Search This Blog

6.7.22

மக்கள் மதத்திற்கும், கடவுளுக்கும் தொண்டு செய்யவா? பலியாகவா? - பெரியார்



நமக்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமானால்
 
1. பல கடவுள்களை நம்பித் தீர வேண்டும்.
2. அவற்றுக்கு பல உருவங்களை ஒப்புக்கொள்ளவேண்டும்.
3. அவ்வுருவங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வணங்க வேண்டும்.
4. அக்கடவுள்களின் அவதாரங்களையும் அவற்றின் நடவடிக்கைகளையும் தேவைகளையும் நம்ப வேண்டும்.
 
நமக்கு மத நம்பிக்கை வேண்டுமானால்
 
1. ஜாதிப்பிரிவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
2. மதச் சின்னங்களை (டிரேட் மார்க்கை) ஒப்புக் கொள்ள வேண்டும்.
3. ஆத்மாவை ஒப்புக்கொள்ள வேண்டும்.
4. மேல் கீழ் உலகங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
5. மறுபிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும் 
 
என்பவற்றை விளக்கிக் காட்டி மக்களிடம் கடவுள் - மத மறுப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்கு ஆகவே இக்கட்டுரை எழுதுகிறேன்.
 
இன்றைய சைவர்களுடைய சைவப் பிரச்சாரம் பெரிதும் பெரிய புராணம் ஒன்றிலேயே அடங்கிவிட்டது. அது அஸ்திவாரம் இல்லாத ஆகாயக்கோட்டை.
அது வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம், பக்த லீலாமிர்தம் என்னும் வைணவ புராணங்களுக்குப் போட்டியாக (அதைப் போல்) ஏற்படுத்தப்பட்டதாகும். அதன் காலம் இராமாயண - பாரதத்திற்குப் பிந்தியதேயாகும்.
 
அநேகமாக வைணவ பக்தர்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் கதைகள் போலவே, ``சரித்திரங்கள்'' போலவே சைவ சமய நாயன்மார்கள், பக்தர்கள் கதைகளும் ``சரித்திரங்களும்'' இருக்கும்.
 
இரண்டிலும் உள்ள முக்கிய விஷயங்கள், அற்புதங்கள் எல்லாம் விஷ்ணு, சிவன் கடவுள்கள் கழுகுமீதும், மாடுமீதும் நேரில் வந்து வைகுண்டமும் கைலாயமும் ஆகிய பதவிகளுக்கு பக்தர்களை அழைத்துப் போனதாகவே பெரிதும் முடியும். அவற்றின் கருத்தும், பக்தி செய்தால் அதுவும் பக்தியின் பேரால் எவ்வளவு முட்டாள்தனமும் ஒழுக்கக் கேடும் இழிதன்மையுமான காரியமும் செய்தாலும் பக்தி காரணமாக வைகுண்டம், கைலாயம் பெறலாம் என்பதை வலியுறுத்துவதேயாகும்.
 
இப்படிப்பட்ட பக்திப் பிரச்சாரங்களேதான் மனித சமுதாயத்தில் பெரிதும் ஒழுக்கக்கேட்டையும் நாணயக் கேட்டையும் உண்டாக்கிற்று என்று சொல்லப்படுமானால் அது மிகையாகாது.
காலத்திற்கு ஏற்றபடி கடவுள்கள் சமயங்கள் சீர்திருத்தப்பட வேண்டியது அவசியமாகும். கிறிஸ்து, இஸ்லாம் கடவுள், சமயங்கள் சீர்திருத்தப்பட்ட கடவுள், சமயங்களேயாகும்.
 
பெரிய புராணக் கதையும் பக்த விஜயக் கதையும் காட்டுமிராண்டித்தனமான காலத்தில், கருத்தில் ஏற்படுத்தப்பட்டவையேயாகும்.
 
அவற்றில் ஒவ்வொன்றாக காலப் போக்கில் குறிப்பிட இருக்கிறேன். சமயத் தலைவர்கள் சீர்திருத்துவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?
 
பார்ப்பனர்கள் சிலர் சீர்திருத்தத்திற்குப் பயப்படுகிறார்கள் என்றால் அவர்கள் இன்றைய சீர்கேடான கீழ்த்தரமான கடவுள், சமயக் கொள்கைகளால் உயிர் வாழுகின்றார்கள். உயர்வு பெறுகிறார்கள். அது போய்விடுமே என்று அவர்கள் அலறுகின்றார்கள். குறுக்கே படுக்கின்றார்கள்.
 
நாம் இன்றைய சீர்கேடான நிலைமையினால் நாச முறுகிறோம். தலையெடுக்காமல் சேற்றில் அழுந்திக் கிடக்கிறவர்கள் போல் சிக்குண்டு கிடக்கின்றோம். ஆகவே, பார்ப்பானைப் போல் நாம் எதற்காகப் பிடிவாதக்காரர்களாக இருக்க வேண்டும்?
நம் கடவுள்களும் கோயில்களும் ஆகம முறைகளும் நம்மைக் காட்டுமிரண்டியாக ஆக்கி நம் அறிவையும் மானத்தையும் கொள்ளை கொள்ளுவதல்லாமல் நம் பொருள்களை எவ்வளவு நாசப்படுத்தி வருகிறது?
 
கிறிஸ்துவ, இஸ்லாம் மத பிரச்சாரம் படிப்பு - படிப்பு - படிப்பு என்பதிலேயே இருக்கிறது. அவர்கள் இந்த நாட்டில் பார்ப்பனர்களைப் போலவே மைனாரிட்டி சமுதாயங்களாக இருந்தாலும், பார்ப்பனர்களைப் போலவே நம்நாட்டில் மண்வெட்டி மண்கூடை எடுக்காமல் நல்வாழ்வு வாழ்கிறார்கள். அரசியலில் நம்மைவிட நல்ல உயர்பங்கும், அரசியலில் நம்மைவிட நல்ல உயர் பங்கும், சமுதாயத்தில் நல்ல பாதுகாப்பும் பெற்று வாழ்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு உதவியது அவர்கள் சமயம்தான். நம் கடவுளையும், சமயத்தையும் ஏற்ற மக்கள் தான் 100-க்கு 100 மலமெடுக்கிறார்கள், கசுமாலக் குழியில் இறங்கி சேறு எடுக்கிறார்கள். 100-க்கு 75 பேர் மண்வெட்டியையும் நம் பெண்கள் மண் சுமக்கும் கூடையையும் சொத்தாக வைத்து வாழ்கிறார்கள்.
 
படிப்பிலும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நம்மை விட இரண்டு பங்கு மூன்று பங்கு வீதம் அதிகமானவர்கள் படித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நம் மதவாதிகள், மதத் தலைவர்கள், மதப் பிரச்சாரகர்கள் நம் மக்கள் குறைகளையும், இழிநிலையையும், அறியாமையையும் மாற்றுவதற்கு என்ன செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்யப் போகிறார்கள்? ``திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாதாரும்'' என்றும், ``திருப்பதி மதியாப் பாதம்'', ``சிவனடி வணங்காச் சென்னி'' என்றும் பாடினால் போதுமா? கூழில்லாமல் கும்பி பாழாவதைப்பற்றிச் சிறிதுகூடச் சிந்தியாமல், ``நீறு இல்லாத நெற்றிபாழ்'' என்றும் பிரச்சாரம் செய்தால் போதுமா?
 
நம் நாட்டையும், நம் மனித சமுதாயத்தையும் தலையெடுக்கவொட்டாமல் பாழாக்கிய பார்ப்பனர்களைப் போலவே நம் சமயவாதிகள் சிவ, விஷ்ணு சமயாச்சாரியார்கள் என்று சொல்லப்படுமானால் அதற்கு யார்தான் மறுப்புக் கூற முடியும்? இன்று தமிழ்நாட்டிலே கோயிலுக்கு அழுது நாட்டை நாசமாக்கியவர்களான நாட்டுக்கோட்டை செட்டிமார்களில் பலர் துணிந்து மனந்திரும்பி கல்வி அளிக்கும் வள்ளல்களாக இருக்கிறார்கள். அண்ணாமலை கல்லூரியே ஏற்படாமலிருந்தால் நம்மவர்களில் உயர் படிப்பு படித்தவர்கள் ஆயிரக்கணக்கில் இவ்வளவு பேர் இருக்க முடியுமா? முடியாது, முடியாது, முடியவே முடியாது என்று சொல்லுவேன். மற்றும் அழகப்பா கல்லூரி, தியாகராஜர் கல்லூரி ஆகியவற்றால் நம் பிள்ளைகள் எவ்வளவு பேர் படித்தவர்களாக ஆகி இருக்கிறார்கள், ஆகி வருகிறார்கள் என்பதைப் பார்த்தும் நம் சமயாச்சாரியார்களுக்கு நல்லறிவு வரவில்லையானால் அது நம் நாட்டைப் பிடித்த நோய் என்றுதானே சொல்லவேண்டியதாகும்.
 
திருச்சியில் கிறிஸ்தவக் கல்லூரி கிறிஸ்தவருக்கும், பார்ப்பனருக்கும் தான் பெரிதும் பயன்படுகிறது. பார்ப்பனர் கல்லூரிகள் பார்ப்பனர்களுக்கே பயன்படுகிறது.
 
இஸ்லாம் கல்லூரியில் இஸ்லாமியர்கள் போக மீதிதான் நமக்குக் கிடைக்கலாம். அப்படியெல்லாம் செய்வதில் அவர்கள் மீது குற்றமென்ன? இவ்வளவு பெரிய பழைமையான தமிழன் நகரத்திலே தமிழனுணர்ச்சி உள்ள தமிழர் இருந்தும் தமிழனுக்குக் கல்லூரி இல்லை. சீரங்கமும், திருவானைக்காவலும், தாயுமானசாமி மலையும், சமயபுரமும் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை இலட்சம் ரூபாய்களை நாசமாக்குகிறது. எவ்வளவு பேரை முட்டாளாக்குகிறது?

இந்தக் கோயில்களை இடித்து அல்லது இந்தக் கோயில்களுக்கு வருபவர்களுக்கு ஆளுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வீதம் ``கேட்டில் வரி வசூல் செய்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவசக் கல்லூரிப் படிப்பு கொடுத்தால் எந்த சாமி கோபித்துக் கொள்ளும்? எந்த பக்தன் நாசமாய்ப் போய் விடுவான்?
 
தருமபுரம் திருவாவடுதுறை, திருப்பனந்தாள் முதலிய நூற்றுக்கணக்கான சைவ மடாதிபதிகளின், ஆண்டொன்றுக்கு சுமார் அய்ம்பது இலட்சத்துக்குக் குறையாது கோடி ரூபாய்வரை வரும்படியும், தஞ்சை மாவட்டத்தில் சுமார் ஆண்டொன்றுக்கு அய்ம்பது இலட்சத்துக்குக் குறையாத வரும்படி உள்ள கோயில்களின் வரும்படியும், தமிழ்நாட்டில் மற்றும் லட்சம் லட்சமாக வரும்படி வரக்கூடி கோயில்களின் வரும்படியும் கல்விக்கு செலவழித்தால் தமிழ்நாட்டில் பி.ஏ., படிக்காத ஆணையோ, பெண்ணையோ காண முடியும்? மற்றும் சர்க்கார் கொடுக்கும் பஸ், லாரி பர்மிட்களும், பண்டங்களுக்குக் கொடுக்கும் பர்மிட்களும் ஏன் ஒரு யோக்கியமான அதாவது சுயநலத்துக்குப் பயன்படுத்தாத தன்மையில் ஒரு கல்வி ஸ்தாபனம் ஏற்படுத்தி அதற்குக் கொடுத்து அவர்களிடம் கல்வி நிருவாகம் கொடுத்து சர்க்கார் மேற்பார்வையில் அதன் வரும்படியைக் கொண்டு நடத்தச் செய்யக் கூடாது?
 
மதமும், கடவுளும் மக்களுக்கு தொண்டு செய்யவா? அல்லது மக்கள் மதத்திற்கும், கடவுளுக்கும் தொண்டு செய்யவா? பலியாகவா? என்று கேட்டு முடிக்கின்றேன்.
 
குறிப்பு: இதை நம் கழகத் தோழர்கள் நல்ல வண்ணம் படித்து மக்களுக்குப் பிரச்சாரம் செய்யவேண்டுகிறேன்.

                         --------------------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்-- "விடுதலை", 12.10.1962

0 comments: