Search This Blog

7.8.12

புதுவையிலேயே புரட்சிக் கவிஞருக்குப் புறக்கணிப்பா?

புதுச்சேரிக்குப் பெரும் புகழ் - புரட்சிக் கவிஞரை ஈன்றெடுத்தது தான். அந்தப் புதுவையிலேயே புரட்சிக் கவிஞருக்கு இருட்டடிப்பு - புறக்கணிப்பு என்றால் எப்படி பொறுத்திட முடியும்?

புதுச்சேரியில் மத்திய பல்கலைக் கழகம் ஒன்று இருக்கிறது. பெரும் பாலும் தமிழ் தெரியாத பிற மாநிலத் தவர்கள்தான் இதற்குத் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.

மத்திய அரசு என்றாலே பொதுவான கருத்து  - மாநில உணர்வு களைப் புறக்கணிப்பது என்பதுதானே! அந்த வகையில் இப்பொழுது புதுச் சேரி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர் தரீன் - கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரைப் பற்றி ஏராளமான புகார்கள் ஒரு புறம். கெடு முடிந்தும் துணை வேந்தராகத் தொடர்ந்து கொண்டு இருப்பது எந்த சட்டத்திலோ?


தமிழ் நாட்டில்  - மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் நீராரும் கடலுடுத்த என்று தொடங்கும் பாடலை கடவுள் வாழ்த்திற்குப் பதிலாக மொழி வாழ்த்தாகப்பாட ஆணை பிறப்பித்தவர் மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

அது போல புதுவை மாநிலத்தின் அரசு விழாக்களில் பாடப்படும் பாடல் புரட்சிக் கவிஞரின் வாழ்வினில் செம்மையைச் சேர்ப்பவள் நீயே எனத் தொடங்கும் பாடலாகும்.

புதுவைப் பல்கலைக் கழகத்திலும் இந்தப் பாடலே பாடப்பட்டும் வந்தது. கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்தத் தரீன் என்ன செய்தார் தெரியுமா?

தானே ஒரு பாடலை எழுதி, அதனைத் தமிழில் மொழி பெயர்க்கச் செய்து, அந்தப் பாடல்தான் பாடப் படவேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்கி விட்டார்.

புரட்சிக் கவிஞர் பிறந்த ஊரிலேயே இப்படி ஒரு புரட்டல் வேலை நடந்திருக்கிறது. எந்த மாநிலத்தில் பல்கலைக்கழகம் இருக்கிறதோ, அந்த மாநில அரசு ஏற்படுத்தியுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டாமா?

மற்றவற்றிற்கெல்லாம் மரபுகள் பற்றிப் பேசும் பேர்வழிகள் தமிழ் என்று வந்துவிட்டால் மட்டும் மாற்றிப் பேசுவார்களா?

எப்படி இது அனுமதிக்கப்பட்டது? புதுவை பல்கலைக் கழகத்தில் தமிழ் உணர்வு படைத்தவர்கள் யாரும் இல்லையா?

இந்தப் பிரச்சினையையும் திராவி டர் கழகம்தான் கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
சிந்திப்போம் - செயல்படுவோம்!

                        ---------------------"விடுதலை” 7-8-2012

6 comments:

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்


சென்னை, ஆக.7- ஆகஸ்டு 12ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ள டெசோ மாநாட் டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து டெசோ தலை வர் கலைஞர் அவர்கள் விளக்கியுள்ளார். அறிக்கை வருமாறு:

இந்த மாநாட்டில் நாம் நிறைவேற்றவுள்ள தீர்மானங்கள் எல்லாம் போரினால் பாதிக்கப் பட்டும், இடம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் களின் வாழ்வாதாரங் களை வளப்படுத்தி உயர்த்துவதற்கும், ஜன நாயக உரிமைகளோடு கண்ணியத்துடன் வாழ்வதற்கும், அதற்கு தாய்த் தமிழகத்திலே உள்ள நாமும், இந்திய அரசும் எந்த வகையில் எல்லாம் உதவிட முடி யும் என்பதை வலியுறுத் துவதற்காகவுமான முயற்சியிலே ஈடுபட்டுள் ளோம்.

ஈழத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியில்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடு களில் குடியேறி புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயராலும், அக திகள் என்ற பெயராலும் அல்லாடிக் கொண்டி ருக்கும் நமது தமிழ் இனத்தவர் மீண்டும் இலங்கை திரும்பி அமைதியானதும், உரி மையுடன் கூடியதுமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவ னங்களின் மூலம் என் னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் இந்த மாநாட்டின் ஆய் வரங்கில் நாம் கலந்து பேசி முடிவெடுக்கவுள் ளோம்.

இலங்கையில் சிங் களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் காயங்க ளுக்கும் - அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு! இந்த மாநாட் டிற்கான மய்ய நோக் கத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் பங்கேற்க வேண்டுமென உன் அண்ணன் அழைக் கின்றேன் என்றார்.7-8-2012

தமிழ் ஓவியா said...

தினந்தந்தி தலையங்கம் நீதிபதி விமலா தந்த நீதி

தமிழ்நாடு,இந்தியாவுக்கு எத் தனையோ சிறப்புகளை, பெருமைகளைத் தந்துள்ளது. குறிப்பாக, மூடப்பழக்க வழக்க இருளில் சிக்கித் தவித்த சமு தாயத்துக்கு, பகுத்தறிவுக் கொள்கை களை, கதிர்களாய் வீசிய பகலவன் தந்தை பெரியாரை, இந்தியாவுக்கு தந்தது தமிழ்நாடுதான். அன்று, அவர் மேற் கொண்ட போரின் வெற்றியால்தான், இன்று, பலர் தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கொண்டிருந்த பெண் இனம், இன்று, ஆண்களுக்கு நிகராக வாழ்கிறார்கள் என்றால் அந்த விதையை விதைத்தவர் தந்தை பெரியார்தான். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைத்ததற்கு காரணமான தந்தை பெரியாரை ஆண்கள் போற்றுகிறார் களோ இல்லையோ, பெண் இனம் மறக்கவே கூடாது. மறப்பதும் நியாயம் இல்லை. பெண் என்பவள், வீட்டில் சமை யல் செய்வதில் இருந்து குடும்பத்தில் உள்ளவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான ஒரு இயந்திரமாக கருதப்பட்ட காலத்திலேயே பெண் அடிமை ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தில், "பெண் ஏன் அடிமை யானாள்?'' என்ற கேள்வியை பதித்தவர் தந்தை பெரியார்.

கணவன் இறக்க நேரிட்ட நிலையில், விதவைகள் மறுமணம் செய்வதை ஆத ரித்து அவர் எழுதிய கட்டுரைகள் இப் போது இருளில் நடக்கும் சமுதாயத்துக்கு வெளிச்சத்தைக் காட்டுவதாகும். நாட்டில் ஆங்காங்கு `விதவா' விவாக சபைகள் நடத்தியும், பிரசங்கங்கள் செய்தும் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டும் விதவைத்தன்மையை ஒழிக்க சமுதாயம் முன்வரவேண்டும் என எழுதிய அவர், மறுமணம் தவறல்ல என்பது பற்றி குறிப்பிடும்போது, எல்லா மதங்களிலும் ஒன்றுக்கொன்று நிபந்தனைகளிலும் திட்டங்களிலும்தான் வித்தியாசமே தவிர, மற்றபடி மறுமண கொள்கையில், எந்த மதமும் ஆட்சேபித்து இருப்பதாக தெரிய வில்லை என்று கூறினார். இத்தனை ஆண்டுகள் கழித்தும், பெரியார் கண்ட கனவு இன்னும் நிறைவேறவில்லை என்பதுதான் மனதுக்கு வேதனையாக இருக்கிறது.

அன்று, பெரியார் செய்த அதே சமூக சீர்சிருத்த ஆயுதத்தை இன்று உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் கையில் எடுத்தி ருப்பதை பார்க்கும்போது, பெரியார் கண்ட கனவு நிறைவேற தாமதமானாலும், நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம், மதுராவில், விருந்தாவன் என்ற இடத்தில், வீடுகளில் கைவிடப்பட்ட, ஆதரவற்ற விதவைகளை அங்கே உள்ள புகலிடங்களில் விட்டுவிட்டு போய்விடுவார்கள். அங்கு, ஒரு விதவை இறந்தால், அவருக்கு இறுதி சடங்கு செய்வதற்கு பணம் இல்லாததால், அவள் உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக் கில் போட்டு தூர எறிந்து விடும் பழக்கம் நடைமுறையில் இருந்ததைப்பார்த்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி லோக்கூர் ஆகியோர், இனி மேலும் இதுபோல கொடுமைகள் நடக்கக் கூடாது.

அவர்களின் இறுதி சடங்குகள் கவுரவமாக நடத்தப்படவேண்டும் என்பது உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு கடு மையான உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதே நாளில், சென்னை அய்கோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா, மதுரை கிளையில், ஒரு சீர்திருத்த தீர்ப்பை வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நெல்போனா என்ற இளம்பெண், தன் கணவர் ஒரு விபத்தில் மரணம் அடைந்து, இழப்பீடு கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், "அவர், மறுமணம் செய்து விட்டார் ஆகவே இழப் பீட்டு தொகை பெறுவதற்கு அவருக்கு தகுதியில்லை'' என்று இன்சூரன்ஸ் கம்பெனி கூறிய நேரத்தில், நீதிபதி விமலா, "விதவைகள் மறுமணம் செய்வது தவறு இல்லை'' என்று ஆணித்தரமாக, ஆதாரங்களோடு கூறி உள்ளார்.

அவரு டைய கணவர் உயிரோடு இருந்திருந் தால், மறுமணத்தைப்பற்றி அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். விவாகரத்து செய்த நிலையிலோ அல் லது இதுபோன்ற வேறுசில சூழ்நிலை களிலோ அவர் மறுமணம் செய்யவில்லை. விதவைகள் மறுமணத்தை சமுதாயம் ஆதரிக்க வேண்டும்'' என்று, அடுக்கடுக் காக பல கருத்துகளை விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாக கூறி, மறுமணம் செய்ததால், அவர் இழப்பீட்டு தொகையை பெற தகுதியற்றவர் என்ற கருத்தை உதறித்தள்ளி, இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விதவைகளுக்கு ஒரு இழிவு அல்லது தாழ்வு அல்லது அவமானம் என்பது அவர்கள் உயிரோடு இருக்கும் நேரத் திலோ அல்லது மறைந்த பிறகோ ஏற்படக் கூடாது என்ற வகையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பும், சென்னை அய்கோர்ட்டு நீதிபதி விமலா தந்த நீதியும், விதவைகள் வாழ்வில் நிச்சயமாக ஒளி யேற்றுகிறது.

(நன்றி: தினத்தந்தி 7.8.2012)

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம்

வழிகாட்டியே பிழையாகலாமா?

சென்னை பாரிமுனையில் நடந்த ஆடிப் பொங்கல் விழாவில் 108 பெண்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார் என்ற செய்தியினைப் படித்த பகுத்தறிவாளர் அனைவரும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள்!..

அரசுக்கு எந்த ஒரு மதமும் இல்லை என்பதுதான் மதச் சார்பின்மைக்குப் பொருள். அரசுக்கு மதம் உண்டு எனப் பிரகடனப்படுத்தவோ, மத அரசை உண்டாக்கவோ எவருக்கும் அதிகாரமில்லை இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை 2004 மார்ச் 31 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜா, அரிஜித்பசயட் ஆகியோர் அளித்திருக்கிறார்கள்!

ஆனால், சென்னை மாவட்ட ஆட்சியரோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பையே துச்சமென ஒதுக்கிவிட்டு, இத்தகைய மதவிழாவில் கலந்து கொண்டதன் வாயிலாக நீதிமன்றத்தையே அவமதித் திருக்கிறார். ஹிக்ஸ்போசான் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடவுள் நம்பிக்கையே தூள், தூளாக்கப்பட்டுவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டு, இப்படி அறிவியலை மட்டுமல்ல, தான் கற்ற கல்வியையே கேலிப் பொருளாக்குவது உண்மையிலேயே வருந்துதற் குரியது! கண்டனத்திற்குரியது!!

அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டே அறியாமைக்கு வித்திடுவதா? அதுவும் ஆட்சியராக இருந்து கொண்டு!

இந்த அவலம், உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; உடனடியாக வழிகாட்டியே பிழையானால் எப்படி ஒழுங்காக ஊர் போய்ச் சேருவது?

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...

ஆகஸ்ட் 7ஆம், மறக்க முடியாத அந்த ஆகஸ்டு 7. இதே நாளில்தான் - இன்றைக்கு 22 ஆண்டுகளுக்கு முன் (1990) சமூகநீதி சரித் திரத்தின் ஒப்புயர்வற்ற மணிக்கொடி பறக்க விடப்பட்ட நாள்.

நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகிய சமூக நீதிச் சீலர்களின் பெயர்கள் மிகப் பொருத்தமாக உச் சரிக்கப்பட்ட உன்னத நாள். இவர்களின் பெயர் களை உச்சரித்த அந்த உதடுகளுக்குச் சொந்தக் காரர் அரசியல் உலகில் அதிசய மனிதரான மாண்புமிகு வி.பி. சிங்.

அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாற்பது ஆண்டுகளுக் குப் பின் முதன் முதாகப் பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட மகத் தான நாள்.

இவர்களின் பேரேட்டில் கணக்கைத் தொடங்கி வைத்த முதல் மாமனிதன் வி.பி. சிங். அதனால்தான் சமூக நீதிக் காவலர் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் உறைந்து ஒளி வீசிக் கொண்டு இருக்கிறார். மக்கள் தொகையில் 52 விழுக்காடு உடைய (மண்டல் குழு அறிக்கை யில் கண்டுள்ளபடி) பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு முதன் முதலாக சமூக நீதிக் கணக்கைத் தொடங்கியதற்காக அவ ரின் ஆட்சிக் கணக்கை முடித்தது ஆரியப் பார்ப்பன சக்திகள்.

அதற்காக அந்தப் பெரிய மனிதர் கவலைப் படவில்லை. சமூக நீதிக் காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் என்று நாடாளு மன்றத்தில் ஓங்கி ஒலித்த அந்தக் குரலின் ஓசை நாடாளுமன்றம் உள்ள வரைக்கும் அங்கு ஒலித் துக் கொண்டு தானிருக் கும். பதவிக்காகக் கொள் கைகளை தலையைச் சுற்றி வீசி எறியும் அரசி யல்வாதிகள் மத்தியில் கொள்கைக்காகப் பத வியை எட்டி உதைத்துத் தள்ளிய அந்தத் தன்னி கரற்ற மண்டல் நாய கனை மனச் சிம்மாசனத் தில் வைத்துச் சீராட்டு வோம்!

வாக்கெடுப்பில் தம் ஆட்சி கவிழும் என்று தெரிந்திருந்தும் ஏன் அதற்குச் சம்மதித்தார்?

அதையும் அவர் வாயாலேயே கேட்போம்! சமூக நீதியில் யார் எந்தப் பக்கம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண் டாமா?

அடடே, என்னே கொள்கைப் பார்வை! உத்தமச் சரிதம்! வாழ்க வி.பி. சிங்!

- மயிலாடன் 7-8-2012

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டின் சரித்திரத்தில் திராவிடன் என்ற சொல் மறைந்து போய்விட்டது. இன்றைக்கு யார் யாரோ திராவிடன் என்று, அந்தச் சொல்லுக்குள்ள மகிமை தெரியாமல் திராவிடன் என்ற சொல்லிக்கொள்கிறார்கள். திராவிடன் என்றால் அவன் மூடநம்பிக்கைக்கு விரோதி, ஆரிய தருமத்திற்கு விரோதி, நூற்றுக்கணக்கான சாதிகள் என்று சொல்லுகின்ற அந்த மனு-தர்மத்திற்கு விரோதி, மனிதனை மனிதனாக மதிக்கவேண்டும், மானத்தோடு வாழவேண்டும். இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவன்தான் திராவிடன்.

(11.10.2006 அன்று சேலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர்)

தமிழ் ஓவியா said...

அறுத்துச் சமைத்த கோழி உயிர் பெறுமாம்!

முருகனுக்கு அறுபடை வீடுகளாம். அதில் ஒன்று திருத்தணியாம். வருடா வருடம் முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் காவடி எடுத்துப் போவார்கள் - மொட்டை போடுவார்கள். அறுத்த கோழி உயிர் பெறும் என்பார்கள். (அவனே மொட் டையன்தானே!)

ஒரு முறை தந்தை பெரியாரும், அவர்களின் நண்பர்களான சென்னை மாநில முதல் மந்திரியாக இருந்த முனுசாமி நாயுடு, சி.எஸ். இரத்தினசபா பதி முதலியார் ஆகியோர் பழனி சென்றனர். (1936 இல்)

பெரியார் மலை அடிவாரத்தில் இருந்து கொண்டு, மற்ற இருவரும் மலைக்குச் சென்று கீழே இறங்கினர்.

மலையின் அடிவாரத்தில் ஒரு விபூதி கடைக்காரன் இரண்டு சேவல்களைத் தன் கடையின் முன் கட்டி, அதன் மீது மஞ்சள், குங்குமம் தெளித்து, வெற்றிலைப் பாக்கை முன்னால் வைத்து, ஒரு உண்டியலையும் வைத்திருந்தான். அங்கு ஜனங்கள் கூட்ட மாக நின்று சேவல்களைக் கும்பிட்டு, உண்டில் கலத்தில் காசு போட்டுக் கொண்டிருந்தனர்.

பெரியார் என்ன என்று கேட்டார். அதற்கு அந்தக் கடைக்காரன் பெரியாரையும் ஒரு பக்தர் என்று நினைத்துக் கொண்டு, இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள் என்று சொன்னான். அதாவது அறுத்துச் சமைத்து காவடி கட்டிக் கொண்டு வந்த சேவல்கள். கடவுள் சன்னதியில் உயிர் பெற்றுவிட்டன என்று விளக்கினான்.

தன்னோடு வந்த இரு நண்பர்களிடமும் பெரியார் விளக்கினார். இப்படிப் பட்ட ஆட்கள்தான் உங்கள் பிரச்சாரத்திற்கு அனு கூலம் செய்துவிடுகிறார்கள் என்றும், நாங்கள் இதையெல்லாம் நம்பமாட் டோம் என்று சொல்லிச் சிரித்தார்.
(ஆதாரம் குடிஅரசு 19-1-1936)

இப்படிப் பித்தலாட்ட மாக மக்களை ஏமாற்றிடத்தான் திருத்தணி உள்ளிட்ட முருகன் கோயில்கள்.

மக்கள் மத்தியில் பக்தி மூட நம்பிக்கை உள்ளவரை - இது போன்ற சுரண்டல் தொழில்களும் ஜாம் ஜாமென நடக்கத்தான் செய்யும்.

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளுள் தலையானது மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி மட்டுமே!

அறிவிருந்தும் அதனை முடக்கச் செய்யும் அமைப்பு முறைதான் கோவில்களும், விழாக்களும் என்ற பிரச்சார யுக்திகள்

அறிவைக் கெடுப்பாருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகிறார் என்றால், அதன் பொருள் - பகுத்தறிவின் மீது அவர் வைத்திருக்கும் மதிப்பு எத்தகையது என்று விளங்கும்.

-------------------"விடுதலை” 26-8-2011