Search This Blog

8.7.22

பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்! நீங்களே இழிமகன் என்று ஒப்புக்கொள்ளலாமா?

 

பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்! நீங்களே இழிமகன் என்று ஒப்புக்கொள்ளலாமா?

 


தலைவர் அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

 இந்தக் கூட்டம் கட்டட நிதி அளிப்புக் கூட்டமாகக் கூட்டப்பட்டுள்ளது. நிதியளிப்புக் காரியத்திற்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையில்லை. பணத்தைத் தபாலில் (பண விடைத்தாள் மூலம்) அனுப்பினால் அல்லது ஆள் மூலம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். பணம் வாங்குவதற்கு நான் இவ்வளவு ஆடம்பரம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், நிதியளிப்புக் கூட்டம் என்ற பெயரால் ஆங்காங்கு நம் கருத்துக்களைச் சொல்லலாம் என்பதற்கே - பிரச்சாரப் பயனை உத்தேசித்தே - இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

வீண் ஆடம்பரம், அதோடு வெட்டியான செலவு, இவைகளில் நேரமும் அதிகமாகிவிட்டது. நான் முதலில் இந்த ஊரில் ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்ற கண்டிஷன் (நிபந்தனை) பேரில் தான் வந்தேன். முக்கிய செயல்களில் கவலையில்லாமல், கண்டபடி அநாவசியமான வழிகளில் செலவு செய்து ஆடம்பரம் செய்துவிட்டார்கள். ஏனென்றால் இந்த மாவட்டத்தில் (தஞ்சாவூர்) ரூ.7000- தான் கேட்டேன். அவர்கள் திட்டம் போட்டுக் கொண்டது 12,500 ரூபாய். ஆனால், இதுவரையில் 30- ஆயிரம் தந்துவிட்டார்கள். ஆகவே, நான் பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. கிடைத்த வரையில் சரி - என்ன கொடுத்து வைத்தது வீணாகப் போகிறது? ஆனால், எனக்குப் பேசுவதற்கு நிறைய அவகாசம் (கால நீளம்) தந்து என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், மற்றவர்கள் யாரும் என்னைப்போல் பேசமாட்டார்கள். காரணம், அவர்களுக்கு விஷயம் தெரியாது என்பதல்ல. ஏன் அவர்கள் அறிவாளிகள்தான், மேதைகள்தான்! ஆனால், என்னைப்போல் பேசினால் ஓட்டு (தேர்தல் வாக்கு) கிடைக்காது - உதை கிடைக்கும் என்று பயந்து கொள்வார்கள். விஷயம் அததான். எனக்கு வயது 81- ஆகிவிட்டது. இவ்வளவு நாள் இருப்பதே அதிசயம்தான். அதனால் நம்முடைய மீதி நாள்களை இந்தக் காரியத்தில் செலவிட்டுக் கருத்தைச் சொல்லிவிட்டுப் போவது என்ற தைரியத்தில் துணிந்து பேசுகிறேன்.

 

தோழர்களே! இன்று நம் மக்களுக்குள்ள இழிவு இன்று நேற்றல்ல, 3000- ஆண்டகளாக உள்ளது. நமக்குப் புத்தியும், கவலையும் இல்லாததால் நம்மை இழிவுடுத்தவே உண்டாக்கப்பட்ட சாஸ்திரங்களையும், குழவிக் கல்லையும் (கல் சிலையையும்), பார்ப்பானையும் கட்டிக் கொண்டு அழுகிறோம். மான உணர்ச்சியைப் பற்றியும் கவலைப்படுவதற்கு இல்லாத காட்டுமிராண்டிகளாக இன்றும் வாழ்கிறோம். இன்று நாம்தான் மூட்டை தூக்குகிறோம். கக்கூசு (மலக்கழிவு) எடுக்கிறோம். பாடுபட்டுப் பயிர் செய்கிறோம். கல்லுடைக்கிறோம். இப்படித் துன்பப்பட்டுச் சமுதாயத்திற்குத் தேவையான எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு திராவிடர் ஆகிய நாம்தான் இழிமக்களாக - சூத்திரர்களாக - பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று கூறப்படுபவர்களாக வாழ்கிறோம்! ஒரு வேலையும் செய்யாத சோம்பேறி, மேல்சாதியாக - பிராமணனாக வாழ்கிறான்!

 

இது ஏன் என்று 3000- ஆண்டுகளாக எவரும் பேசவில்லையே? புத்தர் பகுத்தறிவுக் கருத்துச் சொன்னார். அவரையே தீர்த்துக்கட்டி விட்டார்கள். மற்றப்படி ரிஷிகள், முனிவர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாரும் நமக்கு எதிரிகளாக - நம்மை இழி மக்களாக்குவதற்கு ஆதரவாகத் தோன்றியவர்கள்தான். முன்பு நம்மைவிட மடையனாக அக்காள் - தங்கையைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவன் தான் வெள்ளைக்காரன். இன்று அவன் அறிவால் எவ்வளவு முன்னுக்கு வந்துவிட்டான்! அதுபோலத்தான் முஸ்லிம்களும் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்கள்! "நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் அவர்களே சொல்வார்கள், நபிகள் பிறப்பதற்கு முன்பு நாங்கள் காட்டுமிராண்டிகளாக இருந்தோம்" என்று! இன்று எவ்வளவு முன்னேறிவிட்டார்கள்! நாம் இன்றும் சிந்திக்காமல், கவலைப்படாமல் இருக்கிறோம் என்பதைத் தவிர நமக்குப் புத்தியில்லை என்று சொல்ல முடியுமா?

 

இதுவரையில் யாரும் கவலைப்படாத - சொல்லப் பயப்படுகிற காரியத்தை நாங்கள் தோள் மேல் போட்டுக் கொண்டு அலைகிறோம். முடிந்தால் நமக்கு இருந்துவரும் இழிவை - சாதியை - ஒழிக்கிற காரியம் தான் முடியும். நாங்கள் என்ன மற்றவர்களைவிட நெய்யில் பொரித்தவர்களா என்றால், நாங்கள் துறவிகள் மாதிரி யார் தயவிலும் பிழைக்க வேண்டியவர்கள் அல்லர். எங்கள் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு எங்கள் அப்பன் பாட்டன் சம்பாதித்ததை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்திப் பாடுபடுகிறவர்கள். மற்றவர்கள் மாதிரி உங்கள் ஓட்டுக்கோ மற்றவைகட்கோ உங்களை எதிர்பார்க்கிறவர்கள் அல்லர்.

 

இப்படிப்பட்ட எங்கள் தொண்டில் பலனும் கிடைக்கிறது. சாதாரணமாகப் பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள்; இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு அடி வாங்காத பெண் யார்? ஒருத்தன் பல வைப்பாட்டிகள் வைத்திருப்பான். கேட்டால் "கிருஷ்ணனே ஆயிரக்கணக்கில் வைப்பாட்டி வைத்திருந்தான் - எனக்கென்ன" என்பானே! இதை யார் கேட்டார்கள்? பெண்களுக்காக முதலில் நாங்கள்தான் கூப்பாடு போட்டோம்.

 

இன்று காங்கிரஸ்காரன்தான் தீண்டத்தகாதவர்க்கு மந்திரி பதவி தந்திருக்கிறான் என்றால் முதலில் கூப்பாடு போட்டது யார்? மற்றவர்கள் பேசாத காலத்தில் நாங்கள்தானே பேசினோம்! இன்றும் என்ன? எங்களை ஒழித்துவிட்டால் மீண்டும் தோசையைத் திருப்புகிற மாதிரித் திருப்பிப் போடலாம் என்று எண்ணுகிறான். இன்று சட்டத்தில்தானே பெண்களுக்கு உரிமை - சொத்து கொடுத்திருக்கிறான்! நாளைக்குச் சட்டத்தைத் திருத்தினால் போகிறது!

 

இன்று இராஜாஜி (இராஜகோபால ஆச்சாரியார்) தனிக்கட்சி வைத்துக் கொண்டு பெண்களுக்குச் சொத்து கொடுத்தது தப்பு என்று தைரியமாகப் பேசுகிறாரே! நாங்கள் உயிருடன் இருக்கும்போதே பேசுகிறாரே! நம்மை என்றும் சூத்திரனாகவே வைத்திருக்க வேண்டும், (மனு) தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறாரே! நம் (திராவிட) இனத்தவர்களான மானங்கெட்டவர்களும் அதில் போய்ச் சேருகிறார்களே? இந்தக் கம்யூனிஸ்ட் (பொதுவுடமைவாதி) - சாதியைப் பற்றிப் பேசுகிறானா? இவனுக்கு எதற்கு ஜமீன்? இவனுக்கு எதுக்கு சொத்து என்கிறானே தவிர 'உழைக்கிறவன் ஏன் கீழ்ச்சாதி? உழைக்காத பார்ப்பானுக்கு எதற்கு உயர் சாதிப் பட்டம்?' என்று கேட்கிறானா? நாங்கள் தான் சொல்கிறோம். சக்கிலி செருப்புத் தைக்க வேண்டும், நாவிதன் சிரைக்க வேண்டும், குயவன் சட்டி பானைதான் செய்ய வேண்டும் - எல்லோரும் படித்துவிட்டு உத்தியோகத்திற்கு வந்தால் எங்கள் கதி என்னாவது என்று இராஜாஜி பேசுகிறாரே! இவற்றையெல்லாம் யார் கேட்கிறார்கள்?

 

திராவிடர் கழகம் ஓர் அதிசமயமான நிறுவனம். உண்மையில் ஓர் அதிசயமான ஸ்தாபனம்தான். சாமியை உடைக்கிறோம். இராமாயணம் புரட்டு என்கிறோம். பாரதம் விபசாரி சரிதம் என்கிறோம். கடவுள் கல் என்கிறோம். இத்தனைக்கும் ஒரு ரகளை (கலகம்) இல்லை. ஓர் உயிர்ச்சேதம் இல்லை. சாதாரணமாக வடகலை, தென்கலை நாமத்திற்கு அசிங்கமாகச் சண்டை போடுகிறான்! சாம்பலுக்குப் பெரிய ரகளை நடக்கிறது. இன்னும் ஏதேதோ நடக்கிறது. நாங்கள் யாவரும் நினைக்காத மற்றவர் சொல்லப் பயப்படுகிற காரியத்தைச் செய்கிறோம். எந்த இரகளையும் இல்லை. முப்பதாண்டு பிரச்சாரத்தில் நல்ல பயன் கிடைத்திருக்கிறது.

 

அதனால்தான் இதை ஓர் அதிசயமான இயக்கம் என்கிறேன். இன்று உங்களுக்குத் தெரியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.

 

தோழர்களே! நீங்கள் யாரும் மானத்தை எண்ணி, கோயிலுக்குப் போகக் கூடாது. உள்ளே போய் நீ (திராவிடன்) சாமியைத் தொட்டால் சாமி செத்துவிடும் என்கிறான்! வெளியில் இருந்துதான் கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறான்! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால், கீழ்ச்சாதி என்பதை ஒத்துக் கொள்வதாகத் தானே அர்த்தம் (பொருள்)?

 

பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள். அவன் பிராமணன் என்றால் நீ யார்? உன் மனைவியை வைத்துக் கொண்டே, கூட இருக்கும் வேறொரு பெண்ணை அவள் பதிவிரதை என்றால் உன் மனைவி விபச்சாரி என்று வாயால் சொல்லாவிட்டாலும் அர்த்தம் அதுதானே? அதுபோல நீ பார்ப்பானைப் பிராமணன் என்றால் நீ உன்னைச் சூத்திரன் - தேவடியாள் மகன் - என்பதை ஒத்துக் கொள்வதாகத்தானே அர்த்தம்? ஆகவே நீங்கள் நல்லபடி சிந்தித்து உங்கள் இழிவு நீங்க முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு உங்கள் ஆதரவை - உங்களுக்குச் சரி என்று பட்டால் தரவேண்டும்.

 

                                                        ----------------------------- - 17.01.1960- அன்று நன்னிலத்தில் (குளிக்கரை) பெரியார் .வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை’’, 21.1.1960

0 comments: