Search This Blog

2.9.08

ஜாதி வெறி காரணமாக ஏகலைவனுக்கு கல்வி மறுக்கப்பட்டது




ஜாதி வெறி காரணமாக அன்றைக்கு ஏகலைவனுக்கு கல்வி மறுக்கப்பட்டது

இன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்
கல்வி கற்று வருவதைக் கண்டு ஆனந்தம் கொள்கிறேன்

சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் கலைஞரின் சமூகநீதிக் கொள்கைப் பேருரை


சென்னை, செப்.2- மதவெறியின் காரணமாக, ஜாதி வெறியின் காரண மாக அன்றைக்கு ஏகலைவன் என்ற வேடச் சிறுவனுக்கு வித்தை மறுக்கப்பட்டது. கல்வி மறுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பெற்று வருவதைக் காணும்பொழுது ஆனந்தம் கொள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூறி விளக்கிப் பேசினார்.

தமிழக உயர்கல்வித் துறையின் சார்பில் - ஆறு புதிய பொறி யியல் கல்லூரிகள் தொடங்குதல், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக வளாக அடிக்கல் நாட்டுதல், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், உயர் கல்விமன்ற நூல்கள் வெளியிடுதல், சிறந்த கல்வியாளர்களுக்கும் - கல்வி நிறுவனங்களுக்கும் அரசு விருதுகள் வழங்குதல் ஆகிய அய்ம்பெரும் நிகழ்வுகள் இணைந்த மாபெரும் விழா நேற்று (1.9.2008) மாலை சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள், புதிய கல்லூரிகளைத் தொடங்கி வைத்து - புதிய கட்டடங் களுக்கு அடிக்கல் நாட்டி - கல்வியாளர்களுக்கும், கல்வி நிறு வனங்களுக்கும் விருதுகள் வழங்கி, விழாப் பேருரையாற்றினார்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

நம்முடைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர் கள் பசு மாட்டை, தென்னை மரத்திலே கட்டி விட்டுப் போயிருக் கிறார். (சிரிப்பு) அந்த மாட்டிலே பால் கறப்பதா? அல்லது அவிழ்த்துவிடுவதா? என்ற இந்தக் கேள்விகளுக்கு பதில் காணு கின்ற முறையில் உங்கள் முன்னால் நான் அமர்ந்திருக்கின்றேன்.

என் குரல்வளம் ஒத்துழைக்காவிட்டாலும்...

அவரே தன்னுடைய உரையில் குறிப்பிட்டதைப்போல் கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பெரிதும், பாதிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு வர இயலுமா என்பது கேள்விக்குறியாகி, மருத்துவப் பெருமக்களும் இரண்டு நாள் ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது என்று அழுத்தந்திருத்தமாக அறிவுறுத்திய பிறகும் என் கண்ணெதிரே அண்ணா பல்கலைக்கழகமும், நடைபெற வேண்டிய நிகழ்ச்சியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற மாணவத் தம்பிமார்களும் தென்பட்ட காரணத்தால், உங்களை யெல்லாம் மதிக்கவேண்டும், உங்களிடத்திலே காட்டுகின்ற அன்பு போலியானதல்ல, அது உண்மையானது என்பதை நிலைநாட்டுகின்ற வகையில் இந்த ஆறு விழாக்களை இணைத்து நடத்துகின்ற பெருவிழாவில் நான் கலந்து கொள்கிற வாய்ப் பினைப் பெற்றிருக்கிறேன்.

இப்போதும் என்னுடைய குரல்வளம் ஒத்துழைப்பதாக இல்லை. இருந்தாலும் முடிந்த வரையில் என்னுடைய பேச்சில் சில கருத்துகளை உங்கள் முன்னால் வைக்கலாமென்று நான் கருதுகின்றேன்.

என்னை துரோணர், பீஷ்மர் என வர்ணித்து..,

இங்கே உரையாற்றியவர்கள் என்னை ``துரோணர் என்றும், ``பீஷ்மர் என்றும் வர்ணித்து அவர்களுடைய கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் நான் பீஷ்மரை மதிப்பவன்தான். ஆனால் அவருடைய செயல், அவர் யாருக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருந்தாரோ அவர்களுக்கு இறுதிக் காலத்திலே பயன்படவில்லை - மகாபாரதத்திலே வருவதைப் போல - கடைசி வரையில் பாண்டவர்களுக்காக வாதாடிக் கொண்டிருந்த பீஷ்மர், இறுதிக் கட்டத்திலே துரியோதனர்களுக்காக வாதாடி அவர்களுக்காக களத்திலே அடிபட்டு, அம்புப் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டு, போர் முடிகின்ற நாள் வரையிலே உயிரோடு இருந்து பிறகு, மாண்டார் என்பது பீஷ்மருடைய கதை. இது இறுதிக் காலத்துக் கதை. அவருடைய தொடக்கக் காலத்துக் கதையை நான் படித்திருக் கிறேன், சொல்ல விரும்பவில்லை.

நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்களிடத்திலே
கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்

அதை நீங்கள் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்களிடத்திலே முடிந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இயன்றால் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
எனவேதான் என்னை இவ்வளவு பெரிய விழாவிற்கு அழைத்து ஏன் திட்டினார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை.

அதைப்போலத்தான், ``துரோணர். துரோணர் என்ற பெயரை எனக்குச் சூட்டியபோது நான் விரும்பாததற்குக் காரணம் - நான் வருத்தப்படுவதற்கே காரணம், இது கல்வி நிலையம். இங்கே இருக்கின்ற மாணவர்கள் கல்வி கற்க விரும்புகின்றவர்கள், பொறியாளர்களாக, மேதைகளாக, அறிஞர் பெருமக்களாக, எதிர் காலச் சிற்பிகளாக வரவேண்டும் என்பதற்காக அண்ணா பல் கலைக்கழகத்திலே உங்களை ஒப்படைத்துக் கொண்டு, இங்கே யுள்ள ஆசிரியப் பெருமக்கள், துணைவேந்தர்கள் இவர்களுடைய துணையோடும், உதவியோடும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங் களாக ஆக வேண்டும் என்ற எண்ணத் தோடு வந்திருப்பவர்கள்.

துரோணர் என்று சொன்னதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை

அப்படி வந்திருக்கின்ற உங்களுடைய நம்பிக்கையை குலைப்பதைப் போல துரோணர் என்று சொன்னதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் துரோணர் காலத்தி லேயே அடித்தட்டு மக்களுக்கு சாதியின் பெயரால், வகுப்பின் பெயரால், மதத்தின் பெயரால் உயர் குலம், கீழ்க்குலம் என்ற பேதங்களின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட காலம் துரோண ருடைய காலம். அப்படி கல்வி மறுக்கப்பட்ட காரணத்தினால் தான் வில்வித்தை கற்றுக் கொள்ள வேண்டுமென்று ஏகலைவன் துரோணரிடம் சென்று கேட்டபோது, நீ வேடர் குலம், இழிகுலம், கீழ்க்குலம், கீழ்ச் சாதி, உனக்கு நான் வில்வித்தை கற்றுத் தரமாட்டேன் என்று துரோணர் சொல்லிவிட - அப்படியானால் பரவாயில்லை, நான் உங்களைப் போல ஒரு சிலை செய்து வைத்து, அதன் முன்னால் நின்று வித்தையைக் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி, அவருடைய சிலைக்கு முன்னால் நின்று அரும்பாடு பட்டு வில் வித்தையைக் கற்றுக்கொண்டு, துரோணரிடத்திலேயே வந்து - தான் கற்ற வித்தை சரிதானா? என்று கேட்டான்.

உன் கட்டைவிரலை எனக்குக் காணிக்கையாகக் கொடு

துரோணர் ஆச்சரியத்தால் அகல விழிகளை விரித்து, அப்படியா, கற்றுக் கொண்டாயா, எங்கே பார்க்கலாம் என்றார். குறி தவறாமல் உன்னுடைய அம்பு பாய்கிறதா பார்ப்போம் என்று பரிட்சை வைக்க, அவ்வாறே ஏகலைவன் துரோணர் காட்டிய குறியை - அவர் காட்டிய அடையாளத்தின் மீது சரியாக அம்பு எய்து வீழ்த்த - இது என்னைப் போல சிலை செய்து வைத்து நீ இந்த வித்தையைக் கற்றுக் கொண்டிருந் தாலும், நீ எனக்குத் தர வேண்டிய குரு காணிக்கையை தந்தே ஆக வேண்டும் என்று துரோணர் கேட்டார். என்ன காணிக்கை வேண்டு மானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான். ஒன்றும் பெரிதல்ல, உன்னுடைய கட்டை விரலை எனக்குக் காணிக்கையாகக் கொடு என்று துரோணர் கேட்க, அவனும் ஆசிரியர் கேட்கிறாரே, அதை மறுக்கக் கூடாதே என்று கட்டை விரலை வெட்டி காணிக் கையாகத் தந்து விடுகிறான்.

கட்டை விரலை எதற்காக கேட்டார் என்ற சூட்சுமம் மறு படியும் அவன் அந்த வில்லை கையிலே எடுத்தபோது தான் அவ னுக்குத் தெரிந்தது. கட்டை விரல் இல்லாமல் வில்லிலே அம்பை வைத்து குறி பார்க்க முடியாது. அவனால் அந்த வில்லைப் பயன்படுத்த முடியாது. தன்னிடத்திலே - உயர்குலத்தைச் சேர்ந்த தன்னிடத்திலே ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் வித்தை கற்றுக்கொண்டு, அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற அந்த மதவெறியின் காரணமாக - சாதி வெறியின் காரணமாக - ஆதிக்க வெறியின் காரணமாக அன்றைக்கே ஏகலைவன் என்ற வேடச் சிறுவனுக்கு அந்த வித்தை மறுக்கப்பட்டது, கல்வி மறுக்கப் பட்டது.

உரிய கல்வி இல்லாத கஷ்டத்தையும் - உயர்கல்வி கிடைத்திருக்கின்ற மகிழ்ச்சியையும்!

அப்படி கல்வி மறுக்கப்பட்ட பெரிய சமுதாயத்திலே இருந்து வந்த மாணவச் சிங்கங்கள்தான் - மாணவத் தங்கங்கள் தான் என் எதிரே இன்று வீற்றிருக்கின்ற காட்சியை நான் காணு கின்றேன். அன்றைக்கு ஒருவனுக்கு கல்வி இல்லை, வித்தையில்லை என்று சாதியின் பெயரால் விரட்டியடிக்கப்பட்ட அந்தக் காலத்தையும், இன்றைக்குப் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணா பெயரால் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்திலே திரண்டி ருக்கின்ற காட்சியையும் அண்ணாவின் தம்பியாகிய நான் இன்று காணும்போது - ஆனந்தம் கொள்ளுகிறேன், அக மகிழ்வு கொள்ளுகிறேன்.

இதற்கு என்ன காரணம் என்று நான் எண்ணிப் பார்க்கின் றேன். அன்றைக்குக் கல்வி தமிழகத்தில் அனுபவ ரீதியாகச் சொல்ல வேண்டுமேயானால் பெருந்தலைவர் காமராஜர் அவர் கள் ஆடு மேய்க்கின்ற சிறுவனையும், மாடு மேய்க்கின்ற சிறு வனையும் வழியிலே கண்டு, அவன் எப்படி முன்னேறுவான் என்று யோசித்து, அவனை அழைத்துப் பேசி, அவனுடைய குடும்ப நிலை என்ன, அவன் பட்டினி கிடந்துதான் படிக்க வேண் டுமென்பதை உணர்ந்து அவனுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து, அவனைப் படிக்க வைத்து, அன்றைய தினம் அவனைக் கல்வி யாளனாக ஆக்குவதற்கு அரும்பாடுபட்டார். தம்பி பொன் முடி இங்கே எடுத்துச் சொன்னதைப்போல் பெருந்தலைவர் காமராஜர் கிராமப்புற மக்களுக்கு படிப்பு வேண்டும், கல்வி வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார். அதுதான் ஆரம்பக் கட்டம். இப் போது உயர்கல்வி தந்து விட்டோம், கடந்த ஆண்டு 50 ஆயிரம், இந்த ஆண்டு இலட்சம் பேர் என்று பெருமை பேசி னாலுங்கூட, உரிய கல்வி இல்லாத கஷ்டத்தையும் - உயர் கல்வி கிடைத்திருக் கின்ற இந்த மகிழ்ச்சியையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு உயர்கல்வி பெற்றுத் திளைக்கின்ற மாணவர்கள், ஒரு காலத்திலே உரிய கல்வி கூட கிடைப்பதற்கு தடுக்கப்பட் டார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அந்த உரிய கல்வி கிடைக்காமல், அவர்கள் வேதனைப்பட்ட நேரத்தில்தான் - அந்த உரிய கல்வியைப் பெருந்தலைவர் காமராஜர் - அவர்களுக்குத் தர வழி வகுத்தார். அவர் வகுத்த வழி நின்றுதான் இன்றைக்கு நாங்கள் - உரிய கல்வி பெற்றாயா, அடுத்து உயர் கல்வியையும் பெற்றுக் கொள் என்று இன்றைக்கு அவர்களுக்கு உயர் கல்வி தருகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். அந்தக் காட்சியைத் தான் கண் கொள்ளாக் காட்சியாக என் எதிரே நான் பார்க்கிறேன். இந்தக் காட்சி வளருமேயானால், இந்தக் காட்சி பெருகுமே யானால், இந்தத் தொகை பெருகுமேயானால் இந்த மாணவர்கள் இன்னும் வளருவார்களேயானால் எதிர்காலத் தமிழகத்தை, பூங்காவனமாக, பூந்தோட்டமாக நிச்சயமாக ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கையோடு இன்றைக்கு அய்ந்து அம்சங்கள் கொண்ட இந்தப் பெருவிழா விலே என்னுடைய வாழ்த்துக்களை துணை வேந்தர் அவர் களுக்கும், ஏனைய துணைவேந்தர்களுக்கும் இங்கே வருகை தந்துள்ள மாணவக் கண்மணிகளுக்கும் வழங்கி இந்த அளவிற்கு மேல் என்னுடைய குரல் ஒத்துழைக்காது. இன்றைக்கு நான் பிடி வாதமாகப் பேசிவிட்டாலும் நாளைய தினம், அதற்கு மறுநாள் என்னால் அலுவல்களையே பார்க்க முடியாத அளவிற்கு ஆகிவிடக் கூடும். அது உங்களுக்கு நஷ்டமோ இல்லையோ எனக்கு நஷ்டம். எனக்கு நஷ்டம் என்றால், என்னுடைய செயல் களுக்கு நஷ்டம். என்னுடைய செயல்களுக்கு நஷ்டம் என்றால் ஏழைகளைத் கைதூக்கி விட ஏழைகளுக்கு கல்வி தர - ஏழை களின் பசி போக்க நான் எடுத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஆகிவிடும், ஆகவே அந்த முட்டுக்கட்டை அகல நீங்கள் எனக்கு மன்னிப்பை அளித்து, இந்த விழாவிலே இந்த அளவிலே விடை கொடுக்க வேண்டுமென்று மாணவச் செல்வங்களே, உங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

---------------- இவ்வாறு முதல்வர்கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

0 comments: