Search This Blog

16.9.08

அய்யா - அண்ணா கொள்கைகளைப் பரப்புவோம்!




தந்தை பெரியார்தம் பகுத்தறிவுக் குடும்பத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்த நாளின் தொடக்கம் இன்று.

அவர்தம் நூறாவது ஆண்டு பிறந்த நாளில் அவர்தம் அருமைத்தம்பி, மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் முதல்வராய் அய்ந்தாம் முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, அய்யா, அண்ணாவின் விருப்பங்களை - விழைவுகளை செயலாக்கிப் புதியதோர் சமூகம் படைத்துப் பூரிப்படைகிறார்!

கலைஞர்பற்றி அண்ணாவின் கணிப்பு!

காது கொடுத்துக்கேள் நீ தம்பி; என்றன்

கருணாநிதி எனுமரிய கழகக் கம்பி!

ஏதுமறியாத் தமிழர் தூயவாழ்வை

எனக்குப்பின் சீர்படுத்தும் மறவன் நீதான்!

தோதான நம்முயர்வுக் கொள்கைபற்றித்

துறைதோறும் புகுத்துவதே உன்றன் வேலை

என்ற அண்ணாவின் கவிதை வாழ்த்து - வெறும் சொற்கள் அல்ல; வெற்றியுடன் கூடிய வினைத்திட்பத்தை விளக்கும் விண்முட்டும் விருப்ப ஆவணம் (உயில்) ஆகும்.

அதனால்தான் அவரது நூற்றாண்டின் தொடக்கமே - ஏழை, எளியவர்தம் பசி போக்கிட, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த் திட்டம் போன்ற நலத்திட்டமாகும்.

தமிழனுக்கு ஜாதியில்லை

சமூகப் புரட்சியாளர் அண்ணா அடித்துச் சொன்னார்:

ஜாதியும் ஜனநாயகமும் ஒன்றாக இருக்க முடியாது. மூட நம்பிக்கையும், விஞ்ஞானமும் இணைந்து வாழ முடியாது. பல உருவத்திலுள்ள கொடுங்கோன்மைகளும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்துகளும் ஒத்து இருக்கவே முடியாது.

தமிழனுக்கு ஜாதி என்று ஒன்று கிடையாது; ஜாதி வேண்டாம் என்றான் தமிழன். பழந்தமிழகத்தில் ஜாதிக்கே இடமில்லை. ஜாதி பிற்காலத்தில் தான் தமிழர்கள் வாழ்விலே புகுந்தது. ஆகவே, ஜாதி வேற்றுமையை நம் தலையிலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதிலே பயனில்லை.

வள்ளுவப் பெருந்தகை 2000 ஆண்டுகட்கு முன்பே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்.

நீங்கள் இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால், ஜாதி என்ற ஒரு சொல்லையே பார்க்க முடியாது.

திருக்குறளைப் படித்த பிறகும் ஏன் தமிழகத்திலே ஜாதி புகுந்தது? திருக்குறளும் இருக்கிறது; ஜாதியும் இருக்கிறது என்றால், ஏன் கோபம் வராது பெரியாருக்கு?

பெரியார் ஏற்படுத்திய உணர்வு

யார் என்ன கூறினாலும், அதில் பொருள் இருக்கிறதா? பொருத்தம் இருக்கிறதா? முன்பின் சொன்னதற்கு முரணா காமல் இருக்கிறதா? மூலக் கருத்தினைக் கெடுத்திடா வகையில் அமைந்திருக்கிறதா? என்றெல்லாம் பார்க்கும் பழக்கத்தைப் பெரியார் ஏற்படுத்திவிட்டார். பகுத்தறிவுவாதிகளாகிய நாங்கள், எங்களால்தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத் திற்குக் கொண்டு வர முடியும்; அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் - இவற்றையெல்லாம் மக்களின் எண்ணத்திலிருந்து அகற்றவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகிறோம்.

- இவ்வாறு தனது லட்சியப் பயணத்தினை பகுத்தறிவு வாகனத்தில் ஈரோட்டுப் பாதையில் செலுத்தி இன்று ஒரு புதிய சாதனை படைத்துவிட்டார்!

கேள்வியும் - அண்ணாவின் பதிலும்!

ஒருமுறை மலேசியாவில் அண்ணா விருந்துக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, ஒருவர் திடீரென்று எழுந்து, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? என்று கேட்டார். உடனே அண்ணா, நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று பளிச்சென்று பதிலளித்தார்! இதிலேயே எல்லாம் அடங்கி விட்டதல்லவா!

அண்ணா அவர்கள் அய்யாவிடம் இருந்த காலத்தைத்தான் தன் வாழ்வின் வசந்தம் என்று முதல்வரான நிலையிலே கூறி, சுயமரியாதைப் பிரச்சாரத்தை வாழ்வின் மேன்மையை உலகுக்கு கலங்கரை விளக்கமெனக் காட்டி மகிழ்ந்தவர்!

தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதைத் திருமண முறையை அவர் விரும்பியபடி சட்ட வடிவமாக்கி, தமது அமைச் சரவையை அய்யா பெரியாருக்கே காணிக்கையாக்குகிறேன் என்று தமிழக சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்திய அவரது அருஞ்சாதனை ஈடு இணையற்றது; சட்டத்திற்கு முன்பும்கூட சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டோருக்கும் மான வாழ்வை அளித்த அருங்கொடை அது!

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

அண்ணாவை வெறும் அரசியல் முத்திரையாக்காமல், அவர்தம் கொள்கை லட்சியங்களை அனைத்துத் துறைகளிலும் செயற்படுத்திடும் ஓர் உண்மையான அண்ணாவின் அரசுதான் இன்று கோட்டையிலே கோலோச்சும் கலைஞர் அரசு.

இந்தப் பொற்காலத்தில் அண்ணா நூற்றாண்டு - மகிழ்ச்சியின் உச்சியில் மலர்ந்திருக்கிறது.

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வளர்க சுயமரியாதை!

------------------- 15-9-2008 "விடுதலை" நாளிதழில் தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

0 comments: