Search This Blog

27.8.12

ஈழத்தமிழர்களுக்காக எங்களை விட வேகமாகச் செயல்படக் கூடியவர்களா?-கி.வீரமணி

எங்களைவிட ஈழத்தமிழர்களுக்கு வேகமாக செயல்படக் கூடியவர்களை நாங்கள் தடுக்கவில்லையே! வேகம் விவேகத்தோடு இருக்கட்டும்! வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்! டெசோ விளக்கக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கருத்துரை


 ஈழத்தமிழர்களுக்காக எங்களை விட வேகமாகச் செயல்படக் கூடியவர் களை நாங்கள் தடுக்கவில்லை; தாராளமாகச் செயல்படட்டும். ஆனால் வெறும் வேகமாக இல்லாமல், விவேகத்தோடு அது இருக்கட்டும், வீண் விவாதங்கள் தேவையில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னையில் 21.8.2012 செவ்வாயன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட டெசோ தீர்மான விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

 என்ன சூழ்நிலை என்றால், அவர்கள் இந்த மாதிரி பிரச்சினைகளால் உருவாக்கப்பட்டவர்கள். இதற்குத் தீர்வு காணவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப்புலிகள் அமைப்பு வளர்ந்தது.

ஆனால், 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தகர்ப்பு நடைபெற்றதால், இது மாதிரி யார் நடத்தினாலும் அது பயங்கரவாதம், அது எந்த நாட்டில் நடந்தாலும் பயங்கரவாதம் என்று முத்திரை குத்திவிட்டார்கள். ஆகவே, எந்த நாட்டிலும் அதனை பரவ விடக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள். சுதந்திரப் போராட்டத் திற்காகப் பாடுபடக் கூடியவர்களா, பயங்கர வாதிகளா? அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை, எல்லோரும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்தனர். கூண்டு நூலில் உள்ள ஒரு செய்தியை சொல்லுகிறேன்:

யூதர்களும், சிங்களவர்களும்

நாஜி ஜெர்மனியில் யூதர்களின் கடைகள் உடைக்கப்பட்டு, பலர் கொல்லப்பட்டு 30,000 பேர் வரை சித்திரவதை முகாம்களுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட அக்கண்ணாடிகள் உடைந்த இரவு, க்ரிஸ்டால்நாட் எப்படி அய்ரோப்பிய வரலாற்றில் மிகக் கொடுமையானதொரு பகுதியோ, யூத மனங்களில் ஆறாத ரணத்தை அச்சம்பவங்கள் ஏற்படுத்தினவோ, அதேபோல்தான் இலங்கைத் தமிழர் அனைவரையும் அக்கறுப்பு ஜூலை நாளும் மிக ஆழமாகப் பாதித்தது.

ஜெர்மனியில் நடந்ததைப்போலவே இலங்கையிலும் அரசே முன்னின்று அரங்கேற்றிய கொடுமைகள்தான் அவை. படுகொலை செய்து, சொத்துக்களைத் தீக்கிரையாக்கி, இனியும் அங்கு வாழவியலாது என்ற அச்சத்தை உருவாக்கி, தமிழர்களை நாட்டை விட்டே வெளியேறச் செய்த நாள். அச்சம் பவங்களின் உடனடி விளைவு, சில நூறு பேர் மட்டுமே இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இணைந்தனர்.

இதுதான் அதனுடைய அடிப்படை என்று பொது நிலையில் இருக்கக் கூடியவர்கள் சொல்கிறார்கள்.

2001 செப்டம்பரில் உலகே தலைகீழாய் மாறியிருந்ததை விடுதலைப்புலித் தலைமை புரிந்துகொள்ளவில்லை. பயங்கரவாதத்திற் கெதிரான போரில் பல நாடுகள் இணைந்த பிறகு போராளிக் குழுக்களுக்கான ஆதரவும் உலக அளவில் குறையத் தொடங்கியது.

இப்படி பல சூழ்நிலைகள் அதிலே சேர்ந்தி ருக்கின்றன. அதுமட்டுமல்ல, மிகப்பெரிய அளவிற்கு எப்படி சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதற்கு இன்னொரு செய்தியையும் சொல்லி யிருக்கிறார்.

தவிரவும், சோவியத் யூனியன் வீழும் வரை நிலவிய பனிப்போரின் ஒரு பகுதியாக, அந்நாடும், அமெரிக்காவும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளைத் தத்தம் அணிப் பக்கம் இழுக்க முயன்றன. அத்தகையதொரு சூழலில் நாடுகள் எவ்வித மனித உரிமை மீறல்களில் ஈடுபட் டாலும் அதைக் கண்டும் காணாமல் இருந்தன.

இவர்களுக்குக் கிடைக்கவேண்டிய  ஆதரவு, பன்னாட்டு ஆதரவு, நியாயமான ஆதரவை அவர்கள் கொடுக்கத் தயாராக இல்லை. ஏனென் றால், அவர்களுக்கு நிர்ப்பந்தங்கள் அப்படி. அந்த நிர்ப்பந்தத்தை எவ்வளவு முறையாகப் பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதை இந்நூலில் அழகாக விளக்குகிறார்:

மனித நாகரிகத்திற்குச் சவால் விடும் வகையில் இலங்கை நிகழ்வுகள் அமைந்தாலும், சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா அய்.நா. தலையீட்டை எதிர்த்தன.

ஆனால், நண்பர்களே அய்.நா. தலையீட்டை எதிர்த்தனர் என்பது  அன்றைய நிலை. ஆனால், அதே இந்தியா, நம்முடைய நாடு, இது பயங்கர வாதத்திற்கு எதிரான போர் ஆகவே, நீங்கள் (அய்.நா.) தலையிடக் கூடாது என்று சொன்ன இந்தியா, அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூனால் உருவாக்கப்பட்ட மூவர் குழுவினுடைய பரிந்து ரைக்கு ஏற்ப கொண்டுவரப்பட்ட தீர்மானம் (போர்க்குற்றவாளி)  இருக்கிறதே அதிலே இந்தியா தனது ஆதரவை அமெரிக்கத் தீர்மானத்திற்குக் கொடுத்தது என்று சொன்னால், இது எவ்வளவு பெரிய மாற்றம்! இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

இது தமிழ்நாடு ஒருங்கிணைந்து கொடுத்த குரல் - அழுத்தத்தினாலும், அதைவிட முக்கியம் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய ஆட்சியிலே இருந்த காரணத்தினாலே, அவர்கள் இதனை வலியுறுத்தி இறுதிவரையிலே கொடுத்த அழுத்தம், அதனு டைய விளைவாக இந்தியா வாக்களிக்காது என்ற நிலை உருவானது.

ஆனால், நம் ஊடகங்கள் எல்லாம் என்ன கூறின? இந்தியா கடைசிவரைக்கும் இலங்கையின் பக்கம்தான் இருக்கும் என்று நஞ்சைக் கக்கின. இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தவுடன், ஆமாம், இது என்ன தீர்மானம்? இந்தத் தீர்மா னத்தை நிறைவேற்றி என்ன பயன்? என்று பல்டியடித்தன. ஒன்றுமில்லாத தீர்மானத்திற்கு நீங்கள் ஏன் அவ்வளவு தூரத்திற்குக் கவலைப் பட்டீர்கள்? அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், திராவிட இயக்கத்திற்கு இந்தப் பெருமை வந்துவிடக் கூடாது என்ற அற்பப் புத்தியைத் தவிர, வேறென்ன இதற்கு அடிப்படையாக இருக்க முடியும்? ஒரு காலத்தில் விரோதமாக இருந்ததை மாற்றிக் காட்டியிருக்கிறோம்.

இன்றைக்கு ஈழம் என்று சொல்லக் கூடாது என்று யாரோ ஒரு அதிகாரி எழுதினான்; ஈழம் என்ற சொல் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டவுடன்,
ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்களே, அது டெசோ மாநாடு நடைபெறுவதற்கு முன்னாலே, மாநாட்டிற்குக் கிடைத்த வெற்றியல்லவா! இன்றைக்கு அந்த உரிமை எல்லா இடத்திலும் பேசப்படக்கூடிய உரிமையாக ஆக்கப்பட்டுவிட்டதல்லவா!

கலைஞரின் ராஜ தந்திரம்!

கலைஞருடைய ராஜதந்திரம், அவருடைய முதிர்ச்சி, டெசோவினுடைய அணுகுமுறை, ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி, மாநில அரசுகள், மத்திய அரசைத் தாண்டி இன்று உலகப் பார்வை யோடு, உலக நாடுகள் மத்தியிலே அய்க்கிய நாடுகள் வரையிலே போகக்கூடிய அளவிற்கு, இந்தத் தீர்மானத்தை லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, அதுவும் மாநாட்டிற்கு யாரும் வரக்கூடாது என்று சொல்லி, மக்கள் கூடக் கூடாது என்று சொல்லி, உலகத்திலே கேள்விப்படாத விஷயம் இதுவரையில், மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தவர்களே, மாநாட்டிற்கு அதிகம் வரவேண்டாம் என்று  சொன்ன மாநாடு இந்த டெசோ மாநாடுதான்! அதிகம் பேர் வந்து விடாதீர்கள், வீட்டில் இருந்துகொண்டே மாநாட் டினை பாருங்கள், உரையைக் கேளுங்கள் என்று நாங்களே சொன்னோம். அப்படி இருக்கும்போது மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதா இல்லையா? நண்பர்களே, இதுதான் வீழ்ந்துவிட்ட இனத்தை எழுச்சி பெறுவதற்காக செய்த முயற்சியின் வெற்றி! அதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

கூண்டு நூலின் ஆசிரியர் மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகளுடனான மோதல்களின் இறுதிக் கட்டங்களில் தலையிட்டுப் பேரழிவினை நிறுத்த உலக நாடுகள் முயலத்தான் செய்தன. அரச படையினரின் தாக்குதலின் உக்கிரத்தைத் தணிக்க அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் தனிப்பட்ட முறையில் கடும் முயற்சிகள் மேற்கொண்டார்.

பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்டாரே!

2009 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசைக் கடுமை யாக விமர்சனம் செய்துகொண்டிருந்த சண்டே லீடர் என்னும் ஆங்கில ஏட்டின் ஆசிரியர் வசந்த விக்கிரம துங்க பட்டப் பகலில் கொல்லப்பட்டார். தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை வழிமறித்து, முகமூடியணிந்த சிலர் அவரைச் சரமாரியாகச் சுட்டார்கள்.

அங்கே நிலைமை என்னவென்றால், தமிழர்கள் மட்டுமல்ல, யாராவது நியாயத்தைப் பேசினால், யாராவது தவறினை சுட்டிக்காட்டினால், அந்த ஆளையே காணாமல் போகச் செய்துவிடுவார்கள்.

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக் கூடியவர்களுக்காக அந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை கூறுகிறேன்:

ஆனால், 2009 மே மாதத்தில் தலைவர்க ளெல்லாம் நந்திக்கடல் கடலோரப் பிராந்தியத்தில் உயிரற்று வீழ்ந்து கிடந்தனர். அதற்கு முந்தைய 5 மாதங்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்களும் அதே பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் சகதியில் இறந்து கொண்டிருந்தனர். ஆனால், இலங்கை அரசோ பொதுமக்கள் யாருமே சாக வில்லை என மிகத் தைரியமாக சாதித்தது.

நாடுகள் பல வற்புறுத்தின

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் மூலமாகப் பல முயற்சிகளை மேற்கொண்டன. பிரபாகரனும் மற்ற புலிப்படை யினரும் சுற்றி வளைக்கப்பட்டு விட்டனர். இனி மேலும் பொதுமக்களைக் கொல்ல வேண்டாமே. அவ்வாறு நீங்கள் பெருந்தன்மையுடன் செயல் பட்டால், உங்களுக்குத்தான் நல்லது என்று இலங்கையிடம் மன்றாடினர். சற்று உங்கள் வேகத்தைக் குறையுங்கள் என்று ஒபாமா அறிவு றுத்தினார். பொதுமக்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றுவது எங்கள் பொறுப்பு. அதன்பிறகு ஆயுதமேந்தியவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிப் பார்த்தார் ஹில்லரி கிளிண்டன். ரஷ்யாவும், சீனாவும் தீவிர மாக இலங்கையை ஆதரிக்க, அமெரிக்க முயற்சிகள் தோல்வியுற்றன.

பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொலை செய்துதான் விடுதலைப் புலிகளை வென்றிருக்க முடியும் என்பதில்லை. நம்மைப் பதைபதைக்க வைக்கும் அவ்வழித்தொழிப்பு இலங்கையில் நிலவிய சூழலால், தவிர்க்க முடியாது மேற் கொள்ளப்பட்ட போர்த் தந்திரங்களின் விளைவல்ல. மாறாக இலங்கையின் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகள் தொடர்ந்து, தமிழ்ச் சிறு பான்மையினரை எதிரிக ளாகவே பாவித்து, மனித நேயத்திற்கு முரணான பாதையில் பயணித்ததன் விளைவுதான் 2009 இல் உலகத்தினை அதிர்ச்சிக் குள்ளாக்கிய அக்கொடுமைகள். என்று மிகப் பெரிய அளவுக்குக் கூறியிருக்கிறார். அதுமட்டு மல்ல, இன்னமும் உலகத்தார் பார்வை, அய்க்கிய நாடுகளின் அழுத்தம் தொடர்ந்து கொடுக்க வேண்டும், ஏனென்றால், அவர் அவ்வளவு சுலப மாக கீழிறங்கி வரக்கூடியவர் அல்ல என்பதை நடு நிலையாளர்கள், பொதுநிலை யாளர்கள் சொல் கின்றார்கள் என்பதை கூறுகிறேன் கேளுங்கள்.

இலங்கை ஓர் ஆபத்தான இடம்

அரசுடன் முரண்படுபவர்களுக்கு, அரசை எதிர்ப்பவர்களுக்கு இலங்கை ஓர் ஆபத்தான இடம். 2010 செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பின் நிலை இன்னமும் மோசமாயிருக்கிறது. அத்திருத் தத்தின் விளைவாக ராஜபக்சே சகோதரர்களின் அதிகாரம் உச்சத்திற்குப் போய்விட்டது. இனி அவர்களை எவரும் எதுவும் கேட்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

மஹிந்த ராஜபக்சே காலத்திலோ முன்னெப் போதையும்விடச் சமூகத்தின் பல்வேறு அங்கங்கள் அனைத்தும் அதிபரின் குடும்பத்தினரைக் கண்டு நடுங்கின. நீதிமன்றங்கள், ஊடகங்கள், அரசியல் வாதிகள் எல்லோருமே அவர்கள் கட்டுப் பாட்டில்.

இட்லருடைய காலத்தில் கூட இப்படி கிடையாது. இதனைச் சொல்வது யார்? - அங்கே பல காலம் தங்கியிருந்து இப்பொழுது சிட்னியில் வசிக்கக் கூடியவர் அந்நூலாசிரியர் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில்,

2007 இல் மஹிந்தவின் கரங்களில் நீதித்துறை, கோத்தாபயவிடம் பாதுகாப்புத் துறைச் செயலர், துறைமுக மற்றும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குப் பொறுப்பானவர் சமால் ராஜபக்ச, கிழக்கைச் சீரமைக்கும் பணிகளெல்லாம் பாசில் ராஜபக்சவிடம். இவ்வாறு இந்நான்கு சகோதரர் களிடம் 94 அரசுத் துறைகள். கஜானா இருப்பில் 70 சதம் அவர்கள் கட்டுப்பாட்டில். பெரிய முதலீடுகள் எதுவும் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆசியின்றிச் செய்ய முடியாது. பாசில் திருவாளர் பத்து சதம் என்றே கேலி செய்யப்படுகிறார். எல்லாப் பணிகளுக்கான செலவிலும் பத்து சதம் அவர் பங்கு என்பதுதான் பொருள்.

எல்லாம் ராஜபக்சே குடும்ப மயம்!

ராஜபக்ச குடும்பத்தினர் கண் வைக்கும் எந் நிறுவனத்தையும் அவர்கள் நொடிப்பொழுதில் எடுத்துக்கொண்டுவிட முடியும். அவர்கள் அட்ட காசம் ரோமானியப் பேரரசன் கொடியவன் காலிகுலாவை நினைவுபடுத்துவதாகக் காணாமல் போன சிங்கள பத்திரிகையாளர் ஏக்னெலி கொட எழுதினார். விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் உதவியதற்காக, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குப் பகிரங்கமாக நன்றி தெரிவித்தார் அதிபர் ராஜபக்ச. ஆயுத உதவி செய்த, இலங்கை வீரர்களுக்குப் பல்வேறு காலகட்டங்களில் ஆயுதப் பயிற்சியும் அளித்த மேற்கத்திய நாடுகளைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. அவருக்கு அந்நாடுகளின் நல்லெண்ணமே தேவையில்லை என்பதைப் போலத்தான் அவர் தொடர்ந்து நடந்துகொண்டார்.

எதற்கு அவர்கள் உதவி? இந்தியாவைக் காட்டி பாகிஸ்தானிடமிருந்தும் பாகிஸ்தானைக் காட்டி இந்தியாவிடமிருந்தும், இந்தியாவைக் காட்டி சீனாவிடமிருந்தும், சீனாவைக் காட்டி இந்தியா விடமிருந்தும் அம்மூன்று நாடுகளுக்கிடையே இருந்த சிக்கல்களைப் பயன்படுத்தி, நாம் உதவ முன்வராவிட்டால் எதிரி நாடு உதவி செய்து தன்னுடைய செல்வாக்கை இலங்கையில் அதி கரித்துக் கொண்டுவிடுமோ என்றஞ்சியே மூன்று நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இலங் கைக்குப் பல்வேறு உதவிகள் செய்தன. அய்.நா.வின் கண்டனக் கணைகளிலிருந்தம் அந்நாட்டைக் காப் பாற்றின என்று அந்நூலாசிரியர் எழுதியுள்ளார்.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களின் சிறப்பு

ஆக, எவ்வளவு பெரிய சூழ்ச்சி வலைகள் பின்னப் பட்டிருக்கின்றன. எவ்வளவு சிக்கலான பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் என்ன செய்ய முடியுமோ அதனை தாராளமாக செய்வது மட்டுமல்ல, நடந்தவை எப்படி இருந்தாலும், இனி நடப்பவை தெளிவானவையாக, வாழ்வுரிமையை நிலை நாட்டக் கூடியவையாக இருக்க வேண்டாமா? என்பதை சிந்திப்பதற்காகத்தான்  டெசோ மாநாட்டின் தீர்மானங்கள்  எல்லாப் பிரச்சினை களையும் உள்ளடக்கி எல்லாவற்றையும் தழுவிய நிலையில், மிக அருமையாக வடிவமைக்கப் பட்டு, இன்றைக்கு இந்திய அரசு, அதேபோல்,   அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கக் கூடிய அந்த அம்மையார் அவர்களிடம் ஏற்கெனவே ஒரு குழுவிலே போகும்போதுகூட நாங்கள் வலியுறுத் தினோம்; அதனை அவர்கள் ஏற்றார்கள்.

ஆகவே, அந்த சூழ்நிலையிலும் இந்தப் பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. அடுத்து, அய்க்கிய நாடுகளின் மாமன்றத்திலும் இந்தத் தீர்மானங்களை அனுப்பி,  அதனுடைய கடிடடடிற-ரயீ என்று சொல்லக்கூடிய தொடர்ச்சியாக நடக்க வேண்டியவை நடக்கவிருக்கின்றன. எனவே, நம் முடைய சக்திக்கேற்ப, டெசோவினுடைய சக்திக் கேற்ப இதனை நாங்கள் செய்கிறோம்.

கருமத்துக்கு உரியவர்கள் நாங்கள்!

இதைவிட இன்னும் தீவிரமாக செய்யக் கூடிய நண்பர்களாக இருந்தால், வாருங்கள், உங்களுக்கு நாங்கள் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறோம். குறுக்கே நிற்கமாட்டோம். எங்களுக்கு நீங்கள் வழிகாட்டியாகவும் இருங்கள். உங்களுடைய வேகம், விவேகத்தோடு சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் பார்த்துக் கொண்டு, வீர வசனத்தோடு முடிந்துவிடக் கூடாது   வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்பதைக் கூறி, என் றைக்கும் கருமத்திற்கு உரிய வர்கள் கடைசிவரை இருப்பார்கள்.

நாங்கள் ஈழத் தமிழர் மட்டுமல்ல,  உலகத்தில் மனிதநேயம் எங்கும் தழைக்கவேண்டும் என்ற அடிப்படை யிலே மனிதனைப்பற்றி கவலைப் படக் கூடிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். ஆகவே, அவர்கள் மான வாழ்வை மீட்பதற்கு, கொள்கை வாழ்வை மீட்பதற்கு முன்னெடுத்துச் செல்வோம் வாருங்கள், வாருங்கள் என்று கேட்டு முடிக்கிறேன். நன்றி, வணக்கம்!

-இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்
                                  ------------------.-----------”விடுதலை” 25-8-2012

3 comments:

indrayavanam.blogspot.com said...

நல்ல பதிவு

தமிழ் ஓவியா said...

லகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியா? தமிழர் தலைவர் கண்டனம்


நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரி களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இம்மாதம் 19 ஆம் தேதிமுதல் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

தாம்பரம் விமானப் படையில் பயிற்சி

சென்னை - தாம்பரம் விமானப் படை நிலையத்தில் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதை எதிர்த்து தமிழ்நாட்டில் வலுவான குரல் கிளம்பியதையடுத்து தாம்பரத்திலிருந்து பெங்களூருவுக்குப் பயிற்சி அளிப்பதை மாற்றினர். அதுவே ஒரு தவறான முடிவாகும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த - கொன்று குவிக்க இருக்கிற ஒரு இராணுவத்துக்குப் பயிற்சியைத் தாம்பரத்தில் அளித்தால் என்ன? பெங்களூருவில் அளித்தால் என்ன? இது ஓர் ஏமாற்று வேலைதான்.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல மீண்டும் இலங்கை இராணுவ அதிகாரி களுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?

தமிழ்நாடு அரசின் சார்பிலும், முக்கிய எதிர்க்கட்சிகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தும், மத்திய அரசு இப்படி நடந்துகொள்வது தமிழர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்துவதாகும்.

டெசோ மாநாட்டுத் தீர்மானம்

12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டிலும் இத்தகைய பயிற்சியை அளிக்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஈழத் தமிழராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி - அவர்களை அலட்சியப்படுத்தும் தன்மையில் நடந்துகொள்வதாகவே கருதுகிறோம்.

மத்திய அரசின் நோக்கம் என்ன?

அந்த நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் வெளிப்படை யாகக் காட்டிக்கொள்ள மத்திய அரசு கடமைப் பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படும் பிரச்சினையிலும் மத்திய அரசு பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்பதும் வெளிப் படை.

உலகத் தமிழர்கள் மத்தியில் உருவாகிவரும் சிந்தனை;

சுண்டைக்காய் நாடான இலங்கையிடம் இந்திய அரசு ஏன் இப்படி நடந்துகொள்ளவேண்டும்? எந்தக் காரணத் துக்காக அப்படி நடந்துகொண்டாலும் சரி, ஈழத் தமிழர் களுக்கும் (இந்தியாவின் தெற்கேயுள்ள மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தமான தமிழின மக்களின் தொப்புள்கொடி - ரத்த உறவுக்காரர்கள்) தமிழ்நாட்டுத் தமிழர்களான மீனவர்களுக்கும் இலங்கைப் பயங்கரவாத அரசால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கை களுக்கு எந்த வகையில் (இராணுவப் பயிற்சி உள்பட) துணைபோகும் வகையில் இந்திய அரசு நடந்துகொண்டு வருவது - உலகத் தமிழர்கள் மத்தியிலே புதிய சிந்தனை களைத் தோற்றுவிக்க வழிவகுக்கக் கூடியதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

31 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திலும்
சேர்த்துக் கொள்க!

எனவே, கழகத் தோழர்களே, வரும் 31 ஆம் தேதியன்று காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு எனும் நான்கு பொருள்களை மய்யப்படுத்தி மாவட்ட தலைநகரங்களில் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களுடன் இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதைக் கண்டிப்பதையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திருவாரூர்
27.8.2012

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

விடுதலையின் பணி!

விடுதலை என்னும் தமிழர்களின் பாது காப்புக் கேடயமான ஏட்டிற்கு அரை நூற் றாண்டு காலம் ஆசிரியராக இருந்து சாதனை புரிந்த ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர் களுக்குப் பாராட்டு விழா - சென்னை பெரியார் திடலில் 25.8.2012 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1962 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் தனது முதல் தலையங்கத்தை எழுதினார் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (25.8.1962).

வரியில்லாமல் ஆட்சி நடக்குமா? -என்பதுதான் அந்தத் தலையங்கம். அன்று தொடங்கி, ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட தலையங்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 13,499; எழுதப்பட்ட அறிக்கைகள் 1926.

இந்தத் தலையங்கங்களும், அறிக்கைகளும் பல துறைகள் சம்பந்தப்பட்டவை. விடுதலை யின் இந்த எழுத்துகள் எத்தனை எத்தனையோ மாற்றங்களுக்கு விதை ஊன்றி இருக்கின்றன.

ஆட்சியின் ஆணைகள் மாற்றப்பட்டுள்ளன - புதிய சட்டங்கள் பிறப்பிப்பதற்கும் கைமுதல் கொடுத்திருக்கின்றன.

தலையங்கப் பகுதிகளில் சில நேரங்களில் தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளன.

எழுத்துரிமை பறிக்கப்பட்டதற்காக தலை யங்கப் பகுதி வெற்றிடமாக விடப்பட்டதும் உண்டு.

முரசொலி நாளேட்டின் ஆசிரியர் திரு. செல்வம் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்படுவதன் மூலம் எழுத்துரிமை அ.இ.அ.தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டதற்கு விடுதலை ஏடு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதன் அடையாளமாக தலையங்கப் பகுதி வெற்றிடமாக விடப்பட்டது (21.9.1992).
அரசு ஊழியர்களுக்கு இருந்த இரகசிய குறிப்பேடு முறையை எதிர்த்து எத்தனை எத்தனைத் தலையங்கங்கள் தீட்டப்பட்டன! கடைசியில் வெற்றியும் கிடைத்தது.

நுழைவுத் தேர்வை எதிர்த்து எத்தனை எத்தனை நுட்பமான தலையங்கங்கள் - கடைசியில் விடுதலைக்கே வெற்றி! வெற்றி!!

விடுதலையின் வரலாற்றில் அரசு நூலகங் களில் விடுதலை இடம்பெறத் தடை செய்யப் பட்டதுண்டு. 1950 இல் அப்படி தடை செய்யப் பட்டபோது விடுதலையில் ஒரு தலையங்கம் (3.2.1950). தலைப்பு வைக்கோலுக்குள் விடுதலை விளக்கு என்பதாகும்.

ஆட்சியாளர் சுடர்விட்டு எரியும் விடுதலை விளக்கையெடுத்து வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்துவிட்டார்கள். பொதுமக்கள் காண முடியாதபடி, விளக்கை மறைத்து விட்டதாக ஆட்சியாளர் முடிவு என்று எழுதியது.

இப்பொழுதுகூட தமிழ்நாட்டை ஆளும் அ.இ. அ.தி.மு.க. அரசால் விடுதலை அரசு நூலகங் களுக்குப் போடக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் விளைவு 50 ஆயிரம் சந்தாக்கள் தமிழர்களிடம் திரட்டப்பட்டு புதிய வாசகர்கள் கிடைத்துள்ளனர்.

விடுதலைக்குள்ள தனித்தன்மை ஒன்று உண்டு. ஆளும் கட்சியினை எதிர்க்கும் நிலைப் பாடு எடுக்கப்பட்டபொழுதும்கூட, அந்த ஆட்சியில் ஏதாவது நன்மை விளைவிக்கும் காரியங்கள் நடைபெற்றால், அதனை வரவேற்று எழுதிடத் தயங்குவதில்லை.

எதிர்த்து எழுதுவதில் எவ்வளவு வேகம் இருக்குமோ, அதேபோல் ஆதரிக்க வேண்டிய அவசியம் இருந்தால் விடுதலை தன் கண் களை மூடிக்கொள்ளாமல் மனந்திறந்து பாராட்டவே செய்யும்.

அத்தகைய பண்பட்ட விடுதலை தமிழர் இல்லந்தோறும் ஒளிவிளக்காகத் திகழ வேண் டாமா? தமிழர்கள் எண்ணிப் பார்க்கட்டும்! 27-8-2012