Search This Blog

6.8.12

ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவை எப்படி மறக்க முடியும்?


"மநுதர்ம சாஸ்திரம்" என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்ட திட்டங்களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். அதில் உள்ள நீதிகளும், விதிகளும், எந்த விதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவது அவசியமாகும். ஆதிதிராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தார்கள் வரை இந்த மநுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்து மதத்தில் இருப்பதைவிட பிறமதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக்கொள்வது சரியா? பிசகா? என்பதையும், அல்லது இம்மாதிரியான அநீதியான சட்ட திட்டங்கள் அமைந்துள்ள "இந்து" மதத்திலேயே அடிமைப் பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1. "பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம் சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது". அத்தியாயம் 8, சுலோகம் 20.

2. "சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடையதாயிருக்கும்". அ.8. சு.22.

3. "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி". அ.8. சு.22.

4. "ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை". அ.8 சு.112.

5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்லச் செய்ய வேண்டும்; பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர்போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணரவேண்டும்". அ.8. சு.113 115.

6. "சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்". அ.3. சு.270.

7. "சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளைச் சொல்லித் திட்டினால், 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்". அ.8. சு. 271.

8. "பிராமணனைப் பார்த்து "நீ இதைச் செய்ய வேண்டும்" என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்". அ.8. சு.272.

9. "சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்." அ.8. சு.281.

10. "பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை." அ.8. சு.143.

11. "சூத்திரன் பிராமணப் பெண்னைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்".

"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும் எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்." அ.8. சு.380.

12. "அரசன், சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிடவேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்". அ.8. சு.410.

13. "பிராமணன் கூலி கொடாமலேயே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான்". அ.8. சு.413.

14. "பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாகமாட்டான்". அ.8. சு.417.

15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேரவேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது". அ.9. சு.416.

16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை". அ.8. சு.155.

17. "பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தன் இஷ்டப்படி கொள்ளையிடலாம்". அ. 9. சு. 248.

18. "பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்". அ.9. சு.317.

19. "பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவார்கள்". அ.9. சு.313.

20. "பிராமணனிடமிருந்து க்ஷத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பஞ்செய்தால், அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்". அ.9. சு. 319, 320.

21. "சூத்திரனுக்கு பிராமணப் பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்யவேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன் பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால் களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக்கொள்ள உரிமையுண்டு". அ. 11. சு.12.

22. "சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்". அ.11. சு.13.

23. "யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது" அ.11. சு.20.

24. "பெண்களையும், சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்". அ. 11. சு.66.

25. "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்". அ. 11. சு.131.

25. (அ) "அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது". அ. 11. சு. 132.

26. "க்ஷத்திரியன் இந்நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்". அ. 11. சு. 285.

27. "சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவான்; பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனே யாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்". அ.11. சு.75.

28. "பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால், அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்". அ.10. சு.96.

29. "சூத்திரன் இம்மைக்கும் மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்". அ. 10. சு.96.

30. "பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், கெட்டுப்போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்குக் கொடுக்கப்படும்". அ.10. சு.125.

31. "சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக்கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்க விட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்". அ. 10. சு.129.

32. "மனுவால் எந்த வருணத்தானுக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்". அ. 2 சு.7.

இன்னும் இவை போன்ற ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும் ஒரு சாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால், "பிராமணன்" என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை "மனுதர்மம்" என்று கூறுவதா அல்லது "மனு அதர்மம்" என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.


---------- தந்தைபெரியார் -”குடி அரசு” துணைத் தலையங்கம் 05.04.1936

11 comments:

தமிழ் ஓவியா said...

வாழ்க அண்ணா நாமம்!பவானி சாகர் அணையில் மழை வேண்டி சிறப்பு யாகம் என்பது ஒரு செய்தி.

இதனைப் படிக்கும் பொழுது நாம் 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான் இருக்கிறோமா? அல்லது வேத காலத்தில் இருக்கிறோமா என்று தெரியவில்லை.

முதலில் ஒரு கேள்வி. யாகம் நடத்தி, பூசை போட்டு மனு போட்டு தான் வருண பகவான் மக்களுக்குத் தேவையான மழையைக் கொடுக்க வேண்டுமா? ஒழுக்கமான, நாணய மான நல்லறிவு படைத்தவனாக இருந்தால் மக்களுக்குத் தேவையான மழையைப் பருவ காலத்துக்கேற்பக் கொடுக்க வேண்டாமா?

இதற்குமுன்பு இதுமாதிரி யாகங்கள் நடத்தப்பட்டதே அப்பொழு தெல்லாம் ஏன் மழை பொழியவில்லை என்று ஒரு பொழுதாவது சிந்தித்த துண்டா?

கலச ஆவாதனம்; நவக்கிரக ஆவா தனம் - சப்த சமுத்திர ஆவாதனம் போன்ற பூசைகள் விடிய விடிய (4.8.2012) நடத்தப்பட்டதாம்!

வெட்கக்கேடு - மழை ஒரு சொட்டுக்கூட பெய்யவில்லை. இந்த இலட்சணத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் இராமலிங்கம், வருவாய்த் துறை அமைச்சர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தரம், ரமணீதரன் நாராயணன், கிட்டுசாமி (வாழ்க அண்ணா நாமம்!) மாவட்ட ஆட்சியர் நாராயணன் (வாழ்க மதச் சார்பின்மை!) ஆகியோரும் கலந்து கொண்டனராம்.


விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் துண்ட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத் தில் (51A(h) கூறப்படுவதன் இலட் சணம் இதுதானா? படித்தவர்களே மந்திரத்தால் மாங்காய் விழும் என்று நினைத்தால் பாமர மக்களை நொந்து என்ன பயன்? 6-8-2012

தமிழ் ஓவியா said...

சுனாமியைத் தடுக்க மகா மந்திர ஜபமாம்!


இன்னொரு கூத்து கடலூரில்: கடலூர் இயற்கைச் சீற்றத்திற்கு அடிக்கடி ஆளாகிறதாம்; அதிலிருந்து கடலூர் மக்களைக் காப்பாற்ற வரும் 12ஆம் தேதி மகா மந்திர ஜப வேள்வி நடத்தப்பட இருப்பதாக உளுந்தூர்ப் பேட்டை அப்பர்சுவாமிகள் மடத்தைச் சேர்ந்த சிவராம தேசிக சுவாமிகள் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

சாமியார்கள் எல்லாம் இப்பொழுது செய்தியாளர்களைச் சந்திக்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரப் போதை யாரைத் தான் விட்டது!

கடலூரில் கோயில்களும், திரு விழாக்களும், ஆறுகால பூஜைகளும் நாளும் நடந்து கொண்டுதானே இருக்கின்றன? அவற்றிற்கெல்லாம் சக்தியில்லையா? அவையெல்லாம் போதுமானவையல்ல என்று பகவான் இந்த அப்பர்சாமி மடத்தினரிடம் கனவில் தோன்றிச் சொன்னாரா? மந்திர ஜபங்களைச் செய்யுங்கள். அப்பொழுதுதான் என் மனங்குளிரும், சுனாமிகளையும் புயலையும் நான் தடுப்பேன் என்று கட்டளையிட்டாரா?

கடவுள்தான் மக்களைப் படைத்தார் என்றால் அந்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையுணர்ச்சி அந்தக் கடவுளுக்கு இருக்க வேண்டாமா? அப்படி செய்யாவிட்டால் அவனைவிடப் பொறுப்பற்றவன் வேறு யார்?

மக்களையும் ஒரு பக்கம் படைத்துவிட்டு, இன்னொரு பக்கம் அந்த மக்களை அழிக்கும் சுனாமி களையும், புயலையும், வெள்ளத்தையும் ஏவி விடுகிறான் கடவுள் என்றால் அவன் என்ன கிறுக்கனா? கொலை காரனா? பெற்ற குழந்தையைக் கொலை செய்யும் தகப்பனுக்கு நாட் டில் தூக்குத் தண்டனை கிடைக் கிறது. கடவுள் என்ற ஒருவன் இருந்து, அவன் கையில் சிக்குவானானால் முத லில் தூக்குத் தண்டனை அவனுக் கல்லவா கொடுக்கப்பட வேண்டும்? 6-8-2012

தமிழ் ஓவியா said...

ஆண்களுக்கு ஒரு பூஜையாம்!


இந்த மதத்தைத் தக்க வைத்துக் கொள்ள புதுப்புது யுக்திகளில் கோயில் பூஜைகள், சடங்குகளை உருவாக்கி வைத்து விடுவார்கள்.

பெண்கள் மட்டுமே வழிபாடு என்று கூறி ஆண்கள் எல்லாம் ஊரை விட்டு வெளியேறிட வேண்டும் என்பார்கள்.

இப்பொழுது நாமக்கல் அருகே நல்லிப்பாளையத்தில் ஆண்கள் மட்டும் கொண்டாடும் வழிபாடாம். காவிரியாற்றிலிருந்து தண்ணீர்க் குடத்தைக் கலியாணம் ஆகாத வாலிபர்கள் சுமந்து வருகிறார்கள்.

புற்றிலிருந்து மண்ணெடுத்து சாமி உருவம் ஒன்றைச் செய்கிறார்கள் (கடவுள் என்றால் கல்லும், மண்ணும் தானே!) பிறகு கிடா வெட்டி பூஜை நடத்தி, மூக்குப் புடைக்கத் தின்பார் களாம். மீதியாகும் உணவை ஏழை, எளியவர்களுக்குக் கொடுக்கக் கூடாதாம்! என்ன செய்வார்களாம்? குழி வெட்டிப் புதைத்து விடுவார் களாம்! (ஆகா, என்ன தாராள மனப் பான்மை!)

பல நூறு ஆண்டுகளுக்குமுன் தெலுங்கு செட்டியார் சமூகத்தவருக் கும் இன்னொரு சமூகத்தவருக்கும் நடந்த சண்டையில் தெலுங்கு செட்டி யார் சமூகப் பெண்கள் அனைவரும் கொல்லப்பட்டார்களாம். அதனால் வேறு சமூகத்துப் பெண்களை மணக்க நேரிட்டதாம். அதற்காக கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழிபாட்டை நடத்துகிறார்களாம். இந்த வழி பாட்டில் பெண்களும், வெளியூர்க்காரர் களும் கலந்துகொள்ளக் கூடாதாம்.

இதில் ஏதாவது அர்த்தம் இருக் கிறதா? பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சண்டையில் பெண்கள் கொல்லப்பட்டதாகவே இருக்கட்டும். இந்த வழிபாட்டால் கொல்லப்பட்டவர் கள் எல்லாம் உயிருடன் எழுந்துவந்து விடுவார்களா? பிள்ளை விளையாட்டு என்று இந்தப் பக்தியை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் வடலூர் இராமலிங்கனார்! 6-8-2012

தமிழ் ஓவியா said...

நமது கேள்வி: சதயம், பூரட்டாதியில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?

இப்படியெல்லாம் இதழ்கள் கட்டுரைகளை எழுதித் தள்ளுகின்றனவே - இந்த நட்சத்திரங்கள் எவ்வளவுக் காலமாக இருந்து வருகின்றன? இந்த நட்சத்திரங்களில் எவ்வளவு காலமாக எவ்வளவு மக்கள் பிறந்திருக்கிறார்கள்?

அப்பொழுதெல்லாம் இவர்கள் எதைப் படித்தார்கள்? இப்பொழுது மட்டுமே படிக்க முடிவதற்கு யார் கரணியம் எது காரணம் பார்ப்பனர்கள் மட்டும் படிக்கக் கூடிய ஒரே நட்சத்திரத் தில் பிறந்தார்களா?

ஒரு பெரியாரும், ஒரு காமராசரும், ஒரு திராவிடர் இயக்கமும் பாடுபட்ட பிறகுதானே நம் மக்களுக்குப் படிப்பு வந்தது? இதழ் நடத்தும் முதலாளிகளே! எம்மக்கள் உங்களுக்கு என்ன கேடு செய்தார்கள்? ஏன் அவர்களை இன்னும் வஞ்சிக்கிறீர்கள்? 6-8-2012

தமிழ் ஓவியா said...

ஒலிம்பிக்ஒலிம்பிக்கில் ஒரு சாதனை நடைபெற்றுள் ளது. தலைவிதியை நம் பாமல் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வெற்றி மாலை தேடி வந்து தோளில்சூடிக் கொள் ளும் என்பதற்கான ஒரு நிகழ்ச்சி.

ருதேமெலுயுத்தி என்ற சிறுமி லிது வேனியாவில் இருந்து இலண்டனில் உணவகம் நடத்தும் தம் சிற்றன்னைக்குத் துணை யாக வந்து சேர்ந்தார். அருகில் உள்ள ஒரு பள்ளியிலும் சேர்ந்தார். சிறு வயதி லிருந்தே நீச்சல் என்றால் வெல்லம் சாப்பிடுவது போல.

அடிக்கடி உள்ளூர் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்வார்; வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தன! அது இயல்பான ஒன்றுதானே!

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களைக் கொடுக்கலாம் என்று பள்ளி நிருவாகம் அறிவித் தது.

இந்தப் பெண்ணும் தன் பெயரைக் கொடுத் தார். பள்ளி நிருவாகம் ஏளனப் புன்னகையை இந்தப் பெண்ணின் மீது வீசியது.

இது ஒன்றும் நம் பள்ளியில் உள்ள நீச்சல் குளம் அல்ல. இலண் டனில் உள்ளது. மிகப் பெரியது. உலகின் பல நாடுகளிலிருந்தும் வீராதி வீரர்கள் எல்லாம் போட்டியில் பங்கேற்பார் கள் என்று நிர்வாகம் பயமுறுத்தியது.

பதினைந்தே வயது நிரம்பிய அந்தப் பெண் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள் - சாதித்துக் காட்டுகிறேன் என்று நெஞ்சு நிமிர்த்தி, தலையை உயர்த்தி தன்னம்பிக்கை மிளிரும் குரலில் பதில் அளித்தார்.

சரி, உன் ஆசையைக் கெடுப்பானேன்! என்று முதலாளித்துவ பாணியில் பேசி அனுமதியையும் அளித்தது நிருவாகம்.

ஆச்சரியம் என்ன தெரியுமா? அந்த 15 வயது சிறுமிதான் இலண் டன் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

இந்தச் சிறுமிக்குப் பயிற்சி அளித்த அய்ரிஷ் வீராங்கனை 5 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட் டார் என்பது சுவையான மேலும் ஒரு தகவல்!

தளராதே - தன் னம்பிக்கை கொள்! முயற்சி திருவினை ஆக்கும் - முன் ஜென்மப் பலன் என்று மூலையில் ஒதுங்காதே! ஊழையும் உப்பக்கம் காணலாம்- உன்னிடம் உறுதியிருந் தால் என்ற முற்போக்கு எண்ணங்களே வெற்றிக் கான ஏணிப்படி என்பதை இப்பொழுதாவது இந்திய மக்கள் குறிப்பாக இந்திய விளையாட்டுக்காரர்கள் உணர்வார்களா?

மயிலாடன் 6-8-2012

தமிழ் ஓவியா said...

ஆசிரியர்களா இவர்கள்?

ஆசிரியர்கள் இனத்துக்கே தலைகுனியும் ஒரு வேலையில் நாமக்கல் மாவட்டத்தில் 77 தலைமை ஆசிரியர்கள் ஆதித் திராவிடர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் பெரும் ஊழல் செய்துள் ளனர். முறைப்படி அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மிக உயர்ந்த கல்வித் தொண்டு செய்யக் கடமைப்பட்டுள்ள ஆசிரியர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த மாணவர்களுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகையில் கை வைக்க எப்படித்தான் மனம் வந்ததோ! அதுவும் சாதாரண ஆசிரியர்கள் அல்லர்; தலைமை ஆசிரியர்கள்.

நேர்மையும், கடமை உணர்வும் இல்லாத வர்கள் ஆசிரியர் பணியில் ஈடுபட்டால் அவர்களால் உருவாக்கப்படும் மாணவர்கள் எந்தத் தகுதியில் இருப்பார்கள் என்பதற்கு ஆராய்ச்சிகள் தேவைப்படாது. மாணவர்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் சீரழிவுக் கலாச்சாரம் வகுப்பறையிலிருந்தே தொடங்கி விடுகிறதோ என்று கவலைப்பட வேண்டி யுள்ளது.

ஒரு வகையில் பக்குவப்படாத பகுத்தறிவுக் குச் சம்பந்தமே இல்லாத பாடத் திட்டங்கள்; சொல்லிக் கொடுப்பதற்கு நேர்மையும், ஒழுக்கமும் அற்ற ஆசிரியர்கள் என்று அமைந்து விட்டால் அந்தச் சமூகமே ஒரு சிறைக் கூடம் என்ற நிலைக்கு அல்லவா தள்ளப்படும்?

ஒடுக்கப்பட்ட, ஏழை - எளிய மாணவர் களின் தலைகளில் கை வைத்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தக் கையாடல் வெறும் ஆசிரியர்கள் மட்டத்தில் மட்டும்தான் நடத்துள்ளதா? தலைமை ஆசிரியர்களுக்கு மேற்பட்ட அதி காரிகள், அலுவலக அலுவலர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். அப்படி அவர்களும் சம்பந்தப்பட்டு இருந்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் வளர்ச்சிக்கு என்று ஒதுக்கப்படும் நிதி அத்துறைக்கு முழுமை யாகச் செலவு செய்யப்படுவதில்லை; வேறு துறைகளுக்கு அது திருப்பி விடப்படுகிறது என்கிற ஆழமான குற்றச்சாற்று ஒரு புறத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் அவர் களுக்காகச் செலவு செய்யப்படும் நிதியிலும் கையாடல் என்றால் - இது என்ன கொடுமை!

ஒடுக்கப்பட்ட மக்கள் என்று வருகிறபோது என்னென்ன வகைகளில் எல்லாம் சுரண்டப் படுகின்றனர்! பாரபட்சமாக நடத்தப்படுகின் றனர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

இது ஏதோ நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தான் நடந்துள்ளதா? வேறு மாவட்டங்களிலும் இதன் நிலை என்ன என்பது துருவி ஆராயப்பட வேண்டும்.

பொதுவாக இது போன்ற நிதி உதவி ஆதி திராவிடர் மாணவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படுவதை அரசு நல்ல வகையில் விளம்பரப்படுத்தவும் வேண்டும்.

எது எதற்கோ விளம்பரங்களைத் தந்து அரசு பணத்தை வீணடிக்கும் அரசாங்கம், இது போன்ற பொது மக்களுக்குத் தெரிய வேண்டிய தகவல்களையும் விளம்பரமாக வெளியிட வேண்டும். பொது மக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இவற்றைப் பற்றி தெரிந் திருக்கும்பட்சத்தில், இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும்.

கல்வி வளர வேண்டும்; அதே நேரத்தில் ஒழக்கழும், பகுத்தறிவும் வளர வேண்டும்.

குறிப்பாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இவை இரண்டும் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். மாணவர்களைப் பயிற்று விக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கம் - நேர்மை உள்ளவர்களாக இருக்க வேண்டாமா? 6-8-2012

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க. பக்கம் அ.தி.மு.க.

சென்னை, ஆக.7- துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.,வை அ.இ.அ.தி.மு.க., ஆதரிக்கும் என்று அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா. ஜஸ்வந்த்சிங் நேற்று சந்தித்து ஆதரவு கேட்டார்.

பா.ஜ.க. பக்கம் ம.தி.மு.க.

சென்னை, ஆக.7- துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.,வை சேர்ந்த ஜஸ்வந்த்சிங்கை ம.தி.மு.க. ஆதரிக்கும் என்று அறிவித்துள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. ஜஸ்வந்த்சிங் வைகோவைச் சந்தித்து நேற்று ஆதரவு கேட்டார். 7-8-2012

தமிழ் ஓவியா said...

கதை முடிந்தது! அன்னா ஹசாரே குழு கலைக்கப்பட்டது


புதுடில்லி, ஆக.7- `ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே குழு கலைக்கப்பட்டது. இனி மேல் ஜன லோக்பால் குறித்து மத்திய அரசு டன் பேச்சுவார்த்தை கிடையாது' என்று அன்னா ஹசாரே நேற்று அறிவித்தார்.

நாட்டில் ஊழல், லஞ்சத்தை அடியோடு ஒழிக்கப் போவதாக கூறி `ஜன லோக்பால்' என் னும் வலுவான சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 74 வயது அன்னா ஹசாரே போராட்டம் தொடங் கினார்.

அவருடன் பல முக்கிய பிரமுகர்களும் இணைந்தனர். அவர்கள் அன்னா ஹசாரே குழு என்று அழைக்கப் பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப் ரல் மாதம் முதல் இந்தக் குழுவினர் 4 முறை கால வரையற்ற பட்டினிப் போராட்ட நாடகம் நடத்தினர். 4 முறை ஒரு நாள் பட்டினிப் போராட் டம் நடத்தினர். கடைசி முறையாக கடந்த 12 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதி யில் பட்டினிப் போராட்டம் இருந்தனர். மக்கள் ஆத ரவு இல்லை. அதனால் 9 நாட்களிலேயே இந்த பட்டினிப் போராட்டத் தினை திடீரென முடித் துக் கொண்டனர்.

அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகவும், அதன் மூலம் ஊழலற்ற இந்தியாவை உருவாக் கப் போவதாகவும் அப் போது அன்னா ஹசாரே அறிவித்தார். இது தொடர்பாக நேற்று முன் தினம் கூட அன்னா ஹசாரே குழுவினர் டில்லி யில் கூடி தீவிர ஆலோ சனை நடத்தினார்கள்.

இந்த நிலையில், `ஊழ லுக்கு எதிரான அன்னா ஹசாரே குழு' கலைக்கப் படுவதாக அன்னா ஹசாரே நேற்று அறிவித் தார். இது தொடர்பாக அவர் தனது வலை தளத் தில் கூறி இருப்பதாவது:-

``அரசாங்கம் ஜன லோக்பால் கொண்டுவர தயாராக இல்லை. எத் தனை காலத்துக்கு, எத் தனை தடவை நாங்கள் உண்ணாவிரதம் இருப் பது? உண்ணாவிரதத்தை கைவிட்டு, மாற்று வழியைக் காட்டுங்கள் என்று இப்போது மக் கள் எங்களை கேட் கிறார்கள்.

அரசாங்கம் ஊழலை, லஞ்சத்தை ஒழிக்கும் என்று எனக்கும் தோன்ற வில்லை.

அன்னா ஹசாரே குழு ஊழலுக்கு, லஞ்சத் துக்கு எதிராகப் போராடு வதற்காக தொடங்கப் பட்டது. ஆனால், அது நிறைவேறப்போவதில்லை என்று தெரிவதால் அன்னாஹசாரே குழு வும், அன்னா ஹசாரே உயர்மட்டக் குழுவும் இன்று முதல் கலைக்கப் படுகிறது. ஜன லோக் பால் குறித்து இனிமேல் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை கிடையாது. ஆகவே இந்த குழுவுக்கு இனிமேல் வேலை இல்லை.

மாற்று ஏற்பாடாக நாடாளுமன்றத்துக்கு நல்ல மனிதர்களை அனுப்புவேன். அதற்காக எந்த கட்சியிலும் நான் சேரப்போவதில்லை. நானும் தேர்தலில் போட் டியிட மாட்டேன் என்று கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று கதையை முடித்துக் கொண்டார். 7-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்


சென்னை, ஆக.7- ஆகஸ்டு 12ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ள டெசோ மாநாட் டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து டெசோ தலை வர் கலைஞர் அவர்கள் விளக்கியுள்ளார். அறிக்கை வருமாறு:

இந்த மாநாட்டில் நாம் நிறைவேற்றவுள்ள தீர்மானங்கள் எல்லாம் போரினால் பாதிக்கப் பட்டும், இடம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் களின் வாழ்வாதாரங் களை வளப்படுத்தி உயர்த்துவதற்கும், ஜன நாயக உரிமைகளோடு கண்ணியத்துடன் வாழ்வதற்கும், அதற்கு தாய்த் தமிழகத்திலே உள்ள நாமும், இந்திய அரசும் எந்த வகையில் எல்லாம் உதவிட முடி யும் என்பதை வலியுறுத் துவதற்காகவுமான முயற்சியிலே ஈடுபட்டுள் ளோம்.

ஈழத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியில்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடு களில் குடியேறி புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயராலும், அக திகள் என்ற பெயராலும் அல்லாடிக் கொண்டி ருக்கும் நமது தமிழ் இனத்தவர் மீண்டும் இலங்கை திரும்பி அமைதியானதும், உரி மையுடன் கூடியதுமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவ னங்களின் மூலம் என் னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் இந்த மாநாட்டின் ஆய் வரங்கில் நாம் கலந்து பேசி முடிவெடுக்கவுள் ளோம்.

இலங்கையில் சிங் களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் காயங்க ளுக்கும் - அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு! இந்த மாநாட் டிற்கான மய்ய நோக் கத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் பங்கேற்க வேண்டுமென உன் அண்ணன் அழைக் கின்றேன் என்றார்.7-8-2012

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டின் சரித்திரத்தில் திராவிடன் என்ற சொல் மறைந்து போய்விட்டது. இன்றைக்கு யார் யாரோ திராவிடன் என்று, அந்தச் சொல்லுக்குள்ள மகிமை தெரியாமல் திராவிடன் என்ற சொல்லிக்கொள்கிறார்கள். திராவிடன் என்றால் அவன் மூடநம்பிக்கைக்கு விரோதி, ஆரிய தருமத்திற்கு விரோதி, நூற்றுக்கணக்கான சாதிகள் என்று சொல்லுகின்ற அந்த மனு-தர்மத்திற்கு விரோதி, மனிதனை மனிதனாக மதிக்கவேண்டும், மானத்தோடு வாழவேண்டும். இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டவன்தான் திராவிடன்.

(11.10.2006 அன்று சேலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலைஞர்)

தமிழ் ஓவியா said...

அறுத்துச் சமைத்த கோழி உயிர் பெறுமாம்!

முருகனுக்கு அறுபடை வீடுகளாம். அதில் ஒன்று திருத்தணியாம். வருடா வருடம் முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் காவடி எடுத்துப் போவார்கள் - மொட்டை போடுவார்கள். அறுத்த கோழி உயிர் பெறும் என்பார்கள். (அவனே மொட் டையன்தானே!)

ஒரு முறை தந்தை பெரியாரும், அவர்களின் நண்பர்களான சென்னை மாநில முதல் மந்திரியாக இருந்த முனுசாமி நாயுடு, சி.எஸ். இரத்தினசபா பதி முதலியார் ஆகியோர் பழனி சென்றனர். (1936 இல்)

பெரியார் மலை அடிவாரத்தில் இருந்து கொண்டு, மற்ற இருவரும் மலைக்குச் சென்று கீழே இறங்கினர்.

மலையின் அடிவாரத்தில் ஒரு விபூதி கடைக்காரன் இரண்டு சேவல்களைத் தன் கடையின் முன் கட்டி, அதன் மீது மஞ்சள், குங்குமம் தெளித்து, வெற்றிலைப் பாக்கை முன்னால் வைத்து, ஒரு உண்டியலையும் வைத்திருந்தான். அங்கு ஜனங்கள் கூட்ட மாக நின்று சேவல்களைக் கும்பிட்டு, உண்டில் கலத்தில் காசு போட்டுக் கொண்டிருந்தனர்.

பெரியார் என்ன என்று கேட்டார். அதற்கு அந்தக் கடைக்காரன் பெரியாரையும் ஒரு பக்தர் என்று நினைத்துக் கொண்டு, இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள் என்று சொன்னான். அதாவது அறுத்துச் சமைத்து காவடி கட்டிக் கொண்டு வந்த சேவல்கள். கடவுள் சன்னதியில் உயிர் பெற்றுவிட்டன என்று விளக்கினான்.

தன்னோடு வந்த இரு நண்பர்களிடமும் பெரியார் விளக்கினார். இப்படிப் பட்ட ஆட்கள்தான் உங்கள் பிரச்சாரத்திற்கு அனு கூலம் செய்துவிடுகிறார்கள் என்றும், நாங்கள் இதையெல்லாம் நம்பமாட் டோம் என்று சொல்லிச் சிரித்தார்.
(ஆதாரம் குடிஅரசு 19-1-1936)

இப்படிப் பித்தலாட்ட மாக மக்களை ஏமாற்றிடத்தான் திருத்தணி உள்ளிட்ட முருகன் கோயில்கள்.

மக்கள் மத்தியில் பக்தி மூட நம்பிக்கை உள்ளவரை - இது போன்ற சுரண்டல் தொழில்களும் ஜாம் ஜாமென நடக்கத்தான் செய்யும்.

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளுள் தலையானது மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி மட்டுமே!

அறிவிருந்தும் அதனை முடக்கச் செய்யும் அமைப்பு முறைதான் கோவில்களும், விழாக்களும் என்ற பிரச்சார யுக்திகள்

அறிவைக் கெடுப்பாருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகிறார் என்றால், அதன் பொருள் - பகுத்தறிவின் மீது அவர் வைத்திருக்கும் மதிப்பு எத்தகையது என்று விளங்கும்.

-------------------"விடுதலை” 26-8-2011