Search This Blog

9.7.08

மாணவர்களுக்கு..... இளைஞர்களுக்கு....




மாணாக்கர்களால் சிறிது தொல்லைகள் நடக்கின்றன. என்றாலும் அவற்றுக்குப் பெரிதும் உபாத்திமார்களே காரணஸ்தர் ஆவார்கள். வட நாட்டான் பணமும், உபாத்தி மார்களின் ஆதரவும் இரண் டும் சேர்ந்தே இளைஞர்களைப் பாழ்படுத்துகின்றன. பள்ளிக்கூட அதிகாரிகளும் எப்படியாவது பிள்ளைகள் படிக்காமல் கெட்டு நாசமாகட்டுமென்று கருதியே, தக்க அடக்குமுறையைக் கையாளாமல் விட்டுக்கொண்டு வருகின்றனர். இதில் பார்ப்பனப் பிள்ளைகள் வெகு ஜாக்கிரதையாகவே தப்பித்துக் கொள்கிறார்கள். இதன் பயனாய்க் கெட்டுப்போகிறவர்கள் பார்ப்பனரல்லா பிள்ளைகளே ஆவார்கள்.

நமது நாட்டுப் படிப்பு ஏற்கனவே மிகவும் அக்கிரமமான படிப்பாகும். வாழ்க்கைக்கு வேண்டாத படிப்பையே கொடுப்பதும், அதற்கும் தகுதிக்கு மேலானதும், தாங்க முடியாததுமான பணச் செலவு வைப்பதுமான காரியமாகும். ஒரு பையன் காலேஜில் படிக்கவேண்டுமானால், குறைந்தது மாதம் 30-40 ரூபாயாவது செலவாகும். ஹைஸ்கூலில் படிக்க வேண்டுமானால் மாதம் 10-15 ரூபாயாவது செலவாகும். இந்த வரும்படியுள்ள பெற்றோர்கள் நம் நாட்டில் நூற்றுக்கு எத்தனை பேர்கள் இருக்கமுடியும்?

பார்ப்பனர்களுக்கு மானாபிமானத்தை இலட்சியம் செய்யாமல் பிச்சையெடுக்க உரிமை இருக்கிறபடியாலும், மற்ற மக்களை நெஞ்சில் ஈவிரக்கமில்லாமல் வஞ்சிக்க ஜாதியும் மதமும் இடம் கொடுக்கிறபடியாலும், சர்க்காரும் இவற்றிற்கு வேண்டியதற்கு மேற்பட்ட ஆதரவு அளித்து வருவதாலும், இஷ்டப்பட்ட பார்ப்பனர்கள் எல்லோரும் ஆண், பெண் அடங்கலும் படிக்கவும், கண்டிப்பாக பாஸ் செய்யவும் சவுகரியம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பார்ப்பனப் பையன்களுடைய பேச்சுகளைக் கேட்டுக் கொண்டு அவர்களது தூண்டுதலுக்கு ஆளாகிப் பள்ளிகளில் காலித்தனம் செய்வதென்றால், அது பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே மிக்கக் கேட்டை விளைவிக்கும் காரியமாகும்.

பார்ப்பனரல்லாப் பிள்ளைகளின் பெற்றோர்கள் - தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் எவ்வளவோ கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. தரித்திரத்தையும் பட்டினியையும் சகித்துக் கொண்டு பணத்தை மீதிப் பண்ணிப் பிள்ளைகள் படிப்புக்கு உதவி செய்கிறார்கள்.
மற்றும் பலர் படிப்புக்குச் செலவு செய்வது ஒரு சேமிப்பு என்று கருதி உள்ளதை யெல்லாம் செலவு செய்கிறார்கள். பலர் முன்னோர் தேடிவைத்த சொத்துகளை விற்றுப் படிக்க வைக்கிறார்கள். சிலர் கடன் வாங்கிப் படிக்க வைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் பிள்ளைகள் பள்ளியில் தங்கள் கடமை என்ன என்று அறியாமல் காலித்தனத்தையும் போக்கிரித்தனத்தையும், பெற்றோர்களை வஞ்சிப்பதையும், ஏமாற்றுவதையும் தேசாபிமானம் என்று கருதிக்கொண்டு அதில் விழுந்து நாசமடைகிறார்கள். பள்ளிப் பிள்ளைகள் பள்ளி வாழ்க்கை வரையிலும் படிக்கவேண்டியதே அவர்களது கடமையாகும். படித்துவந்த பிறகு தேசாபிமானமே பெரிய தென்று ஒருவன் கருதுவானானால் காலியாக அல்லாமல் யோக்கியனாக இருப்பானானால், அவன் மரியாதையாகப் பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டுத் தனது பெற்றோர்கட்குத் தெரிவித்துவிட்டு வெளியிலே வந்துவிட வேண்டியது யோக்கியமான காரியமாகும். இதை விட்டுவிட்டுப் பள்ளிக்கூடத்தில் இருந்து கொண்டே தேசாபிமானம் பேசுவது மிகவும் இழிவும் குற்றமுமான காரியமாகும். இவற்றை நான் பெரிதும் பார்ப்பனரல்லாத பிள்ளைகட்கே சொல்லுகிறேன்.



------------ தந்தை பெரியார் -21.2.1943

0 comments: