Search This Blog

29.9.08

சுரன் என்றால் சுரா எனும் மது அருந்துபவன் - அசுரன் என்றால் சுராபானம் அருந்தாதவன்



ஓணமே; ஓர் உதாரணமல்லவா?


காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியான கடற்கரை நகரம் மாமல்லபுரத்தை மகாபலிபுரம் என்றே நமது மகா ஜனங்கள் அழைத்துப் பழக்கப் பட்டு விட்டனர். நானும் எத்தனையோ முறை எழுதியும் பேசியும் விளக்கியிருக்கிறேன்; காஞ்சியை ஆண்டிருந்த மகேந்திர வர்மனின் மகன், நரசிம்ம வர்மன் மற்போரில் வல்லவன் என்பதால் அந்தப் பல்லவ மன்னனுக்கு மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அந்தப் பெயர் விளங்கத்தான் மாமல்லபுரம் என்ற பெயர் பூண்டு அந்தச் சிற்ப நகரம் திகழ்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகளை எடுத்துக்காட்டி எத்தனை முறைதான் நினைவுபடுத்துவது! பயனில்லை - பயனில்லை - பயனே ஏற்படப் போவதில்லை! பழைய புராணங்கள் - பழக்க வழக்கங்கள் - புதிய சிந்தனைக் கும் - அதில் விளையும் உண்மைக்கும் வழிவிடவே போவதில்லை.

இப்போது நான் தெரிவிக்கப் போவது அந்தப் பல்லவ மன்னன் மாமல்லனைப் பற்றியல்ல; பழைய புராணக் கதையில் சொல்லப்படும் மகாபலி என்ற அசுரச் சக்கரவர்த்தியைப் பற்றி! சுரன் என்றால் சுரா எனும் மது அருந்துபவன் - அசுரன் என்றால் சுரா பானம் அருந்தாதவன் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டிருப்பதை மறந்து விடலாகாது. அசுரர்; அவுணர் எனவும் அழைக்கப்படுவர். இந்தக் கூற்றுக்குத் தமிழ் அகராதியும் தக்க சான்றாகும்.
அவுணர்க்கு நாயகனாக விளங்கியவன் மாவலி மன்னன் என்று நாலாயிரப் பிரபந்தம் நயவுரையில் வைணவச் செம்மல் எனப்படும் டாக்டர் ஜெகத்ரட்சகனே குறிப்பிடுகிறார். அவர் மாவலியைப் பற்றி வர்ணித்துள்ள வாசகத்தில் அவுணர்க்கு நாயகன், மிக்க பெரும் புகழ், நீள்முடி வெந்திறல் மாவலியின் மங்கலம் சேர் பெரு வேள்வி எனச் சிறப்பிக்கின்றார்.
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் எனும் பண்டிகையைப் பற்றியும் அதன் காரணம் பற்றியும் - முன்பொரு முறையே சொல்லியிருக்கிறேன். மக்களுக்கு மறதி அதிகமென்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்.

திருமதி பாத்திமா பீவி அவர்கள் தமிழக ஆளுநராக இருந்த போதும் நான் முதலமைச்சராக இருந்தேன். அந்த அம்மையார் கேரளத்துக்காரர் என்பதால் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை கவர்னர் மாளிகையில் சிறப்புறக் கொண்டாடுவார்.

ஓராண்டு; பண்டிகைக்கு என்னையும் முதல்வர் என்ற முறையில் அழைத்திருந்தார். நானும் அமைச்சர்களுடன் சென்றேன் - அந்த விழாவில் இசைமேதை ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி - கவர்ந்திழுப்பது மட்டுமல்ல; கேட்போரின் கவலைகளையும் போக்க வல்லது; மனத்துயரை மறந்திடச் செய்வது அவரது இசையல்லவா!

அந்த இசை நிகழ்ச்சியில் அழகாக அச்சியற்றப் பெற்ற மிகச் சிறிய அளவிலான புத்தகம் ஒன்று விழாவினையொட்டி வெளியிடப்பட்டு நூற்றுக் கணக்கில் விநியோகிக்கப்பட்டது. ஆங்கிலத்தில், மலையாள மொழியில், தமிழில் எழுதப்பட்டிருந்த அந்தக் குறள் வடிவிலான சிறு நூலில் ஓணம் பண்டிகைக்கான காரணம் விளக்கமாகக் கூறப்பட்டிருந்தது.

மலையாள ராஜ்யத்தை மாவலி என்ற மாமன்னன் ஆண்டு வந்தான். அவன் ஆட்சிக் காலம் மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அவனை அப்படியே விட்டுக் கொண்டிருந்தால், இன்னும் பல சாதனைகளைச் செய்து சரித்திர புருஷனாகி விடுவான். ஆகவே அவனை இப்போதே ஒழித்திட வேண்டும். ஒழித்தால்தான் பூ தேவர்கள் எனப்படும் பூசுரர்கள் வாழ முடியும் என்று மகாவிஷ்ணு விடம் சென்று முறையிடு கிறார்கள். அதைக் கேட்ட விஷ்ணு; வாமனாவதாரம் எடுத்து அடியளந்திடும் வஞ்சக சூழ்ச்சியால் மாவலி மன்னனை மண்ணோடு மண்ணாகும்படி வதைத்து விடுகிறார். நல்லவன் ஒருவன் ஆட்சி நடத்துவதும் - அவன் நல்ல திட்டங்களை மேலும் மேலும் தொடர்வதும் பிடிக்காமல் பூசுரராம் தேவர்கள் அவனை வீழ்த்தி விட்டார்கள். உயிர் விடும்போது அந்த மாவலி மன்னன், மகாவிஷ்ணுவிடம் கேட்ட வரம்தான்; அவன் நினைவாக ஓணம் பண்டிகை கொண்டாடுவதாகும்.

எனவே ஆளுநர் மாளிகையில் பாத்திமா பீவி அவர்களால் நடத்தப்பட்ட அந்த ஓணம் பண்டிகை - ஒரு நல்ல விஷயத்தை; அதாவது நமது இனத்தை எப்படியெல்லாம் சூழ்ச்சியினால் தீர்த்துக் கட்டி; அதை திருவிழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்ற உண்மையை எனக்கு உணர்த்திட உதவிற்று!

மேலும் இதற்கான ஆதாரங்களைத் திரட்ட வேண்டுமென்ற ஆர்வ மிகுதியால் நான் தேடிய போது அண்மையில் கிடைத்தது தான் festivels of india - என்ற புத்தகமாகும். இந்து பண்டிகை களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய நூல் அது.

அதில் ஓணம் பண்டிகையைப் பற்றிக் குறிப்பிடும்போது; மாவலி மன்னனைப் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.
“A great and wise Asura King named Mahabali ruled over Kerala. His subjects loved him very much. He had become very powerful and had brought the earth. This worried the Gods who requested Lord Vishnu to help them

(இதன் தமிழாக்கம் :- மகாபலி என்ற பெயர் கொண்ட ஒரு சிறந்த - அறிவுக் கூர்மை மிக்க மன்னர் கேரளத்தை ஆண்டு வந்தார் . அந்த நாட்டுக் குடி மக்கள் அவரை பெரிதும் நேசித்தனர். அவர் மிகவும் சக்திவாய்ந்த மன்னனாக விளங்கினார். உலகம் முழுவதையும் தன் குடையின்கீழ் கொண்டு வந்தார். இதைக் கண்டு கடவுள்களாம் பூ தேவர்கள் மிகவும் துயரமடைந்தனர். அவர்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.)

இது மட்டுமல்ல; மலையாள மனோரமா என்ற பிரபல ஏடு வெளியிட்டுள்ள ஓணம் பற்றிய சிறப்பு இதழில், “Accordng to legend, long ago, a kind and wise king, Mahabali, ruled what is now Kerala. His rule was considered as a golden era, and joy and prosperity over flowed. The Gods grew very jealous of him, so, they asked Lord Vishnu to help them”

(இதன் தமிழாக்கம்: - புராணத்தின்படி, மகாபலி என்ற அன்பும், அறிவுக் கூர்மையுமிக்க மன்னர் நெடுங்காலத் திற்கு முன்பு கேரளத்தை ஆண்டு வந்தார். அவருடைய ஆட்சிக் காலம் பொற்காலமாகக் கருதப்பட்டது.அவர் ஆண்ட போது வளமும் மகிழ்ச்சியும் கொழித்தது. கடவுள்கள் இதைக் கண்டு பொறாமை யடைந்து மகா விஷ்ணுவின் உதவியை நாடினர்)
இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.


உடன்பிறப்பே; நான் காட்டியுள்ள இந்த ஆதாரங்களில் இருந்து; சுரன் அல்லாத ஒருவன் நல்லாட்சி நடத்தி, அவனால் ஆளப்படுகிற மக்களால் போற்றிப் புகழப் படுவானேயானால் - அவன் வேறு இனத்தவன் - இழிகுலத்தவன் - இவனை வளர விடுவது பெரும் ஆபத்து என்று முடிவு செய்து அவனுக்கே முடிவு கட்ட ஒரு கூட்டம் மாவலி மன்னனையே எதிர்த்துக் கிளம்பியது போலக் கிளம்பும் என்பதற்கு; இதைவிட வேறு சான்று தேவையில்லை அல்லவா?

ஓணம் பண்டிகை உதாரணம் ஒன்றே போதுமல்லவா?

---(மு.க.)

---------------- நன்றி: "விடுதலை" 28-9-2008

0 comments: