Search This Blog

21.7.22

பார்ப்பான் மேல்சாதி என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? - பெரியார்

 

பெண்களுக்கு கல்வி அவசியம்!

 


முதன் முதலில் யார் எதைச் சொன்னாலும் பொறுமையாகக் கேட்க வேண்டும். பிறகு கேட்டவைகளைப் பற்றி நன்றாக ஆராய்ச்சி செய்து தமக்குச் சரியென ஒப்புக்கொண்டவைகளை ஏற்றுக் கொண்டு ஒத்துக் கொள்ளாத மற்றவற்றைத் தள்ளிவிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

 

எவ்வளவு ஆபாசமாக இருந்தாலும், யார் எதைச் சொன்னாலும் தமிழன் நம்பாமல் இருக்கவேண்டும்; அதுதான் தமிழனின் இன்றைய கடமை; இப்படி நம்பி நம்பித்தான் இந்தக்கதியில் நாம் இருக்கிறோம். வைப்பாட்டிமகனாக, சூத்திரனாக நீண்டகாலமாக இருப்பதற்குக் காரணம் தம் சொந்தப் புத்தியைக் கொண்டு ஒவ்வொருவரும் யோசிக்காததுதான்.

 

நாம் கீழ்மக்களாக இருக்க என்ன காரணம்? நம்மிடம் உள்ள குறை என்ன? நாம் எல்லோரும் கெட்ட நடையுடைய பாவனை உள்ளவர்களாக மக்களுக்குக் கேடான காரியங்களைச் செய்கிறோமா? என்று யோசித்துப் பார்த்தால், நாம் தான் மக்களுக்கு நல்ல பல காரியங்களைச் செய்து வருகிறோம். மற்றவர்கள் யாரும் இப்படிச் செய்யவில்லை. நாம் தான் நிலத்தில் உழுகிறோம்; நம் மக்கள் தான் சிரைப்பவர்கள் நம் மக்கள் கல்லுடைக்கிறார்கள்; உடலை வருத்தி உழைக்கிறார்கள். மனித சமூகத்திற்குத் தேவையான காரியங்களைச் செய்து நம் நாட்டிற்கு உதவி செய்து வருகிறோம். இப்படியிருக்கும்பொழுது நாம் எதற்காகச் சூத்திரனாக வைப்பாட்டி மகனாயிருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால், நாம் எல்லோரும் ஆராய்ச்சி செய்யாது இருப்பதுதான்.

 

ரிஷி சொன்னார், மகான் சொன்னார் என்றெல்லாம் நம்பித்தான் கீழ்ச்சாதி மக்களாக, சூத்திரர்களாக இருக்கிறோம். ஆகையால்தான் முதலில் நம்மிடம் உள்ள இழிவுகள் நீங்க வேண்டுகிறோம். நமக்கு மேல் ஒரு சாதியில்லை; நமக்குக் கீழான ஒரு சாதியில்லை; அப்படியிருப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வரவேண்டும். சமுதாயம் காரணமாக நாம் கீழ் மக்களாக இருக்கிறோம். இப்படி நீண்டகாலமாக இருந்துவரக் காரணம் அதற்கு ஒப்ப நம் சமுதாய வாழ்வில் நாம் பல மூடக்காரியங்களைப் புகுத்திக் கொண்டோம். அதை ஒழித்துக்கட்ட வேண்டும். அதை ஒழிக்க நாம் அடியெடுத்து வைத்திருக்கும் முதற்பகுதிதான் இது போன்ற திருமணங்கள். இப்பொழுது நடந்த இத்திருமணத்தில் என்ன மனமாற்றம் செய்து விட்டோம்? திருமணம் என்பதற்கு வாழ்க்கைத்துணை ஒப்பந்தம் என்று சொல்லுகிறோம்.

 

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஒரு பெண்ணும் புதிதாக புகுவதை நாம் துவக்கிவிடுகிறோம். இதில் என்ன மாற்றம் செய்து விட்டோம்? இரு ஆண்களுக்குத் திருமணம் செய்து வைத்து நீங்கள் கணவன் மனைவியாக இருந்து பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறோம்? அல்லது இரண்டு பெண்களைக் கூப்பிட்டு முடிச்சுப்போட்டு நீங்கள் இருவரும் கணவனும் மனைவியுமாக வாழுங்கள் என்று சொல்லுகிறோமோ? உலகத்தில் நீண்ட காலத்திலிருந்து இதுவரை என்ன முறை இருந்து வருகிறதோ, அதையேதானே நாமும் செய்தோம்? இதில் வேறு என்ன மாற்றம் செய்துவிட்டோம்?

 

வாழ்க்கைத் துணைநலம் என்று இப்பொழுது சொல்வதற்குப் பதிலாகக் கன்னிகாதானம், தாராமுகூர்த்தம் என்று சொல்வோம். முன்பெல்லாம் கன்னிகாதான மகோற்சவப்பத்திரிகை என்று போடுவார்கள். கன்னிகாதானம் என்றால், நாம் பெற்று வளர்ந்து நம் அருமைப் பெண்ணை இன்னொருவருக்குத் தானம் செய்துவிடுவது; தாராமுகூர்த்தம் என்றால், நாம் அருமையாகப் பெற்று வளர்ந்த பெண்ணை இன்னொருவருக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடுவதுதான். ஆண், பெண் இருவர் கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்துப் பிடித்துக் கொள்வான். உடனே தாய் எள்ளுத் தண்ணீரை ஊற்றுவாள். தகப்பன் அதை அப்படியே கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கூறித் தலையில் தடவிக்கொள்வான்.

 

தமிழ்நாட்டில் நம் பெண்களை எவனோ ஒருவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததாக நம் பழைய வரலாறுகளில் காட்ட முடியுமா? முதலில் இந்தக் கன்னிகாதானம், தாராமுகூர்த்தம் என்ற சொற்களே தமிழ்சசொற்கள் அல்ல; எல்லாம் வட மொழிச் சொற்களே. நம் வரலாறுகளில் இல்லாதவைகள். நம் வாழ்க்கையில் மட்டும் ஏன் இருக்க வேண்டும்? நடுவில் வந்த ஆரியர்கள் இவ்விதப் பழக்கங்களை நம்மிடையே உண்டாக்கி வைத்துவிட்டார்கள். நாம் ஆரியரின் பேச்சைக்கேட்டு ஆரிய காலாசாரங்களை உண்மையென்றும், மேல்சாதியென்றும் நம்பி ஏராளமான காரியங்களைப் பின்பற்றி விட்டோம். நம் பெண்கள் சமூகத்தை அடியோடு நாசப்படுத்தி, அடிமைப்படுத்தி நடைப்பிணங்களாக்கி விட்டோம். இவைகளை ஏன் மாற்ற வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்றால் நம் நலனுக்காகத்தான் சொல்கிறோம்.

 

ஆணும் பெண்ணும் சரிநிகர் ஆனவர்களே, பெண்ணைவிட எந்தவிதத்திலும் ஆண் உயர்ந்தவனல்லன். நாங்கள் இக்காரியங்களை 30-ஆண்டுகளாகப் பிரச்சாரத்தின் மூலம் செய்து வருகிறோம். பெண்கள் சம்பந்தமாக நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் முழுவதும் வெற்றி பெற்று இப்பொழுது அரசாங்கத்தில் சட்டங்களாக ஆகிவிட்டன. எங்களைத் தவிர வேறு யாரும் இது சம்பந்தமாகக் கஷ்டப்படவில்லை. வேண்டுமானால் நான் முதலில் சொல்லிய பிறகு மற்றவர்கள் பின்பற்றியிருக்கலாம். மாநாடுகளில் எல்லாம் பெண்கள் முன்னேற வேண்டும் என்று பல தீர்மானங்களைப் போட்டோம். பெண்கள் முன்னேறுவது கூடாது என்று ஆண்கள் எதிர்த்ததில் ஓர் அர்த்தமிருந்தாலும், இதை மானங்கெட்டத்தனமாகப் பெண்களும் சிலர் எதிர்த்தார்கள். பெண்கள் மாநாடுகளில் எதிர்த் தீர்மானங்களைப் போட்டுக் கண்டித்தார்கள். மந்திரி வீட்டுப் பெண்களும் பெரிய இடத்துப் பெண்களுமே அப்பொழுது சங்கத்தில் சேர்ந்திருந்தார்கள். அவர்களே இதை முதலில் எதிர்த்தார்கள். அதற்கு ஆதாரம் டாக்டர் சுப்பராயன் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாரே தீர்மானம் கொண்டுவந்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியே இயற்கையை உணர்ந்து கொள்ளாமல் போய்விட்டார்கள் என்று எங்களைக் குறைகூறிப் பத்திரிகையில் எழுதிற்று. அப்பொழுது பெண்களும் எண்ணிப்பார்க்கவில்லை. இதனால் சிந்தித்துப்பார்க்கவில்லை.

 

அடுத்து இந்தத் திருமணத்தை நடத்தும் பெற்றோர்களுக்குத் திருமணத்தில் பார்ப்பான் இருந்து நடத்தவில்லையே என்கிற மனக்குறை இருக்கலாம். பார்ப்பான் மேல்ஜாதி, அவன் அறிவாளி என்று கருதி வரவில்லையே என்று வருத்தப்படுவார்களா? அல்லது பார்ப்பான் மகாயோக்கியன், பெரிய படிப்பாளி, அவன் கைப்பட தொட்டதெல்லாம் விருத்தியாகும் என்று எண்ணி வருத்தப்படுகிறார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

உலகத்திலே நாணயங்கெட்ட, ஒழுக்கங் கெட்டவனாக ஒருவன் இருக்கிறானென்றால், அவன் பார்ப்பான்தான். உலகத்தில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிற ஒரு சாதி இருக்கிறதென்றால் அது பார்ப்பனச்சாதித்தான். உலகத்தில் பகுத்தறிவு இல்லாமல் காட்டுமிராண்டிச் சாதி உண்டு என்று சொல்லப்படுமானால் அது பார்ப்பனச் சாதிதான். இதை மறுப்பவர்களிடத்தில் பந்தயம் கட்டிப் பல ஆதாரங்களைக் காட்டத் தயாராயிருக்கிறேன். கொஞ்சம்கூட அறிவுக்குப் பொருத்தமில்லாமல், ஆராய்ச்சியில்லாமல் அதுதான் தர்மமென்று சொல்லுகிற பல காரியங்களை ஆதாரத்தோடு என்னால் காட்டமுடியும். பார்ப்பான் ஒருவன் திருமணத்திற்கு வந்து நடத்திக் கொடுக்கவில்லையே என்று விசனப்படுவானேயானால், அவன் மனித சமூகத்தைச் சேர்ந்தவனல்லன். காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்தவன்.

 

பார்ப்பான் மேல்சாதி என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தெருவில் போகிற ஒருத்தியைக் கூப்பிட்டுத் தேவடியாள் என்று சொன்னால், அவள் சும்மாயிருப்பாளா? நம்மையெல்லாம் சூத்திரன் என்று பார்ப்பான் சொல்லுகிறானே, சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? தேவடியாள் மகன் என்றுதானே பொருள்? இந்தப் பொருள் சூத்திரன் என்ற சொல்லுக்கு இல்லை என்று எவராவது மறுக்கட்டுமே? நாங்கள் தோன்றிய பிறகுதான் நீ என்ன உயர்ந்தவன்? மேல்சாதி என்று கேட்க ஆரம்பித்து விட்டோம். சூத்திரன் என்று சொன்னால் சொன்னவனை அடிக்க ஓடுகிறோம். இந்தக்காலத்தில் பார்ப்பான் திருமணத்திற்கு வரவேண்டும் மந்திரங்கள் கூறவேண்டும் என்று நினைத்து வருந்தினால் என்ன அர்த்தம்? அது போகட்டும் பார்ப்பான் திருமணத்திற்கு வரவில்லை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்களே எவ்வளவு தைரியம்? இவர்கள் எல்லோரும் காட்டி இருப்பதாக நினைக்கிறார்களா? அல்லது நாட்டில் மக்களிடையே வாழ்ந்து வருவதாக எண்ணுகிறார்களா என்பது தெரியவில்லை. ஆகவே, யார் பார்ப்பனன் மேல் சாதி என்று கருதுகிறார்களோ, அவர்கள் முகத்தில் நாம் விழிக்கக் கூடாது என்று சொல்லுகிறோம்.

 

வருங்காலத்தில் அவரவர்கள் தாங்களாகவே திருமணம் செய்து கொள்வார்கள். இது போன்று ஒருவர் வந்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுமென்றுகூட அவசியம் இருக்காது. குழந்தை பிறந்தால்தான் திருமணமானவள், இன்னவன்தான் கணவன் என்று தெரியும்; பார்ப்பான் வந்து திருமணத்தில் என்ன செய்கிறான்? அவன் சொல்லும் மந்திரங்கள் இல்லாவிட்டால் திருமணம் நடக்காதா? இல்லை குழந்தைதள் தான் பிறக்காதா? நம்மைத் தொட்டால் தீட்டு என்று சொல்லுகிறவன் பச்சையாகக் கீரை, பருப்புக் கொடு; வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சமையல் செய்து கொள்கிறேன் என்று கூறும் பார்ப்பான் நம் திருமணத்திற்கு வரலாமா?

 

நமக்கென்று மான உணர்ச்சி இருப்பதனால் மேல் சாதி என்று கூறிக்கொள்ளும் பார்ப்பானை உள்ளே விடவில்லை. பார்ப்பான் நல்ல விதமாக வருவதானால் வரட்டும். நம்மோடு பந்தியில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடட்டும். அப்படியெல்லாம் திருமண வீட்டார்கள் போய்க் கூப்பிட்டால் வீட்டில் சாப்பிட மாட்டேன், திருமணத்திற்கு மட்டும் வருகிறேன் என்றால் என்ன அர்த்தம்? அவன் மட்டும் உயர்ந்தவன் ஆவதெப்படி?

 

உங்களுக்குத் தெரியாது. என்னைப் போன்ற 70, 80-வயதுள்ள பெரியவர்களுக்குத் தெரியும். இப்பொழுது இருக்கின்ற 30, 40- வயதுள்ளவர்களுக்குத் தெரியாது. நேற்றுவரைக்கும் நம்மிடையே ஒருபகுதியாக - தேவடியாள்களாக இருந்தவர்கள் யார்? நம் அக்கா தங்கைகள் தானே? தேவடியாள்களை யார் ஒழித்தார்கள். அதற்காக யார் உழைத்தார்கள்? பார்ப்பனர் உழைத்திருந்தால், இன்னுங் கொஞ்சம் சேர்த்திருப்பானே. அந்தச் சப்தமே இல்லாமல் செய்தது யார்? பார்ப்பனர் செய்தார்களா? பார்ப்பனர் அடிமைகள் செய்தார்களா? நாட்டில் ஏன் தேவடியாள் சாதி என்று இருக்க வேண்டும் என்று கேட்டுத் தேவடியாள் வீட்டுப் பையன்களையெல்லாம் நாங்கள் கூப்பிட்டு ஒன்றாகச் சேர்த்து அவர்களுக்கு மான உணர்ச்சியை வரச்செய்தோம். கடைசியில் தேவடியாள் என்று ஒரு வகுப்பார் நாட்டில் இருக்கக்கூடாதென்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். நாட்டிற்குச் சேவை செய்து வரும் டாக்டர் முத்துலெஷ்மி ரெட்டி அவர்கள் தான் கொண்டு வந்தார்கள். அதை எதிர்த்தார்கள் பார்ப்பனர்கள். நாங்கள் ஆதரித்தோம். இது சட்டசபை அனுபவம் உள்ளவர்களுக்குத் தெரியும்.

 

சாதாரண பார்ப்பான் எதிர்க்கவில்லை. சத்தியமூர்த்தி அய்யர் எதிர்த்தார். "தேவடியாள் கூடாது என்று சொல்லக்கூடாது, பாவம்; அது இருந்தால் புண்ணியம்; தெய்வத் தொண்டு செய்ய அவர்கள் இருக்க வேண்டும்" என்றார். உடனே டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியவர்கள் சுவாமிகளே நாங்கள் இதுவரை அந்தத் தெய்வத்தொண்டு செய்து புண்ணியம் பெற்றது போதும். இனிமேல் உங்கள் சாதிப் பெண்களே இத் திருத்தொண்டு செய்து புண்ணியத்தை அடையட்டும் என்று சொன்னார்கள். அப்பொழுதுதான் சத்தியமூர்த்தி அய்யரின் வாய் மூடிக்கொண்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிள்ளை வகுப்பும், எங்கள் மாவட்டத்தில் கவுண்டர் வகுப்பும்தான் தேவடியாள் சாதியாக இருந்தன. அவற்றையெல்லாம் அழித்தோம். இன்னமும் ஆந்திராவில் நாயுடு வகுப்புதானே தேவடியாள் சாதி.

 

1936-இல் என் தாயார் இறந்தார்கள். அவர்கள் உடம்பில் இரவிக்கையே போட்டது கிடையாது. ஆனால் இரவிக்கை போட்டவர்களைக் கண்டால் பேசாமல் இருப்பார்கள். என் தாயாருக்குத் தாயார் (பாட்டி) இருந்தார்கள். அந்த அம்மாள் இரவிக்கை போட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து விட்டால், அவர்களைப் பார்த்து இது என்ன தேவடியாள் வீடா? குடும்பப் பெண்கள் இருக்கும் வீடா? என்று கேட்பார்கள். இப்பொழுது பாருங்கள். உள்ளே ஒரு பாடி வெளியே ஒரு பாடி போட்டுக் கொள்கிறார்கள். இப்படி நாகரிகம் வளருகிறது.

 

நம் மூதாதையர்களிடத்தில் நெருப்புப்பெட்டி இருக்கிறதா? சக்கி முக்கிக்கல் அடித்து நெருப்பு உண்டாக்குவார்கள். நம் அப்பா, அம்மா இரயிலில் போனார்களா? இன்று மணிக்கு 700-மைல் வேகத்தில் போகும் ஆகாய விமானத்தில் குரங்கு, நாய்க் குட்டிகளை அழைத்துக் கொண்டு போகிறோம். நாங்கள் இல்லாவிட்டால் இந்த ஆகாய விமானத்தைப் பார்த்துக் கன்னத்தில் அல்லவா போட்டுக் கொண்டிருந்திருப்பார்கள்?

 

நாங்கள் சொன்னோம், இது ஆகாய ஆகாய விமானம் என்று. சாமிகூட இப்படிப் போக முடியாதே! உங்கள் சாமி இன்றைக்கெல்லாம் 1000-பேர் இழுத்தால் 1-பர்லாங்தூரம் போக 1-மணி நேரம் ஆகும். என் அப்பா ஆகாயவிமானத்தில் இரயில் ஏறவில்லை. ஆகையால் நானும் ஏற மாட்டேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

 

ஓர் அவசரமான காரியத்துக்குப் போக வேண்டும். இராகு காலத்தில் இரயில் புறப்படுகிறது என்று ஏறாமல் இருந்து விடுவோமா? கோர்ட்டில் இராகு காலமாயிற்றே என்ற கூப்பிடும்பொழுது போகாமல் இருந்து விடுவார்களா? அப்படிப் போகாவிடடால் ஆள் இல்லை என்று கருதி இன்னும் நன்றாகத் தண்டித்து விடுகிறான். இவைகளையெல்லாம் நாம் எதிர்க்க வேண்டும். சடங்குகளுக்குத் திருமணத்தில் என்ன வேலை? யாராவது தமிழ்ப் புலவர்கள் இருந்தால், இன்ன காரியத்துக்கு இருக்கிறதென்று சொல்லட்டுமே.

 

திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் ஒருவருடைய குணங்களை மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டும். இருவரும் சம்மதித்துக் கொண்டால் முடிந்தது திருமணம்.

 

இப்படித்தான் அப்பொழுதும் இருந்திருக்க வேண்டும். பின்னால் இதெல்லாம் மாறிவிட்டது. பல காரணங்களால் சின்ன குழந்தையாக இருக்க வேண்டும். அதற்குத் தடிப்பயல் ஒருவன் தாலிகட்டுவான். கேட்டால் உறவு முறை போய்விடுகிறதே என்பார்கள்.

 

வைதிகத் திருமணங்களில் பட்டப்பகலில் விளக்குகள் எரியும்; அடுக்கடுக்ககாகப் பானைகள் இருக்கும்; எதற்காக? என்ன காரியத்திற்காக என்று கேட்டால், அது எங்கள் சாதி வழக்கம் என்று சொல்வார்கள். அவர்கள் சாதியில் 6-பானை எங்கள் சாதியில் 7-பானை வைப்பது வழக்கம் என்று சொல்வார்கள். இவைகள் எல்லாம் சாதியைக்காட்டி மூடக்கொள்ளைகளை நிலைநிறுத்த - சாதிப் பழக்க வழக்கங்களிலிருந்து நாங்கள் தவறிவிடவில்லை என்று காட்டிக் கொள்வது தவிர வேறு என்ன? பகலில் விளக்கு ஏன் என்று கேட்டால், இலட்சுமி என்பார்கள். அப்படியானால் மற்றவைகள் எல்லாம் விளக்குமாறா?

 

பார்ப்பான் பட்டப்பகலில் விளக்கு வை என்று எதற்குச் சொல்கிறான்? நாம் எல்லோரும் முட்டாள்களா என்று பரீட்சை செய்கிறான். அவன் சொற்படி விளக்கு வைத்துவிட்டால், இவன் 100% முட்டாள் என்றும், பகலில் விளக்கு ஏன் என்று கேட்டால், 50% முட்டாள் என்றும் எடை போடுகிறான். திருமணத்தில் பானைகளை அடுக்கித் தீர வேண்டுமா? அப்படி என்றால் ஏன் கிருத்துவர், முஸ்லீம், வெள்ளையர் திருமணங்களில் அடுக்கி வைப்பதில்லை. இந்த இந்து மதத்திலிருக்கும் கடவுளுக்கு மட்டும் குயவன் என்ன சொந்தக்காரனா?

 

நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்தால் நாங்கள் சொல்வதுதான் குறளிலும் இருக்கும். வாழ்க்கைத் துணைநலம் என்றுதான் இருக்கும். நாங்களாகப் பார்த்து உண்டாக்கிக் கொண்ட வார்த்தையன்று; தமிழர்களின் பழக்க வழக்கங்களில் இருந்துதான். ஆரியர் பழக்கம் அப்படியன்று.

 

கணவன் பட்ட கடனுக்காக மனைவியை விற்றுக் கடனை அடைத்திருக்கிறார்கள். சூதாட்டத்தில் மனைவியை வைத்துத் தோற்று மற்றொருவனால் சேலை அவிழ்க்கப்பட்ட பத்தினிதானே துரௌபதி. இதனால் தெரிவது பெண்கள் விற்கக்கூடிய பண்டங்கள் என்பதுதானே.

 

இன்னும் ஆராய்ச்சி செய்து பார்த்தால், கணவன் மோட்சம் போவதற்காகத் தன் மனைவியைப் பார்ப்பானுக்குவிட்டு மோட்சம் சென்று இருக்கிறார்கள். இதனால் பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தெரியவரும். இதற்குச் சாஸ்திரத்தை, மந்திரத்தை நிலைநாட்டுவதெல்லாம் தவிர வேறு என்ன அர்த்தம்?

 

ஓர் ஆண் பல வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ளலாம். ஒரு பெண்ணை மூன்று பேர் வந்து கேட்டுவிட்டுப் போய்விட்டால் போதும்; ஏதோ தெரியவில்லை என்று சொல்வார்கள். கேட்டால் பெண் மண்பானை; கீழே போட்டு உடைத்து விட வேண்டும். ஆண் வெள்ளிப் பாத்திரம்; கழுவிக் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்பார்கள். இதுவரை ஆணிற்கு மாத்திரம் சொத்துரிமை இருந்தது. இனிமேல் பெண்களுக்கும் வந்துவிடும். ஒரு பெண் கணவன் உயிரோடு இருக்கும் வரை மற்றொருவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. விவகாரத்து செய்து கொண்டுதான் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம். இப்பொழுது சிகரெட் குடிக்கும் கணவன் பிடிக்காதிருந்தால் போதும். வழக்குத் தொடரலாம். குடிகாரனாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அடி என்று கூப்பிட்டால் போதுமே, இது எல்லாம் இன்னும் பெண்களுக்குத் தெரியாது. இதை உபபோகப் படுத்தக் கொஞ்ச நாட்கள் ஆகும்.

 

ஆண்கள் படிக்காவிட்டாலும் கூட முதலில் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். பெண் படித்துவிட்டால் ஆண்கள் ஒழுக்க சீலர்களாக இருப்பார்கள். இப்பொழுது ஆண்கள் இவ்வளவு அயோக்கியர்களாக இருப்பதற்குக் காரணம் பெண்கள் படித்து அறிவுபெறாமலிருப்பது தான்.

 

நம் பெண்களுக்கு இப்போது சிங்காரித்துக் கொள்வதற்கும், ஒப்பாரி வைப்பதற்கும்தான் தெரியும். திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் பிள்ளை பெற்றுக் கொள்வதில்தான் கணவன், மனைவியரே தவிர மற்றவிதத்தில் சிநேகிதர்களாக அன்பாக நடக்க வேண்டும். வரவுக்குச் சேர்த்து வைக்க வேண்டும். படித்த பெண்களுக்குச் சம்பாதிக்கும் பணம் அவர்கள் வாங்கும் ரிப்பன்களுக்கே போதாமலிருக்கிறது. இவ்வித வாழ்க்கையினால் என்ன லாபம்?

 

மேலும் பெண்கள் அவசரப்பட்டு இப்பொழுதே குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது. 5-வருடம் வரையிலாவது சும்மா இருக்க வேண்டும். பிள்ளை பெற்றுக் கொள்பவருக்கு 6-மாதம், 2-மாதம் தண்டனை என்றால் யார் பெற்றுக் கொள்வார்கள்? இதற்காகக் கொஞ்சக் கூடாது என்று சொல்லவில்லை. சில நாட்கள் போன பின்பு அரசாங்கமே கர்ப்பத்தடைக்கு மாத்திரைகளை விலைக்கு விற்கப்போகிறார்கள். சாமி குழந்தைகளைக் கொடுக்கிறது என்று சொல்கிறார்களே அந்தச் சாமி கஞ்சியையும் ஊற்றுமா?

 

நாங்கள் கர்ப்பத்தடையென்று முதலில் சொல்லும் பொழுது பாதிரிகள் பாவம் என்றார்கள். கிருத்துவர்கள் எல்லோரும் கோபப்பட்டார்கள்.

 

இப்பொழுது பாருங்கள். கோழிக்குஞ்சு பொரித்தது போல் இருக்கிறார்கள். மக்கள் தொகை இப்படியே உயர்ந்து கொண்டிருந்தால் உலகம் என்ன ஆகும்? திருமணம் செய்தவுடன் குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையைக் கொஞ்சுவதா? இதற்கு நேரம் எங்கே? ஏன் சோறு கூழாகப்போய் விட்டது என்று கணவன் கேட்டால், குழந்தை இன்றைக்கெல்லாம் கைவிடவில்லை என்று மனைவி சொல்கிறாள்.

 

                       ------------------------ 19.08.1956-அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 'விடுதலை', 23.08.1956

0 comments: