Search This Blog

5.7.22

ஜாதியை ஒழிக்க வேண்டுமானால்! - பெரியார்

அன்றும் அரசியல் என்பது இனநலனாகத்தான் இருந்தது!
திராவிடர் கழகத்தார்களாகிய நாங்கள் தேர்தலில் ஈடுபடுபவர்கள் அல்லர். ஓட்டு வேட்டைக்காரர்கள் அல்லர். அதாவது அரசியல் வயிற்றுப் பிழைப்புக்காரர்கள் அல்லர். நாங்கள் சமூதாய சீர்திருத்த இயக்கத்தவர்கள். அதன் காரணமாகவே எங்கள் இயக்கத்தை அரசியல் கட்சி என்று சொல்லிக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்கள் அரசியல் என்று சொல்லித் திரிவதிலும் நாங்கள் பிரவேசிப்பதில்லை. அதைக் கண்டிப்பது தான் எங்கள் வேலை. மற்றப்படி எங்கள் வேலையானது சமூதாய சம்பந்தமானது. சமூதாயக் குறைபாடுகள் பற்றிப் பேசுவது ஆகும்.


இப்படி பேசுவது மக்களுக்கு புரட்சிகரமாகத் தோன்றும். எளிதில் விளங்காது. எனவே திருப்பித் திருப்பி விரிவாகப் பேசி விளங்க வைக்க வேண்டும்.


உலகம் எல்லாம் எவ்வளவோ முன்னுக்கு வந்தும் கூட நாம் இன்னும் காட்டுமிராண்டி நிலையில்தான் உள்ளோம். இதற்காகக் கவலை எடுத்துக் கொண்டு பாடுபடுவது நாங்கள் தான்.


தோழர்களே! நமது நாட்டில் அரசியல் என்று ஒன்றும் இல்லை. ஆனால் அரசியல் என்று கூறுவது எல்லாம் வெறும் வயிற்றுப் பிழைப்பு சங்கதியேயாகும்.

அரசியல் என்று கூறுவது எல்லாம் சமூதாய சம்பந்தமான சங்கதிக்கு சர்க்கரை பூசி மூடி மறைத்து உங்களிடம் வந்து பேசுவார்கள்.

இந்த நாட்டின் அரசியல் ஸ்தாபனங்கள் என்பதில் பழைமையானது காங்கிரஸ் ஆகும். அது தின்பதில் உதிர்ந்து சிந்தியதை பொறுக்கித் தின்ன பல பெயர்களில் குட்டி குட்டி ஸ்தாபனங்கள் ஏற்பட்டுள்ளன.

முதல் முதல் காங்கிரஸ் ஏற்படக் காரணம் வெள்ளைக்காரன் ஆட்சி நிலைக்க வெள்ளைக்காரனால் ஏற்படுத்தப்பட்டது. ஏற்படுத்தி பார்ப்பனர் கையில் ஒப்படைக்கப்பட்டது ஆகும். அதாவது வெள்ளைக்காரன் பெற்றான். பார்ப்பான் வளர்த்தான். இதனால் இருவரும் நலம் அடைந்தனர்.


வடநாட்டில் நாளாவட்டத்தில் மராட்டியர், முஸ்லிம்கள் முதலியவர்கள் காங்கிரசுக்கு விரோதமாக கிளம்பினார்கள். இவர்கள் தான் வெள்ளையன் இந்த நாட்டை ஆளுவதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள். இவர்களுக்கு ஆதிக்கம் இல்லாமல் போனது கண்டு வெள்ளையர்களை எதிர்க்கத் தலைப்பட்டனர். வெள்ளையனைத் தலைகாட்ட வொட்டாமல் செய்ய முற்பட்டனர்.


எனவே வெள்ளையர்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும், எதிர்ப்பை சமாளிக்கவும் இந்த நாட்டிலேயே சிலரைப் பிடித்து இராஜ விசுவாச பிரச்சாரம் செய்யச் செய்வது என்று எண்ணினார்கள்.


இவர்களுடைய திட்டத்துக்கு இவர்களுக்குக் கிடைத்த கூட்டம்தான் இந்தப் பார்ப்பனர்கள். படித்த பார்ப்பனர்களும், பார்சி வியாபாரிகளும் இதற்கு உடன்பட்டனர்.

இவர்கள் மூலம் இராஜ விசவாசப் பிரச்சாரம் செய்யச் செய்தனர். உலகம் உள்ளவரையும் வெள்ளையனே ஆள வேண்டும். வெள்ளையனை இந்த நாட்டுக்கு ஆள் அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். இப்படி இராஜவிசுவாசக் கவி பாடியே பார்ப்பனர்கள் பெரிய பெரிய பதவிகள் வெள்ளையனைப் போன்ற சம்பளம் எல்லாம் கூலியாகப் பெற்றனர்.


இந்த நிலையில் பார்ப்பானே பலன் எல்லாம் அடைவது கண்டு முதல் முதல் கிளர்ச்சி செய்தவன் முஸ்லிம்தான். முஸ்லிம் ரகளை பண்ணி பார்ப்பனர் போலவே தாங்களும் இராஜ விசுவாசத் துதிபாடி பதவி உத்தியோகம் பெறலானார்கள்.

தங்களுக்கே ஏகபோகமாக இருந்த பதவி, சம்பளம் எல்லாம் எல்லோருக்கும் போவது கண்டு பார்ப்பனர்கள் ஆத்திரப்பட்டார்கள். வெள்ளையனுக்கு விரோதமாக திரும்பத் தலைப்பட்டனர்.

இப்படி உத்தியோகம் பலருக்கும் போவது கண்டு பார்ப்பனர் செய்த கிளர்ச்சிக்கத்தான் சுதேசக் கிளர்ச்சி என்று கூறிக் கொண்டார்கள். இந்தத் தூத்துக்குடியிலேயே வாஞ்சிநாத அய்யர் என்பவர் ஒரு வெள்ளையனைச் சுட்டார். அவருக்கு நினைவுச் சின்னம்கூட இன்று உள்ளது. இப்படிச் சுட்டது சுதந்திர உணர்ச்சிக்காக அல்ல. பார்ப்பானுக்கு பதவி உத்தியோகம் பறி போகுதே என்ற ஆத்திரந்தான் ஆகும்.
 

வெள்ளையனுக்கு விரோதமாக அங்கு கப்பல் ஓட்டப்பட்டது என்பதும் கூட பதவி உத்தியோகம் தங்களுக்கே இருந்தது. மற்றவருக்கும் போகுதே என்ற ஆத்திரத்தாலேயே அகும்.

இங்கு கப்பல் ஓட்டப்பட்டது என்றால் இதற்குத் தலைவனாக இருந்தவன் ஒரு பார்ப்பான்தான். செகரெட்டரியாக இருந்தவன் ஒரு பார்ப்பான் தான். செகரெட்டரியாக இருந்தவன் நன்றாகக் கொள்ளையடித்தான். நம்முடைய அப்பாவி சிதம்பரம் பிள்ளைதான் ஓடி ஓடிப் பாடுபட்டு வீட்டை விற்றுக் கடனைக் கட்டி ஜெயிலுக்குப் போய் ஓட்டாண்டியானார். மற்றவர்கள் எல்லாம் கொள்ளை அடித்தார்கள்.


முஸ்லிமைப் போலவே தென்னாட்டிலும் பார்ப்பனரல்லாதார்கள் கிளர்ச்சி செய்யத் தலைப்பட்டனர். அததான் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) ஜஸ்டிஸ் கட்சிக்காரர்ளும் பதவி உத்தியோகமும் பெற்று ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று காங்கிரசினையே தோற்கடித்தனர்.


இப்படிப்பட்ட காலத்தில் தான் பார்ப்பனர்கள் பல்ட்டி அடித்தனர். என்னைப் போன்றவர்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து காங்கிரசை வளர்த்துக் கொண்டனர். வெள்ளையனுக்கு விரோதமாகத் திருப்பிவிட்டனர்.


இவர்களின் வண்டவாளங்கள், போக்குகள் கண்டுதான் நான் காங்கிரசில் இருந்து வெளியேறினேன்.


தோழர்களே! முன்பு பார்ப்பனர்களுக்கு தேச பக்தி, தேசியம் என்பது எல்லாம் காங்கிரஸ்தான். ஆனால் காங்கிரஸ் ஆனது இன்று நம்மவர்கள் கைக்கு வந்து விட்ட பிறகு இன்று பார்ப்பனர்களுக்கு தேசியம் எது தெரியுமோ? காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதுதான்.

அரசியல் என்பது என்ன என்றால் இனநலனாகவே இருந்து வந்து இருக்கின்றது. நீங்கள் பார்க்கலாம். பார்ப்பான் கிளர்ச்சி பண்ணியதும் அவன் இன நலனுக்கு அவன் இன உயர்வுக்குத் தான் முஸ்லிம்கள் கிளர்ச்சி செய்ததும் அவர்கள் நலனுக்காகவே ஆகும். பார்ப்பானரல்லாதவர்களின் நன்மைக்கே ஆகும்.


இன்று ஆச்சாரியாரும், பார்ப்பனர்களும் தாங்கள் போற்றி வளர்த்த காங்கிரசை இன்று ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் இனநலனுக்கேயாகும்.


என்னால் காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும் என்பதாக கூறப்பட்டு 30- ஆண்டுகளாக அதே பணியில் இருந்த நான் இன்று காங்கிரஸ் ஒழிக்கப்படக் கூடாது. வாழ வைக்க வேண்டும் என்று ஓடி ஓடிப்பாடு படுவதும் பார்ப்பனர் அல்லாதார் நலனுக்கேயாகும்.

பார்ப்பனர் நலனுக்குப் பாடுபடுவதுதான் இராஜாஜியின் அரசியல். பார்ப்பனர் அல்லாதார் நலனுக்குப் பாடுபடுவதுதான் என்னுடைய அரசியலாகும். சுமூதாய இயல் என்பதற்குப் பொருள்தான் அரசியல் என்பதே எங்கள் அகராதியாகும்.


இன்றைய ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற காமராசர் நமது இனநலனுக்குப் பெரிதும் உதவியாக இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் இவர் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
எங்களுடைய திராவிடர் கழக இலட்சியம் எல்லாம் தமிழ் மக்களிடம் இருந்து சாதிப் பிரிவினையை ஒழிக்க வேண்டும். இழிவினை ஒழிக்க வேண்டும் என்பதுதான்.


திராவிடர் கழகத்தின் தொண்டானது மனித சமூதாயத்தில் இருந்து வரும் சாதிப் பிரிவினை ஒழித்து மக்களை எல்லாம் சமமானவர்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகிறது.

சாதியை ஒழிக்க வேண்டுமானால் அது சாமான்ய வேலை அல்ல. சாதி ஒழிக்க சாதிக்கு சாமான்ய ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பான் இவை எல்லாம் அடியோடு ஒழித்தாக வேண்டும். ஒன்று விடுபட்டாலும் சாதியை ஒழிக்க முடியாது. பார்ப்பான் என்று ஒருவன் இருப்பானேயானால் சூத்திரன் என்ற ஒருவன் இருப்பதாகத்தான் பொருள்.


இவற்றிற்குப் பாடுபட எங்களைத் தவிர வேறு ஆளே இல்லை. எங்களால் தான் சொல்லவும் முடியும். சொல்லிவிட்டு மிஞ்சவும் முடியும்.

சாதியின் காரணமாகவே தான் அரசியல் கட்சிகள் உயிர் வாழ்கின்றன. எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும் பார்ப்பான் தயவு இருந்தால் தான் வாழ முடியும்? பார்ப்பானால் எந்தக் கட்சியையும் ஒழித்துக் கட்ட முடியும்! சர்வ வல்லமை படைத்த இந்தப் பார்ப்பனருக்கு விரோதமாக எந்த அரசியல் கட்சிக்காரர்களும் முன்வர மாட்டார்கள்.


எதற்காவது முன்வருகின்றார்கள் என்றால் சாதி ஒழிப்புக்காக நாம் செய்யும் முயற்சிகளை தடுக்கவோ முட்டுக்கட்டை போடவோ வேண்டுமானால் முன்வந்து இருப்பார்கள்.

இந்த நாட்டில் தோன்றிய மத சம்பந்தமானவர்களும், தெய்வீக சக்தி வாய்ந்தவர்கள் என்று கூறப்படுபவர்களும், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள் எனப்படுபவர்களும் எவராது சாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்களா? இல்லையே! ஆனால் சாதி ஒழியாமல் இருக்க ஆணி அடித்து விட்டுத்தானே சென்றார்கள். இன்னும் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், நாயக்கன், மராட்டியன், துலுக்கன் இன்னும் எத்தனையோ பேர்கள் ஆண்டு இருக்கின்றார்கள். இவர்களும் நமது இழிவும் - மடமையும் ஒழியாமல் நிலைத்து இருக்கவே பாடுபட்டு வந்து இருக்கின்றனர். யாரும் இந்தப் பணியில் 2000- ஆண்டுகளாக முன்வரவில்லை.


தோழர்களே! சற்று ஆணவமாகக் கூடக் கூறுவேன். இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சமூதாய இழிவு ஒழிக்க, சாதி ஒழிக்க எவனாவது முன் வந்து தொண்டாற்றுகின்றான் என்றால் நாங்கள் தான். இதற்காக ஒரு கட்சி இருக்கின்றது என்றால் எங்கள் கழகம்தான். ஒரு இயக்கம் ஒரு கூட்டம் இருக்கின்றது என்றால் எங்கள் கருப்புச் சட்டைக் கூட்டம் தான். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. இந்தியா எங்கணுமே பார்த்தாலும் நாங்கள் தான் இதற்காகப் பாடுபடுபவர் ஆவோம்.


2000- ஆண்டுகளுக்கு முன்னும் எவனாவது உண்டா என்றால் 2600- ஆண்டுக்கு முன் தோன்றிய புத்தர் பாடுபட்டார். அவர் சாதராரண அன்னக்காவடி அல்ல. அரசகுமாரனாகப் பிறந்தவர். அரச வாழ்வை சுவைக்க வேண்டியவன். அப்படிப்பட்டவன் நம் மக்கள் சமூதாயத்தில் இருந்து வரும் சாதி முறை - இழிவு இவற்றைக் கண்டு இதற்குப் பரிகாரம் தேடப்பாடுபட்டான்.

"எந்த ஒரு செய்தியையும் பகுத்தறிவு கொண்டு அலசிப் பார்த்து புத்திக்குச் சரி என்று பட்டதை ஏற்று நடவுங்கள்" என்று கூறினார்.


இப்படி புத்தி சொல்லும் வழியில் நட என்று கூறிப்பாடுபட்டவர் ஆனபடியால் புத்தன் என்று அழைக்கப்பட்டார். இவரது அறிவு மார்க்கமானது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் நன்கு பரவி இருந்தது.


இன்று அறிவுப் பிரச்சாரம் நாங்கள் செய்கின்றோம் என்றால் இது விஞ்ஞான காலம் போக்குவரத்து வசதி நல்ல ரோடு பிரச்சார சாதன வசதி முதலியன இருக்கும் காலம். ஆனால் புத்தர் காலம். ஆப்படி அன்று 2000- மைல்களுக்கு மேல் இருக்கும் இங்கெல்லாம் புத்தர் கொள்கை பரவியுள்ளது.


அப்படிப்பட்ட அறிவு மார்க்கத்தை பார்ப்பனர் சதி செய்து புத்தருக்குப் பிறகு ஒழித்து விட்டார்கள். புத்தருடைய மடாலயங்கள், கோயில்கள் எல்லாம் தரைமட்டமாக்கி ஆரியக் கடவுள்களின் கோயில்களையும், குட்டிச் சுவர்களையும் எழுப்பிவிட்டார்கள்.


இந்த நாட்டில் கடவுள் அவதாரம் எடுத்ததாகக் கூறப்படும் அத்தனை அவதாரங்களும் புத்தருக்குப் பிறகுதான். புத்தரை ஒழிக்கவே எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். இந்த நாட்டில் ஏற்பட்ட புராண இதிகாசங்கள் எல்லாமும் கூட புத்தருக்குப் பிறகுதான் ஆகும்.

இராமாயணத்தில் புத்தர் குறிக்கப்படுகின்றார். இராமன் காட்டில் தங்கி இருக்கும் போது அவனைக் காணவந்த பரதனிடம் இராமன் சேமம் விசாரிக்கும் முறையில் கேட்கின்றான். "பரதா! உன் நாட்டில் புத்தர் இருக்கின்றானா? புத்தர்கள் ஆபத்தானவர்கள்! தர்க்க நியாயம் பகுத்தறிவு கொண்டு பேசுபவர்கள்! அவர்கள் திருடர்கள்! அவர்களை உள்நாட்டில் வைக்காதே! நாட்டை விட்டுத் துரத்தி விடு" என்கின்றான்.

மற்றோர் இடத்தில் இராமாயணத்தில் புத்தர் வருகின்றான். அனுமன் சீதையை இலங்கையில் அசோக வனத்தில் புத்தர் கோயிலுக்குப் பக்கத்தில் கண்டான் என்று கூறப்பட்டுள்ளது.


இம்மாதிரி மக்கள் பகுத்தறிவு பெறாமற் செய்வதே பார்ப்பனர்களின் தந்திரமாக இருந்து வந்துள்ளது. தற்போது கூட மற்றவர்களைப் படிக்கவிடாமல் செய்ய, காமராசர் ஆட்சியை ஒழித்துக்கட்ட சதி செய்து வருகிறார்கள். விபீஷணர்களாக உள்ளவர்களை அணைத்துக் கொண்டு தீவிரமாக ஆதரவு கொடுத்து நல்லாட்சியை பார்ப்பனரல்லாத தமிழர்களுக்கு நலமுண்டாகும் ஆட்சியை ஒழிக்கத் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.

அனைவரும் உள்ள நிலைமையை நன்கு யோசித்து, சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்லனவற்றை ஏற்றுக் கொண்டு நமக்குக் கேடு தருபவைகளை விட்டொழிக்க தைரியம் கொள்ள வேண்டும்.


               -----------------15,16,17,18-07-1962  ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி, சாத்தான்குளம், வள்ளியூரில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை" 27-07-1962.

0 comments: