மதம்!
அதுசமயம் அவர்கள் "ஒருசிலர் ஆரியர் ஏது? திராவிடர் ஏது? எல்லாம் ஒன்றாய்விட்டதே, எல்லாம் கலந்தாய்விட்டதே" என்று எடுத்துச் சொல்லி நமது திராவிட நாட்டுப் பிரிவினை முயற்சியைக் கெடுக்கப் பார்க்கிறார்கள். ஆரியர் திராவிடர் இவர்களுக்குள்ளே இந்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லி நம் இன உணர்ச்சியைத் தடை செய்யப்பார்க்கிறார்கள். இந்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதென்றால் அது போதுமா? இன்னும் பழக்க வழக்கங்களில் பேதம் இருந்து வருகிறதே அது ஒழிய வேண்டாமா? அது ஒழிய வேண்டும் என்று உணர்ச்சியூட்ட ஓர் இயக்கம் வேண்டாமா? அப்படிப்பட்ட உணர்ச்சியூட்டத்தானே, திராவிடர் கழகம் இருந்து வருகிறது.
இரத்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதென்பது உண்மையானால் தோழர்களே, இன்னும் ஏன் ஆரியர் எல்லோரும் பார்ப்பனர்களாக இருக்க, திராவிடர் எல்லோரும் சூத்திரர்களாக இருக்கிறார்கள்? இன்னும் ஏன் பார்ப்பான் உச்சிக்குடுமி வைத்துக் கொண்டிருக்கிறான்? இன்னும் ஏன் பார்ப்பான் பூணூல் மாட்டிக் கொண்டிருக்கிறான்? இன்னும் ஏன், பார்ப்பான் தொட்டால் சாகாத கடவுள், நாம் தொட்டால் செத்துப் போய்க் கொண்டிருக்கிறது?
இந்து மதம் ஒழிய வேண்டுமென்றால் என் மீது கோபித்துக் கொள்ளும் ஆரியத் தோழர்களைக் கேட்கிறேன். பார்ப்பனத் தோழர்களைக் கேட்கிறேன். இந்து மதத்தை ஒப்புக் கொண்டிருப்பதால்தானே நாங்கள் சூத்திரர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம்? இந்து மதத்தை ஒப்புக் கொண்டிருப்பதால்தானே நீங்கள் பார்ப்பனர்களாக - பிராமணர்களாக ஆக்கப்பட்டிருக்கிறீர்கள்? இப்படி எங்களை இழிவுபடுத்தி வைத்திருக்கும் இந்து மதம் ஒழிய வேண்டுமென்றால் அது எப்படிக் குற்றமாகும்?
எங்களை வகுப்புவாதிகள், பிராமணத் துவேஷிகள், மக்களைப் பிரிக்கப் பார்க்கிறவர்கள் என்கிறீர்களே? உண்மையில் மக்களைப் பிரித்து வைப்பது நீங்களா, நாங்களா? ஒருத்தன் பார்ப்பானாகவும், ஒருத்தன் பஞ்சமனாகவும் இருக்க நீங்கள் காரணமா, நாங்கள் காரணமா? மக்களிடையே பிரிவினை கூடாது என்கின்ற எண்ணம் உங்களுக்கு உண்மையாகவே இருக்குமானால் நீங்களே விலக்கி விடலாமே, "இனி நாட்டிலுள்ள எல்லோருமே சமம் பார்ப்பானென்றும், பஞ்சமனென்றும் மேதமில்லை, பார்ப்பானென்றும் சூத்திரனென்றும் பேதமில்லை," என்று நீங்களே ஒழித்து விடலாமே, உங்கள் உச்சிக்குடுமியையும் பூணூலையும் நீங்களே கொடுத்து விடலாமே, கோயில் சாவிகளை எங்களிடம் தந்து, பூசை செய்யும் தட்டில் விழும் காசை எடுத்துக் கொள்ளவும் நீங்களே எங்களை அனுமதித்து விடலாமே. நீங்களே அழித்து விடலாமே, பிறவியினால் பேதமும், இழிவும் கற்பிக்கும் சாஸ்திரப் புராண இதிகாச ஆதாரங்களை நீங்களே முன்வந்து விடலாமே எங்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள.
இதை எல்லாம் செய்ய மறுக்கிறீர்கள். இன்னும் கோயிலில் உங்களுக்குத் தனி இடம் வேண்டுமென்கிறீர்கள். நீங்களே பூஜை செய்ய வேண்டுமென்கிறீர்கள். நீங்களே தட்டில் விழும் காசை எடுத்துச் சொருகிக் கொள்கிறீர்கள். இன்றும் சாஸ்திரங்களும் புராணங்களும் இதிகாசங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்கிறீர்கள். சூத்திரன் படிக்கக்கூடாது, படித்தால் நாட்டுக்குக் கேடு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் மனுநீதி சாஸ்திரமும் அப்படியே இருக்க வேண்டுமென்கிறீர்கள். இன்னும் நாங்கள் தொட்டால் உங்களுக்கு "தீட்டு" வந்துவிடுகிறது என்று சொல்லிக் கொண்டு எட்டி நின்று வருகிறீர்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உங்களுக்கே இடம் வேண்டும் என்கிறீர்கள். சகல உத்தியோகங்களும், உங்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். எங்கள் விகிதாசாரம் கூட எங்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று சூழ்ச்சிகள் பல செய்து வருகிறீர்கள். இப்படி எல்லாமே நீங்களே எங்களுக்குத் தொல்லைக் கொடுத்துக் கொண்டு வந்தும், எங்களையே துவேஷிகள், பிரிவினை முயற்சிக்காரர்கள் என்று குற்றம் சாட்டி வருகிறீர்கள். இது ஒழுக்கமாகுமா? நேர்மையாகுமா? நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தோழர்களே நாங்கள் ஒன்றும் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை. பார்ப்பனீயம் ஒழியட்டும், வர்ணாஸ்ரம தர்மம் ஒழியட்டும் என்று தான் கூறி வருகிறோம்.
சாதி மத பேதங்கள் ஒழியட்டும், எல்லோரும் ஒன்று படட்டும் என்றுதான் கூறிவருகிறோம். ஒன்றுபடாதவரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய விகிதாசார பயனாவது எங்களுக்குக் கிடைக்கட்டும் என்று தான் நாங்கள் கூறி வருகிறோம்.
இப்பேதங்களால் இதுவரை வசதியும், சுகபோகமும் அனுபவித்து வந்த கூட்டத்திற்கு எங்களது இம்முயற்சி பெரிய சங்கடமாயிருப்பதால், எங்கள் முயற்சியில் மக்கள் ஈடுபடாமல் இருக்க, நாங்கள் ஏதோ பிரிவினை செய்ய முயற்சிக்கிறோம் என்று அக்கூட்டத்தினர் கூச்சல்போட்டு வருகிறார்கள். பச்சைப் பார்ப்பனீய தந்திரம் இது. எனவே நீங்கள் இப்பொய்ப் பிரசாரத்தில் ஏமாந்து போய்விடாதீர்கள். ஏனப்பா நாங்கள் 'இழிசாதி மக்கள்' என்றால் "கடவுள் அப்படி படைத்து விட்டார், அதற்கு நாங்களென்ன செய்யட்டும்" என்று சுலபமாய்க் கூறி விடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
கடவுளுக்கு வக்காலத்து வாங்கிப் பேச நீ யாரப்பா என்று தான் நாம் கேட்க விரும்புகிறோம். இந்த ஜாதி உயர்வு தாழ்வுக்கு கடவுள் காரணம் என்றால் அவரே வந்து சொல்லட்டுமே, நான் தான் இப்படிப் படைத்தேன் என்று. அவர் சொல்லாததை நீ ஏனப்பா அவர் பேரால் சொல்கிறாய் என்றுதான் பார்ப்பானைக் கேட்கிறோம்.
அப்படிச் சொல்லுமா எந்தக் கடவுளாவது? சொன்னால் நீங்கள் தான் ஒப்புக் கொள்வீர்களா அந்தக் கடவுளை? அவனுக்குத் தான் தெரியும் அது பேசாத குழவிக்கல் என்று. அதனால் தானே கடவுளைச் சாட்சிக்கு அழைக்கப் பார்ப்பான் மறுத்து வருகிறான்.
நீங்கள்தான் குழவிக் கல்லுக்குக் கோயில் கட்டுவீர்கள். கும்பாபிஷேகம் செய்து வைப்பீர்கள். அதற்குப் பெண்டு பிள்ளையும் தேடி வைப்பீர்கள். பார்ப்பான் செய்ய மாட்டானே, இவ்வேலைகளை அவன் அடித்துக் கொள்ள மாட்டானே மொட்டை. அவன் தூக்கமாட்டானே காவடி. நீங்கள் தான் மடையர்கள், மூடநம்பிக்கைக்காரர்கள், குழவிக் கல்லைச் சாமி என்று கட்டியழ.
எனவே தோழர்களே! தன்னைக் கடவுள் உயர்வாகப் படைத்து விட்டதென்று, பார்ப்பான் கூறிவருவதெல்லாம் வெறும் பித்தலாட்டம். அவனது கடவுள் சிருஷ்டியே வெறும் பித்தலாட்டம் நிறைந்தது. மற்ற நாட்டவரெல்லாம் ஒரே கடவுளை, அதுவும் உருவமில்லாத கடவுளை, அதுவும் ஒழுக்கமுள்ள கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்க, பார்ப்பான் மட்டும் பல கடவுள்களை, அதுவும் உருவமுள்ள கடவுள்களை ஒழுக்கத்திற்குக் கட்டுப்படாத கடவுள்களைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான் என்றால், இதிலிருந்தே தெரியவில்லையா பார்ப்பானுடைய பித்தலாட்டம்.
தன்னை உயர்வென்று கூறிக் கொள்ள இவன் மட்டுமென்ன ஆகாயத்திலிருந்து குதித்து விட்டவனா? இவனும் நம்மைப் போல் ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறப்பவன் தானே! என்ன இவன் நம்மைக்காட்டிலும் ஒழுங்காக வாழ்வது?
ஜெயிலைப் பாருங்கள். அதிலும் இவர்கள் தம் விகிதத்திற்கு மேல் அதிகமாகத்தானே இருக்கிறார்கள். நம்மவர்களாவது கஞ்சிக்கில்லாமல் ஏதோ கத்திரிக்காய், பூசணிக்காய் திருடிவிட்டு வந்திருப்பார்கள். ரூ.100, ரூ.200 திருடியவர்களாக இருப்பார்கள். இவர்களோ 1000, 10000- திருடியவர்களாக, போர்ஜரி செய்தவர்களாக, பெரிய பாங்கிகளையே மோசம் செய்தவர்களாக, லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியவர்களாக இருப்பார்களே.
ஆகவே எக்காரணம் பற்றியும் பார்ப்பனர்கள் தம்மை உயர்வென்று கூறிக் கொள்ளவோ, நம்மை இழிவானவர்கள் என்று கூறவோ உரிமையுடையவர்களல்ல. கடவுள் பேராலோ, மதத்தின் பேராலோ நம்மை இழிவுபடுத்த உரிமையுடையவர்களும் அல்லர். எனவே பார்ப்பனீயத்தின் பிடியிலிருந்து விடுபடுங்கள். பகுத்தறிவு வழிநட முன்வாருங்கள்."
-------------------------- திருவண்ணாமலையில் தந்தை பெரியார் அவர்கள் 16.11.1949 - அன்று ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 18.11.1949
0 comments:
Post a Comment