Search This Blog

11.9.08

ஜோதிடர்களும், ஊடகங்களும் செய்து வந்த மூடத்தனங்களுக்குச் சரியான மரண அடி!
விஞ்ஞானத்தின் வெற்றி! பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியாது!

8,500 ஆய்வாளர்கள் மேற்கொண்ட சோதனையின் முடிவு

ஜோதிடர்களும், ஊடகங்களும் செய்து வந்த மூடத்தனங்களுக்குச் சரியான மரண அடி!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

பிரளயத்தால் உலகம் அழியும் என்று ஜோதிட உலகம் மக்கள் மத்தியில் மூடத்தனத்தைப் பரப்பி வந்தது. அவ்வாறு அழியாது என்பதை 8,500 விஞ்ஞானிகள் - ஆய்வாளர்கள் கூடி மாபெரும் சோதனையில் ஈடுபட்டு முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

நேற்று சுவிட்சர்லாந்து நாட்டு - ஜெனிவாவில் உள்ள செர்ன் (CERN) ஆய்வு மய்யத்தில், உலகிலேயே செயற்கையாக மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அறிவியல் சோதனை நடைபெற்றுள்ளது. (அணுப்பொருள்கள் ஆராய்ச்சிக்கான அய்ரோப்பிய மய்யம் என்பதன் ஃபிரஞ்சு மொழி சுருக்கமே செர்ன் (CERN) என்பதாகும்).

8500 ஆய்வாளர்கள் ஈடுபாடு!

இந்த ஆராய்ச்சியில் 85 நாடுகளைச் சேர்ந்த 8,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பல நாடுகளின் பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சிக்கூடமும் இதில் ஈடுபட்டுள்ளன.

பூமிக்கு 300 அடி கீழே தோண்டி, எல்எச்சி என்றழைக்கப்படும் மிகப்பெரிய கடினமான குழாய்ப் பாதையில் இந்த அணுக்கள் பயணிக்கச் செய்யப்படுகின்றன.

இதற்காக 50 மீட்டர் முதல் 175 மீட்டர் வரையான ஆழத்தில் 27 கி.மீ. நீளத்துக்குக் குழாய்ப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. குழாயின் விட்டம் 3.8 மீட்டர் ஆகும். குழாய்ப் பாதை பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இக்குழாய் கான்கிரீட் சுரங்கத்தில் அமைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் இந்தக் குழாய்ப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அமைப்பதற்கு மட்டும் 380 கோடி டாலர் (17 ஆயிரம் கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.

இயற்பியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வு - வெற்றிகரமான முடிவுகளை வெளியாக்கியுள்ளது.

ஜோதிடப் புரட்டு!

இதுபற்றி முன்பு ஜோதிடர்களும், ஊடகங்களும் உலகம் அழியப் போகிறது என்று நாள் குறித்து புரளி கிளப்பி, மூட நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்தன; அறிவியல் ஆய்வு வெற்றியைத் தந்துள்ளதோடு, பிரளயம் ஏற்பட்டு உலகம் இருக்காது என்ற பொய்ப் பிரச்சாரத் திரை - விஞ்ஞான ஆய்வின் முடிவு என்ற கூர்வாளால் கிழித்தெறியப்பட்டு விட்டது.

முன்பு (1978-79) ஸ்கைலேப் விண்வெளிக்கலம் உடைந்து உலகம் அழிந்துவிடப் போகிறது என்று ஒரு புருடாவைக் கிளப்பி, பாமர மக்களையெல்லாம் கதிகலங்க வைத்த கதையை நம்மில் பலரும் அறிவோம்!

இயற்கையின் பல்வேறு தடைகளை, கேடுகளை எதிர்கொண்டு மனித குலத்திற்குப் பாதுகாப்பு தருவது, முன்னேறச் செய்வதுதான் அறிவியல். அந்த மனப்பான்மைக்கு எதிரான கருத்துகள் - மூட நம்பிக்கையின் முற்றான வெளிப்பாடுகள்தான் கடவுள், மத, ஜாதி மூட நம்பிக்கைகளாகும்!

ஆயிரம் எரிமலைகள் வெடித்தாலும் உலகம் அழியாது

ஆயிரம் எரிமலைகள் வெடித்தாலும் உலகம் அழியாது; மனிதகுலம் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படும் என்பதை இந்த ஆய்வு மனித சமுதாயத்திற்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது!

குழாய் அமைப்பின் இரு முனைகளிலும் பெரிய தூண்கள் வடிவில் புரோட்டான்கள் நிறுத்தப்பட்டுள்ளன. டன் கணக்கிலான எடை கொண்ட இரு தூண்கள் எதிர் எதிராகக் கடிகாரச் சுற்றில் சுற்றச் செய்து மோதவிடப்படுகின்றன. மணிக்கு 1600 கிலோ மீட்டர் ஒளி வேகத்தில் இந்தத் தூண்கள் மோதும்போது, மிகப்பெரிய அணுகுண்டு சோதனைபோல் இருக்கும். புரோட்டான், எலக்ட்ரான் என ஏராளமான அணுக்கள் பல்கிப் பெருகும். அவற்றின் எண்ணிக்கை, லட்சம் கோடிகள் (டிரில்லியன்) அளவில் இருக்கும். அப்போது, சூரியனைப்போல் ஒரு லட்சம் மடங்கு வெப்பம் ஏற்படும். தூள் தூளாகப் பிரிந்த அணுக்கள் அனைத்தும் ஒரு வினாடிக்கு 11 ஆயிரத்துக்கு 245 முறை என்ற வேகத்தில் அந்தக் குழாயைச் சுற்றும்! இது ஒளியின் வேகத்துக்கு இணையானது!!

இதற்காக ஆசியா, அய்ரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடு களில் உள்ள முக்கிய ஆராய்ச்சி நிலையங்களின் 60 ஆயிரம் சூப்பர் கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட் டுள்ளன!

35 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுநர்கள், என்ஜினியர் கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 70 இந்தியர்களும் அடங்குவர்!

சிவனின் ருத்ரத் தாண்டவமா? பிரளயமா?

இவ்வளவு அரிய அறிவியல் சாதனையில் இந்த நாட்டுப் பழைமைவாதிகள் தேவையில்லாமல் நடராஜர் சிலையைக் கொடுத்து - இது சிவனின் ருத்திர தாண்டவம் என்று கூறி திசை திருப்ப முயல்வது மகாவெட்கக்கேடு மட்டுமல்லாமல், மிகப்பெரிய மானக்கேடும் ஆகும்!

அறிவியலில் இப்படி மதவியலைக் கலப்பது, சந்தனக் கோப்பைக் குள் சேற்றை வீசுவது போன்ற அசிங்கம் அல்லவா?

இதை பிரளயம் என்று கடவுள் பெயரிட்டு, கடவுள் பொருள் என்று கூறிய விஞ்ஞானியே மாறி, (பீட்டர் ஹிக்ஸ் - 1964 இல்) இப் போது அந்த மர்மப் பொருள் அவரது பெயரிலேயே ஹக்ஸ் போசான் என்று அழைக்கப்படும் நிலையில், இப்படி இந்தியப் பார்ப்பனிய விஞ்ஞானிகள் - பழைமைப் பாசியை அதில் தொடுக்க முன்வரலாமா?

நமது நாட்டு ஏடுகள், ஊடகங்கள் ஒரு பக்கம் இதையும் வெளி யிட்டு, இன்றைய ராசிபலன் ஜோசியம் என்றும் இன்னொரு பக்கத்தில் வெளியிடுகின்றன. அறிவியல் குழந்தைகளான தொலைக்காட்சிகளும் ராசி பலன் கூறுவதைவிட மிகவும் கண்டனத்திற்குரியது வேறு உண்டா?

கம்ப்யூட்டர் கண்டுபிடித்துத் தந்தால், அதில் பிள்ளையாரையும், ஜோதிடத்தையும் இணைக்கும் களிமண் மனிதர்கள் தான் இந்த ஞான பூமியின் சிறப்பா?

பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் கிடைத்த விடை, வெற்றி இது!

மனித குலத்தைக் காப்போர் அறிவியல்வாதிகளே!

மனித குலத்தை, பகுத்தறிவாளர்களான அறிவியல்வாதிகள் மனிதநேயர்கள்தான் காப்பாற்றுவார்களே தவிர, கடவுளோ, மதங்களோ, சடங்குகளோ, ஜோதிடமோ காப்பாற்றாது. பயத்தை உருவாக்கி பயன்பட நினைப்பவையே அவை. புரிந்துகொள்ளுங்கள்.

-------------------"விடுதலை" 11-8-2008

0 comments: