Search This Blog

22.9.08

பகுத்தறிவு பரவுவதுதான் - பரப்பப்படுவதுதான் சரியான தீர்வு

பகுத்தறிவுப் பிரச்சாரம் தேவையே!

திருச்சிராப்பள்ளியில் 21.9.2008 அன்று தி.மு.க.வின் சார்பில் முப்பெரும் விழா வெகுசிறப்புடன் நடைபெற்றுள்ளது. மாநில மாநாடோ என்று வியக்கும் அளவுக்கு ஏற்பாடுகளும், மக்கள் திரளும் கண்டோரை மலைக்கச் செய்துள்ளது.

அவ்விழாவில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கலைஞர் ஆகியோரின் பெயரால் தக்கார்க்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தலைவர்களின் பெயர்களால் விருதுகள் வழங்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதாகும். பெறுகிறவர்கள் பெருமைக்கு உரியவர்கள் ஆகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்தத் தலைவர்கள் யார் - அவர்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் எத்தகையவை என்பது புதிய தலைமுறையினர்க்கு வாழையடி வாழையாக நினைவூட்டப்படுகின்றன. இதன்மூலம் வரலாறு இடையில் தொய்வுக்கு ஆளாகாமல் தொடர்வதற்கு வாய்ப்பும் உள்ளது.

அவ்விழாவில் பங்குகொண்ட மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் கூறிய செய்திகள், கருத்துகள்பற்றி விழா நிறைவுரையில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடத்தில் நிலவும் மூட நம்பிக்கை, சிசுக்கொலை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, தீண்டாமைக் கொடுமை, சடங்கு கள், ஜாதிப் பஞ்சாயத்து முறை, கந்து வட்டிகள் இவை ஒழிக்கப்பட வேண்டும்; இதற்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் அதிகம் தேவைப்படுகிறது; இதனை கலைஞர் அவர்கள்தான் செய்ய முடியும் என்ற கருத்தினை நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி நிறைவுரையில் முதல்வர் கலைஞர் அவர்கள், பெரும்பாலும் இந்தக் கொடுமைகள் களையப்பட பகுத்தறிவு பரவுவதுதான் - பரப்பப்படுவதுதான் சரியான தீர்வு என்றும் குறிப் பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் விருதினைப் பெறும் கலைஞர் அவர்கள் முன் இந்தக் கருத்துகள் வைக்கப்பட்டதும், அதற்கு முதல்வர் கலைஞர் அவர்கள், பகுத்தறிவு மக்கள் மத்தியில் பரப்பப்படுவதன்மூலமே இவற்றிற்கெல்லாம் தீர்வு காணப்பட முடியும் என்று அறுதியிட்டுக் கூறியது மிகவும் பொருத்தமானதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமை என்ற பகுதியிலும் (51-ஹ துணைப் பிரிவு) இது வலியுறுத்தப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம், ஆராய் வதில் ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும் ஆவன புரிவதைத் தமது கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் - இது ஒவ்வொரு குடிமகன்(ள்) கடமை என்று வலியுறுத் தப்பட்டுள்ளது.


இவ்வளவு முக்கியமான அடிப்படைப் பிரச்சினையின்மீது படித்த குடிமகனேகூட அக்கறை செலுத்துவது கிடையாது என்பதோடு மட்டுமல்லாமல், படிப்பில் பல பட்டங்கள் பெற்ற நிலையில் உள்ள வர்களேகூட பாமரத்தனமான மூட நம்பிக்கைச் சகதியில் தங்களைப் புதைத்துக் கொள்கிறார்கள் என்பது மகாமகா வெட்கக்கேடு!

இதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது நமது கல்வி முறையாகும். விஞ்ஞானம் என்பது ஏதோ மதிப்பெண் வாங்கும் வெறும் பாடமாக இருக்கிறதே தவிர, விஞ்ஞான மனப்பான்மை யைத் தூண்டும் திட்டமாக இல்லை என்பது பெரிதும் வருந்தத் தக்கது.

மொழிப் பாடம் என்ற பெயரில் கடவுள் வாழ்த்து இடம்பெறுகிறது. பித்தா பிறைசூடி பெருமானே! என்ற பாடலில் சிவபெருமான் தலையில் சூட்டப்பட்டிருக்கும் சந்திரனே! என்று விளிக்கப்படுகிறது.
சந்திரன் - பூமியின் ஒரு துணைக்கோள் என்பதுதான் அறிவியல் ரீதியானது; ஆனால், தமிழ்ப் பாடத்தில் அதற்கு மாறாக சிவபெருமான் தலையில் சூடப்பட்டதுதான் சந்திரன் என்கிற தெய்வீக ஒப்பனை வழங்கப்பட்டால், அதனை மனப்பாடம் செய்யும் ஒரு மாணவன் எப்படி அறிவியல் சிந்தனையோடு வளர வாய்ப்பு ஏற்பட முடியும்?


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்விக் கூடங்கள் செய்ய முன்வராத பகுத்தறிவுப் பணியை தந்தை பெரியார் அவர்களும், அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகமும், அதன் தொண்டர்களும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கை ஒழிப்பை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தால் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சாரத்துக்கு நியாயமாக அரசுகளேகூட துணை புரியவேண்டும். மாறாக, பகுத்தறிவுப் பிரச்சாரம் ஊர்வலம் போன்றவைகளுக்கு அரசு இயந்திரமான காவல்துறையே தடையாக இருப்பது வெட்கக்கேடானதாகும்.

அரசு விழாக்களும்கூட மூட நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும்போது (பூமி பூஜை என்ற பெயரில் அர்ச்சகரை அழைத்து சடங்குகளைச் செய்விப்பது உள்பட) மூட நம்பிக்கைகள் ஒழிக்கப் படவேண்டும் என்று மத்திய அமைச்சராக இருக்கக் கூடியவர் சொல்வது வியப்பானதாகவே இருக்கிறது.

முதலில் அரசு அலுவலகங்களில், வளாகங்களில் அரசு விழாக்களில் எவ்வித மூட நம்பிக்கைகளுக்கும் இடமில்லாத வகையில், மதச் சார்பற்ற தன்மையில் துலங்க சட்ட ரீதியாக திரு. ப. சிதம்பரம் அவர்கள் அமைச்சராக இருக்கும் இந்திய அரசு செய்ய முன் வரவேண்டும்.

இதனை அமைச்சரவையில் கூட ப. சிதம்பரம் முன்வைக்கலாம். மக்களிடத்தில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை திராவிடர் கழகம் செய்வதுபோல, செயல்படவேண்டும் - இன்னொரு பக்கத்தில் அரசு மட்டத்தில் சட்டப்படியான நடவடிக்கைகளைச் செய்யவேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.

-------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 22-9-2008

0 comments: