Search This Blog

20.9.08

அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர் அல்லாதாரின் கல்வி வாய்ப்பு என்ன?



முப்பெரும் தலைவர்களை அறிவோம்!



சென்னை தியாகராயர் நகரில் பிட்டி தியாகராயர் மன்றத்தில் தந்தை பெரியார் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 (2008)ல் ஒரு முக்கிய இனமானத் திருவிழா நடைபெற்றது.

நீதிக்கட்சியின் மும்மூர்த்திகளான பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசனார்; டாக்டர் டி.எம். நாயர் ஆகிய பெரு மக்களின் நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது.

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ. இராசா அவர்கள் அஞ்சல் தலைகளை வெளியிட, முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் அந்த அஞ்சல் தலைகளைப் பெற்றுக் கொண்டு வெளியிட்ட தகவல்களும், கருத்துகளும் பார்ப்பனர் அல்லாதார் நெஞ்சங்களில் சிலைகளாக செதுக்கப்பட வேண்டியவையாகும்.

யார் அந்தத் தலைவர்கள்? அவர்கள் ஆற்றிய தொண்டு என்ன என்பது இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைவிட அவர்களுக்குக் கட்டாயம் தெரிவிக்கப்பட்டாக வேண்டும்.

இன்றைக்கு 69 சதவீத இடங்களை தாழ்த்தப்பட் டோரும், பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி, வேலை வாய்ப்புகளில் அனுபவிக்கிறார்கள் என்றால் அதற்கான அடித்தளம் அமைத்தவர்கள்தான் அந்த மாபெரும் தலைவர்கள்

அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர் அல்லாதாரின் கல்வி வாய்ப்பு என்ன?

இதோ ஒரு எடுத்துக்காட்டு(தனியே அட்டவணை காண்க)

அந்தக் கால கட்டத்தில் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் வர வேண்டும். சென்னைக்கு வந்தால் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்குவதற்கு விடுதிகள் கிடையாது. இருந்த விடுதிகளும் பார்ப்பனருக்கே சொந்தம். அங்கு பார்ப்பன அல்லாத மாணவர்களுக்கு இடம் கிடையாது. எடுப்புச் சாப்பாடு எடுத்து வந்துதான் பார்ப் பனர் அல்லாத மாணவர்கள் வெளியில்சாப்பிட வேண்டும்.

அத்தகு கால கட்டத்தில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்காக ஒருவர் விடுதி அமைக்க (1916 ஜூன்) முன் வந்தார், பார்ப்பன அல்லாத மாணவர்களை அரவ ணைத்தார். அவர்களுக்குக் கல்விக் கண் திறந்தார் என்றால் அப்பெரு மகனாரை எந்த அளவு போற்றினாலும், தோளில் சுமந்தாலும் தகும் - அவர்தான் டாக்டர் சி. நடேசனார்.

சர். பிட்டி தியாகராயர் என்றும் வெள்ளுடைவேந்தர் என்றும் போற்றப்பட்ட பிட்டி தியாகராசர் சென்னை மாநகராட்சியின் முதல் மேயர். ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏந்தல்.

நீதிக்கட்சியின் தந்தை என்று போற்றப்படுபவர். 1916 நவம்பர் 20-ஆம் நாள் அந்தப் பெரு மகனாரால் அளிக்கப் பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை என்பது (The Non - Branmin Menifesto) திராவிடர் இன வரலாற்றிப் பாதையில் வைரத் தூணில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கல்வி, வேலை வாய்ப்பில் பார்ப்பனர் ஆதிக்கத்தையும், கலாச்சாரத்துறையில் அவர்களின் மேலாதிக்கத்தையும் வெளிக் கொணர்ந்த அறிக்கை அது.

அதுபற்றி அன்றைக்கு இந்து எழுதியதைத் தெரிந்து கொண்டால் எந்த அளவுக்குப் பார்ப்பனர் அல்லாதாருக் குத் தேவையான மாமருந்து அது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

“It is with much pain and suprise that we persued the document”

மிகவும் துயரத்துடனும், ஆச்சரியத்துடனும் நாங்கள் அந்த ஆவணத்தை ஆராய்ந்தோம்! என்கிறது இந்து ஏடு.

பார்ப்பனர் அல்லாதாரின் உரிமைக் குரல் என்றால் அது இந்து வகையறாக்களுக்குப் பெரும் துயரமாகவிருக்கிறது என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் உணர்ந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் டி.எம். நாயர் பாலக்காட்டில் பிறந்தவர் - முழுப் பெயர் தாரவாத் மாதவன் நாயர் வெறும் 51 ஆண்டுகளே வாழ்ந்த மறைந்த பெருமகனார் - பிரபலமான காது, மூக்கு, தொண்டை நிபுணர் (Ent) தலைசிறந்த பகுத்தறிவாளர்.

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்ற இரத்தின மொழியைப் புகன்ற புலிப்போத்து அவராவார்.

பார்ப்பனரல்லாத மக்களுக்கும் சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக இலண்டன் நாடாளுமன்றத்தின் முன் சாட்சி அளிப்பதற்காக இரண்டு முறை சென்றார் டாக்டர் டி.எம். நாயர். நீரிழிவு நோயாளியான டாக்டர் டி.எம். நாயர் இரண்டாம் முறையாக இலண்டன் சென்றபோது மிகவும் கடுமையாக நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த நிலையில் அவர் கருத்தைப் பெறுவது என்று முடிவு செய்து அதற்குரியவரை அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சென்றபோது டாக்டர் நாயர் முடிவு எய்தினார் என்கிற துயரச் செய்தி கிடைத்தது. டாக்டர் நாயர் முடிவைக் கேட்டு அக்கிரகாரம் ஆனந்தத் தாண்டவமாடியது. திருவல்லிக்கேணி வாழ் பார்ப்பனர்கள் பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்துக் குதியாட்டம் போட்டனர் என்றால் நாயர் பெருமானின் சீலத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இதில் குறிப்பிட வேண்டிய ஒரு வெட்கக்கேடு ஒன்று உண்டு. காங்கிரஸ் சார்பில் அப்பொழுது லண்டனில் இந்த பார்ப்பனர்கள் மனித நாகரிகத்துக்காக டாக்டர் நாயரின் மரணத்திற்கு நேரில் சென்று மரியாதை தெரிவிக்க வில்லை! பார்ப்பனீயம் பண்பாடு இதுதான்!

டாக்டர் நாயரை பற்றிச் சொல்லும்பொழுது ஒரு புரட்சி வீரர், சுயமரியாதை வீரர், திராவிட லெனின் என்று புகழாரம் சூட்டுகிறார் தந்தை பெரியார் (குடிஅரசு 28.7.1940)

திமுக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பிலும் மத்தியில் தொலைத் தொடர்பு துறையையும் தன் வசம் கொண்டால்தால் தான் இந்த முப்பெரும் தலைவர்களின் அளப்பரும் சாதனைகளை, தொண்டினை வரலாற்றில் பதிவு செய்யும் வகையில் அஞ்சல் தலை வெளியிட முடிந்தது இதன் மூலம் வரலாற்றுப் பெருமையையும் பெற்று விட்டது.

அந்த விழாவிலே பேசிய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர் கள் திராவிடத் தலைவர்களை இருட்டடிக்கும் பார்ப் பனத்தனத்தைத் தோலுரித்துத் தோரணயமாகத் தொங்க விட்டார். பலே பலே என்று பெருமையுடன் மார்தட்டிப் பூரிக்க வேண்டிய ஒன்று அது.

முதலமைச்சராகயிருக்கக் கூடிய ஒருவர் இவ்வளவு துணிந்து (உண்மையைத் தான் சொன்னார் என்றாலும்) மனந் திறந்த கருத்தினை வெளியிட்டது என்பது சாதாரண மானதல்ல!

தியாகராயர் நகர் என்று பெயரிடப்பட்டும் டி.நகர் என்று பரவலாகக் கூறும் அளவுக்கு ஒரு நிலையை உண்டு பண்ணியவர்கள்தான் பார்ப்பனர்கள்தான். சுருக்க மாகச் சொல்வதுதான் அதன் நோக்கம் என்றால் திருவல்லிக் கேணியை தி.கேணி என்று சொல்வதுதானே என்கிற தர்க்கரீதியான வினாவையும் எழுப்பினார் முதலமைச்சர். சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக விளங்கிய ஊபுஅ சவுந்தர பாண்டியனார். அவர் பெயரால் அமைக்கப்பட்டது தான் சவுந்தரபாண்டியன் அங்காடி என்பதாகும். இப்பொழுது எப்படி மருவி நிற்கிறது - அழைக்கப்படு கிறது? பாண்டிபஜார் என்று பரவலாக அழைக்கப்படும் அவலம்.

அண்ணாசாலையில் செயல்படும் பார்ப்பன ஏடுகள் இதழ்கள் அண்ணா சாலை என்று போடக் கூடாது என்பதற்காக அலு வலகத்தின் முகவரியைக் குறிப்பிடும்போது வெறும் சென்னை-2 என்று குறிப்பிடுவர்.

எத்தனையோ முறை விடுதலை சுட்டிக்காட்டி எழுதியதுண்டு. அதற்கு திமுக ஆட்சியில்தான் விடிவு ஏற் பட்டுள்ளது.

தியாகராயர் நகரைப் பொறுத்தவரை நீதிக்கட்சித் தலைவர்களின் நினைவு போற்றும் வகையில் பல சின்னங்கள் இருக்கின்றன.

தியாகராயர் நகர், பனகல் பூங்கா (நீதிக்கட்சியைச் சேர்ந்த முதல் அமைச்சர்) நடேசன் பூங்கா, உஸ்மான் சாலை, தணிகாசலம் (செட்டியார்) சாலை என்பவை யெல்லாம் நீதிக்கட்சிக்குத் தொடர்புடைய பெயர் களாகும்.

யார் இந்த ஓ. தணிகாசலனார்? 1921-ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத்திலே தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தவர் இவர்.

என்ன தீர்மானம் தெரியுமா?

தலைமைச் செயலகத்தில் உள்ள அய்.சி.எஸ். உத்தி யோகங்கள் தவிர, மற்ற எல்லா உத்தியோகங்களுக்கு மான நியமனங்கள், பார்ப் பனர் அல்லாதார்களிலிருந்தே நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்.

இந்தத் தீர்மானம் பார்ப்பன வட்டாரத்தில் விழுந்த அணு குண்டாகக் கருதப் பட்டது. அத்தகைய ஒருவர் பெயரால் அமைந்ததுதான் அந்தப் பகுதியில் உள்ள ஓ. தணிகாசலம் (செட்டியார்) சாலை என்பதாகும்.

உஸ்மான் சாலை என்றால் அவரும் சாதாரணமானவர் அல்லர். இடைக்கால ஆளுநராக சென்னை மாநிலத்தில் பதவி வகித்தவர் (16.5.1934 - 14.11.1934)

தியாகராயர் நகர் பகுதி என்பது நீதிக்கட்சியின் கோட் டையாகயிருந்தது என்பதற்கு இவையெல்லாம் அடை யாளங்கள். சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசன், டாக்டர் டி.எம். நாயர் போன்ற பெரு மகனார்களுக்கு மத்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் அந்த நீதிக்கட்சியின் வழிவழி வந்த முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பங்கேற்பது மிக மிகப் பொருத்தம் தானே!

----------------- மின்சாரம் அவர்கள் 20-9-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

சேராதே said...

அய்யா, இதில் பணக்கார பிற்படுத்தப் பட்ட சாதியினரை தவிர உண்மையான பி.ப. தா.ப.எத்தனை பேர்? இன்று வேலை வாய்ப்பில் பணக்கார பி.ப. அளவிற்கு மற்ற பி.ப உள்ளனரா?

தமிழ் ஓவியா said...

அய்யா, வணக்கம் .
தங்களின் கேள்விக்கு மண்டல் கமிசனில் விவரமாக பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு குறித்து தி. க. பல நூல்களை வெளியிட்டுள்ளது. படியுங்கள். உண்மையை உணருங்கள்.