பெண்கள் பிள்ளை பெறும் கருவியா?
முதலில் நீங்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மாறுதல் காலம். இதுவரை நாம் மானமற்று - இழிந்து, அடிமைகளாக, மடையர்களாக இருந்து வந்தோம். இன்று சிலரது முயற்சியால் நம்மில் சிலருக்காவது நாம் இழிஜாதியாக சூத்திரத்தன்மையாக இருக்கிறோமே என்கின்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.
நம்மில் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் அறிவு இல்லை. நம் பெண்கள் இன்னும் அடிமைகளாக, குட்டிப் போடும் கருவிகளாக, புருஷனுக்கு வேலைக்காரிகளாக இருக்கிறார்கள் என்பதோடு, அப்படி இருப்பதற்காகவே பெண்கள் சமுதாயமானது இருக்கிறது என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகம் எந்த அளவுக்கு மாறுகிறது என்பது யாருக்குத் தெரியும்? உலகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் எல்லாம் விஞ்ஞானத் துறையில், அறிவு ஆராய்ச்சித்துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் போது, நாம் காட்டுமிராண்களாக, பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறோம். நமது பொல்லாத வாய்ப்பு அயோக்கியர்களிடத்தில் பத்திரிகைகள் சிக்கிவிட்டன. நம்மை அடிமைகளாக, அறிவற்றவர்களாக ஆக்க வேண்டுமென்று கருதுகிறவர்களிடமும், அவர்களின் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவர்களிடமும் பத்திரிகைகள் சிக்கியிருப்பதால் அவை கட்டுப்பாடாக நம் அறிவை வளரவிடாமல் செய்வதோடு, முட்டாள்தனமும், மூடநம்பிக்கையும் வளர என்னென்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவையும் திட்டம் போட்டுச் செய்து வருகின்றனர்.
நம் முயற்சியும், தொண்டும் நம் ஆண்களைத் திருத்திய அளவிற்குப் பெண்களைத் திருத்தவில்லை. அதனால்தான் இந்த விளக்கும், குப்பைக் கூளங்களையும் இங்கு வைத்திருக்கின்றனர். இவை எதற்காகத் தேவை என்பது இங்குள்ள எவருக்குமே தெரியாது. நம் மக்களின் இழிவினையும், அடிமைத் தன்மையையும் நிலை நிறுத்துவதற்காகவென்று பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டது தான் இந்தச் சடங்கு முறைகளாகும். தமிழனுக்கு இதுபோன்ற முறையே என்றும் இருந்தது கிடையாது. இப்போது இங்கு நடைபெற்றது போன்றது தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பதிவுத் திருமணம் என்பதுமாகும். என்றாலும் பதிவுத் திருமணத்தில் சில தொல்லைகள் நமக்கிருப்பதால் அதை மாற்றி இருவரும் சம உரிமை உடையவர்கள் என்பதை வலியுறுத்தவே இதுபோன்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவாகும். சுயமரியாதைத் திருமணமாகும்.
இந்த முறையில் கடந்த 40-ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்று வந்ததும் கூட, செல்லுபடியற்றவையாகக் கருதப்பட்டு வந்தன. இதுவரை நமக்கிருந்த அரசு பார்ப்பன சார்புள்ள அரசாக இருந்ததாலும், இம்முறையானது சட்டப்படிச் செல்லுபடியற்றதாக இருந்தது. இப்போது அமைந்திருக்கும் ஆட்சியானது மக்களாட்சி என்பதோடு தமிழர்களின் பகுத்தறிவாளர்களின் ஆட்சியானதால், இந்த ஆட்சி சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. நான் அய்க்கோர்ட் ஜட்ஜ் கைலாசம் அவர்கள் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தேன். எனக்குப் பக்கத்திலிருந்த சீஃப் ஜஸ்டிஸ் அனந்தநாராயண அய்யர் இந்த முறைதான் சிறந்ததுங்க. என்ன காரணத்தாலோ இதுவரை இதைச் சட்டமாக்காமலிருந்திருக்கிறார்கள் என்று கூறினார்.
நம் புராணங்கள், இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்களான சீதை, திரவுபதி, சந்திரமதி, கண்ணகி ஆகிய இவர்களின் திருமணங்கள் யாவும் பொருத்தம், நாள், நட்சத்திரம், ஜாதகம், ஜோசியம், நேரம் எல்லாம் பார்த்துத் தேவர்கள் என்பவர்களால் நடத்தப்பட்டவை தான். இதில் எவள் ஒழுங்காக வாழ்ந்தாள்? சீதை திருமணமான சில நாட்களிலேயே காட்டிற்குச் சென்று இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு சினையாகத் திரும்பினாள். திரவுபதை 5-பேருக்கு வைப்பாட்டியாகத் தனது வாழ்நாளை கடத்தினாள். சந்திரமதி தன் கணவனால் அடகு வைக்கப்பட்டாள். கண்ணகி கல்யாணமான அன்றே அவள் கணவன் இன்னொருத்தியோடு சென்று வாழ்க்கை நடத்தினான். இப்படி பொருத்தம், நேரம் எல்லாம் பார்த்துச் செய்த கல்யாணங்கள் எவை வாழ்ந்தன? இந்தப் பொருத்தம் நேரம் என்பதெல்லாம் புரட்டுத்தானே தவிர இவற்றால் எந்தப் பயனும் கிடையாது.
நம் மக்கள் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்றால், சாஸ்திரம் என்று சொல்லி மனித மலத்தை எடுத்துக் கொடுத்தாலும் சாப்பிடக் கூடிய நிலையில் தான் இருக்கிறது. நம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாகிக் கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிற நிலை மாறி, மற்ற உலக மக்களைப் போல் வாழ வேண்டுமென்பதற்காகத் தானே நாங்கள் இதை எல்லாம் எடுத்துக் கூறுகிறோம் பாடுபடுகிறோம். மற்றப்படி இதனால் எங்களுக்கு என்ன லாபம்? அந்த அம்மாளே கையிலே தீப்பந்தம் பிடித்துக் கொண்டு பகலில் வெளியே போனால் மக்கள் என்ன நினைப்பார்கள்? அதுபோலத்தானிருக்கிறது இந்தப் பட்டப் பகலில் விளக்கை ஏற்றி வைத்திருப்பதும் என்று குறிப்பிட்டதோடு, மணமக்கள் தங்களின் வாழ்க்கையில் முட்டாள்தனமான மூடநம்பிக்கைக் கருத்துகளுக்குச் சிறிதும் இடம் கொடுக்காமல், பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டுமென்றும், வருவாய்க்கு மேல் செலவிடக் கூடாது என்றும், அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொண்டு வாழ்வில் அவதிப்படக் கூடாது.
------------------------- 05.05.1968- அன்று கந்தன் - தமிழரசி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 04.06.1968
0 comments:
Post a Comment