Search This Blog

10.5.14

கொள்கைகளை ஆதரிப்பவர்களிடம் சம்பந்தம் செய்துகொள்ளலாம்-பெரியார்

பட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம்

சகோதரிகளே!சகோதரர்களே!!இன்று நீங்கள் சுயமரியாதைத் திருமணம் எப்படி நடத்தப்பட்டதென்பதைப் பார்த்தீர்கள். இம்மாதிரியான விவாகங்கள்தான் முழு சுயமரியாதைத் திருமணங்களென்று கூறி விடமுடியாது. பெண்களுக்குப் போதிய அறிவில்லாதிருப்பதனாலும், அவர்களுக்குச் சுதந்திரமளிக்கப்படாதிருப்பதனாலுமே முழு சுயமரியாதை முறையில் திருமணம் என்பது நடைபெற முடியவில்லை. எப்பொழுது மணமகனால் மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டப்பட்டதோ அது அடிமைத் தனத்தைத்தான் குறிப்பிடுகின்றது. நியாயமாகவே மணமகள் தாலிகட்டிக் கொள்ளத் தனது கழுத்தை அளித்தே யிருக்கக்கூடாது. மண மகளுக்குத் தாலி கட்டினால், மணமகனுக்கும் மணமகளால் தாலிகட்டப் படவேண்டும். புரோகிதமில்லாவிட்டாலும், புகைச்சலில்லா விட்டாலும் கூட, இந்த விவாகத் தில் “புரோகிதச்” செலவு குறைக்கப்பட்டிருப்பதாக நான் கருதுவதற்கில்லை.

சகோதரர்களே! நாம் பொதுவாக விவாகத்தைக்கூடக் கடவுளின் தலையிலேயே சுமத்தி விடுகின்றோம். “என்ன செய்வது! விவாகம் திடீரென கூடிவிட்டது! அந்தநேரம் ( தாலிகழுத்துக்கு ஏறும் நேரம்) வந்துவிட்டால் யார்தான் என்னசெய்ய முடியு?” மென்பதாக உரைக்கின்றோமேயல்லாது, விவாகத்தின் உண்மைத்தத்துவத்தை அறிந்து நமது நாட்டில் விவாகங்கள் நடைபெறுவதாகப் புலப்படவில்லை. இருவருடைய சம்மதமுமின்றியே, அவர்களுடைய வயதையும் கவனியாமலும்கூட,“நாங்கள் செய்து வைக்கின் றோம். உனக்கென்ன கவலை வந்தது?” என்று சொல்லியேதான் அநேக விவாகங்கள் நமது நாட்டிலின்றும் நடைபெறுகின்றன. நாம் ஒரு விவாகம் செய்வதென்றால் தம்பதிகளின் அபிப்பிராயத்தையும், வயதையும், யோக்கியதையும் கவனியாமலே, புரோகிதர்களிடம் 4-அணா கொடுத்து, இருவருக்கும் பொருத்தம் சரியாயிருக்கின்றதா என்றுதான் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றோம். அவன் பணத்தை வாங்கிக்கொண்டு இருவருக்கும் பொருத்தமிருப்பதாகக் கூறிவிட்டால் உடனே விவாகமும் நடந்துவிடுகின்றது. நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களும், நிர்பந்தங்களும், சந்தேகங்களுமே இதற்குக் காரணமாகும். மேல்நாடுகளில் தம்பதிகளிருவரும் ஒருவரையொருவர் நன்றாய் அறிந்து, பழகிக்கொண்டு, இவர்களுக்குள்ளாக நிச்சயம் செய்துகொண்ட பிறகுதான், அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரியவரும். அவர்களுக்கு ஒருவித சடங்குகளு மில்லை. சர்ச்சுக்குப் போய் சாக்ஷிகளின் முன்னிலையில் ஒருவரையொ ருவர் விவாகம் செய்துகொள்ள சம்மதிப்பதாக எடுத்துரைத்து கையெழுத்து செய்துவிடுவார்கள். அவ்வளவேதான். இப்பொழுது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் நமது அரசரின் விவாகமும் அவ்விதமே தான் நடந்தது.

இஸ்லாமானவர்களில் கூட, மாப்பிள்ளைப் பெண்ணைப்பார்க்கா விட்டாலும்கூட, ஒருவித சடங்குமில்லாமல் தங்களுடைய பந்துக்களின் முன்னிலையில், முல்லாக்களை வைத்துக்கொண்டு, தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்ளுவார்கள். உலகத்தில் 100க்கு 90 விவாகங்கள் இம்மாதிரியேதான் நடைபெறுகின்றன. நமக்குப்போதிய அறிவில்லாததால், அனேக கஷ்டங்களுக்குள்ளாகி, பலவித சடங்குகளை வைத்துக்கொண்டு, நெருப்பையும், அம்மியையும், குழவியையும் சட்டி பானைகளையும் சாக்ஷியாக வைத்துக்கொண்டு, உலக வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கின்றோம். நாம் பெண்களை அடிமைகள்போல நடத்து கின்றோமேயன்றி, அவர்களை சமமாகவும், கூட்டாளிகளாகவும் பாவித்து நடத்துவதில்லை. 

அப்படிக்கொடுமைப்படுத்தப்பட்டாலும், விவாகத்தை ரத்து செய்துகொண்டு, விலகிக்கொள்ள இருவருக்கும் உரிமையில்லை. சிறிது நாட்களுக்கு முன்னதாகதான், பரோடா அரசாங்கம் “கல்யாணமான புருஷன் பெண்ஜாதி இருவருக்கும் தங்களில் யாருக்கு பிரியமில்லாவிட் டாலும், தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை ரத்துசெய்து, விலகிக்கொள் ளலா”மென்பதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கின்றது.

நமது நாட்டில், அடுத்தவீட்டுப் பெண்களும், பெற்றோரும் மண மகளுக்கு “மாமி வீட்டில் நீ நல்ல அடிமையாய் இரு. அடித்தாலும், உதைத் தாலும் வருத்தப்படாதே, புருஷன் மனம் கோணாமல் நட” என்று உபதேசம் செய்து, மணமகன் வீட்டுக்கு அனுப்புவதும் வழக்கமாயிருக் கின்றது. இதனுடைய கருத்து அவர்களை ஆடவர்களுக்கு எப்பொழுதும் அடிமைகளாகவும், ஒருவித சுதந்திரமாவது அல்லது உரிமையாவதில்லா திருக்கும்படி செய்வதற்கேயாகும். அவர்களுடைய உபதேசங்களைக் கேட்டு, மணமகன் வீட்டுக்குச் செல்லும் அந்தப்பெண்ணும் தன்னை ஓர் அடிமையென்றே கருதி, புருஷன், மாமனார், மாமி, நாத்தி இன்னுமிருக்கக் கூடிய பந்துக்களுக்கும் பயந்து, அவர்களுடைய பிரியத்தை சம்பாதிப்பதி லேயே தன்னுடைய வாழ்க்கையை நடாத்தி உயிருள்ள பிணமாக வாழ் கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் உபத்திரவங்கள் அளித்தபோதிலும் அவைகளைப் பொருமையுடன் சகித்துக்கொள்ள வேண்டியவளாகிறாள்.

மேலும், நாம் கடன் வாங்கி, கலியாணங்கள் ஆடம்பரமாக செய்வ தினால் அவர்களுடைய தலையின்மீது அக்கடனையும் சுமத்தி விடுகிறோம். கடனை வைப்பதுமல்லாமல், அவர்களைத் தனி வாழ்க்கை நடத்தும்படியாக வேறாகவும் வைத்து விடுகிறோம். நாம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பயந்து கொண்டு, அதிக செலவு செய்வதினாலும், சடங்குகள் பல செய்வதினாலும் கடன் ஏற்பட்டு விடுகின்றது. இந்த யெண்ணம் மக்களைவிட்டு நீங்க வேண்டும். அதிலும் பெண்களை விட்டுத் தான் நீங்க வேண்டும். அப்படி நீங்குவதாக யிருந்தால் பெண்களின் அறிவு விருத்தியாக வேண்டும். உலகப் போக்கையனுசரித்து நடக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

சிலவிடங்களில் சுயமரியாதைக் கலியாணத்திற்கு ஆண்கள் மட்டும் ஏராளமாய் வந்திருப்பார்கள். பெண்களோவெனில் 5 அல்லது 10 பெயர்கள் தான் வருவார்கள். பெண்கள் வந்தால் கெட்டுப்போவார்களாம்! இதற்குக் காரணம், நாம் அவர்களுக்கு உலக ஞானத்தையூட்டி, அறிவு புகட்டாதிருப் பதைத் தவிர்த்து வேறில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும், வித்தியாச மில்லையெனவும், பெண்கள் அடிமைகள் அல்லவென்றும் அவர்கள் கருது வார்களானால், அப்பொழுது நகைகளும், ஆடைகளும் வேண்டுமென்றும் போராடுவதை அறவே விட்டுவிடுவார்கள். அவர்கள் தங்களைத் தாழ்ந்த வர்களெனக் கருதிக்கொண்டிருப்பதால்தான் தங்களை அழகுபடுத்திக் கொண்டு, ஆடவர்களை மயக்கவேண்டிய அவசியம் நேரிடுகின்றது. நமது பெண்களுக்கு, மேலும், குழந்தைகளை வளர்க்கும் முறைகளும் தெரியாது. குழந்தைகளுக்கு அறிவு, யூகம், சுதந்திர உணர்ச்சி ஆகியவைகளை யூட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதாகிலும் வியாதி வந்து விட்டால், நாம் உடனே மாரியம்மன் கோவிலுக்கும், ஐயர், பண்டாரம் ஆகியவர்களின் வீட்டுக்கும்தான் செல்லுகிறோமே யல்லாது, அவ்வியாதி ஏன் வந்தது என்பதை ஆராய்ந்து, அதற்குறிய மருந்துகளை அளிக்கும் வைத்தியர்களின் வீட்டுக்குச் செல்லுவதில்லை. சில இடங்களில், குழந்தை களின் வயிறு நிறைந்திருப்பதையும் அறிந்து கொள்ளாமல், அக்குழந்தை களின் வயிற்றை அமுக்கிப்பார்த்து அறிந்து கொள்ளுகிறார்கள். இவைகளுக்குக் காரணம் நமக்குப் போதிய கல்வியறிவும், தைரியமுமில்லா மையேயாகும். ஊரில் காலரா முதலிய நோய்கள் வந்தால், உடனே ஓங்காளியம்மனுக்குப் பொங்கலிடுவதிலும் “நாம் என்ன செய்யமுடியும்? அவனுடைய சீட்டு கிழிந்து விட்டது. போவதுபோய்தானே தீரும்” என்று சொல்லக் கூடியவர்களாகத் தானிருக்கிறோம். நாம் நமது அறிவை உபயோகப்படுத்தி நடந்தால், இத்தகைய கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியதில்லை.

நமது வாலிபர்கள் படித்த பெண்களைமட்டும் விவாகம் செய்து கொள்வதாக ஒரு வைராக்கியம் கொள்ளுவார்களேயாகில், அப்பொழுது பெண்களைப் பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வியறிவை யூட்டுவார்கள். படித்த பெண்களாகப்படாவிட்டால் கலியாணம் செய்து கொள்ளாமலிருக்க வேண்டும். படியாதபெண்கள் கிழவர்களுக்கு 2ந் தாரம் 3ந்தாரமாக போய்சேரட்டும். இதுதான் படியாத பெண்களுக்கு தண்டனை யாகும். சில சுயமரியாதை விவாகங்களில், பெண்களுக்குத்தாலி கட்டும் வழக்கம் கிடையாது. முனிசிபாலிட்டிகளில் நாய்களுக்குக் கழுத்தில் பட்டை கட்டுவதைப் போல், விவாகமாகும் பெண்களுக்கு நாம்ஒரு தாலியை கட்டி விடுகின்றோம். அப்படி தாலி கட்டுவதாகயிருந்தால், மாப்பிள்ளைக்கும் சேர்த்துதான் கட்ட வேண்டும். எப்பொழுது மாப்பிள்ளை கட்டிக்கொள்ள சம்மதிக்கவில்லையோ, அப்பொழுது பெண்களும் தாலிக் கட்டிக்கொள்ள சம்மதிக்கக்கூடாது. தாலிகட்டுவது அடிமையுணர்ச்சியைத் தான் குறிக்கின்றது.

பெண்களுக்கு நாம் அறிவையூட்டி சமத்துவத்தை அளித்துக் கொண்டு வரவேண்டும். அவர்களைப்பல கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய மூடநம்பிக்கைகள் நீங்கும். நமது பந்துக்கள் வரமாட்டார்களே யெனப் பயப்படக்கூடாது. ஜாதி யைப் பற்றி, நாம் கொஞ்சமும் கவலையடையக்கூடாது. நம்முடைய கொள்கைகளை ஆதரிப்பவர்களிடம் நாம் சம்பந்தம் செய்துகொள்ளலாம். எந்த ஜாதியாகயிருந்தபோதிலும் சரியே, அவர்களுக்கு அறிவு, யோக்கியதை முதலியவைகளிருந்தால் அவர்களிடம் சிநேகிக்கலாம். அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஒத்திருப்பவைகளை நாம் கவனித்து நடக்கவேண்டு மேயல்லாது பெரியவர்களின் பழக்க வழக்கங்களையே நாம் கண்மூடித்தனமாய் பின்பற்றலாகாது. இவைகள் யாவும் வாலிபர்களால் தான் நடைபெற வேண்டியிருக்கின்றது. வீண் ஆடம்பரங்களின்றியும், அதிக செலவில்லாமலும், சடங்குகளின்றியும் தம்பதிகளிருவரும் தங்களுடைய விவாகத்தை இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் ரிஜிஸ்தர் செய்து கொள்ளுவதே போதுமானது.

-------------------------- 25.06.1931 இல் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் நடைபெற்ற திரு துரைசாமி - திருமதி காந்திமதி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து  தந்தைபெரியார்  அவர்கள் ஆற்றிய உரை.”குடி அரசு” - சொற்பொழிவு - 05.07.1931

8 comments:

தமிழ் ஓவியா said...


அவசியம்

கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும். - (விடுதலை, 17.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/80033.html#ixzz31MgHlWwK

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுவின் தீர்மானங்கள்
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (9.5.2014) முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

இரண்டாவது தீர்மானம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதாகும். இதுகுறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெளிவாக, கழகத்தின் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒன்று மிகவும் முக்கியமானது.

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு - அதற்கு மாறாக கேரள மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியதை உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது நீதி பரிபாலனத்தில் தலையிடும் செயல் என்றும் கேரளாவின் தலையில் மிக அழுத்தமாகவே குட்டியது உச்சநீதிமன்றம் இதற்குப் பிறகாவது கேரள அரசு அரசமைப்புச் சட்டத்தின் வரையறைக்குள் நடந்து கொள்ள முயல வேண்டாமா?

மறு சீராய்வு மனு என்றாலும் இதே உச்சநீதிமன்றத்துக்குத் தானே விண்ணப்பிக்க வேண்டும்? தொடக்கக் கட்டத்திலேயே இந்த மனு நிராகரிக்கப்படவே அதிக வாய்ப்பு உண்டு.

காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநில அரசும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை முடக்கிடும் வகையில், இதே போன்றதொரு சட்டத்தை நிறைவேற்றி மூக்கறுபட்டதுண்டு அதற்குப் பிறகாவது கேரளா புத்திக் கொள் முதல் பெற்றிட வேண்டாமா?

உண்மை என்ன என்றால் முல்லைப் பெரியாறில் 136 அடிக்குள் தண்ணீரைத் தேக்கியதால் காலியாகவிருந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் ஓட்டல்களையும் கட்டடங் களையும் கேரள மக்கள் கட்டி, அவற்றை ஒரு வியாபாரத்தலமாக, வணிகப் பகுதியாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டனர். 142 அடி நீரைத் தேக்கினால் இந்தச் சட்ட விரோத கட்டுமானங்களுக்கெல்லாம் ஆபத்து வந்து சேரும்.

இன்னொரு முக்கிய காரணம் உண்டு. 1979இல் இடுக்கி அணையைக் கட்டியது கேரள அரசுக்கு மின் உற்பத்தி செய்வதே இதன் நோக்கம் ஆனால் எதிர்பார்த்த அளவு தண்ணீரைப் பெற முடியாத ஒரு சூழலில், கேரள அரசின் கண்கள் முல்லைப் பெரியாறின் மீது பாய்ந்தன. அணை பழுதாகி விட்டது என்று புரளி கிளப்பப்பட்டது.

மத்திய அரசு என்ன செய்தது? மத்திய நீர்வள ஆணையம் நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்யக் கூறியது.

அப்போதைக்கு 136 அடி தண்ணீரைத் தேக்கலாம்; அணையின் பராமரிப்புப் பணிகளுக்குப்பின் 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று அறிக்கையைக் கொடுத்தது நிபுணர் குழு.

அதன் அடிப்படையில் ரூ.17 கோடி செலவு செய்து தமிழக அரசு அணையைப் பலப் படுத்தியது. அதற்குப் பிறகும்கூட கேரள அரசு அடம் பிடித்தது என்றால் - அது ஓர் அரசு என்கிற தன்மைக்குப் பொருத்த மற்றதாகவே நடந்து கொள்கிறது என்று பொருள்.

இந்தப் போக்கு நீடிக்குமேயானால் இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் என்ற அமைப்பு முறையே சுத்தமாக நொறுங்கிப் போய்விடும். அதற்குப் பின் இந்தியாவும் இருக்காது. பிரிவினையை யாரும் கேட்காமலேயே பிரிவினை தானாகவே வந்துவிடும். அதைத்தான் ஒருக்கால் இந்தத் தேசியவாதிகள், கட்சிகள் விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.

மூன்றாவது தீர்மானம் வேக வேகமாக தமிழ்நாட்டில் மேல் நிலைப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. முறைக்கு மாறிடும் போக்கைப் பற்றியதாகும்.

தமிழ்நாட்டில் நிலவும் சமச்சீர்க் கல்வி முறையில் அனைவரும் தமிழ்நாட்டின் தாய் மொழியான தமிழைக் கட்டாயம் படித்தே தீர வேண்டும். இதனைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்து அந்தப் போக்கும் வேக வேகமாக நடந்து வருகிறது.

இப்படி மாறுவதற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இது உண்மையென்றால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்விக் கூடங்கள் மத்திய அரசின் கட்டுப் பாட்டில் செல்லக் கூடிய அபாயம் உள்ளது.

அதனால்தான் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதுபோலவே ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைபிடிக்கப்பட்டு வரும் வெயிட்டேஜ் முறையை அறவே கைவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

+2 தேர்வைப் பொறுத்தவரை வளர்ச்சி அடையாத கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் +2 தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட் டேஜ் முறை என்பது அவர்களைப் பெரிதும் பாதிப்புக்கு ஆளாக்கும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்கிறபோது, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் தானே முக்கியம்? அதனையே முகாமைப் படுத்துமாறும் வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page-2/80034.html#ixzz31MgQ5A7f

தமிழ் ஓவியா said...


குஜராத் தான் மாடல் என்றால், தமிழ்நாடு சூப்பர் மாடல்

- குடந்தை கருணா

ஜீன் டிரெட்ஜ் என்ற பொருளாதார பேராசிரியர், மோடி புளுகி வரும் குஜராத் மாடலை அம்பலப்படுத்தி உள்ளார். அவரது கட்டுரையில், இந்தியாவில் குறிப்பிடும்படியான 20 மாநிலங்களின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு வெளியிடப் பட்ட புள்ளி விவரங்களின் அடிப் படையில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புள்ளிவிவரங்கள்படி, மனித வளர்ச்சி குறியீடு, குஜராத் 9-ஆவது இடம்; குழந்தைகள் ஊட்டச் சத்து, இறப்பு விகிதம், கல்வி, நோய் தடுப்பு என்ற நான்கு அளவீடுகளைக் கொண்ட குழந்தைகள், சிறுவர்கள் திறன் குறியீட்டில், குஜராத் 9-ஆவது இடம்; உணவு, வீடு, சுகாதாரம், பள்ளி, மருத்துவ வசதியை உள்ளடக்கிய வறுமையின் பல பரிணாம குறி யீட்டில் குஜராத் 9-ஆவது இடம்; தனி நபர் நுகர்வு, வீட்டு வசதி, உடல் நலம், கல்வி, நகர்மயமாக்கல், தொடர்பு, நிதி உள்ளடக்கம் போன்ற குறியீடுகளை உள்ளடக்கிய ரகுராஜன் குழுவின் அறிக்கைப்படி, ஒட்டு மொத்த வளர்ச்சிக் குறியீட்டிலும், குஜராத் 9-ஆவது இடம்; தனி நபர் செலவினத்தை உள்ளடக்கிய வறுமை மதிப்பீடு பற்றிய திட்டக் குழுவின் 2011-12 அறிக்கையின் படி, குஜராத் 10-ஆவது இடம்.

செயல் திறன் ஒரு பத்தாண் டுகளில் ஒரு மாநிலத்தில் எவ்வாறு முன்னேற்றம் பெற்றுள்ளது என் பதை 2000-ஆம் ஆண்டு வளர்ச்சியை ஒப்பிட்டு, அளித்த ரகுராஜன் குழு வின் அறிக்கையின்படி, குஜராத் மாநிலம் 9-ஆவது இடத்திலிருந்து, 12-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத்தைவிட மகாராட்டிர மாநிலம், எல்லா குறியீடுகளிலும், முன்னேறிய மாநிலமாக உள்ளது.

பின் ஏன் மகாராட்டிரா மாடல் என யாரும் குறிப்பிடுவதில்லை? குஜராத் மாடல் சிறந்தது என்று எவராவது கூறினால், தமிழ்நாடும், கேரளாவும், சூப்பர் மாடல் என அழைக்கப்படவேண்டும். பின் எவ் வாறு, குஜராத் மாடல் என மோடி யாலும், அவருக்கு சாமரம் வீசுவர் களாலும், இடைவிடாமல் சொல்லப் படுகிறது? இந்த ஒளியியல் பொய் தோற்றம், மக்களை குழப்புவதில் நரேந்திர மோடிக்கு உள்ள அசாதாரணமான திறமையும், அவருக்கு ஆதரவு தரும் சில பொருளாதார வல்லுனர்களும் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை என பேராசிரியர் ஜீன் டிரெட்ஜ் தனது கட்டுரையில் தெரி வித்து உள்ளார்.

மோடி போன்ற பொய்யுரையர்களை உணர்ந்து தான், 2000 ஆண்டு களுக்கு முன்னரே, வள்ளுவர் மெய்ப் பொருள் காண்பது அறிவு என எழுதி உள்ளார் போலும்.

Read more: http://viduthalai.in/page-2/80038.html#ixzz31MgboTqL

தமிழ் ஓவியா said...திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் 100 கோடி பேர்

குழந்தைகள் அதிகளவில் மரணமடைவதற்கு இப்பழக்கமே காரணம்!

அய்க்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல்

சென்னை, மே 10- உலகம் முழுவதும் 100 கோடி பேர் திறந்த வெளி யைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் மரணமடைவ தற்கு இப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது என அதிர்ச்சி தகவலை அய்.நா. வெளியிட்டுள்ளது.

எவ்வளவுதான் அறிவி யல் முன்னேறினாலும், வசதிகள் வந்தாலும் இன்ன மும் உலகம் முழுவதும் 100 கோடி பேர் திறந்த வெளியைக் கழிப்பிட மாகப் பயன்படுத்துகின் றனர், என்று அய்க்கிய நாடுகள் சபை தெரிவித் துள்ளது.

காலரா, வயிற்றுப் போக்கு, டையோரியா, ஹெப டைடிஸ் ஏ, டைபாய்டு போன்ற நோய்கள் தோன் றவும் பரவவும் காரண மாக இருக்கும் திறந்த வெளி மலம் கழித்தல் பழக்கத்தை உலகம் முழு வதும் இன்றும் மக்கள் பின்பற்றுகிறார்கள். அய்ந்து வயதுக்கு உட் பட்ட குழந்தைகள் அதிக அளவில் மரணமடைவ தற்கு இப்பழக்கம் முக்கிய காரணியாகும். வருவாய் பேதங்கள் இதுபோன்ற பழக்கங்கள் தொடர்வதற் குக் காரணமாக இருக்கின் றன என்று அய்.நா. தெரிவித்துள்ளது.

சுகாதாரத்தைப் பேண வறுமை மிகுந்த நாடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் முயற்சிகள் அதற்காகச் செலவழிக்கப் பட்ட பணம் எல்லாமும் வீண். மனப்பாங்கு மாற வேண்டுமே தவிர, கட்ட மைப்பைக் குறை சொல்லி பயனில்லை. பல இடங் களில் கழிப்பறைகள், தேவையற்றப் பொருட் களை வைத்திருக்கும் கிடங்குகளாகத்தான் பயன் படுகின்றன என அய்.நா. புள்ளியியலாளர் ரோல்ப் லூயென்டிக் தெரிவித் துள்ளார்.
திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த பல நாடுகள் இன்று அப்பழக்கத்தை கைவிட்டிருக் கின்றன.

1990களில் வியட்நாமி லும், வங்காள தேசத்திலும் மூன்றில் ஒருவர் இப்பழக் கத்தைப் பின்பற்றினர். எனி னும், தொடர்ந்த விழிப் புணர்வு நடவடிக்கை களால் 2012-இல் இப் பழக்கத்தை இந்நாடுகள் முற்றிலும் கைவிட்டிருக் கின்றன. 1990-இல் இருந் ததைவிட தற்போது திறந்த வெளியில் மலம் கழிப்ப வர்களின் எண்ணிக்கை 100 கோடியாகக் குறைந்திருக் கிறது. அந்த நூறு கோடியில் 90 சதவீதம்பேர் கிராமங் களில் வாழ்கிறார்கள்.

இன்னமும் 26 ஆப் பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் பின்பற்றப்படு கிறது. இதில் நைஜீரியா மிக மோசமாகி வருகிறது. அங்கு 1990-இல் இப்பழக் கத்தைப் பின்பற்றுபவர் கள் 23 கோடியாக இருந் தனர். ஆனால் 2012இல் 39 கோடியாக அந்த எண் ணிக்கை உயர்ந்துள்ளது என்று அய்.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

அய்.நா.வின் இந்த அறிக்கையில் இப் பழக் கத்தைப் பின்பற்றும் 60 கோடி பேருடன் முன் னிலை வகிக்கிறது இந்தியா.

இந்திய அரசு ஏழை களுக்குக் கழிப்பறை கட்டிக் கொடுக்க பல கோடிகளை செலவழித்துள்ளது. மத்தி யில் இருந்து பகிரப்பட்ட இந்தப் பணம் மாநிலங் களுக்குச் சென்றது. இதைச் செயல்படுத்த மாநிலங்கள் தங்களுக்கென தனி பாதையைப் பின்பற்றின. ஆனால் கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்த்தால், அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடையவில்லை என்று தெரிகிறது என்கிறார் லூயென்டிக்.

இந்தியாவில் மிகவும் அதிர்ச்சியளித்த விஷயம், திறந்தவெளியில் மலம் கழிப்பதைப் பின்பற்றும் பெரும்பாலானவர்களிடம் கைப்பேசியும் இருக்கிறது என்பதுதான் என்கிறார் உலக சுகாதார நிறுவ னத்தைச் சேர்ந்த மீரா நீரா.

2025-க்குள் இப்பழக் கத்தை ஒழிப்பது என்று இலக்கு நிர்ணயித்திருப்ப தாக அய்.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80029.html#ixzz31MhVKVZG

தமிழ் ஓவியா said...


சந்தேகம்


பார்ப்பனரல்லாதார் இயக்கம்

1. தங்களைப் பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர் களுக்கும் ஆச்சார அனுஷ்டானங்களில் எவ்வித வித்தியாசமுமில்லை என்றும், தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர் களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலுகின்றவர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ, அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அருகதையோ உண்டா?

2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது சத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திரனென்றோ, பஞ்சமன் என்றோ, சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்பவனுக்குப் பார்ப்பனரல்லாதான் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா?

3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனியத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?

4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால், பார்ப்பனர்களிடம் உள்ள உத்தி யோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?

5. பார்ப்பனியத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனியமானது, பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும் இருக்காதா?

6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக்களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய் பங்கீட்டுக் கொடுத்தாலும் மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற்பாடு செய்யாவிட்டால் எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அதுபோலவே பார்ப்பனனிடமிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரிசமமாய் பங்கிட்டு கொடுத்துவிட்டு பார்ப்பனியத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரம் வளர்ந்து விடுமல்லவா?

7. பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனியத்தை ஒழிப்பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே அழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரம்தான் இருந்துவரும் என்றும், பார்ப்பனியத்தை ஒழிக்கும் கொள்கை யில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக்கங்களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும், சொல்வது சரியா? தப்பா? உதாரணமாக, பார்ப்பனரல்லாத இயக்கத்தின் பலனாய் இயக்கத்தில் உள்ள பார்ப்பனாதிக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கிலம் படித்தவர்கள் ஆதிக்கம், முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப் போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா?

- குடிஅரசு - துணைத் தலையங்கம் 06.01.1929

Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31MiU6CKm

தமிழ் ஓவியா said...

எது நாஸ்திகமில்லாதது?

ருஷ்யா தேசத்தில் கொஞ்ச நாளைக்கு முன்பிருந்தே கடவுளைப் பற்றி பிரசங்கங்களோ உபதேசங்களோ, வணக்கங்களோ அவசியமில்லை என்பதாக ஒரு சங்கம் ஏற்பட்டு அது தாராளமாய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருஷத்திய கிறிஸ்து பிறந்த நாளை உற்சவமாகக் கொண்டாடக் கூடாதென்று வெகுபலமான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததில் முழுதும் வெற்றியடையாமல் போனதால் அடுத்துவரும் ஈடர் உற்சவத்தை அதாவது கிறிஸ்து மறுபடியும் உயிர் பெற்றெழுந்தநாள் உற்சவத்தை யாரும் கொண்டாடாமல் இருக்கும்படி இப்பொழு திருந்தே வேண்டிய பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்கு அங்குள்ள சர்க்காரும் இந்த இயக்கக்காரர்களை அனுசரித்து உத்திரவு போட்டு சர்க்கார் மூலமாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்காக அநேக பிரபுக்கள் லட்சக்கணக்காக ரூபாய்கள் கொடுத்து உதவியிருக் கின்றார்களாம்.எனவே, கடவுள் பிறந்தநாளையும் மறுபடியும் உயிர்த்து எழுந்த நாளையும் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதும் சர்க்கார் மூலமாகவே அவற்றைப் பிரச்சாரம் செய்வதும் அங்கு நாஸ்திகம் என்று கருதப் படுவதில்லை.

நமது நாட்டிலே, சாமி தாசி வீட்டுக்குப் போகும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! குடம் குடமாய் நெய்யையும் வெண்ணையையும் கொண்டுபோய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! வெடி மருந்துக்கும் அடுப்புக்கரிக்கும் காசைப் பாழாக்கும் தீபாவளி உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! இளங்குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு குடம் குடமாய் பால் கொண்டு போய் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! அரசனிடம் குதிரை வாங்க என்று பணம் பெற்று தன்னிஷ்டப்படி செலவழித்து விட்டு அரசன் குதிரை எங்கே என்று கேட்டால் நரியைக் கொண்டு வந்து குதிரை என்று காட்டி அந்நரி அரசனுடைய பழைய குதிரைகளையும் கடித்து கொன்றுவிட்டதுடன் அரசனும் அடிபட்ட உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம் வேறு ஒரு மதக்காரர் (பவுத்தர்) கோவிலை இடித்து விக்கிரத்தைத் திருடிக் கொண்டு வந்து உடைத்த உற்சவத்தை நடத்த வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! எனவே, நமது நாட்டுக்கு எந்த காரியம்தான் நாதிகம் அல்லாததோ நமக்கு விளங்க வில்லை. - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 13-01-1929 காங்கிரசுக் கட்டுப்பாடு

சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டுவிட்டதினால் காங்கிரசுக் காரர்கள் தங்களது சுயமரியாதையையும் அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூட்டப்படப் போகும் சட்டசபை மீட்டிங்களுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசுக் கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைப்படி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்பு செய்தாய்விட்டது.

அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால் சென்னை மாகாண தமிழ்நாட்டு காங்கிரசுக்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிரஸ் கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டசபைக்குப் போகும்படி கட்டளை இட்டால் வெகு பக்தியாய் அக்கட்டளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப்பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிரஸ் பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31MifUAia

தமிழ் ஓவியா said...


நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமியின் கொழுப்பு!


சென்னை, மே11- பாஜக பிரதமர் பதவி வேட் பாளர் நரேந்திரமோடியை பிராமணராக நியமிக் கிறேன் என்று அக்கட்சி யில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி பிற்படுத் தப்பட்ட ஜாதியை சேர்ந்த வர் என்கிறார்; அதையே அவர் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜனதா கட் சியை கலைத்துவிட்டு சமீ பத்தில் பாஜகவில் இணைந்த சுப்பிரமணியசுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:' நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமி அப்பாயிண்ட் மென்ட்! எனக்கு இருக் கும் அதிகாரத்தை பயன் படுத்தி நான் நமோவை (நரேந்திரமோடி) பிராமண ராக நியமிக்கிறேன்.

அவ ருக்கு பிராமணருக்குரிய குணநலன்கள் இருப்பதால் இதைச் செய்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அவரைப் பின்பற் றுவோர் சிலர் பாராட்டி யும், சிலர் விமர்சனம் செய்து கீச்சுக்களை வெளி யிட்டுள்ளனர். டுவிட்டர் மோதல் உச்ச கட்டமாகிய நிலையில், மோசமான வார்த்தைகளில் சிலர் டுவிட் செய்ததாக கூறப் படுகிறது.

இதைய டுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு (?) தொடர சுப்பிர மணியசுவாமி முடிவு செய் துள்ளாராம். இது குறித்தும் இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள் ளார். ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80072.html#ixzz31SUc8wHo

தமிழ் ஓவியா said...

மீனாட்சித் திருக்கலியாணம்

அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் விழாக்கோலம் மதுரை - என்று ஒரு ஏடு 8 பத்தித் தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது. வைரக்கல் பதித்த தங்கத் தாலியை அம்மன் கழுத்தில் சுவாமி அணிவித்தாராம்.

இது சுத்தப் பொய், புரட்டு, பித்தலாட்டம் அல்லவா? கடவுளான சுந்தரேஸ்வரரா அணிவித்தார்? அர்ச்சகப் பார்ப்பான் தானே அணிவித்தான்! பக்தர்கள் இதுபற்றி சிந்திக்கக் கூடாதா? அர்ச்சகப் பார்ப்பான் தாங்கள் போற்றும் கடவுளச்சிக்குத் தாலி கட்டும்போது கூச்சல் போட்டுத் தடுத்து இருக்க வேண்டாமா பக்தர்கள்?

மனிதர்களுக்குள் தான் தாலி கட்டும் சமாச்சாரங்கள் என்றால், கடவுளுக்கு அது எப்படி வந்தது? யாராவது சிந்தித்தார்களா? அப்படியென்றால் மனிதனால் கற்பிக்கப்பட்ட கடவுள்மீது தனது பழக்க வழக்கத்தை மனிதர்கள் திணித்து விட்டார்கள் என்பது இப்பொழுது விளங்கிடவில்லையா?

பிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங் கனார் கூறியது சரிதானே?

வருஷா வருஷம் தாலி கட்ட வேண்டுமா? போன வருஷம் கட்டிய தாலியை எவன் அடித்துக் கொண்டு போனான்? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/80070.html#ixzz31SVYeIhk