Search This Blog

30.9.08

புரோகிதக் கூட்டம் மக்களின் பணத்தையும், நேரத்தையும் பாழாக்குகிறதே



இலட்சார்ச்சனை

நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வரவொட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, சிறீரங்க சேத்திரத்தில் சிறீரங்கநாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29 ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2 ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது. அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகிதக் கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தைப் போக்க இதுவா வழி?

இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே இலட்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவின் கல்லறை மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது! இந்தப் பிரிட்டிஷ் வல்லரசை இன்று ஜப்பான் சில இடங்களிலே தோற்கடித்தது. அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள்; பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழைமைகள்!

...பொன்னும், பொருளும், நேரமும், நினைப்பும் போருக்குச் செலவிட வேண்டிய இந்தப் பயங்கரமான வேளையிலே வெண்பொங்கலும், சித்ரான்னமும் உண்ண, ஒரு சாக்குக்காக இலட்சார்ச்சனை செய்யுங்கள், ரங்கநாதர் இரட்சிப்பார் என்று புரோகிதக் கூட்டம் கூறி மக்களின் பணத்தையும், நேரத்தையும் பாழாக்குகிறதே, இதை என்னென்பது?

----------------- அண்ணா - "திராவிட நாடு" இதழ், 5.3.1942



இந்து இட்லரிசம்

...கேள் இதைப் பரதா! இந்திரன் முதலான தேவர்கள் நம் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களிடம் தோழமையுடன் இருக்கக் கண்டேன். நம் தோழர்களின் ஆடையைக் கண்டீரோ, ஆயிரம் பொத்தல், கண்ணாயிரமுடைய இந்திரனின் கடாட்சம் அன்றோ அது! ஏழை மக்களின் வயிற்றிலே சதா மூண்டிருக்கும் பசித் தீயை என்னென்று கூறுவது? அது அக்னியின் அன்புப் பெருக்கன்றோ! பெரும்பாலான பஞ்சை மக்களின் உணவு, காற்று தானே பரதா! வாயுவின் வாஞ்சனை அல்லவோ அது! தரித்திரத்தில் புரளும் மக்களைக் கண்டிருப்பீர், வருணன் பிரத்தியட்சம் அல்லவோ அது! இதுபோல அந்த தேவாதிகள் காட்சி தருவதால்தான் நான் அந்தத் தேவாதிகளைக் குறை கூறாதீர் என்று உரைத்தேன் என்று முடித்தான் நக்கீரன்.

....பசிக்குதே பசிக்குதே என்று உரைத்தால், செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார்...

...வினை, எழுத்து விதி, சோதனை இவை தூளாயின தெரியுமோ? சம்மட்டியும், அரிவாளும், ஆளும் ரஷ்ய நாட்டிலே, அன்று எழுதியதை இலெனின் அழித்து எழுதிக் காட்டினார். அவதியுற்றோரை வாழச் செய்தார், அருள்மொழியாலல்ல, தேவாலயம் சுற்றியல்ல, தம் தீரத்தால், வீரத்தால் நெஞ்சு உறுதியால்!

பாதிக்குதே பசி என்று உரைப் போரும் அது உன் பாபம் என்று பதிலுரைப்போரும் அங்கு இல்லை! மத ஓடத்தில் ஏறிய மாந்தரே பலி பீடத்தில் சாய்ந்தீரே? ஆம்! வைதிகப் பீடத்திற்கு நீங்கள் இங்குப் பலியானீர்கள்! வாழ்வெனும் கடலைக் கடக்க மதமெனும் ஓடம் ஏறினீர்! பார்ப்பனியம் எனும் சண்ட மாருதம் அந்த ஓடத்தை வைதிகம் எனும் பாறை மீது மோதச் செய்து, இந்தப் பலி பீடத்தில் சாய்ந்தீர். அந்த இரத்தம் தோய்ந்த பலி பீடத்தை மனக்கண் படைத்தோர் காண முடியும்!

அந்தப் பலி பீடத்திலே சாய்ந்தவரின் தொகை கணக்கில் அடங்காது.

---------------- அண்ணா - "திராவிட நாடு" இதழ், 29.3.1942

0 comments: