Search This Blog

27.9.08

பெரியார் பணக்காரர்களின் ஏஜெண்டா? மேட்டுக்குடி மக்களின் பாதுகாவலரா? - திரிபுவாதத்துக்கு சம்மட்டியடி!தந்தைபெரியார் ஓர் இமய மலை; அந்த இமயமலையை இன்றைக்குச் சில எலிகள் தங்கள் வாலால் அளக்க முயலுகின்றன. தலைமுறைத் தலைவர் பெரியார் ஒரு நைல் நதி; அந்நதியை இன்றைக்குச் சில மீன்கள் தங்கள் செதில்களால் அளக்க முயலுகின்றன. அறிவு ஆசான் பெரியார், ஒரு பெரு நெருப்பு; அந்நெருப்பினைச் சில கட்டெறும்புகள் தங்கள் கால்களால் எடை போடத் தொடங்கியிருக்கின்றன. உயராய்வு மய்யங்களும் அறிவுலக மேடைகளும் ஆராய வேண்டிய பகுத்தறிவுப் பகலவனை, டீக்கடை பெஞ்சுகளும் திண்ணைப் பேச்சுகளுமா எடை போடுவது?

பொது வாழ்க்கையில் நகக் கண்ணில்கூட அழுக்குப் படியாமல் வாழ்ந்தவர் பெரியார்: அவருடைய தாடிமுடிகளில் கூடப் படிகத்தின் பரிசுத்தம் உண்டு. பெரியாருடன் சில ஆண்டுகள் பழகியதாலும், அவருக்குக் கீழ் பணியாற்றியதாலுமே, பெரியாரை முழுதாக உணர்ந்து கொண்டேன் எனச் சொல்லிவிட முடியாது. கடற்கரையின் ஒரு பக்கத்தில் நிற்பவன், மறு கரையைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும்? ஒரு புறத்தில் காற்றின் ஈரப்பசையை உணர்ந்தவன், அதன் மற்ற பக்கங்களைப்பற்றி எப்படிச் சொல்ல முடியும்?

கோவை அய்யாமுத்து அவர்கள் தந்தை பெரியாருக்குக் கீழ் காங்கிரஸ் கட்சியிலும், குடிஅரசு பத்திரிகையிலும் பணியாற்றியது உண்மை. அய்யாமுத்து இயல்பூக்கங்களால் உந்தப்பட்டு, உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போனவரே தவிர, கொள்கைவயப்பட்டுக் குன்றென நின்றவர் அல்லர் என்பதை, அவருடைய சுயசரிதையைப் படிப்பவர்கள் உணர்வர். அப்படிப்பட்டவர் அய்யாவின் மேலாண்மைத் திறத்தை நேரில் கண்டு, மெய்மறந்து நிற்கிறார்.

திருப்பூரிலிருந்த தமிழ்நாடு காதிபோர்டின் தலைவராக ஈ.வெ.ரா. இருந்தார். க. சந்தானம் அதன் காரியதரிசி. தெருத் தெருவாய் கதர் சுமந்து கொண்டுபோய் விற்பதற்கு அய்யாசாமியும் நானும் நாயக்கரிடம் கதர் கடனாகக் கேட்டோம். அவரா கடன் கொடுப்பார்? 500 ரூபாய் ரொக்கமாகக் கொடுத்துக் கதர் வாங்கி வந்தோம்...

நாயக்கர் ஒரு சிறந்த உழைப்பாளி. அவரது அயராத உழைப்பும் ஊக்கமும் எங்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தன. சோறு, தண்ணீர், உறக்கம் ஆகியவற்றை அவர் பெரிதாகப் பொருட்படுத்த வில்லை. எந்த இடத்தில் எது கிடைத்ததோ அதைச் சாப்பிட்டு விட்டுத் தெருவிலோ, திண்ணையிலோ, மரத்தடியிலோ, எங்கு வேண்டுமானாலும் அவர் துப்பட்டியை விரித்துப் படுத்துறங்கினார். நாயக்கர் ஒரு கர்மயோகியாகவும், தன்னலமற்ற தியாகியாக வும் விளங்கினார் என இரத்த சாட்சியாக எழுதுகின்றார்
(எனது நினைவுகள்: பக்.205-206) அய்யாமுத்து


பொது வாழ்க்கையில் நேர்மையும், நாணயமும் பெரியாருக்கு இரண்டு கண்களாய் அமைந்தவை. குடிஅரசு பத்திரிகையில் அய்யாமுத்துவைப் பெரியார் அவர்கள் எவ்வளவு மரியாதையோடு வைத்திருந்தார் என்பதற்கு அய்யாமுத்துவின் நினைவுக் குறிப்புகளே போதுமானது. ஒரு நாள் பகல் குடிஅரசு காரியாலயத்தில் கண்ணப்பரும் நாயக்கரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். நாயக்கர் வந்திருக்கிறார் என்பதை ஆபீஸ் பையன் மூலமாக அறிந்த என் மனைவி, எப்போதையும் விடக் கொஞ்சம் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருந்தாள். அய்யாமுத்து தனது யோக்யதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார் எனக் கண்ணப்பரிடம் நாயக்கர் கூறியது என் காதில் விழுந்தது.. உடனே சாவிக்கொத்தை நாயக்கரின் மீது வீசி எறிந்துவிட்டு, உங்கள் குடிஅரசு பணத்தில் கறியும் மீனும் முட்டையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க எனக்குப் பிரியமில்லை. புஞ்சைப் புளியம்பட்டிக்குப் போய் எப்போதும் கம்பங்கூழ் குடிக்கப் போகிறேன் எனும் அய்யா முத்துவின் வாக்கு மூலமே (பக்.259-260) பெரியாரின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டுவதாகும். கம்பங்கூழ் சாப்பிடுபவரை, கறியும் மீனும் முட்டையும் சாப்பிட வைத்து, பெரியாரின் சமத்துவ உணர்வைக் காட்டாதா?

அய்யா அவர்கள் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில், குடிஅரசு பத்திரிகையின் கணக்கு வழக்கைச் சரியாக வைக்காத காரணத்தால், ஒரு தமிழறிஞரையே வீட்டுக்கு அனுப்பினார் எனும் செய்தி நடுத்தெரு நாராயணன்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்!

பெரியாரிடத்திலேயே குருகுலவாசம் செய்த சாமி ஒருவர் கடைசி காலத்தில், தடம் புரண்டு, பெரியாரிடம் இவ்வளவு சொத்து இருக்கிறது என்று வருமான வரித்துறைக்கு எழுதிவிட்டார். அதற்குத் திருவல்லிக்கேணி கூட்டத்தில் பதில் சொல்ல வந்த பெரியார், என்னிடம் இருக்கின்ற சொத்தை ஏன் குறைத்துச் சொன்னாய்! நீ சொன்னதை விட இத்தனை இலட்சங்கள் அல்லவா என்னிடம் அதிகமாக இருக்கின்றன. நாடு, அதனை எடுத்துக் கொள்வதாக இருந்தால் எடுத்துக் கொள்ளட்டுமே! என் குடும்பத்துக்காகவா வைச்சிருக்கேன்; நீ ஏன் அயோக்கியத்தனமா குறைச்சுச் சொல்றே என்றாரே, இந்தக் கண்ணியத்தை உலகத் தில் எந்தத் தலைவரிடம் காண முடியும்?


பெரியாரின் மனிதநேயத்திற்கு அய்யாமுத்துவைக் காட்டிலும் வேறு யாரும் பட்டயம் தீட்ட முடியாது. அய்யாமுத்து அவர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, சட்டத்தின் கிடுக்கிப்பிடியில் சிக்குண்டு கிடந்த நேரத்தில், அய்யா அவர்கள் அவரைத் தேடிச் செல்கிறார். சென்னையோடு நாயக்கருக்கும் எனக்கும் இருந்த உறவு அற்றுப் போயிருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தேன். நாயக்கர் என் போன்ற சின்ன மனிதர் அல்லவே! அவர் சொற்பமான வரும் அல்லவே! பெரியார் அல்லவா? பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க்கும்மே எனச் சும்மாவா பாடினான்! இராமசாமிப் பெரியார் என்னைத் தேடிக் கொண்டு ஒரு நாள் புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்த எனது கதர்க்குடிசைக்கே வந்து விட்டார். வாருங்கள்! வாருங்கள்! என ஆனந்தக் கூத்தாடி எழுந்து நின்று அவரை வரவேற்றேன்.
நாயக்கர் அகஸ்மாத்தாக அங்கு வரவில்லை; தற்செயலாகவும் அந்தச் சந்திப்பு ஏற் படவில்லை. ஈரோட்டைவிட்டுப் புறப்படும் போதே என்னைப் பார்க்க வேண்டும் என்று புரோகிராம் போட்டுப் புறப்பட்டிருக்கிறார். ஈரோட்டில் நிகழவிருக்கும் சுயமரியாதை மாநாட்டில் நான் பங்கு பெற வேண்டும் என்றார். நான் கதர்க்கடையில் கட்டுண்டுக் கிடக்கின் றேனே என்றேன். மாநாட்டுப் பந்தலில் டிக்கெட்டுகள் விற்கும் பொறுப்பை நீங்கள் தான் ஏற்க வேண்டும். நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். அந்த வேலைக்குப் பொறுப்பான ஆள் உங்களைத் தவிர வேறு யாரும் என் கண்ணில் படவில்லை என்று பேச்சை முடித்தார். அந்தப் பெரிய மனிதரே கையைப் பிடித்து அழைக்கும் போது எப்படி மாட்டேன் என்று சொல்வது?
என அய்யாமுத்துவே (ப.267 -268) அய்யாவின் தோழமை உணர்வுக்குச் சாசனம் தீட்டும்போது, நடுத்தெருவிலே இருப்பவர் கள் ஊளையிட்டு என்ன பயன்?


தந்தை பெரியார் ஏதோ பணக்காரர்களின் ஏஜெண்டு போலவும், மேட்டுக்குடி மக்களின் பாதுகாவலர் போலவும் சித்தரிக்கத் துடிக்கும் நூலோர்கள், அய்யாமுத்து வின் எழுத்துகளை மறுவாசிப்பு செய்துவிட்டு, மனசாட்சியோடு யோசித்துப் பார்த்தால், பெரியார் ஒரு வரலாறு காணாத சமூகப் பேராளி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அய்யாமுத்து அவர்களின் மதிப்பீட்டிலும் தமிழினத்தின் கணக்கீட்டிலும் தந்தை பெரியார் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் என்பதை அவருடைய நினைவுக் குறிப்புகளைப் படித்தாலே தெற்றெனப் புலப்படும். உப்புச் சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்தபோதே, சுயமரியாதை மாநாடும் நிகழவிருந்தது. தோழர் ஜீவானந்தம் அவர்கள் அப்போது, சுயமரியாதை மாநாட்டை ஒத்தி வைத்துவிட்டு, அனைவரும் உப்பு சத்தியாக்கிரகத்திற்கு வருவதற்கான ஒரு தீர் மானத்தை மாநாட்டில் முன்மொழிந்து பேசவிருந்தார். தோழர். ஜீவா அவர்கள் ஓர் ஆற்றல் மிக்க பேச்சாளர் என்பதை நன்கறிந்த பெரியார் அவர்கள், கோவை அய்யாமுத்துவைச் சந்தித்து, அரசியல் விடுதலைக்குக் காந்தியார் பாடுபடட்டும்: அதை நாம் ஆட்சேபிக்க வேண்டாம். சமுதாய விடுதலைக்கு, முக்கியமாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு நாம் பாடுபடுவோம். தீண்டப்படாத மக்கள் கோயில் குளங்களில் பிரவேசிப்பதற்காக, நாம் சிற்சில இடங்களைத் தேர்ந்தெடுத்துப் போராட்டம் துவங்குவோம். நமது இயக்கத்தில் தீவிரமாக உள்ள ஊழியர்கள் ஏற்ற அளவில் இல்லை. அந்த நிலையில் நாம் காங்கிரஸ் துவங்கியுள்ள போராட்டத்தில் கலந்து கொண்டால், நமது இயக்கம் அத்தோடு முடிந்து விடும் என்று எடுத்துரைத்தார்.
நாயக்கரின் நம்பிக்கை பாழாகக் கூடாது என்று நானும் ஜீவாவின் தீர்மானத்தை, எதிர்த்துப் பேசித் தோற்கடித்தேன் (பக்.269-270) என வாக்குமூலம் தருகின்றார் அய்யாமுத்து!


வரலாற்று உண்மைகள் இவ்வாறிருக்க, பன்றிகள் தின்பதற்காகவே மலத்தைத் தள்ளுகின்ற சில பேனா முனைகளை என்ன செய்யப் போகின்றீர்கள்? இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டுக்கோட்டையார் பாடியது, இன்று எவ்வளவு பெரிய நிதர்சனமான உண்மையாயிற்று! தந்தை பெரியார் ஒரு சீனச் சுவர்! அதனை எத்தனை எலிகள் சுரண்டினாலும், அவற்றின் பல்லுடையுமே தவிர, அச்சுவற்றின் கல்லைக் கூடப் பெயர்க்க முடியாது. தந்தை பெரியார் ஒரு கலங்கரை விளக்கம்! அதன்மீது காகங்கள் கழியலாம்; ஆனால், அதன் ஒளி வீச்சை எந்தக் காகத்தினாலும் மறைத்து விட முடியாது.


------------------ தி. இராசகோபாலன் அவர்கள் 27-9-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

1 comments:

Thamizhan said...

பெரியார் அவர்கள் அறக்கட்டளை ஏற்படுத்திய போது மிகவும் ஆழமாகச் சிந்தித்து அற்புதமாக வார்த்தைகளைப் போட்டு அறிவு பூர்வமாக எழுதியுள்ளார்.
யாரும் அதில் கைவைத்து விட முடியாது.
கைவக்க முயன்ற அத்துனை பேரும் சூடு போட்டுக் கொண்டு இருந்த இடமே தெரியாமல் மறைந்து விட்டதுதான் வரலாறு.