Search This Blog

14.7.08

தமிழ்நாடு என்றால் திராவிடநாடு



சுதந்திரத் தமிழ்நாடு!

தமிழ்நாடு என்பது திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்பதானது இன்னது என்றும், வெகுகாலமாகவே அய்ரோப்பிய அறிஞர் முதல் பல உலக ஆராய்ச்சிக்காரர்களாலும், இந்திய சரித்திர ஆராய்ச்சியாளராலும் எல்லை காட்டி வகுக்கப்பட்டிருக்கிறது என்றும் நான் இது விஷயமாகப் பேசுகிற இடங்களில் எல்லாம் இதைப்பற்றி விளக்கிப் பேசியே வந்திருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளைத் தாய்மொழியாகப் பேசிவந்த மக்களையே மிகுதியாகக் கொண்ட நாடுகள் -இது திராவிடம் என்று சொல்லப்படுவது யாவரும் அறிந்ததேயாகும். அந்தத் திராவிடம் என்பது பெரிதும் சென்னை மாகாணமாகவே இருக்கிறதுடன் மற்றும் சிறிது சென்னை மாகாணத்தைத் தொட்ட சுற்றுப்புற நாடாகவும் இருக்கிறது.இந்த விஸ்தீரணத்திற்குட்பட்ட முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மற்ற இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லாரும் திராவிடர்கள் என்ற தலைப்பின் கீழ்தான் வருவார்கள். இவற்றை விளக்குவதோ மற்றும் இது சம்மந்தமாக இனியும் விளக்கிச் சொல்லுகிறதோ, கஷ்டமான காரியம் அல்ல என்பதோடு, இதுவரை சாதாரண நிலையில், ஆராய்ச்சியில், விவகாரத்தில் இவை வழங்காத விஷயங்கள் என்றும் சொல்லிவிட முடியாது என்று கருதுகிறேன்.மேற்கண்ட விளக்கத்திற்குட்படாத தமிழரல்லாதவர்கள் இருந்தால் அதைப்பற்றி என்ன? என்று கேட்பீர்களானால், அவர்களுக்குள்ள உரிமைகள் அவர்களது முன்னேற்றத்துக்கு ஏதுவான அபிலாசைகள் நியாயப்படி காக்கப்படும். யாவரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

திராவிடநாட்டில்பல மொழிகள் இருக்கின்றனவே என்றால், இப்போது காங்கிரஸ் தீர்மானித்து இருப்பதை அடிப்படையாகக் கொண்டே, திராவிடதேசம் என்பது - அவசியப்பட்டால் திராவிட மொழிவாரியான மாகாணங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.உதாரணமாக, பிரிட்டனானது ஒரு தேசமாகவும், ஒரு ஆட்சியாகவும், ஒருசமயம், ஒரே சமுதாயக்கொள்கை கொண்டதாகவும் இருந்த போதிலும்- வேல்ஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய மாகாணங்கள் பெரிதும் மொழிவாரியாக இருப்பது போலும், மற்றும் பல மேல்நாடுகளில் இருக்கும் உள்மாகாணப்பிரிவுகள் போலும் திராவிடம் என்ற தலைதேசத்தில் மொழிவாரி மாகாணங்கள் இருக்கும்.இதை எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கேட்பீர்கள். பூரண சக்தி திராவிடத்திற்கு ஏற்பட்டு சர்வதேச சங்கத்தோடு ஒரு தனி சயேட்சை நாடாக ஆகும் வரை சிலோன், பர்மா போலும் அல்லது சில சுதேச சமஸ்தானங்களான தனி சுயநிர்ணய நாடுகள் போலும் பிரிட்டனுடைய பாதுகாப்பின் மூலம் பாதுகாக்கப்படும்.

இந்தியாவின் மற்ற பாகங்களுடன் திராவிடம் வைத்திருக்கும் சம்மந்தம் எப்படியிருக்கும்? என்று கேட்கிறீர்கள். எப்படியென்றால், மேற்கண்ட பர்மா, சிலோன் ஆகிய நாடுகள் மற்ற நாடுகளுடன் வைத்திருக்கும் சம்மந்தம் போல இருந்து கொண்டு - திராவிடர் அல்லாத போன்ற வெளிநாட்டார் திராவிடத்தில் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் முதலியவற்றில் ஆதிக்கம் செலுத்தாமலும், திராவிட செல்வத்தை சுரண்டிக் கொண்டு போகாமலும் பார்த்துக்கொண்டு நேச தேசமாய் இருந்துவரும். திராவிடதேசம் பிரிக்க முடியாதது என்கிறீர்கள். அதற்குப்பல சரித்திர ஆதாரம் இன்றைய கலை சமுதாய பழக்கவழக்கம் முதலியனவும், பிரத்தியேக ஒற்றுமை எல்லை முதலியவைகளும் திராவிடம் என்பதை மிகச்சுலபமாகப் பிரித்துக்காட்டக் கூடியதாகவே இருக்கிறது.

இந்தியா ஒரு பெரியநாடாக தேசமாக இருப்பதால் நன்மை என்கிறீர்கள். இன்று இந்தியா 40 கோடி ஜனத்தொகையும், பல ஆயிரக்கணக்கான மைல் சுற்றளவும், பல சாதிசமய கூட்டுறவுடனும், பல மாகாண மக்களுடன் கலந்து ஒருநாட்டினராயும் இருந்து வருவதன் மூலமே ஒரு சிறுபான்மையார் கட்டுப்பாடான ஒற்றுமையாயிருந்து தந்திரத்தில் ஒவ்வொருமாகாண பெருங்குடி மக்களையும், அவர்களுக்குள் ஏற்பாடு செய்துவிட்ட பாகுபாடுகளால் சிறுபான்மையினராக்கி அவர்கள் மீது சுலபத்தில் ஆதிக்கம் செலுத்தவும்,ஒருமாகாணத்தை மற்ற மாகாணத்தானுக்குக் காட்டிக்கொடுத்து,ஆதாயம் பெற்று அதன் பயனாய் சிறுபான்மையினரே மற்ற பெரும்பான்மையானவர்களை அடக்கி ஆளவும் முடிந்து வந்ததுடன், இனியும் அப்படித்தான் முடிகிறதே தவிர தாங்கள் கூறுகிறபடி ஒன்றாகயிருந்தால் ஒற்றுமையும், பலமும் நாட்டிற்கு ஒரு நன்மையும் செய்துவிடவில்லை.

இதனால் பரந்தநாடும், அந்த கலை சமுதாயம், மதம் முதலியவைகளும் பொருத்தமில்லாத மக்களும் ஒன்றாயிருப்பதால் சுலபத்தில் மற்றவர்களால் ஏமாற்றப்பட முடிகிறதே தவிர முற்போக்கு அடையவோ, உரிமை பெறவோ முடிவதில்லை.இன்றும் சரித்திரம் பார்க்கலாம். தனித்திருந்த காலத்தில் திராவிடம் முதலியநாடுகளில் மக்களின் நிலைமைகளையும் சமுதாயமும், பொருளியல், அரசியல், வீரம், சுயமரியாதை உணர்ச்சி ஆகியவை எப்படி இருந்தன? இன்று எப்படி இருக்கின்றன? என்று பார்த்தாலே தங்கள் காரியங்களை தாங்களே கவனித்துக் கொள்ளும் நிலைமை நல்லதா? கெட்டதா? என்று விளங்கும்.அகல உழுவதைவிட ஆழ உழுவது மேலானது- என்பது போல்,இம்மாதிரி நாட்டை பிரித்துக்கொண்டு அதற்கேற்றபடி நடந்து முன்னேற்றமடைவதாலேயே மற்ற மாகாணக்காரர்கள் நம்மைப்பின்பற்ற வேண்டியவர்களேயாவார்கள்.

ஏனெனில் இன்று நாட்டில் ஒற்றுமைகெட்டு நலம்குன்றி இழிநிலையில் இருப்பதற்கு காரணம், இந்நாட்டு மக்களுக்குத் தாங்கள் ஒரே சதோரர் என்ற உணர்ச்சியில்லாததேயாகும்.இதற்கு முக்கியக்காரணம், தமிழர்கள் அல்லது திராவிடர்கள் பிறவியில் பிறவியில் உயர்வு தாழ்வு கொள்கை இல்லாதவர்களாயிருப்பதும், திராவிடத்தில் புகுந்து குடியேறி ஆதிக்கம் கொண்ட ஆரியர் பிறவியில் உயர்வுதாழ்வு என்பதையே அடிப்படைக்கொள்கையாகக்கொண்ட சமய சமூகததவராயிருப்பதும் ஆகும்.தமிழ்நாடு தமிழருக்கே என்று இப்போது நடைபெற்று வரும் பிரச்சாரத்தைப்பற்றி தமிழ்நாட்டில் எங்கும் பேசப்பட்டு வருகிறது. நம் எதிரிகளும், தங்கள் சுயநலத்திற்காகவே நம் கூட்டத்தில் இருக்கும் வேசதாரிகளும் திரித்துக்கூறுவதும், இதைப்பற்றி விசமப்பிரச்சாரம் செய்வதும், இதற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை உண்டாக்க சூழ்ச்சி செய்வதுமான காரியங்கள் பற்றிக் கேள்விப்படுவதோடு, சில விசயங்களை நேரிலும் பார்க்கிறோம்.இதுவிசயமாக நான் தூத்துக்குடியில் பேசிய பேச்சை வைத்து மெயில் பத்திரிக்கை எழுதிய கண்டனத்திற்கு, சென்னை மெமொரியல் ஹலில் சொன்ன சமாதானம் சமீபத்தில் நமது பத்திரிக்கையில் வரக்கூடும்.ஆனாலும் மெயில் பத்திரிக்கைக்கு எழுதியனுப்பிய விளக்கம் 20.11.1939- ந் தேதி மெயிலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதுடன், அதன் தமிழ் கருத்து இன்று வேறு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இனி அப்பிரச்சாரம் தீவிரம் செய்யப்படவிருக்கிறபடியால் அதைப்பற்றிய விளக்கத்தினை தெரிவிக்கிறேன்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற அபிப்பிராயம் சென்ற வருடம் டிசம்பரில் சென்னையில் நடந்த தென்னிந்திய நலவுரிமைச்சங்க (ஜஸ்டிஸ் கட்சி) மாநாட்டிலே வாசிக்கப்பட்ட எனது பிரசங்கத்திலே குறிப்புக்காட்டப்பட்டிருக்கிறது.மற்றும் அதற்கு முதல்நாள் வேலூரில் நடந்த தமிழ்மாநாட்டில் தலைமை வகித்த தோழர். சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களும் தலைமை பேருரையில் விளக்கியிருக்கிறார்கள். மற்றும் அதுபற்றியே பெரிதும் தமிழ்நாடு தமிழருக்கே என்னும் சொல் இன்று தமிழ்நாடு எங்கும் தமிழ்மக்களது இலட்சியக்குறிச்சொல்லாக தமிழ்மக்களால் ஒலிக்கப்படுகிறது. அன்றியும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதில் யாருக்காவது அதிருப்தியோ, அபிப்பிராயபேதமோ இருப்பதாக இதுவரை நமக்கு எவ்விதத்தகவலோ, மறுப்போ, வந்தது கிடையாது.பார்ப்பனப் பத்திரிக்கைகள் சிலவற்றிலும் அவர்களது கூலிகளது வாய்கள் சிலவற்றிலும் ஏதோ பொருத்தமற்ற கூப்பாடுகள் இரண்டொன்றைக் காணவும், கேட்கவும் நேர்ந்தது என்றாலும் அதுவும் எங்கும் மறுமுறை கிளம்பினதாக தெரியவில்லை.

ஒரு பார்பனப்பத்திரிக்கை மாத்திரம் தமிழ்நாடு தமிழருக்கே என்றால் எலிவளை எலிகளுக்கே என்று எழுதிற்று. மற்றொரு பார்ப்பனக்கூலியின் வாய் தமிழ்நாடு தமிழருக்கே என்றால் கன்னடியனுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? என்று கூவிற்று. உள்ளேயிருந்து உலை வைக்கக் கருதியிருக்கும் ஒரு தோழர். தமிழ்நாடுதமிழருக்கே என்றால் ஆந்திர, மலையாளி கதி என்னாவது? என்று விசமப்பிரச்சாரம் செய்தார் இவை தவிர வேறுவிதமான எதிர்ப்புக்களோ, அதிருப்திகளோ வந்ததாக நமக்குத்தெரியவில்லை. எப்படியிருந்தாலும் சரி அந்த இலட்சியமே இன்று தமிழ்மக்களின் குறிக்கோளாய் இருப்பதால் அதைவிளக்கக்கடைமைப்பட்டுள்ளேன்.


தமிழ்நாடு தமிழருக்கே என்பதில் நாஸ்திகமோ, மதமொழிப்போ, வகுப்புத்துவேசமோ தொக்கி இருக்கிறது என்று யாராவது சொல்லிவருவார்களேயானால் அவர்கள் ஒன்று, விசயம் அறியாதவர்கள் அல்லது வேண்டுமென்றே விசமப்பிரச்சாரம் செய்யும் அயோக்கியர்களே ஆவார்கள்.ஏனென்றால் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லும் தோழர்கள் சர்.பன்னீர்செல்வம், குமாரராஜ முதலாகிய தலைவர்கள் நாஸ்திகர்களோ, மதமொழிக்கும் உணர்ச்சி உடையவர்களோ அல்லர்.தமிழ்நாடு என்று இதுகாறும் பேசியும், எழுதியும் வருவதெல்லாம் தமிழ்நாடு என்பதற்கு திராவிடநாடு என்ற பொருளோடுயில்லாமல், தமிழ்மொழிப் பிரினையைக் கொண்ட கருத்தில் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் தமிழ்நாடு என்றால் திராவிடநாடு என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சிறிதும் இல்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன.அன்றியும் திராவிடமே தமிழ் என்று மாறிற்று என்றும், தமிழே திராவிடமென்று மாறிற்று என்றும் சரித்திர ஆசிரியர்கள் முடிவு கண்டதாக குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளாமாக இருக்கின்றன. பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன.


------------ தந்தைபெரியார் - "மெயில்" பத்திரிக்கையில் ("The madras mail") 20-11-1939 -இல் வெளியிடப்பட்ட அறிக்கை - "குடிஅரசு" 26.11.1939

2 comments:

bala said...

// திராவிடமே தமிழ் என்று மாறிற்று என்றும், தமிழே திராவிடமென்று மாறிற்று என்றும்//

தமிழ் ஓவியா அய்யா,
ஆ தமிழும்,திராவிடமும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டனவா?என்னய்யா இது விட்டலாச்சார்யா கதையெல்லாம் நம்ம தாடிக்கார அய்யா நல்ல காமெடியா சொல்லியிருக்க்காரு.

பாலா

அது சரி,இன்றைய தேதியில மஞ்ச துண்டு தான் தமிழ் என்று அனைவரும் அறிவர்,அப்ப மஞ்ச துண்டு கூடுல பாய்ந்தது ஒரிஜினல் திராவிடத்தில் குடிகொண்ட தமிழா அல்லது ஒரிஜினல் தமிழில் குடிகொண்ட திராவிடமா?அப்ப திராவிடத்தில் இப்போதைக்கு தமிழ் இல்லையா,அல்லது தமிழில் திராவிடம் இல்லையா?கன்ஃப்யூஷன்.

tamiloviya said...

புத்தியுள்ளவர்களுக்கு புரியும். அரைவேக்காடுகளுக்கு கொஞ்சம் சிரமம்தான். திட்டமிட்டே திருகுதாள வேலை செய்யும் பாலாவுக்கு புரியாததில் வியப்பொன்றும் இல்லை.
தொடந்து பின்னுட்டத்தைப் படித்து வரும் வாசகர்களும் நன்கு அரிவார்கள்.