Search This Blog
30.9.08
கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும்
கடவுள் குழப்பம்
கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதன் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவருமே இல்லை. ஒரு வஸ்து இருந்தால்தானே அது இன்னது என்று புரிந்து கொள்ள முடியும். அது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒருவிதமாய் கடவுளைப் பற்றி உளறிக்கொட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு பெயரும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் எண்ணிக்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் உருவமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் குணமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் செய்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்த இலட்சணத்தில் கடவுளைப் பற்றிப் பேசும் பெரிய அறிவாளிகள் பெயரில்லான் - உருவமில்லான் - குணமில்லான் என்பதாக உண்மையிலேயே இல்லானை இல்லான் - இல்லான் - இல்லான் என்றே அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகிறவர்களே பல பெயர், பல உருவம், பல குணம், பல எண்ணிக்கை முதலியவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம்விட கடவுள் நம்பிக்கைக்காரர்களிடம் இருக்கும் ஒரு அதிசய குணம் என்னவென்றால், எந்த கடவுளைக் கும்பிடுகிறவருக்கும் கடவுள்கள் யார்? தேவர்கள் யார்? இவர்களுக்கு ஒருவருக்கொருவருள்ள வித்தியாசம் என்ன என்பதில் ஒரு சிறு அறிவும் கிடையாது. மற்றும் ஒரு அதிசயம் - கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது, தமிழிலும் கிடையாது.
தமிழில் சொல்லப்படும் கடவுள் என்கின்ற சொல்லுக்கு உண்டான கருத்துக்கு தமிழிலும் ஒரு சொல் காணப்படுவதற்கு இல்லை. அதுபோலவே அதற்கு (கடவுள் என்பதற்கு) வடமொழியிலும் சொல் காணப்படுவதற்கு இல்லை. ஆரியர் (பார்ப்பனர்) தேவர்கள் என்ற சொல்லை வேத காலத்தில் உற்பத்தி செய்து கொண்டு அதுவும் மேல்நாட்டில் அய்ரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும் இருந்த பழங்கால மக்கள் கற்பித்துக் கொண்ட பல தெய்வங்களை தேவர்களாக ஆக்கி வேதத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எகிப்தியர்கள், கிரேக்கர்கள், காக்கேசிய மலைச்சாரலில் இருந்தவர்கள் முதலியவர்கள் வணங்கி வந்த தெய்வங்களேத் வேதத்தில் காணப்படும் அத்தனை தேவர்களுமாவார்கள். அதாவது, சிவன், இந்திரன் - ஜூபிடர் ஆகிய இருவருக்கும் பிரம்மாவுக்கு - சாட்டர்னஸ் யமனுக்கு - நெப்டியூன் வருணனுக்கு - சோல் சூரியனுக்கு - லூனஸ் சந்திரனுக்கு - சயோனஸ் விஸ்வகர்மாவுக்கு - காண்டர்போல்வரஸ் கணபதிக்கு - ஜூனஸ் குபேரனுக்கு - புளூட்டர்ஸ் கிருஷ்ணனுக்கு - அப்போலா நாரதனுக்கு - மெர்குரியன் ராமனுக்கு - பர்கஸ் கந்தனுக்கு - மார்ஸ் துர்க்கைக்கு - ஜூனோ சரஸ்வதிக்கு - மினர்வா ரம்பைக்கு - வீனஸ் உஷாவுக்கு - அரோரா பிருதிவிக்கு - சைபெல்வி ஸ்ரீக்கு - சிரஸ் என்கின்ற பெயருடன் இவை மேல்நாட்டிலிருந்த தெய்வங்களாகும். மற்றும் இவர்கள் நடத்தை முதலியவற்றை `புரட்டு இமாலயப் புரட்டு' என்கின்ற புத்தகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
சாதாரணமாக தமிழனுக்கு தொல்காப்பியத்திற்கு முந்திய இலக்கிய நூலோ இலக்கண நூலோ கிடையாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஏதோதோ இருந்ததாகச் சொல்லி அவை மறைந்துவிட்டன என்கிறார்கள். இது இன்றைய சைவ - பெரியபுராணம், வைணவ இராமாயணம் போன்ற புளுகுகளில் சேர்க்கப்பட வேண்டியவையே தவிர காரியத்திற்குப் பயன்படக்கூடியவை அல்ல. இந்த கடவுள் என்னும் சொல்லும் தமிழனுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டில் கற்பிக்கப்பட்ட சொல்லே அல்லாமல் பழங்காலச் சொல்லென்று சொல்ல முடியாது.
தமிழனது இலக்கியங்களும் தொல்காப்பியத்திற்கும் பிற்பட்டவையேயாகும். தொல்காப்பியனையும் ஆரியன் என்றுதான் சொல்லவேண்டும். தொல்காப்பியமும் ஆரியன் வருகைக்குப் பிற்பட்டதேயாகும். இன்றைய நம் கடவுள்கள் அத்தனையும் பிர்மா, விஷ்ணு, சிவன், அவனது மனைவி பிள்ளைக்குட்டிகள் யாவும் ஆரியக் கற்பனை, ஆரிய வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டவை என்பதல்லாமல் தமிழர்க்குரியதாக ஒன்றுகூடச் சொல்ல முடியவில்லை. சிவனும், மாலும் (விஷ்ணுவும்) தமிழன் கடவுள்கள் என்கிறார்கள் சிலர். இந்த சிவன், விஷ்ணுக்களை இன்று வணங்கும் சைவ, வைணவர்கள் கோயில்களில் அவற்றுக்குக் கொடுத்திருக்கும் குணங்கள், செய்கைகள், உருவங்கள், சரித்திரங்கள் ஆகியவற்றில் எது, எந்தக் கடவுள், எந்தக் கோயில் தமிழுக்கு, தமிழனுக்கு உரியது என்று எந்த சைவ, வைணவராவது சொல்ல முடியுமா? சிவன் - தமிழன் என்றாலும் விஷ்ணு தமிழனென்றாலும், சைவம் - வைஷ்ணவம் என்னும் சொற்களும் அதன் இலக்கணங்களும் வடமொழி முறைகளேயாகும். லிங்கம், சதாசிவம் முதலிய சொற்கள், அதன் கருத்துகள் ஆரிய மொழிகளேயாகும். நமது கோயில்களிலே உள்ள கடவுள், அவற்றின் சரித்திரங்கள் புராணங்கள் எல்லாமுமே வடமொழி ஆரியக் கருத்துகளேயாகும். இன்றும் வடமொழிப் புராணங்கள் இல்லாவிட்டால் சைவனுக்கோ வைணவனுக்கோ கடவுள், மத இலக்கியங்கள் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? மத இலக்கியங்கள் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? ஒன்றும் காணமுடியவில்லையே? ஆரியம் இல்லையானால் சைவ, வைணவர்களுக்கு கடவுளும் இல்லை, சமயமும் இல்லை என்றுதானே சொல்ல வேண்டி இருக்கிறது. இன்றும் நம்மில், 100-க்கு 99 பேர்களுக்கும் ராமனும் கிருஷ்ணனும் சுப்ரமணியனும் விக்னேஸ்வரனும்தானே பிரார்த்தனைக் கடவுள்களாக இருக்கிறார்கள்? எந்த சைவ, வைணவக்ஷேத்திரங்களை எடுத்துக் கொண்டாலும் காசி முதல் கன்னியாகுமரி வரை ஆரியக் கடவுள்கள் கோயில்களையும் தீர்த்தங்களையும் கொண்டவையாகத்தானே காண்கிறோம்? தமிழனுக்கு கோயில் ஏது? தீர்த்தங்கள் ஏது? ஆகவே தமிழனுக்கு கடவுள்கள் இல்லை, கோயில்கள் இல்லை, தீர்த்தங்கள் இல்லை, திருப்பதிகள் இல்லை. இருப்பதாக காணப்படும், சொல்லப்படும் அத்தனையும் பார்ப்பான் பிழைக்கவும், அவன் ஆதிக்கத்திற்கும் நம்மை இழி மகனாக்கவும் மடையனாக்கவும் ஏற்படுத்தப்பட்டவையேயாகும் என்பதை உணர்ந்து மக்கள் ஒழுக்கத்துடனும் நாணயத்துடனும் நன்றி அறிதலுடனும் வாழ்வதையே நெறியாகக் கொண்டு வாழ வேண்டுமென்பதாக திராவிடர் கழகத் தோழர்கள் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
------------------தந்தைபெரியார் - "விடுதலை" 7.10.1962
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment