Search This Blog
25.7.08
கள்ளுகடை மறியலை நிறுத்துவதற்குநாகம்மையாரைக் கேட்கவேண்டும் !
1921ஆம் ஆண்டில், திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாகாணக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நான் மாகாணக் கமிட்டி உறுப்பினர். அந்தக் கூட்டத்தில் திரு.வி.க., டாக்டர் வரதராஜலு நாயுடு, தண்டபாணிப் பிள்ளை, ஆச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியாரும் அவரோடு அன்னை நாகம்மையாரும் வந்திருந்தனர். அங்குதான் அம்மையார் அவர்களை முதன்முறையாகப் பார்த்தேன். அது முதல் அவர்கள் மறையும் வரை - பெரியாரை விட்டுப் பிரிந்ததையே நான் கண்டதில்லை.
கள்ளுகடை மறியல் செய்வதென்று காங்கிரசில் தீர்மானம் அமலுக்கு வந்தபோது அம்மையார் தலைமையாக நின்று மறியலை தீவிரமாக நடத்தினார்கள். மறியல் வெற்றிகரமாக நடந்து வந்ததைக் கண்டு, அப்போது வைஸ்ராயாக இருந்த லார்டு இர்வின் பிரபு காந்தியாரை அழைத்து, எப்படியாவது அந்த மறியலைக் கைவிட வேண்டுமென்று கேட்டபோது, காந்தியார், மறியலை நிறுத்தும் அதிகாரம் என்னிடம் இல்லை; அதற்கு ஈரோட்டிலுள்ள ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்களைத்தான் கேட்கவேண்டும் என்று கூறினார். அந்த மறியலில் பெரியார், ஆச்சாரியார் எல்லோரும் கலந்துகொண்டனர். என்றாலும் அம்மையாருக்குத்தான் பெருமை தந்தார் காந்தியார்.
பிறகு வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புக்காக சத்தியாக்கிரகம் நடத்தச் சென்றபோது அம்மையார் என்னையும் அழைத்தார்கள். அதற்காக நான் இதைப்பற்றி காங்கிரசில் தீர்மானம் ஒன்றும் போடவில்லை. ஆனாலும் உங்களுக்குத் துணையாக வேண்டுமானால் வருகிறேன் என்றேன். உடனே அவர்கள், நான் என் கணவர் துணையுடன் செல்கிறேன். வேறு துணை வேண்டியதில்லை என்று கூறிவிட்டு வைக்கத்துக்குச் சென்றார்கள். போராட்டத்தில் வெற்றியும் பெற்றார்கள்.
இன்று நம்முடைய கொள்கைகள் நாடெங்கும் பரவி இதைப் பற்றித் தெரியாதவர்களே இல்லையென்கிற நிலைமையிருக்கிறது. இயக்கத்தில் பணியாற்றவும் நீ முந்தி; நான் முந்தி என்று ஏராளமான தோழர்கள் இன்று நிரம்பியிருக்கிறார்கள். ஆனால் ஆரம்பக் காலத்தில் இயக்கத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர்தான் வந்தார்கள். இயக்கத்துக்கு அன்று நிதியோ, பண வசதியோ கிடையாது. அவரவர் தம் சொந்த வேலைகளை விட்டு இயக்கமே உயிர் என்று வந்தவர்கள். அப்பேர்ப்பட்டவர்களை எப்போதானாலும் அன்போடு வரவேற்று, உபசரித்து, ஆதரித்து வந்தவர்கள் அம்மையார்தான்.
- மூவலூர் இராமாமிர்தத்தம்மையார் எழுதியது,
( 'முரசொலி', பொங்கல் மலர் 1956)
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment