Search This Blog

28.6.22

நடிகவேள் எம்.ஆர்.ராதா இல்லத் திருமண விழாவில் பெரியார்

 

திருமணம் என்ற சொல் எப்போது வந்தது?


 

தாய்மார்களே! பெரியோர்களே! தோழர்களே! இன்றையத் தினம் நமது அருமை நண்பர் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் அருமை மகள்களின் திருமண விழாவின் பொருட்டு நாம் அனைவரும் இங்கு கூடி இருக்கின்றோம். இன்று அவர் ஒரு வழக்கின் காரணமாக இங்கு இல்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த வாழ்க்கை ஒப்பந்த விழா நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டே நாம் இங்குக் கூடி இருக்கின்றோம். நமக்கேற்பட்ட இந்தத் துன்பத்தை இயற்கைக்கு ஒப்புவித்து விட்டு நடக்க வேண்டிய காரியத்தை நல்ல முறையில் நடத்த வேண்டியது நம் கடமையாகும்.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுமோ என்ற கருதினேன். அவ்வளவு கஷ்டம். அவ்வளவு நோவு. இந்தத் திருமண விழாவை நான் வந்து நடத்திக் கொடுக்க வேண்டும் என்று என்னை வந்து நடிகவேள் ராதாவின் மனைவியார் மற்றும் நண்பர்கள் வந்து கேட்டபோது, இந்நிலை திரும்பவும் வராது என்று கருதி மகிழ்ச்சியோடு ஒப்புதல் கொடுத்தேன். இதில் கலந்து கொள்ள வேண்டியது எனது கடமை என்றும் கருதினேன். இப்போது எனக்கு இதன் முன் இருமுறை வந்த காயலாவை விட மிக அதிகமாகத் தொல்லையும், கஷ்டமும், நோவும் ஏற்பட்டு விட்டது. டாக்டர்கள் கடினமான வியாதி என்று கருதும்படியாகி விட்டது. என்ன வியாதி என்றால், மூத்திரத் தாரையில் சிறு கற்கள் ஏற்பட்டு, நீர் நேராக வருவதில் ஒரு தடை ஏற்பட்டு விட்டது. அதனால் நீர் இறங்குவதில் நோவு! அதை நேற்றுத்தான் எக்ஸ்ரே படம் எடுத்துக் கண்டு பிடித்தார்கள். அதை ஆபரேஷன் செய்து தான் எடுக்க வேண்டும் என்றாலும், நிபுணர்களான டாக்டர் திரு.ரெத்தினவேலு சுப்ரமணியன் அவர்களும், திரு.சுந்தரவதனம் அவர்களும் ஆபரேஷன் செய்யாமலே சொஸ்தம் செய்வதாகக் கூறினார்கள்.

 

எல்லோரும் கலந்து கொள்ளும் விழாவில் எதிர்பார்க்கும் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போய் விடுமோ என்று ரொம்பவும் பயந்து கொண்டு டாக்டரைக் கேட்க ஆரம்பித்தேன். அதுவும் நானாக கேட்கவில்லை. மணி அம்மையார் தான் கேட்டார்கள். "நண்பர் ராதா வீட்டுத் திருமணம். அவர் இல்லாத போது அய்யா அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்று ரொம்ப வணக்கமாக எடுத்துச் சொன்னார்கள். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, இங்கு படுத்துக் கொண்டே பிரசங்கத்திற்குப் போவதானால் என்னாவது? என்று கேட்டார்கள். 15  நிமிஷம் அனுமதி கொடுத்தால் போதும் போய் விட்டு வந்து விடுகிறேன் என்று 15 நிமிடம் அனுமதி கேட்டு வந்திருக்கிறேன். இங்கு ரொம்ப பிரபலமானவர்களும், எல்லா பெரியோர்களும், தாய்மார்களும் வந்திருப்பது அவருக்குக் காட்டக் கூடிய நன்றி என்னும் முறையில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது எனக் கூறி மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியை ஏற்கச் செய்து மாலை மாற்றிக் கொள்ளச் செய்து வாழ்க்கை ஒப்பந்த விழாவினைச் சிறப்புற நடத்தி வைத்தார்.

 

இறுதியில் தந்தை பெரியார் தமது அறிவுரையில் கூறியதாவது:-

 

தாய்மார்களே! பெரியோர்களே! முதலாவது உங்களுக்குச் சொல்கிறேன். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் செய்தாலும் கூட இந்த 'வாழ்த்துக் கூறுதல்' என்ற மூட நம்பிக்கையைப் போக்க முடியவில்லை. மற்ற சடங்குகளை எல்லாம் நிறுத்தி விட்டேன். இதை நிறுத்த முடியவில்லை. கொஞ்சம் நாளாகும். மக்களுக்கெல்லாம் நல்ல அறிவு வர வேண்டும். அப்போது இதுவும் தானாக மாறி விடும். என்னைப் பொறுத்தவரையில் இந்த வாழ்த்துக் கூறுவது என்பதில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. வாழ்த்துக் கூறுவதை நம்பினால் வசையையும் நம்பத்தானே வேண்டும். அதற்கு என்ன பலனோ, அதே பலன் தானே இதற்கும் உண்டு!

 

சாதாரணமாக நடைபெறுவது போலல்லாமல் இது கொஞ்சம் மாறுதலாக நடைபெறுகிறது. நல்ல அறிஞர்கள், பெரியவர்கள் எல்லாம் இம்முறையைக் கையாண்டு வருகிறார்கள். 40-ஆண்டு காலமாகப் பொதுமக்களிடையேயும் இந்நிகழ்ச்சி பரவலாக நடைபெற்று வருகிறது. இதுதான் - இந்த முறைதான் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்தில்லை. இந்த முறையை 1967-ஆம் வருட மாடல் என்று தான் சொல்லுவேன். இந்த முறை நமது இயக்கத்திற்கோ, கொள்கைக்கோ முடிவான முறையுமல்ல. தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொண்டு செல்ல வேண்டியது தான்.

 

நான் நினைக்கிறபடி நடக்க வேண்டுமானால் திருமணம் என்பதே சட்ட விரோதமான செய்கையாகும். இந்த மாற்றத்திற்குக் காரணமெல்லாம் பழைமையை மாற்ற வேண்டுமென்பதோ நமக்கென்று ஒரு முறை வேண்டுமென்பதாலோ அல்ல! இதுவரை பெரும்பாலான மக்களால் நடத்தப்பட்டு வரும் முறையைப் பற்றிய விளக்கம் கிடையாது. சரித்திரம் கிடையாது. நடைபெறும் நிகழ்ச்சிக்குத் தமிழில் ஒரு சொல்லே கிடையாது. முதலில் நடைபெற்ற இந்திப் போராட்டத்திற்குப் பின் தான் திருமணம் என்ற சொல்லே வந்தது. அதற்கு முன் கல்யாணம் - விவாகம் - தாரா முகூர்த்தம் - கன்னிகாதானம் என்கின்ற வடமொழிச் சொற்கள் தான் வழங்கி வந்தன. தமிழர்களுக்குக் கல்யாணமே கிடையாதா? அவர்கள் குடும்பமாக வாழவில்லையா? என்று கேட்கலாம். இம்முறை எதற்காகப் பயன்படுகிறது என்று பார்ப்போமானால் சட்டப்படி - மதப்படி - சாஸ்திரப்படி - சம்பிரதாயப்படி - ஆஸ்திகர்கள் கருத்துப்படி தனது வாழ்க்கைக்கு ஓர் ஆண், ஒரு பெண்ணை அடிமை கொள்கிற நாள் தான் திருமணம் என்பதோடு, பகுத்தறிவு உள்ள மனிதனின் அறிவை நாசமாக்கி மூட நம்பிக்கையை, முட்டாள்தனத்தை அவன் இரத்தத்தில் புகுத்தி அவனை மடையனாக்கவும், மூன்றாவதாக ஜாதியைக் காப்பாற்றவுமே யாகும். அதாவது, பார்ப்பான் பார்ப்பானாகவே சமுதாயத்தில் எந்தவித உழைப்பும் இன்றி வாழவும், பறையன் பறையனாக, சக்கிலி சக்கிலியாக இப்படி அவனவனும் தங்கள் ஜாதிப்படி இருக்க வேண்டும் ஒன்று சேரக் கூடாது என்கின்ற தன்மையில் ஜாதி காப்பாற்றப்படுகிறது. முன்னெல்லாம் சொல்வார்கள், "குலத்திலே குரங்ககைக் கொள்" என்று. குரங்கு போல இருந்தாலும் பரவாயில்லை. அது ஜாதியிலிருந்தால் கட்டிக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். அவ்வளவு ஜாதி வெறி இருந்தது.

 

இவற்றைப் பார்க்கும் போது மூன்று காரியங்களை அடிப்படையாகக் கொண்டு தான் பழைய முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்று, பெண்ணை அடிமையாக்குவது, இரண்டு, மக்களைப் பகுத்தறிவற்ற முட்டாள்களாக்குவது, மூன்றாவதாக, மனிதனை ஒன்று சேர விடாமல் ஜாதி காரணமாகப் பிரித்து நிற்கச் செய்வது ஆகியவைகளேயாகும்.

 

இதிலுள்ள கொடுமைக்காகவும், மடமைக்காகவும் மாற்றம் செய்ய வேண்டுமென்று துணிந்தோம். மற்றவனெல்லாம் மதம் - சாஸ்திரம் - பெரியவர்கள், முன்னோர்கள், கடவுள்கள் என்பதாக எதை எதையோ சொல்லி இந்த மாற்றத்தினை ஏற்றுக் கொள்ளாததோடு தடுத்தும் வந்தனர். கடந்த 40-வருட காலமாக இம்முறை மக்களால் நடத்தப்பட்டு வந்தாலும் அப்போதிருந்த அரசாங்கம் பழைமையைக் காப்பாற்றுதில் கண்ணும் கருத்துமாக இருந்ததால் இதனைச் சட்டபடிச் செல்லத்தக்க தாக்கவில்லை. இப்போது வந்துள்ள அரசாங்கம் இதனைச் சட்டப்படி செல்லத்தக்கது என்று சட்டமாக்க முயற்சிக்கிறது. சட்டம் ஆனாலும் ஆகாவிட்டாலும் இம்முறையைத் தடுத்து நிறுத்தி விட முடியாது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருக்கும்.

 

நாம் மாறுதலான முறையில் இதனை நடத்துகிறோம் என்றாலும், கடவுள்களின் பேரால் ஓர் ஆணுக்கும் ஆணுக்கும், ஒரு பெண்ணிற்கும் பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்கவில்லை. ஓர் ஆணிற்கும், பெண்ணிற்குமே இங்கு திருமணம் செய்து வைத்தோம். இப்போது இங்கு நடைபெற்ற முறையில் பெண் ஆணிற்கு அடிமையல்ல என்பதை விளக்கியதோடு, ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதையும் வலியுறுத்தினோம். இத்திருமண முறையை மாற்றியதற்கு முதற்காரணமே பெண்ணடிமை நீங்க வேண்டுமென்பது தானாகும்.

 

நம் மதம் ரொம்ப கீழ்மக்கள் உள்ள மதம். மனைவியைப் பிறனுக்குக் கொடுத்து மோட்சத்திற்குப் போனதாகப் புராணங்களில் உள்ளன. இதை மனிதன் உட்கார்ந்து படிக்கிறான். அதனை அறிவாளி உட்கார்ந்து கேட்கிறான். நம் மன்னவர்கள் என்பவர்கள் தங்களின் மனைவியைப் பார்ப்பானுக்குக் கொடுத்து மோட்சம் சென்றிருக்கிறார்கள். இந்தப் பெருமையை கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் வெட்டி வைத்திருக்கின்றனர். (வரகுணபாண்டியன் - திருவிடைமருதூர் கோயிலில் கல்வெட்டு) நம் கடவுள்கள், மன்னர்கள் என்பவர்களுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள், பதினாயிரக் கணக்கில் கூத்தியாள்கள் - இதுதான் நம் கடவுள்களின் - மன்னர்களின் தன்மை!

 

நாங்கள் தலையெடுத்து தொண்டாற்றக் கிளம்பிய பின் தான், பெண்கள் நிலை சற்று உயர்ந்தது. பல உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பெண்களைப் படிக்க வைத்ததற்காக பல இடங்களில் கலகம் நடை பெற்றிருக்கிறது. வெள்ளைக்காரன் செய்த சில நல்ல காரியங்களையெல்லாம் காங்கிரஸ் வந்து கெடுத்தது. காமராசர் வந்தபின் தான் அதனை மாற்றி அமைத்தார். அதன் பின் தான் பெண்கள் சிறிதாவது படிக்க ஆரம்பித்தனர்.

 

சிறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து விடுவதால் அதிகமான குழந்தைகளைப் பெறுகின்றனர். வருடத்திற்கு ஒன்று வீதம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஒரு பெண்ணுக்கு 15 வது வயதில் திருமணம் செய்தால் 20 வயதிற்குள் 5 குழந்தைகளைப் பெற்று விடுகிறாள். அதனால் 20 வயதிற்கு மேல் திருமணம் செய்தால் குழந்தை பெறுவது குறையும். இதுவரை இருந்த அரசாங்கம் பகுத்தறிவிற்குத் தடையாக இருந்தது. இப்போது பகுத்தறிவாளர்கள் ஆட்சியிலிருக்கின்றனர். அவர்கள் மேல் பல குறைகளைச் சொன்னாலும் அவர்கள் இலஞ்சம் வாங்கினாலும் எனக்குக் கவலை இல்லை. வாழ்க்கையில் திருட்டுப் பணம் சம்பாதிப்பதிலே தனி ருசி! அவர்கள் மக்களை அறிவாளிகளாக்கப் பாடுபட்டால் போதும். நம் நாடு மாற்றமடைந்து தெளிவான அறிவு பெற வேண்டுமென்பது தான் எனது ஆசை.

 

மணமக்களுக்கு வேண்டியதெல்லாம் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். பதினாரும் பெற்று என்று சொல்வது குழந்தைகளைப் பெறுவதற்காகச் சொல்வதல்ல. "16 பேறுகளைப் பெற்று" என்று சொல்வதற்காகச் சொல்வதாகும். ஆடம்பரமில்லாமல் மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத வகையில் வாழ வேண்டும். கூடுமான வரை ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு, எளிய வாழ்வு வாழ வேண்டும். அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் எப்படி ஒழுக்கம் குறைகிறதோ, அதுபோலத் தான் வரும்படிக்கு மேல் செலவிட்டாலும் ஒழுக்கம் குறையும். பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் சிங்காரித்துக் கொள்வதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அழகாக இருக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதற்காகத் தானே!

 

எல்லா மக்களும் பெண்களை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்க ஆரம்பித்தால் அவர்களே தங்களின் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வார்கள். நேற்று ஒரு சம்பவம் நடந்தது. எங்கள் கழகத்தின் குடந்தை வட்டத் தலைவர் திரு. மாரிமுத்து அவர்களின் மகளுக்குத் திருமணம் அந்தப் பெண்ணிற்கு வயது 39. மாப்பிள்ளைக்கு வயது 56. அந்தப் பெண் இருமுறை உலகத்தைச் சுற்றி வந்திருக்கிறது. மாப்பிள்ளையும் உலகம் சுற்றியவர். இருவரும் நிறைய சம்பாதிக்கின்றனர். எப்படி சந்திப்பு ஏற்பட்டதோ தெரியவில்லை. இருவரும் ரிஜிஸ்டர் செய்து கொண்டு, நேற்று தாச பிரகாஸ் ஓட்டலில் வரவேற்பு வைத்திருந்தார்கள். அதுவும் வீரமணி அவர்கள் வந்து சொன்ன பின் தான் தெரியும். வரவேற்பு முடிந்ததும் இருவரும் (பெண்ணும் - மாப்பிள்ளையும்) என்னை வந்து சந்தித்துச் சென்றனர். அதுபோல நடைபெற வேண்டும். பெண்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கைக்குத் துணைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

 

"வயதாகி விட்டதே - கஞ்சி யார் ஊற்றுவார்கள்" என்று கவலைப்பட வேண்டாம் என்று வயதானவர்களுக்கு மாதம் இவ்வளவு என்று அரசாங்கம் பென்ஷன் கொடுக்கிறது. அதுபோல வகையில்லாமல் விதவையாகி விட்டால் விதவை பென்ஷன் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் இந்தச் சர்க்கார் பார்க்கவில்லை என்றால் வேறு சர்க்காரைக் கூப்பிடுகிறோம். மக்களுக்காகத் தான் சர்க்காரே ஒழிய சர்க்காருக்காக மக்கள் அல்லவே! இதை இந்தச் சர்க்கார் செய்யாவிட்டால் வேறு எந்தச் சர்க்கார் செய்கிறதோ, அதைக் கூப்பிட்டு நடத்தச் சொல்கிறோம். அது பாகிஸ்தானாக இருந்தாலென்ன? ரஷ்யாவாக இருந்தால் நமக்கென்ன? யார் செய்கிறார்களோ, அவர்கள் வந்து ஆளட்டும். நமக்கு வேண்டியதெல்லாம் மக்கள் வளர்ச்சியடைய வேண்டும். மற்ற மேல் நாட்டு மக்களைப் போல் வாழ வேண்டுமென்பது தான். கடைசியாகச் சொல்கிறேன். யாரும் ராதாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எல்லாம் நல்லவண்ணம் முடியும்.

 

                  --------------------------------------- 26.08.1967- அன்று சென்னையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இல்லத் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.”விடுதலை”  27.08.1967

0 comments: