Search This Blog

28.8.12

உலகின் ஒரே நாத்திக ஏடு!



விடுதலை  ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்து என்னை எழுது என்ற ஆணையைப் பிறப்பித்தவர் அய்யா!
அரை நூற்றாண்டுகள் விடுதலை பணி தொடர அயராது உழைத்த - ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!
உங்கள் நம்பிக்கை பொய்த்துவிடாமல் உறுதியாக உழைப்பேன்! உழைப்பேன்!!
விடுதலை ஆசிரியர் அவர்களின் நெக்குருகும் அறிக்கை

 

அரை நூற்றாண்டுக்காலம் விடுதலை ஆசிரியராகப் பணியாற்றியதற்கு ஒவ்வொரு வகையிலும் காரணமாக இருந்த - அய்யா தொடங்கி தொண்டர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி கூறி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர் கள் மனிதகுலத்தின் சுயமரியாதையைப் பாதுகாக்கும் பகுத்தறிவு நாளேடான விடுதலையில் அய்யா அவர்கள் தொண்டர்களில் ஒருவனான என்னை- கடந்த 50 ஆண்டு களுக்குமுன்பு, அவர்களே அழைத்து வந்து (சிந்தாதிரிப் பேட்டை, 2, பாலகிருஷ்ணப்பிள்ளைத் தெருவில்) விடுதலைப் பணிமனையில் பணியாற்ற என்னை ஒரு குரு சீடனைப் பீடத்தில் அமர்த்தி எழுத்தாணியைத் தந்து எழுது, துணிவாக எழுது, தெளிவாக எழுது, அச்சமின்றி உண்மையை எழுது என்று அறிவுறுத்துவதுபோல் அறிவுரை தந்து, தனது சிம்மப் பார்வையோடும், அன்பு நதியினில் நனைத்து கட்டிப் போட்ட இதயத்தோடும், பணித்தார்கள்!

அய்யா - அம்மா

அரை நூற்றாண்டு உருண்டோடிவிட்டது! இது எனது வாழ்வில் யான் பெற்ற பெரும்பேறு!! அய்யாவுக்கும், அம்மாவிற்கும் (அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்) கடைசிவரை உடனிருந்து பணி செய்து பயன்பட்டு, மனநிறைவு கொள்ளச் செய்த மகத்தான பணிதான் எனது வாழ்வின் விழுமித்த பயன்.

எண்ணற்ற கழகக் குடும்பங்களின் இணையற்ற பாசம் தான் யான் பெற்ற - பெறுகின்ற, பெரும் ஊதியம்!

உலகின் ஒரே நாத்திக ஏடு!

உலகிலேயே பகுத்தறிவு - (நாத்திக) கொள்கையைப் பரப்பும் சமூக அறிவியல் புரட்சிப் பணிக்கென நாள்தோறும் அச்சிடப்பட்டு வெளியாகும் ஒரே ஒரு நாளேடு, விடுதலை நாளேடுதான் என்பதை உலகப் பகுத்தறிவாளர் - மனிதநேயர்கள் அமைப்பின் தலைவரான, நார்வே நாட்டினைச் சார்ந்த லெவிஃபிராகல் (டுநஎல குசயபரட) அவர்கள் டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவின்போது, உலகுக்கே பிரகடனப்படுத்திப் பெருமைப்பட்டார்கள்!

அரசியல், பொருளாதாரத் துறைகளில் மக்களின் பெரும்பான்மைக் கருத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து, வெற்றி பெறுவதுகூட (ஒப்பீட்டு அடிப்படையில்) எளிது; ஆனால், மக்களிடம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை, கடவுள், மதம், ஜாதி, பெண்ணடிமை போன்ற மனித ஒருமைப்பாட்டிற்கும், சமூக முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகளை எதிர்த்து - எதிர்நீச்சல் போட்டு 78 ஆண்டுகள் ஒரு நாளேடு தாக்குப் பிடித்து நிலைப்பது, நீடிப்பது என்பதே ஒரு தனித்ததோர் சாதனையென்றே சொல்லவேண்டும்.

எப்படி சாத்தியமாயிற்று?

நட்டத்திற்கென நடந்த ஏட்டினை, அய்யா தந்தை பெரியார்தம் சொந்த செல்வமும், சலிப்பறியாத உழைப்பும், எதிர்ப்பினால் கலங்காத நெஞ்சுரமும், நேர்மைத் திறனும், பற்றற்ற நிலையும் (அறிவுப் பற்று, கொள்கைப் பற்று, மனிதகுலப் பற்று தவிர வேறு எந்தப் பற்றும் - புகழ்ப்பற்றுகூட இல்லாத தலைவர்) உடைய அவர்களால் தான் தொடர்ந்து நடத்திடச் சாத்தியமாயிற்று.

அந்தப் பணி - அதே எதிர்நீச்சல், அடக்குமுறை - அரசுகளின் ஆதரவின்மை - இவைகளைத் தாண்டி தொடர்கிறது இன்றும்கூட - மூலகாரணம் அய்யாவின் அருந்தொண்டர்களான பற்றற்றான் பற்றினை பற்றி நடக்கும் மாவீரர்களான கருஞ்சட்டை வீரர் - வீராங்கனைகளின் கடும் உழைப்பும், பெரியார் ஆணை ஒன்றே நமக்குப் பெரிது; வேறு எந்த சுயநலச் சிந்தனையோ, ஆசா பாசமோ அல்லவென்றே கருதி, தம் வறுமை நிலையில்கூட கொள்கை வளத்தினை சுவாசிக்கும் தொண்டர் கூட்டத் தின் கட்டுப்பாடு தளரா பேராதரவின் காரணமாகத்தான்.

அவர்களின் பணியாளர்களில் - தோழர்களின் வரிசையில் கடைகோடியில் நின்று கடமையாற்றும் எளியவன் யான். எவ்வளவு மகத்தான ஆதரவு இப்பணி புரியும் எனக்கு!

என்னை ஊக்கப்படுத்தினால்...!

என்னை ஊக்கப்படுத்தினால், அது விடுதலைக் குழுமத்திற்கு உற்சாகத்தைப் பெருக்கும்; கழகக் குடும்பத்தினரை மேலும் உழைக்க, பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழ வைக்க வாய்ப்பாகும் என்பதற்கு - 25 ஆம் தேதி ஆகஸ்ட் விடுதலை நாள் விழா - ஓர் எடுத்துக்காட்டே!

நன்றி! நன்றி!!
அனைவருக்கும் நன்றி!!!

அதில் கலந்துகொண்டு மனந்திறந்து பாராட்டி, சீராட்டிய தமிழினக் காவலர் - எம் இனத்தின் இன்றைய இராவணன், ஆட்சியைவிட இனத்தின் மீட்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் ஓய்வறியா உழைப்பின் உருவம் - எம்மூத்த சகோதரர் மானமிகு கலைஞர் அவர்களும், காலையில் வந்து கலந்து, கருத்துமழை பொழிந்த தன்மானப் பெரும் புலவர் டாக்டர் மா. நன்னன் அவர்களுக்கும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஜஸ்டீஸ் டாக்டர் எஸ். மோகன், ஜஸ்டீஸ் டாக்டர் ஏ.ஆர். இலட்சுமணன், அகில இந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் புரட்சி எழுத்தாளர் பொன்னீலன், ஊடகவியலா ளர்கள் பெருமைக்குரிய ஏ.எஸ். பன்னீர்செல்வம், ரமேஷ் பிரபா, லக்னோ பல்கலைக் கழக சமூகவியல் பேராசிரியர் ஜெக்மோகன்சிங்வர்மா மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

உங்களது நம்பிக்கைகளை பொய்க்கவிடாமல், இறுதி மூச்சு உள்ளவரை - உழைத்து உழைத்து, காப்பாற்றிடு வேன் என்று உறுதி கூறுகிறேன்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

எனது உடல்நலப் பாதுகாப்புக்கென அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டு, என்னை தாயினும் சாலப் பரிந்து காக்கும் புரவலர்களுக்கும், அவர்களின் அன்பு மழைத் துளிகளை, அணைகளாகக் கட்டி ஒழுங்குபடுத்தி அறக்கட்டளை உருவாக்கி, எனது வேண்டுகோளை ஏற்று, பெரியார் நலநிதி அறக்கட்டளையாக்கிட இசைவு தந்து ஏற்பாடு செய்துள்ள அதன் தலைவர், எமது மதியுரைஞர் அய்யா மானமிகு எஸ். இராஜரத்தினம் மற்றும் அவர்தம் அணியினர், அனைவருக்கும் நன்றி.

என்றும் எனது காவலராக - நலம் பாதுகாப்பு அரணாக உள்ள டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கும், உலக முழுவதிலும் உள்ள நலம் நாடிடும் நண்பர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?

சென்னை 
28.8.2012

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

5 comments:

தமிழ் ஓவியா said...

கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன்-கலையரசி ஆகியோரின் மகள் அ.மணியம்மை, கலியமங்கலம் சுப்பிரமணியன் - தமிழரசி ஆகியோரின் மகன் சு.பாபு ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 27.8.2012 திங்கள் மாலை 5.30 மணிக்கு மன்னார்குடி, பி.எம்.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த் தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கழகச் சொற்பொழிவாளர்கள் சார்பில் கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.இராஜ மாணிக்கம், மன்னை அம்பிகாபதி, கல்வி நிறுவனங்கள் சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் நல்.இராமச்சந்திரன், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன், முன்னாள் அமைச்சர்கள் மதிவாணன்,அழகு திருநாவுக்கரசு, திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜகிரி கோ.தங்கராசு, சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி.ராசா அனைத்து மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் தஞ்சை மண்டல தலைவர் வெ.ஜெயராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் இணைப்புரை வழங்கினார். மன்னை நகர தலைவர் ஆர்.எஸ்.அன்பழகன் நன்றி கூறினார். தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வாழ்வியல் உரையாற்றி மணவிழாவினை நடத்தி வைத்து பேசியதாவது:

தமிழ் ஓவியா said...


நான் எத்தனையோ இடர்பாடுகளையெல்லாம் தாண்டி இராம.அன்பழகன் மகள் மணியம்மை மணவிழாவில் வந்து கலந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியாகும். தலைமை நிலைய செயலாளர் நான் வெளிநாட்டிலே சிகிச்சை பெற்றுக்கொண்டு இருக்கும் போதே எனக்கு இந்த தேதியை உறுதிபடுத்தினார்கள். அவர்கள் சிறிது தயங்கினார். நான் நிச்சயமாக வந்து கலந்துகொள்வேன் என கூறினேன் நான் பேசுவதற்கு முன்னாலே ஒரு கடமை இருக்கிறது.

என்னவென்றால் இந்த குடும்பத்தின் மிக முக்கியமான ஒருவன் என்ற முறையிலே உங்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். இது கொள்கை உறவு உள்ள ஒரு இயக்கம் இராம.அன்பழகன் ஒரு சிறந்த பேச்சாளர், யாரையும் எளிதில் கவரக்கூடிய அளவிற்கு, அதுவும் பாமர மக்கள், கிராம மக்கள் என எல்லோரும் அவர் பேச்சை ஈர்ப்பாக கேட்க கூடிய வகையில் நல்ல வண்ணம் பயிற்சி பெற்று அதை சிறப்பாக செய்து இயக்கத்திற்கு பலம் சேர்த்து கொண்டு வரும் பணியை அன்றாடம் தமது திருப்பணியாக செய்து கொண்டிருக்கக்கூடியவர் இது ஒருபுறம்.

சித்தார்த்தன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல தலைசிறந்த நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதிலே மிக முக்கியமாக இருக்கக்கூடிய அற்புதமான ஒரு பேச்சாளர். பல்வேறு இயக்கங்களிலே பிரச்சினைகள் ஏதாவது வருகிறதென்றால் அது பேச்சாளர்கள் மூலம்தான் வரும் நமது பேச்சாளர்களுக்கு கலந்துரையாடல் கூட்டம் நடத்தும் போது ஒன்றை சொல்வேன் உங்களுடைய பணி பேச்சு, முடிந்ததும் நீங்கள் நேரடியாக போய் ஓய்வெடுக்க வேண்டும். பேச்சு முடிந்ததும் இன்னொரு மேடை போட கூடிய நிலை இருக்கக்கூடாது.

அந்த நிலை இருந்தால் எந்த இயக்கத்துக்கும் சிறப்பாக அமையாது என சொல்வதுண்டு - அந்த வகையிலே இவர் இத்தனை ஆண்டுகாலம் இயக்கத்திலே பணியாற்றக்கூடியவர் என்று சொன்னால் ஒரு சிறு புகார் கூட இராம.அன்பழகன் அவர்கள் மீது வந்ததில்லை என்று சொன்னால் இது அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் - இந்த குடும்பத்தின் பெருமை - எப்படி அவர்கள் ஆளாகி இருக்கி றார்கள் என சொல்வது மிக மிக முக்கியம்.

ஒரு இல்லத்தைகட்டி எளியமையாக திறந்தார். அதை கூட பெரிய விழாவாக அமைக்கவில்லை - வேறொரு நிகழ்ச்சிக்கு போகும் போது அழைத்து போனார்கள் - அவரும் அவரது வாழ்விணையரும் என்னை வரவேற்றார்கள். மணியம்மையும் அங்கே இருந்தார்கள். அவ்வளவு எளிமையாக நிகழ்ச்சி நடத்தக்கூடிய எளிமை, இனிமை நிறைந்த பண்பாளர் இராம.அன்பழகன் அவர்கள். அவரது பண்பை பார்த்து இந்த எளிமையை கற்று கொள்ளுங்கள்.இதைதான் நான் வலியுறுத்த விரும்புகிறேன். இங்கே ஏராளமான கூட்டம் வெளியே ஒரு மாநாடு நீண்டநேரம் பேச விருப்பம் இருந்தாலும் கூட தாய்மார்கள் நெரிசலிலே நீங்கள் நின்று இருக்கும் போது அதற்கு வாய்ப்பில்லை.

அவர் ஒரு எளிமையான ஒரு தோழர். சொக்கனாவூர் என்ற சிரிய கிராமத்திலே எளிமையாக தொடங்கியவர். இன்றைக்கு அவர் தமிழ்நாடு முழுக்க, தமிழ்நாட்டிற்கு அப்பாலும் உலகம் முழுவதும் விடுதலைய படிக்கிறார்கள். இணையத்திலே படிக்கிறார்கள். நாம் விடுதலையை படிப்பதற்கு முன்பே அடுத்த கண்டத்திலே இருப்பவர்கள் படித்து விழுகிறார்கள். அறிவியல் தொழில் நுட்பத்தின் வேக வளர்ச்சி. இந்த காலகட்டத்திலே அவர் உலகம் பூராவும் தெரிந்தவர். அப்படிப்பட்ட அவருடைய உழைப்பு இந்த இயக்கத்திற்கு கிடைத்து கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி அறிவிப்பை அறிவிக்க கூடிய வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்பதுதான். அந்த வகையிலே இந்த மணவிழாவிலே மாநாடு போல ஏராளமான தோழர்கள் எல்லா பகுதியிலும் இருந்து திரண்டு வந்திருக்கிறார்கள்.

வரும் போது வழியெல்லாம் பார்த்தேன். ஏராளமான பிளக்ஸ் போர்டுகள் பார்த்தேன். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நம்முடைய தோழர்களை கேட்டுக்கொள் கிறேன். வெறும் உருவத்தை போட்டு வருக வருக என போடுவதால் எந்த பலனும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. பெரியார் தொண்டர்கள் எதை செய்தாலும் அதிலே ஒரு இலக்கு, கொள்கை வாதம் இருக்க வேண்டும். நீங்கள் ஏதாவது விளம்பர படுத்த வேண்டுமென்றால் கொள்கையை விளம்பர படுத்துங்கள். நாம் தான் பல்வேறு செய்திகளுக்கு தமிழ்நாட்டிலே வழிகாட்டக்கூடியவர்கள். நம் தோழர்கள் எளிமையை கடைப்பிடிக்க வேண்டும் என அன்போடு, உரிமையோடும் நான் வேண்டிக் கொள்கிறேன். இந்த மணவிழாவில் பல்லாயிரக் கணக்கானோர் தாய்மார்கள் திரண்டிருக்கிறார்கள் என மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினார். 28-8-2012

தமிழ் ஓவியா said...

காதலுக்கு அபராதமா?

கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புக்குளம். காதல் திருமணம் செய்துகொண்டதற்காக அபராதம்!

************

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தேவராஜன் (அ.இ.அ.தி.மு.க. வார்டு செயலாளர்) மகள் தீபா - சின்னமாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

காதல் திருமணம் செய்துகொண்டதால், சின்னமாங்காடு கிராமத்துக்கு அவமானமாகப் போய்விட்டதாம்.

அதனால் மணமகளின் தந்தையாருக்கு ரூ.5 லட்சம் அபராதமாம். ஊரில் உள்ள ஆண்களுக் குத் தலா இரு குவார்ட்டர் பாட்டில் மதுபானங் கள் கொடுக்கவேண்டுமாம்.

என்ன கூத்து இது? இந்து மதத்தின் ஜாதி வாலாட்டம் சமூகத்தை எப்படியெல்லாம் கொத்திக் குதறி சின்னாபின்னப்படுத்துகிறது?

வயதுப் பக்குவம் அடைந்த - திருமணம் செய்துகொள்ள - விதிக்கப்பட்டுள்ள சட்டப்படி திருமண வயதை எட்டியவர்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொள்ளக் கூடாதா?

முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதைப் பயபக்தியாகப் பார்ப்பவர்கள் (கதைப்படி வள்ளி - குறத்தி சமூகப் பெண் தானே- காதல் திருமணம்தானே!) மனிதர் களுக்குள் ஜாதி மறுப்பு, காதல் என்றால் மட்டும் மீசை துடிப்பானேன்?

பார்ப்பனர் அல்லாத எல்லா மக்களையும் பார்த்து நீ சூத்திரன் (வேசி மகன்) என்று பார்ப்பான் சாத்திரம் பண்ணி வைத்திருக் கிறான்; சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம்வரை இந்த நிலையைக் காப்பாற்றும் சேவகம் செய்துகொண்டு இருக்கிறது - இதைப்பற்றி ரோஷம் பொத்துக்கொண்டு வெடித்துக் கிளம்பவில்லை.

தமிழர்களுக்குள் ஒருவரை ஒருவர் திரு மணம் செய்துகொண்டால் மட்டும் மானம் கப்பல் ஏறுகிறதோ!

அபராதம் விதிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களை அழைத்துக் கட்டப்பஞ்சாயத்து செய்யாமல் உரிய தண்டனையைப் பெற்றுத்தர காவல்துறை முனையவேண்டும்.


தமிழ் ஓவியா said...

எலிக் கடியா?

சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் எலி கடித்து பிறந்த குழந்தை மரணம்.


***********

ஓர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து குழந்தை மரணம் என்றால், அது என்ன அரசு மருத்துவமனையா? எலிகள் குடும்பம் நடத்தும் கிடங்கா? (கோடவுன்).

மருத்துவர்கள் இல்லையா? செவிலியர்கள் இல்லையா? ஆயாக்கள் இல்லையா? மேற் பார்வையிடும் மேற்பார்வையாளர்கள் இல்லாமற் போய்விட்டார்களா?

எலிதானே கடித்தது - புலி கடிக்கவில் லையே என்று சமாதானம் சொன்னாலும் சொல்லுவார்கள். குழந்தையை பறிகொடுத்த தாய்க்கு அல்லவா அந்தத் துன்பம் தெரியும்!

அரசு மருத்துவமனையை மறந்து மக்கள் தனியார் மருத்துவமனைக்கு ஏன் படையெடுக் கின்றனர் என்பது இப்பொழுது புரிகிறதல்லவா?

தமிழ் ஓவியா said...

கரடி வித்தையா?

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு - தலைமை தணிக்கையாளர்மீது பிரதமர் குறை சொல்கிறார்.

***************

தணிக்கை அதிகாரி என்ற ஒருவர் ஆட்சியை நடத்த ஆசைப்படுகிறார். எப்படி யாவது தன் பெயர் விளம்பரம் ஆகவேண்டும் என்று கருதுகிறார் போலும்.

தணிக்கை அதிகாரியின் வேலை: செலவு என்ன? வவுச்சர் உண்மையாக இருக்கிறதா? என்று பார்ப்பதே தவிர, அரசின் கொள்கையை உருவாக்குவதோ, முடிவு செய்வதோ அல்ல.

2ஜி பிரச்சினையில் இழப்பு என்றார்; அப்படி செய்திருந்தால் இப்படி லாபம் கொட்டியிருக்கும் என்றார். நிலக்கரி சுரங்கப் பிரச்சினையிலும்கூட அதே பாணிதான்.

பிரதமரோ, ஆ. இராசாவோ தனிப்பட்ட வகையில் அடைந்த பண இலாபம் என்ன?

இவர்கள் சொல்லும் இழப்பு என்பது - மக்களுக்குக் கிடைத்த இலாபம்தானே!

எல்லாவற்றிலும் வட்டிக் கடை கணக்குப் பார்க்க முடியுமா?

ரயில் பயண டிக்கெட்டை ஏற்றியிருந்தால் இத்தனை லட்சம் கோடி ரூபாய் இலாபம் அரசுக் குக் கிடைத்திருக்கும். அப்படி ஏற்றாததால், பல லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்றுகூட தணிக்கை அதிகாரி சொல்லக் கூடுமே!

தணிக்கை அதிகாரி இப்படி அடிக்கடி புரளிக் கரடியை அவிழ்த்து விடுவதும், அதனை வைத்துக்கொண்டு பி.ஜே.பி. கரடி வித்தை காட்டுவதும் பலவித சந்தேகங்களுக்கு இடம் அளிக்கின்றன.