Search This Blog

19.7.22

இந்து என்றால் என்ன பொருள்?

                                இந்து என்றால் என்ன?


  தந்தை பெரியார்

பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர்களுக்கு முதலில் பிறந்த நாள் கொண்டாடினார்கள் - அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!
கடவுளுக்கு இலக்கணம் கூறியவர்கள் கடவுள் இறக்காதவன், பிறக்காதவன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் - சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமியில் பிறந்தான்;  கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந்தான் என்று  கூறி விழாக்கள் - உற்சவங்கள் கொண் டாடினார்கள்.
பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளை யும், செய்யாத சங்கதிகளையும் புகுத்தி விழாக் கொண்டாடினார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.
இவை எல்லாம் மக்களை முட்டாளாக்குவதற் கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.
பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர் களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்களுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.
இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படு கின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் - பரப்பவுமே செய்யப்படுகின்றன.
அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். 
 
இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனுமதிக்கிறேன். மக்களும்  எனது தொண்டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகையில் பணம் பல பொருள்கள் முதலியனவும் அளிக்கின்றீர்கள்.
நாங்கள் யார் என்பதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நாங்கள் சமுதாயத் தொண்டுக்காரர்களே தவிர அரசியல்வாதிகள் அல்லர். நாங்கள் தேர்தலுக்கு நிற்பதோ, ஓட்டுக்காகப் பொதுமக்களிடம் வருவதோ எங்கள் வேலை அல்ல. நாங்கள் பதவிக்குப் போகக் கூடாது என்பதைக் கொள்கையாகத் திட்டமாகக் கொண்டவர்கள்.
நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள் கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப்பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.
எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.
இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன் னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டு களைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.
இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத்திரன் என்று எண்ணிக் கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.
முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது.  ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரிகளிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.
அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு  அத்துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை - எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.
இன்றைக்கு அரசியல் துறையிலாகட்டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த் தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.
இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப் பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.
இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல்லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.
இந்து என்றால் என்ன பொருள்? இந்து என்றால் பார்ப்பானைப் பொறுத்தவரையில் உயர்வு பொருள் உண்டு. பார்ப்பனர் அல்லாதாருக்கு இந்து என்றால் என்ன பொருள்? சூத்திரர், தாசிபுத்திரர்கள் என்பது தானே.
இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.
அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின்றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.
அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே - எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின்றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!
உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக - சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.
இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.
அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!
தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?
இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கடவுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.
அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத் தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.
மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.
தோழர்களே! இன்று மானமுள்ள - யோக்கிய முடைய மக்களுக்கு நடக்கக்கூடாத எல்லாம் இன்றைக்கு அரசியல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே - பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.
தோழர்களே! நான் இப்போது சொல்ல வில்லை. இந்த நாட்டிற்கு என்றைக்கு ஜனநாயகம் என்று கூறப்பட்டதோ அன்றைக்கே காலிகள் நாயகம் தான் ஏற்படப் போகின்றது. காலித்தனம் தான் தலை விரித்து ஆடப் போகின்றது என்று சொன் னேன். இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றவர்கள் இந்த ஆட்சி இன்னது செய்யவில்லை. இன்ன கோளாறு செய்தது. ஆகவே, ஒழியவேண்டும் என்று திட்ட வட்டமாகக் கூறவில்லையே.
காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன - நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.
நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாச வேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.
தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன்றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக்களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.
இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் - பார்ப்பனர் அல்லாதவர்களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.
இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட்ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார்களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.
பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளிலும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.
இன்றைக்கு அந்த நிலை இருக்கின்றதா? அடி யோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.
இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?
இன்றைக்கு எம்.ஜி.ஆர். பெயரில் கலவரம் நடைபெற்றது. இது யோக்கியமில்லாத, தேவை இல்லாத கலவரம் ஆகும். ஓர் ஆட்சியை ஒழித்து ஒரு கட்சி பதவிக்கு வரவேண்டும் என்றால், காலித்தனம் தான் பரிகாரமா? எனவே, நாட்டின் பொது ஒழுக்கம் அரசியல் பேரால் மிக மிகக் கெட்டுப் போய்விட்டது என்று எடுத்துரைத்தார்கள்.
மேலும், பேசுகையில், எம்.ஜி.ஆர். சுயநலம் காரணமாக தி.மு. கழகத்தில் இருந்துப் பிரிந்து அதனை எதிரிக்குக் காட்டிக் கொடுக்க முன்வந்தமை பற்றியும் திண்டுக்கல் தேர்தலில் பெண்கள் சினிமா மோகம் காரணமாக எம்.ஜி.ஆர். கட்சிக்கு ஓட்டுப் போட்ட கேவல நிலைபற்றியும் விளக்கினார்கள்.
                      -----------------------29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973 அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு ’விடுதலை’, 12.6.1973.

0 comments: