Search This Blog

15.8.12

ஆகஸ்டு 15 ஆம் நாளிலாவது ஆட்சியாளர்கள் சிந்திக்கட்டும்!

ஆகஸ்டு 15

இந்தியாவின் சுதந்திரம் அஷ்டமி, நவமி பார்த்து பெற்றுக் கொள்ளப்பட்டது. நேரு அவர்கள் தம்மைப் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும் பார்ப்பனர்களின் - ஆன்மீக ஆதிக்கவாதிகளின் அழுத்தத்திற்குச் செவி சாய்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்தியாவில், மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று குற்றங் கூறும் கடவுள் - மத நம்பிக்கையாளர்கள்கூட, நல்ல நேரம் பார்த்து சுதந்திரம் பெற்றும் பயனில்லை எனும் கோணத்தில் சிந்திப்பதும் இல்லை - அந்த வகையில் கருத்துகளைக் கூறுவதும் இல்லை. இரவில் வந்த சுதந்திரம் இன்னும் விடியவில்லை என்று பகுத்தறிவுக் கவிஞன், புரட்சிக்கவிஞன் சொன்னதுதான் சரியாகி விட்டது என்பதையாவது ஒப்புக்கொள்ளவேண்டும் - அதுதான் அறிவு நாணயம் என்பதும்கூட!

பொருளாதார நிலையை எடுத்துக்கொண்டால்  இன்னும் 37 கோடி மக்கள் வறுமை நிலையிலேயே உழலுவதாக திட்டக் குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.

எவ்வித சொத்துக்களும் இந்தியாவில் இல்லாத வர்கள் 18 விழுக்காடு - இதில் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 23 விழுக்காடாகும்.

கிராமப்புற மக்களில் நான்கில் ஒருவருக்குக் குடியிருக்க வீடு இல்லை, முறையாக துப்புரவு வசதியற்றோர் 50 விழுக்காடு, சுத்திகரிக்கப்படாத குடிநீரை அருந்துவோர் 68 விழுக்காடு.

கல்வி வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், இந்தியா உலகின் 72 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியா வில் பள்ளிகளில் இடைநிற்றல் பெண்கள் 70 விழுக் காடாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு 10 ஆண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்பது ஏட்டுச் சுரைக்காயாகி விட்டது.

ஆண் - பெண் சமத்துவம் என்பதை எடுத்துக் கொண்டால் 146 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு உரிய இடம் 129. இதில் வேடிக்கை என்ன வென்றால் முசுலிம் நாடாகிய வங்கதேசம்கூட 112 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 115 ஆம் இடத்தில் உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இப்போது உள்ள இடம் 10 விழுக்காட்டுக்குமேல் இல்லை; வங்கதேசத்திலோ பெண்கள் 18 விழுக்காடு அளவுக்கு இடம்பெற்றுள்ளனர்.

50 சதவிகித ஆண்கள் இந்தியாவில் உயர்கல்வி கற்றுள்ள நிலையில் பெண்களோ வெறும் 25 விழுக் காடுதான்!

விவசாயிகள் நிலையோ பரிதாபத்தின் அடித்தளம் தான். இந்தியாவில் மணி ஒன்றுக்கு மூன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். 1993 முதல் 2006 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம். (மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் நாடாளுமன்றத்தில் கூறிய தகவல்தான் இது - 1.12.2011).

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் 65 விழுக்காடு உள்ள இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 47.5 லட்சம் கோடி ரூபாய் (18 ஆயிரம் டன்).

இதில் பெரும்பான்மை, கோவில்களில் முடங்கிக் கிடக்கிறது.


2011 ஜூலை 14 முதல் 16 வரை சீரடி சாயிபாபா கோவிலில் நடைபெற்ற குருபூர்ணிமா விழாவில் மட்டும் குவிந்த தங்கக் காசுகளின் மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 25 லட்சமாம்.

இந்தியாவில் இருக்கக் கூடிய முக்கியமான கோவில்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோவில் ரூ.42 ஆயிரம் கோடி.

சிம்லா வைஷ்ணவி கோவில் ரூ.51 ஆயிரம் கோடி

குருவாயூர் கிருஷ்ணன் கோவில் ரூ.125 கோடி

மும்பை சக்தி விநாயகர் ரூ.125 கோடி

சீரடி சாயிபாபா கோவில் ரூ.427 கோடி

இப்படிப் போகிறது உயிரற்ற இந்தத் திடப் பொருள்களுக்கு (கடவுளுக்கு) இவ்வளவு சொத்து இருந்து பயன்?

உயிருள்ள மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் வரிசையில் இந்தியா 67 ஆம் இடத்தில் இருக்கிறது. ஒன்றுக்கும் உதவாது முடங்கிக் கிடக்கும் தங்கங்களை மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாதா?

இந்தியா உண்மையில் வறுமையான நாடல்ல - வறுமையாக ஆக்கப்படும் நாடு.

கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதில் பகுத்தறிவு மட்டு மல்ல - பொருளாதார வழி திறப்பும் இருக்கிறது என் பதை ஆகஸ்டு 15 ஆம் நாளிலாவது ஆட்சியாளர்கள் சிந்திக்கட்டும்!


                    ---------------------"விடுதலை” தலையங்கம் 15-8-2012

30 comments:

தமிழ் ஓவியா said...

யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்?

இந்தியாவின் தென்கோடியில் கருநாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் ஒன்றுள்ளது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களுள் இதுவும் ஒன்று. (காஞ்சி மடம் இந்தப் பட்டியலில் வராது.)

இந்தச் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீபாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளாம். சென்னையில் டேரா போட்டுள்ளார். (மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரித்துக் கொண்டு வழக்கம் போல இருக்காளாம்.)

19.8.2012 கல்கி அட்டைப்படம் போட்டு ஆராதித்து சாங்கோபாங்கமாகப் பேட்டி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தமது குருநாதரான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் பற்றி சும்மா விளாசித் தள்ளி இருக்கிறார். அந்தக்குருநாதர் எப்படிப்பவட்டவர் தெரியுமா? ‘The Hindu Ideal’ எனும் நூலை சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது. அதன் 23 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது:

‘The Panchama asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soaps and any clothing and decoration of it in the best uptodate style cannot remove from it its inlaid flith that has originated from the deep rooted contamination of filthy inheredity. ’

என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் கூட பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது படிந்த அந்தத் தீட்டு - அழுக்கு பரம்பரைப் பரம்பரையாக ஆழமாக வேர் பிடித்து அவர்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வந்துள்ளதால் இதனை நீக்கவே முடியாது என்று சொன்னவர்தான் - இல்லை, இல்லை - திருவாய் மலர்ந்தருளியவர்தான் இவரின் குருநாதர்.

இந்த மனிதகுல விரோதிகள் இவர்கள்! சகமனிதனைப் பிறப்பின் அடிப்படையில் வெறுக்கக் கூடிய மனிதநேயமற்ற வகையில் மனித உருவில் நடமாடும் பேர்வழிகள்தான் ஆச்சாரியார்களாம் - ஜகத்குருக்களாம்- ஸ்ரீலஸ்ரீகளாம்.

நியாயமாக தீண்டாமையைப் பச்சையாகப் பேசும் இந்த வர்ணாசிரம விரியன்கள், பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின் கீழ் வெஞ்சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் துணிச்சலாக அதனைச் செய்யத்தானே வேண்டும்? நம் அரசுகளுக்கு ஏது அந்த முதுகெலும்பு?

குறிப்பு: காஞ்சி சங்கர மடத்துக்கும், சிருங்கேரி சங்கர மடத்துக்கும் ஆகாது - அந்த அளவுக்கு ஜென்மப் பகை என்பது வேறு விஷயம்! 15-8-2012

தமிழ் ஓவியா said...



செத்தமொழி



சீடன்: சமஸ்கிருதம் பேசப் பழகு வோம் என்ற பெயரால் சென் னையில் ஒரு தனியார் கல்லூரியில் மாநாடு நடக் கிறதே - குருஜி?

குரு: அவாளே ஒத்துக்கொள்றாள், சமஸ்கிருதம் பேசப் படாத செத்த மொழி என்பதை... சீடா? 15-8-2012

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர் துயர் துடைக்க செய்யப்பட வேண்டியவை ஒன்று- உலகப் பார்வை இதன்மீது விழச் செய்வது இரண்டு- இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது டெசோ மாநாட்டின் நோக்கங்கள் இவையே! ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆற்றிய அரிய உரை



சென்னை ஆக.15- சென்னையில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டின் நோக்கங்கள் இரண்டு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:

சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 12.8.2012 அன்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

தமிழ் ஓவியா said...

வரலாறு காணாத வகையில் புதிய எழுச்சி, புத்தாக்கம், புதிய முயற்சிகள், புது திருப்பம் என்ற டெசோவைத் தந்த எங்கள் குலத் தலைவர், எங்கள் இனத் தலைவர், இன்றைய ராவணன் நமது தலைவர் கலைஞர் அவர்களே,

தென்திசையைப் பார்க்கின்ற நேரத்தில் பூரிக்க முடியவில்லை, ஆனால், அங்கே இருந்த ராவணன் அழிந்துவிடவில்லை, இங்கே முளைத்திருக்கிறார் என்பதுதான் அதனுடைய அடையாளம் என்று காட்டக் கூடிய வகையில், புதிய டெசோ உருவாகி இருக்கின்ற இந்த காலகட்டத்தில், காலை யில் அற்புதமான தீர்மானங்களை விவா தித்து உலக அரங்கிலே கொண்டு செல்லக் கூடிய அற்புதமான முயற்சிகளை செய் வதற்கு ஆதாரப்பூர்வமாக ஒத்துழைப் பினை நல்கிக் கொண்டிருக்கின்ற உலகத் தின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக் கின்ற சான்றோர் பெருமக்களே,

தமிழ் ஓவியா said...


அதேபோல, அகில இந்திய அளவிலே மிகப்பெரிய அளவிற்கு காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரை என்ற சொற்றொட ருக்கு ஏற்ப, நேஷனல் கான்பரன்ஸ் (என்.சி.), இராம்விலாஸ் பஸ்வான் அவர்களுடைய லோக் ஜனசக்தி போன்ற பல்வேறு கட்சி கள் இந்திய நாடாளுமன்றத்திலே குரல் கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த தலைவர் களை எல்லாம் ஒன்று திரட்டி, அடுத்த கட்டத்தில் எப்படியெல்லாம் செய்யவேண் டும் என்று திட்டமிடக் கூடிய கலைஞரின் முயற்சிக்கு அற்புதமான அச்சார வெற்றி இன்றைக்கு நாம் இந்த மாநாட்டை வெற்றியோடு தொடங்குகிறோம்.

தமிழ் ஓவியா said...

வரவேற்புரையாற்றிய தளபதி அவர்கள், ஒரு வரலாற்று உரையை நண்பர் சுப.வீ. அவர்கள் சொன்னதைப் போல, நிகழ்த்தி யுள்ளார்.

அதிலே அவர் தொகுத்துச் சொன்ன பொழுது மிகப்பெரிய அளவிற்கு நான்கு கட்ட உரிமைப் போர் நடந்தது; அதனு டைய வரலற்றைச் சொன்னார்கள்; அருமை நண்பர்களே, கூடியுள்ள இன உணர்வாளர்களே, மனிதநேய நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் வணக்கம் தெரி வித்து ஒன்றை இங்கே அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அய்ந்தாவது போர் தொடக்கம்!

மீண்டும் டெசோ, மீண்டு டெசோ என்று சொல்லக்கூடிய இம்மாநாட்டின் மிக முக்கியமான பணி, அய்ந்தாவது போர் இங்கிருந்து தொடங்கப்படுகிறது என்பது தான் இன்றைய அறிவிப்பின் முதற்கட்டம்.

தமிழ் ஓவியா said...

அந்தப் போருக்கு ஆயுதம் இல்லை; மற்றவர்கள் நினைப்பதைப்போல ஆயுதம் இல்லை. சுயமரியாதை இயக்கத்தைத் தந்த அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் இங்கே இருக்கின்றன.

ஆயுதங்கள் இருப் பது மட்டுமல்ல, அந்தப் போர்க் கருவிகள் சக்தி வாய்ந்தவை. கலைஞருடைய பேனா பலரின் வாள் முனையை தாக்கக் கூடியது மட்டுமல்ல, ஆட்சிகளையே சுற்றிச் சுழல வைக்கக் கூடியது. அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்து நான் மீண்டும் சொல்லுகிறேன், நேற்று மாலை நாங்கள் கலைஞருடன் பேசிக் கொண்டிருக்கிறபொழுது, இந்த இடத்தில் நிகழ்ச்சி நடக்குமா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், எந்த இடத்தில் நடந்தால் என்ன, மாநாடு நிச்சயம் நடக்கும், அதுதான் மிக முக்கியம் என்பதிலே கலைஞர் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

அதைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில், வழக்குப் போட்டு வெற்றி பெற்றிருக்கின்ற, இவ்வளவு பெரிய ஏற்பாட்டினை மிகச் சிறப்பாக செய்திருக்கின்ற சகோதரர் அன் பழகன் அவர்கள் முதலில் அறிவிக்கும் பொழுது சொன்னார், இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது, காவல்துறையினர் ஒருவருமே இல்லையே என்று கூறினார். கூடியுள்ள இந்த நமது கூட்டத்தைவிட காவலர்கள் வேறு யார் தேவை? அதைத் தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இதோ காவல்துறையின் தலைவர் அங்கே இருக்கிறார். காவலர்கள் நாம் இங்கே இருக்கிறோம். இதுதான் உலக மனிதநேய காவலர்களுடைய அணி என்பதுதான் மிக முக்கியம்.

உச்சநீதிமன்றம் மட்டுமல்ல, உலக நீதிமன்றத்திற்கே கூட செல்வார்கள்

எனவே, அவர்களுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். நாங்கள் யாரும் கோபப்படவில்லை, வருத்தப்படவில்லை, மகிழ்ச்சி அடைகின்றோம். நீங்கள் இன் னும் தொந்தரவு கொடுங்கள்; உச்சநீதி மன்றம்வரை சென்று அவர்கள் முயற்சி எடுத்தார்கள் என்ற தகவல் இங்கே மேடை யில் தளபதி அவர்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். உச்சநீதிமன்றம் மட்டுமல்ல, அவர்கள் நினைத்தால் உலக நீதிமன்றத்திற்கே கூட சென்றிருப்பார்கள். ஆனால், முடிவு என்ன, நடக்கவேண்டிய வைகளை, நடத்தக் கூடிய ஆற்றல் படைத்த வர்கள் இங்கே இருக்கிறார்கள்.

இந்த எதிர்ப்பு என்பது அடிக்க அடிக்க எழும்பும் பந்து என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தி னுடைய பாலபாடம். அந்த அடிப்படை யிலே இவ்வளவு பெரிய நிகழ்வுகள் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தலை வர்கள் எல்லாம் அற்புதமாக பேசினார்கள். இங்கே 14 தீர்மானங்கள் இந்த மாபெரும் மாநாட்டிலே ஒப்புக் கொள்ளப்பட்டிருக் கின்றன.

அதனுடைய சாரம் இரண்டு

ஒன்று, உலகப் பார்வை ஈழத் தமிழர் களுடைய துயரத்தைத் துடைப்பதற்கு உடனடியாகத் தேவை என்பது. அதற்கு அழுத்தம் கொடுத்து தொடங் கப்பட வேண்டியது, அய்.நா. முதற் கொண்டு மற்ற நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைத்தால், அதனை செய்யக் கூடிய இடம், வற்புறுத்தவேண்டிய ஒன்று இந்திய அரசு. அந்த இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதைத் தான் இவர்கள் அத்தனைப் பேரும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ராஜபக்சே அரசு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தை உருவாக்கி இருக்கிறது இம்மாநாடு

எனக்கு முன்னதாக பேசிய அருமை நண்பர் இலங்கையில் இருந்து எத்தனையோ இன்னல்களைக் கடந்து வந்துள்ள விக்ரம பாகு கர்ணரத்னே அவர்கள் ஒன்றைச் சொன்னார், மிக ஆழமாகக் கூறினார், இன் னமும் கூட இனப்படுகொலை நடந்தது என்பதைச் சொல்லி, இங்கே நடைபெற்ற டெசோ மாநாட்டில் என்ன பிரச்சினைகள் எடுத்து வைக்கப்பட்டதோ, அதற்கு ராஜபக்சே அரசு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தை உருவாக்கி இருக்கிறது இந்த மாநாடு, அதற்காக உங்களுக்கு நன்றி என்று அழகாகக் கூறியுள்ளார்.
நண்பர்களே, குறை சொன்ன நண்பர்களே, குற்றங்காணுகின்ற நண் பர்களே, நீங்கள் கொஞ்சம் அமைதி யாக விழித்துப் பாருங்கள், உங்களு டைய செவிகள் இந்த செய்திகளைக் கேட்டு பக்குவப்படட்டும். அதைத் தான் மிக முக்கியமாக நாங்கள் நினைக்கின்றோம்.

தமிழ் ஓவியா said...

இன்றைக்குக் காலையிலே நடை பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஒரு கலந்துரையாடல் கான்கிளைவ் என்று சொல்லக் கூடிய விவாத அரங்கில் தீர்மானங் களைப் பற்றி விவாதித்த அந்தக் கலந் துரையாடலில், அற்புதமான உரையை ஆங்கிலத்திலே தயாரித்து அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள்.

முதிர்ந்த தலைவர், முத்திரை பதித்த தலைவர் கலைஞர்



அதிலே ஒரு பகுதி, என்ன செய்ய வேண்டும்? வெறும் உணர்ச்சிப்பூர்வ மாக அல்ல, அறிவுப்பூர்வமான செயல்களை, உலகத்தினுடைய பற்பல நாடுகளில் இருந்து வந்திருக் கின்றவர்களுக்கு ஆலோ சனை சொல்லுங்கள் என்று சொல்லுகிற பொழுது, அழகாகச் சொன்னார்கள். காரணம், முதிர்ந்த தலைவர், முத்திரை பதித்த தலைவர் அவர்.
அப்பொழுது அவர் கூறினார்: உடனடியாக நாம் செய்யவேண் டியது, ஏராளமானவர்களை நாம் இழந்திருக்கிறோம், எம்மினம் சோகத் தின் உச்சகட்டத்திற்குப் போயிருக் கிறது. எந்த நாட்டு வரலாற்றிலும் இப்படிப்பட்ட கொடுமைகளை, ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடு மைகளைப் போல் வேறு எவரும் அனுபவிக்கவில்லை. இழந்தவர் களைப்பற்றி மட்டும் நாம் பேசி உணர்ச்சிகளைத் தூண்டினால் போதாது, இருப்பவர்களை முள் வேலியிலிருந்து எப்படி வெளியே கொண்டு வருவது, இருப்பவர்கள் எப்படி வாழ்வுரிமையைப் பெறுவது?

தமிழ் ஓவியா said...

இதற்காக உடனடித் திட்டங்கள், நீண்ட கால திட்டங்கள் என்று நாம் பிரித்து, அதற்கேற்பப் பணிகளை நாம் ஒழுங்கு படுத்தவேண்டும். அதற்குரிய திட்டங் களைச் செய்யவேண்டும். அதற்குரிய செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். அதற்கு உங்களுடைய கருத்துரைகளைத் தாருங் கள், உங்களுடைய அறிவுரைகளை வழங் குங்கள் என்று அவ்வளவு பேரையும் கலைஞர் அவர்கள் கேட்டார்கள்.

அற்புதமான 14 தீர்மானங்கள்

அதன் விளைவாகத்தான் அற்புத மான இந்த 14 தீர்மானங்கள் வந் திருக்கின்றன.
இதற்கு முன்னால் நடந்த பல் முயற்சிகள் வெற்றிபெறாமல் போனதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு நண்பர்களே, அதனை ஆழமாகச் சிந்திக்கவேண் டும் இப்பொழுது. என்ன அந்த அடிப்படை காரணம் என்றால், ராணுவ வெற்றிகள், தோல்விகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அதைவிட மிக முக்கியமான மூல காரணம், உலகத் தின் பார்வை அந்தப் பிரச்சினையில் அதற்கு முன்னாலே சரியாக விழ வில்லை.

இரண்டாவது டெசோ ஏன் இப்போது தொடங்கப்படுவதின் அவசியம்? ஏன் இந்த மாநாட்டி னுடைய தேவை? இவைகளையெல் லாம் வலியுறுத்தவேண்டுமானால், இன்றைக்குத்தான் அய்.நா. போர்க் குற்றவாளிகளை அடையாளங் கண்டு, இந்திய அரசாங்கமே அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

நான், கடந்த ஜூன் 26 ஆம் தேதி அய்.நா. சபையிலே, நியூயார்க்கிலே அங்கே தென்கிழக்கு ஆசியாவிலே இருக்கக் கூடிய நாடுகள், மனித உரி மைகள் இவைகளைப்பற்றி இருக்கக் கூடிய அரசியல் விவகார தலைமை அதிகாரி ஹிடோகிடெனைச் சந்தித்து, அவருக்கு நன்றி தெரிவித்தேன். இந்தத் தீர்மானத்தைப்போல அய்.நா. எங்களை ஆதரித்து, எங்கள் தமிழ் இனத்தை, மனித நேய அடிப்படை யிலே இலங்கை அரசின் போர்க் குற் றங்களை அடையாளம் கண்டிருக் கிறார், அய்.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன் அவர்கள்.

அதற்கேற்ப மேல் நடவடிக்கைகள் தொடரவேண் டும். தேவையான நடவடிக்கைகளை மேலும் தொடரவேண்டுவது மட்டு மல்ல, இன்னும் அங்கே உள்ள மக்கள் உரிமைகள் அற்றவர்களாக உள்ளனர் என்று சொன்னபொழுது, ஏறத்தாழ 45 மணித் துளிகள் அந்த அதிகாரி அவர்கள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். டெசோ மாநாடு பற்றியும் விரிவாகவும், விளக்கமாக வும் கூறினேன். இந்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்

நாங்கள் என்னதான் அய்க்கிய நாடு அவையிலே தீர்மானம் நிறை வேற்றினாலும், அடுத்த கட்டத்திற் குப் போகவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் செய்யவேண் டிய, உங்கள் அமைப்பு செய்யவேண் டிய மிக முக்கியமான பணி ஒன்று உண்டு. அதுதான் இந்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். எவ்வளவு அழுத் தத்தைத் கொடுக்கிறீர்களோ, அதிலேதான் உங்களுடைய முயற்சியின் வெற்றி அமைந் திருக்கிறது என்று அந்த அய்.நா. அதிகாரி கூறினார்.

அதனைத்தான் நான் நமது கலை ஞர் அவர்களை சந்தித்தபொழுது கூறினேன். ஏற்கெனவே ஏடுகளிலும் ஒரு சிறு செய்தியாக வெளிவந்தது.

இன்றைய தீர்மானங்கள் அந்த அழுத்தத்தினை வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திலே தலைமை வகிக்கின்ற பிரபலமான கட்சிகள், தேசிய கட்சிகள் இந்தப் பிரச்சி னையை கையிலே எடுத்திருக்கின்றன. அவர்கள் வாக்குறுதியை கொடுத் திருக்கிறார்கள். இதைவிட இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக மருந்து போடக் கூடிய பிரச்சினை வேறு என்ன?

இதைவிட இலங்கையிலே கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், அதனைத் தடுப்பதற்கு ஆக் கப்பூர்வமான வழி என்ன? இதனை நினைத்துப் பார்க்கவேண்டும்.

நம்முடைய இயக்கத்தின் வரலாற் றிலே ஒன்றை பல பேருக்கு நினை வூட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

நாங்கள் டெசோவைத் தொடங் கியிருக்கிறோம், இனப் படுகொலை யைக் கண்டிக்கிறோம், மனித உரி மையை மீட்டெடுக்கவேண்டும் என் பதை வலியுறுத்துகிறோம் என்று சொன்னால், இந்த இயக்கம், திராவிடர் இயக்கம், அது தோன்றிய காலத்திலேயே, ஏற்கெனவே வெள் ளைக்கார ஆட்சியிலேகூட அக்கிர மங்கள் நடைபெற்றது - அதனைப் பார்த்து நீதிக்கட்சி பொறுத்துக் கொண்டிருக்கவில்லை.

1939ஆம் ஆண்டிலேயே...

ஒரு செய்தியை உங்களுக்கு, இந்த மாபெரும் அவைக்கு முன்னாலே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கி றேன்.

1939 ஆம் ஆண்டில், தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக இருந்துதான் திராவிடர் கழகம், திராவிட முன் னேற்றக் கழகம் எல்லாம் வந்திருக் கின்றன.

தமிழ் ஓவியா said...

ஜஸ்டிஸ் கட்சி 100 ஆண்டு விழா வைக் கொண்டாடிக் கொண்டிருக் கின்ற இந்தக் காலகட்டத்தில்.

அப்போது ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இதோ என் கைகளில் உள்ள அந்தத் தீர்மானம்.

இந்த அவைக்கு இதனைத் தெரி விக்கிறேன், இலங்கைத் தமிழர் இன்னலும், நீதிக்கட்சியும்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத் தின் நிருவாகக் கமிட்டிக் கூட்டம். 10.8.1939. நம்மில் பல பேர் பிறக்காத காலம், சில பேர் சிறுவர்களாக இருந்த அந்த காலகட்டத்தில், 10.8.1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற் றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதை யும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதை யும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், டபிள்யூ,பி.ஏ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று, தமிழர்களின் நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிடவேண்டுமாய் கேட்டுக்கொள்வதாகவும் முதல் தீர்மானம் நிறைவேறியது என்பது வரலாறு.

எனவே, மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படவேண்டும் என்பது சாதாரணமானதல்ல. அண்ணா சொன்னார் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே, இவ்வளவு விரைவில் ஆட்சிக்கு வந்துவிட்டீர் களே என்று அவரிடம் கேட்டதற்கு,

அண்ணா அவர்கள் சொன்னார், எங்களின் பாட்டன் கட்சி நீதிக்கட்சி, அதனுடைய தொடர்ச்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்று அழகாகச் சொன்னார். அதனை நினைவூட்ட நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆகவே, இப்பொழுது எடுத்திருக் கின்ற முயற்சிகள் சாதாரணமான முயற்சி அல்ல, அதைத்தான் இந்த நேரத்தில் வலியுறுத்தி சொல்ல விரும்புகிறோம்.
அகில உலக அளவிலே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தக் கூடிய தீர்மானங்கள்.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகத்தார் முன்னிலையில், இந்தப் பிரச்சினை எந்த அளவிற்கு வலிமை பெற்று வருகிறது, அதை நாம் பயன் படுத்தவேண்டும் என்பதற்கு இன்னு மொரு ஆதாரம் இதோ.

நேரமின்மை இருந்தாலும் இதனை தெரிவிப்பதற்கு என்ன காரணம் என்றால், டெசோ விளக்கக் கூட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது டெசோ தலை வரின் விருப்பம், ஆணை. அதற்கு இந்தச் செய்திகள் பயன்படும் என்ப தால் இதனை நான் கூறுகிறேன். இது யாருக்கும் அரிதில் கிடைக்கக் கூடிய செய்தி அல்ல.

இதோ என்னுடைய கையிலே இருக்கின்ற நூல் கூண்டு என்று இதற்குப் பெயர்.

கார்டன் வைஸ் என்ற ஆஸ்திரேலிய நண்பர்

இது புதியதாக வந்திருக்கின்ற ஒரு நூல். இது ஆங்கில நூலின் மொழியாக்கம். ஆங்கிலத்திலே கேஜ் (‘Cage’) என்ற தலைப்பிலே வந்திருக் கின்ற நூல். இது முழுக்க முழுக்க ஈழத் தமிழர்கள் எப்படி இன்னல்களை அனுபவித்து இந்த நான்குப் போர்களைப்பற்றி தளபதி சொன்னார்களே, அந்தப் பிரச்சினை தொடங் கிய காலத்திலிருந்து அது வந்திருப்பதையெல்லாம் கார்டன் வைஸ் என்ற ஆஸ்திரேலிய நண்பர், அய்.நா.அவையின் சார்பாக அங்கே செய்தியாளராக இருந்து, அவர் தன்னு டைய அனுபவங்களையெல்லாம் ஆவணப் படுத்தியிருக்கிறார்.

எங்கே? எப்போது? என்ன நடந்தது? என்று சொல்லுகிறார். சொல்லுகிற நேரத்தில், இங்கே கர்ணரத்னே அவர்கள் சொன்னார்களே அது போலவே தன்னுடைய முன்னுரையிலே சொல்லு கிற பகுதியில் ஒரு சிறு பகுதியினை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 2 கோடி. அவர்களில் இரண் டில் ஒரு பங்கினர் புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். அந்த நிலையி லேயே கூட, 1948 இல் விடுதலை பெற்றபொழுது, பெருந்தன்மையான போக்கைக் கைக்கொள்ளும் மக் களாட்சி மறந்துவிட்டதாகத்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், தொடர்ந்து வந்த அரசுகள் மக்களாட்சியின் மொழியைப் பேசிக் கொண்டே, தங்களை எதிர்க்கும் அரசியல் வாதிகள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் அனைவரையும் கொன்று வந்திருக்கின்றனர்.

இனப்படுகொலை என்று சொல் வது தமிழ் நாட்டுக்காரர்கள் அல்ல, இதனைச் சொல்வது இந்திய பூபாகத் தில் ஒரு பக்கத்தில் இருக்கக் கூடிய வர்கள் அல்ல. இதனைச் சொல்வது ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர். அய்.நா. சபையிலே பணியாற்றி, இன் றைக்கும் வாழ்ந்து கொண்டி ருக்கக் கூடியவர். மறுபடியும் சிட்னி நகரிலே போய் தன்னுடைய அனுபவங்களைப் பதிவு செய்து எழுதி இருக்கிறார்.

தமிழ் ஓவியா said...

எங்கும் கேள்விப்படாத ஒன்று, அரசாங்கமே கூலிப்படைகளை உரு வாக்கி, காவல்துறையும் சரி, ஆட்சியில் இருப்போரின் விருப்பத்தை நிறை வேற்றவே இருக்கின்றார்கள். எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்க முடியவில்லை. பத்திரிகையாளர்கள் வலியுறுத்த முடியவில்லை என்று வரிசையாக எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லி, அங்கே நடக்கின்ற கொடுமைகள் அத்தனையும் இதிலே பதி வாகியிருக்கின்றன. விருப்பு வெறுப்பு இல்லாமல் எப்படி தவறுகள் நடந்தன. அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டன என்றெல்லாம் சொல்லுகிறார். அதிலே ஒரு பகுதி, போர்க்குற்றத்தைபற்றி பான்கிமூன் அவர்கள் எழுதிய தீர்மானம் வந்தி ருக்கிறது.

மூன்று லட்சத்து முப்பதாயிரம் பேர்மீது குண்டுமழை

தமிழ் ஓவியா said...

இலங்கையில், வன்னி என்ற பகுதியிலே, அது போர் இல்லாத பகுதி, எல்லா மக்களும் இங்கே வந்துவிடுங்கள். உங்கள்மீது குண்டு வீச்சு இருக்காது என்ற உத்தரவாதம் கொடுத்த உடனே, உச்சகட்டப் போர் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, பல பேர் அங்கே போனார்கள். மூன்று லட்சத்து முப்பதாயிரம் பேரை ஒரே இடத்தில் ஒன்றாகச் சேர்த்து, மேலே இருந்து குண்டு போட்டு அழித்திருக்கிறார்கள் என்ற செய்தி அய்க்கிய நாடு அறிக்கையில் இருக்கிறது.

எனவேதான், இந்த இனப்படுகொலை பச்சையாக, பகிரங்கமாக நடந்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, இந்த நேரத்திலே இதற்கு விடிவு காண வேண்டுமானால், ஒரே வழி முதலில் அழிக்கப்பட்டு, ஒழிக்கப்பட்டிருக்கிற மனித உரிமைகள் மீட் டெடுக்கப்படவேண்டும். அவர்களை நம்பி எல்லாம் நடந்துவிடும் என்று நினைக்க முடியாது. ஓநாயின் வயிற்றில் ஆட்டுக்குட்டி பத்திரமாக இருக்கும் என்று சொன்னால், அதை நம்பத்தான் வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆகவேதான், மனித உரிமைகள் என்பதற்கு முதலிலே இதைச் சொல்லி, வேறு வழியில்லை என்று சொன்னால், அவர்கள் ஈழத்தை தானே கேட்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. அது காலத்தின் கட்டாயம்.

தமிழ் ஓவியா said...

ஏனென்றால், கணவனைப் பிடிக்காத மனைவிக்கு மணவிலக்குப் பெற உரிமை இருக்கிறபொழுது, அண்ணன் தம்பிகள் பிரிந்து போகலாம் என்று நினைத்தால், அவர்கள் பிரிந்து போகலாம் என்ற சட்ட உரிமை இருக்கிறபொழுது, தங்களை குடிமக்க ளாகவே கருதாதவர்கள் என்று சொன்னால், அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதுதான் மிக முக்கியமான பிரச்சினை.

எனவேதான், இதைப்பற்றி நாம் இப்பொழுது பேசவேண்டிய அவசியமில்லை. காலத்தின் கட்டாயம், தானே அங்குதான் போய்ச் சேரும் என்று சொல்லக்கூடிய நிலை.

அதேநேரத்தில் கடைசியாக ஒன்றைச் சொல்லு கிறேன்.

பொது எதிரி யார்? கலைஞரா, டெசோவா, ராஜபக்சேவா?

இங்கே யாரோ ஒருவர் சொன்னார்களே, நிறைய அளவிற்குத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். புரியா மல் கலைஞரை பேசுகிறார்கள்; டெசோவை ஏசு கிறார்கள் என்று, நாங்கள் அதனைப்பற்றி கவலைப் படவில்லை. தாராளமாகச் செய்யுங்கள், ஏராளமாகச் செய்யுங்கள். நீங்கள் பேசப் பேச அதுதான் இந்த வயலுக்கு நீங்கள் பாய்ச்சும் நீர்; அதுதான் நீங்கள் போடும் உரம். ஆகவே, நீங்கள் தாராளமாகப் பேசுங்கள்.

இன்னும் கேட்டால், குறைந்தபட்சம் அந்தச் சகோதரர்களுக்கு நான் சொல்லுகிறேன், முடிந்தால் இந்தப் பக்கம் வாருங்கள்; முடியா விட்டால் தனித்து நின்று குரல் கொடுத்தாவது ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவோம் என்று சொல் லுங்கள். தேவையற்ற விமர்சனங்களிலே ஈடுபட்டி ருக்காதீர்கள். தயவு செய்து ஒரே ஒரு கேள்வியை அவர்கள் முன்னாலே, அவர்களின் சிந்தனைக்காக வைக்க விரும்புகிறேன்.

பொது எதிரி யார்? கலைஞரா, டெசோவா, ராஜபக்சேவா? தயவு செய்து இதை முடிவு செய்துகொள்ளுங்கள்.

இதனை நீங்கள் முடிவு செய்தால், உங்களுக்குத் தடுமாற்றம் இருக்காது.

நீங்கள் கலைஞர் பக்கம் திரும்பினால், ராஜ பக்சேவினுடைய தோளில் ஏறி உட்கார்ந்தி ருக்கிறீர்கள் என்று பொருளாகுமே தவிர வேறு கிடையாது. மனித உரிமையை நீங்கள் மதிப்பதாக இல்லை என்பதற்கு அது அடையாளம்.

ஆகவேதான் முடிந்தால் தாராளமாக வாருங்கள்.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலேத்திலே ஒரு பாட்டு, செய்யுள் உண்டு.

‘‘Don’t Walk before me

I may not follow you,

Don’t Walk behind me

I may not lead you well

Walk by my side and be my friend’’

எனக்கு முன்னாலே நீ நடந்துபோக விரும் பினால், நீ வேகமாகச் செல். ஆனால், உன்னை வேகமாக நான் பின்பற்றவில்லை என்று சொல் லாதே. என்னுடைய சக்திகேற்ப நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். எனக்குப் பின்னாலே நீ பின்தங்கி வந்தால், நீ உடனடியாக, நீ மெதுவாக வருகிறாயே, அதற்கேற்ப வருகிறேன் என்று சொல்லாதே, முடிந்தால் நீ நண்பனாக இருந்தால், எங்களோடு இணைந்து வா, அப்போது நாம் எல்லோரும் சேர்ந்து பயணம் செல்வோம் என்ற பழமொழி ஒன்று உண்டு. ஆனால், நான் அதை சற்று மாற்றிச் சொல்லுகிறேன்,

நீங்கள் இதைவிட வேகமாகப் போனால் நாங்கள் வரவேற்போமே தவிர, குற்றம் சொல்ல மாட்டோம். தயவு செய்து இதைவிட வேகம் காட்டுங்கள்.

எங்களுக்குப் பழைய சகோதரப் பாசம் உண்டு

கலைஞர் என்ன பெரிய தியாகம் செய்து விட்டார்? இரண்டு முறை ஆட்சியை இழந்தி ருக்கிறார்கள். பலமுறை எம்.எல்.ஏ., பதவியைத் துறந்திருக்கிறார்கள். நீங்கள் என்ன அதைவிட பெரிய தியாகம் செய்யலாம் அல்லவா? உலகம் உங்களைப் பார்த்து சொல்லும் அல்லவா? ஆகவேதான் நண்பர்களே, உங்களைப் பார்த்து சொல்லுகிறோம், தயவு செய்து உங்களை நீங்களே தாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களை நீங்களே இழிவுபடுத்திக் கொள்ளாதீர்கள். என்ன

இருந்தாலும் எங்களுக்குப் பழைய சகோதரப் பாசம் உண்டு.

நீங்கள் யாருடைய வில்லுக்கும் அம்பாகாதீர்கள்; அம்பானால் நட்டம் எங்களுக்கு அல்ல

அந்த அடிப்படையிலே சொல்லுகிறோம், நடக்கவேண்டியவைகள் நடந்துகொண்டிருக்கின் றன; நடப்பவைகள் இனி நல்லவையாக இருக்கும். மிகப்பெரிய அளவில் ஒரு திருப்பம் ஏற்பட்டி ருக்கிறது. இந்தத் திருப்பத்தின்மீது உலகப் பார்வை விழுந்திருக்கிறது. இந்திய அரசாங்கத்தினுடைய அழுத்தத்திற்கு அச்சாரம் போடப்பட்டிருக்கிறது. இதுதான் ஈழத் தமிழர்களுக்கு, புலம் பெயர்ந்திருந்த தமிழர்களுக்கு நாம் காட்டும் நன்றி! நீங்கள் யாருடைய வில்லுக்கும் அம்பாகாதீர்கள். அம்பா னால் நட்டம் எங்களுக்கு அல்ல. அதனுடைய விளைவு என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடைசியாக ஒன்றைச் சொல்லி என் உரையை நிறைவுபடுத்துகிறேன்.

நற்சாட்சிக்கு அல்ல, எங்களுடைய மனச்சாட்சிக்காக!

இந்த டெசோ அமைப்பு, அதன் தலைவர், அதன் உறுப்பினர்கள் இந்த முயற்சிகளை எடுக்கிறோம் என்று சொன்னால், யாருடைய நற்சாட்சிப் பத்திரத்திற் காகவும் நாங்கள் காத்திருந்து அதற்காக செய்யவில்லை; நற்சாட்சிக்கு அல்ல, எங்களுடைய மனச்சாட்சிக்காக - தமிழர்களின் இனத்தினுடைய மீட்சிக்காக இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவேதான், மீண்டும் இந்த டெசோமூலம் சொல்கிறோம், முடிந்தால் வாருங்கள், முடியாவிட்டால் அமர்ந் திருங்கள்; அதுவும் முடியாவிட்டால் உங்களை நீங்களே இழிவுபடுத்திக் கொள்ளாதீர்கள். காலம் உங்களை மன்னிக்காது.

கடைசி நேரக் கல்லறைகள் கூட, ஈழத்திலே இருக்கின்ற கல்லறைகள் கூட என்ன செய்தார்கள் என்ற வரலாற்று உணர்வை நாட்டு மக்களுக்குக் காட்டும். அதிலே நாம் வெற்றி பெறுவோம், அந்த உணர்ச்சி பெறுவோம். இது மிக முக்கியமான தருணம். இந்தத் தருணத்திலே நீங்கள் ஏமாறாதீர்கள், ஏமாற்றப்படுகிறீர்கள், எழுந்து வாருங்கள், முடியாவிட்டால் அமர்ந்திருங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

நன்றி! வணக்கம்!!

வாழ்க தமிழீழம், வளர்க மனித உணர்வுகள், ஓங்குக உள்ளத்து ஒற்றுமை!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

-இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார். 15-8-2012

தமிழ் ஓவியா said...

ஆள்வதற்கு நாங்கள், மாள்வதற்கு நீங்கள் எனும் சிங்கள ஆதிக்கத்தை முறியடிப்போம்!

-டெசோ மாநாட்டில் வரவேற்புக் குழு தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை


தமிழ் ஓவியா said...

சென்னை, ஆக.15-ஆள்பவர்கள் சிங்களவர்கள், மாள்பவர்கள் ஈழத்தமிழர்கள் எனும் நிலை முறிய டிக்கப்பட வேண்டும் என்றார் தி.மு.க. பொரு ளாளரும், மாநாட்டு வரவேற்புக்குழுத் தலை வருமான தளபதி மு.க.ஸ்டாலின்.

``வெள்ளம்போல் தமிழர் கூட்டம்;

வீரம் கொள் கூட்டம் - அன்னார்

உள்ளத்தால் ஒருவரே - மற்றுடலினால் பலராய்க் காண்பர்

என்ற புரட்சிக் கவிஞரின் எழுச்சி வரிகளுக்கு எடுத்துக்காட்டக் கூடிய நிலையில், ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் திரண் டுள்ள எனதருமை தமிழ்ப் பெருங்குடி மக்களே உங்கள் அனை வரையும் மாநாட்டு வரவேற்புக் குழுவின் சார்பில் வருக! வருக! என வரவேற்க கடமைப்பட்டிருக்கின்றேன்.

தமிழ் ஓவியா said...

முகத்தில் பூசப்பட்ட கரி

முதலில் ஒரு செய்தியை - நீங்கள் அறிந்த செய் தியை மீண்டும் ஒருமுறை இந்த மாநாட்டில் நினைவு படுத்த விரும்புகின்றேன். இன்று மதியம் 1 மணி வரை யில் இந்த மாநாடு அண்ணா அறிவா லயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்ற நிலையில்தான் அதற்கான ஏற்பாடுகளை நாம் நடத்திக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று 1 மணியளவிலே நமக்குக் கிடைத்த செய்தி, இந்த மாநாடு இங்கே நடைபெறக்கூடாது என்கிற ஓர வஞ்சனையோடு அதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு வருகின்றவர்களுடைய முகத்திலே கரியைப் பூசுகின்ற வகையிலே நீதிமன்றம் நீதியை நமக்காக வழங்கி, இந்த மாநாடு குறித்த இடத்தில் ஒய்.எம்.சி.ஏ. என்கிற திடலில் நடைபெறலாம் என்ற தீர்ப்பைப் பெற்று, அந்த வகையில் இந்த மாநாட்டை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இதிலே இன்னொரு செய்தி என்னவென்று கேட் டால், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு தமிழக அரசு அதனுடைய காவல்துறையும், உச்சநீதிமன்றம் வரையில் இன்று சென்றிருக்கிறது. உச்சநீதிமன்றம் வரையிலே சென்று உடனே இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று சொல்கின்ற நேரத்தில், உச்சநீதிமன்றத்திலே இன்றைக்கு இதை எடுத்துக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை என்று சொல்லி அங்கேயும் தட்டிக் கழித்திருக்கிறார்கள். இதிலிருந்து எப்படிப்பட்ட ஒரு வெற்றியைப் பெற்று தலைவர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த டெசோ மாநாட்டினுடைய முதல் வெற்றியாக மாநாடு தொடங்கக் கூடிய இந்த நாளிலேயே நாம் பெற்றிருக்கிறோம் என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

தமிழ் ஓவியா said...

இப்படிப்பட்ட மாநாட்டிற்கு வருகை தந்து உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய தமிழ்ப் பெருங்குடி மக்கள் அத்தனை பேரையும் நான் மீண்டும் ஒருமுறை வரவேற்க விரும்புகிறேன்.

படமுடியாது இனி துயரம்; பட்டதெல்லாம் போதும் - என்று பரிதவித்துச் சொல்லிடும் அளவுக்கு, இலங்கைத் தமிழர்கள் இதுவரை அனைத்து வகையான துன்ப-துயரங்களையும் அனுபவித்து விட்டார்கள். அவர்கள் மிகப் பெருமை வாய்ந்த தேசிய இனத்திற்குச் சொந்தக் காரர்கள்; உலகத்தின் மூத்த மொழி, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் என அனைத்து வகையான சிறப்புக்களையும் - பெற்றிருப்பவர்கள்.

எனினும், ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக் குக் காரணம், வரலாறு அவர்களை வஞ்சித்து விட்டது என்பதுதான். அனுராதபுரமும், யாழ்ப் பாணமும், வன்னியும், பொலனறுவையும், தம்ப தெனியாவும், கண்டியும்.

வரலாற்றின் மவுனசாட்சி

இலங்கையின் 2,500 ஆண்டுகளுக்கும் மேற் பட்ட வரலாற்றின் மவுன சாட்சிகளாகும். இந்த நீண்ட நெடிய வரலாற்றுப் பாதையில், இலங் கைத் தமிழர்களின் சிறப்பான காலமும் உண்டு; சீரழிந்த காலமும் உண்டு. இலங்கையில் இரண்டு முக்கிய தேசிய இனங்கள் சிங்களவர்களும், தமிழர்களும். ஒன்றரைக்கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கைத் தீவில் 35 இலட்சம் பேர் தமிழர்கள்.

மதம், மொழி, கலாச்சாரம் போன்ற பாரம்பரிய மான பிரச்சினைகளுடன், பெரும்பான்மை இனத் தவர் - சிறு பான்மை இனத்தவர் என்ற பிரச்சினையும், எரிமலையாக அவ்வப்போது வெடித்து வெளிவந்து கொண்டும் இருந்தன. நீறுபூத்த நெருப்பான இத்தகையப் பிரச்சினைகளுக்கிடையே, பதினைந் தாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை - அதாவது 1948 வரை தொடர்ந்து இலங்கையில் வெளிநாட்டவரின் ஆக்கிர மிப்புகள். முதலில் போர்த்துக்கீசியர் ஆக்கிரமிப்பு, அவர் களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் ஆக்கிரமிப்பு, அதற்கடுத்து, வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பு;

இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளி யேறும் போது, எந்தவகையான குழப்பநிலையில் இந்தியாவை விட்டுச் சென்றார்களோ; அதே வகையான குழப்ப நிலை யில்தான் 1948-ல் இலங் கையை விட்டுவிட்டு வெள்ளை யர்கள் சென்றனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிர மித்திருந்த வெள்ளையர் ஆட்சியாளரின் புதிய அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இலங் கையில் தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரம், வெகு வாகப் பாதிக்கப் பட்டது.

அது மட்டுமல்லாமல் தமிழர்கள் தமது பாரம் பரியப் பிரதேசத்தின் அடை யாளத்தையும் இழந்தனர். சிங்கள ஆணவ ஆட்சிக்கு எதிராக

தமிழ் ஓவியா said...

முதல் குரல் கொடுத்த தந்தை செல்வா!

வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றதற் குப் பின்னர், சிங்களவர்களின் ஆணவ ஆட்சி அதி காரங்கள் கொடிகட்டிப் பறந்தன. தமிழர்களுக்குத் தொடர்ந்து அநீதியும், கொடுமை களும் இழைக்கப் பட்டு வருவதையும், சரித்திரம் தலைகுனிவோடு குறித்து வைத்துக் கொண்டு வருகிறது என்பதை நம்மால் மறந்துவிட முடியாது. ஒரே கொடி, ஒரே அரசியல் சட்டம் என்று சொன்னால் கூடப்பர வாயில்லை; நம்மால் புரிந்து கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் முடியும்.

ஆனால், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச் சாரம்; ஆள்வதற்கு நாங்கள், மாள்வதற்குத் தமிழர்கள் - என்று சிங்கள ஆதிக்கக் காரர்கள் சொல்வதையும், செய்வதையும் தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. சிங்கள ஆணவ ஆட்சிக்கு எதிராக, சுதந்திர இலங்கையில் முதல் குரல்கொடுத்த ``ஈழநாட்டுக் காந்தி - தந்தை செல்வா அவர்களை இந்த நேரத் தில் நாம் நினைவு கூர்வோம்! அவர் 1952-ஆம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் ஏராளமாக வாழும் பகுதியிலே - காங்கேசன்துறை என்ற தொகுதியிலே தேர்தலில் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து நின்றவர் நடேசபிள்ளை. அவரும் தமிழர்தான். தமிழனைத் தமிழனே மோதி அழிப்பதுதானே தொடர்ந்து வரும் தமிழர் சரித்திரம்! அந்தத் தேர்தலில், தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த தந்தை செல்வா அவர்கள் தோற் கடிக்கப்பட்டார். தந்தை செல்வா அவர்கள், தேர்தலில் தோற்றுப் போனதற்குப் பிறகும்; தமிழ் இனத்திற்காக அரசியல் நடத்துவதையும், தமிழர் களின் உரிமைகளுக் காகப் பாடுபடுவதையும் அவர் நிறுத்திக் கொள்ள வில்லை. தமிழ்ச் சமுதாயத்தின் அடுத்த தலைமுறை தலை நிமிர்ந்து மானத்தோடு வாழவேண்டும் என்று கருதி, தொடர்ந்து இறுதிவரை தொண்டாற்றினார்.

தமிழ் ஓவியா said...


அதைப்போலத் தான், தேர்தல் வெற்றி - தோல்வி யைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், தமிழ் இனத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் நமது தலைவர் கலைஞர் அவர்கள். அந்தப் பின்னணிச் சரித் திரத்தின் ஒரு கட்ட மாகத்தான் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெறு கிறது. நான்காம் ஈழப்போர் முடிவுற்று, வாழ்க் கையை நகர்த் திட முடியாமல் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கு, உதவிக்கரம் நீட்டிட, உலக நாடுகளும், இந்தியப் பேரரசும் முன் வர வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாநாட்டை தலைவர் கலைஞர் அவர்கள் கூட்டி யுள்ளார். இனவாத இலங்கை அரசுக்கு அதன் திட்ட மிட்ட கொடுங்கோன்மைக்கு எதிரான முதல் ஈழப் போர் 1983 ஏப்ரலில் தொடங்கியது.

தமிழ் ஓவியா said...

இரண்டாம் ஈழப்போர்
1990 ஜூன் மாதம் முதல் 1995 ஏப்ரல் வரை இரண்டாம் ஈழப்போர். இதில் 11 ஆயிரம் தமிழர் கள் கொல்லப்பட்டனர்; 600 பேர் சித்திர வதைக்குள்ளாயினர்; 10 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போயினர்; முடமாக்கப்பட் டோர், பலத்த காயமடைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து நானூறு பேர். 1988 முதல் 1992 வரை நான்கு ஆண்டுகளில் - இலங்கை இராணுவத்தினர், தமிழர் களுக்குச் சொந்த மான 1 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை அழித்தனர்; ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாயினர்;

தமிழ் ஓவியா said...

4 இலட் சத்து 67 ஆயிரம் குழந் தைகள் அனாதைகளாயினர்; 700 கோயில்கள் தரைமட்ட மாக்கப்பட்டன.
கொத்துக்கொத்தாக மரணங்கள், கொடிய நோய்கள், போதுமான உணவுப் பொருள்கள் இல்லாமை, மக்கள் இடப்பெயர்ச்சி, இப்படிப் பல்வேறு கொடுமைகள். 1995 ஏப்ரல் முதல் 2002 பிப்ரவரி வரை மூன்றாம் ஈழப்போர், கூட்டம் கூட்டமாகப் பாலியல் வன் முறைகள், காரணமின்றிச் சிறையில் அடைத்திடும் செயல்கள், மருந்துகள் நிறுத்தம் என அட்டூழி யங்களும், அராஜகங்களும் பெருகின. 10 லட்சம் தமிழ்மக்கள் இடம் பெயர்ந்தனர். 184 இனப் படுகொலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக் கணக்கான குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டு, சாக்குகளில் கட்டப்பட்டு, மூட்டை மூட்டையாக குழந்தைச் சடலங்கள் கடலில் வீசியெறியப்பட்டன.

தமிழ் ஓவியா said...

400 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. பத்திரி கையாளர்கள், கிறித்துவக் குருமார்கள், குழந் தைகள் - சர்வ சாதாரணமாகக் கொலை செய்யப் பட்டனர்.

தமிழ் ஓவியா said...

2005 டிசம்பர் முதல் 2009 வரை நான்காம் ஈழப்போர்; இந்த காலக்கட்டத்தில் 3350 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 15 இலட்சம் பேர் உயிரைக் காப்பாற் றிக் கொள்ள வேறு இடம் தேடி ஓடினர். இப்போது நான் தொகுத்துச் சொன்ன புள்ளி விபரங்கள் - ஏதோ செவிவழிச் செய்தியாகக் கேள்விப்பட்ட தகவல்கள் அல்ல; ஐக்கிய அமெரிக்க நாட்டின் நீதிபரிபாலனத் துறை தொகுத்திருக்கும் ஆவணங்களில் அடங்கியுள்ள புள்ளி விபரங் களாகும். ராஜீவ்காந்தி - ஜெய வர்த்தனே ஒப்பந்தம்
பண்டார நாயகா - செல்வா ஒப்பந்தம்
ஒரு காலத்தில் காந்தி - இர்வின் ஒப்பந்தத் திற்கு இணையானது எனச் சொல்லப்பட்டது, `பண்டார நாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம் 1950-களில் இலங்கைத் தமிழர் வாழ்வில் ஒளி யேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருளை மேலும் கெட்டிப்படுத்தியது அந்த ஒப்பந்தம். 1960-களில் டட்லிசேனநாயகா - செல்வநாய கம் ஒப்பந்தமும், பயன்கிட்டவில்லை. கூட்டாட்சி, சுயாட்சி, மாவட்டக் கவுன்சில் பற்றி யெல்லாம் விவாதிக்கப் பட்டு - தமிழர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்த, 1970-களில் ஸ்ரீமாவோ - செல்வநாயகம் ஒப்பந்தமும், வீணாக போனது. 1987-ல் இந்தி யாவின் இளைய தலைவர் பிரதமர் இராஜீவ் காந்தி அவர்கள் இலங்கை அதிபர் ஜெயவர்தனே வுடன், மிகுந்த எதிர்பார்ப்போடு ஒப்பந்தம் ஒன்றை உருவாக் கினார். 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டதற்குப் பிறகும், அந்த ஒப்பந்தம் இன்றுவரை நடை முறைக்கு வந்த பாடில்லை.
ஈழத்தமிழர் துயர்களை, துடைத்திடவும், காயத் திற்கு மருந்திடவும் - புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் புது வாழ்வு தேடவும் - இந்திய அரசின் உதவி யோடு, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் துணையோடு, மனித உரிமை பேணும் சர்வதேச நிறுவனங்களின் அனு சரணையோடு - தேவையான முயற்சிகளை முன்னெடுத்தச் செல்வதில் இந்த மாநாட்டின் மூலமாக தலைவர் கலைஞர் அவர்கள் ஈடுபட்டுள்ளார். “India cannot do much, for her children abroad. But, She does not forget them, and every insult to them, is humiliation and sorrow for her. A day will come, when her long arm, of protection will extend, and, her strength will compel justice for them”. என்று பண்டித நேரு அவர்கள் சொன்னதை இன்றும் உறுதியாக நம்பி, அந்த நாள் என்று மலரும் என்ற நம்பிக்கையோடு காந்தியாரின் அடிகளின் அகிம்சை வழியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய அறவழி யில் அயராது உழைத்து ஈழத்தமிழர்களைக் காத் திட தலைவர் கலைஞர் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சி களுக்கும் துணை நிற்போம் உறுதி ஏற்போம் என்று கூறி, மீண்டும் அனைவரையும் வரவேற்று விடை பெறுகிறேன்.
15-8-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சமபந்தி!

செய்தி: ஆகஸ்டு 15 சுதந்திர நாளையொட்டி கோயில்களில் சம்பந்தி விருந்து.

சிந்தனை: நாள் தோறும் உணவு விடுதி களிலும் அதுதான் நடந்து கொண்டு வருகிறது. கோயிலுக்குள் இன்னும் சில இடங்களில் தாழ்த்தப் பட்டோர் நுழைய முடிய வில்லை; கோயில் கரு வறைக்குள் ஒரு ஜாதி மட்டும் தான் நுழைய முடியும். அங்கெல்லாம் சம்பந்தி நடப்பது எப்பொழுது?

16-8-2012

தமிழ் ஓவியா said...

எதிரியைப் பார்!

சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடுபற்றி இன எதிரிகள் இல்லாததும் பொல்லாததுமான விஷமச் செய்திகளைப் பரப்பும் வேலையில் மும்முரமாக இறங்கினர்.

மாநாட்டின் நோக்கம் குறித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத் துருவில், தனியீழம் தொடர்பான தீர்மானம் மாநாட் டில் நிறைவேற்றப்படாது என்று சொன்னதுதான் தாமதம் - டெசோ என்று பெயர் வைத்துக் கொண்டு தனியீழம் கேட்கும் தீர்மானம் மாநாட்டில் இடம் பெறாது என்றால் என்ன பொருள் என்று வீராதி வீரர்கள் போலே தோளைக் குலுக்கினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், டெசோவை இரண்டாவது முறை புதுப்பித்த போது தனியீழம் கேட்கும் அதன் குறிக்கோளை வரவேற்றார்களா என்றால், அதுதான் இல்லை.

அப்பொழுதும் ஏறுமாறான விமர்சனங்களில்தான் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை மய்யப்படுத்தி அவர் எது செய்தாலும் அதனைக் கொச்சைப்படுத்துவது என்ற திசையில் எழுதி வந்தனர்.

மாநாடு நடக்காது; தடை செய்யப்பட்டு விடும் என்றனர். அதற்கான முயற்சிகளில் பலரும் ஈடுபட்டனர் என்பதும் உண்மைதான். டெசோ அமைப்பில் பதற்றப்படாத, பக்குவமான முயற்சி களினால், எதிர்ப்பாளர்களின் முகங்களில் கரி தடவப்பட்டு, டெசோ மாநாடு வெகு சிறப்பாகவே அறிவிக்கப்பட்ட இடத்திலேயே அட்டியின்றி நடைபெற்றது.

சில பல காரணங்களால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த தலைவர்கள் வரவில்லை என்றாலும் உலகம் தழுவிய அளவில் பேராளர்கள் பங்கு கொண்டனர்.

சிங்களவரான - இடதுசாரி எண்ணம் கொண்ட டாக்டர் விக்ரம பாகுகர்ண ரத்தினே அவர்களே கலந்து கொண்டு ராஜபக்சேயின் பாசிச நடவடிக்கைகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டினார். மிக அருமையான தீர்மானம் 14 - ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்மீது குறை சொல்ல முடியாத நிலையில் தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் சம்பிரதாயமான முறையில் மாநாடு நடைபெற்றது என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றியா, தோல்வியா என்னும் அளவுகோல் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது எதிரிகளிடத்தில் தான் இருக்கிறது.

ஈழத்திலிருந்து மாநாட்டுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் இலங்கை அரசால் கண்காணிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்துத் தெரிவித் திருந்தது. (அதனைக் கண்டித்துக்கூட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

இலங்கை அதிபர் ராஜபக்சே டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்தும் டெசோவின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகும்.

இதன் மூலம் டெசோ நடத்தும் மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது என்பது வெளிப்படையாகி விட்டதா - இல்லையா?

மாநாடு முடிந்த நிலையில்கூட இலங்கையில் உள்ள சிங்களவர் அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ன கருத்துக் கூறியுள்ளது?

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்திய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக தி.மு.க. இருப்பதால், மகிந்த ராஜபக்சே அரசு இந்த விவகாரத்தை சிறியதாகக் கருதக் கூடாது.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்மீது கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அய்.நா.வில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட தனியீழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதனைப் பார்க்க வேண்டும் என்று அந்த அமைப்புக் கூறியுள்ளதே!

எதிரிகள் நம்மைச் சரியாகப் புரிந்து கொண் டுள்ளனர். ஆனால் இங்குள்ளவர்களோ டெசோ மாநாடு தோல்வி என்கின்றனர். இவர்களை எது கொண்டு சாற்றுவதோ! 16-8-2012

தமிழ் ஓவியா said...

பாலிமர் தொலைக்காட்சியில் அனல் பறக்கும் விவாதத்தில் தமிழர் தலைவர்

19.8.2012 ஞாயிறு இரவு 9 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்கான நிகழ்ச்சியில் A.L. கண்ணனின் அனல் பறக்கும் விவாத அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் சூடும் - சுவையும் நிறைந்த பதில்கள் ஒளிபரப்பப்படும்.

தமிழ் ஓவியா said...

சாதிக் கொடுமை!

ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதினாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண சாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.

மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சிய சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: சாதிகளின பொய் தோற்றம் என்ற நூல், பக்கம் 108.

தமிழ் ஓவியா said...

ஈரேழு லோகமாம்!



கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்.

ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா? உபந்நியாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

மற்றொரு வேண்டுகோள்: அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர்வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.

-புரட்சிக் கவிஞர் (பாரதி தாசன் கதை: பக்கம்:100)

தமிழ் ஓவியா said...

அப்பா, ஒரு சந்தேகம்!



மகன்: ராஜ கோபுரத்தின் முன்னேயே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?

தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு

மகன்: சாமி நெருப்பு பிடிக்காமல் பார்த்துக் கொள்ளாதா?

தகப்பனார்: (மகனை முறைத்துப் பார்க்கிறார்)

மகன்: (பயந்து கொண்டு) அப்பா.

தகப்பனார்: என்னடா?

மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.

தகப்பனார்: சரி என்னத்தை கேட்கப்போற?

மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?

தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம் இவைகளை கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்.

மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?

தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்து விட்டு மறு வேலை பார்க்கிறேன்.

- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.