Search This Blog

17.9.08

படைப்போம் பெரியார் உலகை!
இன்று தந்தை பெரியார் பிறந்த நாள். 130 ஆண்டுகளுக்கு முன் ஈரோடு மண்ணில் பெரும் செல்வந்தர் வீட்டில் பிறந்த தந்தை பெரியார், சிறு வயது முதலே மிகவும் வித்தியாச மானவராக வளர்ந்தார்.

அவருக்கு யாரும் குரு இல்லை - அவரே குரு. பரந்துபட்ட உலகத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவம் - அவருக்கே உரித்தான சிந்தனை என்னும் இரசாயனத்தால் புதிய புதிய முடிவுகளைக் கொடுத்தது.

அவருக்குமுன் நின்று கொண்டிருந்த சமுதாயம் மூட நம்பிக்கையின் மொத்த உருவமாக, வைதிகத்தின் வலுவான கோட்டையாக சமூக அநீதியின் வார்ப்படமாக பெண்ணடிமை யின் பேருருவமாக, சுரண்டலுக்கு வழிவகுத்துக் கொடுக்கும், சூழ்ச்சிப் பொறியாக பிறவியிலேயே ஏற்றத்தாழ்வு பேசும் பிறவி முதலாளித்துவ - பிறவி தொழிலாளித்துவக் கூடாரமாக எல்லா நிலையிலும் ஏற்றத் தாழ்வு என்னும் சொறி பிடித்த நோயாளி யாகக் காட்சி அளித்தது.

இந்த கசலத்துக்கு ஒரு மருந்து தேவை என்பதை உணர்ந்தார். அடிப்படைச் சிந்தனை மாற்றம் - பகுத்தறிவு என்னும் பகலவனின் ஒளியால் ஏற்பட வேண்டும் என்பதிலே தெளிவாக இருந்தார். மருத்துவத்திலே இருவகை உண்டு; ஒன்று மருந்து மாத்திரையால் குணப்படுத்த முயலும் முறை - மற்றொன்று அறுவை மருத்துவம் (Surgical Cure).

நெடுநாள் நோய், முற்றிய நோய் புணுகு பூசுவதால் ஒன்றும் தேறாத நிலை. அறுவைப் பண்டுவமே சரியானது என்று ஒரு தனி மனிதராகப் புறப்பட்டார்.

இதுபற்றி நூற்றாண்டு காணும் அறிஞர் அண்ணா கூறுகிறார்.

ஒருவர் புறப்பட்டு, அயராது உழைத்து உள்ளதைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறு எங்கும் இருந்ததில்லை.

அந்த வரலாறு தொடங்கப்பட்டபோது நான் சிறுவன். அந்த வரலாற்றிலேயே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாட்களிலே நான் பெரியாருடன் பணியாற்றியிருக்கிறேன் என்று அறிஞர் அண்ணா அவருக்கே உரித்தான நடையில் குறிப்பிட்டுள்ளார். (தந்தை பெரியார், பிறந்த நாள் விடுதலை மலர், 17.9.1967).


தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அவர் தத்துவம் அவர் மறைந்த காலத்திற்குப் பிறகும் அதிகமாகப் பேசப்படுகிறது - தேவைப்படுகிறது என்று உணரப்படுகிறது.

இந்து மதம் வேர்ப் பிடித்த இந்தியாவில் சமூகத்தின் அனைத்துப் பரப்பில் ஆரிய ஆதிக்கம் என்னும் ஆதிக்கத்தின் - அதிகாரத்தின்கீழ் ஒடுங்கிக் கிடந்தது.

இந்தக் கோட்டையின் தாய்க்கல்லை உருவினார் தந்தை பெரியார். மடமடவென சரிந்தது கடவுள், மதம், வேதம், இதிகாசம், புராணம், புராணம் என்னும் சூழ்ச்சிப் பொறிகளால் கட்டப்பட்ட அந்த ஆரிய சமூக அமைப்பு கட்டுடைந்தது.

அந்த விளைவின் விளைச்சலை நாடே இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவை எடுத்துக் கொண்டாலும், தமிழ்நாடு ஒரு அமைதிப் பூங்காவாக, அதில் புதிய சிந்தனையுடன் பூத்துக் குலுங்குகிறது என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியார் அமைத்த அடித்தளத்தின் சிறப்பே!

இந்த நிலை இப்பொழுது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கம் தேவைப்படுகிறது. உலகத்தின் பல பகுதிகளுக்கும் தேவைப் படுகிறது. அவரது மண்டைச் சுரப்பை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது.

இந்தத் திசையில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எடுக்கும் முடிவு களும், போடும் திட்டங்களும், மேற்கொள்ளும் அணுகுமுறை களும் வெற்றி பெறும் பயணத்தை மேற்கொண்டுள்ளன.

தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களாகிய நாம் அந்த வகையில் புதிய உலகை அமைக்கும் போராளிகள் ஆவோம். நம்முடைய உழைப்பின், முயற்சியின் வேகத்தைப் பொறுத்து புத்துலகம் மலரும் காலம் நிர்ணயிக்கப்படும்.

உழைப்போம் - முனைப்போடு உழைப்போம் - தந்தை பெரியார் காண விரும்பிய சமூகத்தைப் படைப்போம்! படைப்போம்!

வாழ்க பெரியார்!

-------------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 17-9-2008

0 comments: