Search This Blog

26.9.08

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் - தி இந்து ஏட்டின் படப்பிடிப்பு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்
அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டதன் பலன்கள்
அரசுப் பணிக்கு முன்பே அர்ச்சராகப் பணிபுரிகின்றனர்
தி இந்து ஏட்டின் படப்பிடிப்பு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தின் மூலம் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்ட 207 பேர் அரசுப் பணி வருவதற்கு முன்பே பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். தாம் கற்ற கல்வியையும் பெற்ற பயிற்சியையும் வருமானம் ஈட்டுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2007-இல் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டது. ஆறு இடங்களில், கோயில்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் பயிற்சி முடிவடைந்தது. அரசுப் பணி அளிக்கப்படவிருக்கிறது.

டி. முருகன் என்பவர் பயிற்சி பெற்றவர்களில் ஒருவர். அரசுப் பணி வரும்போது வரட்டும் என்று இவர் ஆத்தூரைச் (சேலம் மாவட்டம்) சுற்றியுள்ள பகுதிகளில் தினப்படி பூஜை செய்து வருகிறார். இவர் வன்னியர் ஜாதி. அர்ச்சகர் பயிற்சியில் சேர விரும் பிய இவரை, இவரது பெற்றோர் பரம்பரையாக அர்ச்சகர்களாக உள்ள பார்ப்பனர்களுக்குச் சமமாக வர முடியுமா எனச் சந்தேகப்பட்டனர். முருகன், சரளமாகத் தங்கு தடையின்றி சமக்கிருத, தமிழ் மந்திரங்களைக் கூறி அசத்துகிறார். மந்திரங்களை நல்ல முறையில் மனப்பாடம் செய்து பயிற்சி பெற்றிருக்கிறார்.

நான் அர்ச்சகராக இருக்கும் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் நான் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை; நான் பூஜை செய்யும் நேர்த்தியைத் தான் பார்க்கிறார்கள். உண்மையில் பல பார்ப்பன அர்ச்சகர்கள் என்னிடம் வந்து அவர்களுக்கு மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டார்கள்; நானும் ஒத்துக் கொண்டு கற்றுக் கொடுத்து வருகிறேன் என்றார் முருகன்.

சீரங்கத்தைச் சேர்ந்த பார்ப்பனரான எஸ். நாராயணன் என்பவரும் பயிற்சி பெற்ற 207 பேரில் ஒருவர். சீரங்கத்திலேயே அர்ச்சகராக வர வேண்டும் என ஆசைப்படுகிறார். தன் தந்தை சமையல்காரர் என்றும் தான் பயிற்சி பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இவர் கூறுகிறார். தனக்குப் பணி நியமனம் வரும் வரையில், அர்ச்சகராக இருக்கும் தன் மாமாவுடன் சேர்ந்து வேலை செய்யப் போவதாகவும் இவர் கூறுகிறார்.

இவர்களுக்கு அரசுச் சார்பில் அர்ச்சகர் பணி வழங்கப்படும் போது இவர்கள் அரசு அலுவலக இளநிலை உதவியாளர்க்குச் சமமான நிலையில்அமர்த்தப்படுவர். நல்ல வருமானம் உள்ள கோயில்களில் பணி கிடைத்தால் அடிப்படைச் சம்பளம் ரூ.3,200/- கிடைக்கும். சிறிய கோயில்களில் மாதம் ரூ.2,750/- அடிப்படைச் சம்பளமாகக் கிடைக்கும் பெரும்பாலும் ரூ.2,750/- அடிப்படைச் சம்பளம் என்கிற நிலையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் மாதம் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

மாதச் சம்பளம் தவிர, பக்தர்கள் தரும் காணிக்கை தனி. இது கோயிலுக்குக் கோயில் வேறுபடும். நிலையான சம்பளமும் அரசுப் பணி உத்திரவாதமும்தான் பயிற்சி பெற்றவர்களுக்கு முக்கியமாகக் கிடைக்கும்.

அகமுடையர் ஜாதியைச் சேர்ந்த டி. மாரிச்சாமி என்பவர் அரசு அர்ச்சகர் பணியைத் தான் விரும்புகிறார். அதுவரை மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேலை கிடைக்குமா எனப் பார்க்கிறார். பத்துக்கும் மேற்பட்ட மாரியம்மன், பிள்ளையார் கோயில்களைப் பட்டியலிட்டுத்தாம் அர்ச்சகர் பணியைச் செய்து வருவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.
கிராமப் பூசாரிகளின் வழிவந்த நாகராஜ்பூசாரி என்பவர் பயிற்சி பெற்று பெரிய குளத்தில் வசிப்பவர். அர்ச்சகர் பணியைத் தவிர வேறு பணிக்குச் செல்ல மாட்டேன் என்கிறார். இவரைப் போன்ற பயிற்சியாளர்களுக்குப் பயிற்றுநர் தலைமை ஆசிரியர்களாக இருந்த பி.ஆர். கிருஷ்ணா, எஸ். குமரேசமூர்த்தி ஆகியோர் தம் மாணாக்கர்களைப்பற்றிப் பெருமை பொங்கக் கூறுகின்றனர் - அவர்கள் முழுத் தகுதி பெற்று ஈடுபாடுடையவர்களாகத் திகழ்கின்ற னர் என்கிறார்கள்.

சீரங்கம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் வைணவ ஆகமம் கற்பித்த எஸ்.கே. ரங்கராஜபட்டர் என்பவர் கூறுகையில், ஆகமம் (வழிபாட்டு அர்ச்சனை முறைகள்) கற்றுக் கொள்ள ஜாதி தடையில்லை. நான் ஆகமம் கற்பித்த மாணவர்கள் அனைவரும் மிக நல்ல முறையில் மந்திரங்களையும் சடங்குகளையும் கற்றுக் கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார். அவர் கற்பித்த ஆகமப் பாடங்களை நூல் வடிவில் எதிர்கால மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் வெளியிடும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார்.

மதுரை மீனாட்சி கோயிலில் ராஜு குருக்கள் என்று அழைக்கப்படும் சங்கரன் சிவாச்சாரியார் அய்ந்து மாத காலம் சைவ ஆகமப் பள்ளியில்ஆசிரியப் பணியில் இருந்தவரும் கூட, ஆகமங்களைக் கற்றுக் கொள்ள ஜாதி தடையில்லை என்கிறார்.

(இந்தக் கருத்தைத்தான் மனித உரிமைப் போராட்ட வீரரான தந்தை பெரியார் 1969-இல் கூறி மானமிகு கலைஞர் 1970-இல் சட்டம் இயற்றிப் பல தடைகளை வென்று நடைமுறைக்கு வந் துள்ளது. இதனை தி இந்து (20.9.2008) ஏடே வெளியிட்டுப் பாராட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது)

-------------- நன்றி: "விடுதலை" 25-9-2008

1 comments:

Anonymous said...

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி ‘இந்து’ நாளேட்டில் அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது.


அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சியை முடித்த அனைத்து சாதியைச் சார்ந்த மாணவர்கள் 207 பேரும் ஓராண்டு பயிற்சியை முடித்துவிட்டு, எந்தக் கோயிலிலும் பணி நியமனமின்றி தவிக்கின்றனர்; வேறு வேலைக்குப் போக வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்; காரணம் - உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு முடியும் வரை - இவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று அரசு கூறிவிட்டது.


கலைஞர் சாதுர்யமாக காயை நகர்த்தியதாக புகழாரம் சூட்டிய கி.வீரமணி, இப்போது வாய்திறக்கவில்லை. கலைஞரைப் பாராட்டுவதற்கான ‘யுக்திகளுக்காக’ கொள்கைகளைப் பலிகடாவாக்கும் வீரமணியின் மற்றொரு துரோகம் இது.


சூத்திர இழிவு ஒழிப்பை முன்னிறுத்தி சட்டத்தையே திருத்து; இல்லையேல் எங்கள் நாட்டை பிரித்துக் கொடு என்று பெரியார் முழங்கிய முழக்கம் - வீரமணியால் திரிபுபடுத்தப்பட்டதற்கு இவை சான்றுகளாகும்.


அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் மகத்தான சமூகப் புரட்சியை தமிழக முதல்வர் கலைஞர் செய்து காட்டினார். பார்ப்பனர்கள் மீண்டும் உச்சநீதிமன்றம் போனார்கள். கோயில்களில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து விட்டது. ஏற்கனவே கலைஞர் மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்துகிறார் என்று என்ன காரணத்தினாலோ கி.வீரமணிகள் எழுதினார்கள். அதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ளவில்லை.


அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு 6 கோயில்களில் தொடங்கியது. அதில் அனைத்து சாதியையும் சார்ந்த 207 பயிற்சியாளர்கள் ஓராண்டு பயிற்சியையும் முடித்தனர். இப்போது என்ன நிலைமை? பயிற்சி முடித்து வெளிவந்து,. எந்த கோயிலிலும் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலைக்கு, அவர்கள் உள்ளாகி விட்டனர். உச்சநீதிமன்றத்தில் தடையாணை இருப்பதால், நியமனம் செய்ய முடியாது என்று இந்து அறநிலையத் துறை கை விரித்து விட்டது. அனைத்து சாதியினரும், அர்ச்சகர் ஆகும் திட்டம் - மீண்டும் பெரியார் ‘இதயத்தில் தைத்த முள்ளாகவே’ மாறிவிட்டது.

- பெரியார் முழக்கம்