையதினம் ஏற்றுக்  கொண்ட பொறுப்பிலே அய்ம்பதாண்டுகள் நிறைவு பெற்ற வராக  -  அதற்கான நாளைக் கொண்டாடுகின்ற நேரத்தில் -  இந்த விழாவின் தலைமகனாக அமர்ந்திருக்கின்ற  விடுதலை ஏட்டின் ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு  இளவல் வீரமணி அவர்களே,  இந்த விழாவில் பாராட்டுரை வழங்கிய  திரு.  பொன்னீலன் அவர்களே,  திரு. ரமேஷ் பிரபா அவர்களே,  திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களே,  பேராசிரியர் ஜெக்மோகன்சிங் வர்மா அவர்களே,  அறிமுக உரையாற்றிய அறிவுக்கரசு அவர்களே,  வரவேற்புரை ஆற்றிய கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, இணைப்புரை மொழிந்த டெய்சி மணியம்மை அவர்களே, நன்றியுரை ஆற்றிய தம்பி அன்புராஜ் அவர்களே,   தாய்மார்களே,  பெரியோர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,

 



விடுதலை ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளிக்கிறார் கலைஞர்.

இன்று  நடைபெறுகின்ற இந்த விழா உங்களுக் கெல்லாம் என்ன உணர்வை ஊட்டியிருக்கிறதோ; அந்த உணர்வைவிட ஒரு படி மேலாக ஏன் ஆயிரம் படிகள் மேலாக எனக்கு உணர்வை ஊட்டி யிருக்கின்ற விழாவாகும். `விடுதலை, `குடியரசு, `பகுத்தறிவு என்றெல்லாம் ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்த அந்தக் காலம் தொட்டு இன்று அந்த ஏடுகளுடைய பயனை அனுபவித்துக்  கொண்டி ருக்கின்ற  இந்தக் காலம் வரையில் இந்த ஏடுகள் எவ்வளவு சங்கடங்களுக் கிடையே,  இடர்ப்பாடு களுக்கிடையே வெளிவருகின் றன, வெளிவந்தன என்பதை நினைவு கூர்ந்திடுவது தான், யாரை இன்றைக்கு நாம் பாராட்டுகிறோமோ, யாருக்கு வாழ்த்து வழங்குகிறோமோ அதற்கு உரிய பயனை தரக்கூடிய ஒன்றாக அமையும்.

என்னைப் பொறுத்தவரையில், இங்கே வந்த விருந்தினர்கள், பாராட்டிய அன்பர்கள் யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக் கூடாது. என் வீடு இது;  (பலத்த கைதட்டல்). என் வீட்டிற்குள்ளேயே வந்து என்னுடைய தம்பியை - என்னுடைய ஆருயிர் இளவலை நான் பாராட்டுகிற நேரத்தில், என்ன உணர்வு எனக்கும், பாராட்டப்படுகின்றவருக்கும் ஏற்படுமோ அந்த உணர்வில் இம்மியும் குறைவில்லாமல் இன்றைய தினம் நாங்கள்  பெற்றிருக்கிறோம் என்பதை துடிக்கின்ற எங்களது இதயங்களைக் கேட்டால் அது சொல்லும் (கைதட்டல்).

இரட்டைக் குழல் துப்பாக்கி

விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்றைக்கு பத்திரிகை உலகத்தில் திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுகின்ற - திராவிட இயக்கத்திற்காகக் குரல் கொடுக்கின்ற இரண்டு மாபெரும் சக்திகளாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணருவார்கள். நான் விடுதலையிலே நம்முடைய இளவல் வீரமணி அவர்களைப் போல 50 ஆண்டு காலம் ஆசிரியராக  இருந்தவன் என்று மார்தட்டிக் கொள்கின்ற அந்தப் பெருமையை பெறாவிட்டாலும்கூட, விடுதலை பத்திரிகையை தினந்தோறும் படிக்கின்ற ஒருவன் நான் (கைதட்டல்). அதைப் படித்த பிறகு தான் அடுத்த பத்திரிகையை எடுப்பது என்கின்ற  வழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவன் நான்.

இன்னும் சொல்லப் போனால், சில நேரங்களில் அவசரத்தின் காரணமாக விடுதலை இதழிலே வருகின்ற பிழைகளைக் கூட -  எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு பிழைகளைக் கூட உடனடியாக நான் அதைத் திருத்தி தொலைபேசி மூலமாக உரியவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பிழையை திருத்திக் கொள்ளுங்கள், கருத்துப் பிழை அல்ல, எழுத்துப் பிழை என்று குறிப்பிடத் தவறாதவன். அந்த அளவிற்கு இன்றைக்கும் விடுதலையோடு சொந்தம் கொண்டாடிக் கொண்டு, உரிமை ஏற்படுத்திக்  கொண்டு வாழ்பவன் நான்.  (கைதட்டல்)

தி.மு.கழக ஆட்சியில் பல்வேறு  துறைகளில் வளர்ச்சி

இன்றைக்கு இங்கே பேசிய நம்முடைய நண்பர் பன்னீர் செல்வம் அவர்கள், சில செய்திகளை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலே பொருளாதாரத் துறையிலே, தொழில் துறையிலே, வேறு பல மறு மலர்ச்சித்  துறைகளிலே ஏற்பட்ட வளர்ச்சி விகிதாச் சாரத்தை நாம் பதிய வைக்கத் தவறிவிட்டோம் என்று குறிப்பிட்டார்கள். நாம் பதிய வைக்கக் கூடாது என்று அல்ல, பதிய வைப்பதற்கு நம்மிடத்திலே பிரபலமான பத்திரிகைகள் இல்லை என்பதுதான்.

எந்த வானொலியோ, தொலைக்காட்சியோ அப்படி நாம் பதிய வைப்பதற்கு பயன்படாமலே ஆகிவிட்டன என்பதுதான் முக்கியமான காரணமேதவிர, பதிய வைக்கக் கூடாது என்பதல்ல. இருந்தாலும் எனக்குள்ள மகிழ்ச்சி, பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதிய வைக்க வேண்டிய காரியங்கள் கழக அரசிலே நிரம்ப உண்டு என்பதை உணர்ந்து, அப்படி பதிய வைக்கத் தவறிவிட்டோம் என்று நம்மிடம் கூறாமல் கூறி அந்தக் குறையை எடுத்துக் காட்டினார்களே அதுவே நமக்கு நிறைவான ஒன்று என்று நான் கருதுகின்றேன்.

திராவிட இயக்கத்தினுடைய பல கருத்துக்கள் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னது, பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னது, என்னுடைய அருமை இளவல் வீரமணி அவர்கள் எடுத்து இயம்பி வருவது இவைகளெல்லாம் நாங்கள் நடத்துகின்ற ஏடுகளோடு  நின்று விடுகின்றன.

உண்மைதான். காரணம், இது மற்றவர்களால் வெளியிடப்படாமல் இருட்டடிப்புக்கு  உள்ளாக்கப் படுகிறது. அதையும் இங்கே குழுமியிருக்கின்ற நீங்கள் உணர்ந்து கொண்டால் மாத்திரம் போதாது, நம்முடைய பன்னீர் செல்வத்தைப் போன்றவர்கள் தங்களுக்குள்ள வாய்ப்புக்களை, வசதிகளை, தங்களுக்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி அதை நாட்டுக்கு ஏட்டாளர்களுக்கு இதழாளர்களுக்கு  எடுத்துச் சொல்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதைத்தான் நான் இந்த விழாவிலே ஒரு வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றேன்; எனக்காக அல்ல, நாட்டுக்காக. சமுதாயத்திற்காக. இந்தச் சமுதாயம் ஏற்றம் பெற வேண்டும் என்ப தற்காக. ஒரு ஆட்சி எந்த அடிப்படையிலே உருவாகிறது, எந்த அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறது, தொண்டாற்றுகிறது என்பதை தொகுத்துச் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதைப் போல், பத்திரிகைகாரர்களுக்கும் இருக்கிறது.

நாம் எங்களுடைய ஏடுகளைப் பற்றிய வளர்ச்சியைப் பற்றிச் சொல்ல  வேண்டுமேயானால்  இன்றைக்கு விடுதலை 4 பக்கங்களில் வண்ண முகப் போடும், வண்ண எழுத்துக்களோடும், இன்னும் சொல்லப் போனால் பல்வேறு விஞ்ஞான புதுமை களை எடுத்துச் சொல்கின்ற ஏடாகவும் இன்றைக்கு  விளங் குகின்றது.  நான் ஆசிரியர் அவர்களிடத்திலே சொன்னேன்,  இப்பொழுதெல்லாம் விடுதலையை இயக்கத்திலே ஆர்வம் கொண்டவர்கள் மாத்திர மல்ல, உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள வேண் டும் என்று கருதுகின்றவர்களும், உடற்கூறுகள் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றவர்களும், மருத்துவத் துறை யிலே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் அக்கறை செலுத்துபவர்களும்  படிக்கக் கூடிய ஏடாக விடுதலை ஏடு மாறி வருகிறது என்று நான் அவர்களிடத்திலே சொன்னேன்.

இதைச் சொல்வதால், இந்தச் செய்திகளோடு நீங்கள் விடுதலையைப் பார்த்து நிம்மதி அடைந்து விடக் கூடாது. இவைகளோடு ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்ற செய்திகளும் நம்முடைய சமுதாயத்தை சீரழிக்கின்ற உயர் ஜாதியின ருடைய ஆணவங்கள், அட்டகா சங்கள், அவர்களுடைய நிதானமற்றப் போக்குகள், அவர்களுடைய நெறியை நம்முடைய நெறியோடு கலப்பதற்கு நடத்துகின்ற நரித் தந்திரங்கள் இவை களையும், அதே நேரத்தில் நம்முடைய ஏடுகளின் மூலமாகச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின் றோம். அதை முரசொலி முடிந்த வரை செய்யும்.

விடுதலை நிச்சயமாக எப்போதும் செய்யும். முரசொலி முடிந்த வரை செய்யும் என்று சொல்வதற்குக் காரணம், அது ஒரு முழுக்க முழுக்க அரசியல் கட்சியினுடைய ஏடாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செய்திகளை எடுத்துச் சொல்கின்ற ஏடாகவும் அது நடைபெறுகின்ற காரணத்தால், அப்படி பழகி விட்ட காரணத்தால் முடிந்த வரையில் என்று சொன்னேன். விடுதலை அப்படியல்ல. எடுத்த எடுப்பிலேயே சனாதனத்தை, மதத்தை, மதவெறியை, மடாதிபதிகளின் கொட் டத்தை இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி, அவைகளையெல்லாம் அடையாளம்  காட்டி எச்சரித்த, எச்சரித்துக் கொண்டிருக்கின்ற புரட்சி ஏடுதான் விடுதலை இதழ்  என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

புரட்சி என்றால் என்ன பொருள்? புரட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் மாத்திரம் அது புரட்சி ஆகிவிடாது.  (கைதட்டல்)  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று சொன்னால் தான் பொருந்துகிறது.   எல்லோரையும் புரட்சிக் கவிஞர் என்று சொல்லி விட்டால், அது பொருந் தாது.   அதைப் போல புரட்சி ஏடாக விளங்குவது விடுதலைப் பத்திரிகை.

அந்த விடுதலைப் பத்திரிகை அளவுக்குக் கூட இல்லாமல்  நான் 1942ஆம் ஆண்டு  முரசொலி என்கிற கையேட்டைத் தொடங்கி, அதை  துண்டு அறிக்கைகளாக  வெளியிட்டு  எல்லோரி டத்திலும் இனாமாகவே  அதை வழங்கி  -  வரட்டுமே  வடலூர் வள்ளலார்   என்ற தலைப்பிலே  ஒரு கட்டுரை!   சிதம்பரத்திலே வர்ணாசிரம மாநாடு நடைபெற்ற போது, அதை எதிர்த்து ஒரு கட்டுரை.   இவைகள் எல்லாம்  முரசொலியில் எழுதிய  காலம் ஒன்று உண்டு.

நன்றாக எனக்கு நினைவு இருக்கிறது.  வருணமா?  மரணமா?  என்ற தலைப்பில்  ஒரு கட்டுரை.  எதற்காகத் தெரியுமா?  சிதம்பரத்திலே  உள்ள பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி,  வர்ணாஸ்ரம மாநாட்டை நடத்தினார்கள்.  அந்த மாநாட்டை எதிர்த்து  முரசொலி என்கிற அந்தத் துண்டு தாளில் நான் எழுதிய நீண்ட அறிக்கை  -  நீண்ட கட்டுரைக்குத் தலைப்பு தான்  வருணமா?  மரணமா? என்பதாகும்.

பரணி  பல  பாடிப் பாங்குடன்

வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில்

சொரணை சிறிதுமிலாச் சுயநலத்துச்

சோதாக்கள் சில கூடி

வருணத்தை நிலை நாட்ட     வகையின்றிக் கரணங்கள் போட்டாலும்

மரணத்தின் உச்சியிலே  மானங் காக்க

மறத்தமிழா  போராடு!  (கைதட்டல்)

இதிலே ஆயிரம் துண்டு அறிக்கைகள் தயாரித்து சிதம்பரம் வீதிகளிலே விநியோகிக்கச் சொன்னேன்.    அன்றையதினம்  நான் சிதம்பரம் செல்ல வேண்டும்.  காரணம், என்னுடைய திருமணம் முடிந்து  முதல் இரவு நாள்.  அதற்கு நான் சிதம்பரம் செல்ல வேண் டும்.   திருவாரூரில் ரெயில் ஏறி, என்னுடைய நண்பன் தென்னனோடு  சிதம்பரத்தில் இறங்கினேன்.    புகை வண்டி நிலையத்திலேயே  போலீசார் வந்து,  நகருக்குள் போகக் கூடாது என்றார்கள்.  ஏன் என்று கேட்டேன்,  உங்களுக்கு  144 தடை உத்தரவு.   காரணம் இந்த நோட் டீஸ்.  மாநாட்டிற்கு எதிராக,  வர்ணாஸ்ரம மாநாட் டிற்கு எதிராக நான் எழுதி அச்சிட்டுத் தந்த  வருணமா? மரணமா?  என்ற  அந்த நோட்டீசை வைத்து சிதம்பரத்திற்குள் நுழையக் கூடாது என்றார்கள்.

என்னோடு வந்த  தென்னன்,  அய்யா அவருக்கு இன்றைக்கு முதல் இரவு, தயவு செய்து விடுங்கள் என்று சொல்லியும்,  போலீசார் விடவில்லை.   திரும்பி மறு ரெயிலிலே  ஏறி திருவாரூர்  வந்து  சேர்ந்தோம்.   முதல் இரவு இப்படி முடிந்தது.   (சிரிப்பு)  ஏன் இதைச் சொல்கிறேன்  என்றால்  ஒரு பத்திரிகையில் கருத்துக்களை வெளியிடக் கூட எவ்வளவு  கர்ணக் கடூரமான, கடுமையான அடக்கு முறைகள்  வைதீகத்தைக் காப்பாற்ற இருந்தன என்பதை எடுத்துச் சொல்லத்தான்  இதை நான் நினைவூட்டுகின்றேன்.

இயக்கத்தை எப்படி எல்லாம் வளர்த்தோம்?

அதற்குப் பிறகு  இப்படி பல கஷ்டங்கள்  - பத்திரி கையை நடத்த முடியாமல்!   நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்களும், நானும்  அப்போதெல்லாம்  தந்தை பெரியார் அவர்களின் கட்டளைப்படி  சுற்றுப் பயணம்  - கூட்டங்களுக்குச் செல்வோம்.   அந்தக் கூட்டங்கள், மாணவர்கள் சுற்றுப் பயணம் என்ற பெயரால் நடை பெற்றது.   அப்படி நடைபெற்ற அந்தச் சுற்றுப் பயணங்களில்  அவரும் நானும்  எங்களோடு  ஈரோடு சுப்பையா போன்ற வர்களும்   கலந்து கொண்டு  மக்களுக்கு  விழிப்பு ணர்வை ஏற்படுத்தக் கூடிய  தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் சொல்கின்ற பெரும் பணியிலே நாங்கள் ஈடுபட்டோம்.   இவைகளைச் சொல்வதற்குக் காரணம், இந்த இயக்கத்தை  சுலபமாக யாரும் வளர்த்து விடவில்லை.

இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு  ஏதோ சொன்னோம், எழுதினோம், பேசினோம் என்ற அளவோடு யாரும் இருந்து விடவில்லை.   அடிகள் பட்டிருக்கிறோம், தாக்குண் டிருக்கிறோம்,  காயப்பட்டிருக்கிறோம், கல்லடி பட்டிருக்கிறோம்,  இன்னும் சொல்லப் போனால்  நாம் கண்ணெனப் போற்றிப் பாராட்டு கின்ற  தந்தை பெரியார் அவர்கள் மீது  சில காலிகள் கடலூரிலே செருப்பையே வீசினார்கள்.

அந்தச் செருப்பை எடுத்து  தந்தை பெரியார் அவர்கள்,  இன்னொரு செருப்பையும் தேடிப் பாருங்கள், கிடைத்தால் இரண்டையும் சேர்த்து மாட்டிக் கொள்ளலாம் என்று சொல்கின்ற அளவிற்கு   தந்தை பெரியார் அவர்கள்  தன்னுடைய பெருந்தன்மையைக் காட்டினார்கள்.  சாதி வெறியர்களை அடையாளம் காட்டினார்கள்.  

பெரியார் இல்லாவிட்டாலும் வீரமணி இருக்கிறார்

இப்படியெல்லாம் இந்த இயக்கத்தை நாங்கள் வளர்த்தோம். அப்படி வளர்க்கப்பட்ட இந்தப் பேரியக்கம்  இன்றைக்கும்  மற்றவர்கள் பார்த்து அஞ்சுகின்ற அளவிற்கு நடை போடுகிறது என்றால், காட்சி அளிக்கிறது என்றால்,  பெரியார் இல்லா விட்டாலும்  என்னுடைய இளவல்  வீரமணியைப் போன்றவர்கள்  (கைதட்டல்)  இருக்கின்ற காரணத்தினாலேதான்.  பெரியார் விட்டுச் சென்ற  எந்த உடை மைகளையும்,  கொள்கை உட்பட எதையும்  காப் பாற்றுவதற்கு திறன் உடையவர் யார் யார் யார்  என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில்  - வீரமணியார்!  வீரமணியார்!  வீரமணியார்!  என்பது தான்.

அத்தகைய  அரும் பெரும் ஆற்றலாளர்  என்னுடைய அன்புக்குரிய இளவல் வீரமணி அவர்கள் .  அண்மையிலே  நம்முடைய டெசோ மாநாடு நடைபெற்ற நேரத்தில் -  விரைவில் திரும்பி விடுவேன் என்று சொல்லி  அமெரிக்கா  சென்றார்.   ஆனால்  அவர்  சொன்னபடி விரைவிலே திரும்ப வில்லை.   என்ன காரணம் என்று  நானும் விசாரித் துக் கொண்டிருக்கிறேன்.   தம்பி அன்புராஜைக் கேட்டாலும் அல்லது பூங்குன்றனைக்  கேட்டா லும்  வந்து விடுவார் என்று சொன்னார்களே தவிர,  எதையோ மறைத்து  இவர்கள் பேசுகிறார்கள் என்பதை நான் உணர்ந்து  கொள்ள முடிந்தது.    அதற்குப் பிறகு தான் வீரமணி அவர்கள்  அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து என்னைச் சந்தித்த போதுதான் நடந்தவைகளை சொன்னார். 

  நாம் பெற்ற பேறு!

நடந்தவைகளாக அவர் சமாதானமாகச் சொல்லப்பட்டது, இனி  என்றைக்கும் நடப்பவை களாக இருக்கக் கூடாது என்கின்ற   அந்த உணர்வோடுதான்  அந்தச் செய்திகளைக் கேட்டேன்.   அவர்  மீண்டும் நம்மோடு வந்து இன்றைக்கு அவரு டைய  அய்ம்பதாவது  விடுதலை ஆசிரியாகப் பொறுப்பேற்றிருந்த விழாவை நடத்துகின்ற அளவிற்கு இருக்கிறார்  என்றால்   இது நாமெல்லாம் பெற்ற பேறு  என்றுதான் சொல்ல வேண்டும்.  (கைதட்டல்)

அத்தகைய பேறு நமக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கின்றது.   அவர் வாழ வேண்டும்.  எனக்கும் அவருக்கும்  வயது வித்தியாசம் உண்டு.   என்னை விட இளையவர்.   இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும்.  வாழப் போகிறவர்  (கைதட்டல்)  அப்படி அவர் வாழ்கின்ற நேரத்தில்  - தமிழ் நாட்டிற்கு,  தமிழ்ச் சமுதாயத்திற்கு,  அடித்தட்டு மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பணியாற்ற வேண் டும்.

அந்தப் பணிக்கு  நான் இருந்தால்,  நானும் அவருக்கு உதவியாக இருப்பேன்  என்று கூறி  இன்றைய விழாவில் பங்கெடுத்துக் கொண்டதை  ஒரு பெரும் பேறாகக் கருதி அவருக்கு  என்னுடைய  வாழ்த்துக்களை மேலும் மேலும் குவித்து விடைபெற்றுக் கொள்கிறேன். -இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்

                          -----------------------"விடுதலை” 26-8-2012

12 comments:

தமிழ் ஓவியா said...

ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் வாழ்த்துகிறார்



அன்புள்ள திரு. வீரமணி அய்யா அவர்களுக்கு,

தந்தை பெரியார் அவர்கள் சமூக முன்னேற்றம், பகுத்தறிவு பணி, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, இடஒதுக்கீடு போன்ற கராணங்களுக்காக பன்னெடுங்காலமாக நடத்திய மறுமலர்ச்சி நாளேடு விடுதலை திருவள்ளுவரின் திருக்குறள் 517இல் சொன்னதுபோல,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

என்ற வாக்கிற்கு இணங்க, 1962ஆம் ஆண்டில் விடுதலை நாளேட்டின் ஆசிரியர் பணியை அப்போது துடிப்புள்ள இளைஞராயிருந்த திரு கி.வீரமணி அவர்களிடம் தந்தை பெரியார் ஒப்படைத்தார். இன்றைக்கு திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்கள், விடுதலை பத்திரிக்கையின் மூலம், பகுத்தறிவுப் பணியை இடைவிடாது 50 ஆண்டு காலம் சூரியனை சுற்றி 51ஆவது சூரிய வட்டப் பாதையில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

விடுதலை மூலம் மக்கள் மத்தியில் இன்றும் நிலவும் வேறுபாடுகளை களைந்து, இந்த நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஓர் ஒற்றுமையான உணர்வோடு செயல்பட, மக்களை அறிவார்ந்த முறையில் சிந்திக்க வைக்க, பகுத்தறிவோடு இந்த சமுதாயம் மேன்மைபெற, நீங்கள் மேன்மேலும் பணி செய்ய உங்களை உளமாரப் பாராட்டி நெடுங்காலம் இப்பணி புரிந்திட வாழ்த்துகிறேன்.

- ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு 15 அல்ல - ஆகஸ்டு 25 - விடுதலை விழா! - கலி. பூங்குன்றன்


இயக்க வரலாற்றில் நேற்று (25.8.2012) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழா என்றும் பேசப்படக்கூடியது.
ஒரு ஏட்டை முன்னிறுத்தி எடுக்கப் பட்ட இலட்சிய விழா அது. அந்த ஏட்டில் அரை நூற்றாண்டுக்காலம் ஆசிரியராக இருந்தவர்தான் உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
நேற்று காலையில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. எஸ்.மோகன் அவர்கள் தெரிவித்த கருத்து முக்கியமானது. இது வரை அதிகபட்ச காலம் ஏடு ஒன்றுக்கு ஆசிரியராக இருந்தவர் ஹெரால்டு மேக்மில்லன் என்பவர்தான். அவர் இருந்தது கூட 27 ஆண்டுகளே! ஆனால் நமது வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகளையும் கடந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டாரே!
இந்த உண்மையும், தகவலும் வரலாற் றில் இடம்பெற்றுவிட்ட நவரத்தினப் பதிப்பே.
விடுதலை ஏடு என்பது சாதாரண செய்தி ஏடு (NEWS PAPER) அல்ல; மாறாகக் கருத்துக் கருவூலம் (VIEWS PAPER)ஒருவாரம் கழித்துக்கூட படிக்கலாம். காரணம் காலத்தை வெல்லும், சுணை யினைக் கொண்டது.
தமிழ்நாட்டை மூவேந்தர்கள் எல்லாம் ஆண்டனர். பெரும்பாலும் ஆரிய அடிமை களாக கல்வி என்ற பெயரால் சமஸ் கிருதத்தைச் சொல்லிக்கொடுக்கும் நிறுவனங்களை ஏற்படுத்திக் கெ()டுத்த வர்களாகத்தான் அவர்கள் இருந்தனர்.
பதினோறாம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க்காடு மாவட் டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர் கட்கும் மாணவர்கட்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. உபகாரச் சம்பளம் வேறு தரப்பட்டது. 45 வேலி நிலம் அக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

வேதங் களும், சமஸ்கிருத இலக்கணமும், (ஆசிரியருடையது) மீசாம்ச வேதாந்த தத்துவங்களுமே அங்கு சொல்லித் தரப்பட்டன!.. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனத்திலும் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்கு அளிக்கப்பட்டது. 260 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் அங்கு இருந்தனர்.
இதிகாசங்களும், மனுதர்ம சாஸ்திரமும் அங்குக் கற்பிக்கப்பட்டன. பன்னிரெண்டாம் நூற்றாண்டு சோழ அரசர்கள் திருவாவடு துறையில் ஒரு கலைமன்றம் கண்டனர். அங்கு (வட மொழியில் உள்ள) சாரகசமிதை, அஷ் டாங்க இருதய சமிதை என இரண்டு பாடங்கள்! தமிழ் வேந்தர் ஆரியத்திற்கு அடி பணிந்ததற்கு இன்னும் என்ன சான்று தேவை?
(தமிழன் தொடுத்த போர் மா. இளஞ்செழியன்)
பார்ப்பனர்களுக்கு மானியமாக நிலங்களை அள்ளிக்கொடுத்தனர். மங் கலம், மங்கலம்என்று வருகின்ற ஊர்கள் எல்லாம் தமிழ்வேந்தர்களால் பார்ப்பனர் களுக்குத் தூக்கிக் கொடுக்கப்பட்ட இனாம் பகுதிகள் தமிழர்களின் பெயர்கள், தமிழ்நாட்டுக் கோவில்களின் பெயர்கள், ஊர்ப்பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாகிவிட்டன. தமிழ்நாடு என்பது பார்ப்பனக் கூடாரமாகிவிட்டது.
இந்த நிலையில் தான் திராவிடர் இயக்கம் என்ற எழுச்சி சகாப்தம் காலத்தின் கட்டாயப் பிரசவமானது. அதுவே தன்மான இயக்கத்தை சூரியக் கோளான தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கி ஒரு தலைகீழ் அதிரடிப் புரட்சியை முக்கால் நூற்றாண்டில் நடத்திக்காட்டினார்.

தமிழ் ஓவியா said...

மக்கள் மனதில் மண்டிக்கிடக்கும் மடமைக்களை வேரோடு பிடுங்கி எறிந்து பிரச்சாரக் களத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளை, இதழ்களை ஆயுதமாக பயன்படுத்தினார்.
அவர் நடத்திய திராவிடன், குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை போன்ற ஏடுகளின் பெயர்களே தனித்தன்மையானவை! (தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் என்று பேசும்தலைப் பிரட்டைகள் இவற்றைத் தெரிந்துகொள் ளட்டடும், தனித்தமிழ்ப் பெயர்கள் மட்டுமல்ல - அந்த பெயரிலேயே தம் கொள்கைகளைத் தவழ விட்டுள்ளாரே!)
அவற்றில் விடுதலை ஏடு 1935ஆம் ஆண்டு தொடங்கி - தடை நச்சாறுகளை நசுக்கி எறிந்து, துரோகக் காடுகளை எரித்துத்தள்ளி, நன்றி என்ற ஒன்றை அறியாத தமிழ்மக்களின் பரிதாப நிலை யையும் புறந்தள்ளி, நெருக்கடி நிலைத் தணிக்கைகளையும் நெட்டித்தள்ளி, செம்மாந்து தலைநிமிரும் படைக்கு தனி சொந்தக்காரனாக விடுதலை வீரன் அரிமா மீது சவாரி செய்து கொண்டு இருக்கிறான்.
விடுதலை என்ற பெயர் வேதப் பித்தர் களின் விலாவில் வேல் பாய்ச்சுகிறது. ஆரியப் பண்பாட்டு வேலிகளை வேரோடு வீழ்த்தி வருகிறது.
சமூகநீதிக் களத்தில் சமர்ப்புலியாய்த் துடித்தெழுந்து சமுதாயத்தில் அடிக்குழி யில் தள்ளப்பட்ட மக்களையெல்லாம் மேலே கொண்டு வரும் பாரந்தூக்கியாக அல்லவா அது செயல்பட்டு வருகிறது! வருகிறது!
இன்னும் சமூக நீதித்திசையில் எட்டப்பட வேண்டிய இலக்குகளில் வெற்றி பெற இந்தியத் துணைக் கண்டத்திலே எதிர்பார்க்கப்படும் பூமி - தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணல்லவா!
விடுதலை எனும் வீரனின் கரங்களில் எப்பொழுதும் பாதுகாப்பு மற்றும் முன் தாக்கும் ஆயுதங்கள் கண்மூடாமல் விழிப் புடை எரிமலையாய்க் கனன்று கொண்டே இருக்கும்.
தந்தை பெரியார் அவர்களின் தன்மான எழுச்சிக் கர்ப்பத்தில் தரித்த அந்த போர்வீரனின் தளகர்த்தராக அரை நூற்றாண்டாக இருக்கும் பெருமைக்குரிய சாதனை முகட்டில் கம்பீரமாய் வெற்றிச் சிரிப்புடன் நிற்கும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களை திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரும், இதழ் உலகில் தனி சிம்மாசனம் போட்டு வீறு கொண்ட பார்வையுடன் வீற்றிருக்கும் மானமிகு கலைஞர் அவர்களும், தமிழின ஊடக விற்பன்னர்களும், நீதியரசர்களும் பாராட்டுவது மிகப் பெரும் பொருத்தம் தானே!
அத்தகைய நாள் தமிழினத்தின் திருநாள்தானே! தமிழன் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டாமா? என்றார் விடுதலை பணிமனை திறப்பு விழாவில் (1965) காவி உடை தரித்த தவத்திரு குன்றக்குடி அடிகளார். அதில் ஒரு கட்டமாகத் தான் விடுதலைக்கு 50 ஆயிரம் சந்தாக்களைச் சேர்த்து 50 ஆண்டுகள் விடுதலைப் பணியாற்றிய தலைவரிடம் அளித்து மகிழ்ந்தனர் கழகக் கண்மணிகள் (24.12.2011)
விடுதலையை அரசு நூலகங்களி லிருந்து விடுதலை கொடுக்க எத்தனித்தவர்கள் இதற்குப் பிறகாவது திருந்த வேண்டும். எதிர்ப்பு என்பதும் தடை என்பதும் எங்களுக்குக் கிடைத்த சர்க்கரைப் பொங்கல். இதனைத் தான் எங்களுக்குச் செல்லமாய் ஊட்டினார் ஈரோட்டு ஏந்தல்.
சில ஆயிரம் அரசு சந்தாக்களுக்குத் தடை என்றால் அவற்றைவிட பல மடங்குப் பெருக்கி 50 ஆயிரம் புதிய தமிழர்கள் அல்லவா விடுதலை க்கு வாசகர்களாகக் கிடைத்துள்ளனர்.
எத்தனையோ எண்ண அலைகள் அலை மோதுகின்றன. நெருக்கடி காலத்தில் நெருப்பு நாக்கைக்காட்டி விடுதலையை பொசுக்கி விடலாம் என்று மனப்பால் குடித்து வியூகம் வகுத்தனரே முடிந்ததா?
வீரத்தாய் அன்னை மணியம்மையார் அதனை ஊதி அழித்தாரே!
ஆசிரியருக்கு 50 ஆண்டுத் தொண் டுக்கான பாராட்டு விழாவுக்குள் இந்த வரலாற்றுப் பொன்மலர்கள் எல்லாம் பொக்கிஷங்களாகப் பூத்துக் குலுங்கு கின்றன.
50 ஆண்டு விடுதலைக்கு ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

மானமிகு கி.வீரமணி என்றால், நான் 50 ஆண்டு விடுதலை வாசகன் என்று உரிமை கொண்டாடினார் மானமிகு கலைஞர். பெரியார் இல்லை. ஆனால் வீரமணி நம்மிடையே இருக்கிறார் என்று சொன்ன வர் சாதாரண தலைவரல்ல. திராவிட இயக்கத்தில் இன்று இருக்கும் மூத்த தலைவரின் முத்திரைக் கருத்து இது.
இது என் வீடு - சொந்த வீட்டிலிருந்து பேசுகிறேன் என்று அவர் சொன்னார் என்பதில் மிக ஆழமான பொருள் உண்டு.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து இறக் குமதி செய்யப்பட்ட விக்டோரியா - 820 என்ற புதிய அச்சு இயந்திரத்தை தந்தை பெரியார் முன்னிலையில் இயக்கி வைத்தவர் முதல்வர் கலைஞராயிற்றே! (4.11.1969).
இன்று இரு தலைவர்கள் மீதுதான் ஆரியம் தன் அம்புறாத் தூணியிலிருந்து அம்புகளைக் குறி பார்த்து வீசுகின்றது. அப்படி வீசுவதைத்தான் தனது குருதி ஓட்டமாகவும் பிறவியின் பயனாகவும் கருதிக் கொண்டு இருக்கின்றது.
கால் பட்டால் குற்றம், கைபட்டால் குற்றம் என்ற பாணியில் பாஷாணத்தில் துவைத்து பத்திரிகைகளை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இவை ஒன்று போதாதா? இவர்கள் இருவரும்தான் நம்மினத்தின் நம்பிக்கை நட்சத்திரத் தலைவர்கள் என்பதற்கு
விடுதலை விழா - அதன் ஆசிரிய ருக்கும், தாய்க் கழகத்தின் தலைவருக்கு பாராட்டு விழா - அதற்கு திமுக தலைவர் பங்கேற்றது என்பது ஏதோ இரு கட்சிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்டதா?
இவ்விழாவில் உதிர்க்கப்படும் ஒவ் வொரு சொல்லையும் உன்னிப்பாகக் கணித்துக் கொண்டு இருப்பர் நம் இன எதிரிகள்!
இது நம் மக்களுக்கு எங்கே புரியப் போகிறது? நண்டுகளாகத்தானே ஒருவர் காலை இன்னொருவர் இழுத்துக் கொண்டு இருப்பர்.
விடுதலைக்குப் பாராட்டுத் தெரிவித்த கலைஞர் அவர்கள் நம்முடைய பணிகள் பற்றி முக்கியமான ஒரு தடத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார்.
நம்முடைய சமுதாயத்தைச் சீரழிக் கின்ற உயர் ஜாதியினருடைய ஆண வங்கள், அட்டகாசங்கள், அவர்களுடைய நிதானமற்ற போக்குகள், அவர்களுடைய நெறியை நம்முடைய நெறிகளோடு கலப்பதற்கு நடத்துகின்ற நரித் தந்தி ரங்கள்பற்றி நம் ஏடுகளின் வாயிலாகச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின் றோம் - என்று கலைஞர் அவர்கள் அழுத்தமாகக் கூறினாரே இத்தகைய கருத்துக்களை - உணர்வை ஊட்டும், ஈட்டி முனைகளை - திராவிடர் என்ற சொல்லைக் கட்சிகளின் பெயர்களில் பொறித்துக் கொண்டிருக்கும் கட்சிகளின் தலைவர்கள் வாயிலிருந்து வர முடியுமா? வந்திருக்கிறதா?
முடிந்தவரை முரசொலி செய்கிறது. விடுதலை அப்படியல்ல; எடுத்த எடுப் பிலேயே சனாதனத்தை மதத்தை மத வெறியை மடாதிபதிகளின் கொட்டத்தை எல்லாம் எடுத்துக்காட்டி, அவைகளை யெல்லாம் அடையாளம் காட்டி எச்சரித்து, எச்சரித்துக் கொண்டிருக்கிற புரட்சி ஏடுதான் விடுதலை இதழ் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை
மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை அப்பட்டமாக அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் மானமிகு கலைஞர் அவர்களால் தான் இப்படி யெல்லாம் சொல்ல முடியும்.
அரசியல் தனமாக சில்லறை இலாபங்களுக்காக திராவிடர் கழகத் தலைவரையோ, திமுக தலைவரையோ கொச்சைப்படுத்தும் வகையில் கோபுரத் தில் ஏறிக் கூவும் தமிழின அன்பர்கள், இயக்கத்தின் அடிநாதக் கொள்கை என்ற கோட்பாட்டுப் பார்வையோடு - ஆசாபாச சேற்றுக் குளியலைத் தவிர்த்து, கூர்மையாகக் கவனித்து, கணிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால் அப்புறம் என்ன பெரியார்? அப்புறம் என்ன அண்ணா? அப்புறம் என்ன இனமானம்? அப்புறம் என்ன திராவிட என்ற கட்சி முத்திரை?
கலைஞர் அவர்களின் உரை முத்தின் ஒளி என்ன சொல்லுகிறது?

தமிழ் ஓவியா said...

தமிழர்களே, தமிழர்களே, விடு தலையையும் முரசொலியையும் தவறாமல் வாங்குங்கள்! தவறாமல் படியுங்கள்!! என்ற வேண்டுகோள் அந்தவுரையில் ஒலிக்க வில்லையா!
அதினிலும் மேலாக திராவிட இயக் கத்தைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக திராவிடர் கழக திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கட்டாயம் இந்த ஏடுகளை வாங்கிட வேண்டும், படித்திட வேண்டும் என்ற கட்டளைகூட மிகுந்து நிற்கவில்லையா?
எதிரி ஏடுகள் ஒரு பக்கம் ஈட்டியைத் தூக்கிக் கொண்டு நிற்கின்றன என்றால் அந்தக் கும்பலோடு கூட்டு சேர்ந்து குழுப் பாட்டுப் பாடும் எட்டப்ப ஏடுகளாகவும் இதழ்களாகவும்கூட நம் இன ஏடுகள் குதித்துக் கொண்டு செயல்படுகின் றனவே! வெட்கக்கேடு அல்லவா!
தன்மானம் யாரால் வந்தது? இன மானம் ஊட்டப்பட்டது யாரால்? மொழி மானம் புயலாய்க் கிளம்பியது எப்பொழுது?
கல்வி உரிமை கிடைத்தது எந்தக் கால கட்டத்தில்? உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கும் அருகதைக்காக கொடி தூக்கி யவர்கள் யார்? சிறைக் கோட்டம் சென்றவர்கள் எவர்?
பெண்ணடிமை தகர்ந்தது எப்படி? பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது எந்த ஆட்சியில்? அவர்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் வாய்க்கப் பெற்றது எவரால்?
சூத்திரன் என்பதை சுவையான சுமையாகக் கருதி மகிழ்ந்த மக்கள் மத்தியில் (சூத்திரன் என்றால் வேறு ஒன்றும் இல்லை. வேசி மகன் என்ற பொருள்) சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி! என்ற சாட்டையை நம் கையில் கொடுத்துச் சுழற்றக் கற்றுக் கொடுத்த தலைவர் யார்? இயக்கம் எது?
இவை எல்லாம் மீண்டும் தலைகுப்புறக் கவிழ வேண்டுமா? இன்னும் மனுதர்ம மூக்கணாங் கயிறு பூட்டப்பட்ட பொதி மாடுகளாக நாம் ஆகப் போகிறோமா?
தமிழ் செம்மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று எழுதுவது தினமலர் பார்ப்பன ஏடு அல்லவா! வணிக விளம்பரப் பலகைகளில் தமிழ் இடம் பெற வேண்டும் என்றால் மொழி நக்சலிசம் என்று எழுதுவது பார்ப்பன இதழ் துக்ளக் அல்லவா!
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்றால் கிடந்தது கிடக் கட்டும் கிழவனைத் தூக்கி மணையில் வை என்று கதைக்கும் கல்கி பார்ப்பன இதழ் அல்லவா!
இந்த வரிசையில் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. இவைகளைத் தெரிந்து கொண்டால்தான் நாம் தமி ழர்கள் - தன்மானம் உள்ளவர்கள். உணராவிட்டால் சூத்திரர்கள்தாம் - பஞ்சமர்கள் தாம்!
இவற்றை ஒலிக்கும் சங்கநாதம் தான் தமிழர் தலைவருக்கு - விடுதலை ஆசிரியருக்கு நேற்று நடத்தப்பட்ட விழா!
பாராட்டு - தனிப்பட்ட எனக்கல்ல என்று தமிழர் தலைவர் கூறியதில் தன்னடக்கம் மட்டுமல்ல; தந்தை பெரியார் கற்றுக் கொடுத்த பொது நலமும், தொண்டறமும் இனநலமும் தலைதூக்கி நிற்கின்றன. இன்றைய கால கட்டத்தில் இந்த விழா ஒரு திருப்புமுனைவிழா.
தமிழா இனவுணர்வு கொள்!
தமிழா தமிழனாக இரு - இதுவும் தமிழர் தலைவர் கொடுத்த முழக்கம் தானே!
(வளரும்)

தமிழ் ஓவியா said...

50 ஆண்டுகள் விடுதலை ஆசிரியராக மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு விழா

நூறாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் ஏற்புரை



சென்னை, ஆக.26-விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவுப் பெருவிழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏற்புரையாற்றி தமிழர்தலைவர், நூறாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை பத்திரிகை சமுதாய எழுச்சிக்கு எங்கள் பயணம் தொடரும் என்றார்.

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாக தந்தை பெரியார் அவர்களை நிறுவனராகக் கொண்டு, தொடர்ந்து 78 ஆண்டுகள் வெளிவந்து கொண் டிருக்கும் சிறப்புக்குரியது விடுதலை நாளேடாகும். இந்த சாதனை நாளிதழின் மகுடத்தில் வைரமாக மிளிர்வது மற்றுமொரு சாதனை!



தமிழ் ஓவியா said...

உலகின் வேறெங்கும் எவரும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு தொடர்ந்து 50 ஆண்டுகள் (1962-2012) ஒரு நாளேட்டுக்கு ஆசிரியர் பொறுப்பில் தொடர்ந்து, சாதனை படைத்து வரும் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு நேற்று (25.8.2012) நிறைவுப் பெருவிழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் காலை முதல் இரவு வரை வெகுசிறப்பாக நடைபெற்றது.

நீதியரசர்களின் பாராட்டு

காலை 10.30 மணியளவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், பெரியார் பேருரையாளர் முனைவர் மா.நன்னன், திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமி துரை, இந்திய நீதிபதிகள் சங்க பொதுச்செயலாளர் இரா.பரஞ்சோதி வழக்குரைஞர் வீரசேகரன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் பங்கேற்று தமிழர் தலைவருக்கு பாராட்டுரை வழங்கினர்.

கலைஞர் தலைமையில் ஊடகங்களின் சங்கமம்

மாலை சரியாக 6.30 மணியளவில் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, மூத்த பத்திரி கையாளர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஊடகங்களின் பாராட்டுரை - கருத்துரை வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவரும், விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரி யருமான கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற் றினார். தமிழர் தலைவருக்கு மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் அனுப் பிய வாழ்த்து கடிதத்தை படித்தார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அறிமுகவுரை நிகழ்த்தினார்.

கலைஞர் தொலைக்காட்சி தலைவர் ரமேஷ் பிரபா, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன், லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர் ஜெக்மோகன்சிங் வர்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா தலைமை உரையை தி.மு.க. தலைவர் கலைஞர் நிகழ்த்தினார். திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் நன்றி கூறினார். திராவிடர் கழக மகளிர் பாசறை தலைவர் டெய்சி மணியம்மை இணைப்புரை வழங்கினார்.
இப்பெருவிழாவில் விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது ஏற்புரையில்:

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் விடுதலை, முரசொலி ஆகிய இரண்டு ஏடுகள் எதிர்நீச்சலில் வளர்ந்தவை. இவை செய்தித்தாள்கள் அல்ல. விழுந்த இனத்தை எழுந்து நிற்க கூடிய துணிச்சலை கொடுக்கக்கூடிய ஏடுகள்.




அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலனுக்கு திராவிடர் கழக தென் மண்டல பிரச்சாரக் குழு செயலாளர் தே.எடிசன் ராஜா சிறப்பு செய்தார்.



லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெக்மோகன் சிங் வர்மாவுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்க செயலாளர் கோ.கருணாநிதி சிறப்பு செய்தார்.



மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்திற்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிறைநுதல் செல்வி சிறப்பு செய்தார்.



கலைஞர் தொலைக்காட்சித் தலைவர் ரமேஷ் பிரபா அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் சிறப்பு செய்தார்.

பத்திரிகை மூலம் மிகப்பெரிய புரட்சி செய்தார் தந்தை பெரியார். எனக்கு அவர் கிடைத்தார். அவரது கொள்கைகள் கிடைத்தன. அவரது தத்துவத்தால் நான் மனிதன் ஆனேன். என்னைப் போல மற்றவர்களும் ஆக வேண்டும் என்று பாடுபடுகிறேன். பத்திரிகை சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும், உண்மையை எடுத்துச்சொல்வ தாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார். தந்தை பெரியார் ஒப்படைத்த பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எங்களுக்கு அன்று பெரியார் இருந்தார். இன்று எங்கள் மூத்த சகோதரராக கலைஞர்இருக்கிறார்.

நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை பத்திரிகை. சமுதாய எழுச்சிக்கு எங்கள் பயணம் தொடரும். தந்தை பெரியாரின் கொள்கைகள், லட்சியங்கள், திராவிட இயக்கத்தின் வெற்றி தொடரும். ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், இனத்தின் மீட்சிக்கு விடுதலை பத்திரிகை போர் வாளாகவும், கேடயமாகவும் எப்போதும் துணை நிற்கும் என தமிழர் தலைவர் தமது ஏற்புரையில் குறிப் பிட்டார்.

தமிழர் தலைவருக்கு முத்தமிழ் அறிஞர் சிறப்பு

முன்னதாக இப்பெருவிழாவிற்கு தலைமை யேற்று வாழ்த்துரை வழங்க வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி, கழக நூல்களையும் வழங்கினார். இதையடுத்து, விடு தலை ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் களுக்கு கலைஞர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ் ஓவியா said...

விழா விருந்தினர்களுக்கு சிறப்பு

இவ்விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி சிறப்பித்த, அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன் அவர்களுக்கு திராவிடர் கழக தென்மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் எடிசன் ராசா சால்வை அணிவித்தார். தமிழர் தலைவர் புத்தகங்கள் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார். லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர் ஜெக்மோகன்சிங்வர்மாவுக்கு, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி சால்வை அணிவித்து கழகப் புத்தகங்களை வழங்கினார். தமிழர் தலைவர் நினைவுப்பரிசு வழங்கினார்.

மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, திராவிடர் கழக பொதுக்குக்குழு உறுப்பினர் டாக்டர் பிறைநுதல் செல்வி சால்வை அணிவித்து கழகப் புத்தகங்களை வழங்கினார். தமிழர் தலைவர் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார்.

கலைஞர் தொலைக்காட்சியின் தலைவர் ரமேஷ் பிரபா அவர்களுக்கு திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் சால்வை அணிவித்து கழகப் புத்தகங்களை வழங்கினார். தமிழர் தலைவர் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார்.

இவ்விழாவில் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, வரியியல் வல்லுநர் ராஜரத்தினம், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், உரத்தநாடு இரா.குண சேகரன், துரை.சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, செங்கல்பட்டு மாவட்டதலைவர் அ.கோ.கோபால்சாமி, திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் நாக லிங்கம், சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணைவேந்தர் வி.பி.நாராயணன், முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன், மு.பா.பால சுப்பிரமணியம் மற்றும் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், செங்கை சிவம், கயல்தினகரன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் நல்.ராமச்சந்திரன், திருச்சி பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர் பி.சுப்பிரமணியம், திருமதி மோகனா வீரமணி, எழுத்தாளர்கள் க.திருநாவுக்கரசு, முன்னாள் மேயர் சா.கணேசன், சாவல்பூண்டிசுந்தரேசன், வழக்குரைஞர் வீரசே கரன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, டாக்டர் கவுதமன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பி.பட்டாபிராமன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர், கி.தளபதிராஜ், ஆடிட்டர் இராமச் சந்திரன், மதுரை மண்டல இளைஞரணி செய லாளர் இல.திருப்பதி, காஞ்சிபுரம் மாவட்ட தலை வர் டி.ஏ.ஜி. அசோகன், காஞ்சி கதிரவன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கோவை பழ. அன்பரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள், சி.வெற்றிச்செல்விபூங்குன்றன், கு.தங்க மணி, பசும்பொன், மீனாட்சி, தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, வடசென்னை தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர், தி.மு.க. பகுதிச் செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் திருவள் ளுவன், செயலாளர் கி.இராமலிங்கம், கழக கரூர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.க.இராஜசே கரன், வேலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம், செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், சென்னை மண்டல கழகத் தலைவர் தாம்பரம் தி.இரா.இரத் தினசாமி, செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன், காரைக்குடி மாவட்ட செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர்-தோழியர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்து பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

விடுதலை பற்றிய தகவல் ஆவணப்படம் ஒன்று விழா மேடையில் ஒளிபரப்பப்பட்டது





விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவுப் பெருவிழாவில் பங்கேற்றோர் (25.8.2012)

தமிழ் ஓவியா said...

லகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியா? தமிழர் தலைவர் கண்டனம்


நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரி களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இம்மாதம் 19 ஆம் தேதிமுதல் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

தாம்பரம் விமானப் படையில் பயிற்சி

சென்னை - தாம்பரம் விமானப் படை நிலையத்தில் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதை எதிர்த்து தமிழ்நாட்டில் வலுவான குரல் கிளம்பியதையடுத்து தாம்பரத்திலிருந்து பெங்களூருவுக்குப் பயிற்சி அளிப்பதை மாற்றினர். அதுவே ஒரு தவறான முடிவாகும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த - கொன்று குவிக்க இருக்கிற ஒரு இராணுவத்துக்குப் பயிற்சியைத் தாம்பரத்தில் அளித்தால் என்ன? பெங்களூருவில் அளித்தால் என்ன? இது ஓர் ஏமாற்று வேலைதான்.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல மீண்டும் இலங்கை இராணுவ அதிகாரி களுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?

தமிழ்நாடு அரசின் சார்பிலும், முக்கிய எதிர்க்கட்சிகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தும், மத்திய அரசு இப்படி நடந்துகொள்வது தமிழர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்துவதாகும்.

டெசோ மாநாட்டுத் தீர்மானம்

12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டிலும் இத்தகைய பயிற்சியை அளிக்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஈழத் தமிழராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி - அவர்களை அலட்சியப்படுத்தும் தன்மையில் நடந்துகொள்வதாகவே கருதுகிறோம்.

மத்திய அரசின் நோக்கம் என்ன?

அந்த நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் வெளிப்படை யாகக் காட்டிக்கொள்ள மத்திய அரசு கடமைப் பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படும் பிரச்சினையிலும் மத்திய அரசு பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்பதும் வெளிப் படை.

உலகத் தமிழர்கள் மத்தியில் உருவாகிவரும் சிந்தனை;

சுண்டைக்காய் நாடான இலங்கையிடம் இந்திய அரசு ஏன் இப்படி நடந்துகொள்ளவேண்டும்? எந்தக் காரணத் துக்காக அப்படி நடந்துகொண்டாலும் சரி, ஈழத் தமிழர் களுக்கும் (இந்தியாவின் தெற்கேயுள்ள மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தமான தமிழின மக்களின் தொப்புள்கொடி - ரத்த உறவுக்காரர்கள்) தமிழ்நாட்டுத் தமிழர்களான மீனவர்களுக்கும் இலங்கைப் பயங்கரவாத அரசால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கை களுக்கு எந்த வகையில் (இராணுவப் பயிற்சி உள்பட) துணைபோகும் வகையில் இந்திய அரசு நடந்துகொண்டு வருவது - உலகத் தமிழர்கள் மத்தியிலே புதிய சிந்தனை களைத் தோற்றுவிக்க வழிவகுக்கக் கூடியதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

31 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திலும்
சேர்த்துக் கொள்க!

எனவே, கழகத் தோழர்களே, வரும் 31 ஆம் தேதியன்று காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு எனும் நான்கு பொருள்களை மய்யப்படுத்தி மாவட்ட தலைநகரங்களில் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களுடன் இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதைக் கண்டிப்பதையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திருவாரூர்
27.8.2012

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

விடுதலையின் பணி!

விடுதலை என்னும் தமிழர்களின் பாது காப்புக் கேடயமான ஏட்டிற்கு அரை நூற் றாண்டு காலம் ஆசிரியராக இருந்து சாதனை புரிந்த ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர் களுக்குப் பாராட்டு விழா - சென்னை பெரியார் திடலில் 25.8.2012 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1962 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் தனது முதல் தலையங்கத்தை எழுதினார் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (25.8.1962).

வரியில்லாமல் ஆட்சி நடக்குமா? -என்பதுதான் அந்தத் தலையங்கம். அன்று தொடங்கி, ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட தலையங்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 13,499; எழுதப்பட்ட அறிக்கைகள் 1926.

இந்தத் தலையங்கங்களும், அறிக்கைகளும் பல துறைகள் சம்பந்தப்பட்டவை. விடுதலை யின் இந்த எழுத்துகள் எத்தனை எத்தனையோ மாற்றங்களுக்கு விதை ஊன்றி இருக்கின்றன.

ஆட்சியின் ஆணைகள் மாற்றப்பட்டுள்ளன - புதிய சட்டங்கள் பிறப்பிப்பதற்கும் கைமுதல் கொடுத்திருக்கின்றன.

தலையங்கப் பகுதிகளில் சில நேரங்களில் தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளன.

எழுத்துரிமை பறிக்கப்பட்டதற்காக தலை யங்கப் பகுதி வெற்றிடமாக விடப்பட்டதும் உண்டு.

முரசொலி நாளேட்டின் ஆசிரியர் திரு. செல்வம் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்படுவதன் மூலம் எழுத்துரிமை அ.இ.அ.தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டதற்கு விடுதலை ஏடு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதன் அடையாளமாக தலையங்கப் பகுதி வெற்றிடமாக விடப்பட்டது (21.9.1992).
அரசு ஊழியர்களுக்கு இருந்த இரகசிய குறிப்பேடு முறையை எதிர்த்து எத்தனை எத்தனைத் தலையங்கங்கள் தீட்டப்பட்டன! கடைசியில் வெற்றியும் கிடைத்தது.

நுழைவுத் தேர்வை எதிர்த்து எத்தனை எத்தனை நுட்பமான தலையங்கங்கள் - கடைசியில் விடுதலைக்கே வெற்றி! வெற்றி!!

விடுதலையின் வரலாற்றில் அரசு நூலகங் களில் விடுதலை இடம்பெறத் தடை செய்யப் பட்டதுண்டு. 1950 இல் அப்படி தடை செய்யப் பட்டபோது விடுதலையில் ஒரு தலையங்கம் (3.2.1950). தலைப்பு வைக்கோலுக்குள் விடுதலை விளக்கு என்பதாகும்.

ஆட்சியாளர் சுடர்விட்டு எரியும் விடுதலை விளக்கையெடுத்து வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்துவிட்டார்கள். பொதுமக்கள் காண முடியாதபடி, விளக்கை மறைத்து விட்டதாக ஆட்சியாளர் முடிவு என்று எழுதியது.

இப்பொழுதுகூட தமிழ்நாட்டை ஆளும் அ.இ. அ.தி.மு.க. அரசால் விடுதலை அரசு நூலகங் களுக்குப் போடக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் விளைவு 50 ஆயிரம் சந்தாக்கள் தமிழர்களிடம் திரட்டப்பட்டு புதிய வாசகர்கள் கிடைத்துள்ளனர்.

விடுதலைக்குள்ள தனித்தன்மை ஒன்று உண்டு. ஆளும் கட்சியினை எதிர்க்கும் நிலைப் பாடு எடுக்கப்பட்டபொழுதும்கூட, அந்த ஆட்சியில் ஏதாவது நன்மை விளைவிக்கும் காரியங்கள் நடைபெற்றால், அதனை வரவேற்று எழுதிடத் தயங்குவதில்லை.

எதிர்த்து எழுதுவதில் எவ்வளவு வேகம் இருக்குமோ, அதேபோல் ஆதரிக்க வேண்டிய அவசியம் இருந்தால் விடுதலை தன் கண் களை மூடிக்கொள்ளாமல் மனந்திறந்து பாராட்டவே செய்யும்.

அத்தகைய பண்பட்ட விடுதலை தமிழர் இல்லந்தோறும் ஒளிவிளக்காகத் திகழ வேண் டாமா? தமிழர்கள் எண்ணிப் பார்க்கட்டும்! 27-8-2012