Search This Blog

18.7.22

சூத்திரர்களுக்குப் பூணூலை அணியும் உரிமை சாத்திரப்படி உண்டா?

 

பூணூலா, கோவணத்தைக் கட்டிக் கொள்ள இடுப்பில் கட்டும் கயிறா?

'தினமலர்' 22.8.2021 - பக்கம் 14

"பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்கள் - காஸ்மாபாலிட்டன் ஆகி விட்டனர் - முனியாண்டி ஓட்டலிலும், புகாரியிலும் புகுந்து வெட்டு வெட்டு என்று வெட்டுகின்றனர்.

நிலைமை இப்படி எல்லாம் மாறிவிட்ட பிறகு இன்னும் பார்ப்பனர் களைப் பற்றிப் பேசலாமா? தி..காரர் களுக்கு வேறு வேலையில்லையா?' என்று சில வேலையற்றதுகள் வெட்டிப் பேச்சுப் பேசு வதுண்டு.

பார்ப்பனர் எதிர்ப்பு உணர்ச்சி காரணமாக படித்தவர்கள், பதவி களுக்குச் சென்ற மே(ல்)தாவிகள் கூட 'மேல்தட்டு' விமர்சனங்கள் செய் வதுண்டு.

சமூகநீதி பிரச்சினையிலும், 'அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர், உரிமைப் பிரச்சினையிலும் பார்ப் பனர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள் கிறார்கள் - புழுதிவாரித் தூற்று கிறார்கள் - சாபமிடுகிறார்கள். உண்ணா விரதம் இருக்கிறார்கள் - யாகங்கள் நடத்துகிறார்கள். 'சோடா பாட்டில்' புகழ் ஜீயர்கள் எல்லாம் முண்டா தட்டுகிறார்கள். சு.சாமிகள் 'பிராம ணர்கள் மீதா கை வைத்தீர்கள்' பார்த்து விடுகிறேன், ஒரு கை' என்று அரட்டை அடிக்கிறார்கள்.

நேற்றைய தி()னமலரில் (22.8.2021) "பூணூலின் புனிதம் காப்போம்!" என்று பார்ப்பனப் பொடியன் களின் பூணூல் கோலத்துடன் வண்ணமயமாகப் படம் போட்டு பூரித்துத் திளைக்கிறது.

பூணூல் என்ன புதுமையின் சின்னமா? சமதர்மத்தின் சாட்சியமா!

"நாங்கள் இரு பிறப்பாளர்கள்" (துவி ஜாதியினர்) நீங்கள் எல்லாம் சூத்திரர்கள் - பூணூல் அணியும் தகுதி உங்களுக்குக் கிடையவே கிடையாது. சூத்திரர்கள் என்றால் ஏழு வகைப்படுவர். அதில் ஒன்று விபசாரி மகன்" (மனுதர்மம்  அத்தியம் 8 சுலோகம் 415).

இதனை இந்த 2021லும் காட்டுவதற்குத்தானே ஆவணி அவிட்டம் - ஆண்டுதோறும் பூணூல் புதுப்பிப்பு 'தினமலர்கள்' சாங்கோ பாங்கமாக படம் போட்டுத் துள்ளிக் குதிப்பு.

'தினமலரின்' புரூடாவைக் கவனித்தீர்களா?

பூணூலை ஒரு தராசுத் தட்டில் போட்டு இன்னொரு தட்டில் தங்கத்தைப் போட்டால் பூணூல் தட்டுதான் கீழே நிற்கிறதாம் - அவ்வளவு கனமாம் - கனபாடிகள் கூறுகிறார்கள்.

அப்படியென்றால் இப்பொழுது ஒரு பரீட்சை வைத்துப் பார்க்கலாமா?

ஒரே ஒரு சுத்த 'பிராமணன்' கூடவா கிடைக்காமல் போவான்? அவனைக் கொண்டு வந்து நிறுத்தி முறைப்படி சடங்காச்சாரங்களை சாங்கோ பாங்கமாக செய்து அந்தப் பூணூலை தராசின் ஒரு தட்டில் வைத்து இன்னொரு தட்டில் தங்கத்தைப் பாளம் பாளமாக அடுக்கி வைத்து அந்த நிலையிலும் பூணூல்தான் கனமாக இருந்தது என்று நிரூபிக்கத் தயாரா? சவால்! சவால்!!

2021லும் இப்படி 'காது குத்துகிறார்கள்' என்றால், கடந்த காலங்களில் எப்படி எப்படியெல்லாம் ஆட்டம் போட்டு இருப்பார்கள். அடுத்தவன் தொடையில் கயிறு திரித்து ஆனந்தக் கூத்து ஆடித் தீர்த்து இருப்பார்கள்.

ஒரு கதையைச் சொல்லுவார்கள் 'பிராமணன் மட்டும்தானா பூணூல் தரிக்கிறான். ஆசாரியார்கள், பக்தர்கள், செட்டியார்கள் எல்லாம் பூணூல் தரிப்பது உண்டே!' என்று பசப்புவார்கள் - நமது அப்பாவி சூத்திரர்களும் 'ஆமாம், ஆமாம் - நல்ல கேள்வி' என்று கூறி எதிரிகளுக்கு முதுகு சொரிந்து விடுவார்கள்.

ஓர் உண்மை தெரியுமா? சூத்திரர்களுக்குப் பூணூலை அணியும் உரிமை சாத்திரப்படி உண்டா?

இதோ மனுதர்மம் கூறுகிறது.

"பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரி யனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு ஷணப்பன நாரினாலும், மேடு பள்ளமில் லாமல் மெல்லியதாகப் பின்னி மூன்று வடமாக மேலரை ஞாண் கட்ட வேண்டியது" என்று தானே மனுதர்மம் கூறுகிறது.

இதில் எங்காவது சூத்திரர்களுக்கு'ப் பூணூல் அணியும் உரிமை காணப்படுகிறதா?

"புலியைப்(?) பார்த்துப் பூனை சூடு போட்ட கதையாக சூத்திரர்களில் சிலர் பூணூல் தரித்தாலும், சாத்திரப்படி அது செல்லுபடியாகாதே!

ஆச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்தபோது ஆசாரியார்கள் 'ஆச்சாரியார்கள்' என்று போடக் கூடாது என்று ஆணை பிறப்பித்தது நினைவில் இருக்கிறதா?

இது ஒரு புறம் இருக்கட்டும் - பூணூல் பூணூல் என்று புனிதம் பேசுகிறார்களே - அந்தப் பூணூல் பற்றி பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்து 'தைதக்கா' என்று ஆட்டம் போடும் - அமெரிக்கா வரை சென்று 'பிராமணீயம்' பற்றிப் பிளந்து கட்டிப் பேசிய திருவாளர் விவேகானந்தர் (நரேந்திரன்) என்ன சொல்லுகிறார்?

சுவாமிஜி  சொல்கிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரி யாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீட்சை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது."

("சுவாமி விவேகானந்தர் சம்பாஷனைகள்"

என்ற நூல் - வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை- 4)

சொல்லுவது நாமல்ல - அவாளின் 'சொக்கத் தங்கமான' விவேகானந்தர் தான்! விடயத்தைப் போட்டு உடைக்கிறார்!

கோவணத்தைக் கட்டிக் கொள்ள இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொண்டதுதான் தினமலர்களும், தீட்சதர்களும் கர்மாக்களும், அய்யர், அய்யங்கார் களும் இப்பொழுது தோளில் அணிந்து கொள்ளும் பூணூல் என்பதைப் புரிந்து கொள்வீர். இதுதான் புனித நூலாம்!

ஜட்டி போன்ற உள்ளாடை வந்த பிறகு, அதை இடுப்பில் கட்டும் வேலைக்கு வாய்ப்பு இல்லை! கோவணக் கயிறு பூணூல் புனிதமான கதையைப் புரிந்து கொள்வீர்!

பார்ப்பனர்தம் மாய்மாலத்தைத் தோலுரிப்பீர்!

        ------------------------மின்சாரம் அவர்கள் ”விடுதலை’’ 23-08-2021 இதழில் எழுதிய கட்டுரை


 

0 comments: