Search This Blog

15.8.12

மதம் ஏன் ஒழிய வேண்டும்? - பெரியார்



மதம் என்பதைப் பற்றி இதற்கு முன் "குடி அரசு" , "புரட்சி" முதலிய பத்திரிகைகளில் அநேக வியாசங்கள் பல தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருப்பது யாவருக்கும் தெரியும்.

மதமானது இன்று உலகில் மனித சமூகத்தின் வாழ்வைத் துக்கமயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்று உள்ள பகுத்தறிவை அடிமைப்படுத்தி, ஒற்றுமையைக் குலைத்து, மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது என்பதற்கு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றோம்.

"தேசிய சிங்கங்"களான அலி சகோதரர்கள் ஒரு காலத்தில் "நாங்கள் முதலில் மகம்மதியர்கள், பிறகுதான் இந்தியர்கள்" அதாவது முதலாவது மதம், பிறகு தான் தேசம் என்றும், "உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா" காந்தி "நானே இந்து மதத்தின் உருவம்! நான் மூச்சுவிடுவதும், வாங்குவதும் இந்து மதத்திற்காகவே!! நான் உண்பதும் உயிர் வாழ்வதும் இந்து மதத்திற்காகவே!!! மதத்தைக் காக்கவே நான் சுயராஜ்யம் கேட்கின்றேன்!!!! அதாவது இந்து மதம் தான் எனக்கு முதலும் கடைசியும்" என்றும், "பழைய காங்கிரஸ்வாதி, மாசற்ற தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி" என்று சொல்லப்பட்ட பண்டித மதன் மோகன மாளவியா "எனது மதத்தையும், எனது ஜாதியையும் காப்பதே எனது முதல் வேலை" என்றும், அதாவது வருணாச்சிரமத்தைக் காக்கத்தான் நான் தேசியவாதி என்றும் சொல்லும்படி செய்துவிட்டது என்றால் மதத்தின் ஆதிக்கத்திற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.

பெருத்த தேசாபிமானிகள், தேசத்துக்காகச் சகலத்தையும் தியாகம் செய்தவர்கள் என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மதத் தத்துவத்தை உள் எண்ணமாக வைத்து, அவற்றின் கொள்கைகளைக் காப்பதற்காகவே அவர்களது தேசாபிமானமும், உயிர் வாழ்வும் இருந்து வருகின்றது என்றால் மற்ற சாதாரணமான அதாவது மதத்தைத் தவிர மற்றொன்றும் அறியாத பாமர மக்களின் யோக்கியதையைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.

வட்ட மேஜை மகாநாடு உடைந்துபோனதும் அரசியல் சீர்திருத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றுபடாமல் போனதும், இந்து முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் அரசியலில் தனித் தொகுதி வேண்டுவதற்கும், காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் தனித்தொகுதி கேள்ப்பதற்கும், கூட்டுத் தொகுதியில் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவேண்டும் என்று கேள்ப்பதற்கும், மக்களை மக்கள் தீண்டப்படாதாராய் கீழ் மேல் ஜாதியாராய் கருதப்பட்டு வருவதற்கும் மதமே காரணமாய் இருந்து வருகின்றது என்பதையும் எவராவது மறுக்க முடியுமா என்று கேழ்க்கின்றோம்.

மற்றும் மனித சமூக வாழ்வுக்கு ஏற்ற சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் என்பவைகளில் பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறிவுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அனேக விஷயங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும் அமுலுக்குக் கொண்டுவரவோ தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரணமாக சொல்லப்படுகின்றதா இல்லையா என்று கேள்க்கின்றோம். ஆகவே மனித வாழ்க்கைக்கு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.

இப்படிப்பட்ட இந்த மதம் ஒன்று இரண்டு என்று இல்லாமல் நூற்றுக்கணக்காய் இருந்துகொண்டு பலவித கடவுள்களை சிருஷ்டித்து, பலவித மேல் உலகங்களையும் மோக்ஷ நரகங்களையும் கற்பித்து அவரவர்கள் கடவுள்களுக்குத் தனிப்பட்ட குணங்களும், அவரவர்கள் மேல் உலகங்களுக்கு தனிப்பட்ட பூகோளங்களும், அவரவர்கள் மோக்ஷ நரகங்களுக்குத் தனிப்பட்ட வருணனைகளும் கற்பித்து மக்களை மயக்கி வருவதோடு வாழ்க்கை, ஒழுக்கம், நடத்தை என்பவைகளும் அவரவர் மதத்துக்கு ஒவ்வொரு விதமாய் கற்பிக்கப்பட்டு நடந்து வருவதும் அறிஞர்கள் அறியாததா?

இப்படிப்பட்ட மதத்தை மக்களுக்குள் பிரசாரம் செய்வதற்காக ஒரு சில நபர்கள் பாதிரி என்றும், முல்லா என்றும், தம்பிரான் என்றும், சங்கராச்சாரி என்றும், ஜீயர் என்றும், சாமியார் என்றும் பெயர்கள் வைத்துக்கொண்டு, உலக செல்வத்தில் தனிப்பெரும் பாகத்தை வீணாக்கி மக்களுக்கு போதை ஊட்டிவருவதானது எவ்வளவு அவிவிவேகமான காரியம் என்பது சுய அறிவோடு பரிசுத்த தன்மையில் இருந்து யோசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

இவைகளைப் பற்றி இன்னமும் விவரிக்குமுன் மதம் என்றால் என்ன என்று நாம் கருதிக் கொண்டு அதைப்பற்றி இவ்வளவு எழுதுகின்றோம் என்பதை வாசகர்களுக்கு விளக்க ஆசைப்படுகின்றோம்.

1. மதம் என்பது இவ்வுலக மானிட வாழ்வுக்கு ஏற்ற சட்ட திட்டங்கள் என்று சொல்லப்படுமானாலும்,

2. அல்லது மதம் என்பது இவ்வுலகில் மக்கள் கூடி வாழ்வதற்கு ஏற்ற "ஒழுங்கு முறைகளை"க் கொண்டது என்று சொல்லப்படுமானாலும்,

3. அல்லது (ஒருவர் கூறியபடி) மதம் என்பது மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படுமானாலும் அவைகளைப் பற்றியெல்லாம் நாம் அதிகக் கவலை கொண்டு மதங்களை எதிர்க்க ஆசைப்படுவதில்லை.

அப்படிக்கெல்லாம் அல்லாமல்,

1. மதமானது மனிதனுடைய ஜட சம்பந்தத்தை விட்டு விட்டு ஜடம் நீங்கின "ஆத்மா"வைப் பொறுத்ததென்றும்,

2. மதமானது இவ்வுலக வாழ்வை இன்ப துன்பத்தை துச்சமாக மதித்துவிட்டு மேலுலக வாழ்வை முக்கியமாகப் பொருத்ததென்றும்,

3. மதமானது "கடவுளு"க்கும் மனிதனுக்குமுள்ள சம்பந்தத்தை விளக்குவதைப் பொருத்ததென்றும்,

4. மதமானது பஞ்சேந்திரியங்களுக்கு விளங்கக்கூடிய வஸ்து என்ற தத்துவத்தைவிட்டு பஞ்சேந்திரியங்களாலும் உணர முடியாத "ஆத்மார்த்தம்" ஆவித் தத்துவத்தை, அசரீரியை அடிப்படையாகக் கொண்டது என்றும்,

5. மதமானது உலக போக போக்கியம் இன்ப துன்பம் ஆகியவைகளை அலக்ஷியம் செய்து "கடவுளின்" பாதார விந்தத்தை அடையவும், "மோக்ஷ" சாம்ராஜ்யத்தைப் பெறவும் ஏற்ற மார்க்கம் என்றும் சொல்லப்படும் மதங்களையும், மத தத்துவங்களையும் பற்றியே நாம் பேசுகின்றோம் என்றாலும் முதலில் கூறப்பட்ட அதாவது,

மதம் மானிட வாழ்க்கைக்கு ஏற்ற சட்டதிட்டங்களுக்கோ மக்களின் கூட்டுறவு வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுங்குமுறைக்கோ ஏற்பட்டது என்கின்ற விஷயங்களிலும் கூட நமது ஆட்சேபனையை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது இன்று நாம் மதங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவைகளில் மேற்கண்ட குணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், இந்தக் காரியங்களுக்காக மக்கள் செலவில் நடைபெறும் அரசாங்க நிருவாகமும், சிவில் கிரிமினல் சட்டதிட்டங்களும், அவைகளை நிறைவேற்ற நியாயஸ்தலம், தண்டனை, சன்மானம் ஆகிய முறைகளும் இருந்து வரும்போது இவைகள் அல்லாத ஒரு சாதனம் அதாவது மதம் என்கின்ற விஷயம் எதற்காக இருக்க வேண்டும்?

அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை கண்டனை இல்லாமல் மனித சமூகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா? என்பதை யோசித்தால் மதம் மேல்கண்ட காரியங்களுக்கு உண்மையாய் பயன்படுகிறதா என்பது விளங்கும். இன்று எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், எந்த சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும், சரீரமும் காப்பாற்றப்படுவது மதத்தினாலா, அரசாங்க சட்டதிட்டங்களினாலா என்பதை யோசித்துப் பார்த்தாலே மதத்தின் காப்பும், நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் விளங்கிவிடும்.

மதம் "எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாய் காருண்யத்துடன் இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றது" என்று மதக்காரர்கள் சொல்லக் கூடும். ஆனால் மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் பற்றிக் கவலைப்படாமல் மற்ற ஜீவராசிகளைக் கொல்லவும், தின்னவும், இம்சிக்கவும் தனக்கு இடையூறு என்று கருதினால் அழிக்கவும் செய்கிறான். ஆனால் மனிதனை மாத்திரம் அந்தப்படி செய்வதில்லை. இதற்குக் காரணம் மதமா? அல்லது அரசாங்க சட்டதிட்டமா? என்று கேட்கின்றோம். மனிதனை அந்தப்படி எங்கோ ஒன்று இரண்டு சமயம் செய்வதாக வைத்துக்கொண்டாலும் அதற்காகத் தண்டனையை அடைகின்றான்.

ஆதலால் மதம் எங்கே பொதுவான ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றுகின்றது என்று கேட்கின்றோம்.

மதம் மனிதனுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள வித்தியாசங் களைக் காட்டுவது என்று சொல்லப்படுவதும் மிகுதியும் பொருத்தமற்றது என்றே கருதுகின்றோம்.

மனிதனுக்கும், மற்ற ஜீவ வர்க்கத்துக்கும் உள்ள வித்தியாசம் எந்தத் துறையிலானாலும் அறிய வேண்டுமானால் பிராணிவர்க்கத் தத்துவம் கொண்ட நூல்களைப் பார்த்தால் தாராளமாக மத சம்மந்தம் இல்லாமலே அவைகளைத் தெரிந்து கொள்ளலாம். அப்படிக்கில்லாமல் மதத்தின் மூலம் அறிந்த ஜீவத் தத்துவங்கள் இன்று சிரிப்புக்கிடமாகத்தான் இருந்து வருகின்றன.

மதம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் கற்பிக்கின்றது. மிருகங்களை, பக்ஷிகளை, பூச்சிகளை, புல் பூண்டுகளை மனிதனை விட உயர்வாய் மதிக்கின்றது. ஒரு மிருகத்தை உயர்வாய், ஒரு மிருகத்தைத் தாழ்வாய் கற்பிக்கின்றது. இந்த விஷயங்களுக்குப் பிராணி சாஸ்திரமே முக்கியமானதும் சரியானதுமே தவிர, மதத்தின் மூலம் அறியக்கூடியதாய் இருக்கும் தன்மை மிகவும் மோசமானதும், மூர்க்கத் தனமானதும், முட்டாள் தனமானதுமென்றே சொல்லுவோம்.

மேற்கண்ட 1,2,3 விஷயங்களைப் பற்றிய வரையிலாவது மதத்தை ஒப்புக் கொள்ள செய்யலாமென்று பார்த்தாலும் கூட அதுவும் அறிவுக்குப் பொருத்தமற்றதும், மூர்க்கத்தனம் கொண்டதுமான கருத்துக்களால் பாதகமடைகின்றது. அதாவது எந்த மதக்காரனும் தன் தன் மதத்தைப் பற்றிய ஆதாரங்களும், கொள்கைகளுமே எந்த தேசத்துக்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்றும், அவைகளில் ஒரு முற்றுப்புள்ளிக் குறிப்புக்கோடு கூட மாறக்கூடாது என்றும், தன் தன் மதத்துக்கு தலைவன் என்பவன் எவனோ அவனே உலக மதத்தலைவனாக இருக்க வேண்டும் என்றும் செய்யப்படும் பிடிவாதங்களும், முரட்டுத் தனங்களும் எந்த மதத்தையும் மனித சமூக வாழ்வுக்கு வழிகாட்டி என்று ஒப்புக் கொள்ள முடியாமல் செய்கின்றது.

ஆகவே மனித சமூக கூட்டு வாழ்வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங்களை விட அரசாங்க சட்டதிட்டங்களையே ஆதாரமாகக் கொள்வதுதான் அறிவுடமை என்று கூறுவோம். அதுதான் இன்று உலகமெங்கும் அனுபவத்தில் இருக்கின்றது என்றும் சொல்லுவோம். ஏனெனில் அவைகளில் காலத்துக்கும், தேசத்துக்கும் ஒத்தபடி, அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்றபடி மாற்றிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் உரிமை இருக்கின்றது. மதங்களில் அவை காணவே முடியாது. அப்படி ஏதாவது முயற்சித்தாலும் கலகம், கொள்ளை, கொலை முதலியவைகளை உண்டாக்கிவிடுகின்றது.

எனவே இந்த விஷயங்களே அதாவது இந்த உலக பிரத்தியக்ஷ மனித வாழ்வு சம்மந்தப்பட்ட இந்த விஷயங்களே மதத்தின் பயனாக இப்படி இருந்தால் இனி "மேலுலக" மனிதனுடைய கண்ணுக்கும், மனதுக்கும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத விஷயங்களைப் பற்றிய மத போதனைகள் என்ன பயனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேள்க்கின்றோம்.

மற்றபடி "மதம் சட்ட சம்மந்தத்தை விட்டு விட்டு ஆத்மாவைப் பொருத்தது" என்று சொல்லப்படுவதைப் பற்றியோதென்றால் இந்தக் காரணத்துக்காகவே மதங்களை எல்லாம் அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஆத்மா என்பதை இதுவரை ஒரு மனிதனும் அருத்தத்தோடு உருதிப்படுத்தவேயில்லை.

"4 + 3 = 10" என்று சொல்லிவிட்டு அந்த பத்தைப் பற்றியே விவகரித்துக்கொண்டிருக்கிறது போலவே, அதாவது 10ஐ யார் யாருக்கு எப்படி எப்படி பங்கிடுவது, எங்கு எங்கு வைப்பது என்று வேண்டுமானால் பேசு, அதற்குமேல் 4+3 எப்படி 10 என்று மாத்திரம் கேட்கக் கூடாது என்கின்ற நிலையில்தான் இன்று ஆத்ம தத்துவம் இருந்து வருகின்றது.

அதாவது ஆத்மா என்றால் என்ன? அது எப்படி சரீரம் பெற்றது? அதற்கு எப்படி கருமம் ஒட்டிற்று? அதன் நடத்தைக்குக் காரணம் என்ன? அது எப்படி, "மோக்ஷம்" போகின்றது? அது எப்படி மறுபடியும் சரீரம் பெற்று எழுகின்றது? மனித ஆத்மா, மிருக ஆத்மா, பக்ஷி ஆத்மா, புழு பூச்சி ஆத்மா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன? என்பன ஆகியவைகளைப் பற்றி எல்லாம் பேசலாம், விவரிக்கலாம், வால்யம் வால்யமாக புஸ்தகம் எழுதலாம். ஆனால் ஆத்மா என்றால் என்ன? அது எப்படிப் பட்டது? அப்படி ஒன்று இருக்க விஞ்ஞான சாஸ்திரம் (சையன்ஸ்) அல்லது ஜீவ தத்துவ சாஸ்திரம் இடம் கொடுக்கின்றதா? என்பதைப் பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆத்மா இருப்பதாக அவர் சொன்னார், இவர் சொன்னார், மகமது சொன்னார், கிறிஸ்து சொன்னார், கிருஷ்ணன் சொன்னார், புத்தர் சொன்னார்... என்று சொல்லி விடுவதும், "ஆத்மாவை நம்பாதவன் கடவுளை நம்பாத நாஸ்திகனை விட, கேடானவன், மடையன், மட்டி" என்றும் "கடவுளை நம்பாவிட்டாலும் ஆத்மாவை நம்பித்தான் ஆக வேண்டும்" என்று சொல்லிவிடுகிறார்களே ஒழிய காரண காரியங்களுடன் அறிவு அனுபவங்களுடன் பேசுகின்றவர்களே காணக் கிடைப்பதில்லை.

இது ஒரு புறமிருந்தாலும், ரூபம் இல்லாத, வஸ்து தத்துவமில்லாத மனதுக்கு புரியாத விஷயத்துக்காக இவ்வுலக பிரத்தியக்ஷ வாழ்க்கையையும், அடையும் இன்ப துன்பங்களையும் பற்றிய கவலை கூடாது என்றோ அல்லது இக் கவலையை விட "ஆத்மா" கவலையே பிரதானமென்றோ, பெரிதென்றோ சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட மதத்துக்கு உலகில் மனித ஜீவன்கள் இடம் கொடுக்கலாமா என்றுதான் கேட்கின்றோம்.

நிற்க "மதமானது மேல் உலக வாழ்வுக்கு ஆதாரமானது" என்று சொல்லப்படுமானால் முதலாவதாக மேல் உலகம் என்பது என்ன என்பதைப் பற்றி இதுவரை யாராவது, எங்காவது விளக்கி இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.

பூகோள சாஸ்திர நிபுணர்கள், பூமியின் கீழ் மனதிற்கு எட்டக்கூடிய அளவு வரையும், பூமியின் மேல் ஆகாய மார்க்கமாக மனதிற்கு எட்டக் கூடிய அளவு வரையிலும் ஆராய்ந்து பார்த்து லக்ஷக் கணக்கான மைல் (ஏன்)? கோடிக்கணக்கான மைல் தூரம் வரையில் ஆராய்ச்சி செய்து மேல் கீழ் நிலைமையை விளக்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு நிபுணத்துவர்கள் என்கின்ற நிலைமையிலும் அனேக வருஷ காலம் அதற்காகப் பாடுபட்டு உழைத்து அனேக கருவிகளின் உதவியைக் கொண்டு கண்டுபிடித்துச் சொன்ன பிரத்தியக்ஷ அனுபவ ருஜுப்பிக்கக் கூடிய உண்மைகளே ஒழிய "ஞான திருஷ்டி" அதாவது ஒரு மனிதனுடைய புத்திக்குத் திடீரென்று தோன்றிய விஷயம் என்று சொல்லப்படுவது போல் சொல்லப்பட்டதல்ல. அன்றியும் பள்ளிக்கூடங்களில் அல்லது பூகோள புஸ்தகங்களில் முறையே கற்பிக்கப்படாததும், காணப்படாததுமான விஷயங்களுமல்ல.

அப்படியிருக்கும் போது இந்த பிரத்தியக்ஷ உலக விஷயத்தை விட்டு விட்டு மேல் உலக விஷயத்தைப் பற்றி பேசுவது என்றால் அதில் அடங்கியிருக்கும் மௌடீகத் தன்மைக்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

இதுவரையில் மனிதன் மேல் உலகத்தை எப்படிக் கண்டு பிடித்தான்? அதன் விஸ்தீரணம், தன்மை என்ன? என்பவைகளைப் பற்றிய உண்மை எதுவும் சொல்லப்படாமல் "முதலில் மேல் உலகத்தை நம்பு, பிறகு எப்படி வேண்டுமானாலும், அதாவது மோக்ஷம் எப்படிப்பட்டது? நரகம் எப்படிப்பட்டது? தண்டனை எப்படிப்பட்டது? அது யாருக்குச் சொந்தம்? பரம பிதாவா, அல்லாவா, வைகுண்டநாதரா? கைலாச வாசரா? யார் அதற்கு எஜமான்? என்பதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாதம் செய்" என்று கற்பிப்பதாய் இருப்பதைத் தவிர வேறு என்ன உண்மை அல்லது அறிவுடைமை மேல் உலக விஷயத்தில் இருக்கிறது என்று கேட்கின்றோம்.

அதுபோலவே மதம் "கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது" என்று சொல்லப்படும் வார்த்தையும் அர்த்தமற்றதாகவே இருக்கிறது.

கடவுளைப் பற்றி அதாவது, கடவுள் என்றால் என்ன என்பதைப் பற்றி இதுவரை ஒரு ஆஸ்தீகனாவது, அல்லது கடவுள் தன்மைகள் பெற்ற பெரியார்களாவது விளக்கினவர்களே அல்ல.

கடவுள் என்றால் "கண்ணுக்கும் மனதுக்கும் எட்டாதது, ரூபமும் குணமும் இல்லாதது, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளது" என்று சொல்லிவிடுவதும், அதைச் சொல்லுகின்றவர்களே அந்தக் கருத்தை நம்பாமல் இருப்பதும் பிறகு அதற்கு முரணாகப் பேசுவதுமான காரியங்களுக்கே இதுவரை கடவுளைப் பற்றிய வாதங்களின் முடிவாய் இருந்து வந்திருக்கின்றன.

மனதுக்குட்படாத கடவுளைப் பற்றி மனிதன் எப்படி எந்த இந்திரியத்தினால் உணர்ந்தான் என்று கேட்டால் அதற்குப் பதிலே இல்லை. குணமும் ரூபமும் இல்லாத வஸ்துக்கு செய்கை எது என்று கேட்டால் அதற்கும் பதிலே இல்லை. சர்வசக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் செயலில் நன்மை தீமை, துன்பம் இன்பம், மேல் கீழ், சுகம் துக்கம், மோக்ஷம் நரகம் எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. "அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்கக் கூடாது கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவன் நாஸ்திகன், நம்பாவிட்டால் நரகம், அரச தண்டனை ஆஸ்தீகர்கள் கண்டனை கிடைக்கும்" என்று மிறட்டுவதும், உருட்டுவதும் தவிர கடவுளைப் பற்றி வேறு விளக்கமே இல்லை.

சர்வ சக்தியுள்ள சர்வ வியாபகமுள்ள கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான் ஏன் கடவுளை அறியமுடியவில்லை? ஏன் கடவுளை இல்லை? என்று சொல்லுகிறேன் என்று ஒருவன் கேட்டால், அது உன்னுடைய அகம்பாவம்; உன்னுடைய மடமை; உன்னுடைய பாவச் செய்கை என்று சொல்லி கடவுளை விட அவனைப் பெரியவனாக மதித்து இகழ்வதா யிருக்கின்றதே தவிர வேறு சமாதானமில்லை.

இப்படிப்பட்ட தத்துவங்கள் கொண்ட மதங்களைப் பற்றி, மக்கள் வேற்றுமை உணர்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்து பலாத்காரச் செய்கைகள் செய்து மக்களைத் துன்புறுத்துவதென்றால் மதத்தை ஒழிக்காமல் இருக்க யாருக்குத்தான் மனம் வரும் என்று கேள்கின்றோம்.

மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகின்றதே ஒழிய சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.

கிறிஸ்துவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்கு குடி அரசு பத்திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக புரட்சிப் பத்திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று.

இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினம்தோறும், நிமிஷம் தோறும் அடைந்துவரும் தொல்லையும், நசுங்குச் சேஷ்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது. பார்ப்பனர்களை உத்தியோகஸ்தர்களாக கொண்ட போலீஸ் இலாக்கா, போஸ்டல் இலாக்கா, ரயில்வே இலாக்கா, நீதி இலாக்கா, நிர்வாகம் மற்றும் அநேக துறைகளில் கீழே இருந்து ஹைகோர்ட்டு நிர்வாக சபை வரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம் சித்திரவதைக்கொப்பாக இருந்து வருகின்றது.

நாம் மாத்திரமல்லாமல் நம்மைப் போல் கஷ்டப்படும் மக்கள் கோடிக்கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

மதமானது பணக்காரத் தன்மையை பிரதிபலித்துக் கொண்டும், அதை ஆதரித்துக்கொண்டும் இருந்து வருகின்ற சாதனமாய் இருப்பதால் அதற்கு இவ்வளவு ஆதிக்கம் இருந்து வருவதில் அதிசயமில்லை.

ஆதலாலேயேதான் மதங்கள் ஒழிக்கப்படுவதாலேயே மனித சமூகத்துக்கு ஒற்றுமையும், சாந்தியும் ஏற்படும் என்று கருதுவதோடு, பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருதுகின்றோம்.

சென்ற வாரத்தில் சென்னை கடற்கரையில் நடந்த மத சம்பந்தமான ஒரு முஸ்லீம் கூட்டத்தில் கலகம் ஏற்பட்டு ஒரு முஸ்லீமை ஒரு இந்து குத்திவிட்டானாம். முஸ்லீமும் அதனால் செத்துவிட்டான். நாளைய தினம் "ஒரு கிறிஸ்தவன் அதை விசாரித்து உண்மைக் கண்டு இந்துவை தண்டிக்கப் போகிறான்" என்றாலோ அதில் அதிசயமில்லை. ஒரு கிறிஸ்தவன் முகமது நபியைப் பற்றி ஏதோ எழுதிவிட்டால் முகமதியர்களுக்கு ஆத்திரம் வருகின்றதும், ஒரு முகமதியன் கிறிஸ்துவைப் பற்றி எழுதி விட்டால் கிறிஸ்தவனுக்கு ஆத்திரம் வருவதும், இது போலவே இந்துக்களுக்கும், கிறிஸ்து முகமதியர்களுக்கும் நேருவதும் அதற்காக கொலை, கொள்ளை, கொடுமைகள் நடப்பதுமான காரியங்கள், அதுவும் இன்று நேற்று அல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, அதுவும் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் ஐரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய எல்லா தேசங்களிலும் நடந்து வருகின்றது என்றால் மதம் மக்களுக்கு கூட்டு வாழ்க்கையையும், ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும், வாழ்க்கை ஒழுங்குகளையும், ஒழுக்கங்களையும் போதித்து வருகின்றதா? என்று கேழ்க்கின்றோம்.

மதங்களில் உள்ள ஒழுக்கங்கள்

இந்து மதமும், இஸ்லாம் மதமும் ஒழுக்கத்தைப் பற்றி போதிப்பதில் ஒன்றுக்கொன்று தானே சிறந்த ஒழுக்கத்தை யுடையது என்று போட்டி போடுகின்றன. ஒழுக்கயீனங்களில் எல்லாம் மிகக் கேடானதாக, குற்றங்களில் எல்லாம் மிக இழிவான குற்றமாகவும் கருதப்படும் குற்றமாகிய பெண்களைப் பலாத்காரம் செய்து கற்பழித்தல், மானபங்கம் செய்தல் என்னும் குற்ற விஷயத்தில் இரு மதஸ்தர்களும் வங்காள மாகாணத்தில் எப்படி நடந்து இருக்கின்றார்கள் என்பதைக் காட்ட "மாடர்ன் ரிவியூ" பத்திரிகையில் வெளியாகி உள்ள ஒரு புள்ளி விபரத்தை இங்கு குறிப்பிட்டு விட்டு இதை முடிக்கின்றோம்.

இஸ்லாம் மூற்கர்களால் செய்யப்பட்ட பலாத்கார விபரம்

வருஷம் இந்து பெண்கள் முஸ்லீம் பெண்கள் மொத்தம்

1926 113 481 594

1927 122 576 698

1928 104 460 564

1929 114 676 790

1930 104 531 635

1931 125 573 698

இந்து மூற்கர்களால் செய்யப்பட்ட பலாத்கார விபரம்

வருஷம் இந்து பெண்கள் முஸ்லீம் பெண்கள் மொத்தம்

1926 194 9 203

1927 201 3 204

1928 198 10 208

1929 236 8 244

1930 234 6 240

1931 197 3 200

மதம் ஒழுக்கத்தை, கூட்டு வாழ்க்கை ஒழுங்கு முறையை, மனிதர்களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே எப்படி கற்பித்து இருக்கின்றது என்று மத பக்தர்களைக் கேட்கிறோம்.

                         ---------------தந்தைபெரியார் -”பகுத்தறிவு” தலையங்கம் 09.09.1934

7 comments:

தமிழ் ஓவியா said...

யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்?

இந்தியாவின் தென்கோடியில் கருநாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் ஒன்றுள்ளது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களுள் இதுவும் ஒன்று. (காஞ்சி மடம் இந்தப் பட்டியலில் வராது.)

இந்தச் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீபாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளாம். சென்னையில் டேரா போட்டுள்ளார். (மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரித்துக் கொண்டு வழக்கம் போல இருக்காளாம்.)

19.8.2012 கல்கி அட்டைப்படம் போட்டு ஆராதித்து சாங்கோபாங்கமாகப் பேட்டி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தமது குருநாதரான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் பற்றி சும்மா விளாசித் தள்ளி இருக்கிறார். அந்தக்குருநாதர் எப்படிப்பவட்டவர் தெரியுமா? ‘The Hindu Ideal’ எனும் நூலை சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது. அதன் 23 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது:

‘The Panchama asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soaps and any clothing and decoration of it in the best uptodate style cannot remove from it its inlaid flith that has originated from the deep rooted contamination of filthy inheredity. ’

என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் கூட பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது படிந்த அந்தத் தீட்டு - அழுக்கு பரம்பரைப் பரம்பரையாக ஆழமாக வேர் பிடித்து அவர்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வந்துள்ளதால் இதனை நீக்கவே முடியாது என்று சொன்னவர்தான் - இல்லை, இல்லை - திருவாய் மலர்ந்தருளியவர்தான் இவரின் குருநாதர்.

இந்த மனிதகுல விரோதிகள் இவர்கள்! சகமனிதனைப் பிறப்பின் அடிப்படையில் வெறுக்கக் கூடிய மனிதநேயமற்ற வகையில் மனித உருவில் நடமாடும் பேர்வழிகள்தான் ஆச்சாரியார்களாம் - ஜகத்குருக்களாம்- ஸ்ரீலஸ்ரீகளாம்.

நியாயமாக தீண்டாமையைப் பச்சையாகப் பேசும் இந்த வர்ணாசிரம விரியன்கள், பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின் கீழ் வெஞ்சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் துணிச்சலாக அதனைச் செய்யத்தானே வேண்டும்? நம் அரசுகளுக்கு ஏது அந்த முதுகெலும்பு?

குறிப்பு: காஞ்சி சங்கர மடத்துக்கும், சிருங்கேரி சங்கர மடத்துக்கும் ஆகாது - அந்த அளவுக்கு ஜென்மப் பகை என்பது வேறு விஷயம்! 15-8-2012

தமிழ் ஓவியா said...

கடவுளுக்குக் கேட்குது குவார்ட்டர்கள்!



சின்னமனூர், ஆக.16- குச்சனூர் கருப்பண்ணசாமிக்கு 4 ஆயிரம் மது பாட்டில்களை பக்தர்கள் படைய லிட்டு நேர்த்தி கடன் செலுத்தினார் களாம். மேலும் 13 ஆடுகள், 10 சேவல் களை பலியிட்டு விடிய, விடிய பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட தாம்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சனீஸ்வரபகவான் கோயிலில் தனி சன்னதியாக சோனைக் கருப்பண்ணசாமி கோயில் இருக்கிறது.

ஆடி நான்காவது வாரம் சனிக் கிழமை முடிந்து இரண்டாவது நாளில் சோணை கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்து திரு விழா நடத்தப்பட்டது. கருப் பண்ண சாமிக்கு நேர்த்திகடனாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் மது பாட் டில்களை காணிக்கையாக செலுத் தினார்களாம்.

பக்தர்கள் வழங்கிய குவார்ட்டர், ஆப், புல் என சுமார் 4 ஆயிரம் பாட்டில்கள் சுவாமிக்கு படையலிடப் பட்டனவாம். பூசாரி ஜெயபாலமுத்து வாயில் துணியை கட்டிக்கொண்டு பூஜைகள் செய்தாராம். பின்னர் கதவினை பூட்டிக்கொண்டு சுவா மிக்கு பின்புறம் உள்ள துவாரத்தின் வழியாக மதுவை ஊற்றினாராம். அந்த மதுவை சுவாமி துவாரம் வழியாக ஏற்றுக்கொள்வாராம்.

அப்போது வெளியில் நின்றவாறே பக்தர்கள் பிரார்த்தனை செய்தார் களாம். இவ்விழாவையொட்டி 13 ஆடுகள், 10 சேவல்கள் வெட்டி பலி கொடுக்கப்பட்டனவாம். இதைய டுத்து 2 ஆயிரம் பேருக்கு கறிச் சோறு வழங்கப்பட்டதாம். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துவங்கிய விழா, இரவு ஒரு மணிக்கு முடிந் ததாம். விழா ஏற் பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரகுமார் செய்திருந்தார்.

நேர்த்தி கடனாக வழங்கிய மது பாட்டில்கள் கருவறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.16-8-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சமபந்தி!

செய்தி: ஆகஸ்டு 15 சுதந்திர நாளையொட்டி கோயில்களில் சம்பந்தி விருந்து.

சிந்தனை: நாள் தோறும் உணவு விடுதி களிலும் அதுதான் நடந்து கொண்டு வருகிறது. கோயிலுக்குள் இன்னும் சில இடங்களில் தாழ்த்தப் பட்டோர் நுழைய முடிய வில்லை; கோயில் கரு வறைக்குள் ஒரு ஜாதி மட்டும் தான் நுழைய முடியும். அங்கெல்லாம் சம்பந்தி நடப்பது எப்பொழுது?

16-8-2012

தமிழ் ஓவியா said...

எதிரியைப் பார்!

சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடுபற்றி இன எதிரிகள் இல்லாததும் பொல்லாததுமான விஷமச் செய்திகளைப் பரப்பும் வேலையில் மும்முரமாக இறங்கினர்.

மாநாட்டின் நோக்கம் குறித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத் துருவில், தனியீழம் தொடர்பான தீர்மானம் மாநாட் டில் நிறைவேற்றப்படாது என்று சொன்னதுதான் தாமதம் - டெசோ என்று பெயர் வைத்துக் கொண்டு தனியீழம் கேட்கும் தீர்மானம் மாநாட்டில் இடம் பெறாது என்றால் என்ன பொருள் என்று வீராதி வீரர்கள் போலே தோளைக் குலுக்கினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், டெசோவை இரண்டாவது முறை புதுப்பித்த போது தனியீழம் கேட்கும் அதன் குறிக்கோளை வரவேற்றார்களா என்றால், அதுதான் இல்லை.

அப்பொழுதும் ஏறுமாறான விமர்சனங்களில்தான் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை மய்யப்படுத்தி அவர் எது செய்தாலும் அதனைக் கொச்சைப்படுத்துவது என்ற திசையில் எழுதி வந்தனர்.

மாநாடு நடக்காது; தடை செய்யப்பட்டு விடும் என்றனர். அதற்கான முயற்சிகளில் பலரும் ஈடுபட்டனர் என்பதும் உண்மைதான். டெசோ அமைப்பில் பதற்றப்படாத, பக்குவமான முயற்சி களினால், எதிர்ப்பாளர்களின் முகங்களில் கரி தடவப்பட்டு, டெசோ மாநாடு வெகு சிறப்பாகவே அறிவிக்கப்பட்ட இடத்திலேயே அட்டியின்றி நடைபெற்றது.

சில பல காரணங்களால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த தலைவர்கள் வரவில்லை என்றாலும் உலகம் தழுவிய அளவில் பேராளர்கள் பங்கு கொண்டனர்.

சிங்களவரான - இடதுசாரி எண்ணம் கொண்ட டாக்டர் விக்ரம பாகுகர்ண ரத்தினே அவர்களே கலந்து கொண்டு ராஜபக்சேயின் பாசிச நடவடிக்கைகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டினார். மிக அருமையான தீர்மானம் 14 - ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்மீது குறை சொல்ல முடியாத நிலையில் தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் சம்பிரதாயமான முறையில் மாநாடு நடைபெற்றது என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றியா, தோல்வியா என்னும் அளவுகோல் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது எதிரிகளிடத்தில் தான் இருக்கிறது.

ஈழத்திலிருந்து மாநாட்டுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் இலங்கை அரசால் கண்காணிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்துத் தெரிவித் திருந்தது. (அதனைக் கண்டித்துக்கூட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

இலங்கை அதிபர் ராஜபக்சே டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்தும் டெசோவின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகும்.

இதன் மூலம் டெசோ நடத்தும் மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது என்பது வெளிப்படையாகி விட்டதா - இல்லையா?

மாநாடு முடிந்த நிலையில்கூட இலங்கையில் உள்ள சிங்களவர் அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ன கருத்துக் கூறியுள்ளது?

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்திய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக தி.மு.க. இருப்பதால், மகிந்த ராஜபக்சே அரசு இந்த விவகாரத்தை சிறியதாகக் கருதக் கூடாது.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்மீது கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அய்.நா.வில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட தனியீழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதனைப் பார்க்க வேண்டும் என்று அந்த அமைப்புக் கூறியுள்ளதே!

எதிரிகள் நம்மைச் சரியாகப் புரிந்து கொண் டுள்ளனர். ஆனால் இங்குள்ளவர்களோ டெசோ மாநாடு தோல்வி என்கின்றனர். இவர்களை எது கொண்டு சாற்றுவதோ! 16-8-2012

தமிழ் ஓவியா said...

பாலிமர் தொலைக்காட்சியில் அனல் பறக்கும் விவாதத்தில் தமிழர் தலைவர்

19.8.2012 ஞாயிறு இரவு 9 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்கான நிகழ்ச்சியில் A.L. கண்ணனின் அனல் பறக்கும் விவாத அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் சூடும் - சுவையும் நிறைந்த பதில்கள் ஒளிபரப்பப்படும்.

தமிழ் ஓவியா said...

ஈரேழு லோகமாம்!



கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்.

ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா? உபந்நியாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

மற்றொரு வேண்டுகோள்: அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர்வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.

-புரட்சிக் கவிஞர் (பாரதி தாசன் கதை: பக்கம்:100)

தமிழ் ஓவியா said...

அப்பா, ஒரு சந்தேகம்!



மகன்: ராஜ கோபுரத்தின் முன்னேயே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?

தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு

மகன்: சாமி நெருப்பு பிடிக்காமல் பார்த்துக் கொள்ளாதா?

தகப்பனார்: (மகனை முறைத்துப் பார்க்கிறார்)

மகன்: (பயந்து கொண்டு) அப்பா.

தகப்பனார்: என்னடா?

மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.

தகப்பனார்: சரி என்னத்தை கேட்கப்போற?

மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?

தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம் இவைகளை கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்.

மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?

தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்து விட்டு மறு வேலை பார்க்கிறேன்.

- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.