Search This Blog

5.9.08

இதுதான் புண்ணிய ஸ்தலங்களின் யோக்கியதைஇதிகாசங்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும், கடவுள்களைப் பற்றியும் தனித்தனி மகுடமிட்டு "குடி அரசு"வில் எழுதிக் கொண்டு வருவதை வாசகர்கள் கூர்ந்து கவனித்து வாசித்து வருகின்றார்கள் என்றே எண்ணுகின்றேன். அவற்றை எழுதி வருவதன் நோக்கமெல்லாம், ஒரு சில சுய நலக்காரர்கள் தங்கள் நன்மையின் பொருட்டு எவ்வளவு ஆபாசமானவற்றையும், அசம்பாவிதமான வற்றையும் வெகு சாதாரணமானவற்றையும் எழுதி வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தி, அவற்றையே மதம் என்றும், பக்தி என்றும், மோட்சத்திற்கு மார்க்கம் என்றும் பாமர மக்களை நம்பும்படியாகச் செய்து, மக்கள் அறிவையும், சுதந்திரத்தையும், சுயமரியாதையையும், ஒற்றுமையையும் கெடுத்து வருகின்றார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி, மக்கள் யாவரும் சமம் என்பதையுணர்ந்து சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்பது தான்.

மேற்படி சுயநலக்காரர்கள் சிற்சில இடங்களைப் பெரிய புண்ணிய ஸ்தலம் என்பதாக பெயர் கொடுத்து, அவற்றிற்கு ஏராளமான யோக்கியதைகளைக் கற்பித்திருப்பதை, பகுத்தறிவற்ற மூட ஜனங்கள் புண்ணிய ஸ்தல யாத்திரை என்பதாகக் கருதி வெகு பணங்களைச் செலவு செய்து கொண்டு அந்தந்த ஊர்களுக்குப் போய் புத்தியையும், தங்கள் காலத்தையும் பணத்தையும் வீணில் பறி கொடுத்து விட்டு வருவதுடன், தாங்கள் இதுவரை செய்த அக்கிரமங்களும், அயோக்கியத்தனங்களும் இந்த யாத்திரையில் மன்னிக்கப்பட்டு விட்டதாகக் கருதி, மேலும் மேலும் புதிய அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்களையும் செய்ய தைரியமுடையவர்களாக ஆக இடம் கொடுத்து வருகிறது. ஸ்தல யாத்திரை என்று சொல்லப்பட்டு வந்ததானது ஒரு காலத்தில் மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கும் உலக அனுபவப் பயிற்சிக்கும் அனுகூலமாகத் தக்கினதாய் இருந்திருக்கலாம். எப்படியெனில், ரயிலும் போக்குவரத்து வசதியும் இல்லாத காலத்தில் மக்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டிருந்ததால், உலக அனுபவம் தெரிந்து கொள்வதன் பொருட்டு வெளியிடங்களைச் சுற்றிப் பார்த்து வருவதற்காக ஸ்தல யாத்திரை என்பதன் பேரால் போய் வரும் வழக்கம் அனுகூலத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், இப்போது ரயில் வசதி ஏற்பட்டுவிட்டதாலும், சுலபத்தில் ஒவ்வொரு இடத்துச் சங்கதிகளும் தன்மைகளும் பத்திரிகைகளின் மூலமாய் தெரிந்து கொள்வதற்கு அனுகூலமாய் இருப்பதாலும், இப்போது புண்ணிய ஸ்தல யாத்திரை என்பதன்பேரால் அனாவசியமாக மக்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். தற்காலத்திய புண்ணிய ஸ்தல யாத்திரைகளின் யோக்கியதைகளைப் பற்றியும், யாத்திரைக்காரர்களின் யோக்கியதைகளைப் பற்றியும், புண்ணிய ஸ்தலங்களிலுள்ள பண்டாரங்கள், பூசாரிகள், குருக்கள் முதலியவர்கள் யோக்கியதைகளைப் பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களைப் பற்றியும் நாம் அதிகமாக விவரிக்க வேண்டியதில்லை. ஏனெனில், அது பல தடவை குடிஅரசு இதழிலேயே பல தலைப்பின்கீழ் வந்திருக்கின்றது. ஆதலால், அந்த ஸ்தலங்களின் பெருமைகள் என்பவற்றைப் பற்றி மாத்திரம் எழுதலாம் என்று இந்த வியாசம் தொடங்குகின்றேன்.

பண்டரிபுரம் முதல் முதல் பண்டரிபுரம் என்பதன் யோக்கியதையைப் பற்றி எழுதத் துணிகின்றேன்.


பதும புராணத்தில் உமாதேவியின் அறிவு பிரகாசிக்கும் பொருட்டு சிவபெருமான் சொல்லியருளிய பண்டரிபுரத்தைப் பற்றிய கதையை ஸ்ரீதரர் விஸ்தரிக்கிறார். கைலாச பர்வதத்தில் ஒரு காலத்தில் எழுந்தருளியிருந்த போது உமாதேவியார் சிவபெருமானை நோக்கி, நிலவுலகில் பண்டரிபுரத்தில் திருமால் நித்யவாசம் செய்வது யாது காரணத்தால்? என்று கேட்டதாகவும், அதற்கு சிவபெருமான் சொல்வதாகவும் கதை ஆரம்பிக்கப்படுகிறது.1. கொடி போல்பவளே! திருமாலானவர் வைகுந்தத்தில் வீற்றிருக்கும் காலத்தில் இந்திராணி அவரைக் கண்டு மோகித்து இறைவனே! நான் உமது மடியிலிருக்க வேண்டுமென்று அபேட்சிக்கிறேன் என்று பிரார்த்திக்க, திருமால் இரக்கங்கொண்டு, நீ பூலோகத்திற்குப் போய் 60,000 வருடம் தவம் செய்தால் நான் துவாரகாபுரியில் கிருஷ்ணாவதாரம் செய்து உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்வேன் என்று சொல்ல, இந்திராணி அப்படியே நிலவுலகில் சென்று 60,000 வருடம் தவம் செய்து, கோகுலத்தில் ராதையாகப் பிறந்து வளர்ந்து, திருமால் கிருஷ்ணனாக அவதரித்து எழுந்தருளியிருக்கும் துவாரகாபுரிக்குச் சென்று அவரை வணங்க, கிருஷ்ணன் ராதையை இன்னாளென்று அறிந்து வாரியெடுத்து தன் மடிமீது வைத்துக் கொள்ள, இதைக் கண்ட கிருஷ்ணனின் மனைவியான ருக்மணி கோபங்கொள்ள, அதைக் கண்டு ராதை கிருஷ்ணனை விட்டு நீங்கி திண்டீரவனத்திற்குப் போய் கிருஷ்ணன் தனக்கு கணவனாக வேண்டுமென்று தவம் செய்ய, கிருஷ்ணன் ருக்மணியை விட்டு விட்டு துறவி வேடம் பூண்டு ராதையைத் தேடித் திரிந்து கடைசியாக திண்டீரவனம் என்கின்ற ஓர் வனத்தில் அவளைக் கண்டு பிராணநாயகி! என்னைத் தனியேவிட்டு இக்கொடிய வனத்திற்கெவ்வாறு வந்தனை? என்று கேட்க, ராதையானவள் கிருஷ்ணனைப் பார்த்து, உன்னைப் பார்த்தாலே நீ ஒரு வஞ்சகனென்று தோன்றுகிறது; ஆதலால், நீ இங்கு நில்லாமல் ஓடிப் போ என்று சொல்ல, கிருஷ்ணன் மதிமயங்கி தன் கைத்தடியை முழங்கால்களினால் இடுக்கிக் கொண்டு, இடுப்பில் கையை வைத்து, மூக்கின் முனையில் தன் பார்வையை வைத்து விருப்பத்தோடு இன்றைய வரையும் அதாவது 28 துவாபரயுக காலம் ராதையின் முன் நின்கின்றான். மேலும் பார்வதி!2. திண்டீரனென்ற கொடிய அசுரன், சூரியனைத் தன் தேர்மீது ஏறிச் செல்லவொட்டாமல் தடுத்து, தொந்தரவு செய்து கொண்டிருந்தான். ஆகவே, தேவர்கள் திருமாலையடைந்து இந்தச் செய்தியை விண்ணப்பஞ் செய்ய, திருமால் மல்லிகார்ஜூனனாக் சந்திரன் என்னும் அரசனிடம் பிறந்து வளர்ந்து வேட்டையாட, மேற்படி திண்டீரனென்னும் அசுரன் வசித்த திண்டீரவனம் சென்று அவனோடு ஆயிரம் வருஷம் போர் செய்தும் அவன் தோற்காமலிருக்க, கடைசியாக லோக தண்டம் என்னும் கதாயுதத்தைக் கைக்கொண்டு அவனையடித்து பூமியில் வீழ்த்தினார். அவன் உயிர்விடும் போது ஸ்ரீஹரீ என்று உச்சரிக்க மல்லிகார்ஜுனன் உடனே திருமாலாக மாறி அவ் வரசனை நோக்கி, உன்னை வேண்டிய வரங்களைக் கேட்டுக் கொள் என்று அருள, அவ் வசுரன் இவ் வனம் லோகதண்டமென்று விளங்கவும், இதில் அழகிய நகர் ஒன்று உண்டாக்கி, நான் இறந்த இடத்தில் என் பேரால் ஒரு தீர்த்தமுண்டாக்கி, அதனிடத்தில் உன் கதாயுதத்தை நிறுத்தி, அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி, அக் கதாயுதத்தை ஆலிங்கனம் செய்வோர்களுடைய பாபங்களை நிவர்த்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, திருமாலும் அவ் வரத்தைக் கொடுத்து அசுரனுக்கு வைகுண்ட லோகத்தை அளித்தார். அன்று முதல் அந்த வனமானது லோகதண்டம் எனவும் பெயர் பூண்டு விளங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், கேளும் பார்வதி!

3. அவ்வனத்தில் ஜன்ஹூ என்று ஒரு வேதியர் ஸாத்யகி என்பவளோடு இல்லறம் செய்து கொண்டு வருங்காலத்தில், புத்திரரில்லாமையால் நெடுங்காலம் தவம் செய்து புண்டலீகா என்ற ஒரு அழகிய மைந்தனைப் பெற்றார். புண்டலீகன் வயதடைந்தபின் அவனுக்கு மணம் செய்வித்து மகிழ்ந்திருந்தனர். புண்டலீகனோ வெகு துஷ்டனாகி தாய் தந்தையரை வைது, அடித்து, துரத்தி விட்டு தன் மனைவியோடு தனியே வாழ்ந்திருந்தனன். துரத்தப்பட்ட தாய் தந்தையர் காசிக்குப் போக எண்ணிப் புறப்பட்டனர். புண்டலீகனும் அவனது மனைவியும் குதிரை மீதேறிக் கொண்டு பின் தொடர்ந்தனர். தாய் தந்தையர் நடக்கமாட்டாமல் தள்ளாடிக் கொண்டு போவதைப் பார்த்தும் புண்டலீகனுக்கு மனமிரங்காமல் பார்த்துக் கொண்டே போய் காசிக்கருவியில் ஒரு சோலையில் குக்குடர் என்னும் ஒரு முனிவரது ஆசிரமத்தின் அருகில் இறங்கினான். அந்தக் குக்குட முனிவர், தம் தாய் தந்தையரையன்றி வேறு தெய்வமில்லை என்று துணிந்து, இரவும் பகலும் அவர்களுக்கு சேவை செய்பவர். இப்படிப்பட்ட அவரது ஆசிரமத்தில் புண்டலீகன் அன்றிரவு தங்கியிருந்தான். அப்படி இருக்கையில், கோரரூபங் கொண்ட மூன்று பெண்கள் நள்ளிரவில் அவ் வாசிரமத்திற்குள் புகுந்து, அதிலுள்ள குப்பைகளைக் கூட்டி தரையை மெழுகி கோலமிட்டு, அலங்கரித்து, ஒரு கணத்தில் தம் கோரரூபம் நீங்கி சவுந்தர்யவதிகளாய் வெளி வந்தனர். இதைக்கண்ட புண்டலீகர் இவர்களை பேய்களோ, தேவதைகளோ என எண்ணி ஆச்சரியமும் பயமும் கொண்டு, கடைசியாக ஒருவாறு பயந்தெளிந்து அம் மாதர்களிடம் அணுகி நீங்கள் யாவர்? என்று கேட்க, அவர்களில் ஒரு மாது அடபாவி! நீ முற்பிறவிகளில் செய்த நல்வினைப் பயனே உன்னை இம்முனிவரிடம் கொண்டு வந்து வட்டது. அவரைக் கண்ட புண்ணியத்தால் எங்களையும் கண்டாய். இனி நீ எந்தப் பாவமும் தொடரப் பெறாதவனாய் பரிசுத்தனாகக் கடவை! நாங்கள் கங்கை, காளிந்தி, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் இந்த உருக்கொண்டு வந்திருக்கின்றோம். எங்களிடத்தில் மூழ்குவோருடைய பாவங்களையெல்லாம் நாங்கள் ஏற்று அதனால் கோர ரூபங்கொண்டு, அந்த ரூபத்தை, பரிசுத்த ஆத்மாவாகிய இந்த குக்குட முனிவருக்கு ஊழியம் செய்வதனால் மாற்றி நல்ல ரூபங்கொண்டு போகிறோம். இவர் தமது தாய் தந்தையரை வழிபடுகிற புண்ணியமே எங்கள் பாவத்தை போக்கிற்று என்று சொல்லிச் சென்று விட்டனர். பின்பு புண்டலீகர் குக்குடரிடம் விடை பெற்றுக் கொண்டு தாய் தந்தையரைத் தேடினார். தேடிக் கண்டு அவர்களைத் தமது குதிரை மீதில் ஏற்றிக் கொண்டு, புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குவித்து, தம் ஊருக்கு வந்து தாமும் தம் மனைவியும் அத்தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள். இப்படியிருக்க, பூர்வயுகத்தில் விருத்திரன் என்பவன் தேவராஜனாகிய இந்திரனைக் கொல்ல நினைத்து பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். இதையறிந்த இந்திரன் பாதாள லோகம் சென்று தன் வஜ்ராயுதத்தால் அவன் தலையைச் சேதித்து வீழ்த்தினான். அப்பொழுது விருத்திரன் தவம் செய்யும் போது தலையை அறுத்த பாவத்தால் நீ செங்கல்லாய்ப் பூமியில் விழக் கடவை என்றான். இந்திரன் செங்கல்லாய் விழுமுன்னே திருமால் மகிழும்படி தோத்திரம் செய்ய, திருமால் மகிழ்ந்து, தேவராஜனே, நான் புண்டலீகாஸ்மரத்தில் வந்து செங்கல்லுருவாய்க் கிடக்கிற உன் மேல் அடிவைத்து உன்னைப் பூர்வரூபமாய்ச் செய்கிறேன். அஞ்சவேண்டாம் என்றனர். அன்று முதல் இந்திரன் புண்டலீகர் வசிக்கும் திண்டீரவனத்தில் செங்கல்லுருவாய்க் கிடந்தான். இப்படியிருக்க, திருமால், புண்டலீகர் தாய் தந்தையரை வழிபட்டுக் கொண்டிருக்குஞ் சமயம் அவருக்குப் பின்புறம் வந்து நின்றார். அப்போது திருமாலின் ஒளி புண்டலீகரின் தந்தையாரின் பாதத்தில் படவே, புண்டலீகன் திரும்பிப் பார்த்து அருகிற் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்தெறிந்து இதன்மீது சற்று நேரம் நில்; என் வேலையை முடித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு, தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்துவிட்டு திருமாலிடம் வந்து வணங்கினான். திருமால், உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று புண்டலீகனைக் கேட்க, அவன் தேவரீர்! இந்த இடத்தை என் பெயர்ச் சார்பினால் பண்டரிபுரமென்ற பெயருடையதாய்ச் செய்து, இத்தலத்தில் எல்லாவற்றிலும் சிறந்த தீர்த்தமொன்றையுமுண்டாக்கி, அதில் மூழ்கி உன்னை வணங்குவோர் யாவரும் பாவ விமோசனம் அடைந்து, பரிசுத்தராகும்படி இத்தலத்தில் தேவரீரும் பாண்டுரங்கன் என்னும் நாமத்துடன் நித்யவாசம் செய்ய வேண்டும் என்று வேண்ட, திருமாலும் அவ் வரத்தையருளினார். திருமாலின் அடியில் செங்கல்லாகக் கிடந்த இந்திரன் நற்பதவியடைந்து தேவதச்சனை வரவழைத்து அத்தலத்தில் ஒரு அழகிய நகரமும், விமானமும் செய்யச் செய்து திருமாலை மகிழ்வித்தான். அந் நகரே இப்பண்டரிபுரம்; திருமாலே இப்பண்டரிநாதன், சந்திரபாகை என்னும் நதியே இத் தீர்த்தம் என்று சிவபெருமான் சொன்னாராம்.

மேல்கண்ட வரலாறுகளிலிருந்து, திண்டீரவனமென்ற ஒரு வனம் எப்படி லோக தண்டமென்றும், பண்டரிபுரமென்றும் பேர் பெற்றன என்பதும், திருமால் பாண்டுரங்கன் என்று பேர் பெற்றனர் என்பது காணக்கிடக்கின்றதுடன், திருமால், தேவராஜனாகிய இந்திரன், இந்திராணி முதலிய நம் இந்து தெய்வங்களெனப்படுபவைகளின் யோக்கியதையும் வெளியாகின்றது. தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய இந்திரனுடைய மனைவி இந்திராணி தன் கணவனை அலட்சியம் செய்து விட்டு திருமாலைக் கண்டு மோகிக்கிறாள். லோக ரட்சிகராகிய திருமாலும் தமது மனைவி லட்சுமியை அலட்சியம் செய்து விட்டு, பிறன் மனைவியாளாகிய இந்திராணியைத் தம் மடிமீது எடுத்து வைத்துக் கொள்கிறார். அவளுக்காக மாறுவேடம் பூண்டு காமப்பித்தேறி அலைகிறார். அப்பித்தால் 28 துவாபர யுக காலம் இந்திராணியின் முன்னிலையில் மதிமயங்கி நிற்கிறார். என்ன பரம்பொருளாகிய திருமால், தேவராஜன் மனைவி இந்திராணி இவர்களின் ஒழுக்கம்! கேவலம் ஒரு அசுரனைக் கொல்ல திருமால் ஆயிரம் வருடம் போர் செய்தும் வெல்ல முடியாமல், கடைசியாக சூழ்ச்சியாக தம்மிடமுள்ள லோக தண்டத்தால் அவனைக் கொன்றார் என்றால் எல்லாம் வல்ல திருமாலின் சக்தியும் நேர்மையுந்தான் என்னே! ஆயிரம் வருடம் போர் செய்தும் தம்மால் வெல்ல முடியாத ஒருவருக்கு திருமால் வைகுண்டபதவி அளித்தார் என்பது கொஞ்சமும் பொருந்தாது என்பதை நாம் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. கங்கை, காளிந்தி, சரஸ்வதி ஆகிய நதிகளில் குளித்தவர்களுடைய பாவங்களையெல்லாம் அந் நதிகள் ஏற்றுக் கொள்கின்றன என்பதும், அப்படி குளித்து தம்மைப் புகழ்ந்தவர்களுக்கெல்லாம் திருமால் முக்தி அளித்தார் என்பதும் உண்மையென்று நம்பினவர்கள், என்ன பாவம் செய்தாலும், கங்கையில் மூழ்கி திருமாலைப் புகழ்ந்துவிட்டால் அப்பாவங்களெல்லாம் ரத்தாகி முக்தி வந்துவிடும் என்று மேலும் மேலும் அக்கிரமங்கள் செய்வார்களா, மாட்டார்களா? நிற்க;


தேவராஜனாகிய இந்திரனுடைய யோக்கியதையைப் பாருங்கள். அவன், விருத்திரன் கண்ணை மூடிக் கொண்டு தவம் செய்து கொண்டிருக்கிறபோது அவனை வஜ்ராயுதத்தால் அடித்துக் கொல்கிறான். இப்படிப்பட்ட கொடும்பாதகன் திருமாலைப் புகழ்ந்து, விருத்திரன் கொடுத்த சாபத்தைப் போக்கிக் கொள்கிறான்! ஆச்சர்யம்! பாவமன்னிப்பு டிக்கட்டும் மோட்சலோக டிக்கட்டும் இவ் இந்து மதத்தில் கிடைப்பதுபோல வேறு எந்த மதத்திலும் இவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. செங்கல், நதி முதலியவை மனிதர்களாகவும், மனிதர்கள் நதி, கல் முதலியவையாகவும் திடீர் திடீரென்று மாறுகின்றனர். இவையெல்லாம் ஆதாரமாகக் காட்டப்படும் இந்துமத கடவுள்கள், புராணங்கள் - முதலியவற்றையெல்லாம் நம்பாவிட்டால் நாத்திகமாம்! மேற்கண்ட கதைகளை ஆதாரமாகக் கொண்ட பண்டரிபுரத்திற்குத்தான் நம் பாமர மக்கள் - பகுத்தறிவில்லா மக்கள், லட்சக்கணக்கான ஒவ்வொரு வருடமும் பிச்சையெடுத்துக் கொண்டாவது போய் விடுகிறார்கள். இப்படிப் போய் வருவதில் இவர்கள் செலவிடும் காலமும் பணமும் கணக்கிடப்பட முடியாது. அரிய காலத்தையும் பொருளையும் செலவிடுவதன்றி, ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி ஒருவரையொருவர் தழுவிக் கொள்ளலாகிய ஒழுக்கக் குறைவுகளுக்கும் உட்பட்டு, சீதோஷ்ண மாறுதலினாலும், ஆகார மாறுதலினாலும் நோய்வாய்ப்பட்டு, ரயிலில் இடிபட்டு, எல்லா உணர்ச்சியுமற்று, கோவிந்தா! கோவிந்தா! என்ற வாய் வார்த்தையோடு ஊர் வந்து சேருகிறார்கள். அந்தோ! இப்பண்டரிபுர யாத்திரைக்குச் செலவிடும் காலத்தையும் பணத்தையும் ஏழை மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்குமான கல்விக்குச் செலவழித்தால் பண்டரிநாதன் நம் கண்ணைக் குத்திவிடுவானா? பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

பண்டரிபுரம் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான ஸ்தலம். அந்த ஸ்தல புராணத்தில் ஒரு சமயம் அந்த முக்கியத்துவத்திற்கு ஏற்ற காரணம் ஏதாவது குறிப்பிட்டிருக்கக் கூடுமோ என்பதாக சந்தேகப்படக் கூடுமானாலும், வைணவ பக்தர்களின் சரித்திரத்தைப்பற்றிச் சொல்லும் பக்த விஜயம் என்னும் புஸ்தகத்தின் சுருக்கமாகிய பக்த லீலாமிர்தம் என்னும் புத்தகமானது, சைவர்களுக்கு எப்படி சைவ பக்தர்களின் சரித்திரத்தைச் சொல்லக்கூடியதான சைவ புராணமாகிய பெரிய புராணமோ, அதுபோல் - ஏன், ஒரு விதத்தில் அதைவிட முக்கியமானதென்று கூட சொல்லலாம். எப்படி எனில், பெரிய புராணம் என்பது சுந்தரமூர்த்தி சுவாமி என்கிற ஒருவர் பாடிய ஒரு பாட்டிலிருந்த பக்தர்களின் பெயரைத் தெரிந்து அதற்கு ஆதாரமாக நம்பியாண்டார் நம்பி என்பவர் பாடிய ஒரு சில - அதாவது ஒரு நூறு பாட்டைக் கொண்டு நாலாயிரத்துச் சில்லறைப் பாட்டுகளாக்கி, அவற்றிற்கு வேண்டிய சங்கதிகளை தமது சொந்த அபிப்பிராயமாக நுழைத்துப் பாடிய புஸ்தகமாகும். அதுவும் குற்றமற்ற நூல்களின்மீதும் உள்ள துவேஷத்தாலும் தமது சமயவெறியாலும் கற்பிக்கப்பட்டது என்றுகூடச் சொல்ல இடமுள்ளதாகிய நூல். பக்த விஜயமோ அப்படிக்கில்லாமல், ஏதோ ஒரு முனிவர் ஏதோ ஒரு ஆசாமிக்குச் சொன்னதாகவும் எழுதிய புஸ்தகம். ஆனதால், சேக்கிழார் என்கின்ற ஒரு மனிதன் சொன்னதைவிட, சிவன், முனிவர் என்கின்றவர்கள் சொன்னது என்பது உயர்ந்தது என்பதில் இவற்றை நம்பும் பக்தர்களுக்கு சிறிதும் சந்தேகமிருக்க நியாயமில்லை. எனவே, இப்பேர்பட்ட புஸ்தகத்தில் உள்ளதையே தான் எடுத்து எழுதி இருக்கிறதே ஒழிய மற்றபடி நமதபிப்பிராயம் என்பதல்ல. ஜகநாதம் ஜகநாதம் என்பதைப்பற்றி சிறிது ஆராயலாம். ஜகநாதம் என்பது இந்தியாவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் மிக முக்கியமானது என்று சொல்லப்படுவது - இந்துக்கள் என்போர்களில் தென்னாட்டில் உள்ள சைவர்களில் யாரோ ஒரு சிலரால் மதத்துவேஷம் காரணமாக ஜகநாதம் ஒரு சமயம் அலட்சியமாகக் கருதப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலோராலுமே முக்கிய ஸ்தலமாகக் கருதப்படுவது. அந்த ஸ்தலத்தின் முக்கியதுவத்திற்கு உதாரணம் என்னவென்றால், அந்த ஜகநாதம் என்கின்ற ஊரின் எல்லைக்குள் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்கு உதாரணமாக அந்தக் கோயில் பூஜை பண்ணுகின்றவர்கள் அந்தப் பக்கத்திய நாவிதர்கள். அவர்கள் குளத்தருகில் அடைப்பத்துடன் நின்று கொண்டு சவரம் செய்வார்கள். பிறகு கோயிலில் பூசாரியாகவும் இருப்பார்கள். அந்தக் கோயிலில் பூசை செய்யும் உரிமையே அந்த ஊரிலுள்ள நாவித வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உண்டு என்கின்றார்கள். அங்கு சுவாமிக்கு முன்னால் சாப்பாட்டை மலைபோல் குவித்து ஆராதனை செய்வார்கள். அந்தச் சாதத்தை பூசாரிகள் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டு வெளியில் வந்து விற்பார்கள். யாத்திரைக்காரர்கள் யாராயிருந்தாலும் அதை வாங்கிச் சாப்பிட வேண்டும். மற்றபடி கடையிலும் சாதத்தை சட்டியில் வைத்து விற்பார்கள். ஜாதி வித்தியாசம் என்பதில்லாமல் யாரும் வாங்கிச் சாப்பிடுவார்கள். தவிர, அந்த ஸ்தல எல்லைக்குள் எச்சில் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பார்கள். இலையில் உள்ள சாப்பிட்ட மீதியை எடுத்து திரும்பவும் சட்டிக்குள் போட்டுக் கொள்ளுவார்கள். கடைகளில் விற்பனைக்காக வைத்திருக்கும் சாதச்சட்டியில் யாரும் கைவிட்டு சாதத்தை எடுத்து வாயில் போட்டுப் பார்த்து மீதியை சட்டியிலேயே போட்டுவிடலாம் அதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். ஜெகநாதத்திலுள்ள அந்த ஜெகநாதர் கோயிலுக்குள் யாரும் போகலாம்; சாமியைத் தொடலாம்; சாமியைச் சுற்றலாம்; காலைத் தொட்டுக் கும்பிடலாம். இது மாத்திரமல்லாமல், அந்த எல்லைக்குள் யாரும் திதி, விரதம், தர்ப்பணம் முதலிய அனுஷ்டானங்கள் ஒன்றும் செய்யக்கூடாதாம். செய்தால் பாவமாம்.

அன்றியும், அங்குள்ள சாமிகள் கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகிய மூவர். அதாவது மற்ற இடங்களைப் போல் சாமி புருஷன் பெண் ஜாதியுடன் இல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை ஆகிய மூன்று பேர்களுக்கும் தங்கையாகிய சுபத்திரையை நடுவில் வைத்து அண்ணன் மார் இருவரும் இரு பக்கத்தில் நிற்கின்றார்கள். இதுவும் மரக்கட்டையில் அரைகுறையாய் செய்த உருவங்கள்தான், விக்கிரகங்கள். இந்த ஊரைப்பற்றிச் சொல்லும்போது சர்வம் ஜகநாதம் என்று சொல்லுவது ஒரு வழக்கம். அதாவது ஜாதி, மதம், எச்சில், விரதம், முறை முதலிய வித்தியாசம் அந்த எல்லைக்குள் இல்லை என்பதைக் காட்டுவதற்காகச் சொல்லுவது. இதற்கு ஆதாரமாக இரண்டு விதமான கதைகள் சொல்லப்படுவதுண்டு.

ஒன்று, இப்படி விஷ்ணு என்னும் முழுமுதற் கடவுளின் அவதாரமாகிய கிருஷ்ணன் என்னும் கடவுள் இறந்த பிறகு அந்தக் கடவுளின் பிணத்தை துவாரகைச் சுடுகாட்டில் வைத்து தகனம் செய்து அது எரிந்து கொண்டிருக்கையில் திடீரென்று சமுத்திரம் பொங்கியதால் துவாரகை முழுவதும் தண்ணீருக்குள் ஆழ்ந்துவிட்ட போது இந்தக் கடவுளின் பிணமும், எரிந்து கொண்டிருந்த சுடுகாடும் தண்ணீருக்குள் மூழ்க நேரிட்டதால், அரைகுறையாய் வெந்த பிணக்கட்டையானது தண்ணீரில் மிதந்து கரை ஓரமாய் ஒதுங்கியதாகவும், அந்த ஊருக்கு ஜகநாதம் என்று சொல்லப்பட்டதாகவும், அந்த ஊரார் அந்தக் குறை பிணத்தை எடுத்து அதன் சக்தியை ஒரு மரக்கட்டையில் ஏற்றி அம் மரக்கட்டையில் இருந்து குறை பிணம் போலவே ஒரு உருவம் செய்து அதை வைத்து பூசித்து வருவதாகவும், அந்த ஸ்தலத்தின் சரித்திரம் சொல்லுகின்றது.

மற்றொன்று, கிருஷ்ணபகவானின் லீலா விநோதங்களில் ஒன்றாகிய கோபிகைகளுடன் கூடி குலாவி வருவதை கிருஷ்ண பகவானின் தங்கையாகிய சுபத்திரை பார்த்து பொறாமைப் பட்டு, ஸ்ரீ கிருஷ்ணபகவானிடம் சென்று "ஓ அண்ணாவே! நீ எவ்வளவோ அழகாகவும், பெருமை உள்ளவனாகவும் இருக்கின்றாய். உன்னுடன் கூடி அனுபவிக்கும் பெருமை கோபிமார்கள் எல்லோரும் பெற்று அனுபவித்து வருகின்றார்கள். ஆனால், நானோ உனக்கு தங்கையாகப் பிறந்துவிட்ட காரணத்தினால் அந்த சுக போகத்தை அடைய யோக்கியதையில்லாதவளாய்ப் போய் விட்டேன்" என்று துக்கப்பட்டதாகவும், கிருஷ்ணபகவான் பார்த்து, "உலகத்திலேயே மிகவும் புண்ணிய பூமியாகிய ஜகநாதம் என்கின்றதாக ஒரு ஸ்தலம் இருக்கின்றது. அங்கு எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது; எந்தவிதமான செய்கைக்கும் பாவம் கிடையாது; ஆதலால் அந்த ஜகநாதத்திற்குப் போய் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம்" என்பதாகச் சொல்லி ஜகநாதத்திற்கு வந்து கிருஷ்ணன், சுபத்திரை, பலராமன் ஆகிய சகோதர சகோதரிகள் ஒன்று சேர்ந்து இருப்பதாகவும் ஒரு கதையை ஜெகநாத பண்டாக்கள் ஸ்தல மகிமையைச் சொல்லும் முறையில் சொல்வதுண்டு. எனவே, இந்தக் கதையும் பொருத்தமானதாயிருக்கலாம் என்கின்ற மாதிரியில்தான் அங்கு மற்ற விஷயங்களும் இருக்கின்றன. அதாவது, தீட்டு இல்லை; ஜாதி வித்தியாசமில்லை; விரதாதி அனுஷ்டானம் இல்லை; எச்சில் வித்தியாசமில்லை என்பது போன்ற பல விஷயங்கள் இருப்பதுடன், அண்ணன்மாரும் தங்கையும் ஒன்றாய் இருந்தாலும் இருக்கலாமாம். அன்றியும், அந்த ஸ்தலத்திற்கு அதிகமான யோக்கியதை கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின்பேரில் இப்படி ஒரு கற்பனை செய்து இருந்தாலும் இருக்கலாம். சாதாரணமாக சைவ சமயத்திலும், ஒரு ஸ்தலத்தையோ தீர்த்தத்தையோ ஒரு சாமியையோ பெருமைப்படுத்துவதில் இதுபோன்ற அல்லது இந்த தத்துவம் கொண்ட கதைகள் சொல்லப்படுவதையும் பார்க்கின்றோம். அதாவது, திருவிளையாடல் புராணத்தில் ஒருவன் தன் தாயைப் புணர்ந்ததுடன், தகப்பன் கண்டு கோபித்ததற்கு தகப்பனையும் கொன்றுவிட்ட பாவத்தை சிவன் போக்கியிருப்பதாகவும், அந்த ஸ்தலத்திற்கும் தீர்த்தத்திற்கும் அந்தக் கடவுளுக்கும் இன்னமும் அந்த சக்திகள் இருப்பதாகவும் கருதும்படி சொல்லப்படுகிறது. ஆதலால், இப்படிப்பட்ட கதைகள் கட்டுவது ஒரு அதிசயமல்ல. எனவே, இந்தக் கதை எப்படி இருந்தாலும் முதல் கதையைப்பற்றி யோசிப்போம். கடவுள் அவதாரமாகிய கிருஷ்ண பகவான் எவ்வளவோ அற்புதங்களைச் செய்தவர். கடவுளான அவர் செத்துப் போனார் என்பதும், அவர் பிணம் கொளுத்தப்பட்டது என்பதும், நெருப்பில் வெந்து கொண்டிருக்கும்போது ஜலப்பிரளயமேற்பட்டு அந்தப் பிணம் சரியாய் வேகமாமல் தண்ணீரில் மிதந்து கொண்டு வந்து ஜகநாதத்தைச் சேர்ந்த கடற்கரையில் ஒதுங்கியது என்பதும் ஆகிய விஷயங்களை யோசித்துப் பார்த்தால், கிருஷ்ணனிடத்தில் கடவுள் தன்மை இருந்திருக்கும் என்று நம்ப இடமுண்டா? நம்புவதானாலும், செத்தபிறகு அந்தப் பிணத்திற்கு அதுவும் நெருப்பில் கருக்கப்பட்ட அரைகுறைப் பிணத்திற்கு ஏதாவது சக்தி இருந்திருக்குமா? அந்த சக்தியை மரக்கட்டையில் ஏற்ற முடியுமா? அந்த மரக்கட்டையும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றபோதெல்லாம் அந்த சக்தி மாறி மாறி அதில் வருமா? தவிர, மற்றும் ஒரு அதிசயம் சொல்லுகிறார்கள். அதாவது, கோயிலில் இருக்கும் மரக்கட்டைக்கு சக்தி குறைந்து போனால், அந்த சமயம் அதாவது 10 அல்லது 20 வருஷத்திற்கு ஒரு முறை மறுபடியும் சமுத்திரத்தில் ஒரு கட்டை முன்பு பிணம் மிதந்து வந்ததுபோல் மிதந்து வருமாம். அதை எடுத்த மறுபடியும் விக்கிரகம் செய்து வைத்துவிடுவதாம். இதன் யோக்கியதைகளை வாசகர்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். முன்பு வந்த குறைப்பிணம் ஜலப்பிரளயத்தால் வந்தது என்று சொல்லப்படுகிறது. அதுபோல், இப்போது வந்து கொண்டிருக்கும் மரக்கட்டைக்கும் ஏதாவது ஜலப்பிரளயம் கற்பிக்கப்படுகிறதா? எனவே, புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் சிறந்த ஜகநாதத்தின் நிலையை அந்த ஸ்தல சரித்திரப்படியே யோசித்துப் பாருங்கள். இவ்வளவையும் ஒப்புக் கொண்டு அந்த ஸ்தலத்திற்கு யாத்திரை போகின்றவர்களுக்கு ஏதாவது விசேஷ ஞானம் ஏற்படுகிறதா? அல்லது அந்த ஸ்தல சரித்திரத்தின் யோக்கியமான கற்பனையையாவது மதித்து ஏதாவது ஒழுக்கத்தைப் பெறுகின்றார்களா? ஒன்றுமேயில்லாமல் ரயில் சார்ஜூ செலவும். பூசாரி, பார்ப்பான் முதலியவர்களுக்கு செலவும் செய்ததல்லாமல் வேறு பலன் என்ன என்பதுதான் இது எழுதியதன் கருத்து.----------------சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் 16.9.1928, 30.9.1928 "குடி அரசு" இதழ்களில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

0 comments: