Search This Blog

30.6.22

வெந்த புண்ணில் வேலால் குத்த வேண்டாம்! - பெரியார்

 

வெந்த புண்ணில் வேலால் குத்த வேண்டாம்!

 


ஆரியர்கள் இந்நாட்டில் குடியேறி 3,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆகின்றன. ஆரியர்கள் என்றைக்கு இந்நாட்டில் புகுந்தனரோ அன்றே வந்தது அனர்த்தம். ஜாதி மத பேதமற்ற மக்கள் இந்தச் சழக்கர்களின் வரவால், இவர்களின் குயுக்தி வேலையால், நயவஞ்சகச் சூழ்ச்சியால், ஆயிரக்கணக்கான ஜாதிகளாகப் பிரிக்கப்பட்டனர் - பிரியலாயினர். நாளுக்கு நாள் வளர்ந்தன, ஆரியர் உண்டாக்கிய அறிவுக்கொவ்வாச் ஜாதிகள், ஜாதிக்குச் ஜாதி வித்தியாசம். வித்தியாசம் மட்டுமல்ல, வெறுப்பும் தலைவிரித்தாட ஆரம்பித்தது. ஒருவரை ஒருவர் வேறாக, அயலானாக, எதிரியாக எண்ணும்படி, நோக்கும்படி, நடத்தும்படி செய்தது இந்த ஜாதி திமிர். இதற்கு அன்று இரையானவர்கள் தான் குறிப்பிடத்தக்க இந்நாட்டுப் பழங்குடி மக்கள்.

 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர் மக்கள் பொதுச் சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு  அடிமையாக்கப்பட்டுவிட்டனர். அன்று வீழ்த்தப்பட்ட சமூகம் இன்னும் விடுதலை பெற இயலவில்லை. எவ்வித உரிமையோ, உயர்வோ எய்த முடியவில்லை. உயர்ச்சியற்று, உரமிழந்து, மனவலிமை குன்றி உழைத்துழைத்து அலுத்துப் போய்விட்டார்கள். "நாம் ஏன் இவ்வளவு இழிவாக நடத்தப்படுகிறோம்? தீண்டப்படாமல் துரத்தப்படுகிறோம்? நாயினும் கீழாய் நலிந்து விட்டோம்? ஓய்வின்றி இராப்பகலாக மழை என்றோ, வெய்யிலென்றோ, பனி என்றோ பாராமல் உழைக்கிறோம்; நாம் வெட்டாத குளமில்லை! கட்டாத கிணறில்லை! போடாத சாலை இல்லை! செப்பனிடாத பாதை இல்லை! உழாத நடாத வயலில்லை! நாட்டில் உற்பத்தியாகும் அவ்வளவு உணவுப் பொருள்களையும் நாம் தான் உற்பத்தி செய்கிறோம்! ஆனால், நமக்கு ஏன் உணவில்லை? ஏன் உடை இல்லை? ஏன் வீடு இல்லை? ஏன் படுக்கப்பாயில்லை? ஏன் குளமில்லை? ஏன் கிணறில்லை? ஏன் பாதையில்லை? குடிப்பது கூழாகத்தானே இருக்கிறது; கட்டுவது கந்தையாகத்தானே உள்ளது; குடியிருப்புக் குடிசையாகத்தானே இருக்கிறது", என்று உணர்வதற்குக் கூடச் சக்தி இல்லாமல் செய்துவிட்டது, ஆசிரியர் புகுத்திய ஜாதிப் பாகுபாட்டால் ஏற்பட்ட அடிமை மனப்பான்மை இல்லை என்றால் மூவாயிரம் ஆண்டுகளாக ஆரியத்திற்கும், ஜாதி இந்துக்களுக்கும், இந்து மதத்திற்கும் பிறவி அடிமைகளாக இருப்பார்களா இந்நாட்டுப் பழங்குடி மக்கள்? உலகத்தில் எங்கு பார்த்தாலும் உரிமைப் போராட்டம் நடக்கும் இந்த 1947-இல் கூட, இந்தச் சமூகம் உணர்ச்சியோ, எழுச்சியோ, கிளர்ச்சி மனப்பான்மையோ இல்லாமல் இருக்குமா? பழங்குடி மக்களுக்குப் பாதுகாவலர்கள் என்பவர்கள் கூடக் கவலையற்றதனமாகக் காலத்தைக் கடத்துவார்களா?

 

ஆகையால், பழங்குடி மக்கள் சமுதாயம் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது; எடுப்பார் கைப் பிள்ளையாக இருக்கிறது; தன்னை யார் என்ன சொன்னாலும் எப்படி நடத்தினாலும் ஏனென்று கேட்க வலியற்று, மான உணர்ச்சியற்று இருக்கிறது.

 

இந்த நிலை ஜாதி இந்துக்களுக்குச் சாதகம்; ஆரியர்களுக்கு ஆக்கம். ஆகையால், ஆரியர்களும், அவர்களது அடிவருடிகளும் ஆதி திராவிடர் மக்களை அநேக நூற்றாண்டுகளாக சொல்லொண்ணாத் துயரத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றனர். அடிமை வாழ்க்கையே நடத்தி வருவதால் விடுதலை வேட்கை இன்றி இழிநிலையிலுள்ளனர். பழங்குடி மக்கள். இவ்வளவு இழி நிலையிலுள்ள மக்கட்கு அதிகமான இழிவு தரும் "ஹரிஜன்" என்னும் பட்டப் பெயரை அளித்தவர் யார்? மகாத்மா காந்தி. 1932-இல் பழங்குடி மக்களுக்கு இந்த இழிவுப் பெயர் இடப்பட்டது. 15- ஆண்டுகளாகின்றன. ஆதிதிராவிடர் மக்களுக்கு அடிமை முத்திரையை அந்த மகாத்மாவுக்குச் சொந்தக்காரராகிய காந்தியார் மாற்றி நிலையாக இருக்க வைத்தது.

 

பழந்தமிழர் மக்கள்; பூர்வீகக் குடிமக்கள்; ஆதிதிராவிடர்கள் என்னும் அழகிய பெயர்கள் உண்டு. ஆதித்திராவிடர் சமூகத்திலுள்ள பல பிரிவினரையும் ஒன்று சேர்த்து, அரசியல் சலுகை வழங்க ஏதுவான முறையிலே "ஷெடியூல்டு" வகுப்பினர் என்று மரியாதையாக உண்மைப் பொருள் நிறைந்ததாக அழைத்தனர் ஆங்கிலேயர். முன்பு குறிப்பிட்டு வந்த பெயர்கள் மனது பூரிப்புக்கும், மரியாதை உணர்வுக்கும் முன்னேற்றச் செய்கைக்கும் உகந்தவை. ஆனால் நாட்டுக்குச் சொந்தப்படுத்தி அழைக்க நா எழவில்லை அஹிம்ஸா மூர்த்திக்கு! மரியாதைப் பெயர் கொண்டழைக்க மனமில்லை மகாத்மாவுக்கு! ஏன்? அவர் ஜாதி இந்து; சனாதனி, வர்ணாசிரம தர்மி. ஆகையால் "ஹரிஜன்" என்னும் பெயரைச் சூட்டினார், உள்ள பெயரை வைத்துக் கொண்டே தாழ்த்தப்பட்ட மக்கள் உயர உழைத்தால் தன் சேவையை உலகமறியாது என்று! இது வெந்த புண்ணில் வேலால் குத்தும் செய்கையல்லவா?

 

மேல்நாட்டு வித்வான்களும் பண்டிதர்களும் புதிய கருத்துக்களையும், புதிய காட்சிகளையும் கண்டுபிடிப்பதில் தங்கள் அறிவைச் செலுத்தி வருகிறார்கள். இந்தியப் பண்டிதர்களோ முன்  ஒருவன் எழுதிவைத்ததை குருட்டு உருப்போட்டு புதிய தத்துவார்த்தம் கூறுவதிலும், கொங்கை, அல்குல், தொடை, உதடு, கூந்தல் ஆகியவைகளை வர்ணப்பதிலும், கடவுளைப் பற்றி போராடுவதிலும், கண்ணில் நீர்பெருகப் பாடுவதிலும் கருத்தை செலுத்தி வருகிறார்கள்.

 

                     ---------------------- "ஊழியன்" என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை. "குடிஅரசு", 29.11.1947

0 comments: