Search This Blog

10.2.18

இந்து மதக்காரருக்கு மனம் புண்படுகிறதாம்! - பெரியார்

 
இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. இந்து மத ஆதாரம் என்பதாக நம்மைப் பயன்படுத்தும்படி செய்யப் பட்டிருப்பவை புராண இதிகாசங்களும், புராண இதிகாசக் கடவுள்களும்தாமே ஒழிய வேறில்லை.

இந்து மதத்தின் பெயரால் நம்மை நடந்து கொள்ளும்படி செய்திருப்பதெல்லாம் ஜாதிப் பிரிவுகளும், அப்பிரிவுகளில் நாம் கீழ் ஜாதியாய், பார்ப்பானின் தாசி-அடிமைப் பெண்ணின் மகனாக ஆக்கப்பட்டும், நம்மை அதை ஏற்கும்படியும் செய்திருப்பதுதான். இந்த நிலையில்தான், நாம் இந்தப் புராண நடப்புகளுக்கும், கடவுள்களுக்கும் விரோதமாய் நடக்கிறோம் என்றும், கண்டிக்கிறோம் என்றும், வெறுக்கிறோம் என்றும், இந்நடத்தைகளுக்காக நம்மை அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்றும் பார்ப்பனர்கள் பாடுபடுகிறார்கள்.

புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் பார்ப்பனர்களால் 2000, 3000 ஆண்டுக் காலத்திற்குள் எழுதப்பட்டவைகளேயாகும். அவற்றில் வரும் கடவுள்கள், அவற்றின் செய்கைகள் எல்லாம் அது போலவே, பார்ப்பனர் தங்கள் நலனுக்கேற்றபடி அவைகளுக்கு அமைத்து உருவாக்கி யவைகளே ஆகும்.

எந்தப் புராண, இதிகாச நடப்பும், கடவுள் செய்கையும் இன்றைய நிலைக்கு ஏற்றவை அல்லவே அல்ல. ஏனெனில், 2000, 3000 ஆண்டு களுக்கு முற்பட்டதென்றால், அந்தக் காலம் எப்படிப்பட்ட காலமாய், எவ்வளவு காட்டுமிராண்டி, முட்டாள்தனமான காலமாய் இருந் திருக்கும்! எனவே, அவை இன்றைய புதுமை, விஞ்ஞான, பகுத்தறிவு உணர்ச்சி கருத்துக் காலத்திற்கு ஏற்குமா? இவை ஏற்படுத்தப்பட்ட வெகு காலத்திற்குப் பிறகுதான் வேறுமதஸ்தர் களால் ஒரு கடவுள் என்பதும், ஒழுக்கம், நேர்மை என்பனவாகிய நல்ல குணங்கள் என்பவைகளும் கற்பிக்கப்பட்டனவாகும். இந்தக் கற்பனைகளுக்கு முன்பு கடவுள்கள் தன்மை, அவற்றின் நடப்புகள் எவ்வளவு அசிங்கமும், ஆபாசமும் அயோக்கியத் தனமுமானவை என்பதற்கு ஆதாரம் வேண்டு மென்றால், அவற்றின் யோக்கியதைகளை அவர்கள் எழுதி இருக்கிறபடி அவற்றில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொன்னாலே, தங்களுக்கு மன நோவையும், மானக் கேட்டையும் உண்டாக்கி விட்டதாகப் பதறித் துடித்து எந்த அக்கிரமமான காரியத்தைச் செய்தாவது என்ன மாய்மாலக் கூப்பாடு போட்டாவது மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து விடலாம் என்று துடிக்கிறார்கள்.

உதாரணமாக, இவர்களால் உண்டாக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ளபடியே நாம் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைப் பற்றியோ, இவர்கள் மனைவிகளைப் பற்றியோ, அக்கால தெய்வீக மக்களைப் பற்றியோ, அவதாரங்களைப் பற்றியோ எடுத்துச் சொன்னால் இவர்களுக்கு மானக் கேடும், மனப் புண்ணும் ஏன் ஏற்படவேண்டும்? அந்தப்படி இல்லை, அது பொய், கற்பனை என்று பதில் கூறாமல் ஆத்திரப்படுவதென்றால் அவை மானாபிமானம் அறிவு இல்லாத காலத்தில் செய்யப்பட்டன என்றுதானே பொருள்! இப்படிப்பட்ட முட்டாள் தனமானதும் அயோக்கியத்தனம் என்று சொல்லக் கூடியதுமான காரியங்களை,  அவை இன்றைக்குப் பொருந்தா; யாரும் அவற்றை ஏற்க வேண்டிய தில்லை என்று யோக்கியமாய்ச் சொல்லி அவைகளை மறைத்து விட்டால் யாரும் அவற்றைக் குற்றம் சொல்லமாட்டார்கள்.

அப்படியல்லாமல்  அவற்றைப் பண்டிகைகளாக, உற்சவங்களாக, பழி தீர்க்கும் காரியங் களாகக் கொண்டாடுவது என்றால், இதற்குப் பரிகாரம் பதிலுக்குப் பதில் காரியங்கள் செய்யாமல் இருப்பதா?

உதாரணமாக, இராவணன் இராமன் மனைவியை எடுத்துப்போய்க் கற்பழித்து விட்டான் என்ற ஆத்திரத்தில் இராவணனைக் கொடியவனாக ஆக்கி மக்களுக்குப் பிரச்சாரம் செய்து அவன் உருவத்தை ஆண்டு தோறும் நெருப்பில் கொளுத்துகிறார்கள். அரசாங்கமே அதில் பங்கு கொள்ளுகிறது.

இந்த இராவணன் செய்கையின் உண்மை, ஆதாரப்படி அந்தப்படி இல்லை.
சீதை சம்மதித்தே இராவணனுடன் சென்றதாகவும், அவன் வீட்டிலேயே இருந்து வாழ்ந்ததாகவும், அதனால் சீதைக்குக் கர்ப்பம் ஏற்பட்டதாகவும் தான் ஆதாரத்தில் துருவிப் பார்த்தால் தெரிய வருகிறது.

மற்றும் தேடிப் பார்த்தால் இராமனே சீதையை இராவணன் அழைத்துப் போகவும் அதற்கு வசதி செய்யவும் ஏற்பாடு செய்தான் என்றும் சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

மற்றும் இராவணன் ஆரியர்களுக்கு எதிரியாய் இருந்த தானாலேயே அவனைக் கொல்ல இந்த ஏற்பாடு செய்ததாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன.

இராவணனைப் பார்ப்பனர்கள் எரிக்கிறார்கள். அவமானப் படுத்துகிறார்கள் என்றால்,

நம்மையெல்லாம் சூத்திரர்கள், நான்காம் ஜாதியார்கள் ஆகவும், நம் பெண்களைப் பார்ப்பனர் அனுபவிக்கும் தாசிகளாகவும் ஆக்கி வைத்து அந்தப் படி சாஸ்திர தர்மங்கள் எழுதி வைத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட இராமாயணத்திலேயே சூத்திரன் பிராமணனை (பார்ப்பானை)க் கடவுளாக வணங்காமல், கடவுளை நேராகக் காண வணங்கினான்.  அதனால் பிராமணனுக்குக் கேடு வந்தது; ஆகையால் அந்தச் சூத்திரனைத் துண்டு துண்டாக வெட்டி வதைக்கிறேன் என்று சொல்லி சித்திரவதை செய்து இராமன் கொன்றான் என்றால், அந்த ராமனை நெருப்பில் கொளுத்துவதோ அவமானம் செய்வதோ பெரும் குறையா கிவிடுமா? குற்றம் என்று கூறலாமா? என்பதுதான்சிந்திக்க வேண்டியதாகும். பார்ப்பனர் இதைக் குற்றமென்று சொல்வதற்குக் காரணம் தங்கள் உயர் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளவே ஒழிய வேறில்லை.

அது போலத்தான் சூத்திரர்கள் (பார்ப்பனர் தாசி மக்கள்) என்று பார்ப்பனரால் சொல்லப் படுகிற நாம் நம் இழிநிலையைப் போக்கிக் கொள்ள மான உணர்ச்சியோடு முயற்சிக்கிறோம்.  அதற்கு ஏற்றதைச் செய்கிறோம், செய்ய இருக்கிறோம். அதற்கேற்ற விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

இதை மனம் புண்படுகிறவர்கள் உணர வேண்டுகிறோம்.

                 

-------------------------------   “உண்மை”, 14.2.1971

0 comments: