Search This Blog

14.9.08

முட்டாள்தனம் உலகுக்கே சொந்தம் என்ற தந்தை பெரியாரின் கணிப்பு உண்மையானது




* இந்தியாவின் மதவாத அரசியலைப் பார்த்துக் காப்பி அடிக்கிறார்களா?
* அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டிப் போட்டுக் கொண்டு மதவாதப் பிரச்சாரம்
* வளர்ச்சியல்ல - மதச் சார்பின்மையில் தளர்ச்சியே!

முட்டாள்தனம் உலகுக்கே சொந்தம் என்ற
தந்தை பெரியாரின் கணிப்பு உண்மையானது

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


அமெரிக்காவில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தலை தூக்கியுள்ள மதவாதப் பிரச்சாரம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:

அமெரிக்காவில் நிலவிய ஓர் மூடநம்பிக்கை நிகழ்ச்சியைப் (பல ஆண்டுகளுக்கு முன்பு) படித்த நான், பெரியார் திடலில் விடுதலை அலுவலகத்தின் ஒரு பகுதியையே தனது கொள்கை வாழ்வு இல்லமாக ஆக்கிக் கொண்டு இருந்த தந்தை பெரியார் அவர்களிடம் ஓடிச் சென்று படித்துக் காட்டினேன்! எனக்கு மிகவும் வியப்பு தந்த செய்தி அது. தந்தை பெரியாரும் அதே வியப்புடன் கேட்பார்கள் என்று நினைத்துத்தான் அப்படி அவசரமாகச் சென்று படித்துக் காட்டினேன்.

முட்டாள்தனம் உனக்குத்தான் சொந்தமா?

நான் படித்ததைக் கேட்டவுடன், தந்தை பெரியார் அவர்கள், சிரித்துக் கொண்டே முட்டாள்தனமும் மூடநம்பிக்கையும் என்ன உனக்கே சொந்தம் என்று ஏன் நினைக்கிறாய்? அது உலகத்திற்கே சொந்தம்; அமெரிக்கா என்றால் அங்கு முட்டாள்கள் இருக்க மாட்டார்களா? என்றார். இதை நான் பல முறை, பல மேடைகளில் கூறியிருக்கிறேன்.

அமெரிக்காவில் நடைபெறப் போகும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரக் ஒபாமா, மெக்கையின் ஆகியோர் முறையே ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு, கடுமையான தேர்தல் பிரச்சாரம் உச்சக் கட்டத்தில் நடந்து வரும் இப்போது, அவ்விருவருமே மத உணர்வுகளை, நம்பிக்கைகளை தமது வாக்கு வங்கியாக்கி வெற்றி பெற முயற்சிப்பது - எவ்வளவு வெட்கக்கேடானது என்பது கடந்த 12.9.2008 இந்து நாளேட்டின் நடுப்பக்கத்தில் திரு பி. சாய்நாத் என்பவர் எழுதிய ஓர் கட்டுரை மூலம் வெளியாகி உள்ளது!

அரசியலையும், மதத்தையும் தனியே பிரித்த அரசமைப்புச் சட்டம்


உலகிலேயே எழுதப்பட்ட அரசியல் சட்டங்களில் மதத்தையும் அரசியலையும் பிரித்து எழுதப்பட்ட முதல் அரசியல் சட்டம் அமெரிக்க நாட்டு அரசியல் சட்டம் என்ற பெருமை அதற்கு உண்டு. ஆனால் அதை நடைமுறையில் வாக்குகளாக, காற்றில் விட்டு வருகின்றனர் அந்நாட்டு தேர்தல் அரசியல்வாதிகளும் குடியரசுத் தலைவர்களும்!

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மதவாதம்!

கடந்த 11.9.2001-ல் நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்படக் காரணமாகவிருந்த தீவிரவாதம் பயங்கரவாதத்தின் தாய் மதவாதம்தான் என்பதை அறிந்தும்கூட, அமெரிக்கா அதுபற்றிக் கவலைப்படாமல், மீண்டும் மதவாத நஞ்சையே நாய் விற்ற காசு குரைக்காது என்பதற்கொப்ப, தேர்தல் வெற்றிக்காக படித்த பாமரர்களை மதி மயங்கச் செய்ய கடவுள் பெயரினை இழுப்பது என்ற முறை கூச்சம் இல்லாமல் அங்கே கையாளப்பட்டு வருகிறது!

ஜார்ஜ் புஷ்ஷின் கிறுக்குத்தனம்

இல்லாவிட்டால் அதிபர் புஷ், ஈராக் நாட்டின்மீது படையெடுத்து யுத்தம் நடத்த எனக்குக் கடவுள் தான் ஆணையிட்டார் என்று பகிரங்கமாகப் புளுகி, அமெரிக்கர்களை முட்டாளாக்க முனைவாரா?

அமெரிக்காவில் கிறித்துவ மதவாதம் - அடிப்படை வாதம் - வளர்ந்துள்ள அந்நாட்டின் சில மாநிலங்களில் டார்வின் சித்தாந்தமான பரிணாமத் தத்துவத்திற்கு (Evolution) விரோதமாக பிரபஞ்சம் உற்பத்தி செய்யப்பட்டது (Creation - by god) என்று பாடத்திட்டங்களில் சொல்லிக் கொடுத்து கி.மு. காலத்திற்கு முன்னே செல்லும் மூடத்தனத்திற்கு முடிசூட்டி மகிழ்வோர் இருப்பார்களா?

சாத்தானை நம்புவோர் அதிகமாம்!

போப் அவர்களே டார்வின் தத்துவத்தினை ஏற்றுக் கொண்டு அறிவியலை அவமதித்தது தவறு என்று மன்னிப்புக் கேட்ட பிறகும், கலிலியோவைச் சிறையில் அடைத்துச் சித்ரவதைச் செய்தமைக்காக மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்த பிறகும் அங்கே கிறித்துவ மதவாதம் திட்டமிட்டே பரப்பப்படுகிறது. 2007-இல் அங்கு அண்மையில் எடுத்த ஒரு சர்வேயில் டார்வினை நம்புபவர்களைவிட (டெவிலை) சாத்தானை நம்புவோரும், நரகத்தினை நம்புவோரும் 62 விழுக்காடு உள்ளனர். 79 விழுக்காட்டினர் நம்புகின்றனராம்! டார்வினை ஏற்பவர்கள் எண்ணிக்கை 42 விழுக்காடுதான்! அற்புதங்கள் நிகழ முடியும் என்று. அறிவியலாளர்கள் அதிகமானவர்கள் நோபல் பரிசு பெறும் அமெரிக்க நாட்டில் பாமரத்தனத்தின் ஆட்சியின் மாட்சிதான் என்னே!

75 விழுக்காட்டினர் மோட்சம் கண்ணுக்குத் தெரியாத பறக்கு விந்தைகள் (UFO); சூன்யக்காரிகளை நம்புவோர் 35 விழுக்காடு.

பார்ப்பனியத்தின் சேட்டைகள்!


இந்த லட்சணத்தில் அங்கே குடியேறிய இந்து பார்ப்பனிய பழக்க அடிமைகள் கோயில், யாகம், யோகம், அனுமார் சிலையை ஒபாமா மூலம் பரப்பும் தந்திரம் - கடவுள் வியாபாரத்திலும் ஈடுபட்டு, வெந்த புண்ணில் வேலைப் பாயச்சுகின்றனர்!

இந்த இரண்டு அதிபர் வேட்பாளர்களும், இந்த மத மூடநம்பிக்கையாளர்களின் வாக்குகளை எப்படி அதிகமாகப் பெறுவது என்பதுதான் அவர்களது ஆழ்ந்த சிந்தனையும் முயற்சியும்!

மதக் கிறுக்குத்தனப் பிரச்சாரத்தில் போட்டா போட்டி!

கடவுள் பிரார்த்தனை வேஷக்காட்சிகள் இரண்டு தேர்தல் பிரச்சார மேடைகளில் எவாஞ்சிலிகள் என்ற கிறித்துவர் பிரிவினை மெக்கையன் தாஜா செய்து தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு, பிரச்சார உலா வருகின்றார். ஒபாமா ஆதரவுக்காரர்கள் அவர்களை மிஞ்சி மதவாதிகளின் வாக்குகளைப் பெற புது உத்திகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனராம்.

மதவாதத்தினை அரசியலில் ஏற்று, பதவியைப் பிடித்து விட முயற்சிப்பது இந்தியாவைக் காப்பி அடித்து அமெரிக்கா வளர்ந்துள்ள நாடாக (Developed Nation) ஆகியிருக்கிறது.

வளர்ச்சியா? தளர்ச்சியா?

இது வளர்ச்சியா? ஜனநாயகத்தின் மதச்சார்பின்மையின்மை (Secularism)யின் தளர்ச்சியா? எண்ணிப் பாருங்கள்!

தந்தை பெரியார்தம் அறிவுரைதான் எத்தகைய தீர்க்க தரிசன முன்னோடி அறிவுரை! பார்த்தீர்களா?

------------------நன்றி: "விடுதலை" 14-8-2008

0 comments: