Search This Blog

27.8.12

திராவிடம் என்பது ஆரியத்தை வென்று நம்மை நாம் மீட்டுக் கொள்வது


திராவிடர் கழகம் பிறந்த நாள்!


இன்று ஒரு பொன்னாள் - தமிழர் வரலாற்றில் திருப்பம் தந்த திருநாள்! ஆம், இன்றுதான் சேலம் மாநகரில் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டப்பட்ட சூரிய வெப்ப நாள் (1944).

தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் தீர்மானம் முன்மொழியப்பட்ட நாள்.

ஆரிய தர்மம் என்பது திராவி டனுக்குச் சிறிதும் பொருந்தாது என்பதை எந்தத் திராவிடனும் மறுக்க முடியாது - என்றார் தந்தை பெரியார்.

(நெல்லை திராவிடர் கழக மாநாட்டில் தந்தை பெரியார், குடிஅரசு, 9.2.1946)

இதற்குள் திராவிடர் கழகத்தின், திராவிட இனத்தின் அனைத்துத் தத்துவமும் அடங்கிவிடவில்லையா?

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப் பிலிருந்து அனைத்துத் துறைகளிலும், நிலைகளிலும் மீட்கும் இயக்கம் எது?

திராவிட நாட்டில் புகுந்த ஆரியன் (பார்ப்பான்) சுவாமியாய் ஆகிவிட்டான். பணம் திரட்ட வந்த மார்வாடி சவுகார், சேட்டு ஆகி விட்டான். இவர்கள் இருவருக்கும் உதவி செய்வதாக ஒப்பந்தம் பேசிக் கொண்டு ஆட்சி நடத்தவந்த பிரிட்டீஷ்காரன் துரையாகிவிட் டான். இந்நாட்டுப் பழங்குடி மக்களான குடிமகனான திராவிடனாகிய நாம் சூத்திரன் நாலாம், அய்ந்தாம் வருணத்தவன், அடிமை என்று இழிமகனாக ஆக்கப்பட்டு விட்டோம். இனி சிறிதும் சகித்து இருக்கக் கூடிய காரியம் அல்ல. தேசியம், சுயராஜ்யம், சட்ட சபை, மகாத்மா காந்தியார் உபதேசம் என்பவை களெல்லாம் நம் முயற்சியைக் கெடுக்க வந்த (தபசைக் கலைக்க வந்த மோகினிகளாகும்) தந்திரங் களாகும்.

உண்மையில் இப்பொழுது நமக்கு முதலாவதாக வேண்டியது நமக்குள் நாம் ஒன்றுபடுவதே யாகும். அது இல்லாமல் ஒரு அளவும் நம்மால் விடுதலையோ, முற்போக்கோ பெற முடியாது. இதற்காக எந்த உருவத்திலாவது எந்தத் தலைமையிலாவது ஆரியம் இருந்தால் முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள். (அதே உரை, குடிஅரசு, 9.2.1946).

இதற்கு விளக்கமும் தேவையோ! புத்தர் இயக்கத்தைச் சிதைத்து ஆரியம் தலைமை தாங்கியதிலிருந்து, திராவிட இயக்கத்தைச் சிதைக்க ஊடுருவல் கொண்ட இந்தக் காலம்வரை நமது இனத்தின் பண்பாட்டுக்கு, (தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்பதை மாற்றியதை எடுத்துக்கொள்ளலாமே!) முற்போக்குக்கு (கோவில் புனருத் தாரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எடுத்துக்கொள்ளலாமே!) கல்வி வளர்ச்சிக்கு (சமச்சீர்க் கல்வி எதிர்ப்பை எடுத்துக்கொள்ளலாமே!) ஏற்பட்டுவரும் கேடுகளைக் கணக்கில் கொண்டால் நம் பகுத்தறிவுப் பகலவன் கணிப்பைக் கச்சிதமாய்ப் புரிந்துகொள்ள முடியுமே!

நமக்கு முதலாவதாக வேண்டியது நாம் ஒன்றுபடுவதே என்றார், திராவிடத்தை முன்னிறுத்திய தந்தை பெரியார்.

இப்பொழுதோ ஒரு கும்பல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஆரியத்துக்குக் கால் கழுவிவிடும் தொண்டை தலைமேல் தூக்கிப் போட்டுக்கொண்டு திரிகிறது.

திராவிடம் என்பது ஆரியத்தை வென்று நம்மை நாம் மீட்டுக் கொள்வது - இனப் போராட்டம் இன்று, நேற்று அல்ல - இராமாயண காலத்திலிருந்தே! அதனை அதே பெயரைக் கொண்ட (இராம+சாமி) தலைவரின் சகாப்தத்தில் வெற்றி காணவேண்டாமா? திராவிடர் கழகம் பிறந்த இந்நாளில் சிந்திப் போமாக! செயல்படுவோமாக!!

                       -----------------------”விடுதலை” 27-8-2012

12 comments:

தமிழ் ஓவியா said...

லகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியா? தமிழர் தலைவர் கண்டனம்


நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரி களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இம்மாதம் 19 ஆம் தேதிமுதல் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

தாம்பரம் விமானப் படையில் பயிற்சி

சென்னை - தாம்பரம் விமானப் படை நிலையத்தில் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதை எதிர்த்து தமிழ்நாட்டில் வலுவான குரல் கிளம்பியதையடுத்து தாம்பரத்திலிருந்து பெங்களூருவுக்குப் பயிற்சி அளிப்பதை மாற்றினர். அதுவே ஒரு தவறான முடிவாகும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த - கொன்று குவிக்க இருக்கிற ஒரு இராணுவத்துக்குப் பயிற்சியைத் தாம்பரத்தில் அளித்தால் என்ன? பெங்களூருவில் அளித்தால் என்ன? இது ஓர் ஏமாற்று வேலைதான்.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல மீண்டும் இலங்கை இராணுவ அதிகாரி களுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?

தமிழ்நாடு அரசின் சார்பிலும், முக்கிய எதிர்க்கட்சிகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தும், மத்திய அரசு இப்படி நடந்துகொள்வது தமிழர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்துவதாகும்.

டெசோ மாநாட்டுத் தீர்மானம்

12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டிலும் இத்தகைய பயிற்சியை அளிக்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஈழத் தமிழராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி - அவர்களை அலட்சியப்படுத்தும் தன்மையில் நடந்துகொள்வதாகவே கருதுகிறோம்.

மத்திய அரசின் நோக்கம் என்ன?

அந்த நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் வெளிப்படை யாகக் காட்டிக்கொள்ள மத்திய அரசு கடமைப் பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படும் பிரச்சினையிலும் மத்திய அரசு பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்பதும் வெளிப் படை.

உலகத் தமிழர்கள் மத்தியில் உருவாகிவரும் சிந்தனை;

சுண்டைக்காய் நாடான இலங்கையிடம் இந்திய அரசு ஏன் இப்படி நடந்துகொள்ளவேண்டும்? எந்தக் காரணத் துக்காக அப்படி நடந்துகொண்டாலும் சரி, ஈழத் தமிழர் களுக்கும் (இந்தியாவின் தெற்கேயுள்ள மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தமான தமிழின மக்களின் தொப்புள்கொடி - ரத்த உறவுக்காரர்கள்) தமிழ்நாட்டுத் தமிழர்களான மீனவர்களுக்கும் இலங்கைப் பயங்கரவாத அரசால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கை களுக்கு எந்த வகையில் (இராணுவப் பயிற்சி உள்பட) துணைபோகும் வகையில் இந்திய அரசு நடந்துகொண்டு வருவது - உலகத் தமிழர்கள் மத்தியிலே புதிய சிந்தனை களைத் தோற்றுவிக்க வழிவகுக்கக் கூடியதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

31 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திலும்
சேர்த்துக் கொள்க!

எனவே, கழகத் தோழர்களே, வரும் 31 ஆம் தேதியன்று காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு எனும் நான்கு பொருள்களை மய்யப்படுத்தி மாவட்ட தலைநகரங்களில் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களுடன் இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதைக் கண்டிப்பதையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திருவாரூர்
27.8.2012

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

விடுதலையின் பணி!

விடுதலை என்னும் தமிழர்களின் பாது காப்புக் கேடயமான ஏட்டிற்கு அரை நூற் றாண்டு காலம் ஆசிரியராக இருந்து சாதனை புரிந்த ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர் களுக்குப் பாராட்டு விழா - சென்னை பெரியார் திடலில் 25.8.2012 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

1962 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் தனது முதல் தலையங்கத்தை எழுதினார் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (25.8.1962).

வரியில்லாமல் ஆட்சி நடக்குமா? -என்பதுதான் அந்தத் தலையங்கம். அன்று தொடங்கி, ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட தலையங்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 13,499; எழுதப்பட்ட அறிக்கைகள் 1926.

இந்தத் தலையங்கங்களும், அறிக்கைகளும் பல துறைகள் சம்பந்தப்பட்டவை. விடுதலை யின் இந்த எழுத்துகள் எத்தனை எத்தனையோ மாற்றங்களுக்கு விதை ஊன்றி இருக்கின்றன.

ஆட்சியின் ஆணைகள் மாற்றப்பட்டுள்ளன - புதிய சட்டங்கள் பிறப்பிப்பதற்கும் கைமுதல் கொடுத்திருக்கின்றன.

தலையங்கப் பகுதிகளில் சில நேரங்களில் தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளன.

எழுத்துரிமை பறிக்கப்பட்டதற்காக தலை யங்கப் பகுதி வெற்றிடமாக விடப்பட்டதும் உண்டு.

முரசொலி நாளேட்டின் ஆசிரியர் திரு. செல்வம் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்படுவதன் மூலம் எழுத்துரிமை அ.இ.அ.தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டதற்கு விடுதலை ஏடு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதன் அடையாளமாக தலையங்கப் பகுதி வெற்றிடமாக விடப்பட்டது (21.9.1992).
அரசு ஊழியர்களுக்கு இருந்த இரகசிய குறிப்பேடு முறையை எதிர்த்து எத்தனை எத்தனைத் தலையங்கங்கள் தீட்டப்பட்டன! கடைசியில் வெற்றியும் கிடைத்தது.

நுழைவுத் தேர்வை எதிர்த்து எத்தனை எத்தனை நுட்பமான தலையங்கங்கள் - கடைசியில் விடுதலைக்கே வெற்றி! வெற்றி!!

விடுதலையின் வரலாற்றில் அரசு நூலகங் களில் விடுதலை இடம்பெறத் தடை செய்யப் பட்டதுண்டு. 1950 இல் அப்படி தடை செய்யப் பட்டபோது விடுதலையில் ஒரு தலையங்கம் (3.2.1950). தலைப்பு வைக்கோலுக்குள் விடுதலை விளக்கு என்பதாகும்.

ஆட்சியாளர் சுடர்விட்டு எரியும் விடுதலை விளக்கையெடுத்து வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்துவிட்டார்கள். பொதுமக்கள் காண முடியாதபடி, விளக்கை மறைத்து விட்டதாக ஆட்சியாளர் முடிவு என்று எழுதியது.

இப்பொழுதுகூட தமிழ்நாட்டை ஆளும் அ.இ. அ.தி.மு.க. அரசால் விடுதலை அரசு நூலகங் களுக்குப் போடக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் விளைவு 50 ஆயிரம் சந்தாக்கள் தமிழர்களிடம் திரட்டப்பட்டு புதிய வாசகர்கள் கிடைத்துள்ளனர்.

விடுதலைக்குள்ள தனித்தன்மை ஒன்று உண்டு. ஆளும் கட்சியினை எதிர்க்கும் நிலைப் பாடு எடுக்கப்பட்டபொழுதும்கூட, அந்த ஆட்சியில் ஏதாவது நன்மை விளைவிக்கும் காரியங்கள் நடைபெற்றால், அதனை வரவேற்று எழுதிடத் தயங்குவதில்லை.

எதிர்த்து எழுதுவதில் எவ்வளவு வேகம் இருக்குமோ, அதேபோல் ஆதரிக்க வேண்டிய அவசியம் இருந்தால் விடுதலை தன் கண் களை மூடிக்கொள்ளாமல் மனந்திறந்து பாராட்டவே செய்யும்.

அத்தகைய பண்பட்ட விடுதலை தமிழர் இல்லந்தோறும் ஒளிவிளக்காகத் திகழ வேண் டாமா? தமிழர்கள் எண்ணிப் பார்க்கட்டும்! 27-8-2012

தமிழ் ஓவியா said...

நாம் பெற்ற பேறு!



-கலி. பூங்குன்றன்

அரை நூற்றாண்டுக்காலம் விடுதலை ஆசிரியர் பணியில் பயணித்த தலை வருக்கான கொள்கை விழா அது! வெறும் புகழ் ஒலி அங்கு கேட்கவில்லை. கொள்கை சார்ந்த வேட்டு முழக்கங்கள் தான் பெரும்பாலும் கேட்டன.

பிற்பகல் நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு (25.8.2012) நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையுடன் தொடங்கப்பட்டது.

விடுதலை ஆசிரியருக்கான விழா விடுதலையின் முதல் வாசகரான கலை ஞர் தலைமையில் நடப்பது பொருத்தம் தானே என்று எடுத்த எடுப்பிலேயே சொன்னபோது கரவொலிதான்.

முதலில் நான் படிக்கும் ஏடு விடுதலை என்று சொன்னவர் ஆயிற்றே அவர்.

ஆகஸ்டு 25 என்பது திருவாரூரில் 15 ஆவது நீதிக்கட்சி மாநாடு நடைபெற்ற நாள் என்று சொன்னபோதும் ஆரவாரம் தான். அம்மாநாட்டில் - நிறைவேற்றப்பட்ட முற்போக்குத் தீர்மானங்களையும் நினை வூட்டினார்.

தமிழ் ஓவியா said...

விழாவில் பங்கேற்கும் பெருமக்களின் சிறப்பு இயல்புகளைத் தம் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

சு. அறிவுக்கரசு



அறிமுகவுரை யாற்றிய கழகத் தின் செயலவைத் தலைவர் சு. அறி வுக்கரசு அவர்கள் - ஒரு இயக்கத் திற்கு ஏடு இல் லாதது இறக்கை இல்லாத பறவைக்குச் சமமானது என்ற பீடிகையுடன் தன் உரையைத் தொடங்கினார்.

மாணவர் பருவத்தில் கலைஞர் அவர்கள் முரசொலி கையேட்டை நடத்தி யதையும், அதேபோல ஆசிரியர் அவர்கள் கடலூரில் முழக்கம் என்ற கையேட்டை நடத்தியதையும் ஒப்பிட்டுக் கூறினார்.


தமிழ் ஓவியா said...

ரமேஷ் பிரபா



கலைஞர் தொலைக்காட்சி யின் தலைவர் ரமேஷ் பிரபா அவர்கள் கலை ஞர் அவர்கள் வீற் றிருக்கும் ஒரு மேடையில் முத லாவதாகப் பேசும் மேடை இதுதான் என்று குறிப்பிட்ட அவர், அதுவும் பகுத் தறிவு மேடையாக இருப்பது

பெருமைக் குரியது என்ற பீடிகையோடு தன் உரையைத் தொடங்கினார்.
ஒரே சொல்லில் மக்கள் விளங்கிக் கொள்ளும் தலைவர்கள் நம் தலைவர்கள் பெரியார் என்றால் - தந்தை பெரியார் தான். அறிஞர் என்றால் அண்ணாதான். கலைஞர் என்றால் நம் தலைவர்தான். பேராசிரியர் என்றால், அன்பழகன் அவர் கள்தான். அதுபோல, ஆசிரியர் என்றால் நமது விடுதலை ஆசிரியரை மட்டுமே தான் குறிக்கும் என்றபோது பெருத்த கரவொலி!

ஏடு நடத்துவதில் உள்ள சிரமத்தை தந்தை பெரியார் அவர்கள் 2.9.1937 இல் எழுதிய ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டி னார். இந்நிலையில் ஓர் இயக்க ஏடு - விடுதலை ஏடு 78 ஆண்டுகள் நடை பெறுவது அதிசயமே என்றும் கூறினார்.

நமது ஆசிரியர் அவர்கள் வளர்ந்து வரும் உயர் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி பல வண்ணங்களில் விடு தலையை வளர்த்த விதத்தைப் பாராட் டினார்.

தொடக்கக் காலத்தில் கலைஞரும், நமது ஆசிரியரும் மாணவர் சுற்றுப் பயணத்தில் எவ்வளவு வசதிக் குறைவான தன்மையில் பொதுத்தொண்டில் ஈடுபட்ட தையும் எடுத்துக் கூறினார்.

தலைவர்களைப் பார்க்கும்பொழுது, இப்பொழுள்ள அவர்களின் உயர் நிலையை மட்டும் பார்த்துவிடக் கூடாது; அவர்களின் பின்னணியில் உள்ள கடந்த கால கஷ்ட நஷ்டங்களையும் கவனிக்க வேண்டும், தியாகங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் - அப் பொழுதுதான் குறுக்கு வழியில் மேலே வந்துவிடலாம் என்று நினைக்கும் மனப்பான்மை இளைஞர்களை விட்டு அகலும் என்பதுதான் அவர் உரையில் தெரிவிக்கப்படக் கூடிய முக்கிய கருத் தாகும்.

(பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்று எவரும் வியக்கும் வண்ணம் தம் திறமையை வெளிப்படுத்திக் கொண்டுவருபவர் திரு. ரமேஷ் பிரபா. தகுதி திறமை தங்களுக்கே உரித்தானது என்று மார்தட்டும் மனிதர் களுக்கு சவாலாக நம் தமிழர்கள் எழுந்து நிற்கவில்லையா? எம்.பி.ஏ., படித்தவர் மட்டுமல்ல; எம்.பி.ஏ. கல்லூரி ஒன்றையே நடத்தி வருகிறார். கலைஞர் தொலைக் காட்சி செய்தி னுஹஆ ழுனுஞ கணக்கீட்டில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது; அதன் பின்னணியில் ரமேஷ் பிரபா உள்ளார் என்பதையும் வரவேற்புரையில் கலி. பூங்குன்றன் நினைவூட்டினார்).

ஏ.எஸ். பன்னீர்செல்வம்



(ஆங்கில ஊடகத் துறையில் தலைநிமிர்ந்து நிற்கும் தமிழர் ஏ.எஸ். பன்னீர் செல்வம். உலகில் அய்ந்து நாடுக ளில் செயல்பட்டு வரும் தெற்காசிய பானோஸ் நிறு வனத்தின் (ஞயடிள ளுடிரவா ஹளயை) நிருவாக இயக்குநராக இருப்பவர். ஆசிய பத்திரிகையியல் கல்லூரியில் இணைக் கவுரவ ஆசிரியரும்கூட! மனோ தத்து வத்தில் முதுகலைப் பட்டம் பெற் றிருக்கும் இவர் 1998 இல் ஆக்ஸ் ஃபோர்டு பல் கலைக் கழகத்தில் ராய்டர்ஸ் நிறுவனத் தின் ஃபெல்லோவாக இருந்தவர் ஆவார்).

அவர் தன்னுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

விடுதலை ஆசிரியர் அவர்களை நான் சந்தித்ததில் நான்கு கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதுவதற்கான கருப் பொருள்கள் கிடைத்தன.

1. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மடத்தை விட்டு இரவோடு இரவாக தலைமறைவானது.

2. மண்டல் குழுப் பரிந்துரைகள் பற்றியவை

3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்பற்றியது.

4. இந்தியக் கம்யூனிஸ்டுத் தலைவர் தோழர் பி. இராமமூர்த்தி திராவிடர் இயக்கம் குறித்து தெரிவித்த தவறான தகவலுக்கான பதில்கள்.

இந்த நான்கு பிரச்சினைகள் பற்றி தெளிவுபடுத்திக் கொள்ள ஆசிரியர் அவர்களுடன் ஏற்பட்ட உரையாடல் பெரிதும் துணை புரிந்தது என்று குறிப் பிட்டார்.

தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட பொருளா தார வளர்ச்சி குறித்து சரியாகப் பதிவு செய்யத் தவறியதைச் சுட்டிக் காட்டினார். கும்மிடிப்பூண்டி தொடங்கி 30 கிலோ மீட்டருக்கு ஒரு தொழிற்சாலை வளர்ந் துள்ளதையும் எடுத்துக்காட்டினார்.

இவர் உரையில் அமைந்திருந்த கருத் தினை கலைஞர் அவர்கள் தமது நிறைவு ரையில் எடுத்துக்காட்டிப் பேசினார்.

பன்னீர்செல்வம் அவர்களின் உரை யில் பொதிந்திருந்த கருத்துகள் அனை வரையும் புதியதோர் சிந்தனைக்கு உட்படுத்தின என்பதில் அய்யமில்லை.

திராவிடர் இயக்கம் பலவற்றைச் செய்திருந்தும், அவை சரியான வகையில் பதிவு செய்யப்படவில்லை என்ற சோகம் கவனிக்கத் தக்கதே!

ஆனால், பார்ப்பனர்கள் இதில் எப்படி இருக்கிறார்கள்? ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை தொழிற்கல்வி என்று சாதிக்க முற்படுவதையும் கவனிக்க வேண்டும்.

நெருக்கடி காலகட்டத்தில் தணிக்கை அதிகாரிகளான மூன்று பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

ராஜாஜி திணித்தது குலக்கல்வி என்று விடுதலை வெளியிட்டதை சிகப்புக் கோடு போட்டு அழித்துவிட்டு ராஜாஜியின் தொழிற்கல்வித் திட்டம் என்று திருத்தியதையும் இந்த இடத்தில் கோடிட்டுக் காட்டப்படவேண்டும்.

தமிழ் ஓவியா said...


ஜெக்மோகன்சிங் வர்மா



இவர் உத்தரப் பிரதேசம் லக்னோ பல்கலைக் கழகப் பேராசிரியர் நைஜீ ரியா அமெரிக்கப் பல்கலைக் கழகங் களில் ஆசிரியரா கப் பணியாற்றிய வர், சமூக இயலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் - முனைவர் பட்டமும் பெற்றவர்.

சமூகநீதிக் கொள் கையில் அழுத்தம் மிக்கவர்.

அவர் தம் உரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகநீதித் துறையில் பெரியார், வீரமணி, விடுதலை ஆற்றிய, ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

பொன்னீலன்



அகில இந்திய முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் தலைவர் இவர். இவருடைய இயற் பெயர் கண்டேசு வர பக்தவத்சலம். இவரின் தந்தை யார் பெயரான பொன்னீலவடிவு என்பதில் பொன்னீலன் என்பதைத் தம் பெயராகக் கொண்டு எழுதிவரும் சிந்தனையாளர்.

சாகித்ய அகா டமி விருது பெற்ற வர். தமிழ்நாடு அரசு பரிசுகள் பல பெற்றவர் - தஞ் சைத் தமிழ்ப் பல் கலைக் கழகத் திலும் விருது பெற்றவர்.

இவருடைய நூல்கள் பஞ்சாபி, ருசிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளன.

இவர் எழுதிய மறுபக்கம் எனும் நாவல் மண்டைக்காடு கலவரத்தை மய்யப்படுத்தி எழுதப்பட்டது. சங் பரிவார்க் கூட்டத்தின் நச்சு விதைகளை அலசக் கூடியது.

இதனைப் பாராட்டி 2011 டிசம்பர் 27 அன்று வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் கலைஞர் கருணாநிதி அரசியல் அறிவியல் உயராய்வு மய்யத்தின் சார்பில் இவர் பாராட்டப்பட்டு பெரியார் விருது வழங்கிப் பொற்கிழியும் அளிக்கப் பட்டது.

எத்தனையோ விருதுகள் நான் பெற்றிருந்தாலும், சமுதாய உணர்வுள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நான் பெற்ற விருதினைப் பெருமையாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

விடுதலையில் வெளிவரும் கட்டுரை கள், தலையங்கங்களை வெகுவாகப் பாராட்டிய பொன்னீலன் அவர்கள் உல கத்தில் உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும் தாழ்த்தப்பட்டவர் கள்மீது பரம்பரைப் பரம்பரையாகப் படிந்துள்ள அழுக்கை, தீட்டைப் போக்கவே முடியாது என்று சிருங்கேரி சங்கராச் சாரியார் கூறி இருப்பதை விடுதலை தலையங்கத்தில் படித்து அதிர்ந்து போனதாகக் குறிப்பிட்டார்.

நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள எங்களூரில் (மணிக்கட்டிப்பொட்டல்) திராவிடர் கழகம் இல்லாமல் இருந்தது. இப்பொழுது சில இளைஞர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள். எனக்குப் பெருமகிழ்ச் சியைத் தருகிறது என்று உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்.

எழுத்தாளர், இலக்கியவாதியாக இருக்கக் கூடிய ஒருவர் முதலமைச்சராக இருந்தது தமிழ்நாட்டில்தான் என்று கலைஞர் அவர்களைப்பற்றிப் பெருமிதத் துடன் குறிப்பிட்டார்.

ருசியாவுக்குச் சென்றபோது, அந்தக் குழுவுடன் விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்களும் எங்களோடு வந்திருந்தார்.

அப்பொழுது வீதி வழியாக நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது சிலர் வீதிகளைக் கூட்டிக் கொண்டிருந்தனர்.

கிரம்ளின் மாளிகையில் உள்ளவர்கள் எந்த உடையை உடுத்திக் கொண்டு இருந் தார்களோ அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு உடை உடுத்தியிருந்தனர்.

நாங்கள் எல்லோரும் அந்தக் காட்சி யைக் கண்டோம் என்றாலும், ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி குறிப்பிடத்தக்கதாகும்.

அவர்களை ஓடோடிச் சென்று கட்டிப் பிடித்துக்கொண்டார். காமிராவை என் னிடம் கொடுத்து பொன்னீலன், இதனைப் படம் எடுங்கள்! என்று சொன் னாரே - அந்த உணர்வை என்னவென்று சொல்லுவது! என்று அவர் கூறியபோது, கூட்டத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போய் கையொலி எழுப்பினர்.

தமிழ் ஓவியா said...

விடுதலை ஆசிரியர் கி.வீரமணி

பெரியாருக்கு நான் கிடைத்தேன் என்று இங்கே பலரும் சொன்னார்கள். உண்மையைச் சொல்லப் போனால், தந்தை பெரியார்தான் எனக்குக் கிடைத் தார். அவர்மூலம் திராவிடர் தத்துவம் கிடைத்தது, அரிய வாய்ப்பு எனக்கல்லவா கிடைத்தது என்று சொன்னது, புதுமை யானதாகவும், அதேநேரத்தில் உண்மை யாகவும் தெறித்தது.

இந்து தலையங்கத்தை எதிர்த்து எழுது - அதுதான் நம் நிலைப்பாடு என்று தந்தை பெரியார் சொன்னது வேடிக்கைக் காக அல்ல!

மண்டல் குழுப் பரிந்துரை செயல் படுத்தப்படக் கூடிய ஒரு காலகட்டம் அது. அப்பொழுது இந்து என்ன எழுதியது தெரியுமா?

Burry The Mandal Report என்று எழுதியது. விடுதலையில் என்ன எழுதி னோம்?

Hurry The Mandal Report என்று எழுதினோம். அது மிகச் சரியாகவும் இருந்தது என்று ஆசிரியர் அவர்கள் சொன்னபோது பலத்த கரவொலி!

விடுதலையின் வெற்றிக்கு நான் தனி மனிதன் காரணமல்ல, என்னோடு இணைந்து ஊதியம் பாராமல் பணி யாற்றும் சக தோழர்களுக்கெல்லாம் இதில் மிக முக்கியப் பங்குண்டு.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தோழர் அழகுக்கரசு, சுதர்சனம், திராவிட அரசு, நாதன், சிறுவனாக விடுதலை பணிமனையில் நுழைந்து பிறகு ஃபோர்மேன் அளவுக்கு வளர்ந்த ராதா, வெங்கடகிருட்டினன் போன்ற தோழர்களை எல்லாம் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என்று ஆசிரி யர் அவர்கள் குறிப்பிட்டது அவரிடத்தில் குடிகொண்டிருக்கும் நன்றி உணர்வுக் கான எடுத்துக்காட்டாகும்.

மனிதன் யார்? என்ற கேள்விக்குத் தந்தை பெரியார் கூறும் விடை:

நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனா வான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் ரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளே யாகும்!

(குடிஅரசு, 23.10.1943, பக்கம் 7)

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பு மட்டும்தான் பெரியார் கொள்கை என்று நினைப்பவர்கள், தந்தை பெரியார் அவர்களின் ஒழுக்கவியல் பாடத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும். இதன் அடையாளம்தான் மறக்காமல் விடுதலையின் பயணத்தில் தங்கள் பங்கு பணியாற்றிய தோழர்களை ஆசிரியர் நினைவூட்டியதாகும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர்

திராவிடர் இயக்கத்தின் அருமை - அதன் செயல்பாடுகள் - கடந்து வந்த கடும் பாதைகள் - இன்றைக்கு எதிரிகள் நம்மைக் கண்டு அஞ்சும் நிலை, விடுதலை முரசொலியின் எதிர்நீச்சல் பணிகள், பெரியாருக்குப் பிறகு தமது இளவல் ஆற்றிவரும் பணிகள் பற்றியெல் லாம் மானமிகு கலைஞர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.

முத்தாய்ப்பாக பதித்த வரிகள் இதோ!

ஆசிரியர் அவர்கள் மீண்டும் நம் மோடு வந்து இன்றைக்கு அவருடைய அய்ம்பதாவது ஆண்டு விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த விழாவை நடத்துகின்ற அளவிற்கு இருக்கிறார் என்றால், இது நாமெல் லாம் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும் (கைதட்டல்). அத்தகைய பேறு நமக்குக் கிடைத்திருக்கின்றது. அவர் வாழவேண்டும், எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் உண்டு. என்னைவிட இளையவர். இன்னும் நீண்ட காலம் வாழவேண் டும். வாழப் போகிறவர் (கைதட்டல்). அப்படி அவர் வாழ்கின்ற நேரத்தில், தமிழ்நாட்டிற்கு - தமிழ்ச் சமுதாயத் திற்கு, அடித்தட்டு மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பணி யாற்றவேண்டும்.

அந்தப் பணிக்கு நான் இருந்தால், நானும், அவருக்கு உதவியாக இருப்பேன் என்று கூறி, இந்த விழாவில் பங்கு எடுத்துக் கொண்டதை ஒரு பெரும் பேறாகக் கருதி, அவருக்கு என் வாழ்த்துகளை மேலும் மேலும் குவித்து விடை பெற்றுக்கொள்கிறேன் என்ற மானமிகு கலைஞர் அவர்களின் முத் தாய்ப்பான உரை, அங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை மிகவும் நெகிழ வைத்தது - உணர்வுக் கண் ணீரை உகுத்தச் செய்தது.

பெருந்தன்மையும், தன்னடக்கமும், தன் இளவல்மீது வைத்துள்ள அளப்பரிய அன்பும், நம்பிக்கையும், ஆசிரியர் அவர் களின் அருமையையும் உணர்த்தும் உள் ளக் கிடக்கையும் அசாதாரண மானவை!

மக்கள் காட்டும் அன்பும், உற்சாகமும், கொள்கை நழுவாத் தொண்டர்களின் பண்பும், உழைப்பும்தான் நம் தலைவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கான ஊட்டச் சத்தும், அருமருந்துமாகும்! அவற்றை நாம் கொடுப்போமாக!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! 27-8-2012

தமிழ் ஓவியா said...

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (31.8.2012)

(1) வாழ்க வாழ்க வாழ்கவே,
தந்தை பெரியார் வாழ்கவே!

(2) வெல்க வெல்க வெல்கவே,
திராவிடர் கழகம் வெல்கவே!

(3) பணி முடிப்போம்,பணி முடிப்போம்,
தந்தை பெரியார் பணி முடிப்போம்!

(4) படுகொலை படுகொலை
ஈழத்தமிழர் படுகொலை
ஈழத்தமிழர் படுகொலை
படுகொலை படுகொலை
தமிழக மீனவர் படுகொலை
தமிழக மீனவர் படுகொலை
நாதியில்லையா, நாதியில்லையா?
தமிழன் கொல்லப்பட்டால்
தமிழன் கொல்லப்பட்டால்
நாதியில்லையா? நாதியில்லையா?
கேட்க நாதியில்லையா? கேட்க நாதியில்லையா?

(5) ஒரே தீர்வு ஒரே தீர்வு
கச்சத்தீவை கச்சத்தீவை
மீட்பது ஒன்றே மீட்பது ஒன்றே
ஒரே தீர்வு! ஒரே தீர்வு!!

(6) மத்திய அரசே, செயல்படு செயல்படு!
கச்சத்தீவை மீட்டிட
கச்சத்தீவை மீட்டிட
செயல்படு, செயல்படு!!

(7) வஞ்சிக்கப்படுகிறோம்
வஞ்சிக்கப்படுகிறோம்
காவிரி நீர் உரிமையில்
காவிரி நீர் உரிமையில்
முல்லைப் பெரியாறு உரிமையில்
முல்லைப் பெரியாறு உரிமையில்
வஞ்சிக்கப்படுகிறோம், வஞ்சிக்கப்படுகிறோம்
மத்திய அரசே, மத்திய அரசே
தலையிடு, தலையிடு
தமிழர் உரிமையை
தமிழர் உரிமையை
மீட்டுக்கொடு, மீட்டுக்கொடு!

(8) இதிகாசக் கற்பனை ராமனை
இதிகாசக் கற்பனை ராமனை
முன்னிறுத்தி முன்னிறுத்தி
முட்டுக்கட்டை போடாதே
முட்டுக்கட்டை போடாதே
சேது சமுத்திரத்திட்டத்திற்கு
சேது சமுத்திரத்திட்டத்திற்கு
முட்டுக் கட்டை போடாதே
முட்டுக் கட்டை போடாதே!

(9) விஞ்ஞான மனப்பான்மை
விஞ்ஞான மனப்பான்மை
தேவை, தேவை!

(10) மத்திய அரசே, மத்திய அரசே
சேது சமுத்திரத்திட்டத்தை
சேது சமுத்திரத்திட்டத்தை
செயல்படுத்து, செயல்படுத்து
விரைந்து, விரைந்து
செயல்படுத்து, செயல்படுத்து!!

(11) தேவை, தேவை
பதவி உயர்விலும் பதவி உயர்விலும்
தேவை, தேவை
இடஒதுக்கிடு தேவை!

(12) தாழ்த்தப்பட்டோருக்கும்
பிற்படுத்தப்பட்டோருக்கும்
தேவை தேவை
பதவி உயர்விலும், பதவி உயர்விலும்
தேவை தேவை
இடஒதுக்கீடு தேவை!

(13) மத்திய அரசே, மத்திய அரசே
கொண்டு வா, கொண்டு வா
சட்டத்திருத்தம், சட்டத்திருத்தம்
கொண்டுவா, கொண்டுவா!

(14) மத்திய அரசே, மத்திய அரசே
தமிழர்களைக் கொன்று குவிக்கும்
தமிழர்களைக் கொன்று குவிக்கும்
இலங்கை இராணுவத்துக்கு
இலங்கை இராணுவத்துக்கு
பயிற்சி அளிக்காதே
பயிற்சி அளிக்காதே!

(15) போராடுவோம், போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம், போராடுவோம்!

(16) தமிழர் உரிமைகளை
தமிழர் உரிமைகளை
மீட்டிடவே மீட்டிடவே
போராடுவோம், போராடுவோம்
தமிழர் தலைவர் வீரமணி
தமிழர் தலைவர் வீரமணி
தலைமையிலே தலைமையிலே
போராடுவோம், போராடுவோம்
வெற்றி பெறுவோம்
வெற்றி பெறுவோம்!

(17) வாழ்க வாழ்க வாழ்கவே,
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!

-திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

டெசோ தீர்மானத்தால் பலன் இல்லையா? அப்படியானால் ராஜபக்சே ஏன் அலறுகிறார்?



நாகை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வினா நாகப்பட்டினம், ஆக.27- டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் பயன் ஏதும் இல்லை என்று சிலர் கூறு கிறார்களே - அப்படியானால் இலங்கை அதிபர் ராஜபக்சே ஏன் அலறுகிறார்? என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

நாகை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டெசோ மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நாகை அவுரித் திடலில் 26.08.2012 அன்று மாலை 6 மணியளவில் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் நாகை நகர தி.மு.க. செயலாளர் அ. போலீஸ் பன்னீர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தார். கீழையூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.டி.சார்லஸ், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இல. மேகநாதன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கே. பாண்டியன், வேளாங்கண்ணி நகர மன்றத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



திராவிடர் கழகத் தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஈழத் தமிழர் இன்னல்கள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை பற்றி விளக்கவுரையாற்றினார்.

தொடர்ந்து தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் விஜயா தாயன்பன் டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கியும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாடலையும் பாடி உரையாற்றினார்.

நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையில், ஈழத் தமிழர் வாழ் வுரிமை பற்றிப் பேச முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் ஆகிய இருவரை விட யாருக்கும் உரிமை இல்லை. இருவரும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அல்லர். மாறாக செயல்படுத்திக் காட்டக் கூடியவர்கள்.

நாடாளுமன்ற குழுத் தலைவர் தி.மு.க. டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இயங்கோவன், தொல். திருமாவளவன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரும் நானும் இலங்கை சென்று நமது சகோதரர்கள், சகோதரிகள் முள்வேலி முகாம்களுக்குள் படும் இன்னல்களைப் பார்த்து, மூன்று நாட்கள் தங்கி வீடியோ எடுத்த ஆதாரம் அனைத்தையும் கொண்டு வந்து டாக்டர் கலைஞர் அவர் களிடம் கொடுத்து, நம் சகோதரிகள் சொன்ன வார்த்தையான எங் கள் விடியலை ஏற்படுத் துவதற்கு மட்டும் கலைஞரிடம் சொல் லுங்கள் என்ற வார்த் தையைச் சொன் னோம்.

உடனே தமிழக முன்னாள் முதல்வர் இருந்த கலைஞர் அவர்கள் பிரதமரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, 50,000 குடும் பங்களை குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தவர் தான் டாக்டர் கலைஞர் எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

தமிழர் தலைவருக்கு சிறப்பு

தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. பொறுப்பாளர்கள், திராவிடர் கழகப் பொறுப் பாளர்கள், சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தனர்.

தமிழர் தலைவர் உரை

இறுதியாக, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் டெசோ மாநாட்டுத் தீர்மான விளக்க உரை, சிறப்புரை நிகழ்த்தியனார்.

அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது: டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் உலக நாடுகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதை நாடகம் என்று சொல்லுபவர்கள் பார்வை பழுது உள்ளவர்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் அவர்களைப் பற்றித்தான் கவலைப் படுவார்கள். இப்போது தான் டெசோ தீர்மானங்கள் உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

தமிழின அழிப்பு

தீவிரவாதம் என்று சொன்ன அமெரிக்கா, தீவிர வாத அழிப்பு என்று சொன்ன அமெரிக்கா கூட இப்போதுதான், இலங்கை அதிபர் ராஜபக்சே செய்தது தமிழின அழிப்புதான் என்று புரிந்து கொண்டுள்ளார். அய்.நா. சபை மூலம் அனைத்து நாடுகளும், மக்களும் தெரிந்து கொண்டனர். அய்.நா. அவை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்கு அளிக்க இந்திய அரசுக்கு அந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்ததே டாக்டர் கலைஞர் அவர்கள்தான். இந்த வெற்றியின் மூலம் பெருமையைத் தேடித் தந்தவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களின் போர்ப்படைத் தளபதி ஏ.கே.எஸ். விஜயன் போன்றவர்கள்தான். ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு
டெசோ தீர்மானம் உப்பு, சப்பற்ற தீர்மானம் என்று சொல்கிறார்களே! அவர்களின் புத்திக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழி அவர்களுக்குத்தான் பொருந்தும். யாரையும் விமர்சிக்க நான் இவ்வாறு சொல்லவில்லை. அவர்களுக்கு இத்தகைய விமர்சனப் பார்வை கூடாது என்பதைக் கூறுவதற்காகத்தான் இதைச் சொல்லுகிறேன்.

டெசோ மருத்துவம்

டெசோ மாநாடு நடத்தப்பட்டது ஒரு நாடகம் என்று கூறுகிறார்களே- தேவையான நேரத்தில் சம்பந்தப்பட்ட வர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் மருந்துதான் டெசோ. அந்த மருத்துவத்தைக் கலைஞரைத் தவிர வேறு யாரால் செய்ய முடிந்தது? அந்த தீர்மானங்களை விமர்சிப்பவர்கள் அதனையும் தாண்டி ஈழத் தமிழர்களுக்காகச் செயல்படட்டும்! தலை தாழ்த்தி மாலை போட்டு அவர்களை வரவேற்கிறோம்.

இந்த விமர்சனங்களைப் பார்ப்பன பத்திரிகைகளில் எழுதினால், பேசினாலாவது லாபம் கிடைக்கும்.

எங்களுக்கு மதம் மீது நம்பிக்கையில்லை. பைபிளில் புரியாமல் செய்கிறார்கள். மன்னிக்கவும் என்று ஒரு வாக்கியம் உள்ளது. அது போல ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கூட்டப்பட்ட டெசோ மாநாட்டையும் அதன் தீர்மானங்களையும் விமர்சனம் செய்பவர்களை வரலாறு மன்னிக்குமா? டெசோ தீர்மானங்களை எதிர்க்கிறீர்களே! அவற்றுக்கு மாற்றுத் திட்டம் உங்களிடம் ஏதேனும் உள்ளதா? என்ன திட்டம் வைத் திருக்கிறீர்கள் என்று தமிழர்

தலைவர் வினா எழுப்பினார்.

மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றிய அணி, ஈழத் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் அணியாகும். அவற்றை எதிர்ப்பவர்கள் ஈழத் தமிழர்களிடம் உறவோ, பாசமோ, பரிவோ அற்றவர்கள் என்றே கூறலாம்.
ஈழத் தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் மத்திய ஆசியாவில் இருந்து வந்த இனத்தவர்கள்தான் தொல்லை களைக் கொடுக்கிறார்கள். ராஜபக்சே அலறல்!

இந்த டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் சரியில்லை என்று சொல்லுகிறார்களே. அதனால் ஏதும் பயனில்லை என்று சொல்லுகிறார்களே. அப்படியானால் அதைக் கண்டு ராஜபக்சே அலறுவானேன்? சிந்திக்க வேண்டாமா?

மீனவர் வாழ்வுரிமை

என்வீட்டில் நடந்தால் எழவு. உன் வீட்டில் நடந்தால் கல்யாணமா? மீனவர் உயிர் முக்கியமில்லையா? ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு, தமிழக மீனவர் வாழ்வாதாரப் பாதுகாப்பு இரண்டிற்கும் டெசோ தேவை!

என பல தகவல்களை ஆதாரமாக எடுத்துக் கூறி, டெசோ மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி, ஒரு மணி நேரம் எழுச்சி உரையாற்றினார் தமிழர் தலைவர்.

தமிழ் ஓவியா said...

அன்னா ஹசாரேயின் பி.ஜே.பி. முகமூடி கிழிப்பு!

புதுடில்லி, ஆக. 27 - அரசியலில் களம் இறங்கப்போவதாக அன்னா ஹசாரே குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலை யில் பா.ஜ.க.வைக் குறிவைத்து அன்னா ஹசாரே நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து அக்குழுவினரில் முக்கியமானவரான கிரண் பேடி அதிலிருந்து விலகி வரு கிறார். முன்னதாக அவர்கள் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரஷாந்த் பூசன் ஆகிய இருவரும் இப்போராட்டத்தில் கிரண் பேடி கலந்து கொள்வார் என்று கூறியிருந்தனர். ஆனால் கிரண் பேடி கலந்து கொள்ள வில்லை.

இது அக்குழுவினரிடையே ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படையாக காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அய்.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளதாவது:- எதிர்தரப்பு உரிமையை தர மறுக்கும் ஆளும் கட்சிக்கு எதிராகத்தான் முதலில் நாம் போராட வேண்டும் என்கிற என்னுடைய கருத்தை முன்னதாகவே நம் குழுவினரிடம் தெரிவித்திருக் கிறேன்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் பாரதீய ஜனதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடும். எதிர்க்கட்சியினர் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பதில் நான் கவனமாகத்தான் இருக் கிறேன். ஆனால் முதல் குற்றவாளியான ஆளும் கட்சியினர் மீது தான் இப்பொழுது இப்பிரச்சினையை மய்யப்படுத்த வேண்டும்.

இப்படி ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து தரப்பின் மீதும் கருப்பு சாயம் பூசுவது, நாட்டிற்காக இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று மக்கள் மத்தியில் நினைக்க தோன்றாதா?. லஞ்சம் இல்லாத இந்தியாவாக உடனடியாக நாம் மாற்றமுடியாது அதற்காக நாம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா இப்போது அவர்களுக்குள் ஒரு திட்டத்தை வகுக்கவேண்டும்.

ஜன் லோக்பால் மசோதாவில் சி.பி.அய்.க்கு குறைந்த பட்சம் சுய அதிகாரம் வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதா சார்பில் பல்வேறு திருத்தங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்ற மாநிலங்கள வையில் ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. இது குறித்து எங்க ளுடைய கருத்துக்களை பாரதீய ஜனதா கட்சியினரிடையே நாங்கள் பகிர்ந்து வருகிறோம் என்று கூறினார். 27-8-2012