Search This Blog

24.8.12

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் - தீர்வுகள்

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களைவிட சிறப்பான - தேவையான - தீர்வுகள் எவை? -டெசோ தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர்தலைவர் விளக்கவுரை

                                                              

சென்னை, ஆக.23-சென்னையை 12.8.2012 அன்று டெசோ சார்பில் ஈழத்தமிழர் வாழ்வரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை விளக்கி சென்னை பெரியார் திடல், எம்.ஆர்.ராதா மன்றத்தில் 21.8.2012 அன்று மாலை நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் படித்து அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

இந்தச் சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் டெசோ சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சிறப்பான  -தேவையான - தீர்வுகள் என்ற வினாவை எழுப் பினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற டெசோ மாநாட்டினுடைய 14 தீர்மானங்களை விளக்கி நாடு தழுவிய அளவில் பிரச்சாரமும், உலகம் தழுவிய அளவில் மேற்கொண்ட நடவடிக்கைக்கான அழுத்தமும் கொடுக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு அடுத்தகட்ட பணிகள் தொடங்கி யிருக்கின்றன டெசோ அமைப்பின் சார்பிலே என்பதை அண்மையிலே கூட டெசோவின் தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு சிறப்பாக எடுத்து விளக்கி இருக்கிறார்கள்.

அதனையொட்டி இன்றைக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் என்னுடைய உரையைக் கேட்பதற்காக வந்திருக்கக் கூடிய அருமை சகோதரர்களே, நண்பர்களே, சான்றோர்களே, செய்தியாளர்களே, எனக்கு முன்னாலே உரை யாற்றிய கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, தாய்மார்களே எல்லோருக்கும் அன்பான வணக்கம்.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் என்பவை எவ்வளவு ஆழமான ஒன்று என்பதை அன்றைக்குச் சரியாக கவனிக்கத் தவறியவர்களானாலும் கூட இன்றைக்கு இந்தப் 14 தீர்மானங்கள் - அதிலே இரண்டு கண்டனத் தீர்மானங்களைத் தவிர்த்து - 12 தீர்மானங்களை எடுத்தால், இதைவிட ஆக்க ரீதியான, உருப்படியான, திட்டமிட்ட உதவிகள், இலக்குகளை நோக்கி ஈழத் தமிழர்களுக்கு வேறு யாராவது சொல்லிவிட முடியுமா என்ற கேள்விக்கு அதிலே விடை இருக்கிறது.

நாம் ஏதோ மார்தட்டிக்கொண்டு முன்னாலே செய்தோம் என்ற பெருமைக்காக இதைச் சொல்லவில்லை. இந்த முயற்சி எவ்வளவு இடையூறுகளுக்குப் பின்னாலே மிகச் சிறப்பாக அமைந்தது என்பதை எண்ணிப் பார்த்தாலே, இன்றைக்கு உணரவேண்டியவர்கள் உணர வேண்டும், அதுதான் மிக முக்கியம்.

ஒன்றுபட வேண்டும்

நம்முடைய நாட்டில் எங்கும் அரசியல், எதிலும் அரசியல், எந்த நிலையிலும் அரசியல் என்ற போக்கை மாற்றிக் கொண்டு பொதுப் பிரச்சி னைகளில் நாம் எவ்வளவு மற்ற செயல்களில் ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருந்தாலும் இந்தப் பொதுப் பிரச்சினைகளில் ஒன்றுபட வேண்டும். எப்படி ஒரு வீட்டில் தீப்பிடித்துக் கொண்டால், அந்தத் தீயை அணைப்பதிலே வேறுபாடு பார்க்க முடியாதோ, அதுபோல, தமிழர்களுக்குள்ளே தொப்புள்கொடி உறவுள்ள 30 கல் தொலைவில் இருக்கக்கூடிய நம் இனம் அழிந்துகொண்டி ருக்கிறது;
இனப் படுகொலைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது; இலட்சக்கணக் கானவர்கள் மாண்டார்கள் என்ற நிலை இன்னமும் நம்முடைய இதயங்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது என்ற நிலை இருந்தாலும், மாண்டவர்கள் போக இருப்பவர்கள் இனிமேலாவது சிறப்பானதொரு வாழ்க்கையை பெறவேண்டாமா என்ற அந்தக் கேள்விக்கு, உலகத்தார் முன்னாலே விடை காணவேண்டும்.

இது வெறும் சிங்கள இனத்திற்கு வேண்டுகோள் விடுத்து நடந்துவிடக்  கூடிய செயல் அல்ல?  ஏனென்றால், அவர்கள் மனம் தெளிவில்லாதது மட்டுமல்ல,  ஆதிக்கவாதிகள் ஏதோ ஒரு இனத்தை அடிமைப்படுத்திவிட்டோம் என்ற ஒரு மமதையிலே கொக்கரித்துக் கொண்டிருக்கிற ஒரு இட்லரிச தர்பாரைப் போல நடந்து கொண் டிருக்கின்ற அந்த இடத்திலே - ஒரு சரியான விடிவை இந்தத் தமிழர் களுக்கு ஏற்படுத்தி அவர்களுக்கு முள்வேலியி லிருந்தும், காலங் காலமாக ஏற்படுத்தப்பட்டி ருக்கிற அந்த உரிமை யற்ற வாழ்வு நிலையிலிருந்தும் மீட்டெடுத்து, வாழ்வுரிமையை, மனித உரிமைகளை எப்படி மற்ற நாடுகளில், மற்றவர்களை மதிக்கிறார்களோ, அந்தத் தகுதிகளை உருவாக்கவேண்டும் என்பதற்கு நாம் நம்முடைய கடமையைச் செய்யவேண்டும்.

இதற்காகத்தான் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், டெசோ அமைப்பு, அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மற்றும் ஒத்தக் கருத்துள்ள வர்களை அழைத்து அந்த மாநாடு நடத்தப்பட்டது. அந்தக் கருத்திலே மாறுபடாதவர்கள் இந்த அமைப்பிலே இல்லாமல் இருந்தாலும் பரவா யில்லை, அந்தக் கருத்திலே அவர்களுக்கு ஈடுபாடு இருக்கிறது, ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை தேவை என்ற கருத்திலே அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் தங்களுடைய அந்த உணர்வை எந்தெந்த வகையில், எப்படியெல்லாம் ஆதரவின் மூலம் காட்ட முடியுமோ, அப்படிக் காட்டவேண்டும்.

அல்லது இதிலே விடுபட்ட செய்திகளை அவர்கள் எடுத்துச் சொல்லலாம்; இவையெல்லாம் விடுபட்டி ருக்கின்றன என்று சொல்லலாம். இதை எடுத்துச் சொல்லவேண்டும் என்று சொல்லாம்.

எப்படிப்பட்ட தீர்மானங்கள்?

டெசோ மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில் இரண்டு கண்டனத் தீர்மானங் களைத் தவிர 12 தீர்மானங்களைப் பார்த்தால், இந்தத் தீர்மானங்களிலே இருக்கக் கூடிய செய்தி, எந்த வகையில் குறைவான அழுத்தமுள்ள ஒரு செய்தி. அருள்கூர்ந்து நடுநிலையில் இருந்து விருப்பு வெறுப்பின்றி எல்லோரும் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள். இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இந்திய அரசு என்ன செய்யவேண்டும் என்பதை எடுத்து முதற்கண் தெளிவாக தீர்மானங் களிலே, பல இடங்களிலே அழுத்தமான வாசகங் களையும் போட்டு, தெளிவாக கருத்துகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அதுமட்டுமல்ல, உலக நாடுகள், அய்க்கிய நாடுகள் சபையின் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இன்றைக்கு உலக நாடுகளினுடைய பார்வை அங்கு விழுந்திருக்கிறது என்று சொல்லக் கூடிய அந்த உணர்வு தெளிவாக வந்திருக்கிறது என்பதை யெல்லாம் அந்தத் தீர்மானங்களிலே அருமையாக வடித்தெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதனை புரிந்துகொண்டால், யாருக்கும் குழப்பம் வருவதற்கு இடமேயில்லை. சிலர் புரிந்தகொள்ள மறுக்கிறார்கள் என்று சொன்னால், நாம் அவர்களைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. காரணம் என்னவென்றால், இது யாருடைய நற்சாட்சிப் பத்திரத்திற்காகவும் நடத்தப்பட்ட மாநாடல்ல;
ஈழத் தமிழர்களின் மீட்சிக்காக, மான வாழ்வுக்காக, உரிமை வாழ்வுக்காக எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயார் என்று சொல்லக்கூடியவர்கள். எண்ணிக்கையில் எவ்வளவு, எத்தனை பேர் என்று சொல்லக் கூடிய நிலையைப் பற்றிக் கவலைப் படாமல், எடுத்துச் சொல்லக் கூடிய நிலையிலே இந்தப் பணியை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம்.

அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள், இன்றைக்கு மட்டுமா இந்தச் சூழல் வந்திருக்கிறது? மிகப்பெரிய அளவிற்கு, நான்கு கட்டமாக போர் நடந்து முடிந்த நிலையிலே, முள்வேலிக்குள்ளே இன்னும் ராணுவ ஆட்சி; போர் நடந்து முடிந்து மூன்றாண்டு ஆகிவிட்டன.
தீவிரவாதத்தை அடியோடு துடைத்து அழித்து ஒழித்துவிட்டோம் என்றெல்லாம் கூறி மார்தட்டி கொண்டிருக்கின்ற ஒரு அரசு, உள்ள படியே நல்லபடியே நடக்கக் கூடிய, ஜனநாயகத்தைப் பின்பற்றக் கூடிய அரசாக இலங்கை அரசு இருக்குமே யானால், எல்லா மக்களையும், பெரும்பான்மையாக இருந்தாலும், சிறுபான்மையாக இருந்தாலும், அவர்களுக்குரிய குடியுரிமை, மனித நேயம், மனித உரிமைகளை கொடுக்கவேண்டுமா, இல்லையா?

இன்னும் இராணுவ ஆட்சிதான்!

அய்.நா.வினுடைய மனித உரிமை Charter என்று சொல்லக்கூடிய Human rights Charter என்று சொல்லக்கூடிய அந்த சாசனத்திலே வாழும் உரிமை என்பது உலக முழுவதும் உள்ள மக்களுக்கு அளிக்கப்படக் கூடிய ஒன்றா இல்லையா? அந்த உரிமை எம்முடைய ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கிறதா? இன்னமும் இத்தனை ஆண்டுகள் கழித்து அவர்கள் மானத்தோடு வாழ முடியவில்லை.
இன்னமும் தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ளதைப் போல ராணுவ ஆட்சிதான் அங்கு நடந்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு சென்றிருக்கின்ற தமிழர்கள் கூட, ஒரு சமூக நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொள்ளவேண்டுமானால், ராணுவத்தின் அனுமதி பெற்று போக வேண்டும் என்று சொல்கிறார்கள். எங்கே, காலங்காலமாக வடக்கு, கிழக்கு பகுதியில், இவர்கள் வந்தேறியவர்கள் அல்ல. இதோ ஒரு வரலாற்று நூல்!

சில செய்திகளை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்லுகிறோம். இலங்கையில் தமிழர்  ஒரு முழுமையான வரலாறு (கி.மு.300 முதல் கி.பி. 2000 வரை) என்று இவ்வளவு தெளிவாக ஒரு வரலாற்றுத் தொகுப்பு இதுவரை நடைபெற்ற எல்லா பிரச்சினைகளையும் உள்ளடக்கி அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், நமக்கு எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு நூல் வேறு கிடையாது; இந்நூலை எழுதியுள்ளவர் கலாநிதி முருகர் குணசிங்கம். கலாநிதி என்றால் அவர்கள் பிஎச்.டி. ஆய்வாளர் அப்படிப்பட்டவர் ரொம்ப அருமையாக இந்நூலைத் தொகுத்திருக்கிறார்.
இதிலே ஆய்வுக் கண்ணோட்டம் - வரலாற்றிலே எந்தவிதமான விருப்பு வெறுப்பில்லாமல், மறைக் காமல், வரலாற்றைத் தொகுத்து, வரலாறாகவே நிகழ்வுகளைச் சொல்லியிருக்கிறார். எப்படிப்பட்ட தகுதி உள்ளவர் இவர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிலே அரசியல் அல்லது ஒரு சார்பு நிலை இவையெல்லாம் இல்லாதவர்கள் எப்படி என்று பார்த்தால்தான், வெளியுலகத்திற்கும், நடு நிலையாளர்களுக்கும் பல்வேறு செய்திகள் சரியாகப் போய்ச் சேரும்.

Dr. Murugar Gunasingam has authored three books including the critically acclaimed ‘Sri Lankan Tamil Na tionalism: A Study of its Origins.’ இலங்கையினுடைய தமிழ்த் தேசியம் அதனுடைய மூலக்கூறுபாடுகள், அதைப்பற்றி ஓர் ஆய்வு என்ற நூலை ஆங்கிலத்திலே அவர் எழுதியிருக்கிறார். Gunasingam holds a PhD in History from the University of Sydney. சிட்னிப் பல்கலைக் கழகத்திலிருந்து அவர் பிஎச்.டி., பட்டம் வாங்கி, அங்கே மிகப்பெரிய அளவிற்கு வரலாற்று ரீதியாக அந்தத் தகுதியைப் பெற்றிருக்கிறார்.

He took his Master in Library and Information Science from the University of London. அங்கே ஆவணங்களைப் பார்ப்பதற்காகவே, திரட்டுவதற்காகவே இந்தத் தகுதியைப் பெற்று லண்டன் பல்கலைக் கழகத்திலே, இதற்கென்று நூலகத் துறையிலே, ஆவணத் துறையிலே இருக்கின்ற செய்திகளைப் பெற்றிருக்கிறார்.

Currently, he is Research Coordinator of South Asian Studies Centre, Sydney

தமிழர்கள் 4000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பூமி இலங்கை

ஆஸ்திரேலியாவிலே இருக்கக் கூடிய ஒருவர், அவர் ஒரு ஈழத் தமிழர்; முருகர் குணசிங்கம் என்பது இவரது பெயர். இவர் பல்வேறு செய்திகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். எப்படி ஆரம்பத் திலே முழுமையாக தொலைந்தது.... என்று எடுத்துச் சொல்லுகின்ற நேரத்திலே மூன்றாம் நூற்றாண் டிலிருந்து, அதற்கு முன்னால் இருந்து அறியப் படாத பல செய்திகள் தொடர்ந்து வந்திருக்கின்றன என்பதை, பல்வேறு ஆதாரங்களின் மூலமாகச் சொல்லும்பொழுது, வரலாற்றை அமைக்கும் நேரத்திலும்கூட, 3000, 4000 ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்தவர்கள் தமிழர்கள் அங்கே - பிறகுதான் சிங்கள இனம் என்பது விஜயன் மூலமாக ஒரிசா மற்ற பகுதிகளில் இருந்து வந்த வரலாறு என்பதை அவர்களே எழுதியிருக்கிறார்கள் என்ற ஆதாரங்களை பல்வேறு வகையிலே எடுத்துச் சொல்லியிருக்கிறார். எனவே, மண்ணின் மைந்தர் கள் இன்றைக்கு மண்ணுரிமை இல்லாமல், வாழ்வுரிமை இல்லாமல் ஆக்கப்படுகிறர்கள்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மட்டும் அல்ல, வேறு சில பகுதிகளிலே இருந்தும்கூட அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு நிலையி லிருந்து தள்ளப்பட்டார்கள் என்ற வரலாறை, ரொம்ப ஆழமாக ஏறத்தாழ 700 பக்கங்களிலே முறைப்படுத்தப்பட்ட ஆவணங்களின்மூலம் ஏராளமாகச் சொல்லியிருக்கிறார். ஏனென்றால், பின்னாலே பல செய்திகளை சொல்வதற்காகத்தான் நான் இதனைக் குறிப்பிடுகின்றேன்.

அரச பயங்கரவாதம்!

அப்படி வருகிறபொழுது, இன்றைக்கு ஏதோ சிங்களவர்கள் குறிப்பாக விடுதலைப்புலிகளால் தான் தீவிரவாதம் வந்தது, தீவிரவாதத்தை அடக்குவதற்காக இப்படி நாங்கள் ஒரு அரச பயங்கரவாதத்தை State Terrorism என்று சொல்லக்கூடியவற்றை ஆரம்பித்தோம் என்று உலகத்தார் கண் முன்னாலே மிளகாய்ப் பொடி தூவுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.
ஆரம்பத்திலிருந்தே அவர்கள் முழுக்க முழுக்க சிங்களவர்கள், என்றைக்கு வெள்ளைக்காரர்கள், முன்னாலே போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிறகு பிரிட்டானியர்கள் என்றெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் காலமாக இருந்துவிட்டு, பிறகு 1948 முதல் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு போன நிலையிலே, பெரும்பான்மை என்ற ஒரு வாய்ப்பினை வைத்துக்கொண்டு சிங்களவர்கள் எப்படி மற்றவர்களையெல்லாம் மிகப்பெரிய அளவிற்குத் திட்டமிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி அழித்து வந்தார்கள் என்ற வரலாற்றைப் பார்த்தால், இப்படி இன்றைக்கு நடப்பது என்பது, திடீரென்று இப்படி ஒரு போராட்டம், அல்லது ஒரு பயங்கரவாதம், அதனாலே ஏற்பட்ட விளைவு; இவர்களாலேதான் இந்த நிலை உருவாக்கிக் கொண்டார்கள் என்று யாரும் தமிழர்களுடைய உரிமைக் குரலை குற்றம் சொல்லவே முடியாது.

தனியீழம் குரல் உருவாகக் காரணம் என்ன?

எனவே, டெசோ என்ற தமிழீழம் என்று சொல்லக்கூடிய  அந்த உணர்வே, தமிழீழத்தை உருவாக்கவேண்டும் என்ற உணர்வை உருவாக்கியவர்கள் யார்? அவர்களுடைய நடவடிக் கைகள் எப்படிப்பட்டது என்பதையெல்லாம் இதிலே பல்வேறு ஆதாரங்களை வரலாற்று ரீதியாக சொல்லியிருக்கிறார். வரலாற்று ரீதியாக அதன் பின்னணியைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அதிலிருந்து இரண்டொன்றை மட்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தமிழீழம் என்ற கோரிக்கையை விடுதலைப் புலிகளால்தான் எழுப்பப்பட்டது என்று பலர் பேர் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். விடுதலைப் புலிகள் உறுதியாக, அதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்துப் போராடியவர்கள். ஆனால், அதற்கு முன்னாலே எப்படிப்பட்ட சூழ் நிலைகள் உருவாயிற்று என்று சொல்லுகிறபோது இலங்கை அரசின் அரசியல் நடவடிக்கைகளும், தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் என்ற ஒரு அத்தியாயத்திலே இந்த ஆய்வாளர் முருகர் குணசிங்கம் அவர்கள் தெளிவாக நடந்ததை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார்கள். அந்தப் பகுதியை தெளிவாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

மார்ச் 1960 தேர்தலின் பின்னர், தமிழரசுக் கட்சிக்கு தனது பலத்தைப் பிரயோகிக்கக் கூடியதொரு வாய்ப்புக் கிடைத்தது. தேர்தலில்  எந்தக் கட்சிக்குமே அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசை அமைக்கப் போட்டியிட்ட அய்க்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், தமிழரசுக் கட்சியின் தயவை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழரசுக் கட்சி அதன் அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக, நிறைவேற்றப்படாத பண்டா - செல்வா ஒப்பந்தத் தின் அடிப்படையில், தனது மிகக் குறைந்த கோரிக் கைகளை பிரதம மந்திரி டட்லி சேனநாயக்காவிடம் முன்வைத்தது.

சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி!

அவை வருமாறு:
1. மாவட்ட சபைகள் அமைத்தல்
2. தமிழ் மொழியை தேசிய சிறுபான்மையினத்தின் மொழி யாக அங்கீகரித்தல்
3. இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்ட சீர்திருத்தம்
4. பாராளுமன்றத்தின் நியமன உறுப்பினருள் ஆறு பேர் இந்தியப் பிரதிநிதிகளாக இருத்தல்.
இதன் விளைவாக டட்லி-செல்வா ஒப்பந்தம் பிரதம மந்திரி டட்லி சேனநாயக் காவாலும், தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தாலும் கைச்சாத்திடப் பட்டது. இருப்பினும், முன்னர் அய்க்கிய தேசியக் கட்சி, பண்டா- செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்திருந்தமையால், டட்லி சேனநாயக் காவால் தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. இதன் விளைவாக பாராளுமன்ற அங்குரார்ப்பணத்தின் போது,  தமிழரசுக் கட்சி அய்க்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வாக்களிக்கவே, டட்லி சேனநாயக்கா அரசு கவிழ்ந்தது.
1960 ஜூலை பொதுத் தேர்தலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அறுதிப் பெரும் பான்மையுடனான வெற்றியை ஈட்டியது. 1960 தொடக்கம் 1965 வரையிலான அவரது அரசாங்கம். அவருடைய கட்சி முன்னர் தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முற்றிலும் எதிரான வகையில், சிங்களம் மட்டும் சட்டத்தைப் பூரணமாக 1967 ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தியது.

நாட்டின் சகல நீதிமன்றங்களிலும், வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்கள் உள்பட, சிங்கள மொழி மட்டுமே உத்தியோக கரும மொழியாக இருக்கவேண்டும் என்ற சட்டத்தையும், தமிழரசுக் கட்சிக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமல்படுத்தியது.

தமிழர்களின் தேசிய எழுச்சி

அரசாங்கத்தின் தமிழருக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சியும், தமிழ் மக்களும் பெரும் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தினர். இந்த நிலைமை தமிழரின் தேசியவாத எழுச்சியை மேலும் தீவிரமடையச் செய்தது. தமிழரசுக் கட்சி, அகிம்சை வழிப் போராட்டம் மூலம், தனது எதிர்ப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இதுவரை உயர் மட்டத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் அரசியலை வெகுசன அரசியலாக மாற்றிக் கொண்டது.

மேலும் சிங்கள ஆதிக்கத்துக்கு எதிராக எழுந்த தமிழ்த் தேசிய வாதத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தியையும் தமிழரசுக் கட்சி அளித்தது. அத்துடன், அது தமிழ் மொழியின் மறுமலர்ச்சியின் ஆரம்பத்துக்கு உறுதுணையாக இருந்ததுடன், இலங்கைத் தமிழர் அனைவரையும் தனது கட்சியின்கீழ் அய்க்கியப்படச் செய்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவரை சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிய தமிழ்த் தலைவர்களையும், தமிழ் மக்களையும் ஒட்டு மொத்தமாக, சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளியது. சிங்கள அரசின் நடவடிக்கைகளால் தமிழ் மொழிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தமிழ்த் தேசியவாத எழுச்சியில் பிரதானமான பங்கை வகித்தன எனக் கூறுவதில் தவறில்லை.
தேசியவாத உணர்வுகள் உருவாவதில் மொழி மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. உதாரணமாக, ஜே.எச். ஹேயிஸ், ஒரு தேசியத்தின் கலாசார குணாதிசயங்களுள் மொழி என்பது, இப்போதும், எப்போதும் முதன்மையானது என வாதிடுகின்றார்.

1956 இல் 1958 இல் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு தமிழரை அவர்களது பாதுகாப்புக்காக தமது பாரம்பரியப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர வைத்த நிகழ்வுகள், தமிழ் மொழிப் பிரச்சினையுடன், தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களில் தமிழருக்கெனத் தனியாக சுய ஆட்சி அவசியம் என்ற எண்ணத்தையும் ஒருங்கிணைக்க வைத்தன.

தமிழரசுக் கட்சியின் பிரதான கொள்கைத் திட்டங்களிலும், அது பண்டாரநாயக்காவுடனும், டட்லி சேனநாயக்காவுடனும் செய்துகொண்ட உடன்படிக்கைகளிலும், தமிழரது பாரம்பரியப் பிரதேசங்களாகிய வடக்கு, கிழக்கில் எவ்விதக் குடியேற்றங்களும் இடம்பெறக்கூடாது என்பதனை முன்வைத்திருந்தனர். இந்தியத் தமிழரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட விஷயத்தில், தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிங்களப் பெரும்பான்மை அரசுக்கு ஆதரவு வழங்கியமை, தமிழ்ப் பிரதேசங் களில் சிங்களக் குடியேற்றத்தை நிறுவ சிங்கள அரசாங்கத்துக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது.

இந்தியத் தமிழரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதன் உடனடி விளைவாகப் பாராளுமன்றத்தில் தமிழர் ஏழு பிரதிநிதித் துவங்களை இழந்ததுடன், 50 வீதத்துக்குக் குறைவான பிரதிநிதித்துவத்தையே கொண்டிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில் அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம், தமிழரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கவும், அவர்களைப் பாராளுமன்றத்தில் வலுவிழக்கச் செய்யவும், தமிழரின் பாரம்பரிய பிரதேசம் என்ற கோட்பாட்டை இல்லா தொழிப்பதுமே சிங்கள பெரும்பான்மை அரசுகளின் நோக்கமாக இருந்தது. இதைப்பற்றி செல்வநாயகம் அவர்கள் பின்வருமாறு குற்றம் சுமத்தினார்.

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் வடக்கு கிழக்கு மகாணங்களைத் தமது சொந்த மாகக் கொண்டுள்ளனர். இப்போது  சிங்களவர், தமது ஏழு மாகாணங்களுடனும் திருப்தியடையாது. எமது நிலங்களையும் பறிக்க முயல் கின்றனர்.

இதுதான் இந்தப் பின்னணி. இதுமாதிரி நிறைய செய்திகளை அந்த ஆய்வாளர் சொல்லியிருக்கிறார்.


                      ------------------------------- -(தொடரும்) --------"விடுதலை” 23-8-2012

0 comments: