Search This Blog

18.7.08

தீ மிதிப்பது கடவுள் சக்தியா?

வினா: நெருப்பில் நடக்கும் பக்தர்களில் சிலர் தாங்கள் நடக்கும் போது தங்கள் கைகளில் நெருப்பை அள்ளி விளையாடுகின்றனரே! அதுவும் ஓர் ஈருருளை வண்டி ஓட்டுதல் போன்றதொரு பயிற்சிதானா? இறைவன்பால் மனத்தைப் பறிகொடுத்த உணர்ச்சி நிலை என எண்ணுகிறேன் நான். தயவு செய்து விளக்கம் தரவும்?


விடை: இறைவன்பாலோ இயற்கையின்பாலோ மனிதன் தன் மனத்தைப் பறிகொடுத்த நிலையில் இருப்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. தன்னை மறந்த நிலையிலும் ஒருவன் ஈருருளை வண்டியை எளிதாக ஓட்டிச் செல்லலாம். அவன் தன்னை மறந்திருந்தாலும் அவனது கால்கள் பெற்ற பயிற்சியை மறவாமல் செயல்பட்டு வரும். மரக் கட்டைகள் எரிவதால் உண்டாகும் தழற்கட்டிகளுக்கு வெப்பத்தைக் கடத்தும் திறன் குறைவு. அதனால் தான் சமையல் செய்யும் போது அடுப்பிலிருந்து வெளியில் வந்து விழும் நெருப்புக் கட்டிகளை மகளிரும் கையால் எடுத்து அடுப்பினுள் மீண்டும் இடமுடிகிறது. நெருப்பைக் காலாலும் மிதிக்கலாம், கையால் எடுத்தும் விளையாடலாம். இச் செய்கைகளுக்கு எதன்பாலும் மனதைப் பறிகொடுத்த நிலை இருந்தாகவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஆனாலும் நெருப்பின் மீது எவரும் நின்றுகொண்டே இருக்கமுடியாது. நெருப்பினைக் கைகளில் பிடித்து வைத்துக் கொண்டே இருக்கவும் முடியாது. நெருப்பில் காலை மாற்றி மாற்றி நடக்கவேண்டும். சுடு மணலிலும் குறைந்த அளவே சூடு உறைக்கும். கைகளை மாற்றி மாற்றி அம்மானைக் காய்போல் நெருப்புக் கட்டிகளை நில்லாமல் சுழல விடவேண்டும். காப்பித் தம்ளர் சுடுவதிலும் குறைந்த அளவே சூடு உறைக்கும். இதுவே நெருப்பில் நடத்தல், நெருப்பை எடுத்தல் ஆகிய செயல்களில் அடங்கியுள்ள உண்மை.

ஆதாரம்: 'கலைக்கதிர்', அக்டோபர் 1971

0 comments: