Search This Blog
16.7.08
கடவுள், மதம், சாஸ்திரம் ஒழிந்தால் ஜாதி ஒழியும்.!
நான் என்ன சொல்லுகிறேன் என்றால், ``நம் கடவுள் நம்பிக்கை என்பதே கடைந்தெடுத்த முட்டாளின் அறிகுறி''யாக ஆகிவிட்டது. காரணம் என்னவென்றால், ``கடவுள் என்றால் ஆராய்ச்சியே செய்யக் கூடாது'', ``நம்பவேண்டும்'', ``அப்படியே ஒப்புக் கொள்ளவேண்டும்'' என்பதாகிவிட்டது. அது மாத்திரமல்ல; அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி, ``கடவுள் என்றால் என்ன? அவர் எப்படி இருப்பார்? எதற்காக இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? எதுமுதல் இருக்கிறார்? அவர் சக்தி எவ்வளவு? நம் சக்தி எவ்வளவு? அவரால் ஏற்பட்டது எது? நம்மால் ஏற்பட்டது எது? எது எதை அவருக்கு விட்டுவிடலாம்? எது எது நாம் செய்ய வேண்டியது? அவரில்லாமல் ஏதாவது காரியம் நடக்குமா? எதையாவது செய்யக் கருதலாமா?'' என்பதுபோன்ற (இப்படிப்பட்ட) நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒரு விஷயத்தைக்கூட தெளிவாகத் தெரிந்து கொண்டவன் எவனும் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் இல்லை. இல்லை என்றால் அறவே இல்லை என்று சவால்விட்டுக் கூறுவேன். நான் இதை 60-70 ஆண்டாகச் சிந்தித்துச் சிந்தித்து அறிவில், ஆராய்ச்சி அனுபவத்தில் கண்டுகொண்ட உறுதியினால் கூறுகிறேன். இவ்விஷயங்களில் மக்களுக்கு விஷயம் தெரியாது என்று சொல்லுவதற்கு இல்லாமல் தெரிந்து கொண்டிருப்பது குழப்பமானதும், இரட்டை மனப்பான்மை கொண்டதுமாக இருப்பதால், மனிதனுக்கு இவ்விஷயத்தில் அறிவு பெற இஷ்டமில்லாமலே போய்விட்டது.
தோழர்களே! நான் சொல்லுகிறேன், கடவுள் நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப்பாடுபடுகிறேன்'' என்றால், அதில் அறிவுடைமையோ, உண்மையோ இருக்க முடியுமா? கடவுள் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது? மத நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்'' என்று சொல்ல முடியுமா? மதமில்லாமல் எப்படி ஜாதி வந்தது? சாஸ்திர நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்'' என்று சொல்ல முடியுமா? சாஸ்திரம் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது? ஆகவே, இந்த ஜாதி ஒழிப்புக் காரியத்தில் கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கைக்காரர்கள் இருந்தால், அவர்கள் மரியாதையாய் வெளியேறி விடுவது நாணயமாகும். இதனாலேதான் ``ஜாதி கெடுதி, ஜாதி கூடாது'' என்று சொல்லத்தான் சில ``பெரியவர்கள்'' முன் வந்தார்களே ஒழிய, அதை ஒழிக்கப் பாடுபட இன்றுவரை எவரும் முன்வரவில்லை.
ஆகவே, தோழர்களே! உங்களுக்கு நான் சொல்லுகிறேன், வணக்கமாகச் சொல்லுகிறேன். நீங்கள் ஜாதியை ஒழிக்கப் பிரியப்பட்டீர்களேயானால் இந்த இடத்திலேயே உங்கள் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும் ஒழித்துக் கட்டுங்கள்! ஒழித்துவிட்டோம் என்று சங்கநாதம் செய்யுங்கள்! கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்றும் ஒழிந்த இடத்தில்தான் ஜாதி மறையும், ஜாதி ஒழியும். மற்ற இடம் எப்படிப்பட்டதானாலும் அங்கு ஜாதி சாகாது. ஆகவே, ஜாதி ஒழிய வேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகன் ஆகுங்கள். நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவதுதான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது. ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான், பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான். தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச் சின்னங்களோ, மதக் குறியோ, சாஸ்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது; கண்டிப்பாய் இருக்கக் கூடாது.
----------------தந்தைபெரியார்-"விடுதலை" 17-8-1962
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment