Search This Blog
10.9.08
உணவுப் பஞ்சம் போக்க வழி
உணவு முறை
ஆறு அறிவு படைத்த நமக்கு இன்று ஏற்பட்டுள்ள பெருங் கவலையும், குறையும், தொல்லையும் ``உணவு விஷயத்தில் பஞ்சம் - தேவை'' என்பது முதலாவதாகும். இப்படிப்பட்ட கவலை தோன்று வது பைத்தியக்காரத்தனமான குறைபாடேயாகும். ஏனெனில் முதலா வது இக்குறை நமக்கு நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட முறையாகும். எப்படியென்றால்,
(1) நம் மக்களுக்கு அரிசிச்சோறு தேவையற்றதும் பயனற்றதுமாகும்; பழக்கமற்றதுமாகும்.நம்வயல்கள் எல்லாம் சமீபத்தில் ஓராயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் உண்டாக்கப்பட்டவைதான்.
(2) நாம் மாமிசம் சாப்பிடுவதைவிட்டு, காய்கறிப் பண்டங்களைஉண்பதும் நமக்குக் கேடான பழக்கமாகும். இவைகளும் அரிசிக்குப் பின் உண்டாக்கப்பட்டவைகளே.
காப்பி சாப்பிடுவது என்ற கெட்ட வழக்கம் நம் நாட்டில் ஏற்பட்ட பிறகு, பாலுக்கும் சர்க்கரைக்கும் பஞ்சம் தீர்ந்தபாடில்லாமல், நிரந்தரப் பஞ்சமாகி வருகிறது. நெல்விளையும் நிலங்களில் நல்ல அளவுக்கு கரும்பு பயிராக்கப்பட்டு வருகிறது. பாலெல்லாம் பெரிதும் காபிக்குச் செலவாகிறபடியால், நாட்டுக் குழந்தைகள் பெரிதும் உரம் பெற முடியாமல் தேவாங்குகளாகவே வளரவேண்டிய தாகி விட்டன. மற்றும், சத்துள்ள தயிர், மோர், நெய் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது.சர்க்கரை ஏறக்குறைய 90 பாகம் காபிக்கே செலவாகிற படியால் விளைநிலம், நல்ல சர்க்கரை உற்பத்தி செய்யப் பட்டாலும், சர்க்கரைப் பஞ்சம் வளர்ந்துகொண்டே வருகிறது பால் பஞ்சமும் அப்படியேதான் வளர்ந்துகொண்டே போகிறது. அனாவசியமாகச் சத்தற்ற காய்கறிகள் உண்ணும் வழக்கம் வளர்ந்து, வேளாண்மைக் கேடும், பயனற்ற உணவு வளர்ச்சியும், ஏற்பட்டுப் ``போதிய அரிசி கிடைப்பது'' கஷ்டமாகி விடுகிறது.
இவைகளின் பயனாய் மனிதனின் உணவுச் செலவு, அதுவும் சத்தற்ற உணவுக்குச் செலவு 100-100 விகிதம் ஆகப்பெருகி, வாழ்க்கைச் செலவுக்குப் பணம் போதாத நிலையே வளர்கிறது.
மாற்றம் அவசியமே
இவைகளில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது கடவும், மதம், வேதம் விஷயத்தில் மாற்றம் ஏற்படுவதைவிட மிகக் கஷ்டமான காரியமாகவே இருக்கின்றது.
பார்ப்பானும் சைவனும் மாமிசம் சாப்பிடுவதில்லை. அதனால் அவர்கள் தங்களுக்குப் பெருமை ஏற்படுத்திக் கொண்டதோடு அல்லாமல், மற்றவர்களைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லாது இருக்கிறார்கள். அதோடு, அவர்கள் மாமிசம் சாப்பிடுவதை வெறுப்பதும், தாழ்வாய் கருதுவதுமான முறையில், மாமிசம் சாப்பிடுபவர்களை இழிவாய், கீழ் மக்களாய் கருதுகிறார்கள்.
இந்தப் பார்ப்பனரின் முன்னோர் ஆடு, மாடு மாத்திர மல்லாமல் , பன்றி, கழுதை, குதிரை, எருமை, மனிதன் வரை சாப்பிட்டதாக இவர்களே உண்டாக்கி வைத்திருக்கும் வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை மறந்துவிட்டு வக்கணை பேசுகிறார்கள்.
ஆகவே, இன்றை தினம் நம் உணவு விஷயங்களில் பெரும் மாற்றம் செய்யவேண்டியது இரண்டாந்தர, மூன்றாந்தர வாழ்க்கைத் தரத்தின் உண்மைகளைப் பொறுத்தவரையாவது மிக மிக அவசியமாகும்.
முதலாவது, மக்கள் காபி சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தடை செய்தாக வேண்டும். காய்கறி உற்பத்திகளை லைசென்சு கொடுப்பது மூலம் முக்கால் அளவைக் குறைத்து மாமிசம் சாப்பிடாத ஜாதியான பார்ப்பனர், சைவர்களுக்கு மாத்திரம் தேவையான அளவுக்கு உற்பத்தி
செய்யும்படி செய்யவேண்டும்.
மாட்டிறைச்சி அதிகம் கிடைக்க வழி செய்க
ஆடு, கோழி, பன்றி முதலிய மாமிசம் சாப்பிடும் மக்களை மாட்டிறைச்சியும் சாப்பிடும்படிச் செய்து, அது எளிதாய்க் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். மேல்நாடுகளைப் போல் மாட்டுப்பண்ணைகளை வைத்துக்கொள்ளவேண்டும். பசு மாடுகளைப் பால் கறவைக்கு வைத்துக்கொள்ளவேண்டும். மேல்நாடுகளைப் போல் விவசாயத்துக்கு மாடுகளே தேவையில்லாமல் எந்திரங்களைப் பயன்படுத்தச் செய்ய வேண்டும்.
உணவுப் பக்குவ முறை
உணவுப் பக்குவ முறையும் - சுத்த சோம்பேறிகள், உடல் நலுங்காமல் ஊரார் உழைப்பில் உயிர்வாழும் சோம்பேறிகளால் திட்டப்படுத்தப்பட்ட முறையாதலால், நம் உணவு முறை நம் மக்களுக்குப் பெரிய பாரமாக இருக்கிறது. பகலில் சோறு, குழம்பு, ரசம், பொறியல்(ஒரு காய் ), மோர். காலையில் இட்லி அல்லது தோசை, உப்புமா, காபி அல்லது டீ. இரவிலும் இவையோ,இவற்றில் ஏதாவது ஒன்று எவ்வளவு வருமானம் குறைந்த சமுதாயமும் இவற்றும் ஏதாவது ஒன்றைத்தான் குறைத்துக் கொம்வார்களே தவிர முறையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இவற்றிலும் வடநாட்டார் பெரிதும் சுருக்கி,
(1) சப்பாத்தி அல்லது பூரி.
(2) இதற்கு ஏதாவது காய்வகை அல்லது பருப்பு, பணக்காரர் இவற்றுடன் இனிப்புப் பண்டங்களைப் பயன்படுத்திக்கொம்வர்.
உலகில் உள்ள சுமார் 370 கோடி மக்களில் 15 கோடிமக்கள் தான் மாட்டு மாமிசம் சாப்பிட்டுப் பழகாதவர்களாக இருக்கக்கூடும்.
உணவுப் பஞ்சம் போக்க வழி
விவசாயத் துறையில் இன்று நடைபெறும் வயல்பரப்பிலும் முயற்சியிலும் பாதி நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்த நேரத்தில் ஆடு. மாடு, கோழி, பன்றி, மீன், வளர்ப்பில் கவனம் செலுத்தி நல்ல அளவுக்குப் பெருக்குவோமானால் - காபியையும் தடைப்படுத்தி விடுவோமானால் உணவுப் பஞ்சம் என்கின்ற சொல் அகராதியில் கூட இல்லாத அளவுக்கு ஒழித்துவிடலாம்.
காபி என்பதற்கு நாகரிகத்தினால் மனிதன் அடிமைப்பட்டு வாழ்க்கைச் செலவைப் பெருக்கிக்கொண்டான். அதுபோலவே அரிசிச் சாதமும் நாகரிகத்தில் பட்டுவிட்டதால் இதற்கு மனிதன் அடிமைப் பட்டு வாழ்க்கைச் செலவையும் பெருக்கிக்கொண்டு சத்துள்ள கேப்பை, கீரைகளையும் புறக்கணித்துவிட்டான். இன்று உழைப்பாளிகள் வேலை நேரமும் குறைந்துவிட்டதற்கும் வேலை செய்யும் நேரங்களிலும் அவர்கள் நாணயக் குறைவாக நடப்பதற்கும் இந்தச் சத்தற்ற உணவுமுறை தான் காரணம் என்று சொல்லுவேன்.
புரட்சி அவசியம்
எனவே உணவுத் துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்படவேண்டும்.
அரிசிக்குப் பதிலாக வேறு ஏதாவது இராசாயனப் பொருளைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும். நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயங்க வைத்தோம். பிறகு மண்ணெண்ணை, குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற்கேற்றார் போல் மாற்றி ஓடச் செய்கிறோம். அதுபோலவே மனித எந்திரத்தையும் பெருந்திண்டி மூலம் ஓடச் செய்யாமல் மின்சாரம் போன்ற சக்தி வஸ்துவைக் கண்டு பிடித்து(சிறிய உணவை) அதைக் கொண்டே மனிதனை இயங்கும் படியும். உயிர் வாழும் படியும் செய்யவேண்டும். இது செய்ய நாளாகும் என்றாலும் இப்போது அவசரத்தில் ரொட்டியையும்,ஆடு, மாடு, பன்றி, மீன் முதலிய இறைச்சிகளையும் தேவையான அளவுக்கு குறைந்த செலவில் உற்பத்தி செய்து எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்வது அவசியமாகும். இதைக்கண்டு நமது நாட்டு மக்கள் என் மீது ஆத்திரப்படுவார்கள் அவர்களுக்கு நான் கூறும் பதில், மற்ற நாட்டுக்காரர்களையும் நம் மக்களையும் பாருங்கள் என்பது தான்.
--------------தந்தைபெரியார் - நூல்: -கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தொகுத்த "பெரியார் ஒரு வாழ்க்கைநெறி" பக்கம் 3-7
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment